
என் எண்ணம் எதை எதையோ தேடிக்கொண்டிருந்தது. மனமோ கண்ணுக்கு எட்டியதையெல்லாம் எடுத்து நீட்டிக்கொண்டிருந்தது. எண்ணம் எதிலும் மையம் கொள்ளாமலும் திருப்தியடையாமலும் தேடிக்கொண்டே இருக்கிறது. தீடீர் ஒரு யோசனை, ஏதாவது புத்தகத்தோடு உரையாடுவோமென. ஆனால், யார்? புத்தகத்தோடு எந்த மாதிரியான புத்தகத்தோடு என்ற குழப்பமும் சேர்ந்தே வந்தது. சரி, ஓஷோவிடம் உரையாடுவோம் எதாவது தெளிவு கிடைக்குமா? என முடிவு செய்யும் முன் மனமோ பதறிப்போய்த் தடுத்தது.
“நீ என்ன லூசா..? நீ இப்ப நாலு வழி பாதையிலே நின்னுகிட்டு எந்த வழியில் போகணும்னு புரியாம இருக்க. இந்த நிலையில அந்த ஆளுகிட்ட விளக்கம் கேட்டேனா அந்த ஆளு உன்னைச் சுத்தியும் வழி போட்டு எந்த வழியில் வேணாலும் போலாம்னு சொல்லுவான், நாலு வழியில ஒன்ன செலக்ட் பண்ண தெரியாம முழிக்கிற நீ சுத்தியும் நூறு வழி இருந்தா என்ன பண்ண முடியும்..? நிம்மதியைத் தேடி நெருப்பில் விழுந்துவிடாதே” என எண்ணத்தை எண்ணம் சுக்கு நூறாக்கியது.
நான் வாழ்ந்து கடந்து வந்த வாழ்க்கை அனைத்தும் பிம்பங்களாய்க் கீழே சிதறிக்கிடந்தன. அந்த பிம்பங்களை உற்றுப் பார்க்கிறேன். எந்த பிம்பமும் பளீரென மின்னவில்லை; சாதாரணமாகவே கிடந்தன. அது இன்னும் கொஞ்சம் எனக்கு வலித்தது. அத்தனை பிம்பங்களில் ஒரு பிம்பம் மட்டும் என்னைக் கொஞ்சம் ஓரக்கண்ணால் பார்ப்பதைப் போலிருந்தது. என் கவனம் அதன்மேல் சென்றது. அதுதான் என் பிம்பத்தைக் காட்டிய என் பிரியமானவளின் பிம்பம். அடுத்த கணம் மனதின் ஹார்ட் டிஸ்கில் அவளாகவே நிறைந்திருந்தாள்.
அது ஒரு இலையுதிர் காலமாகவும், இப்போது வாழ்வின் இடையூறு காலமாகவும் இருக்கிறது. எங்கள் இருவருக்குள்ளும் இருந்த காதலை ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள அதிக காலங்கள் எடுத்துக்கொள்ளவில்லை. ஒரு மாதத்திலேயே அது பிரசவமானது. ஒரு மாத பிரசவ குழந்தை என்பதால் அது இரண்டு மாதத்திலேயே இறந்து விடும் என இருவரும் எதிர்பார்க்கவில்லை. பலருக்குத் தோன்றலாம் இது ஒன்றும் உலகமகா காதலில்லையென. என்ன செய்ய என் வாழ்க்கை பிம்பங்கள் உடைந்து சிதறிக் கிடக்க, இந்த பிம்பம் மட்டுமே என் கண்ணில் அகப்பட்டாதால் எனக்கு மட்டும் உலகமகா காதலாகத் தெரியலாம். மற்றவருகளுக்கு அது அவசியமற்றதாகவும் இருக்கலாம்.
இன்று எப்படி அவளிடம் போய் பேச..? என்ன பேச..? என்ற குழப்பம் எனக்குத் துளிகூட இல்லை. ஏனென்றால் எங்கள் இரு மாத உறவில் காதல் கொள்ளவும், முத்தமிட்டுக் கட்டியணைத்துக் கொள்ளவும், உடல் உறவு கொள்வதாகவுமே முடிந்துவிடவில்லை. அதில் அதிக நாட்கள் நட்பின் பரிமாற்றங்கள்தான் நிறைந்திருந்தன. அந்த நட்பு இன்றும், இன்றளவும் ஒரு சிறு தூசி படியாமல் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. யோசிக்காமல் அவளைத் தொடர்பு கொண்டேன் தொலைபேசியில்.,
“என்னம்மா என்ன விஷயம்” எனச் சாதாரணமாகக் கேட்டாள். என்னை அவள் பெண் பாலிலும், நான் அவளை “டே” என ஆண் பாலிலுமே அழைத்துக் கொள்கிறோம். ஏன்..? தெரியவில்லை. இருவரும் சந்திப்பது என முடிவானது. அவள் வீட்டுக்கே என்னை அழைத்தாள்.
சில வருடங்கள் கழித்து இருவரும் சந்திக்கும் நேரம் நெருங்கியது. சினிமா பட பாணியில் 48 பிரேமில் அவள் இதழ்கள், இமைகள், அவள் அங்க அசைவுகளை நான் ரசிக்க, என் நிலை, என் அங்க அசைவுகளை அவள் ரசிக்க எனக் கால தாமதங்கள் எதுவும் அங்கு நிகழவில்லை.
“உள்ளே வா” என அவள் அழைக்க தினமும் சென்று வரும் ஒருவனாக நான் உள்ளே சென்றேன். எப்படி இருக்க நல்லா இருக்கியா? என நானும், எப்படி இருக்க நீ நல்லா இருக்கியா? என அவளும் கேட்டுக் கொள்ளவே இல்லை. இது ஒரு பார்மாலிட்டி வார்த்தை என்பதால் இருக்கலாம். இது கூடப் பரவாயில்லை நாம் சந்திக்காத இந்த இடைப்பட்ட காலத்தில் உன் வாழ்க்கையில் என்ன நிகழ்ந்தது என நானும், என் வாழ்க்கையில் என்ன நிகழ்ந்தது என்று அவளும் கேட்கவே இல்லை. என் மனதில் திடீரென்று சின்னக் குழப்பம் கூட எழுந்தது. இந்த உலகிலுள்ள எல்லோரும் இப்படிப் பிரிந்து ஒன்று கூடினால் சாதாரணமாகக் கேட்கப்படும் கேள்விதானே இவைகளெல்லாம் ஏன்..? இருவரும் கேட்காமல் அமர்ந்து கொண்டிருக்கிறோம். ஒருவேளை இருவரின் பாஸ்ட் லைப்பைக் கேட்டு அறிந்துகொள்ளும்போது, தங்களை அறியாமல் சிறுசிறு காயங்களை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்ச உணர்வாக இருக்கலாம். இல்லை, கிடைத்த இந்தச் சிறிது நேரத்தில் வேறு எதை எதையோ பேசி நமக்கான இந்த நேரத்தை அழித்து விட வேண்டாம் என்ற முன்னெச்சரிக்கையாகவும் இருக்கலாம்.
“என்ன குடிக்கிற? பிளாக் டீ, பிளாக் காபி, கிரீன் டீ எது போடட்டும்?” எனக் கேட்க, உனக்கு எது சவரியமோ அதைப் போடு என்றேன்.
“எதை ரெடி செய்யவும் நேரம் ஒன்றுதான் உனக்கு எது வேண்டும், எந்தச் சுவை பிடிக்கும்” என்றாள். சுயநினைவு இல்லாத நோயாளிக்குச் சுவை ஏது..! அவள் போட்டுக் கொடுத்த டீ, காபி, கீரின் டீ என எதையோ குடித்துக்கொண்டே அவள் வீட்டைச் சுற்றிப் பார்த்தேன். பல இடத்தில் அவள் வீட்டில் புத்தகங்கள் அடுக்கிவைக்கப்பட்டு அடைக்கப்பட்டிருந்தன. சுதந்திரமாக மனிதர்களை இயங்க செய்வதே இதுபோன்ற புத்தகங்கள்தான். ஆனால் அந்தப் புத்தகங்களையே கைதியாகச் சிலர் வைத்திருப்பது ஏனோ..?, எனக்கு இன்று வரையும் தெரியவில்லை. அவள் வீடு ஆயிரம் புத்தகங்கள் நிரம்பிய குட்டி லைப்ரரியாக இருக்கலாம், எனக்கோ ஆயிரத்து ஒன்றாகத் தெரிகிறது அவளையும் சேர்த்து.
“இதில் எது வேண்டும் எடுத்துக்கொள்” என் விருப்பத்திற்கு சொன்னாள். “அந்தத் தெளிவு இருந்தால் இவ்வளவு தூரம் இங்கு வந்திருக்க மாட்டேன்” என்றேன். என் மனநிலையைப் புரிந்துக்கொண்ட அவள் விவாதம் செய்யாமல் ஒரு புக்கை எடுத்துக் கொடுத்துச் சொன்னாள்.,
“உனக்கு இப்போது இது சரியாக இருக்கும், படி” என்று.
“ஆயிரம் புத்தகத்தில் ஒரு புத்தகம் மட்டும் தான் எனக்கா..? இன்னும் ஒரு பத்து கொடு” என்றேன். அவள் மறுத்தாள். அப்போது தான் எனக்கு இன்னொன்று தெரிந்தது. அவளுக்கு என் மீது இருக்கும் அக்கறையை விட அந்தப் புத்தகங்களின் மீது இருக்கும் அக்கறை அதிகமென.
“ஒன்றை சரியா படி, முடித்தபின் திருப்பிக்கொடு. மற்றொன்றை வாங்கிக்கொள்.” என்றாள். அந்த அக்கறையில் நான் அதிர்ச்சி அடையவில்லை. கொஞ்சம் சந்தோஷப்பட்டுக் கொண்டேன். பத்து புத்தகத்தைப் படிக்க நாட்கள் அதிகமாகும். இவளை மறுபடியும் சந்திக்கும் கால நேரங்கள் நீட்டிக்கும். இப்போது அடிக்கடிச் சந்திக்கும் வாய்ப்பு நிகழலாம் அல்லவா. கறை நல்லது என்று ஒரு விளம்பரப் படம் பார்த்திருக்கிறேன், அதுபோல் இந்தப் புத்தகத்தின் மீதான அவளின் அக்கறையும் நல்லதே என்று நினைத்தபடி வெளியேறினேன் அந்த புத்தகத்தின் தலைப்பைப் படித்தபடி.
“தேடுவதை நிறுத்துங்கள், தேடுவது கிடைக்கும்” புன்னகைத்தபடி அட்டைப்படத்தில் இருந்த ஓஷோவின் கண்கள் என்னைப் பரிதாபமாகப் பார்ப்பதுபோலிருந்தது.
***