
சமீப காலமாக கலைத்துறையின் சிறந்த பங்களிப்பினால் தமிழ் சமூகத்தில் சாதிய விழிப்புணர்வு அதிகமாயிருப்பதினால் சாதிய வன்முறைகளும் ஊடகங்களில் கவனத்திற்குரிய செய்திகளாகி வருகின்றன. நாள்தோறும் செருப்பணிந்ததற்காகவோ தேநீர் அருந்தியதற்காகவோ வெட்டுக்குத்துகள், ஆணவப்படுகொலைகள், இடுகாடு செல்லத் தடை, பொதுவெளியில் சவுக்கடி என நம்மால் கனவிலும் தாங்கிக்கொள்ள முடியாத கொடுமைகள் உண்மையில் ஒரு பிரிவினருக்கு நடந்தேறுவதை நாம் ஊமைகளாக வாசித்துக் கொண்டே தான் இருக்கிறோம். ஒரு புறம் இக்கொடுமைகளைப் பரியேறும் பெருமாள் போன்ற படங்கள் நேர்த்தியான திரைமொழியில் விவரித்து வர, மறுபுறம் காலா, வட சென்னை போன்ற படங்கள் இவ்வன்முறைக்கு வேராக ஊன்றி இருக்கும் நில அரசியலைப் பேசி வருகின்றன. இது இரண்டையும் முழுமையாகக் கோர்த்துப் பார்க்க இயலாது பெருவாரியான மக்கள் தடுமாறியும் தயக்கத்திலும் இருந்த வேளையில், தற்போது வெற்றிமாறனின் ஆள்காட்டி விரல் அசுரன் திரைப்படத்தின் மூலம் பஞ்சமி நிலத்தைக் காட்டி விட்டது. ஆக கார்ப்பரேட் வேலைக்கு போய்க்கொண்டும், சினிமா கட்டுரைகள் எழுதி கொண்டும், சொகுசான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இந்தப் பிரச்சனைக்கு எந்த விதத்திலும் தீர்வளிக்க முடியாத நாம் இதை சரிவரப் புரிந்து கொள்ளவாவது வேண்டும் என்ற கட்டாயத்துக்கு திரைக்கலையால் தள்ளப்பட்டிருக்கிறோம். இதுபற்றிய முழுமையான புரிதலுக்கு நாம் 200 வருடங்களுக்குப் பின் சென்று தமிழக தலித் மக்களின் நில உரிமைப் பாதையை கவனமாகப் பார்த்து வர வேண்டியது அவசியம் ஆகிறது.
வரலாறு
பிரித்தானியர்களின் ஆட்சிக்கு முன்பு, தமிழ் சமூகத்தில் காணியாட்சி முறையில் பார்ப்பனர்களும் வேளாளர்களும் நிலங்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். இந்த நிலங்களில் தீண்டத்தகாதவர்கள் எனக் கருதப்பட்ட ஆதி திராவிடர்கள் பண்ணையாட்களாக வேலை செய்தனர். பண்ணையாட்கள் என்பது அரசாங்க மொழியாக இருந்தாலும், காணியாட்சிக்காரர்களும், பயிர்க்காரர்களாக இருந்த பிற இடைநிலை சாதியினரும் இவர்களை அடிமைகள் என்றே பல பகுதிகளில் அழைத்தனர். இவர்களை விற்பனையிலும், அன்பளிப்பாகவும், அடமானமாகவும் பிற காணியாட்சிக்காரர்களுக்குத் தர, காணியாட்சிக்காரர்களுக்கு முழு உரிமை இருந்தது. இந்நிலைமையில் வெள்ளையர்கள் ஆட்சி இங்கே முழு வீச்சில் துவங்கிய போது, தலித் மக்களின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது, தொடர் வன்முறைக்கு உட்படுத்தப்படும் வாழ்வாகவே அவர்கள் வாழ்வு இருந்தது. அவர்களுக்கு மிகக் கடினமான கொடூரமான வேலைகள் அளிக்கப்பட்டாலும், உயிர் பிழைக்கும் அளவுக்கே அவர்களுக்கு உணவு அளிக்கப் பட்டு வந்தது. உணவே இப்படியென்றால் உடை, இருப்பிடம் போன்றவற்றின் நிலையை நாமே கற்பனை செய்து கொள்ளலாம்.
இதை பிரித்தானிய அரசு நன்கு அறிந்திருந்தாலும் அவர்கள் இந்நிலைமையை மாற்றுவது தங்கள் கடமை என எண்ணிக் கொள்ளவில்லை. ஆனால், அவர்கள் தங்கள் லாபத்துக்காக செய்த ஒரு செயல் இதில் முதல் மாற்றத்தைக் கொண்டு வந்தது. ராயத்துவாரி முறை என்ற திட்டத்தை கொண்டு வந்த பிறகு அனைத்து நிலங்களும் அரசுக்கே சொந்தம், ஆக நிலத்தை உரிமை கொண்டாடும் அனைவரும் நேரடியாக (ஜமீன்தாரின் வாயிலாக அல்லாது) அரசுக்கு வரி செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதனால் மிராசுதாரர்கள் தாங்கள் உபயோகப்படுத்தாத ‘புறம்போக்கு’ நிலங்களுக்கு வரி கட்ட முடியாமல் அவற்றை அரசுக்கே விட்டுவிட்டனர். பின்னாளில் இந்நிலங்களுக்கான பட்டா விண்ணப்பம் அளிக்கும் போது, அவை பறையர் சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்க பட்டது.
மிராசுதாரர்களோ, பிறசமூகத்தினர் விண்ணப்பம் அளிக்கா பட்சத்தில் தான் அந்த நிலங்களை பறையர்களுக்கு வழங்க வேண்டும் என அரசாங்கத்தை வற்புறுத்தினர். இதன்மூலமாக எந்த நிலமும் பறையர்களை சென்றடையாமல் பார்த்தாயிற்று. இந்த நிலை மாற வேண்டும் என்று முதலில் பிரிட்டிஷ் அரசில் செயல்பட்டவர் செங்கல்பட்டு மாவட்டத் துணை ஆட்சியாளர் ட்ரெமென்கீர்(J. H. A. Tremenheere). 1892ஆம் ஆண்டில் இவர் பறையர்கள் மீது நடைமுறையில் இருக்கும் ஒடுக்குதலையும், அவர்களின் ஏழ்மையையும் விவரித்து ‘Notes on the Pariahs of Chingleput’ என்ற அறிக்கையை அரசுக்குத் தாக்கல் செய்தது மட்டுமில்லாமல் இவர்களுக்கு நிலங்களைப் பகிர்ந்தளிக்கவும் பரிந்துரை செய்தார். 1892 செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி அவரின் வேண்டுகோளுக்கு இணங்க ‘Waste land’ எனக் கருதப்பட்ட நிலங்களை பட்டியலின மக்களுக்கு வழங்க உத்தரவு பிறப்பித்தது மெட்ராஸ் மாகாணம்.
இந்நிலங்கள் முதல் பத்து வருடத்திற்கு எவருக்கும் விற்கப்படக் கூடாது, அதற்கு பின்பும் வேறு பட்டியலினத்தவருக்குத் தான் விற்க வேண்டும், இந்நிலத்தில் பாசனத்திற்காக கிணறு வெட்டவோ குளம் வெட்டவோ கூடாது, செடிகள் வளர்ப்பதற்காக வெட்டினால், செடிகள் மூன்று வருடங்கள் ஆனவுடன் அக்கிணறுகள் மூடப்படவேண்டும் என்ற நிபந்தனைகளுடன் வழங்கப்பட்டது. 1934 வரை இப்படி கண்டறியப்பட்ட நிலங்கள் மெட்ராஸ் மாகாணத்தில் மட்டும் சுமார் 12 லட்சம் ஏக்கர் எனக் கூறப்படுகிறது. இப்படித்தான் ஆதிக்க சாதியினரின் கடும் எதிர்ப்பையும் வன்முறையையும் தாண்டி பல தலித் மக்களுக்கு நிலங்கள் சென்றடைந்தன.
சுதந்திரம் அடைந்த பின் என்ன நிலைமை என்பதை நாம் நன்கு அறிவோம். வழங்கப்பட்ட நிலங்களை வன்முறையால், படுகொலைகளால் ஆதிக்க சாதியினர் ஆக்கிரமித்துக் கொண்டனர். வன்முறைக்கு வக்கில்லாதவர்கள் தங்களின் பொருள் வளமையைக் கொண்டும், சாதிய ஆதிக்கத்தைக் கொண்டும் தலித் மக்களிடம் இருந்து கடனுக்காகவும், ஊர் நிபந்தனைகள் என்ற பெயரிலும் அவர்களிடம் இருந்து எழுதி வாங்கிக் கொண்டனர். இப்படி எழுதி வாங்கிய அல்லது ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் சட்டப்பூர்வமாக செல்லாதுதான், என்ன செய்வது? அதை சரி செய்யத்தான் அரசு திட்டங்களில் ஓட்டைகள் இருக்கின்றனவே! 1985ஆம் ஆண்டு Updating Registry Scheme (UDR) என்னும் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதாவது 1911 முதல் கைமாற்றப்பட்ட நிலங்களுக்கு புதுப்பிக்கப்பட்ட பட்டா வழங்கும் திட்டம். இவற்றில் இருக்கும் ஓட்டைகளை வைத்து பல ஆக்கிரமிப்பாளர்கள் நிலம் தங்களுக்கு சொந்தமானது போல் பட்டா வாங்கிக் கொண்டனர்.
இந்த சூழ்நிலையில் தலித் ஒருவர் நிலம் தனது என நிரூபிக்க, 1929 முதல் 1984 வரை இருந்த ஆவணங்களையும் அதற்கு பின் மாற்றப்பட்ட ஆவணங்களையும் சேகரித்து சமர்பிக்க வேண்டும். தகவலறியும் சட்டமில்லாத காலத்தில் இது எவ்வளவு சாத்தியமற்ற வேலை என்பதை உணர்ந்தால் ஏன் 90களில் போராட்டங்கள் வெடித்தன என்பது நமக்கு விளங்கும். வட தமிழ் நாட்டில் பல மாவட்டங்களை சேர்ந்த தலித் உரிமை குழுக்களும், அமைப்புகளும் மக்களை விழிப்புணர்வு அடையச் செய்து போராட்டத்திற்கு அவர்களைத் திரட்டின. பட்டா வழங்கப் படாத இடங்களை இவர்களே போய் கையகப்படுத்தத் துவங்கினர். நேரடியாக முடியாத இடங்களில் அம்பேத்கர் சிலை வைப்பது, மாட்டிறைச்சி கடை போடுவது என பல நூதன முறைகளின் மூலமாக நிலங்களைக் கையகப்படுத்தினர். 1994ஆம் ஆண்டு அம்பேத்கர் சிலை வைக்கப்பட்ட ஒரு நிலத்தில் காவல்துறையின் உதவியோடு ஆதிக்க சாதியினர் சிலையை அகற்றினர். இதனால் ஆத்திரம் அடைந்த தலித் மக்கள் துணை ஆய்வாளர் அலுவலகத்தின் முன் போராட்டம் செய்தனர். அப்போதுதான் காவல்துறை தூத்துக்குடியில் வெறியாட்டம் ஆடியதைப் போலவே இங்கும் துப்பாக்கிச் சூடு நடத்தியது, அதில் ஜான் தாமஸ் மற்றும் ஏழுமலை என்ற இருவர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் இருக்கும் தலித் மக்கள் மீது பல்வேறு வழக்கு பதிவு செய்து காவல் துறை அவர்களை அடித்தும் கொடுமைப்படுத்தியும் துன்புறுத்தியது. இச்சம்பவத்திற்குப் பிறகு பலரும் விழித்துக் கொண்டு பல அமைப்புகள் களத்தில் இறங்கின. நீதிமன்ற வழக்குகளும், போராட்டங்களும், கைதுகளும் ஆயிரக்கணக்கான விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையில் ஓர் அங்கமாக மாறின.
இன்றைய சூழல்
போராட்டங்கள் துவங்கி ஏறத்தாழ 40 வருடங்கள் ஆகியும் இதுவரை இந்த மக்களுக்கு உதவியாக இந்த அரசு தரப்பிலிருந்து வந்த ஒரே நற்காரியம் RTI என்னும் தகவலறியும் சட்டம் மட்டுமே. கலைஞர் ஆட்சி காலத்தில் 2009ஆம் ஆண்டு சில சாதகமான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டாலும், ஆதிக்க சாதியினரால் நிரம்பி வழியும் அலுவலகங்களின் சூழ்ச்சி, மெத்தனம் ஆகியவற்றால் இம்மக்களுக்கு அதனால் பெருமளவில் பயனின்றிப் போய்விட்டது. சமூகநீதிக்காகக் குரல் கொடுக்கும் அரசியல் கட்சிகளும், சில பல அரசியல் சிக்கல்களினாலும், சாத்தியக்கூறுகளினாலும் களத்தில் இறங்கி நிலத்தை மீட்டெடுக்க முன்வருவதே இல்லை. ஆக தலித் முன்னுரிமை கூட்டமைப்பு, தமிழ்நாடு நிலவுரிமை கூட்டமைப்பு, அம்பேத்கர் பேரவை போன்ற அமைப்புகள் அவர்கள் இருக்கும் பகுதிகளில் தகவலறியும் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட ஆவணங்களை வைத்துக்கொண்டு அதிகாரிகளுடன் போராடிக் கொண்டு வருகின்றன.
அதிகாரிகளோ “பட்டா வழங்காமல் தாமதிப்பது எப்படி” என்பதில் நோபல் பரிசு வாங்கும் அளவிற்கு பல விதமான யுக்திகளை தீட்டி வைத்திருக்கின்றனர். காரணம் அப்படியே வைத்திருந்தால் பெரு நிறுவனங்களுக்கு அளித்து விடலாம் என்று மேல் இடத்திலிருந்து அழுத்தம். அது இல்லாத இடத்தில் ஆதிக்க சாதியினர் ஆக்கிரமித்த இடங்களில் க்ரானைட் குவாரி, கோழி பண்ணை, பட்டறைகள், அதிக விளைச்சல் தரும் நெல் கரும்பு சோள வயல்கள் என வைத்துக்கொண்டு, கேட்கும் லஞ்சத்தைக் கொடுக்குமளவிற்கு பணத்தில் குளியல் தான். போதாததற்கு 8 வழிச்சாலை, சிறப்புப் பொருளாதார மண்டல விரிவாக்கம் என திட்டத்தின் மீது திட்டமாய் துரத்திக் கொண்டு நிலங்களின் பின் ஓடி வருகின்றன. 100 நாள் வேலைத்திட்டத்தில் முடக்கம், அத்திவாசியப் பொருட்களின் விலை உயர்வு, செத்துவரும் வேளாண்மை என அனைத்து வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்கும் போராடும் இந்த உயிர்களின் ரத்தத்தை உரிந்து களத்திலிருந்து வெளியே நகர்த்தி செல்கின்றன.
எத்திசையிலிருந்து இவற்றிற்கு விடை கிடைக்கும் என அறியாது இக்கட்டுரையை முடிக்கிறேன், மீதி வாசகர்கள் சிந்தனைக்கு…