இணைய இதழ் 111கவிதைகள்

செளவி கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

மனம் பிறழ்ந்தவன்

அவன் எந்த வீட்டின் மீதும்
கல் வீசவில்லை
அவன் எவர் வீட்டுப் பூட்டையும் உடைத்துத்
திருடவில்லை
அவன் யாரோடும்
சண்டை போடவில்லை
அவன் வசவு வார்த்தைகள் எதையும்
பேசவில்லை
அவன் மது அருந்திவிட்டு
ஆடை விலக ரோட்டில் கிடக்கவில்லை
அவன் குழந்தைகளின் நடுவே
புகை பிடித்துப் புகைவிடவில்லை
அவன் யார் கையையும்
பிடித்து இழுக்கவில்லை
அவன் யாரையும்
பலாத்காரம் செய்யவில்லை
அவன் யாரையும்
நம்பவைத்து ஏமாற்றவில்லை
அவன் யாரிடத்திலும்
லஞ்சம் வாங்கவில்லை
அவன் யாருடைய இடத்தையும்
ஆக்கிரமிக்கவில்லை
அவன் தன் கைகளால்
வானத்தில் ஏதோ வரைந்தபடி
தனக்குத் தானே பேசிக்கொண்டு
நடந்துபோகிறான்
அவனை நீங்கள்
மனம்பிறழ்ந்தவன் என்கிறீர்கள்!

கண்கள்

இரவில் தட்டுத்தடுமாறி
எப்போதும் போல
சாலை கடந்து கொண்டிருந்த
கண்களற்றவனுக்கு
வானத்திலிருந்து
இரண்டு நட்சத்திரங்களை
எடுத்துப் பொருத்தியதும்
பார்வை பெற்று
பரவசத்தோடு
நடக்க ஆரம்பித்துவிட்டான்
அத்தனை கண்களைக் கொண்டிருக்கும் இராத்திரி வானம்
இரண்டு கண்களை
எடுத்துக்கொண்டதற்காகக்
கோபித்துக்கொள்ளவுமில்லை
கண்களைப் பெற்றவன்
ஆகப்பெரும் வரம்பெற்றவனாய்
உச்ச மகிழ்ச்சியோடு
பூமியைத் தரிசித்தபடி
நடந்துபோய்க்கொண்டிருக்கிறான்
கண்ணில்லாதவனைக் கண்டால்
பரிதாபப்பட்டு
அவனைக் கடத்தி விடுவதோடு
கடந்துபோய்விடாதீர்கள்
அவனுக்குக் கண்கள் வேண்டுமென
வானத்திடம் கேட்டுப்பாருங்கள்
வானம் உவகையோடு
கண்களைத் தரும்.

வரிசைகளில் வாழ்க்கை

ஏ டி எம்மி்ல்
பணமெடுக்கச் செல்கிறேன்
எந்த ஏ டி எம்முக்குச் சென்றாலும்
எனக்கு முன்பு இரண்டு பேர்
வரிசையில் நிற்கிறார்கள்

கோதுமை வாங்க
ரேசன் கடைக்குச் செல்கிறேன்
எனக்கு முன்பாக
நான்கு பேர்
நின்று கொண்டிருக்கிறார்கள்

ஒரு முக்கியமான கடிதத்தை
பதிவுத்தபாலில் அனுப்ப வேண்டுமென
அஞ்சல் நிலையம் செல்கிறேன்
எனக்கு முன்பாக ஆறு பேர்
பதிவுத் தபால்களை அனுப்ப
வரிசையில் நிற்கின்றனர்

நிறைய நாட்களாயிற்றே என
வங்கிக் கணக்குப் புத்தகத்தில்
பரிவர்த்தனைகளைப்
பதியலாமே என
வங்கிக்குச் செல்கிறேன்
எனக்கு முன்பாக வரிசையில்
பத்து பேர் காத்திருக்கிறார்கள்

ஆண்டவனே…என
கோயிலுக்குச் செல்கிறேன்
எனக்கு முன்பு
வரிசையில் நிறைய பேர்
காத்திருக்கிறார்கள்

வாழ்க்கை என்பது
வரிசைகளில் நகர்கிறது

வெயில்

இப்போதெல்லாம்
அடிக்கடி மின்சாரம் தடைபடுவதால்
இரவுக்குப் பயன்படுமென
பகலில் வீதியில் கிடந்த வெயிலை
வெட்டி எடுத்துக்கொண்டு வந்து
யாருக்கும் தெரியாமல்
கட்டிலுக்கு அடியில்
மறைத்து வைத்திருந்தேன்

எதிர்பார்த்தது போலவே
இரவு உணவை சாப்பிட்டுக்கொண்டிருக்கையில்
மின்சாரம் தடைப்பட்டது
மின்சார விளக்குகளால்
வெளிச்சமாயிருந்த வீடு
சட்டென இருட்டுக்கு மாறியது

ஆளாளுக்கு
அலைபேசி வெளிச்சத்தைப் பாய்ச்சி
இருட்டைச் சமாளிக்க முயன்றார்கள்
நான் ஓடிப்போய்
கட்டிலுக்கடியில் வைத்திருந்த வெயிலை
எடுத்து வந்து
உணவருந்தும் மேசையில் வைத்து
பழம் வெட்டும் கத்தியால்
வெயிலை துண்டு துண்டாக அறுத்தேன்

ஒரு துண்டைச் சமையலறையில்
ஒரு துண்டை
உணவருந்தும் அறையில்
ஒரு துண்டை வரவேற்பு அறையில்
ஒரு துண்டை முற்றத்தில்
ஒரு துண்டைப் படுக்கை அறையில்
ஒரு துண்டைப் படிப்பறையில்
ஒரு துண்டைக் குளியலறையில் மாட்டினேன்

இப்போது என் வீடு
வெளிச்சத்தில் தகதகக்கிறது
இவ்வூரிலுள்ள மற்றெல்லா வீடுகளும்
இருளில் மூழ்கிக் கிடக்கின்றன

உடனே
நாளை வெயிலை வெட்டி எடுத்து வந்து
வீட்டில் மாட்டிவிடலாமென எண்ணாதீர்கள்
வெயிலை
வெட்டி எடுத்துக்கொண்டு வருவது
அவ்வளவு சுலபமல்ல.

souvi36@hotmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button