“மலரட்டும் அந்த வசந்தகாலம்!” – நாடிலி நூல் விமர்சனம் – மா. காளிதாஸ்
கட்டுரை | வாசகசாலை

புலம்பெயர் வாழ்வைப் பொறுத்து இருத்தல், இல்லாதிருத்தல் இரண்டும் ஒன்றே. இனி ஒருபோதும் திரும்பலாகாது, அப்படியே திரும்பினாலும் ‘இது என் இடம்’ என்று மீளவும் சொந்தம் கொண்டாட முடியாதபடி தான் வாழ்ந்த இடத்தை, இனத்தை, குணத்தை, மணத்தை விட்டு ஒட்டுமொத்தமாக அகல்தல் என்பது மாபெரும் கொடுவினை.
புலம்பெயர்ந்து இருக்கும் இந்த இடமாவது நிலையானதா, தொலைந்த வாழ்வை மீட்டெடுத்துத் தரக் கூடியதா, புதிய வாழ்வுக்கு அடிகோலுவதா, எவ்வித இன்னல்கள் துன்புறுத்தல்களுக்கு முற்றிலும் இடம் தராததா, இங்கிருக்கும் மொழி, நாகரீகம், உணவு, உடை, இயற்கை, சூழல், மனிதர்கள், வாழ்வியலோடு பொருந்திப் போகக்கூடியதா என்பதை, அந்த முகாம் மனிதர்களோடு புலம்பெயர் வாழ்வு வாழ்ந்தால் மட்டுமே உணர முடியும்.
அவர்களுக்கான இடவமைவு, அவர்களுக்கும் வெளி உலகுக்குமான அந்நியோன்யம், அவர்கள் மீது வெளி உலகம் கொண்டிருக்கும் குறைந்தபட்ச மதிப்பீடுகள், இனரீதியான மதரீதியான ஒடுக்குமுறைகளுக்கும் அப்பால் அவர்கள் மீது வலிந்து கட்டமைக்கப்பட்டிருக்கும் பிம்பங்கள், எல்லாவற்றையும் பறிகொடுத்து மரணத்திற்கு அஞ்சி உயிர் பிழைத்தால் போதும் என்று வெறுத்து வந்தவர்கள் மேல், கேள்வி, கேப்பாடு ஏதும் இல்லாமல் கட்டவிழ்த்து விடப்படும் வரைமுறையற்ற அல்லது வெளி உலகத்திற்குத் தெரியாவண்ணம் நிகழ்த்தப்படும் வன்புணர்வு உள்ளிட்ட கொடுமைகள், அரசு அதிகாரங்கள் அவர்கள் மீது செலுத்தும் மறைமுக அடக்குமுறைகள் எனப் புலம் பெயர்ந்தவர்கள் வாழ்வின் அத்தனை அவலங்களையும் கேள்விக்கு உள்படுத்தி இருக்கிறது கவிஞர் சுகன்யா ஞானசூரியின் ‘நாடிலி’.

கடற்கையோரம் வெளிறிய நைட்டியோடும், இழுத்து இழுத்துப் பேசும் விரைவான தமிழோடும், அலங்கோலமான முகத்தோடும் தகரக் கொட்டகைக்குள்ளிருந்து வெளிப்படும் ஈழப் பெண்மணிதான் இப்போதும் கண்முன் வருகிறாள். அவளுக்குள் இருந்த ஆவேசம், வீரம், போர்க்குணம், நிம்மதியான வாழ்வு எல்லாம் பறிக்கப்பட்டு, அகம் முழுக்க தீயோடு பொழுதை ஒப்பேற்றுதல் என்பது எவ்வளவு கொடூரமானது என்பதை, ஒரு பத்து நிமிடம் ஒதுக்கி அவளோடு பேச்சுக் கொடுத்தால் கூட, முழுமையாக இழந்த அவள் வாழிவியலோடு ஒன்றிவிட முடியாது என்பதை,
“பெருங்கதைகளைப்
பேசித்தீர்க்க விரும்பாதவளாய்ப்
பேச்சைத் திசை திருப்பும்
யாழினி ஓர் அவலம்
வதைமுகாமில்
வன்புணர்வாக்கப்பட்ட தாயும்
நிர்வாணமாக்கிச் சுடப்பட்ட தந்தையும்
சவக் குவியலுக்குள்
அடையாளமற்றுப் போன
நாளின் நினைவுகள் எழாதபடிக்கு
மெல்ல மெல்ல
கரைந்து கொண்டிருக்கிறாள் யாழினி
உங்களுக்கு யாழ்ப்பாணம் தெரிவதைப் போல
யாழினிகள் தெரிவதில்லை.”
என்று வெளிப்படுத்தும் போது, முகாம்களோடு ஈனத் தொடர்புடைய பல அரக்க முகங்கள் வந்து போகின்றன.
‘அகதிகள் வீடடைதல்’ என்ற கவிதையில்,
“……………………………………….
……………………………………….
கால் நூற்றாண்டு அகதி வாழ்வில்
ஆஸ்பெட்டாஷ் சீற்றுக்கு மாறியிருக்கிறது
பத்துக்கு பத்து என்பதொரு கணித சூத்திரம்
இன்னும் மாற்றாமல் இருக்கிறார்கள்
……………………………………….
……………………………………….
இரவுகளை
அடக்கம் செய்யவே விரும்புகிறோம்
கோடையில் பெய்யும்
பனியின் வெம்மையில்
குளிர் மெல்லப் பரவுகிறது
போர்த்தி உறங்குவதற்குள் விடியல் துவங்கிவிடுகிறது
……………………………………….
……………………………………….”
இந்தக் கவிதையைப் படித்து முடித்ததும் நாம் எந்த மாதிரியான சூழலில் வாழ்கிறோம், நம்முடைய புழுக்கம் என்பது உண்மையில் புழுக்கம் தானா? வெறும் வியர்வை மட்டுமே புழுக்கமாகி விடுமா? புழுங்கிச் சாதல் என்பது ‘சொல்’லதிகாரம் தொடக்கம் முதலே கையிலெடுக்கும் கூர் ஆயுதம் அல்லவா? எனப் பலப்பல கேள்விகள் மனதில் எழுகிறது. பதில் ஏதுமின்றி குற்றவாளியைப் போலத் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு இருப்பதைத் தவிர வேறொன்றும் செய்ய இயலவில்லை.
பழைய நினைவுகள் எவற்றையுமே புறந்தள்ள முடியாமல், ‘ஒவ்வொரு இரவையும் அடக்கம் செய்ய விரும்பு’தல் என்பதும்,
“…………………………………….
……………………………………..
தேவையற்று வளர்ந்து கிடக்கும்
புற்றுக்கட்டியைப் போலத்
துருத்திக் கொண்டிருக்கிறது
என் விருப்பத்துக்கு மாறாய்
நிர்பந்திக்கப்பட்டிருக்கும் இன்றைக்கான இரவு.”
என்பதும், ஒரே மாதிரியான சாயல் கொண்டது போல் தோன்றினாலும், நிர்பந்திக்கப்பட்ட இரவு யாருடையது, எதற்கான நிர்பந்தம், ‘புற்றுக்கட்டியைப் போலத் துருத்திக் கொண்டிருக்கிறது’ என்பதன் மூலம் இந்த நிர்பந்தம் ஒரு தொடர்நிகழ்வு என்பதையும் பூடகமாக உணர்த்தும் போது, நம் கையாலாகாத்தனங்களும் சேர்ந்து வெளிப்பட்டு வெட்க வைக்கிறது.
“…………………………………….
……………………………………..
நீதியைக் கொன்ற தேசத்தில்
மன்னர் மீதான முறைப்பாடுகளை
ஓடும் நதியில் விடவும்.”
என இன்னொரு கவிதையில் கூறியிருப்பது மன்னருக்கு மட்டுமானதா என்பதை கவிஞர் நம்மை சிந்திக்க வைக்கிறார்.
ஓடும் நதியில் எதை விடுவார்கள், விடுகிறார்கள் என்பதில்தான் இக்கவிதையின் சூட்சுமமே இருக்கிறது. எல்லாக் கழிவுகளையும் மீன்களுக்குத் தின்னக் கொடுப்போம், நதி எக்கேடு கேட்டால் என்ன; கழிவைக் கொட்டி கடலை விரிவு செய்வோம். நதி திதியைக் கரைப்பதற்கான ஒரு குண்டுச்சட்டி தானே? அதிகாரங்களை நோக்கி கேள்வி எழுப்புதல் என்பது இறந்தவர்களுக்குச் செய்யும் சமர்ப்பணத்திற்கு ஒப்பானதுதானே?

தேநீர் பருகுதல், நம் வழக்கமான தவிர்க்கமுடியாத பழக்கங்களுள் ஒன்றாகி, ஒரு குறுகிய வட்டத்துக்குள் நம்மை சொகுசாக சிக்க வைத்திருக்கிறது. நம் விருந்து உபசரணைகளுள் தேநீர் வழங்காதது ஒரு பெருங்குறையாகக் கூட முன்வைக்கப்படுகிறது. தேநீர் பருகுதலையொட்டி நிகழ்த்தப்படும் அரசியல் உள்ளிட்ட வெட்டி பேச்சுகள், அங்கிருந்து அகன்ற பின்னும் கூட, மிகச் சில நேரம் வரை அங்கேயே உலவும் இயல்புடையனவாகி விட்டன.
“ஒரு கோப்பைத் தேத்தண்ணியோடு
மழை நாளை
ரசிக்க விரும்பினேன்
என் உடம்பிலிருந்து
தேத்தண்ணி வழியத் துவங்கியது.”
இங்கே ஞானசூரி ஊற்றித் தரும் தேநீர் உவர்ப்பாக இருக்கிறது. அதே நேரம் சுவையாகவும் இருப்பதற்குக் காரணம், அது வியர்வையோடு மழையில் நனைந்து பழகாத நம் இருப்பின் வேறொரு கனபரிமாணம் என்பதை,
“பெய்து முடித்த
பெருமழையின் ஈரத்தில்
எங்கெங்கோ இருந்து
வந்து சேர்ந்த விதைகள்
அள்ளித் தெளிக்கின்றன
அந்நியப் பசுமையை.”
என்கிறார். ‘அந்நியப் பசுமை’ உள்ளுக்குள் விரித்துக் கொண்டே செல்கிறது ஒரு பெரிய பாலைவனத்தை.
குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் குறித்து மனரீதியாக நம்மில் பெரும்பாலானோருக்கு அவ்வளவு உவப்பான சிந்தனைகள் இல்லை. ஆனால், குறைப்பிரசவத்திற்கான காரணங்கள் குறித்து நமக்குத் தெரிந்திருந்தாலும் கூட, குழந்தைகளின் மீதான வெறுப்புணர்ச்சியில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் கூட மாறுபாடு ஏற்படவில்லை என்பது தான் உண்மை.
“அங்கலாய்ப்பில்
சுழலும் இவ்வுலகில்
பூரணமாகாத புணர்வில்
வளர்கிறது குறைச்சிசு.”
எனக் கவிஞர் குறிப்பிடுவதில், ‘பூரணமாகாத புணர்வு’ என்ற வரி ஏற்படுத்தும் தாக்கம் கவனிக்கத் தக்கது.
“கடல் மீதும்
சிறு துண்டு நிலம்
தேடும்
அகதியின் பாதம்.”
என்ற வரிகளின் வழி, அகதியின் பல்வகைப்பட்ட தேடல் உணர்வுகளுக்குள் நம்மை அழைத்துச் செல்ல முயல்வதற்கான பலன், சுகன்யா ஞானசூரியே சொல்வது போல,
“ஒரு
பச்சிலையின் துளிர்ப்பைப் போல
நம்பிக்கையளிக்கும்
ஒற்றைச் சொல்லைக்
கேட்கும் நாளே
அகதிகளின்
வசந்தகாலம்.”
என்றால், அது மிகையாகாது. மலரட்டும் அந்த வசந்தகாலம்.
நாடிலி
கவிதை நூல்
ஆசிரியர்: சுகன்யா ஞானசூரி
முதல் பதிப்பு: ஜூன் 2021
கடற்காகம் வெளியீடு
பக்கங்கள்: 96
விலை: ரூ.110
******