
1
கட்சிக்கொடிகள் நாட்டப்பட்ட வாயிலைக் கடந்து நாங்கள் உள்ளே நுழைய முயன்றபோது ஆர்கே செய்தித்தாள் பார்த்தபடி ஹாலில் அமர்ந்திருந்தார். எங்கிருந்தோ அவசரமாக ஓடி வந்த ஒருவன் எங்களை போகக்கூடாதெனத் தடுத்தான்.”ஐயா முக்கியமான வேலையா இருக்காரு. யாரும் பாக்க முடியாது” என்றான் காத்திரமான குரலில். காதில் விழுமாறு இங்கே நடக்கும் பரிபாஷைகள் எதையுமே சட்டை செய்யாமல் அவர் அமர்ந்திருந்தது எங்களுக்குள் ஆச்சரியத்தை உண்டுபண்ணியது.
“ரங்கத்தூர் கிளைச் செயலாளர் வந்துருக்கார்னு சொல்லுப்பா. ஐயாவுக்கு நல்லாத் தெரியும்” என்ற கருணாகரனின் குரலில் லேசான கோபம் தெரிந்ததும் அவன் காத்திருக்கச் சொல்லி உள்ளே சென்று வந்தான். வருமாறு சைகை செய்தபிறகு நாங்கள் உள்நுழைந்தோம். வெளியே வந்ததும் தானும் ஆர்கேவும் பால்யகாலத்தில் எப்படியெல்லாம் சுற்றித் திரிந்தோம் என்பதையும், இப்போது இருவருக்குமிடையே விழுந்த இடைவெளியில் அரசியல் பலத்தின் பங்கு குறித்தும் விலாவாரியாகப் புலம்புவார் என்பதை எண்ணிக்கொண்டே நானும் அவருடன் கைகூப்பியவாறு சென்றேன்.
ஆர்கேவை நான் நேரில் பார்ப்பது இதுவே முதல்முறை. செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சி சேனல்களிலும் வருவது போன்றே துளியும் அரிதாரம் கலையாமலிருந்தார். எப்படி இந்த அதிகாலையிலேயே குளித்து முடித்து ஒப்பனை பூசிக்கொண்டு வந்து அமர முடிகிறது என யோசித்தேன்.
ஆர்கேவின் பார்வை என் பக்கம் துளியும் திரும்பவில்லை. கருணாகரனைப் பார்த்து அமரும்படி கைகாட்டினார்.
“இல்லீங்க.. இருக்கட்டும்” என நெளிந்தபடி நின்றிருந்த கருணாகரன் எனக்கு புதிதாகத் தெரிந்தார்.
“பையனுக்கு கல்யாணம் வச்சிருக்கேன். உங்க தலைமைல பண்ணனும்னு விருப்பம். அதான் கேட்கலாம்னு வந்தேன்”
“நானா?” எனச் சிரித்தவரின் தொனியில் லேசான எள்ளல் தெரிந்தது போலிருந்தது. ‘இத்தனை வருட ஒதுங்கலுக்குப் பிறகு வந்து ஒட்டிக்கொண்டாயா வா வா’ என்பது போன்ற எள்ளல்.
“சந்தோசம்தான். எந்த தேதி?”
நான் பாக்கெட்டில் குறித்து வைத்திருந்த மூன்று தேதிகளை எடுத்து நீட்டினேன். கண்ணாடியை சரிசெய்துவிட்டு தேதியைப் பார்த்தவர்,”நடுத்தேதி நான் ஃப்ரீ தான். ஆனா..” என யோசித்தார்.
மேலும் யோசிக்கவிடாமல் துண்டிப்பது போல,”அப்படின்னா அன்னிக்கே குறிச்சிடலாங்க” என்றார் கருணாகரன்.
“அது பிரச்சினை இல்லய்யா. நீ வடக்கு ஏரியா தானே? என்னை அழைச்சா உங்க செயலாளர் கோவிச்சுக்குவாரேய்யா”
நாங்கள் இதைப்பற்றி வெளியிலேயே போதுமானவரை பேசியிருந்தோம். இவருக்கும் வடக்குக்கும் ஏற்கனவே பல தடவைகள் முட்டிக்கொண்டு பகை மூண்டிருப்பது கட்சி வட்டாரத்தில் பேசுபொருளாக இருக்கிறது.
“அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினை இல்லங்க. நாம அழைக்கிற கடமைக்கு அழைச்சிடுவோம். வர்றதும் வராததும் அவங்க இஷ்டம்” என்றார் பணிவாக.
“ஓ.. நீ அந்தளவுக்கு யோசிச்சி வைச்சிட்டியா? அப்ப உன் முடிவுதான். நீ தேதி வை. வந்திடுறேன்” என்று கைகூப்பிய ஆர்கேவிடமிருந்து விடைபெற்று வெளியே வந்தோம்.
”அவனுக்கு இவன் விட்டவன் இல்ல. இவனுக்கு அவன் விட்டவன் இல்ல. யாருக்கு எம்எல்ஏ சீட்டுனு வந்ததும் தலைமையே மண்டைய பிச்சிக்கிச்சுனா பாரேன்”என்றவர், ”ஆனா, வடக்கு நம்ம ஜாதி இல்ல” எனச் சிரித்தார்.
“ஆனா, நம்ம சாதிக்காரனுங்கதான் ஏரியாவுல அதிகம்னதும் அப்பயே குருவத்தூருல நம்ம சாதிக்காரப் புள்ளையா பாத்து கல்யாணம் பண்ணான். அப்ப இருந்தே அடி போட்டாத்தான் இந்த வயசுலயாச்சும் சீட் வாங்க முடியும்னு என்னா டெக்னிக் பாரு.. ஆனா, சீட்டு ஆர்கேவுக்கு போய்டுச்சு. அந்தக் கோவம்தான் அவனுக்கு இன்னும் ஆறல”
நான் எதுவும் பேசாமல் மௌனமாகப் பின்தொடர்ந்தேன்.
“ஆனா, ஆர்கே சீட்டு வாங்குனது பெரிய லாபி. நானும் அவனும் ரெண்டு மூணு தடவ.. சிறை நிரப்பும் போராட்டத்துல ஒண்ணா இருந்திருக்கோம். அப்ப வாடா போடா பழக்கம். மீட்டிங்குனா பிரியாணி அடிக்கிற வேலைக்கு நாங்க ரெண்டு பேரும்தான் பொறுப்பா செஞ்சி முடிப்போம்னு தலைமையே நம்புச்சு. தோள்மேல கை போட்டு எடேய்னு அதட்டுவேன். இப்ப அதெல்லாம் செய்ய முடியுமா?”
அவர் சிரிப்பில் தெரிந்த விரக்தி என்னை மேலும் மௌனமாக்கியது. இருந்தாலும் கேட்டு விட்டேன்.
”அப்புறம் ஏண்ணே நீங்க மட்டும் இப்படியே இருக்கீங்க?”
அக்கேள்வியை அவரும் ஆர்வத்தோடு எதிர்பார்த்தது போலிருந்தது.
”அரசியல்னா சொந்த வேல வெட்டிய மறந்துடணும் தம்பி.. பொண்டாட்டி புள்ளைங்க சோத்து சாத்துக்கு தவிக்கிதா? வூடு காடு பண்ணையம் பாத்தாச்சான்னு கெடந்தேன்னு வையி.. ஏறி மிதிச்சிட்டு போய்ட்டே இருப்பானுங்க. அதெல்லாம் போகணும் தம்பி.. அவனுங்களோட பூட்டுன வாசல்ல தவமா கெடக்கணும். என்ன சொன்னாலும் மண்டைய ஆட்டணும்.. இந்தா இப்ப ஒரு அடிபொடி வந்து மறிச்சான் பாரு.. அப்படி வந்து அண்ணனுக்கு நாந்தான்டா காவல்னு நிக்கணும்.. இப்படிலாம் சிரிச்சி கூளகும்பிடு போட்டு நடிக்கணும்.. என்ன பண்றது?”
பேசிக்கொண்டே தெருமுக்கிலிருந்த டீக்கடைக்கு வந்து விட்டிருந்தோம். நான் கடைக்காரரிடம் இரண்டு டீ சொல்லிவிட்டு கருணா அண்ணனைப் பார்த்தேன். நடையின் களைப்பை விட தவறவிட்ட காலத்தைப் பற்றி அசைபோட்டதன் நெடுந்துயர் அவரது முகம் மட்டுமின்றி தளர்ந்த உடலின் அசைவுகளிலும் படிந்திருந்தது.
2
அன்றிரவு ஒன்பது மணிக்கு மேல் கருணாகரன் அண்ணன் அழைத்து வீட்டுக்கு வரச்சொன்னதிலிருந்த அவசரம் எனக்கு படபடப்பைத் தந்தது. என் வீட்டிலிருந்து மூன்றாவது வீதியிலிருந்த அவர் வீட்டின் முன்பாக என் வண்டியை நிறுத்தினேன். அவரோடு சேர்ந்து இரண்டொரு கட்சி ஆட்களும் அமர்ந்திருந்தனர். இரத்தினத்தைப் பார்த்து வணக்கம் சொன்னேன். இப்போதைக்கு எங்கள் பகுதியில் வளர்ந்து வரும் இன்னொரு கட்சியாள். கருணா அண்ணனால் வளர்த்துவிடப்பட்ட மற்றுமொரு விசுவாசமான தொண்டன்.
என்ன விஷயம் என விசாரித்ததில் இரத்தினம்தான் ஏதோ குட்டையை குழப்பி விட்டிருக்கிறான்.
“இத்தன பேரு இருக்கீங்க? என்ன மயித்த யோசிக்கிறீங்களோ” என எடுத்தவுடன் அவன் கேட்டதில் எனக்கு கோபம் ஊற்றெடுத்தது.
“ஒழுங்கு மசுரா பேசுடா தாயாளி” என பதிலுக்கு அண்ணன் கத்த, அவன் தலையைத் திருப்பிக் கொண்டான்.
“நான் சொல்றது கஷ்டமா இருக்கும். ஆனா, அதானே உண்மை..”
கருணாகரன் ஒரு சொம்பு நிறைய நீரை எடுத்து கடகடவெனக் குடித்தார்.
“ரவி கவர்மென்ட் சம்பளம் வாங்குறானாம். பெரிய தலைமை டிபார்ட்மெண்ட்ல வேற இருக்கானாம்.. கட்சிப் பேரு போட்டு எப்படி கல்யாணம் பண்ணலாம்னு கேட்குறான்?”
ரவி என்னை விட நான்கு வருடம் இளையவன். எனக்கு குடும்ப நட்பு. இது வழிவழியாக வருகிறது. என் தாத்தாவும் கருணா அண்ணனும். பிறகு நானும் ரவியும். இப்படியாகத் தொடர்கிற நட்பு. நானோ எனது குடும்பமோ கருணா அண்ணனின் அளவுக்கு வசதியில்லை என்றபோதும் அரசியலுக்குள் என்னை கருணா அண்ணனின் வழி எப்படியாவது நுழைத்து விடவேண்டுமென என் தாத்தா நினைத்ததன் விளைவு அவர் பின்னாலேயே ஓடிக் கொண்டிருக்கிறேன். உள்ளூரில் தெளிவான பெயரெடுத்தாலும் ரவி வெளியூரில் வேறு மாதிரி. பணி செய்யும் இடத்தில் வேறொரு பெண்ணோடு தொடர்பில் இருப்பது நண்பர்கள் வட்டாரத்தில் பிரபலம். பணம் சேர்கிற இடத்தில் இந்த மாதிரி செயல்பாடுகள் எல்லாம் அடியில் போய்விடும்.
நான் பெரிய அலட்டலில்லாமல், ”அட ஆமால்ல..அதனால என்னண்ணே? நம்ம ஆட்சிதானே?” என்றேன்.
மூன்றாவது வார்டு காளியும் என்னோடு சேர்ந்து கொண்டார்.
“நானும் அதான் சொல்றேன். அப்புறம் எதுக்குய்யா நாம ஆளுங்கட்சியா இருக்குறோம். நம்ம பையனுக்கு இதக் கூட நாம செய்ய முடியாதா?” எனக் கொந்தளித்தபடி சைகை காட்டினார்.
நான் பைக் கவரிலிருந்து குவாட்டர் பாட்டிலை எடுத்துப் போய் மேசையில் வைத்தேன்.
இரத்தினம் சிரித்தான்.
“என்ன விளையாட்டுனு நினைச்சீங்களா எல்லாரும்? இது எவ்ளோ பெரிய ரிஸ்க் தெரியுமா?”
“நம்ம ஆட்சில இருந்துகிட்டு இத கட்சிக் கல்யாணமா நடத்தலனாதான் கோழைத்தனம்” என்றேன் நான்.
“பின்ன என்னடா பையா? பெரிய ஐயாவோட தாத்தா மொதமொதல்ல எதிர்கட்சித் தலைவரா உட்காந்த பீரியடு.. சென்ட்ரலுக்கு எதிரா போராட்டம் உச்சத்துல இருந்த வருசம். திருச்சி ஸ்ட்ரைக்குக்கு தலைவர் வர்றாரு.. நானும் ஏத்தாப்பூர் பாயி.. உனக்குத் தெரியும்லடா காளி? போன வருசம்தான் அவரு செத்தாரு. நாங்க ரெண்டு பேரும் போய் எறங்குனோம். தலைவருக்கு பின்னாடியே அவர் தோள்ல உரசிக்கிட்டு வண்டில ஏறுனது இன்னும் மறக்க முடியல. அவரு கூட வண்டி ஏறணும்னு தடியடியிலயும் அப்படி முண்டியடிச்சிக்கிட்டு ஓடுனம். ஒண்ணா ரெண்டா சொல்றதுக்கு? டவுனுக்குள்ள ஒரு இடத்தகராறு. காலி பண்ண மாட்டேன்னு அடம் புடிச்ச மார்வாடிய நானும் ஆர்கேவும்தான் அடிச்சே துரத்துனோம். அவன இராத்திரியோட ராத்திரியா குடும்பத்தோட ஊர விட்டே ஓடவச்சத தலைவர் முன்னலாம் சந்திக்கும் போது அடிக்கடி சொல்வாரு. அதெல்லாம் இளவயசுல பண்ண சேட்டை” நிறுத்திவிட்டுப் பெருமையாகச் சிரித்தார்.
“எனக்கில்லாத உரிமை இங்க எவனுக்கு இருக்கு. 14 நாள் தலைவர்கூட இருந்தோம். ஒரே ஜெயில்ல.. சேலம் ஜெயில் ரெக்கார்டுல இப்பவும் என் கையெழுத்து இருக்கும் எடுத்துப்பாரு.” என இரத்தினத்தை நக்கலாகப் பார்த்தார்.
“ஆமாமா.. அப்புறம் ஏன் இன்னும் கிளைச் செயலாளராவே இருக்கீரு.. பின்னாடி வர்றவன் குண்டிய புடிச்சி மல்லுக்கட்டிட்டு மேல ஏத்திவிட்டுட்டு அண்ணாந்து பாக்குறதுல என்னா பெரும?” என்று இரத்தினம் சொன்னதும் கருணாவின் முகம் கருத்தது.
“இப்ப என்னடா சொல்ற புடுங்கி? நான் கட்சி பத்திரிக்கைல என் தலைவன் பேரப் போட்டுத்தான்டா எம்மவன் கல்யாணத்த நடத்துவன். ஆவற கூத்து ஆவட்டும்” என சீறியதும் இரத்தினம் சுதாரித்துக் கொண்டான்.
“நான் என்னா சொல்றன்னே உனக்கு புரியலண்ணே. இன்னும் ரெண்டு வருசம்தான் நம்ம ஆட்சி. அதுக்கப்புறம் யாரு வராங்கனு யாருக்குத் தெரியும்? அந்த டைம்ல நீ அந்த கட்சி ஆளானு ரவிய மாத்தி மாத்தி பந்தாடப் போறானுங்க. அப்ப உங்கள மாதிரி நானும் கைகட்டி வேடிக்க பாத்துட்டுப் போறேன். எனக்கென்ன?” என்றபடி டம்ளரை வாயில் கவிழ்த்தான்.
காளி இப்போது குறுக்கே புகுந்தார்.
“அதெல்லாம் அடுத்து தடவையும் நாமதான்டா வர்றோம். நீ தைரியமா பண்ணு மாப்ள”
“அவன் சொல்றான் இவன் சொல்றான்னு கேட்டுட்டு செஞ்சிட்டு பின்னாடி அவஸ்தப்படாதீங்கனுதான் நான் சொல்றேன். நல்லா ஏத்திவிட்டுட்டு வேடிக்கை பாக்குறவனுங்க முன்னாடி உண்மைய சொன்னா தப்பாதான் தெரியும். மொதல்ல ரவியை கேட்டீங்களா?”
“அதெல்லாம் கேட்டாச்சு. அவனுக்கும் கொடி நட்டு கல்யாணம் பண்றதுல ஆசைதான்”
“என்னவோ பண்ணுங்க. கடைசியா ஒண்ணு சொல்லிக்கிறேன். ஜாதகமே செட் ஆவலன்னு எங்கங்க அலைஞ்சீங்க. பொண்ணோட அப்பன் பேரென்ன? ஆங்..சந்திரன் அந்தாளுக்கு அரசியலே புடிக்காது. அப்புறம் எதுக்கு அம்பது பவுன் போட்டு உங்களுக்கு பொண்ணு குடுக்க சம்மதிச்சாரு..? பையன் கவர்மெண்ட் வேலைல இருக்கான். காலத்துக்கும் பிரச்சினை இருக்காதுங்கற ஒரே காரணத்துக்கு தான். ஏன், நம்ம ஊர்லயே எத்தன பேரு பொண்ணு கேட்டாங்க. வேலைக்கே ஆகலையே..என்னண்ணே நான் சொல்றது?’ என காளியைப் பார்த்தான். அவரும் ‘ஆமாம்’ என்பது போல தலையாட்டினார்.
“அந்த வேலைக்கு ஆப்பு வச்சிடாதீங்க.. அவ்வளவுதான் சொல்லிட்டேன்.” என்றபடி எழுந்து பைக்கை நோக்கி நடந்தவனை நாங்கள் மௌனமாகப் பார்த்தோம்.
“இதுல ஆர்கேவா வடக்குச் செயலாளரானு வேற குழப்பம்.” என அவன் முணுமுணுத்தபடியே சென்றது பைக் சத்தத்தைத் தாண்டியும் எங்களுக்குக் கேட்டது.
கருணா வெறுப்போடு என்னைப் பார்த்தார்.”நீ என்ன நினைக்கிற?”
“அவன் சொல்றதுலாம் பெருசா எடுக்கத் தேவல்லண்ணே.. நீங்க திரும்பவும் ஆர்கே கூட சேர்றது அவனுக்கு புடிக்கலையோ என்னமோ?” என்றேன் நான்.
காளி ஏனெனக் கேட்டார்.
“அவன் முத்துசாமிகூட கொஞ்சம் நெருக்கமா இருக்காண்ணே.. அந்த குரூப் கூட சேர்ந்து கிட்டு அடிக்கடி ஆர்கேவ தனியா பாக்கப் போறதா கேள்விப்பட்டேன்”
“ஆமாமா.. நான்கூட அடிக்கடி வெளியில பாக்குறேன்” என காளியும் ஆமோதித்தார்.
“நான் பாத்து வளத்துவுட்ட நாயிங்க..” கருணா மீண்டும் சீறினார்.
“அத வுடு மாப்ள.. இப்ப வடக்குக்கு சொல்றதா வேணாமான்னு மட்டும் யோசி” என்றார் காளி.
3
வடக்குச் செயலாளரின் வீடிருந்த ஆத்தூரை நோக்கி நாங்கள் பயணித்துக் கொண்டிருந்தோம். காளியண்ணனின் சொல்படி வடக்கை கல்யாணத்துக்கு அழைப்பிதழ் வைத்து சம்பிரதாயமாக அழைப்பதென முடிவானது. வாழ்த்துரையில் அவருக்கு இடம். அச்சடித்த பத்திரிக்கைகள் பையில் பத்திரமாகக் கிடந்தன.
“இது வெறும் குடும்ப நிகழ்ச்சிதானப்பா. இதுக்குலாம் இவ்வளவு பரபரப்பு தேவையேயில்ல” என கருணா தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்வது போலப் பேசினார்.
“பத்திரிக்கைல ஆர்கேவோட பேரப் பாத்ததுமே இவரு வரமாட்டாரு. இருந்தாலும் நமக்கு அழைப்பு வரலன்னு சொல்லிடக்கூடாது. அதனால நாம வச்சிடுறோம். வந்தாலும் சரி வரலன்னாலும் சரி”
“பத்திரிக்கைல பேரு போட்டது இன்னுமா தெரியாம இருக்கும்.. அதெல்லாம் தெரிஞ்சிருக்கும். நாம போய் வைக்கிறோம் அவ்ளோதான்”
நாங்கள் வீட்டு வாசலின் முன்பு பைக்கை நிறுத்திவிட்டு கேட்டைத் திறந்துகொண்டு உள்நுழைந்தபோது வடக்கு வெறும் லுங்கியில் கோழிகளுக்கு அரிசியை இறைத்துக் கொண்டிருந்தார். அடிபொடிகள் யாரையும் காணோம்.
“வாங்கப்பா.. இப்பதான் முத்துசாமி வந்துட்டுப் போறான்” என்று அவர் சொன்னதுமே கருணா அண்ணனின் முகம் மாறியது.
பவ்யமாய் அவர் நீட்டிய பத்திரிக்கையை முகமலர்ச்சியோடு எடுத்துக் கொண்டவர் தலைமையில் ஆர்கேவின் பெயரைப் பார்த்ததும் சிரித்தார்.
“வாழ்த்துரைல நான் வந்திடுறேனா?சரிப்பா. வந்துடுறேன்” என்றபடி பெரிதாக எந்தப் பாவனைகளையும் காட்டாதது எங்களுக்கு கொஞ்சம் வியப்பைத் தந்தது.
திரும்பும்போது காளி சொல்லிக்கொண்டே வந்தார்.
“இதுல என்னடா ஆச்சரியம்? அதெல்லாம் முத்துசாமி நல்லா ஓதியிருப்பான். என்ன ஒண்ணு.. நீ எதாவது போஸ்டிங் கேட்கணும்னாலும் வடக்குகிட்ட தான் வந்து நிக்கணும். ஆர்கேவோட செல்வாக்குலாம் இந்தப் பக்கம் செல்லுபடியாகாது”
“காலமே போய்டுச்சு. இதுக்கு மேல நாம எதுக்கு அவன்கிட்ட போறோம் விடு.. கட்சிக்காரன்கிற மரியாதையோட போய் சேர்ந்தா போதும்” என்று கருணா சொன்னபோது எனது எதிர்காலம் பற்றி எதுவும் பேசாதது எனக்கு வருத்தமாக இருந்தது. வீடு திரும்பி தாத்தாவிடம் புலம்பினேன் .”வேலைவெட்டிய விட்டுட்டு முழுசா மூணு வருஷம் இவரு பின்னாடி சுத்துனதுக்கு ஒண்ணுமே இல்லாம போய்டுமா தாத்தா?” என்ற என்னிடம் தாத்தா நம்பிக்கை இழக்காமல் இருப்பது குறித்த பழங்கதைகளைக் கூறித் தேற்றத் தொடங்கியிருந்தார்.
திருமணநாள் நெருங்கிக் கொண்டிருந்தது. கருணா எங்களுக்கும் சேர்த்து உடையெடுத்துத் தந்தார். ஒரு மாதமாக விடுப்பு கேட்டு வந்திருந்த ரவியை நான் அழைத்துக் கொண்டு இரண்டு நாட்கள் பத்திரிகை வைக்க அலைந்தேன். பத்திரிக்கை கட்சியின் நிறமும், கொடியும் தலைவர்களின் குறுநகையுமென ஜொலித்தது.
கட்சிக்கரை கட்டிய வட்டத்துக்குள் மணமக்கள் பெயர் ரவி-சாரதா என மிளிர்ந்தது. பெண்வீட்டார் ஒருவகையில் எனக்கு தூரத்து உறவென்பதால் ரவி ஒட்டிக்கொண்டு சாரதாவைப் பற்றி அதிகம் பேசினான். பத்திரிகை வைக்கப்போகும் சாக்கில் பெண்வீட்டுக்கு இரண்டொரு முறை அழைத்துச் சென்றான். பெரிய இடம். இதற்கு முன்பும் நான் அங்கு அவ்வப்போது வந்திருந்தாலும் இப்போது எல்லாமும் அசுர வளர்ச்சியாய் இருந்தது. தீர்மானமான குடும்பம். சந்திரன் ஒரு முடிவெடுத்துவிட்டால் எப்படியாகிலும் அதை நிகழ்த்திவிடத் துணிவார் என தாத்தா சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். பெரிதாக அரசியலுக்கோ வேறு பொழுதுபோக்குக்காகவோ நேரத்தையும் பணத்தையும் விரயம் செய்வதை அவர் விரும்பமாட்டார். அதே போல வலுவிழந்த உறவுகளிடமும் காரணமின்றி அவ்வளவாக வைத்துக்கொள்வதில்லை. என் குடும்பத்தாரை நேருக்கு நேர் சந்தித்தாலும்கூட வெறும் தலையாட்டலோடு சரி. மேன்மேலும் தேங்காய் மண்டித் தொழிலில் உறுதியாகக் காலூன்றி முன்னேறிச் சென்றவர்கள் காலப்போக்கில் நலிந்த உறவுகளை மறப்பது இயல்புதானென நினைத்துக் கொண்டேன்.
பத்திரிகை வைத்துத் திரும்பும் போது கட்சித் திருமணமாக அமைந்ததில் தனது பணிக்கு யாதொரு பிரச்சினையும் இல்லையென்பதை ரவி அடிக்கடி சொல்லிக் கொண்டே இருந்தது விநோதமாகத் தெரிந்தது.
4
திருமண நாளன்று கருணா அளவுகடந்த மகிழ்ச்சியில் திளைத்திருந்தார். நாங்கள் அருகிலிருந்த பெருநகரங்களின் மண்டபங்களை பரிந்துரைத்த போதும் திருமணம் தனது வீட்டிலேயே நடக்கவேண்டுமென்பதில் அவர் உறுதியாக இருந்தார். கட்சிப் பேனர்கள் பிரம்மாண்ட நீள அகலங்களில் தெருமுடக்குகள் தோறும் வைக்கப்பட்டிருந்தன. கட்சிக்கொடிகள் மெயின் சாலையிலிருந்து கிராமத்துக்குத் திரும்பும் வழிநெடுகிலும் இருபுறமும் நடப்பட்டிருந்தன. ஒலிபெருக்கியில் மூன்று நாட்களுக்கு முன்பிருந்தே கழகப்பாடல்கள் ஒலிக்கத் தொடங்கிவிட்டன.
நாங்கள் நினைத்தது போலவே வடக்கும் அவரது கட்சி சொந்தங்களும் திருமணத்துக்கு வரவில்லை. அதே நேரம் ஆர்கே வந்ததில் கருணாவுக்கு ஏக சந்தோஷம். கருணா தனது திருமணத்தை ஆர்கேவின் தாத்தா இதே வீட்டில் தலைமையேற்று நடத்தித் தந்த நிகழ்வை மேடையில் பேசும்போது நெகிழ்ச்சியோடு நினைவு கூர்ந்தார்.
திருமணம் முடிந்து ரவியும் சாரதாவும் மறுவீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்கள். அன்று மாலையே காளி அவசரமாக ஓடிவந்தார். கையில் மாலை வெளிவரும் செய்தித்தாள் இருந்தது.
கலவர முகத்தோடு அதைப் பிரித்துக் காண்பித்தார். நான்காம் பக்கத்தில் மாவட்டச் செய்திகளில் ‘ஆளுங்கட்சித் திருமணத்தில் உடைபட்ட தலைவர் சிலை’ என கொட்டை எழுத்தில் போட்டிருந்தது. எங்கள் பார்வை அவசரமாக அருகிலிருந்த படத்துக்குச் சென்றது.
எங்கள் ஊர் ஊராட்சி மன்றத்தின் கொடிக்கம்பத்துக்கு அருகில் மது பாட்டில்கள் இறைந்திருந்தன.
ஓட்டுக்கட்டிடத்தின் ஒன்றிரண்டு ஓடுகள் உடைந்து சிதறிக்கிடந்ததும் முகப்பிலிருந்த அரசியல் தலைவரின் ஒருபக்கக் காது உடைக்கப்பட்டிருந்ததும் பக்கத்திலேயே கிடந்த கட்சித்துண்டும் தெளிவாக போகஸ் செய்யப்பட்டிருந்தது.
திருமணத்துக்கு முந்தைய நாள் இரவு மதுவிருந்து நடந்ததாகவும் அதற்கு மணமகனின் உறவினர்கள் அருகிலிருந்த ஊராட்சி அலுவலகத்தைப் பயன்படுத்திக் கொண்டதாகவும் விலாவாரியாக கூறப்பட்டிருந்தது. போதாக்குறைக்கு செய்தியின் முடிவில் மணமகன் ரவி அரசின் முக்கிய துறையின் தனிப்பிரிவில் ஊழியராக பணியாற்றுவதாலேயே கட்சி சார்பான தனது திருமணத்தை எல்லை மீறி நடத்தி இருப்பதாக எழுதியிருந்தது கண்டு கருணா அலறினார்.
“எவன்டா நிருபர்?” என யாரையோ அடிக்கப் பாய்ந்தார். நாங்கள் பத்திரிகை அலுவலகத்துக்கு போன் செய்து திட்டினோம். எங்கிருந்தோ இரத்தினம் ஓடிவந்தான்.
“இதையும் ரெக்கார்டு பண்ணுவாங்கடா” என போனைப் பிடுங்கியவனைத் தள்ளிவிட்டோம்.
ரவியும் அவன் மாமனாரும் பேப்பரைப் பார்த்துவிட்டு ஓடிவந்தார்கள்.
“இந்த கருமத்துக்குதான் கட்சி எழவே வேணாம்னு தலையில அடிச்சிக்கிட்டேன்” என ரவியின் மாமனார் புலம்பினார். முதலில் சமாதானமாகத் தொடங்கி விளக்க முடியாமல் கருணாகரன் ஆத்திரத்தில் கத்தத் தொடங்க கைகலப்பு ஆவது போல வாக்குவாதம் முற்றியது. நாங்கள் நடுவில் ஓடி நின்று இருவரையும் விலக்கினோம்.
“ஒண்ணும் இல்லாதவனுக்கு எம் புள்ளைய குடுத்திருந்தாலாவது நிம்மதியா இருந்துருக்கும். வேலைல இருக்கான் செல்வாக்கு அது இதுன்னு தேரக் கொண்டாந்து தெருவுல வுட்டானுவ” எனப் புலம்பிக் கொண்டே சென்றவரை யாராலும் சமாதானம் செய்ய முடியவில்லை.
நேற்றிரவு மது விருந்து நடந்தது உண்மைதான் என்றபோதும் யாரும் சம்பவம் நடந்த பகுதிக்குச் செல்லவில்லையென கருணா இருதரப்பு உறவினர்களிடமும் எரிச்சலுடன் ஒப்புவித்துக் கொண்டிருந்தார். காளியும் நானும் சிலையை நாஸ்தி செய்தவர்களைக் கணித்துக் கொண்டிருந்தபோது சரியாய் அங்கு இரத்தினம் எங்கள் பார்வையிலேயே நின்றிருந்தான்.
கருணா அவனோடு பேசாமல் முகத்தை திருப்பிக் கொண்டார்.
“எந்த நாயிவளோ கெட்டப் பேரு பண்ணனும்னே இப்படி செஞ்சிருக்குதுங்க..” என ரவியின் அம்மா காறித் துப்பினார்.
இரத்தினம் தடுமாறியவாறு எங்களைப் பார்க்க கருணா ஓடிப்போய் அவன் சட்டையைப் பிடித்தார்.
“நீதான்டா வேலையையும் முடிச்சிட்டு செய்திக்காரனுக்கும் போன் பண்ணியிருப்ப..” என உலுக்கினார்.
இரத்தினம் சுதாரித்துக் கொண்டு தன்னை விடுவித்துக் கொண்டான்.
“ஓஹோ.. சிலைய உடைச்சீங்கல்ல.. எதிர்கட்சிக்காரன் சாலைமறியல் பண்றன்னு கடவீதில துள்ளிட்டு இருக்கான். சமாதானமா போலாம்னு அங்க சொல்லிட்டு நானும் முத்தண்ணனும் பேசிட்டுப் போக வந்தோம். பாத்தா பழிய தூக்கி எம்மேல போடுற…” சொல்லிக்கொண்டே போய் பைக்கில் ஏறி வெறுப்பாய் திரும்பிப் பார்த்தான்.
“இன்னும் என்ன கதியாவப் போறீங்களோ?”
5
அன்றைய மாலை சாலையில் சிலைக்குரிய கட்சிக்காரர்கள் போராட்டம் நடத்திய போது போலீஸ் வந்து தடியடி நடத்திக் கலைத்தது.
“நீயெல்லாம் ஒரு கவர்மெண்ட் எம்ப்ளாயி.. இப்படித்தான் ஊரையே கலைச்சுப் போட்டுக் கல்யாணம் பண்ணுவியா?” என ரவியை அவர்கள் திட்டினார்கள்.
கருணா அண்ணனின் முகத்தில் சுரத்தே இல்லை. அவர் நிலைகுலைந்து போய் உட்கார்ந்துவிட்டார். ரவியின் மாமனார் பிரச்சினை முடியும்வரை சாரதா தன் வீட்டில் இருக்கட்டுமென ஆள் மூலம் தகவல் சொல்லியனுப்பினார்.
காட்சிகள் சட் சட்டென மாறிக் கொண்டே இருந்தன.
உள்ளூரிலேயே பஞ்சாயத்து பேசி பிரச்சினையைத் தீர்க்கலாமென முடிவானது.
“எங்க தலைவர் சிலையை உடைக்கிறதுக்குதான் கல்யாணம் நடத்துனீங்களோ?” என எவனோ நக்கலாகக் கேட்டான்.
இத்தனை ஆண்டுகால வெறுப்பையும் சேர்த்துக்குவித்து பழி தீர்ப்பது போல சொற்கள் வந்து விழுந்தன.
சிலைக்கு உண்டான நிவாரணத்தை தந்துவிடுவதாக கருணா மன்றாடிக் கொண்டிருக்கும்போதே கூட்டத்தில் ஒருவன், ”இவனையெல்லாம் சீட்டக் கிழிச்சி வீட்டுல உக்கார வைக்கணும் பங்காளி” என நக்கலாகச் சிரித்தான்.
ரவி உடனே, ”சீட்டை கிழிச்சிடுவியா? எந்த மயிரான்டா அது? உங்கப்பன் தாத்தன் வாங்கித் தந்த வேலைனு நினைச்சியா தம்பி” என எகிறினான்.
“காசு குடுத்து வாங்குன வேலதானே தம்பி.. அதுக்கு ஏன்பா பொங்குற?” என மிக நிதானமாக மீண்டும் வேறொரு திசையிலிருந்து சீண்டல் எழுந்ததில் காரியம் கைமீறிப்போனது. ரவி அப்படிச் சொன்னவனை பாய்ந்து அடித்தான். அடி வாங்கியவன் சினிமாவைப் போன்று நான்கைந்து சுற்றுகள் சுழன்று கல்லின் மீது விழுந்ததில் மண்டை உடைந்து இரத்தம் கொட்டியது.
“பேசிக்கிட்டிருக்கும் போது ஏன்டா தள்ளிவிட்ட?” என எதிர்தரப்பு கத்தினார்கள். தான் தள்ளிவிடவில்லை என்றும் அவனாகவே போய் விழுந்தானென்றும் ரவி சொன்னது எடுபடவில்லை. எழுந்த கைகலப்பை அடக்க முடியாமல் நாங்கள் சோர்ந்து விழுந்தோம்.
மறுநாள் ரவி எதிர்தரப்பை தாக்கியதும் அவனை இரத்தம் ஒழுக அவர்கள் கூட்டிப் போனதும் ‘ஆளுங்கட்சியும் அரசுப் பணியாளரின் அராஜகமும்’ என்ற தலைப்பில் முகநூலிலும் தொலைக்காட்சி சேனல்களிலும் காணொளியாக வெளியாகி இருந்ததை கட்சிக்காரர்கள் காண்பித்துக் கவலைப்பட்டார்கள்.
ரவி தாளாத துயரத்தோடு கிளம்பி சென்னை போனான். போன கையோடு மூன்று மாதம் சஸ்பெண்ட் என்ற செய்தியைத் தாங்கி திரும்பி வந்தான்.
மறுநாளே ‘திருமணத்தால் ஊர்கலவரம் ஏற்படுத்திய ஆளுங்கட்சிப் பிரமுகரின் மகனை பணிநீக்கம் செய்து அரசு அதிரடி’ என நாளிதழ்களில் செய்தி வெளிவந்தது. கட்சி தன் பெயரை காப்பாற்றிக் கொண்டதாக ஊரில் பேசிக் கொண்டார்கள்.
நாங்கள் ஆர்கே தரப்புக்கு நம்பிக்கையின்றி போன் செய்துப் பார்த்தோம். ஐயா ஊரிலேயே இல்லை என்றார்கள். வீட்டு வாசலில் போய் இரண்டு நாட்கள் அமர்ந்திருந்தோம். கருணா அண்ணன் மிகவும் துவண்டிருந்தார். திரும்பி வரும்போது நிறைய குடித்துவிட்டு பேருந்து நிலையத்தில் தகராறு செய்தார்.
“இத்தன வருசம் கட்சில இருந்ததுக்கு நல்ல மரியாத குடுத்தீங்கடா பாவிங்களா..” என தலைவரின் பேனரைப் பார்த்து திட்டினார். பிறகு குலுங்கிக் குலுங்கி அழுதபடியே கைகளைத் தூக்கிக் கும்பிட்டார்.
இரண்டு நாட்கள் கழித்து ரணம் குறைவதற்குள் வடக்கு வீட்டுக்கே வந்து துக்கம் விசாரித்தார்.
“உள்ளூர் சாமிக்கு கற்பூரம் காட்டாம உலக சாமிக்கு பூஜை போட்டா இப்படித்தான் ஆகும்” என சொலவடை போட்டு அவருக்கு அவரே சிரித்தார்.
“மூணு மாசந்தானே தம்பி. விடு பாத்துக்கலாம்” என்றபடி எழுந்து தெம்பாக நடந்துப் போனார். அவரது நடையில் எதையோ சாதித்துவிட்ட நிம்மதி இருந்தது.
கார் புறப்பட்டப்பிறகு காளி, ”இந்தாளுலாம் ஒரு பெரிய மனுசன்.. ஆளு வச்சி இவனே கூட செஞ்சிருப்பான்.. த்தூ” எனத் துப்பினார். நான் திகைப்போடு திரும்பி, ”இருக்குமாண்ணே?” என்றேன்.
“பின்ன? மரியாதங்குறது இந்த காலத்துல அவங்களே வர வைச்சிக்கிறாங்க தம்பி. இப்பலாம் பயத்துக்கு இன்னொரு பேர்தான் மரியாத.. அவன் வந்து எறங்குனதும் உனக்கு பயம் வந்துச்சா இல்லையா?” என்றார் காளி.
நான் மௌனமாகத் திரும்பி கருணாவைப் பார்த்தேன். அவர் யோசித்துக் கவலைப்படும் நிலையை எப்போதோ கடந்துவிட்டிருந்தார்.
நாங்கள் அதன்பிறகு ஒன்று கூடுவதை நிறுத்திவிட்டோம். எனக்கு அருகிலுள்ள பெருநகரத்து நூற்பாலையில் சூப்பர்வைசர் வேலைக்குச் சொல்லியிருப்பதாக தாத்தா சொன்னார். நான் வேலைக்குச் செல்லும் நேரங்களில் காளி தென்பட்டால் தலையாட்டிச் சிரிப்பதோடு நிறுத்திக் கொண்டேன். அவரும் அதையே விரும்புவது போல நழுவிச் செல்லத் தொடங்கினார். இரத்தினம் அதுகூட இல்லை. தீராப்பகையோடுத் திரிபவனைப் போல முத்துசாமியின் அணியோடு சேர்ந்து மிடுக்காக சுற்றிக் கொண்டிருந்தான். அடுத்த உள்ளூர் தேர்தலில் முத்துசாமி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படலாமெனவும், கருணா வீட்டை விட்டே வெளியே வருவதில்லையெனவும் ஊரில் பேசிக் கொண்டார்கள். காடும் தோப்புமாய் குறைகாலத்தை கழிக்கப் போவதாக யாரிடமோ புலம்பியிருக்கிறார்.
6
இரண்டு மாதங்களுக்குப் பிறகான ஒரு தழும்பு நாளில் பணி முடிந்து திரும்பும் போது ரவியைச் சந்தித்தேன். துயரும் மீளாக்காயத்திலிருந்து வெளியேறி விடவேண்டுமென்ற தவிப்பும் அவன் முகத்தை இறுக்கமாகப் போர்த்தியிருந்தது. அத்தனைக்கும் நடுவில் வலியச் சிரித்தவனிடம், ”எப்ப திரும்பவும் வேலைக்கு?” என்றேன்.
“அடுத்த வாரத்துல முடியுதுண்ணே. போனாலும் எங்கயாவது தென்மாவட்டத்துலதான் தூக்கிப் போடுறதா பேசிக்கிறாங்க”
நான் சற்றுநேரம் எதுவும் பேசவில்லை. ஆறுதலாய் தோளில் தட்டிக்கொடுத்தபடி, ”சாரதா நல்லாருக்கா?” என்றேன்.
“அவ எப்படியிருக்காளோ யாருக்குத் தெரியும்?” என வேறெங்கோ பார்த்தான்.
நான் பதறியபடி”என்னடா ஆச்சு?” என்றேன்.
“உங்களுக்கு விஷயமே தெரியாதா? அன்னிக்கு அப்பன் வூட்டுக்கு போனவ திரும்பவேயில்லண்ணே. அவங்கப்பன் ஊர்ல வந்த நல்ல வரனையெல்லாம் விட்டுட்டு கவர்மென்ட் மாப்ளனு இவனுக்கு குடுத்தேன். கட்சி கட்சினு நாசமா போய்ட்டான். என் பொண்ண அனுப்பமாட்டேன்னு சொல்லிட்டான்”
எனக்கு அவனைப் பார்க்க பாவமாக இருந்தது. ”நான் வேணும்னா பேசிப் பாக்கட்டுமாடா?”
அவன் கசப்புடன் தலையாட்டினான்.
“வேணாம்ண்ணே.. நேத்துதான் டைவர்ஸுக்கு லெட்டர் வந்துருக்கு. குடுத்துடலாம்னு இருக்கேன். போய் தொலையட்டும்”
“என்ன சொல்றதுன்னே தெரியலடா.. நீ தெம்பா இருந்து வேலைக்கி போ.. எல்லாம் மறக்கும்” என்று கூறிவிட்டு நான் வெறுமையோடு பார்த்தேன்.
ரவி ‘வர்றேன்’ என்பது போலத் தலையாட்டிவிட்டு நகர்ந்தான். கண்ணாடியில் அவன் வாகனம் தூரத்தில் புள்ளியாய் மறைவது தெரிந்தது.
நான் போனை எடுத்து எண்ணைத் தேடியழுத்தி காதில் வைத்தேன். மூன்றாவது ரிங்கிலேயே எதிர்முனை எடுக்கப்பட்டு மிளிர்கிற அவள் குரல் ஒலித்தது. நானும் பதிலுக்குச் சிரித்தபடியே, ”அவ்ளோதான் சாரதா.. எல்லாம் முடிஞ்சுது” என்றேன்.