![](https://vasagasalai.com/wp-content/uploads/2020/05/Anuma-cover-pic.jpg)
கொக்கும் நரியும்
சீக்கிரம் போக வேண்டும்
சிங்காரம் செய்தது சிறகுக்கு
சற்றே மிடுக்கான நடையுடன்
சென்றது கொக்கு விருந்திற்கு
நல்ல நண்பன் நரியின்
சொல்லைத் தட்ட முடியாமல்
உள்ளக் களிப்பில் மூழ்கி
உற்சாகம் பொங்க சென்றது
வாருங்கள் கொக்காரே வாருங்கள்
வந்து இங்கே அமருங்கள்
நண்பன் நரியின் அன்பில்
நனைந்த கொக்கும் மகிழ்ந்தது
இரண்டு தட்டில் பாயசம்
எடுத்து வந்தது நரி
இனிக்கும் குடித்துப் பார்
என்று சொல்லி வைத்தது
முயன்று பலமுறை முடியாமல்
அயர்ச்சி அடைந்த கொக்கும்
நாளை உங்களுக்கு விருந்து
நரியாரை அழைத்து விடைபெற்றது
அடுத்த நாள் நரியும்
அங்கே சென்றது விருந்திற்கு
அழகான குவளை ஒன்றிலும்
அகலத் தட்டு ஒன்றிலும்
அருமைப் பாயசம் எடுத்து
அருகில் வைத்தது கொக்கு
நீண்ட அலகால் உறிஞ்சிட
நரியும் நக்கிக் குடித்தது
வஞ்சனை புத்தி நரிக்கு
நல்ல கொக்கு நண்பன்
இன்னா செய்த போதும்
இனியவே செய்தது பார்.
நீதி:தீமை செய்பவர்க்கும் நன்மை செய்வோம்.
குறள்:இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்
*********
நாயும் எலும்புத்துண்டும்
காலை நேரம் ஒன்றில்
காட்டு நாய் ஒன்று
காலாற நடந்த போது
கண்டது எலும்புத் துண்டு
கவ்வி வாயில் எடுத்து
கடைவாய் நீர் ஒழுக
கடித்துத் தின்னும் ஆசையில்
எடுத்துக் கொண்டு நடந்தது
ஓடை ஒன்றின் மீது
ஒதுங்கி நடந்த போது
ஓடும் நீரில் குனிந்து
உற்றுப் பார்த்து நின்றது
நாயொன்று வாயில் எலும்புடன்
நிற்க கண்டு ஆசையால்
நிழலை நோக்கிப் பாய்ந்தது
நீரில் மூழ்கி இறந்தது
தனக்குக் கிடைத்த உணவினை
தூக்கிச் சென்ற நாயின்
அதிக ஆசை குணத்தினால்
அற்புத உயிரும் போனது.
நீதி:பேராசை பெருநஷ்டம்.
*********
ஆடும் ஓநாயும்
இரை தேடி ஓடும்போது
இடையில் இருந்த கிணற்றில்
இடறி விழுந்த ஓநாய்
இரவு முழுவதும் கத்தியது
விடியல் தொடங்கிய போது
வெள்ளை ஆடு ஒன்று
வேண்டும் புல் மேய்கையில்
வேதனைக் குரல் கேட்டது
அங்கு மிங்கும் பார்த்து
அடையாளம் கண்டது திசையை
அழுகைக் குரல் கேட்டு
அங்கே சென்று பார்த்தது
உள்ளே இருந்த ஓநாய்
உதவி செய் என்றது
என்ன உனக்கு வேண்டும்
என்று கேட்டது ஆடு
மேலே வரணும் நானும்
மெத்த உதவிட வேண்டும்
குதித்து வா உள்ளே
முதுகில் ஏறிப் போய்விட
ஓநாய் சொன்னது கேட்டு
ஆடு கேள்வி தொடுத்தது
அங்கே யிருந்து நான்
எப்படி வெளியே வருவது
வெளியே போய்விட்டு வந்து
விரைந்து உன்னை மீட்பேன்
வசியப் பேச்சில் மயங்கி
உள்ளே குதித்தது ஆடு
ஆட்டின் முதுகில் ஏறி
அம்பென தாவி ஓநாய்
ஓடி ப் பாய்ந்து மறைந்தது
ஆடு ஏமாந்து இறந்தது
நீதி: தந்திரப் பேச்சில் மயங்காதே!தன்னுயிர் இழந்து விடாதே!
*********
பாடல் குழந்தைகளுக்கு
நீதி பெரியவங்களுக்கா ?