மூன்று மீன்கள்
அந்தக் குளத்தில் மூன்று
அழகு மீன்கள் நண்பர்களாய்
அட்டி யின்றி வாழ்ந்தன
அளவளாவி மகிழ்ந்து நீந்தின.
குளத்தின் கரையில் நின்று
குனிந்து உற்று நோக்கி
குதித்து ஓடிடும் மீன்களை
கண்டான் மீனவன் ஒருவன்.
அடுத்த நாளில் அவனுடன்
நண்பனும் இணைந்து வந்தான்
இந்தக் குளத்து மீன்களை
இருவரும் பிடித்திட எண்ணினர்.
நாளை விடியற்காலை
நாமிருவர் வலையுடன் வந்து
நல்ல மீன்களைப் பிடிப்போம்
நவின்று சென்றனர் இருவரும்
மூன்று மீன்களில் ஒன்று
முடிவுடன் அகன்றது கேட்டு
நீந்திச் சென்று நண்பர்களிடம்
நிம்மதி தவிர்த்து புலம்பியது
வருத்தம் வேண்டாம் நண்பா
வேறிடம் செல்வோம் நாமே
பதில் உரைத்தது ஒன்று
பகறாது நீங்கியது மற்றொன்று
அடுத்தக் குளத்தை நோக்கி
அவை இரண்டும் நீந்தின
அவற்றுடன் மூன்றாவது மீனையும்
ஆவலாய் விரும்பி அழைத்தன.
முற்றும் பயமின்றி மூன்றாம்மீன்
மூழ்கிக் களித்து சொல்லியது
அவர்கள் வந்தால் பார்க்கலாம்
அதுவரை இங்கே வாழ்கிறேன்
இரண்டு மீன்களும் சென்றன
இருள் நீங்கிப் புலர்ந்ததும்
இருவரும் வலையுடன் வந்தனர்
எழிலாய் குளத்தில் வீசினர்
உள்ளே ஓடி ஒளிந்தபோதும்
அள்ளிக் கொண்டது வலை
துள்ளித் திரிந்த குளத்தை
துயரத்துடன் பார்த்தது மீன்
வருமுன் காக்க வேண்டி
அன்புடன் அழைத்த நட்பை
அலட்சியம் செய்தேன் நேற்று
அகப்பட்டுக் கொண்டேன் இன்று
கண்ணீர் வடித்த மீனும்
குளத்தின் கரையில் துடித்தது
காலத்தின் தேவை அறிந்து
கவனமாய் இருத்தல் நன்று.
நீதி:இடுக்கண் வருமுன் எச்சரிக்கை வேண்டும்.துன்பம் வரும்முன் நம்மை காத்துக்கொள்ளல் வேண்டும்.
************
உன்னை அறிந்துகொள்..
மலை முகட்டின் மீதிருந்து
மயில் முட்டை ஒன்று
மளமள வென்று உருண்டு
மண்ணில் புரண்டு ஓடியது
பிடியுங்கள் பிடியுங்கள் அதை
பதறிக் கதறியது மயில்
பரபர வென்று துரத்தித்
பற்றிட முயன்றது நாய்
தாவி ஓடியது முட்டை
தவித்து சொன்னது மயில்
தத்தித் தாவும் முயலிடம்
தனது முட்டையை பிடித்திட
முயன்றும் முடியவில்லை முயலால்
மீண்டும் குரல் எழுப்பி
அணிலிடம் கேட்டது உதவிட
அணிலும் ஓடிப் பிடித்திட
அகப்படாது ஓடியது முட்டை
அங்கே மேய்ந்த கோழியிடம்
அழுது வேண்டிற்று முயல்
நானோ சிறிய பறவை
நடந்தே மேய்வது குணம்
நான்கைந்தடி உயரம்
நான் பறப்பது உண்டு
உனக்கோ சிறகுகள் பெரியது
உயரப் பறப்பதும் இயன்றது
உன்னால் முடிந்த வேலைக்கு
ஒவ்வொரு வராய் அழைப்பதேன்?
வினவிய கோழியின் குரலில்
ஒலித்த உண்மையை மயிலும்
ஒப்பிய படியே பறந்தது
ஓடிய முட்டையை பிடித்தது
நன்றி சொன்னது கோழிக்கு
தன்னை அறிதலே சிறப்பு
தக்க நேரத்தில் உரைத்தாய்
என்றே பறந்தது மயில்
நீதி: அவரவர் திறமையை அறிந்து கொள்ள வேண்டும். தன் கையே தனக்குதவி.
************
*மூன்று* *பெண்கள்*…… முடிவில்லாத உழைப்பாக செழித்து நுரைத்து ஓடிக் கொண்டிருக்கிறது பிரம்மபுத்திரா…
கொண்டு வந்த இரு மண்டையோடுகளில் நீர் முகர்ந்து செல்கிறாள் திரௌபதி..
பசியுடன் காத்திருக்கும் காந்தாரிக்கு கோதுமைக்கஞ்சியும் உப்புக்கண்டமும் கொடுத்து பசியாற்றுகிறாள்..
முந்தானை உதறி எழும் குந்தி முறுவலித்தபடி
பின்கட்டுப் போகிறாள் மூலிகை பறிக்க..
மோகினியாய் உள்நுழைந்தவன், மாற்றமில்லையா உன் முடிவில்? வினவுகிறான் பாஞ்சாலியிடம்
கண்டதும் காதல் கொண்டவன் கலங்கித் தவிக்கிறான் கதவைத்திறக்கக் கூடாதா…
சேலையோடு வந்ததால்தான் உனக்கே பதில்..சுபத்திரையோடு சுகிப்பவனுக்கு நீ என்ன வக்காலத்து?
போதும், உரிமை கொண்டாடுவதும், உற்றதுணை வைத்தாடுவதும், பெற்றவளைப் பேணாதொழிவதும், பிள்ளைகளை சமரிலே காவு கொடுத்தலுமாய்..
ஆட்டமும் ஆட்சியும் வெறியாகி ஆடும் ஆண் நீங்கி வாழ்தல் சுகமாகிறது..
ஆறு பெற்று அவதியுற்றாள் அவள் பொறுப்பற்றக் கணவனால்..
நூறு பெற்றும் நொறுங்கினாள் இவள்.அறமற்ற அகமுடையானால்..
ஐவருக்கும் பிள்ளைபெற்று அவர்களையும் இழந்து அல்லாடும் என்முன் நிற்க யாருக்கும் அருகதை இல்லை எனச்சொல்..
உரைத்தபடி எழுந்தவள் கூந்தலற்ற தலையும்,கழுத்தும் துடைத்து கதவடைத்தாள்..
************
கதைப்பாடல்கள் நன்றாக உள்ளன