கட்டுரைகள்
Trending

கோத்தபாயவின் இலங்கை

-வாசு முருகவேல்

இலங்கையின் ஜனாதிபதியாக கோத்தபாய வந்திருப்பது ஒரு சமகால அரசியல் என்றாலும் கூட அது ஒரு வரலாற்றுத் தொடர்ச்சியும் என்பதை மறுக்க முடியாது. அதைச் சுருக்கமாக ‘எல்லாளன் – துட்டகைமுனு’ என்றும் சொல்லலாம். அனுராதபுரம் என்ற தமிழர் ராஜ்ஜியத்தை ஆண்ட எல்லாளன் என்ற தமிழ் மன்னனை துட்டகைமுனு என்ற சிங்கள மன்னன் போரில் வெற்றி கொண்டு அனுராதபுரத்தைக் கைப்பற்றினான். நவீன காலத்தில் கோத்தபாய தன்னுடைய ஜனாதிபதி பதவியேற்பு நிகழ்வை அனுராதபுரத்தில் நட்த்தியிருப்பது தெளிவான ஒரு செய்தியை தமிழர்களுக்குச் சொல்லியிருக்கிறது. தனது பதவியேற்பு முடிந்த கையுடன் பேசிய கோத்தபாய, “நான் சிங்கள பவுத்த மக்களின் வாக்குகளில் தான் வெற்றி பெற்றேன். தமிழ் மக்கள் என்னை ஆதரிக்கவில்லை” என்று பதிவு செய்து விடுகிறார். இது தமிழர்களுக்காக இரண்டாவதாக ஒரு செய்தியை நேரடியாகவே சொல்வதாக எடுத்துக் கொள்ளலாம்.

சிங்கள பவுத்த பேரினவாத உணர்வில் ஊறிப்போன சிங்கள மக்கள் கோத்தபாயவை தவிர வேறொருவரைத் தேர்வு செய்திருந்தால் அது ஒரு பாரிய அதிர்ச்சியாகவே இருந்திருக்கும். இலங்கை வரலாற்றில் கூட அது மிகப்பெரிய மாற்றமாகவே இருந்திருக்கும். இலங்கை வரலாற்றில் ஒரு காலமும் இப்படியான அதிசயங்கள் நிகழ்ந்ததில்லை. அப்படியான ஒரு சூழல் இருக்குமானால் ஈழப் பிரச்சனை என்ற ஒன்று கூட உருவாகி இருக்காது. இத்தனை ஆண்டுகள் கடந்தும் தமிழர்களின் அடிப்படை உரிமைகளைக் கூட மறுக்கும் ஒரு நாடாக இலங்கை இருந்திருக்காது.

கோத்பாய வந்து விட்டார். இனிமேல் என்ன மாதிரியாக அணுகுமுறைகளை அவர் இலங்கையின் உள்ளும் புறமும் மேற்கொள்ளுவார் என்பதை கொஞ்சம் எளிதாகவே கணித்து விடலாம். தமிழர்களை கையாள்வதில் அவர் பெரிதாக எந்த ஒரு திட்டத்தையும் வகுக்க வேண்டியதில்லை. கடந்த அரசு என்ன செய்ததோ அதையே இன்னும் கொஞ்சம் இறுக்கமாக கையாள வேண்டி வரலாம். நல்லிணக்க ஆட்சி என்ற பெயரில் மென்மையான முகத்துடன் மைத்திரி என்ன செய்தார்? இனப்படுகொலை தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சர்வதேசத்தை எந்த வகையிலும் இதில் தலையிட அனுமதிக்கவில்லை. காணாமல் போனோர் தொடர்பான எந்த ஒரு போராட்டத்திற்கும் துளியளவும் கவனம் கொடுக்கவில்லை. தமிழர் நிலங்களில் பவுத்த ஆதிகத்தை வளர்த்து பிக்குகளையும் இராணுவத்தையும் கொண்டு தமிழர்களை நிலம்-கலாச்சாரம்-பண்பாடு போன்ற அனைத்து வழிகளிலும் நசுக்கினார். இப்போது வந்திருக்கும் கோத்தபாயவும் இதியே தொடர்வார்.அதுவே சிங்களப் பேரினவாத அரசியல். அது தொடரும். நேரடியாகவே இனப்படுகொலை போன்ற குற்றங்களுக்கு பொறுப்பானவர்கள் என்ற வகையில் எந்த ஒரு காலத்திலும், சர்வதேச சூழலிலும் தங்களின் பாதுகாப்பை எதிர்காலத்தை கட்டமைப்பதில் கூடுதல் கவனம் செலுத்தலாம். அதனால் ஈழ விடுதலையும் தொடர்புடைய பல்லாயிரக்கணக்கான தமிழர்களையும் இன்னும் வெறியுடன் நசுக்க முனையலாம். இவைகள் இன்னும் மூர்க்கமாக இருக்கும் என்பது மட்டுமே புதிய ஒன்றாக இலங்கையில் நிகழும்.

சர்வதேச உறவுகளில் மாற்றம் வருமா என்றால் அதிலும் ஒரு பாரிய மாற்றம் வர வாய்ப்பில்லை என்றே கருத வேண்டியுள்ளது. எப்போதும் சீனாவுடன் உறவுகளைப் பேணுவதில் ஆர்வமுடையவர்கள் கோத்தபாய ராஜபக்ச சகோதரர்கள். அதனால்தான் கடந்த தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு போட்டியாக தங்களுக்கு கட்டுப்படக் கூடியவராக மைத்திரியை இந்தியா உருவாக்கியது. இந்தியாவின் விருப்பத்துக்கு அமைய தமிழர் தரப்பும் மைத்திரியை ஜனாதிபதியாக்க ஆதரவளித்தது. ஆனால், அதில் இந்தியாவுக்கும் வெற்றி கிடைக்கவில்லை. தமிழர் தரப்பும் எதையும் பெற முடியவில்லை. மைத்திரியும் சீனாவை கைவிடவில்லை. அதற்கு சான்றாக சீனாவின் தாமரைக் கோபுரம் இலங்கையில் எழுந்து நிற்கிறது. அதே நேரத்தில் இந்தியாவையும் பகைத்துக் கொள்ளாமல் ஐந்தாண்டு ஆட்சியை நடத்தி முடித்து விட்டார் மைத்திரி. இதில் இருந்து யார் ஆட்சிக்கு வந்தாலும் சீனாவுக்கு முன் உரிமை என்பதில் அவர்கள் தெளிவாக இருப்பது காணலாம். இந்தியாவுக்கு இதில் தெளிவு இருக்கிறதா என்றால், இல்லை. இந்தச் சூழலில் சீனாவின் மேல் எப்போதும் பற்றுதல் கொண்ட கோத்தபாய சகோதரர்கள் அதிகாரத்திற்கு வந்திருக்கிறார்கள். வர முதலே அவர்கள் இந்தியாவை மதிக்கவில்லை என்பது உண்மை. இந்தியாவுக்கும் அந்தப் பிடிமானம் இல்லாமல் போனது. ஏனென்றால் தமிழர் தரப்பை வைத்து நீண்டகாலம் போக்கு காட்டிவிட முடியாது. தமிழர்களுக்கு தீர்வு என்பதில் இந்தியா ஆர்வம் காட்டாத சூழலில், தமிழர் தரப்பினரும் தமிழ் மக்களை கையாள்வதில் தோல்வியடைந்து வருகிறார்கள். இப்படியாக ஒவ்வொரு வழியாலும் இந்தியா தோல்வியடந்து வருகிறது. இந்தியாவை நம்பும் தமிழர் தரப்பின் அரசியலும் பிடியிழந்து வருகிறது.

கோத்தபாய அதிகாரத்திற்கு வந்திருப்பதால், சர்வதேசம் நெருக்குதல் தரும். ஈழ இனப்படுகொலை விசாரணைகள் மறுபடியும் மேசைக்கு வரலாம் என்று சிலர் கருதுகிறார்கள். சர்வதேசத்திற்கு இதில் துளியும் ஆர்வம் இல்லை என்பதில் ஒவ்வொரு வருட ஐக்கிய நாடுகள் அமர்விலும் கண்டு விட்டோம். அதனால் அது வெறும் பேரம் பேசும் ஒன்றாகவே இருக்குமே தவிர தமிழர்களுக்கு அரசியல் தீர்வு பெற்றுத்தரவோ அல்லது இனப்படுகொலைக்கு நீதியை பெற்றுத்தரவோ போவதில்லை.

தமிழர்களின் அரசியல் இப்போதும் அவர்களிடம்தான் உள்ளது. அது இலங்கையை அனைத்து வழிகளிலும் புறக்கணிப்பதிலும், தொடர்ந்து இலங்கையின் இனப்படுகொலையை அம்பலப்படுத்திக் கொண்டே இருப்பதிலும்தான் தங்கியுள்ளது. இந்தியாவுக்கும் தமிழர்களை விளங்கிக் கொள்ளும் அரசியல் சூழல் உருவாகும் என்றே நம்புகிறேன். அந்தப் புரிதல் நிகழும் நிலையில், தமிழர்கள் அரசியல் உரிமைகளைப் பெற உதவும் காலத்தில், தமிழர்களின் பாதுகாப்பும் இந்தியாவின் பாதுகாப்பும் ஒன்றை ஒன்று பாதுகாத்துக் கொள்ளும்.

மேலும் வாசிக்க

வாசகசாலை

வணக்கம், எங்கள் அனைவருக்கும் முதன் முதலில் முகநூல் வாயிலாகத்தான் இறுக்கமான, இணக்கமான நட்பு உண்டானது.இலக்கிய வாசிப்பை பொதுப்பண்பாகக் கொண்டு அமைந்த ஒரு குழுமத்தின் மூலமே இத்தகைய நட்புகள் கிட்டப்பெற்றன.காலம் சென்றுக்கொண்டே இருக்க, வெறுமனே பேச்சு, பதிவு, அரட்டை என்பதோடு நம் இலக்கிய ஆர்வம் தேங்கிப் போக வேண்டுமா ? என எங்களுக்குள் அடிக்கடி கேள்விகள் ஒவ்வொரு நண்பர்களிடமிருந்தும் வந்த வண்ணமிருந்தது.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button