இணைய இதழ் 110சிறார் இலக்கியம்

சிரிப்பு ராஜா சிங்கமுகன்; 20 – யுவா

சிறார் தொடர் | வாசகசாலை

20. நேருக்கு நேர்

‘’வேந்தே… நம் நாட்டின் எல்லையில் அரிமாபுரி அரசியும் அந்நாட்டுப் பெண்களும் திரண்டு வந்துள்ளார்கள்’’

குழலனின் கழுத்தைப் பிடித்து இழுத்துக்கொண்டு சுகந்தன் சில அடிகள் நகர்ந்தபோது, ஒரு வீரன் வேகமாக உள்ளே வந்து சொன்னான்.

புலிமுகன் திகைத்துப் போனார்… ‘’எதற்கு?’’ என்று கேட்டார்.

‘’நம் அரசியைச் சந்திக்கவாம். அரசியும் அவர்களைக் காணச் சென்றுகொண்டிருக்கிறார்’’ என்றான் காவலன்.

சுகந்தனை ஏறிட்ட புலிமுகன், ‘’பொடியனைக் கடத்திய விஷயம் எப்படியோ கசிந்துள்ளது சுகந்தா’’ என்றார்.

‘’வாய்ப்பே இல்லை அரசே… நம் இருவரைத் தவிர முன்கூட்டியே இந்தத் திட்டம் பற்றித் தெரிந்த நபர் கடத்தி வந்தவன். அவன் மூச்சைதான் நிறுத்திவிட்டோமே’’ என்றான் சுகந்தன்.

‘’பொறு… பொடியனை மீண்டும் நிலவறையில் போட்டு அடை. என்ன நடக்கிறது எனப் பார்த்துவிட்டு முடிவெடுப்போம்’’ என்றார் புலிமுகன்.

குழலன் மெல்லச் சிரித்தான்… ‘’நீங்கள் சொன்னது சரிதான் மன்னா… எங்கள் சிவராசா தாத்தாவுக்கு உடல் தளர்ந்தாலும் மூளை சற்றும் தளரவில்லை. இரவோடு இரவாக எவ்வளவு பெரிய காரியத்தைச் சாதித்துவிட்டார் பாருங்கள்’’ என்றான்.

சுகந்தன் கோபத்துடன் குழலனின் தலையில் அடித்து… ‘’இவனை இழுத்துப் போய் தள்ளுங்கள்’’ என்று கத்தினான்.

குழலனை நிலவறையில் இருந்து அழைத்து வந்தவர்கள் அவனிடம் நெருங்கினார்கள்.

‘’சிரமப்படாதீர்கள்… நிலவறைக்குப் போகும் வழி இப்போது எனக்கே தெரியும். அந்தப் பிணத்தை மட்டும் எடுத்துவிடுகிறீர்களா? என்ன இருந்தாலும் பாலகன் நான். பார்க்க பயமாக இருக்கிறது’’ என்று புன்னகைத்தான் குழலன்.

******

வேங்கைபுரி எல்லையில் கிளியோமித்ரா, செவ்வந்தி தலைமையில் பெரும் பெண்கள் கூட்டம் காத்திருந்தது. அவர்கள் ஏறிவந்த குதிரைகள், மாட்டுவண்டிகள் ஒரு பக்கமாக இருந்தன. எல்லைக் காவலில் இருந்த வீரர்கள் என்ன செய்வது என்கிற பதற்றத்துடன் தங்கள் அரசிக்காகக் காத்திருந்தார்கள்.

‘’மிய்ய்ய்யாவ்… மிய்ய்ய்யாவ்’’ என்றது வெற்றி. (என்ன செவ்வந்தி இவ்வளவு நேரம்?)

‘’பொறுடா… ஒரு நாட்டின் அரசி என்றால் சும்மாவா? உடனே வந்துவிட முடியுமா?’’ என்றாள் செவ்வந்தி.

‘அதுசரி… அலங்காரம் முடிந்து வரணுமில்லே!’

‘’உதைக்கப் போகிறேன் உன்னை. பெண்கள் என்றாலே உடனே அலங்காரம், ஆடை என்று கிண்டல் செய்வதா? எங்களுக்கு 24 மணி நேரமும் அதை தவிர வேறு சிந்தனை, செயலே இல்லை என்கிற நினைப்பா? மனித ஆணாக இருந்தாலும் ஆண் பூனையாக இருந்தாலும் பெண் இனத்தின் மீது உங்களுக்கெல்லாம் எப்போதும் பரிகாசம்தான்.’’

‘அச்சச்சோ… ரொம்ப சாதாரணமாகத்தான் சொன்னேன். அதற்கு நீ என்ன அந்த நட்சத்திரா போல புரட்சி, அடிமைத்தனம் என நீளமாகப் பேச ஆரம்பித்துவிட்டாய். சரி, நான் இந்த நாட்டுக்குள் ஒரு சுற்றுப் போய்வரவா?’

‘’அடுத்த நாட்டுக்குள் அனுமதியின்றி எல்லையைத் தாண்டுவது பூனையின் பாதங்களாக இருந்தாலும் வெட்டிவிடுவார்கள் வெற்றி’’

‘எங்கிருந்தோ மீன்குழம்பு வாசனை வருகிறது. எந்த வீட்டிலோ இரவு சமைத்தது மிச்சம் இருக்கும் என்று நினைக்கிறேன்.’

‘’உதைப்பேன் படவா… அடுத்த நாட்டுக்கு வந்து திருட்டுத்தனமாகப் பானையை உருட்டப் போகிறாயா? நம் நாட்டுக்கு அவமானமடா’’ என்று வெற்றி தலையில் தட்டினாள் செவ்வந்தி.

அப்போது தொலைவில் இரட்டைக் குதிரைகள் பூட்டிய ஒரு ரதம் வேகவேகமாக வருவது தெரிந்தது. அதில் அமர்ந்து வருவது புலிமுகனின் மகாராணி செல்வராணி.

அந்த ரதத்தை ஒட்டியே நான்கைந்து வீரர்களும் புரவியில் பாதுகாப்புடன் வந்தார்கள். புழுதியைக் கிளப்பியபடி வந்த அவை, இவர்களை நெருங்கி நின்றது.

ரதத்தில் இருந்து வேகமாக இறங்கிய செல்வராணி கைகளைக் கூப்பியவாறு, ‘’வாருங்கள் மித்ரா தேவி’’ என்றார்.

‘’அடடா… எனது பெயரை மித்ரா தேவி என்று மற்றவர் சொல்லி கேட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன’’ என்று புன்னகைத்தார் கிளியோமித்ரா.

‘’என்ன இருந்தாலும் நாம் சிறு வயது தோழிகள் அல்லவா? அப்போது நீங்கள் மித்ரா தேவிதானே’’ என்றார் செல்வராணி.

இருவரும் அணைத்துக்கொண்டார்கள்.

‘’அப்புறம் என்ன? நீங்கள் வாங்கள் போங்கள் என்று… இருவரும் ஒரே பாடசாலையில் ஒன்றாகப் படித்தவர்கள். வா போ என்றே சொல் செல்வா’’ என்றார் கிளியோமித்ரா.

‘’சரியடி மித்ரா’’ என்று சிரித்தார் செல்வராணி.

‘’அடேங்கப்பா… நீங்கள் இருவரும் தோழிகளா?’’ என்று வியந்தாள் செவ்வந்தி.

‘’ஆமாம் பின்னே… ஆசிரியருக்குத் தெரியாமல் மாந்தோப்புக்குச் சென்று திருட்டு மாங்காய் பறித்து தின்றவர்கள். தோட்டக்காரனிடம் அகப்பட்டு ஆசிரியர் முன்பு அழைத்துச் செல்லப் பட்டபோது, ‘தவறு இவளுடையது இல்லை. நான்தான் அழைத்துச் சென்றேன். என்னை மட்டும் தண்டியுங்கள்’ என்று ஆசிரியரிடம் இருவருமே மாற்றி மாற்றிச் செல்லும் அளவுக்கு தோழிகள்’’ என்றார் கிளியோமித்ரா.

‘’விதி எங்களை இரண்டு பகை நாடுகளின் அரசர்களுக்கு மனைவியாக மாற்றிவிட்டது. அப்புறம் மித்ரா… கிங்விங்சன் கொடுத்ததாகச் சொல்லி நீ அனுப்பிய முகப்பூச்சு வந்தது. பயன்படுத்திப் பார்த்தேன். பிரமாதமாக இருந்தது’’ என்று மலர்ச்சியுடன் சொன்னார் செல்வராணி.

‘’ஓஹோ… இரண்டு பேரும் அழகு சாதனப் பொருளைப் பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு ரகசிய நட்பைத் தொடர்கிறீர்களா?’’ என்று மேலும் ஆச்சர்யமானாள் செவ்வந்தி.

‘’மியாவ்…. மியாவ்… மியாவ்’’ (நான் சொன்னதுக்குக் கோவிச்சுக்கிட்டியே… இப்போ நீயே பாரு. வந்ததுமே முகப்பூச்சு பத்தி பேசிக்கிறாங்க) என்றது வெற்றி.

‘’சரி… என்ன விஷயம் மித்ரா… இப்படி நாட்டையே திரட்டிக்கொண்டு வந்திருக்கிறாய்?’’ என்று கேட்டார் செல்வராணி.

‘’எங்கள் நாட்டின் விலை மதிப்பில்லா செல்வம் ஒன்றை உன் கணவர் கவர்ந்து வந்துவிட்டார். எங்கள் சுரங்கத்தில் இருந்து மொத்தமாகச் சுருட்டி வந்திருந்தாலும் நாங்கள் கவலைப்பட்டிருக்க மாட்டோம். ஆனால், அவற்றுக்கெல்லாம் உயர்ந்த பொக்கிஷம் ஒன்றை எடுத்து வந்துவிட்டார். அதை மீட்டுச் செல்லவே வந்தோம்’’ என்றார் கிளியோமித்ரா.

‘’அப்படியா..? என்ன பொக்கிஷம் அது?’’ என்று கேட்டார் செல்வராணி.

‘’பெயர் குழலன்… அறிவுக்கு இலக்கணமான பாலகன். வருங்காலத்தில் அரிமாபுரியின் மன்னனாகவே வந்தாலும் ஆச்சர்யப்படுவற்கில்லாத அற்புத குழந்தை’’ என்றார் கிளியோமித்ரா.

‘’மித்ரா… உறுதியாகத் தெரியுமா உனக்கு?’’ என்று கேட்டார் செல்வராணி.

‘’உறுதியாகவே சொல்கிறோம் அரசியாரே’’ என்றாள் செவ்வந்தி.

‘’எனில், நான் உடனடியாக என் கணவரைச் சந்தித்து விசாரிக்கிறேன். அந்தக் குழந்தை சிறு கீறலும் இன்றி உங்களிடம் ஒப்படைக்கப்படுவான். அதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன்’’ என்றார் செல்வராணி.

‘’நன்றி தோழியே’’ என்று அணைத்துக்கொண்டார் கிளியோமித்ரா.

‘’சரி… எங்கே உனது பிறந்தநாள் இனிப்பு?’’

‘’சரிதான் போ… அங்கே நடந்த சதியில் நானே ஒரு துண்டு இனிப்பு சாப்பிடவில்லை.’’

‘’அடடா… என்ன நடந்தது?’’

‘’அதைப் பிறகு சொல்கிறேன். முதலில் குழலன் விவகாரம்’’ என்றார் கிளியோமித்ரா.

‘’இதோ… இப்போதே போகிறேன். நீங்கள் இங்கேயே காத்திருங்கள்’’ என்று செல்வராணி சொல்லிய நிமிடத்தில் தூரத்தில் புரவிகளின் குளம்பொலி.

அதேநேரம் அரிமாபுரி பக்கமிருந்தும் புரவிகள் வருவது தெரிந்தது.

‘’நம் கணவர்கள் வருகிறார்கள்’’ என்றார் செல்வராணி.

‘’மியாவ்… மியாவ்… மியாவ்…’’ என்று செவ்வந்தியிடம் கெஞ்சியவாறு தாவியது வெற்றி. (பெரிய போர் நடக்கும் போலிருக்கு. போரில் நான் வீரமரணம் அடையறதுக்கு முன்னாடி அந்த மீன்குழம்பை ஒரு வாய் சாப்பிட்டு வந்துடறேனே)

‘’ச்சூ… சும்மா இரு வெற்றி’’ என்று அதட்டினாள் செவ்வந்தி.

இரு நாடுகளின் எல்லைக் கோட்டிலும் சிங்கமுகனும் புலிமுகனும் புரவிகளில் எதிரெதிரே வந்துநின்றார்கள்.

‘’கிளியோ என்ன இது? யாரைக் கேட்டு இங்கே வந்தாய்?’’ என்று அதட்டினார் சிங்கமுகன்.

‘’செல்வா… என்னைக் கேட்காமல் எதற்கு இங்கே வந்தாய்?’’ என்று அதட்டினார் புலிமுகன்.

‘’என் நாட்டுப் பிள்ளையை மீட்டுப் போக நான் யாரைக் கேட்டு வரவேண்டும்?’’ என்று தன் கணவனிடம் கம்பீரமாகக் கேட்டார் கிளியோமித்ரா.

‘’நம் நாட்டுக்கு ஒரு அவப்பெயர் என்றால் உங்களை எதற்கு கேட்க வேண்டும்?’’ என்று நிமிர்ந்து கேட்டார் செல்வராணி.

‘’என்ன அவப்பெயர்? எதிரி நாட்டவர் ஏதாவது சொன்னால் அப்படியே நம்பிவிடுவதா?’’ என்று சீறினார் புலிமுகன்.

‘’எனில், எங்கள் நாட்டுப் பிள்ளை உங்களிடம் இல்லை என்கிறீர்களா?’’ என்று தைரியமாகக் கேட்டாள் செவ்வந்தி.

‘’இ… இல்லை’’ என்றார் புலிமுகன்.

‘’உங்கள் வார்த்தையின் சிறு தடுமாற்றத்திலேயே உண்மை தெரிகிறது. உங்கள் கண்கள் இன்னொரு நாட்டின் ஒரு சாதாரண பணிப்பெண்ணைச் சந்திக்கவே வெட்கப்படுகிறது அரசே’’ என்றாள் செவ்வந்தி.

‘’வாய்க்கு வந்ததைப் பிதற்றாதே’’ என்றார் புலிமுகன்.

‘’புலிமுகா…’’ என்று குரல் கொடுத்தார் சிங்கமுகன். ‘’நாம் பலமுறை போரிட்டுள்ளோம். ஒவ்வொரு முறையும் நீயும் உன் வீரர்களும் தோற்று ஓடினாலும் நேருக்கு நேராக மோதிய உன் வீரத்தை நான் வியந்து மதித்துள்ளேன். ஆனால் இப்போது நீ செய்திருக்கும் காரியம் மிகக் கோழைத்தனமானது. உன் சதி வேலைக்குப் போயும் போயும் ஒரு பாலகனா கிடைத்தான்?’’ என்று கேட்டார்.

‘’சிங்கமுகா… வார்த்தையில் கவனம்’’ என்று சீறினார் புலிமுகன்.

‘’எனில், எங்கள் பிள்ளை உங்களிடம் இல்லை என்கிறாயா?’’

‘’ஆ… ஆம்!’’

‘’நிரூபனமானால் மறுநொடியே பெரும் போர் நடக்கும். அதற்கு நீ தயாரா?’’

‘’சிங்கமுகா…’’ என்று தயங்கினார் புலிமுகன்.

செல்வராணி தனது கணவனை நெருங்கினார். ‘’அன்பே… இது என்ன அசிங்கம்? எனது வீரம் மிக்க கணவன் ஒரு குழந்தையைக் கடத்தியிருப்பதா? உண்மையெனில் தயவுசெய்து அவனை ஒப்படைத்து விடுங்கள். இறுதியாக நடந்த போரினால் ஏற்பட்ட இழப்புகளில் இருந்தே இன்னும் பலரும் மீளவில்லை. எத்தனை பெண்களின் தாலி பறிபோனது என்ற கணக்கு உங்களுக்குத் தெரியுமா? எத்தனை இளைஞர்கள் முடமாகி வீட்டுத் திண்ணைகளில் கிடக்கிறார்கள் என்று என்றாவது பார்த்திருக்கிறீர்களா?’’ என்று கேட்டார்.

புலிமுகன் அமைதியாகத் தன் மனைவியைப் பார்த்தார்.

‘’புலிமுகா… இப்போதும் கெட்டுப் போய்விடவில்லை. குழலனை ஒப்படைத்துவிடு… நாங்கள் அமைதியாகச் சென்றுவிடுகிறோம். நிச்சயம் பதிலுக்கு எதுவும் செய்ய மாட்டேன் என்று எல்லோர் முன்னிலையிலும் வாக்களிக்கிறேன்’’ என்றார் சிங்கமுகன்.

புலிமுகன் சில நிமிடங்கள் அப்படியும் இப்படியுமாகப் பார்த்தார். பிறகு… ‘’சரி… அனுப்புகிறேன். ஆனால், உன் நாட்டை அடையும் எனது லட்சியத்தை ஒருநாளும் ஒப்படைக்க மாட்டேன்’’ என்றார்.

சிங்கமுகன் புன்னகைத்து… ‘’அதை நாம் சரியான நேரத்தில் போர்க்களத்தில் பார்த்துக்கொள்வோம்’’ என்றார்.

சூர்யன் முன்னால் வந்தான். ‘’அரசே… குறுக்கீட்டுக்கு மன்னிக்கவும். குழலனை ஒப்படைத்தால் மட்டும் போதாது. அந்தச் சுரங்கக் கொள்ளைக் கூட்டமும் தலைவனும் இவர் பாதுகாப்பில்தான் இருக்க வேண்டும். அவர்களுடம் சரணடைய வேண்டும்’’ என்றான்.

‘’அடேய்… கோபத்தைக் கிளறாதே… அமைதியாக முடியப்போகும் விஷயத்தைப் போராக மாற்றிவிடாதே’’ என்று சீறினார் புலிமுகன்.

‘’அரசே…. இப்போதுதான் நாங்கள் எங்கள் தளபதி கம்பீரனைக் கையும் களவுமாகப் பிடித்துவிட்டு வந்திருக்கிறோம். அவர் மாளிகையில் இருக்கும் சுரங்கம் உங்கள் நாட்டு எல்லைக்குத்தான் அழைத்து வருகிறது’’ என்றான் சூர்யன்.

அவனையும் சிங்கமுகனையும் மாறி மாறி ஏறிட்டார் புலிமுகன்.

‘’அப்புறம் என்ன புலிமுகா? அந்த ஐந்தாறு பேரைக் காத்துக்கொள்வதற்காகப் போரிட்டு உன் வீரர்கள் பலரை பலி கொடுக்க நினைக்கிறாயா?’’ என்று கேட்டார் சிங்கமுகன்.

‘’சாமர்த்தியமாக மடக்குகிறீர்கள். இத்தனை பெண்கள், பொதுமக்கள் முன்னிலையில் வாளை உருவ விருப்பமில்லை. ஆனால், அவர்களைத் தாம்பளத்தில் வைத்தெல்லாம் அளிக்க முடியாது. இவ்வளவு வாய் பேசுகிறானே உன் மெய்க்காப்பாளன்… இவனும் அந்த தலைவனும் நேருக்கு நேர் மோதட்டும். இவன் வென்றால் அவன் தனது கூட்டத்துடன் சரணடைவான்’’ என்றான் புலிமுகன்.

‘’சபாஷ்… இது அழகு… இப்போதே இங்கேயே போட்டியை வைத்துக்கொள்வோம். வரச்சொல் அவனை’’ என்றார் சிங்கமுகன்.

புலிமுகன் திரும்பிப் பார்த்து ஒரு வீரனிடம் என்னமோ கிசுகிசுக்க, அவன் தலையாட்டிவிட்டு புரவியில் பறந்தான்.

ஒரு பக்கமாக நின்றிருந்த சூறாவளியை நெருங்கி அதன் முதுகில் தாவியது வெற்றி.

‘’மியாவ்… மியாவ்!’’ {என்னப்பா உன் எஜமான் தேறுவானா?)

‘’ஙிஙெஙிஙீ’’ (கொழுப்பா? என்ன கேள்வி இது?)

‘கோவிச்சுக்காதேப்பா… இப்படி திடீர்னு ஒற்றைக்கு ஒற்றைனு ஒரு போட்டியை அறிவிச்சுட்டாங்களே. இது எப்போ ஆரம்பிச்சு எப்போ முடியறது?’

‘ஏன்? அதனால என்ன?’

‘என்னவா? உனக்கு என்னப்பா… சுத்தியும் புல்… மேய்ஞ்சுகிட்டே மேட்ச் பார்ப்பே…’

‘என்னது… மேட்சா?’

‘இது ஆங்கில வார்த்தை. கிங்விங்சனிடம் கற்றது… போட்டி என்று அர்த்தம். நீ சாப்பிட்டுக்கிட்டே போட்டியைப் பார்ப்பே. நான் வயித்துக்கு எங்கே போறது?’

‘போ… அதான் மீன்குழம்பு வாசனை வருகிறதே’

‘சே… சே… என் செவ்வந்தி சொல் மீறி போகமாட்டேன்.’ ‘’மியாவ் மிய்ய்ய்யாவ்’’ என்றது வெற்றி.

சில நிமிடங்களில் சில புரவிகளில் சுகந்தனும் அவன் கூட்டாளிகளும் வந்தார்கள். அவர்களுடன் குழலனும் அழைத்து வரப்பட்டான்.

‘’குழலா…’’ என்று இங்கிருந்து மகிழ்வுடன் பல குரல்கள் எழுந்தன.

அவன் உற்சாகமாகப் புரவியில் இருந்து குதித்து ஓடிவந்து உத்தமனையும் நட்சத்திராவையும் கட்டிக்கொண்டான். கிளியோமித்ரா கால்களைத் தொட்டு வணங்கினான். சிங்கமுகனை நிமிர்ந்து பார்த்து கும்பிட்டான்.

‘’பயத்துடன் இருந்தாயா பொடியா?’’ என்று கேட்டார் சிங்கமுகன்.

‘’சே… சே… எப்படியும் மீட்கப்படுவேன் என்று தைரியத்துடனே இருந்தேன்’’ என்றான் குழலன்.

‘’அதானே… நீ எப்பேர்பட்ட ஆள்’’ என்று சிரித்தார் சிங்கமுகன்.

‘’ம்… போட்டியை ஆரம்பிக்கலாம்’’ என்று முழங்கினார் புலிமுகன்.

அனைவரும் ஒரு பக்கமாக ஒதுங்கினார்கள். சூர்யனும் சுகந்தனும் வாள்களை உருவினார்கள். ஒருவருக்கு ஒருவர் கூரிய விழிகளால் பார்த்துக்கொண்டார்கள்.

தொடரும்…

iamraj77@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button