ஆடு மேய்க்கும் தாத்தா
கருக்கலில் தாத்தா எழுந்திடுவார்
கடகட வெனவே கிளம்பிடுவார்
வாளியில் கூழை ஊற்றிடுவார்
வறுத்த மிளகாய் எடுத்திடுவார்
ஆடுகள் ஓட்டிக் கிளம்பிடுவார்
அடிபட்ட குட்டியை தூக்கிடுவார்
மேடு பள்ளம் பார்க்காமல்
மெனக்கிட்டு காட்டை அடைந்திடுவார்
பசுமை புல்வெளி பார்த்ததுமே
பாய்ந்து சென்றிடும் ஆடுகளும்
புசுபுசு வெனவே வயிறு பெருக்க
புல்லை மேய்ந்திடும் ஆடுகளும்
ஆடுகள் மேய்வதை பார்த்திடுவார்
ஆனந்தக் கூத்து ஆடிடுவார்
கேடே இன்றி கேளிராக
கிழவர் நினைப்பார் அனைத்துயிரும் !