இணைய இதழ் 114கவிதைகள்

இளையவன் சிவா கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

கோபத்தின் உச்சியில் குதிக்கும்
மனதை சரிசெய்ய
உலவிடும் கால்களுக்கும்
உளறலாகும் பாடலுக்கும் மத்தியில்
நின்றுவிடும் தருணத்தைத் தேடுவேன்
வியப்பின் எல்லையில்
என்னையே திரும்பிப் பார்க்கும் நொடிக்குள்
எட்டிப் பார்க்கும் கர்வத்தை
அழுத்தி விடுகிறது
உள்ளே ஒளிந்திருக்கும்
தோல்வியின் வடு.
பொதிமூட்டையென
சுமக்க முடியும் தருணத்திலும்
நிராயுதபாணியாகவே
அடைக்கப்படுகிறேன்
கல்லறைப் பெட்டியில்.

*

பெய்யும் மழையில்
விடத் தெரியாமல்
காகிதக் கப்பல்களை
ஏந்தியபடி காத்திருக்கும்.
ஓடும் படங்களில்
வழியும் பாசத்தில்
தன்னையே கிள்ளிக்கொண்டு
தனித்திருக்கும்.
பள்ளியின் மேடையில்
பெற்றோருடன் பரிசு பெறும்
பக்கத்திருக்கை தோழியை
பார்க்கப் பார்க்க
எரிச்சலில் மிதக்கும்.
மிதிவண்டியில் பெடலிடுகையில்
தடுமாறி விழுகையில்
காயத்தை ஊதி எச்சில் வைக்க
கரத்தைத் தேடும்.
பிறந்தது முதலே
பெற்றவனைப் பார்க்காதிருக்கும்
பிள்ளையைத் தேற்றாமல்
பிதற்றுகிறேன்
பிரிவின் கொடுமையில்
தேசம் தாண்டிய
தகப்பனாய்.

*

நெடுநேரமாக
யாருமற்ற தனிமையில்
மரம் விட்டு மரம்
தாவித் தாவி விளையாடும்
பறவையின் இறக்கையில்
காற்றை நிரப்பியனுப்புகிறது
ஊஞ்சலாடும் கிளையில்
ஒட்டிக்கிடக்கும் இலைகள்.

*

நீளும் பற்களை
அறுத்தெடுப்பதற்காக
அலையும் மக்களே
நீரின்றி அலையும் போதாவது
உணரப் பாருங்கள்
காட்டின் பரப்பை
கடைசிவரை காப்பாற்றும்
யானையின் நினைவுத் திறனை.

*

தும்பிக்கையை
உயர்த்தும் போதுதான்
காட்டைத் தேடும்
ஆசை வருமோ
கோயில் யானைக்கு!

ilayavansiva@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க
Close
Back to top button