உயிரே
எப்போதிருந்து
எனது உயிர்
கலந்தாய்…
தேவ தூதம்
பேசும் நாயகனே…
நீ நான் பேதம்
அறியவியலா
இவ் வேதனைக்கு
என்ன பொருள் சகா…
சுயத்தின் மீது
சாரல் சிந்தும்
உனது அன்பு
மண்வசமாய்
மனதை விழுங்குகிறது…
மௌனமாய்
அகம் நிறைக்கும் உன்னை…
ஆட்கொள்கிறேன்
பேரன்பா…
சுவாசம் நிகழும்போதெல்லாம்
நீ சுடர் செய்கிறாய் சுந்தரனே…
உயிர் எரிகிறது…
நீயும் தான்.
**********
காதல்
காதல்…
தூரத்துச் சுடராய்
ஒளிரட்டும்…
அதன் வெளிச்சம்
ரசித்தபடி…
உயிர்
சுமக்கிறேன்…
காலம் தீரும் வரை…
உணவுறக்கம்
மறந்து
உன்னையே
சதா சதா
பிதற்றும்
இந்த அகத்தின் குரல்…
ஆழியின் அழுத்தமாய்
ஆகாயத்தின் அந்தமாய்
தன்னுள் உன் ராகங்களை
பாடி மகிழ்திருக்கிறது…
இனி இவளின் வாழ்தல்
உன்னக்கானது சகா…
உனக்கானது மட்டும்…
**********
மௌனம்
மௌனங்கள்
உன்னையே
உரையாடுகிறது
மாயா…
உன்னை
கேட்டுக்கொண்டிருக்கிறேன்
நிசப்தம் நிகழ… நிகழ…
நீ எனதான்மத்தில்
அரூபமாகிறாய்…
அரவம் அற்ற
பொழுதுகள்
உனக்கானது சகா…
உன்னை நிறைக்கும்
தனிமையை
நேசிக்கிறேன்…
உன்னைப் பேசுவதால்…
அகம் வியாபிக்கும்
உனது மொழி
நம்மை நிகழ்த்தட்டும் மாயா…
மௌனியா
உன்னில் லயிக்கும் நான்…
**********
காமம் அற்ற காதல்
இனிதினிதாய்
என்னுள் நீ
நிகழ்கிறாய் சகா…
ஓராயிரம்
பட்டாம்பூச்சிகள்
அகத்தில் ஆர்ப்பரிக்கும்
அதிசயம் காண்கிறேன்…
காதல்…
பரிபூரணம் பெறுகிறது
உன்னை நினைவில்
சூடிக்கொள்ளும்
ஏகாந்த நிமிடங்களில்…
காமம் அற்ற காதல்
ஆன்மாவில்
மலர்கிறது மாதவா…
உன்னையே
தியானிக்கும்
ராதை நான்…
**********