
ஹாங்காங்கில் சின்ன சின்ன இலக்கிய வட்டங்கள்
புலம் பெயரும் சமூகங்கள் தங்கள் அடையாளங்களை புகுந்த மண்ணிலும் நிறுவ முயற்சிப்பார்கள். சமயமும் வழிபாட்டுத் தலமும் அதில் முக்கியமான இடம் பெறும். அது பண்பாட்டுத் தொடர்ச்சியிலிருந்து வருவது. உணவும் தவிர்க்க முடியாதது. நாக்கு பழகிய சுவையைத் தேடிக்கொண்டே இருக்கும். அடுத்து சாதி, அது இந்தியர்களின் தனிச் சொத்து; அது இல்லாமல் தீராது. இந்த அடையாளங்களில் மொழி முதன்மையானது. தமிழர்கள் புலம் பெயர்ந்த இடங்களில் எல்லாம், அது அயல் மாநிலமாக இருந்தாலும், அயல் நாடாக இருந்தாலும், தமிழ்ச் சங்கங்கள் இருக்கும். தமிழர்களின் எண்ணிக்கைக்கு இணங்க சங்கங்களின் எண்ணிக்கை மிகும். இந்தச் சங்கத்தினர் தமிழகத்திலிருந்து பட்டிமன்ற, ‘செட்’டுகளையும், சபா நாடகக் குழுக்களையும், மேடை நட்சத்திரங்களையும் வரவழைப்பார்கள். அவர்களும் அயலூர்த் தமிழரை இயன்றவரை கிச்சு கிச்சு மூட்டிவிட்டு ஊர் திரும்புவார்கள். தவிர, நிலைய வித்வான்களின் ஆலாபனைகளும் குழந்தை நிகழ்ச்சிகளும் இந்தச் சங்கங்களில் தவிர்க்க இயலாதவை.
புலம் பெயர்ந்த இடங்களில் இலக்கியமும் செல்லுபடியாகும். அது மிகுதியும் வெகுஜன இலக்கியமாகத்தான் இருக்கும். தொண்ணுறுகளின் மத்தியில் ஹாங்காங்கிலிருந்து விடுமுறைக்காகத் தமிழகம் வரும்போது பலரிடமும் நான் எதிர்கொண்ட கேள்வி- ‘அங்கே சன் டிவி தெரியுமா?’. அதற்கு முன்பு அந்தக் கேள்வி, ‘அங்கே குமுதம் கிடைக்குமா?’ என்பதாக இருந்தது. எப்போதும் மாறாத கேள்வி- ‘அங்கே தமிழ் சினிமா வருமா?’ என்பது. இவையெல்லாம் வந்தால், கிடைத்தால் தேன் வந்து பாயும், பொழுது போகும், உபரியாக இலக்கியமும் வளரும்.
இந்த இலக்கியம் சிலருக்குப் போதுமானதாக இருப்பதில்லை. அவர்களுக்குத் தீவிர இலக்கியம் வேண்டும். அப்படியான ஒருவர்தான் எஸ்.நரசிம்மன். அவர் டிசம்பர் 2001இல் ஹாங்காங்கில் தொடங்கியதுதான், ‘இலக்கிய வட்டம்’.
முதற் கூட்டம் தற்காலத் தமிழிலக்கியம் குறித்தும் இரண்டாவது கூட்டம் பழந்தமிழ் இலக்கியம் குறித்தும் நடந்தன. நான்கைந்து பேர் பேசினார்கள். கலந்துரையாடலும் இருந்தது. மூன்றாவது கூட்டம் முதற்கொண்டு பேச்சும் பொருளும் கூர்மையடைந்தன. உரைகள் செறிவாயின. தமிழிலக்கியமே ‘இலக்கிய வட்ட’த்தின் ஊடுபாவாக இருந்தது. எனினும் ஆங்கில இலக்கியம், திரைப்படம், நாடகம், இணையம், ஓவியம், வாழ்வனுபவம், புலம்பெயர் வாழ்க்கை என்று பலவும் பேசுபொருளாகின.
அது வாட்சப்புக்கு முந்தைய காலம். அலைபேசிகள் தொலைபேச மட்டுமே பயன்பட்ட காலம். கூட்டங்களில் பேசியதைக் குறித்தும், பேசத் தவறியவை குறித்தும் உரையாடுவதற்காக ஒரு மின்னஞ்சல் குழுமத்தைத் தொடங்கினோம். 80 உறுப்பினர்கள் இணைந்தனர். கூட்டத்தின் அழைப்பிதழ்கள் இந்த குழுமத்தின் வழியாகவே அனுப்பப்பட்டன. குழுமத்தில் இலக்கியம், வாழ்க்கை குறித்த கருத்துப் பரிமாற்றங்களும் நடந்தன.
வட்டம் தொடங்கப்பட்ட ஓராண்டில் எஸ்.நரசிம்மன் பணிமாற்றல் காரணமாக ஹாங்காங்கிலிருந்து சென்றார். தொடர்ந்து எஸ்.பிரசாத்தும், அடுத்து நானும் வட்டத்தை ஒருங்கிணைத்தோம். வட்டத்திற்குத் தலைவர், செயலர், பொருளாளர், என்றெல்லாம் யாரும் இல்லை. செயற்குழு, பொதுக்குழு, சந்தா, ஆண்டறிக்கை என்பனவும் இல்லை. படித்ததை ரசித்ததை அனுபவித்ததைப் பகிர்ந்து கொள்வதுதான் வட்டத்தின் எளிய செயல் திட்டம். விருப்பமுள்ள எவரும் வரலாம், பேசலாம்.
எது இலக்கியம்?
அப்படி விரும்பி வந்தவர்களின் எண்ணிக்கை 20-25 என்கிற அளவில்தான் இருந்தது. எனினும் அது ஹாங்காங் தமிழ்ச் சமூகத்தில் சிறிய சலனத்தை உண்டாக்கியது. ஏற்கனவே தமிழ்ச் சங்கம் உள்ளபோது ஏன் தனியாக இன்னொரு வட்டம் என்று கேட்டனர் சிலர். இந்த உரையாடல், ‘எது இலக்கியம்?’ என்ற கேள்வியில் வந்து நின்றது.
ஓர் இலக்கிய வட்டக் கூட்டத்தில் இதைக் குறித்துப் பேசினோம். ஹாங்காங் பல்கலைக்கழகத்தின் இலக்கியத் துறை கையேட்டில் இந்தக் கேள்விக்கு விடை இருந்தது. “இலக்கியம் ஒரு கலை வடிவம், அது மொழியின் வாயிலாக எண்ணங்களையும் உணர்வுகளையும் கடத்துகிறது. அது புனைவாகவோ அல்புனைவாகவோ இருக்கலாம்; கவிதையாகவோ நாடகமாகவோ இருக்கலாம். அது மகிழ்விக்கும், கற்பிக்கும், எழுச்சியூட்டும். அது கலாச்சார மதிப்பீடுகளை வழிமொழியலாம், அல்லது விமர்சிக்கலாம்.
ஒவ்வொரு படைப்பும் ஒரு விமர்சனம், படைப்பாளி வாழ்க்கையின் மீது வைக்கும் விமர்சனம்.” இப்படிச் சொன்னவர் சுந்தர ராமசாமி.
ரசனையின் பசுமை
சரி, இலக்கியம் என்னவோ ஆகட்டும். அதை ஏன் கூடிக் கூடிப் பேச வேண்டும் என்பது வேறு சிலர் எழுப்பிய கேள்வி. இதற்கு வண்ணதாசன் பதிலளித்திருந்தார். அது அவர் நாஞ்சில் நாடனுக்கு எழுதிய கடிதத்தில் இருந்தது. 1985 வாக்கில் நாஞ்சில் நாடன் எழுதுவதை ஏகதேசமாக நிறுத்திவிடுகிறார். அப்போது அவர் மும்பையில் பணியாற்றினார். அது போது வண்ணதாசன் நாஞ்சில் நாடனுக்கு எழுதிய கடிதத்தில் இப்படிச் சொல்கிறார்:
“மிகவும் அற்புதமாக இயங்கி வந்த உங்களின் இலக்கிய முகத்தை சமீப காலத்தில் காணவே முடியவில்லை. அலுவலகம் தின்று துப்பிக் கொண்டிருக்கிற நம் ரசனையின் பசுமையை, நசுக்கூட்டான் அரித்த கொறுவாயுடன் பச்சையாக நிற்கிற செடி கொடி மாதிரி, நாம்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். நாஞ்சில் நாட்டின் வாழ்க்கையை உங்களைப் போல் அடையாளம் காட்டியவர்கள் சமீபத்தில் யாரும் இல்லை.” (நூல்; ’நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’, தமிழினி, 2005).
இது வண்ணதாசன் என்கிற சி.கல்யாணசுந்தரம் எனும் வங்கி அலுவலர், நாஞ்சில் நாடன் என்கிற க.சுப்ரமணியன் எனும் தனியார் நிறுவன அலுவலருக்கு எழுதிய கடிதம். அலுவலும் தொழிலும் இவர்களைப் போன்ற தேர்ந்த எழுத்தாளர்களின் ரசனையை மட்டுமில்லை, சாதாரண வாசகர்களின் ரசனையையும், இலக்கிய ஈடுபாட்டையும் அரிக்க வல்லது. அதிலும் ஹாங்காங் போன்ற வேலைப் பளுவும், நிற்காத ஓட்டமும், பொருளீட்டும் ஆவேசமும் மிக்க நகரங்களில் இலக்கிய ஈடுபாட்டைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் அதிகமாக இருக்கிறது; அதற்கு இலக்கிய வட்டம் போன்ற அமைப்புகள் உதவும் என்று பேசினேன்.
‘இலக்கிய வட்ட அன்பர்களுக்கு என்ன கொம்பு முளைத்திருக்கிறதா?’ என்றுகூடச் சிலர் கேட்டனர். இதற்கு நண்பர் ப.குருநாதன் பதிலளித்தார். “இந்த வட்டம் ஏதோ ஒரு சில அறிவுஜீவிகள் கூடி, தங்கள் மேதமையை வெளிப்படுத்திக் கொள்வதற்காக உருவாகியதல்ல. இலக்கியங்களைப் பற்றி நாமெல்லாம் கூடிப் பேசாவிட்டால், அவையெல்லாம் அழிந்து போய்விடுமே என்ற கவலை இந்த வட்டம் நிறுவப்பட்டதற்கான காரணமில்லை. இது நமக்காக, நாமே உருவாக்கி, நம்மால் நடத்தப்படுகின்ற ஒன்று. இதிலுள்ள உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் பங்கேற்றுப் பங்களிப்பவர்களே.”
இலக்கிய வெள்ளி
எண்ணிக்கையில் குறைவானாலும் ஆர்வலர்கள் தொடர்ந்து ஆதரவு நல்கினர். தொடர்ச்சியான இயக்கம் வட்டத்திற்கு ஒரு பரவலான மரியாதையைப் பெற்றுத் தந்தது.
வட்டத்தில் நிகழ்த்தப்பட்ட சில உரைகளின் தலைப்புகள்: ’எழுதப்படாத பர்மா குறிப்புகள்’, ’திருக்குறளில் காதல்’, ’நாடகமும் நவீனமும்’, ’வண்ணநிலவனின் தெரு’, ’இணையத்தில் ஜனநாயகம்’, ’முத்துலிங்கத்தின் வெளி’, ’அசோகமித்திரனின் பெண்கள்’, ’மிகுபுனைவும் யதார்த்தமும்’- ’Pan’s Labyrinth,வோர்ட்ஸ்வர்த்தைப் புரிந்து கொள்வது’.
சில கூட்டங்களின் தலைப்புகள் வருமாறு: அல்புனைவு, அனுபவம், ரசனை, கவிதையின் தடங்கள், படைப்பாளிகள், இலக்கிய வடிவங்கள், பாரதி -125, புலம் பெயர் வாழ்வு, திரை மொழி, கம்பனும் தமிழிசையும், நூல் நயம்.
இப்படியாக வட்டம் 2008இல் 25வது கூட்டம் எனும் மைல்கல்லை எட்டியது. திரும்பிப் பார்த்தபோது இதை ஆவணப்படுத்த வேண்டும் என்ற ஆவல் உண்டாகியது. அப்படியாக, ’இலக்கிய வெள்ளி’ எனும் ஒரு தொகை நூல் உருவானது. அந்தக் கதையும் சுவாரசியமானது.

வட்டத்தின் கூட்டங்கள் அனைத்தும் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை. மடலாடற் குழுமத்தில் சில கூட்டங்களுக்குப் பதிவுகள் எழுதியிருந்தேன். அவை ஆங்கிலத்தில் எழுதப்பட்டவை. அந்நாளில் இணையத்தின் அதிகாரபூர்வ மொழியாக ஆங்கிலமே கோலோச்சி வந்தது. தமிழில் ஒருங்குறி (Unicode) வருவதற்கு இன்னும் காலம் இருந்தது. அந்நாளில் ஒவ்வொரு எழுத்துருவிற்கும் ஒரு மென்பொருள் இருக்கும். அதைப் பதிவிறக்கி முகப்புப் பக்கத்தில் திறந்து வைத்துக்கொண்டால் மட்டுமே தமிழில் தட்டச்சு செய்ய ஏலும். வாசிக்கிறவரும் இந்தச் சடங்குகளை நிறைவேற்ற வேண்டும். இதற்கு அஞ்சி ஆங்கிலத்திலேயே எழுதி வந்தோம். ஆனால் தொகை நூல் உருவானபோது (2008) தமிழில் ஒருங்குறி புழக்கத்திற்கு வந்துவிட்டது.
கூட்டங்களுக்கு ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த பதிவுகளைத் தொகை நூலுக்காக மொழி பெயர்த்தவர்கள்: ராஜேஷ் ஜெயராமன், ஆர்.அலமேலு. சில கூட்டங்களில் பேசியவர்கள் தங்கள் உரைகளை எழுதித் தந்திருந்தார்கள். சில கூட்டங்களுக்கு ஒலிப்பதிவுகள் இருந்தன. சில கூட்டங்களுக்கு எந்தத் தடங்களும் இல்லை. அவற்றை நண்பர்கள் நினைவிலிருந்து மீட்டெடுத்தார்கள். இப்படியாக எல்லாக் கூட்டங்களுக்கான பதிவுகளும் தயாராகின. எழுதியவர்கள்: சுகந்தி பன்னீர்செல்வம், எஸ்.நரசிம்மன், கவிதா குமார், எஸ்.வைதேஹி, நளினா ராஜேந்திரன், அ.செந்தில் குமார், கே.ஜி.ஸ்ரீனிவாசன், எஸ்.பிரசாத் ஆகியோர்.
கட்டுரைகள் கூகுள் ஆவணங்களில் தயாராகி, பகிர்ந்து கொள்ளப்பட்டன. கட்டுரையாசிரியரும், எடிட்டரும், பக்க வடிவமைப்பாளரும், சமயங்களில் குறிப்பிட்ட கூட்டங்களில் பேசியவர்களும் ஒரே நேரத்தில் இந்த ஆவணங்களைப் பார்வையிடவும், மேம்படுத்தவும் இது ஏதுவாக இருந்தது.
அச்சகங்களில் தமிழ் எழுத்துருக்களும் அது சார்ந்த மென்பொருட்களும் இல்லாத ஒரு வெளிநாட்டில் இந்த நூல் அச்சானது. அவர்களுக்குப் பக்கங்களை வடிவமைத்து PDF கோப்பாகத் தரவேண்டியிருந்தது. கட்டுரைகளை ஒருங்குறியில் அச்சிட்டுப் பார்த்தபோது எழுத்துருக்கள் அழகாக இல்லை. தமிழுக்காக மிகவும் பாடுபட்டு யூனிகோடில் இடம் பெற்றதாகச் சொல்கிறார்கள். அப்படிக் கிடைத்திருக்கிற எழுத்துருக்கள் கணினியிலிருந்து காகிதத்திற்கு இறங்கி வரும்போது காட்சிக்குச் சிறப்பாக இருக்க வேண்டாமா? இல்லை. இதைத் தொடர்ந்து இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் பல எழுத்துருக்களை முயன்று பார்த்தோம் – திஸ்கி, தாப், பாமினி, இணைமதி என்று. சுரதா யாழ்வாணன் என்கிற ஈழத்தமிழர் ஏற்படுத்தி வைத்திருக்கும் ‘பொங்கு தமிழ்’ என்கிற தளத்தில் ஒரு எழுத்துருவிலிருந்து மற்றதற்கு மாற்றிக் கொள்ளலாம். இந்தச் சேவை முழுதும் இலவசம். தமிழ் இணையத்தில் தவழுவதற்கு இப்படிப்பட்ட தன்னலமற்ற, முகந்தெரியாத, பிரதிபலன் கருதாத, எந்த விருதும் அங்கீகாரமும் பெறாத அல்லது அவற்றை நாடாத தமிழ் ஆர்வலர்களின் உழைப்புதான் காரணம். ஒருவாறாக, இணைமதி எழுத்துருவைத் தேர்வு செய்து கட்டுரைகளை உருமாற்றம் செய்தபோது வேறு பிரச்சனைகள் முளைத்தன. சில எழுத்துக்கள் தாமே மாறிக்கொண்டன. ‘ஸ்ரீ’ எனும் எழுத்து ‘ஸ் ரீ’ என்றாகியது. ‘ஹ’ கேள்விக்குறியாக மாறிக்கொண்டது. எல்லாக் கேள்விக்குறிகளையும் ஒரே ஆணையின் மூலமாக ‘ஹ’ என்று மாற்றியபோது வேறு விபரீதங்கள் நேர்ந்தன. ‘கீசு கீசு என்றெங்கும் ஆனைச் சாத்தான் பேசின பேச்சரவம் கேட்டிலையோ?’ என்பது ‘கீசு கீசு என்றெங்கும் ஆனைச் சாத்தான் பேசின பேச்சரவம் கேட்டிலையோ ஹ’ என்று மாறியது. இவற்றையெல்லாம் சீர்படுத்தியவர் பக்கங்களை வடிவமைத்த காழி அலாவுதீன். நூலின் அட்டையை வடிவமைத்தவர் அ.சாமிநாதன். இவ்விருவரும்தான் அச்சகத் தொடர்பான பணிகளையும் செய்தார்கள்.

இப்படியாக 25ஆம் கூட்டத்தில் (ஜூலை 2008) ’இலக்கிய வெள்ளி’ எனும் தொகை நூல் வெளியிடப்பட்டது. கூட்டம் சிறப்பாக நடந்தது. பலரும் வட்டத்துடனான தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
உரைக் கோவை
இலக்கிய வட்டம் நடத்திய கூட்டங்களில் குறிப்பிடத்தக்கது ‘அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்’ (அக்டோபர் 2008). நண்பர்கள், திரு.வி.க, வ.உ.சி, மறைமலையடிகள், தேவநேயப் பாவாணர், சி.சு.செல்லப்பா ஆகியோரைக் குறித்துப் பேசினார்கள். நண்பர்கள் மறைந்த தமிழறிஞர்களையே தேர்ந்தெடுத்திருந்தார்கள். நான், ஒரு வாழும் தமிழறிஞரான ஆ.இரா.வேங்கடாசலதியைக் குறித்துப் பேசினேன். அப்போது ‘அதிகம் பேசப்படாத’ பட்டியலில் இருந்த சலபதி தனது தொடர்ச்சியான பங்களிப்பால் இன்று பலரும் அறியப்படுகிற அறிஞராகிவிட்டார். இந்தக் கூட்டத்தில் நிகழ்த்தப்பட்ட உரைகள் அனைத்தும், ’திண்ணை’ இணைய இதழில் வெளியாகின. மேலும், வட்டத்தில் நிகழ்த்தபட்ட சிறப்பான 15 உரைகள், ‘ஹாங்காங் இலக்கிய வட்ட உரைகள்’ என்ற பொதுத் தலைப்பின் கீழ் அதே இதழில் வெளியாகின. இந்த வரிசையில் இன்னும் ஒரு பத்து உரைகளையாவது சேர்க்க முடியும். இந்த உரைகள் ஹாங்காங்கில் நிகழ்த்தப்பட்டவை என்ற சலுகையைச் சேராதவை. தம்மளவில் தனித்துவமும், சிறப்பும் மிக்கவை. இந்த உரைகளையெல்லாம் தொகுத்து ஒரு நூலாக வெளியிட வேண்டும் என்கிற ஆசையை வெகு நாளாக அடை காத்து வருகிறேன்.
2009ஆம் ஆண்டில் ஓர் உள்கட்டமைப்புப் பணிக்காக நான் இடம் மாறினேன். ப.குருநாதன் இலக்கிய வட்டத்தை ஒருங்கிணைத்தார். அவர் கூட்டங்களின் நிகழிடத்தை மாற்றினார். அதுகாறும் கூட்டங்கள் அரசின் கலாச்சாரத் துறைக்குச் சொந்தமான, குறைவான வாடகையில் எல்லா வசதிகளும் பொருந்திய காட்சிக் கலை மையத்தின் விரிவுரை அரங்கில் நடந்து வந்தன. இந்த அரங்கு, ரயில்-பேருந்து நிலையங்களிலிருந்து சற்றுத் தொலைவில் இருக்கிறது. அது ஆர்வலர்களுக்கு வசதிக் குறைவாக இருந்து வந்தது.

இந்த நிகழிடத்தை நகரின் மையத்தில், ஷிம்-சா-சுய் பகுதியில் இருக்கும் யூனூஸ் பாய் வீட்டிற்கு மாற்றினார் குருநாதன். ஹாங்காங் இந்தியர்களால், ‘யூனுஸ் பாய்’ என்று அன்போடு அழைக்கப்பட்டவர் செ.முஹம்மது யூனூஸ் (1924-2015). எல்லா இலக்கிய வட்டக் கூட்டங்களிலும் ஆர்வத்தோடு பங்கேற்றவர். ‘இலக்கிய வெள்ளி’ நூலை அவருக்குத்தான் காணிக்கை ஆக்கியிருந்தோம். இடமாற்றத்தால் இன்னொரு பயனும் விளைந்தது. ஆர்வலர்களுக்கு இலக்கியத்தோடு யூனூஸ் பாய் இல்லத்து நொறுவல்களும் தேநீரும் கிடைத்தன.
இந்தக் காலகட்டத்தில் நடந்த கூட்டங்களில் சிலம்பின் ஒலி, சரிதையும் சுய சரிதையும், காளமேகம், சீனத்தின் சங்க இலக்கியம் முதலான கூட்டங்கள் முக்கியமானவை. யூனூஸ் பாயின் மறைவும் அடுத்து கொரோனாவும் வட்டத்தின் நடவடிக்கைகளில் தொய்வை ஏற்படுத்தின. இப்போது ஜூம் செயலியின் வாயிலாக மீண்டும் கூட்டங்களை உற்சாகமாக நடத்தத் தொடங்கியிருக்கிறார் விக்ரம் சதீஷ். 2023இல் ஓர் அரங்கக் கூட்டமும் நடந்தது.

அக்கினிக் குஞ்சு
சீரிய இலக்கிய முயற்சிகளுக்கு தமிழ்ச் சூழலில் ஆதரவு குறைவுதான். எனினும் உலகெங்கிலுமுள்ள சிறிய இயக்கங்களும், குழுக்களும், தனி நபர்களும் தமிழுக்கு அளித்து வரும் பங்கு அளப்பரியது. 23,000க்கும் மேற்பட்ட சொற்களைக் கொண்ட தற்காலத் தமிழ் அகராதியை (1991) ‘க்ரியா’ ராமகிருஷ்ணன் ஒரு சிறிய குழுவினரைக் கொண்டுதான் பதிப்பித்தார். என்சைக்ளோபீடியா பிரிட்டானிகாவை முன்மாதிரியாகக் கொண்டு சுமார் 15,000 தலைச் சொற்களோடு உருவாக்கப்பட்ட தமிழ்க் கலைக் களஞ்சியத்தை (1953-68) உருவாக்கியது தி.சு.அவினாசிலிங்கனார்- ம.ப.பெரியசாமித் தூரன் தலைமையிலான சிறிய குழுதான். உ.வே.சா தனி மனிதராகத்தான் தமிழின் அரும்பெரும் நூல்களை மீட்டெடுத்துப் பதிப்பித்தார். இப்படியான சூழலில் இலக்கிய வட்டம் போன்ற அமைப்புகளுக்கு ஆதரவு குறைவாக இருக்கிறது என்று அதைரியப்பட வேண்டியதில்லை. தமிழில் அது அப்படித்தான் இருக்கும்.
ரேடியோ டெலிவிஷன் ஹாங்காங்(RTHK) சிறுபான்மை தேசிய இனங்களுக்காக 2015இல் ஒரு தொடர் ஒலிபரப்பை நிகழ்த்தியது. அதில் ஒரு நிகழ்வில் இலக்கிய வட்டத்தைக் குறித்துப் பேசினோம். இலக்கிய வட்டத்தில் பங்கேற்ற பலரும் தங்கள் அனுபவங்களையும் கருத்துகளையும் பகிர்ந்துகொண்டார்கள். அவர்களில் ஒருவர் பயணி தரன். இந்திய அயலுறவுத் துறை அதிகாரி. இலக்கிய வட்டம் தொடங்கப்பட்ட காலத்தில் ஹாங்காங்கில் பணியாற்றினார். இப்போது அஜர்பைஜான் தூதுவர். அன்று அவர் ஹாங்காங் வானொலியில் பேசியதை மறக்க முடியாது.
“ஒரு மாங்கொட்டையை உள்ளங்கையில் வைத்து உற்றுக் கவனித்திருக்கிறீர்களா? சப்பலாக, தக்கையாக வற்றிப் போயிருக்கும். ஆனால் உங்களுக்கு மாம்பழம் தெரியுமென்றால், மாமரத்தின் கீழே நின்றிருக்கிறீர்கள் என்றால், மாவிலைத் தோரணம் கண்ணில் பட்டாலே காதில் நாதஸ்வர இசை கேட்பதை அனுபவித்திருக்கிறீர்கள் என்றால், அந்த மாங்கொட்டை உங்கள் உள்ளங்கையில் உயிர்ப்பு கொண்டுவிடும். நாங்கள் பெய்ஜிங்கிலிருந்து ஹாங்காங் வந்த நேரம், நண்பர் நரசிம்மன், இலக்கிய வட்டம் துவங்கலாமே என்றார். என் காதில் நாதஸ்வர இசை கேட்டது. மாதம் ஒரு முறை வாரக் கடைசிகளின் தாழ் மதியங்களில் 100 பேர் உட்காரக்கூடிய அழகான சாம்பல் வண்ண அரங்கத்தில், பொன் வைத்த இடத்தில் பூ வைத்த மாதிரி, ஒரு இருபது பேர் போலக் கூடுவோம். தெரிந்ததைச் சொல்லுவதற்கு, தெரிந்ததைச் சொல்லுபவர்களின் பேச்சைக் கேட்பதற்கு, இயந்திரங்களின் கோரைப் பற்களின் பதிவிலிருந்து தப்புவதற்கு. மாஞ்சுவையிலும் இலக்கிய அனுபவங்களிலும் கூட குஞ்சென்றும் மூப்பென்றும் இல்லைதானே. தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!”
தொடரும்…