
ஒற்றையாய் ஒரு இரவு
சாத்தியமற்ற ஒரு வெளி.
வலிந்து புனைந்த மொழியும்,
நினைந்து தொலைத்த பிரிவும்
உள்ளங்கால் உணரும்
சிறுபுற்களென.
உயரத்தில் காய்ந்து கொண்டிருக்கும்
உன் துணிகளின் வாசம்
அரூபப் போர்வையென.
இயலாமையின் உச்சத்தில்
வெடிக்கும் மூளைமடிப்புகளில்
வழிவது மட்டும் தேவ மதுரம்.
அடர்ந்த மழைக்குப் பின்னான
சில்லிப்பில் அசையும்
பிரயத்தனம்தான் சிதறுதேங்காய்த்துண்டு.
கடித்த பற்களிடையே
எட்டிப்பார்த்த
குருதிச்சுவை கொடும்பசியின்
முதற்கவளம்
சவைத்த எலும்பின் மஜ்ஜைகளிலும்
ஊறியிருக்கக் கூடும்
அழுக்காய் ஒரு அதீதம்
அவலச்சுவை பழகிய பின்
அந்தரங்கம் புனிதமானது என்பது
மட்டும்
மனிதர்களால்
புனரமைக்கப் பட்டது.
***
பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானவள்
என்னவாக மிஞ்சியிருப்பேன் உன்னிடம்?
ஒரு அரிதாரமும் ஆவதற்கில்லை
பூணுவதற்கான பேரெழில் ஆபரணங்கள்
அவசியமேயில்லை.
மதர்த்த சாகசங்கள் எடுபடா
நல்ல என்ற அடைமொழிக்கு
உன் இலையில் இடமே இல்லை
தோலுரித்த பின்
கசாப்புக் கடையில்
தொங்கவிடப்படும்
மாமிசம்.
பிணவறை மேசை
சவமென பல சமயம்
கவனமாய் கரைத்துவிட்ட
சுடுகாட்டு சாம்பல்
எனது இறந்தகாலம்
புழுவுக்கு தின்னக்
கொடுக்காது
சுகமாய் அனலில் அவிந்துபோன
ஞாபகக் குப்பைகள்
பெயர்த்து அடிபணியக்
காத்திருப்பதில்
வேரோடிப் போயிருக்கும்
பாதங்கள்
நிறைசூலியாய்
கனத்துக்கிடப்பதில்
நெஞ்சழுத்தும் உன்மீதான
ஆவல்கள்
சூழும் வெள்ளத்தில் இலையெனதான் பயணம்
சலனமும் சஞ்சலமுமானதோர்
இருட்டுப்பாதை
மின்மினியாய் துணை செய்கிறாய்
எப்போதேனும்
சூரியனாய் நிறைத்துக் கொள்ளும்
பகல்தான் என்னுடையது
கடக்கத்தான் வேண்டும் இப்படியே
மொத்த வாழ்வையும்
காலச்சக்கரத்தின்
ஆரங்கள் கருணையற்றவை
அகழ்ந்து எடுத்த பின்
புதைந்த வருடம்தான்
சொல்லக்கூடும்
என் காத்திருப்பை
என் பெருங்காதலை
என் இரவுகளை
மேனி பட்ட மழையை
தேகம் உணர்ந்த வாதையை
மூச்சடைத்த மோகத்தை
நெளிந்த வளைவுகளை
தழுவிப்போன வாடையை
தகிக்கும் இந்தக் கூதலை
உன்னிடம் யார் சொல்வார் சஷாங்கன்?
உன்னிடம் யார் சொல்லுவார்?
******