‘யாதும் டிசைன், யாவரும் டிசைனரே’: 5 – வடிவுருக்கள் எனும் குறும்படம்
தொடர் | வாசகசாலை

வடிவுருக்கள், அதாவது ஐகான்கள். அப்படி என்றால் என்ன? அதை எதற்காகப் பயன்படுத்துகிறோம்? எப்படி பயன்படுத்த வேண்டும்? என்பதை எல்லாம் பார்க்கும் முன்னர், கீழே உள்ள படத்தில் உள்ள படங்கள் எதைக் குறிக்கின்றன என்று சரியாகக் கூறவும்.
நிச்சயமாக உங்களால் கண்டுபிடிக்க முடிந்திருக்கும். நட்சத்திரம், இதயம், வை-ஃபை மற்றும் டவுன்லோட் சரியா? ஆனால் இவற்றை நீங்கள் நிஜ உலகில் உங்கள் கண்களால் பார்த்து இருக்கிறீர்களா என்று யோசித்துப் பாருங்கள். நட்சத்திரங்கள் உண்மையில் பந்து போன்ற கோள வடிவம், வை-ஃபை சிக்னலை கண்ணால் பார்க்கவே முடியாது, அப்படியெனில் உங்களால் இதைச் சரியாக எவ்வாறு கண்டுபிடிக்க முடிந்தது. நடைமுறையில் வரைபடங்களின் அர்த்தங்கள் இதுதான் என்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு பரவலாகப் பயன்படுத்தப்படுவதே காரணம்.
எனவே ஐகான் என்பது மொழியின் உதவியின்றி நம்மிடம் தொடர்பு கொள்ள கூடிய வரைபடங்களே.
உதாரணத்திற்கு சாலை வழிகாட்டிகள், U-வளைவு (U-turn), பார்க்கிங் செய்யக் கூடாது (No Parking) போன்ற சாலை விதிகளை உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் கீழே காட்டப்பட்ட குறியீடுகள் மூலம் நாம் புரிந்து கொள்ள முடியும். இதற்கு அந்த நாட்டு மொழி நமக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
சரி எதற்காக இந்த ஐகான்களை பயன்படுத்த வேண்டும். மேலே உள்ள உதாரணத்தில் கூறியது போல் மொழிக்கு அப்பாற்பட்டு எல்லோருக்கும் புரியும்படி ஒரு தகவலைக் கொண்டு சேர்க்க இது முக்கியமாகப் பயன்படுத்தப்படுகின்றது. அதேபோல ஒரு சிறிய இடத்தில் நிறைய தகவல்களைக் காட்சிப்படுத்தவும் ஐகான்கள் மிகவும் உதவியாக இருக்கும். நாம் தினசரி உபயோகப்படுத்தும் டிவி ரிமோட், வாஷிங் மெஷின், பிரிட்ஜ், பைக் வேகமானி, கார் ஸ்டேரிங் போன்றவற்றில் எதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற வழிமுறைகளை எழுத்தாக காட்டுவதை விட ஐகான்களாகக் காட்டும்போது அவற்றை வேகமாகப் படிக்க முடியும், அதே சமயம் அவற்றை நீண்ட காலத்திற்கு நினைவில் வைத்துக்கொள்ளவும் முடியும். எனவேதான் நாம் யார் வீட்டிற்கு சென்றாலும் அவர்களின் டிவி ரிமோட்டை சுலபமாகப் பயன்படுத்த முடிகிறது.
ஒரு டிசைனராக ஐகான்களை தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை. ஏனெனில் இவை மொழியின் உதவியின்றி அர்த்தத்தை நமக்கு உணர்த்தக் கூடியது என்பதால் அதைப் பார்க்கும் நபரின் புரிதலுக்கு ஏற்றமாதிரி அதன் அர்த்தத்தை மாற்றிக் காட்டுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் குழப்பம் ஏற்படலாம்.
உதாரணத்திற்கு ஸ்வஸ்திகா குறியீடு
நம் நாட்டில் இந்து மதத்தில் புனிதமாகக் கருதப்படும் இந்தக் குறியீடு ஜெர்மன் நாட்டில் நாஜிப்படை அதாவது ஹிட்லரின் படையின் குறியீடாகப் பயன்படுத்தப்பட்டது. சில நாடுகளில் இந்தக் குறியீட்டைப் பொது இடங்களில் பயன்படுத்தத் தடை உள்ளது. அப்படி இருக்கையில் ஸ்வஸ்திக் படம் அச்சடிக்கப்பட்ட டீ-ஷர்ட்டை அணிந்துகொண்டு நீங்கள் ஜெர்மனியின் ஏர்போர்ட்டில் இறங்கினால் என்ன ஆகும் என்று நினைத்துப் பாருங்கள்.
எனவே ஐகான்களை முதலில் புரிந்துகொள்வது முக்கியம். ஐகான்கள் இரண்டு வகைப்படும் ஒன்று நிஜ உலகில் இருப்பதை அப்படியே குறிக்கக் கூடியது மற்றொன்று கற்பனையாக உருவாக்கப்பட்டது. இடது பக்கம் காட்டப்பட்டுள்ள ஐகான்கள் நிஜ வாழ்வில் நாம் பார்க்கும் ஒரு பொருள் அல்லது நாம் செய்யும் செய்கையின் நேரடி வரைபடங்கள். இவற்றின் அர்த்தங்களை நாமாகவே புரிந்து கொள்ள முடியும். ஆனால் வலது பக்கம் கட்டப்பட்டுள்ள ஐகான்கள் மனிதனால் கற்பனையாக உருவாக்கப்பட்டவை என்பதால் அவற்றின் அர்த்தங்கள் நமக்குக் கற்பிக்கப்பட வேண்டியது அவசியம்.
ஒரு டிசைனர் தான் தயாரிக்கும் பொருளில் பயன்படுத்தும் ஐகான்கள் எல்லோராலும் புரிந்து கொள்ளக் கூடியதா என்று நன்கு ஆய்ந்த பின்னரே பயன்படுத்த வேண்டும். நமக்கு இதன் அர்த்தம் புரிகின்றது என்பதால் எல்லோருக்கும் இது புரியும் என்று உத்திரவாதம் கிடையாது.
இதை சரிவரச் செய்ய ஒன்றுக்கும் மேற்பட்ட ஐகான்களை பரிசீலிக்க வேண்டும் பின்னர் அதிலிருந்து மிகப் பொருத்தமான ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும். பயனாளர்களை நேரடியாகத் தொடர்பு கொண்டு எது பொருத்தமாக இருக்கும் என்று கேட்க முடியாத பட்சத்தில் உங்களின் சக டிசைனர்கள் அல்லது இந்த வேலையில் சம்பந்தப்பட்ட யாரிடமாவது நீங்கள் பரிசீலித்த ஐகான்களை காட்டி அவர்கள் என்ன புரிந்து கொள்கிறார்கள் என்று தேர்வு நடத்த வேண்டும். அதற்கும் உங்களுக்கு வாய்ப்பு இல்லை என்றால் இன்டர்நெட்டில் பரவலாக இதன் அர்த்தம் எவ்வாறு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று ஆராய வேண்டும். பெரும்பாலும் இன்டர்நெட்டில் தேடி அதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டாலே போதுமானது.
உதாரணத்திற்கு Book என்ற ஆங்கில வார்த்தைக்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளது. ஒன்று புத்தகம், மற்றொன்று பதிவு செய் (ரயில் டிக்கெட் புக் செய்வது). நீங்கள் இதற்கான ஐகானை ‘Book icon’ என்று இன்டர்நெட்டில் தேடும்போது உங்களுக்குப் புத்தகத்திற்கான தேடல் முடிவுகளே அதிகமாகக் காட்டப்படும். ஆனால் நீங்கள் ஒரு ரயில் புக்கிங் இணையதளத்திற்கு ஐகான் தேடுவதாக வைத்துக் கொண்டால், மேலே உள்ள படத்தில் வலது பக்கமுள்ள ஐகானை தான் பயன்படுத்த வேண்டும்.
இவற்றில் கவனிக்க வேண்டிய முக்கியமான இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று, ஒரே அர்த்தத்தைத் தரக்கூடிய வெவ்வேறு ஐகான்கள். இரண்டாவது, பல்வேறு அர்த்தங்களைத் தரக்கூடிய ஒரு ஐகான்.
நீங்கள் ஃபேஸ்புக் அல்லது வேறு ஏதேனும் சமூக வலைத்தளத்தில் கீழ்காணும் ஐகான்களை பார்த்திருக்க கூடும்.
இவை எல்லாமே ‘ஷேர் செய்ய’, அதாவது ஒரு படத்தையோ அல்லது வீடியோவையும் பகிர்வதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இவை மூன்றுமே ஏதேனும் ஒன்றை பகிர்வதற்கு என்று பயனாளர்களுக்குப் பழக்கப்படுத்தப்பட்டுள்ளது, எனவே ஷேர் என்ற இடத்தில் இந்த மூன்று ஐகான்களில் எதை வேண்டுமானாலும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
இதற்கு நேர்மாறாக ஒரு ஐகான் பல்வேறு அர்த்தங்களைத் தரக்கூடியதாகவும் இருக்கும். உதாரணத்திற்கு டிக் (Tick ✓) என்ற ஐகான் ‘சரி, முடிந்தது, தேர்ந்தெடுக்கப்பட்டது, ஏற்றுக்கொள்’ எனப் பல்வேறு வார்த்தைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
எனவே பயன்படுத்தப்படும் இடத்தையும், பயனாளர் களையும் கருத்தில்கொண்டு மிகவும் பொருத்தமான ஐகான் தேர்ந்தெடுக்கப்படுவது தவிர்க்கப்பட முடியாதது.
எழுத்தின் மூலம் வெறும் தகவலை மட்டும் பரிமாற முடியும், ஆனால் உணர்ச்சிகளை? அதற்காகக் கண்டுபிடிக்கப் பட்டதே, எமோஜிக்கள் (Emoji). இவை ஐகான்களின் நீட்சியே.
உங்களுக்கு ஒரு சிறிய சவால், பின்வரும் வார்த்தைகளுக்குரிய ஐகான்களை இன்டர்நெட்டில் தேடி எது பொருத்தமாக இருக்கும் என்று கமெண்ட் செய்யுங்கள் அல்லது எனக்கு இ-மெயில் (mariappan7kumar@gmail.com) அனுப்புங்கள்.
ஆடு, மாலை, முடி, பொருள்.
தொடரும்…