அவ்வளவுதான் – மலையாளம்: டி.பி ராஜீவன் – தமிழில்: திருமூழிக்களம் இரா சசீதரன்
மொழிபெயர்ப்பு கவிதை | வாசகசாலை
பகலின் உலோகப் பலகையில்
கதிரவன் ஆணி ஒன்று அடித்தார்
மனிதன் அதற்குச் சுற்றும்
இருளின் யானையைக் கட்டி
இரவு என்று அழைத்தனர்
பாட்டன் முப்பாட்டன் காலம் தொட்டே
கனவுகள் காண்பவர்கள் நாம்
கனவு கண்டால்
பட்டுச் சேலையும் வளையும் வரை
முன்னோர்களுக்குக் கிடைத்திருக்கிறது
நமது முன்னோர் ஒருவர் கண்ட
மற்றொரு கனவு
இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்துள்ளதாக
கனவு கண்டுகொண்டே நாங்கள்
நகரங்களைச் சுட்டெரிக்கிறோம்
கனவிலும் கிராமங்களைப் பிரளயத்தில் மூழ்கடிக்கிறோம்
ராஜ வம்சங்கள் பிடுங்கப்படுகின்றன
நமது கனவுகளுக்கு முன்னால்
தெய்வங்கள் ஆதரவற்றவர்கள்
அதனால்தான்
தங்களுக்கும் நாட்டிற்கும்
மக்களின் நன்மைக்காகவும்
எங்களிடம் கனவு காணுங்கள் என்று
ராஜாக்கள் வேண்டிக்கொள்கிறார்கள்
இளம் வயதிலேயே
கனவு காண்பதற்கு
நமது முன்னோர்கள்
ஆங்காங்கே ஆலமரத்தடியை
நிறுவினார்கள்
அங்கிருந்து எப்போதும்
உலோகங்கள் உருக்குவதும்
உருக்கிய உலோகப் பலகையை
பட்டறையில் சுத்தியால் அடித்து சமப்படுத்துவதையும்
நீங்கள் கேட்கவில்லையா?
அந்த ஒலியைத்தான் நம் குழந்தைகள்
கனவு காணப்பழகிவிட்டனர்
தினமும் ஒருவர்
நான்கைந்து கனவுகள் வரை காண்பார்கள்
வயது ஏற ஏற கனவுகள் அதிகரிக்கும்
திடீரென்று ஒருநாள்
கனவுகளின் எண்ணிக்கை பூஜ்ஜியம் ஆகும்
மேலும் அவர் பேசுவதில்லை
வெற்றிடத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தபோது
ஒருநாள் திடீரென்று காணாமல் போய்விடுவார்
அவ்வளவுதான் !
குறிப்பு: கவிஞர் டி.பி.ராஜீவன் தான் இறப்பதற்கு முதல் நாள் நவம்பர் ஒன்றாம் தேதி எழுதிய கவிதை இது.
நன்றி: மாத்ருபூமி வார இதழ்
*******