இணைய இதழ்இணைய இதழ் 78சிறுகதைகள்

அவன் பெயர் என்ன? – வசந்தி முனீஸ்

சிறுகதை | வாசகசாலை

த்த ரேணுவ எங்க? ஏதோ பிரச்சினைன்னு எங்க அம்மா சொன்னா! “ என்று ரேணுகா தேவியின் அம்மாவிடம் கேட்டாள் ரேணுவின் தோழியான எதிர்வீட்டு கோகிலா.

ஆமாட்டீமாப்புள வூட்டுலருந்து இன்னைக்கு அதப்பத்தி பஞ்சாயத்துப் பேசத்தான் அவுங்க அம்மையும் அப்பனும் ஊர் பெரியவங்கள கூட்டிட்டு வாரங்களாம். அத நெனச்சாலே எனக்கு வயித்துல புளியக் கரைக்குது!”

ஆமா,ரேணு என்ன பிரச்சனைன்னு ஒங்கக்கிட்ட சொன்னாளா இல்லையா?”

இவளும் சொல்ல மாட்டுக்கா. அவுங்களும் சொல்ல மாட்டுக்காவ. மாப்ளயும் அவுங்க வூட்டுக்காரங்களும் நேர்ல வரும்போது நான் பேசிக்கிறேன்னு மொரண்டு புடிக்குறா.கல்யாணம் முடிஞ்சி நாலு மாசத்துக்குள்ள எம்புள்ள வாழ்க்க இப்படி நாசமாப் போயிட்டேட்டீ கோகி…” என்று அழத்தொடங்கினாள்!.

நீயொருத்தி எதுக்கெடுத்தாலும் சின்னப்புள்ளமாதிரி அழுதுக்கிட்டு. இரு! என்ன ஏதுன்னு அவக்கிட்ட கேட்டுட்டு வாரேன்என்று வீட்டுக்குப் பின்புறம் சென்றாள் கோகி.

வா கொரங்கு. எப்பம் வந்த?”

என்னது கொரங்கா…?”

பின்ன படிக்கட்டுல தொங்கிக்கிட்டு போயிருக்க?”

அன்னைக்கி திங்கக்கெளமன்னால பஸ்ல செம கூட்டம்! அந்த பஸ்ல போனாத்தான் ஆஸ்டலுக்குப் போயிட்டு துணியெல்லாம் வச்சிட்டு காலேஜ்க்குப் போக கரெக்ட்டா இருக்கும். அதவுட்டா, திருனவேலிக்கி நம்மூர்லருந்து அடிக்கடி பஸ்ஸாருக்கு? ஓட்ட பஸ்ல தொங்கிக்கிட்டுப் போனத, எங்கம்மக்காரி என்னமோ உத்தரத்துல தொங்குனமாரி ஓட்டவாய வச்சுக்கிட்டு ஊருப்பூராம் தம்பட்டமடிச்சது போதாதுன்னு ஓங்கிட்டயும் சொல்லிட்டாளா?”

அன்னைக்கி காலையில எங்க வீட்டுக்கு வந்த ஒங்க அம்ம, “இந்தக்காலத்துல மூக்கும் முழியுமாயிருக்குறவளுக்கே கல்யாணம் முடிக்க மூட்டமூட்டயா சீரு கொடுக்க வேண்டிருக்கு. இவ என்னன்னா ஆம்பள பயலுவமாதிரி படியில தொங்கிட்டுப்போறாளே! ஒண்ணுக்கெடக்க ஒண்ணு ஆயி காலுக்கையி மொடமாப் போச்சுன்னா இவள எவன் கெட்டிக்குவான் சொல்லுக்கான்னு ஒன்னப்பத்தி மத்தியானம் வரைக்கும் எங்கம்மக்கிட்ட சொல்லி சொல்லி ஒரே ஒப்பாரிதான்.”

எனக்கு வர்ற கோவத்துக்கு எங்கம்மா தலையில கொளவி கல்லெடுத்து ஒரேப்போடு போட்டுருலாம்னு தோணுது.”

கொளவியக்கல்ல அப்புறமா போடலாம். மொதல்ல அந்த வாளிலருக்குற துணிய எடுத்து கொடியில கொஞ்சம் காயப்போடேன்.”

வாளியை பார்த்த கோகி, “துணின்னு சொன்ன பூராம் ஜட்டியா கெடக்குது?”

ஜட்டிய மட்டும் என்ன இரும்புலயா பண்றாங்க?அதையும் துணிலத்தானடி பண்றாங்க.அதுவும் நம்ம உள்ளாடையெல்லாம் நீ தொட்டாலே ஒன்னப்புடிச்ச பீடையெல்லாம் ஓடியேப் போயிரும்!”

ஓன் ஜட்டியத்தொட்டா பீடையெல்லாம் போவாது. தொட்டவங்க பாடையிலத்தான் போவாங்க. இன்னய வரைக்கும் என் ஜட்டிய எங்கம்மத்தான் தொவைக்கா, காயப்போடுதா! நான் ஓன் ஜட்டிய காயப்போடனுமோ?”

கோகி! வாய்ப்பு ஒருமுறத்தான் வரும். சரியா பயன்படுத்திக்கணும்!”

இந்த வாய்ப்ப பயன்படுத்துனா கை ரெண்டும் காய்ப்புத்தான் புடிக்கும்.அதனால நீயே பயன்படுத்து, எனக்கு தேவயில்ல.”

ஆமா கோகி,ஒனக்குத்தான் ஜட்டிப்போடுற பழக்கமே கெடையாதேஅப்புறம் எப்படி ஒங்க அம்ம தொவச்சிருப்பாங்க? காயப்போட்டிருப்பாங்க?”

ரேணு நாயே! நீயெல்லாம் ஏஜ் அட்டன் பண்ணுன பொறவுத்தான் எல்லாத்தையும் போட்டுருப்ப. நாங்கலாம் பொறக்கும்போதேபூமக்ஸ்போட்டு பொறந்தவங்கடி, புரிஞ்சிதா?”

மேடம்,நீங்க பத்தாங்கிளாஸ் படிக்கிறப்ப பண்ணையாரு கெணத்துல மேல திண்டுலருந்து உள்ள குதிக்கும்போது கீழ குளிச்சிட்டுருந்த எங்களுக்கு கருப்புக்கலருல தெரிஞ்சது ஒங்க பூமக்ஸ்தானா? நாங்க எல்லாரும் வேறன்னவோன்னு நெனச்சிட்டோம். அன்னைக்கி நாங்க மட்டுமா பாத்தோம். ஆடு மேய்க்கிற பேச்சிமுத்து ஒங்க பூமக்ஸ்சப் பாத்து பயந்துப்போயி, பயலுக்கு பேச்சுமூச்சே நின்னுப்போச்சு தெரியுமா?ஐய்யோ பாவம்…!”

அப்பும் நா சின்னப்புள்ளளா.. அதான் மறந்துட்டேன். அதுல்லாம கெணத்துல குளிக்கப்போற ஒரு ஆர்வத்துலயும், நீங்க விட்டுட்டு போயிடுவீங்கன்னு ஒரு அவசரத்துலயும் வந்துட்டேன்.”

ஆமா, நீ ரொம்ப சின்ன பப்பால!”

பன்னி! நீ மட்டும் ரொம்ப யோக்கியமோ? மேலக்காட்டுல மாங்கா பறிக்கிறப்ப, நம்மக்கூட படிச்ச மலையாண்டி கீழருந்து, ‘தேன்கூடுதேன்கூடுன்னு உச்சிக்கொப்புலருந்த தேன்கூட்டப்பாத்து கத்தும்போது பதறிப்போய் நீ ஓன் பாவாடைய காலுக்கிடையில சொருவிக்கிட்டு கரடிக்குட்டிமாதிரி சரசரன்னு கீழ எதுக்கு ஏறங்குன…?”

சரிச்சரி விடு! ரெண்டுப்பக்கமும் தப்பு இருக்குறதால பஞ்சாயத்தக்கூட்டி பெருசு பண்ணாம நாமளே பேசி முடிச்சிக்கலாம். நம்ம கதையெல்லாம் நாலு பேருக்கு தெரிஞ்சா நாறிப்போவும் நாறி!”

இதேமாதிரி நீங்க ரெண்டுபேரும் ஒங்களுக்குள்ளேயே பேசிமுடிச்சிருந்தா ஊர்க்காரங்கள கூட்டிக்கிட்டு எதுக்குடி ஒங்க மாமாவும் அத்தையும் பஞ்சாயத்துப் பேச வரப்போறாங்க?” என்றாள் கோகிலா.

அதுவரைஅதிகாலையில் உற்சாகமாய் இருக்கும் பறவையைப்போல் ஆனந்தமாயிருந்தவள். கோகிலாவின் கேள்விக்குப்பின் தொட்டதும் சுருண்டுக்கொள்ளும் ரயில் பூச்சியைப்போல் முகம் சுருக்கிக் கொண்டாள்.

கோகி, பேசி முடிக்கிற விசியமாயிருந்தா பேசி முடிக்கலாம். சிரிச்சிப் பேசினாலே வேசின்னு நெனைக்கிறவங்கிட்ட என்னத்தப் பேச?”

ஆளப்பாத்தா அப்படி தெரியலயேடி?”

கம்பெனி வேலை விசியமா ஒரு வாரம் பெங்களூர் போயிட்டு முந்தா நாள் நைட்டு பத்துமணிக்கி வரும் கடைசி பஸூக்கு வாறேன்னு சாயங்காலம் ஒரு ஆறுமணியிருக்கும் போன் பண்ணுனான்.போன் பண்ணுன ஒடனே அவனுக்கப் புடிச்ச உருண்டக் கொழம்பு, கத்தரிக்கா வத்தல்,அப்பளம் எல்லாம் பொரிச்சி வச்சிட்டு குளிக்கப் போனேன். குளிச்சிட்டு துண்ட காயப்போடும்போது நம்ம வீட்டுலயிருந்து கொண்டுபோன குண்டுமல்லி நல்ல பெருசா ஒரே ஒரு மொட்டு மட்டும் அழகா பூத்துருந்துச்சு! அத நிலா வெளிச்சத்துல பாக்கும்போது எப்படி இருந்துச்சு தெரியுமா?அழகுன்னா அழகு செம அழகு! பறிச்சி மோந்து பாத்ததும் நீர உறிஞ்சுற வேர்மாதிரி அப்படியே என்ன வாசத்தால உறிஞ்சிக்கிச்சு! கொஞ்ச நேரம் நான் கெறங்கியேப்போயிட்டேன் கோகி…”

ரேணு, ஆளயே கெறக்குதுனா அது மல்லிச்செடியா இருக்காது கஞ்சாச்செடியாத்தான் இருக்கும். ஓன் புருசந்தான் ஒனக்குத்தெரியாம நட்டு வச்சிருப்பான்!”

போடி நாய…”

அப்பறம் என்ன கெறக்கம் போச்சா இல்லையா?”

அந்த கெறக்கத்தோடு வந்து துணி மாத்திட்டு தலைத்தொவடிட்டே டிவிய ஆன் பண்ணா கேபிள் வரல.சரி எப்.எம்ல பாட்டாவது கேக்லாம்னு ரேடியோ சுட்சப் போட்டதும், கோழிக்கூவுதுலருந்து

ஏதோ மோகம்
ஏதோ தாகம்
நேத்துவர நெனைக்கயிலயே
ஆசவெத மொளைக்கலயே
சேதி என்ன?
வனக்கிளியே… ஏ..ஏ..ஏ!

-ன்னு நம்ம எளையராஜா இருக்குற கெறக்கம் போதாதுன்னு அவரு வேற கெறக்கு கெறக்குன்னு கெறக்கி ஆளயே சாச்சிப்புட்டாருடி!”

சாஞ்சிக்கெடந்த ஒன்ன, எப்பும் ஓன் மாமன் தூக்கி விட்டான்?”

யாரும் தூக்கிவிடல.நானே எந்திச்சி பத்துமணி பஸ்க்கு ஒம்போது மணிக்கே வெளிவாசல் கதவ தொறந்து வச்சிட்டு வாசப்படியிலயே பஸ்டாண்ட பாத்துக்கிட்டே ஒக்காந்துட்டு இருந்தேன். எங்க வீட்டுலருந்து பாத்தா பஸ்டாண்ட் நல்லாத்தெரியும் கோகி!”

நேரம் ஆவ ஆவ ஒனக்கு கடிகாரத்தையும், பஸ் கண்டக்டர் ட்ரைவரையும் அடிச்சி நொறுக்கணும்போல இருந்துருக்குமே…”

ஆமாடி, அப்டிதான் இருந்துச்சி.என்னையே பாத்துட்டுருந்த பக்கத்துவீட்டு ராசம்மா கெளவி என்ன சொன்னா தெரியுமா?”

என்ன சொன்னா…?”

ஏட்டி, பத்து மணி பஸ்சுக்கு ஒம்போது மணிக்கே காத்துக்கெடக்குறத பாத்தா பத்தாவது மாசம் ஒனக்கு ரெட்டப்புள்ளத்தான்டின்னு சொன்னா!”

பத்துப்புள்ள பெத்த அனுபவஸ்தி சொல்லிருக்கானா கண்டிப்பா ஒனக்கு ரெட்டப்புள்ளத்தான்டி.”

போடி, பஸ்சுலருந்து அவன் ஏறங்குனவொடன ஆசயாசயா ஓடிப்போயி பேக்க வாங்குன என்ன ஏறெடுத்துக்கூட பாக்கல.”

என்னடி சொல்ற?”

வந்தவொடன குளிக்கிறதுக்கு வாளியில தண்ணி கோரி வைக்கச்சொன்னான்.வச்சேன்! குளிச்சிட்டு வந்து சோறு போடச்சொன்னான். போட்டேன்! உருண்டக்ககொளம்ப தின்னுட்டு உருண்டு பொரண்டு தூங்கிட்டான்.”

நீ சாப்டியான்னுக்கூட கேக்கலையாடி ரேணு?”

ம்ஹூம்…”

பாவம்டி நீ!எவ்வளவு ஆசையோடும் கனவோடும் இருந்துருப்ப…!”

 அவனப்பாத்துட்டே தலகாணிய அணைச்சிக்கிட்டு படுத்திருந்தேன். என்னால கண்ட்ரோல் பண்ணமுடியல! கொஞ்ச நேரங்கழிச்சி மெதுவா அவன் பக்கத்துலப்போயி தலயக்கோதிவிட்டுக்கிட்டே, அவன் காதுல எனக்கு ரொம்ப ஆசையாயிருக்குன்னு சொன்னேன்.”

கோகி ரேணுவிடம் இப்போது எந்தக்கேள்வியும் கேட்காமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

“………….”

சிறு அமைதிக்குப்பின் ரேணுவின் இரு கண்களிலும் நீர் முட்டிக்கொண்டு நின்றது.

,ரேணு! ஏண்டி அழுற?”

ஒரு வாரத்துக்கே இப்படி அரிப்பெடுத்து அலையுறன்னா? கல்யாணத்துக்கு முன்னால எவ்வளவு அரிப்பெடுத்திருக்கும், எவங்கூடலாம் படுத்துருப்பதேடியான்னு சொல்லி வயித்துலயே ஓங்கி ஒரு மிதி மிதிச்சான் கோகி!”

பள்ளிக்கூடத்துலடின்னு சொன்னவனயே முதுகுல டின்னு கெட்டி அனுப்பிய நீயா ரேணு தே.. டியான்னு சொன்னவன் வாய வெட்டருவாயெடுத்து வெட்டாம இப்படி வந்து அழுதுட்டுருக்க?”

அவன் மிதிச்ச மிதியில பின்னந்தல செவத்துல மோதி, எனக்கு என்ன நடந்துச்சின்னே தெரில கோகி!” என்று ரேணு சொல்லிக் கொண்டிருக்கையில் அவளின் அம்மா வீட்டுக்கு பின்புறம் ஓடோடி வந்து, “இங்க என்னட்டி பேசிக்கிட்டுருக்கீங்க. பஞ்சாயத்துப்பேச அங்க ஓன் மாமனார்,மாமியார், ஊர்க்காரங்க எல்லாரும் வந்துருக்காங்க. வந்து தண்ணிக்கிண்ணி குடுத்துட்டு என்னன்னு கேளு.”என்றாள்.

ரேணு தண்ணீர் எடுத்து வந்து அவளின் மாமனார் மாமியாருக்கு கொடுத்தாள். அவர்கள் முகத்தை திருப்பிக்கொண்டனர். ஊர் பெரியவர்கள் மட்டும் பேருக்கு நாலு மடக்கு குடித்துவிட்டுப் போதுமென்றனர்.

ரேணுவை முறைத்து பார்த்துவிட்டு, “எதுக்கு எங்கக்கிட்ட சொல்லாமக்கொள்ளாம வீட்டவிட்டு வந்தான்னு கேட்டுச் சொல்லுங்கஎன்றாள் ஊர்காரர்களிடம் ரேணுவின் மாமியார்.

என்ன நடந்ததுன்னு ஒங்கப்பையங்கிட்ட கேட்க வேண்டியதான?”

அவங்கிட்ட ஏன் கேக்கனும்!ஆம்பளன்னா அப்படி இப்படித்தான் இருப்பான். அத அனுசரிச்சு போவுறதுதான் பொம்பளைக்கு அழகுன்னு ஒங்க அம்மாக்காரி ஒனக்கு சொல்லிக்குடுக்கலயோ?”

ஆம்பளைக்கு அடிமையா இருக்குறதுதான் பொம்பளைக்கு அழகுன்னா அப்படியொரு அழகு மயிரே எனக்கு தேவையேயில்ல!”

என்னடி பெரியவங்கக்கிட்ட மரியாத இல்லாம மயிரு கியிருன்னு…” என்று அதட்டியப்படி அடிக்கப்பாய்ந்தாள் ரேணுவின் அம்மா.

யம்மா,இங்கப்பாரு! ஒங்க அம்மா மவ நாடகத்தையெல்லாம் அப்புறம் வச்சிக்கோங்க.என்ன நடந்துச்சுன்னு ஓன் பொண்ண சீக்கிரம் சொல்லச் சொல்லு. எங்களுக்கு வேல சோலி நெறைய கெடக்குதுனு பஞ்சாயத்துப்பேச வந்தவர்களில் ஒருவர் கோபமாய் குரலை உயர்த்தினார்.

 

ரேணு வேகமாய் எல்லாருக்கும் முன்னால் வந்து, “பெரியவரே! பொண்டாட்டிக்கு ஆச வந்தா புருசனக் கூப்பிடக்கூடாதா? கல்யாணம் முடிஞ்சி இந்த நாலு மாசத்துல ஓரே ஒருமுறை படுக்க கூப்பிட்ட நான் தப்பானவமுதல் இரவுல பயத்தோடு இருக்கும்போதும்; அசந்து தூங்கும்போதும்; பசிக்குதுன்னு சோத்த தட்டுல போடும்போதும்; மனசுக்கு புடிச்ச பாட்ட கேக்கும்போதும்; தலைவலின்னு தலகாணியில சாஞ்சி கெடந்தப்போதும்; வயிறுவலி வாட்டி எடுத்தப்போதும்; வீட்டுவேல செஞ்சி களச்சி படுத்திருக்கும்போதும்; வீட்டுக்கு தூரமான நாள்ல கூட விடாம தொல்லப்பண்ண இவுங்க பையன் நல்லவனா…?!”

ஊர் பெரியவங்கக்கிட்ட ஒரே ஒரு கேள்வி. ஒருதடவ கூப்ட்ட எனக்கு பேரு வேசின்னா..இப்படி பலதடவ படுக்கக் கூப்ட்டு பலவந்தப்படுத்திய அவனுக்கு என்ன பேருன்னு மொதல்ல சொல்லுங்க? மிச்சத அப்புறம் பேசிக்கலாம்.”

ரேணுவின் கேள்விக்கு பஞ்சாயத்துப்பேச வந்தவர்கள் பலியிடப்பட்ட ஆடுகளைப்போல் மூச்சற்றுப்போயினர்.அவளின் மாமியார் முறைத்தபடி முந்தானையை உதறிவிட்டு விறுவிறுவென வீட்டைவிட்டு வெளியேறினாள். அவளை அனைவரும் பின்தொடர்ந்தார்கள்.

தாயி! இவ நம்ம குடும்பத்துக்கு ஆகாது. இந்த வேசிய இத்தோடு அத்துவுட்டுட்டு சிங்கம்மாதிரி இருக்குற ஓன் மவனுக்கு வேறோருத்திய பாக்கலாம்; சரியான அவுசாரி முண்டயா இருப்பாப்போல. கால்வழியா மோளுற பொட்டச்சிக்கே இவ்வளவு திமுருன்னா, கையிலப்புடுச்சு மோளுற ஆம்பளைக்கு எவ்வளவு இருக்கும்! இவளமாதிரி ஊருக்கு நாலுப்பேரு இருந்தான்னா,ஊரே தேடியாக்குடியாகிடும். இவளுக்கெல்லாம் ஒருத்தன் பத்தாது! படிச்சவள கட்டுனா இப்படித்தான். இவ மட்டும் எனக்கு மருமவளா இருந்திருந்தா, இந்நேரம் செரிக்கியுள்ளய வெட்டி வாழைக்கி ஒரமா வச்சிருப்பேன்என்று ரேணுவின் வீட்டிலிருந்து கிளம்பியவர்கள், அவரவர் வீட்டை சென்றடையும்வரை இன்னும் என்னன்னவோ அவளைப்பற்றி பேசினார்களேயொழிய, அவளின் கேள்விக்கான பதிலை யாரும் பேசவேயில்லை.

ரேணு அவர்களைப்போல திட்டவோ, பேசவோ இல்லை. புலம்பியழுத தன் அம்மாவின் கண்ணீர் துடைத்து கட்டிலில் படுக்க வைத்துவிட்டு, குளிர் நீரில் முகம் கழுவினாள். கதர்த் துண்டில் நீர்த்துளிகளை ஒத்தி எடுத்தாள்.

ரேணு, டிவி ரிமோட்ட எங்கடி? எதாவது பாட்டு வைக்கலாம். கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கும்.”

 டிவி பக்கத்துல இருக்குற அலமாரியிலத்தான் இருக்கு. கண்ணத்தொறந்து நல்லாப்பாருடி!”என்று கண்ணாடி முன்னின்று தலைவாரி, கண்ணுக்கு மையிட்டு, நெற்றியில் கருமை நிற வட்ட வடிவ பொட்டு வைத்து,டிவி இருக்கும் வரவேற்பறை நோக்கி நடந்தாள்.

 அங்கே

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் என்னைத் தொட்ட நில
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா!

என்று ஜேசுதாஸ் ரேணுவை வர்ணித்துக் கொண்டிருந்தார்

ரேணுவோ அவர் குரலில் உருகி கொண்டிருந்தாள்..!

*******

munees4185@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. நல்ல கதை. ஆனா, இந்த கதையின் கருதான் புரியாதபுதிர் படத்தின் கரு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button