
மரக்கிளைகள் போல கொம்புகள் கொண்ட பனிமான்கள் இழுக்கற மிகப்பெரிய பனிச்சறுக்கு வண்டியும்,சிவப்புத் தொப்பி அணிந்த சாண்டா க்ளாஸ் தாத்தாவும் தெர்மகோல் பனித்துளிகளுமான அந்த கிறிஸ்துமஸ் அலங்கார குடிலை பார்த்துக்கிட்டே நிக்கிறா சூசி. டிசம்பர் மாத பின்மாலையிலும் வேர்த்து வழிகின்ற வேலூரில் இந்த பனிக்கட்டி அலங்காரங்கள் அத்தனை செயற்கையா தெரியுது.
நெசமாவே பனி பெய்யற அழகான எடத்துக்கு போகப் போறோம்னு நெனச்சிக்கறா. தூரத்துல அந்தோணி வேக வேகமா நடந்து வருவது தெரியுது.
“சூசி. வாடி பர்மா பசார் மூடிடப் போறான்”
“அந்து ஏண்டி லேட்டு அந்த வார்ட் சிஸ்டர் உடலயா?”
“ஆமாடீ.. அந்த ப்ளாரன்ஸ் பொதுக்கி வேல சொல்லினே இருந்தா. மாப் போட்டுட்டு வர லேட்டாயிடுச்சி”
வேக வேகமா காந்தி ரோடுக்குள்ள புகுந்து ரோட்டி கடைங்க, நாட்டு மருந்து கடைங்க, சாந்திலால் சேட்டு கடை எல்லாத்தையும் தாண்டி பர்மா பஜார் பக்கமா போறாங்க.ரெண்டு பெண்களும் ஒரே மாதிரி ஒடிசலா ஒயரமா அழகா வயசுப் பிள்ளைகளுக்கே உரிய துறுதுறுப்போட இருக்காங்க. வேல பாக்கற எடத்துல கூட நீங்க ரெண்டு பேரும் சிஸ்டர்சான்னு நெறய பேர் கேப்பாங்க. மாநிறமா பெரிய கண்களும் நீளக் கூந்தலும் ப்ளூ கலர் சுடிதாருமா சூசியும் அந்தோணி மேரியும் நடக்கறத பாத்தா ரெட்டை பிள்ளைங்க போலத்தான் தெரியுது.
“இன்னிக்கு என்னாடி இவ்ளோ கூட்டம்?”
“தேர் இழுக்கறாங்க பாரு”
ரெண்டு பேரும் பேரி சுப்ரமணிய கோயில் தெரு சந்துல ஒதுங்கி நிக்கிறாங்க. சரியான கூட்டம். ஆனை குளத்தம்மன் பெரிய பல்லாக்குல வருது. பூ அலங்காரம் நகைன்னு ஜொலிக்குது. அந்தோணி கையெடுத்து கும்புடறா.
“என்னாடி, நீ இந்த சாமிய கூட கும்பிடுவயா?”
“எங்க அம்மா சொந்தக்காரங்க எல்லாமே இந்துதான். எங்க ஊர்ல எல்லா சாமியும் கும்பிடுவேண்டீ”
சாமி ஊர்வலம் கடந்து போக அரைமணி ஆகுது. இருட்டத் தொடங்கிடுச்சி. ரெண்டு பேரும் வேக வேகமா மண்டித்தெருவுல இருக்கற காய்கறிக்கடைங்க பழக்கடைங்ளைத் தாண்டி மணிக்கூண்டுக்குள்ள நொழையறாங்க. மொத்த வியாபார பூக்கடைங்களும் காய்கறி கடைங்களும் நசநசன்னு நெருக்கியடிச்சிட்டு இருக்கு. அந்த பழைய கட்டிட வளாகத்துக்கு மேல ஒசரமா வெள்ளைக்கார காலத்து பழைய செகப்பு சுண்ணாம்புக்கல் கோபுர வளைவும் கடிகார மணிக்கூண்டும் தெரியுது. சூசி ஆச்சர்யமா அதை அண்ணாந்து பாக்கறா.
ரெண்டு பேரும் கூட்டத்துல புகுந்து வளையல் மணிக்கடைங்களுக்குள்ள போறாங்க. அந்தோணிதான் நெறய வாங்குனா. சூசி அங்க விதவிதமா அடுக்கி வச்சி தொங்க விட்டிருக்க தோடு, தொங்கட்டான், பாசி மணிங்க, வளையல்,கிளிப் எல்லாத்தையும் பாத்துட்டு நிக்கறா. பக்கத்து கடையில வரிசையா வேற வேற அளவுல சவுரி முடிங்களும் சடைக்குஞ்சலங்களும் அசையுது.
“இதையெல்லாம் இப்ப யாரு வாங்கறாங்க?”
“ஏன்.. எங்க ஊர்ல எல்லாம் இன்னும் குஞ்சலம் வச்சி பின்னறாங்க”
அப்பிடியே கடைங்களுக்குள்ள புகுந்து பழைய மீன் மார்க்கெட் பக்கமா வர்றாங்க. ஒரு எடத்த தாண்டும்போது காபி தூள் வாசனை மூக்கை தொளைக்குது.
“இந்த மாறி காபிக்கொட்டை அரைச்சு ஃபில்டர் காபி குடிக்கறது எங்க அப்பாவுக்கு ரொம்ப புடிக்கும்” சூசி சொல்றா. அவ குரல் தடுமாறுது.
அந்தோணி அவ கைய புடிச்சு தன் கைக்குள்ள வச்சுக்கறா. வேக வேகமா நடக்கறாங்க. எதிர்ல வேலூர் கோட்டை கோயிலும் கோபுரமும் தெரியுது. அப்பிடியே எடது பக்கமா நடக்கறாங்க. பெரிய சிலுவை தென்னை மரங்களோட மதில் சுவருக்கு பின்னால் சென்ட்ரல் சர்ச் தெரியுது. கிறிஸ்துமஸ் குடிலும் அழகான தங்க நிற ஸ்டாரும் சீரியல் லைட்டுகளுமா சர்ச் மின்னுது. தாண்டி போகையில ரோட்ல நின்னு “ஏசப்பா”ன்னு சிலுவைக்குறி இட்டுக்கிட்டு வேண்டிக்கிறாங்க. ரோட்டுக்கு எதிர்ப்பக்கமா போயி அண்ணா கலையரங்கம் பக்கத்துல இருந்த பர்மா பஜாருக்குள்ள போறாங்க. பக்கத்துல கானாத்துல கருப்பா சாக்கடைத்தண்ணி ஓடுது. எஸ்டிடி பூத் தெரியுது. சூசி அதுக்குள்ள போயி நின்னு வீட்டுக்கு போன் பண்றா.
“லீவ் இல்ல நாகர்கோவில் வரை வர முடியாது. கிறிஸ்மசுக்கு பிரண்ட் அந்தோணி மேரி வீட்டுக்கு போறே”ன்னு சொல்லவும் அம்மா
“மக்கா பத்திரமா போ”ன்னு சொல்றா.
ஜாபர் பாய் கடைக்கு போயி “அண்ணா வெல பாத்து குடுங்க”ன்னு பேரம் பேசிப்பேசி வீட்டுல எல்லாருக்கும் துணி வாங்குனா அந்தோணி. அவ யாரைப் பார்த்தாலும் அண்ணா அக்கா அப்பான்னு மொற சொல்லி கூப்பிடுவா. சூசி எப்பவும் போல “ஏண்டீ உனுக்கு இந்த ஜாபரு கெழவன் அண்ணனான்னு” கேலி பண்ணவும்,
“போடீ எங்க ஊருல இப்பிடியே சொல்லி சொல்லி பழகிடுச்சி”ன்னு அந்து வெக்கப்படறா.
ரெண்டு பேரும் வேகமா திரும்ப ஹாஸ்டலுக்கு போறாங்க. வழியில டான் பேக்கரியில நின்னு தூள் கேக்கும் பன்னும் வாங்குனா அந்தோணி. இது என்னான்னு கேக்கறா சூசி.
“கேக் கட்பண்ணி மீந்த தூள் எல்லாம் பாக்கெட் பண்ணி தருவாங்க.என் தம்பிக்கு புடிக்கும்.என்னால முழு கேக் வாங்க முடியாது எங்க ஊருல இதுவே பணக்கார பண்டந்தான்”அந்தோணி சொல்றா.
சூசி ஒரு பெரிய கிரீம் கேக்கும், பிளம் போட்ட பிரட் பாக்கெட்டும் வாங்குறா.
“எதுக்கு சூசி செலவு தான” அந்தோணி சொல்றா.
“இருக்கட்டும் அந்து கிறிஸ்மசுக்காக நான் வாங்கிட்டுப் போறதா இருக்கட்டும்” சூசீ பதில் சொல்றா.அந்தோணி சிரிக்கறா.
ரூமுக்கு வந்ததும் வாங்குன எல்லாத்தையும் ரெண்டு பையில அடுக்கினா அந்தோணி. ஒரு அட்டை பெட்டியில பாரசெட்டமால் மாத்திரை அட்டைங்க, பெனிட்ரில் இருமல் டானிக், பஞ்சு, கட்டு கட்டும் வலைத்துணி எல்லாம் எடுத்து வச்சா.
“இதெல்லாம் எங்க ஊர்ல கெடைக்கதுடீ. எங்க ஆயா, அய்த்த எல்லாம் மாத்திரை கேப்பாங்க. மலர் சிஸ்டர் கிட்ட கேட்டு வாங்கி வச்சிருந்தேன்”னு சொல்லிக்கிட்டே படுக்கப்போனா.
“சூசி எழுந்திருடீ” அதிகாலைக் குளிருல எழுப்பினா அந்தோணி. ரெண்டு பேரும் இருட்டுல பையத் தூக்கிட்டு நடந்து பஸ் ஸ்டாண்டுக்கு வர்றாங்க.
தூசியும் குளிருமா இருக்கற அழுக்கடஞ்ச நிழற்குடை கிட்ட நிக்கறாங்க. “எங்க ஊருக்கு இதை விட்டா வேற பஸ் இல்லடி. மாறி மாறி போகணும்”
ஜமுனாமரத்தூர் வழி வாணியம்பாடி என்ற போர்டுடன் செம்மண் நிற பட்டுக்கோட்டை அழகிரி பஸ் வருது. ரெண்டு பேரும் ஏறி உக்காந்துட்டாங்க. பஸ் புறப்படவும் டீசல் வாசம் வருது. சூசிக்கு கொமட்டுது. அப்பிடியே சாய்ஞ்சிக்கிட்டா.
பஸ் குலுங்கி நிற்கவும் முழிச்சு பாக்குறா. இளங்காலை வெளிச்சத்துல ரெண்டு பக்கமும் பச்சைப் பசேல்னு மூங்கில் புதர்கள். சின்ன குருவிகள் பறக்குதுங்க.
“சுசி எழுந்திட்டயா? இது நாய்க்கனூர். இனிமேதான் மலை ரூட் ஆரம்பிக்குது. எங்க ஊர் காத்து பட்டாத்தான் எனக்கு உயிரே வருது. பத்தியா காடு எப்புடி இருக்குன்னு” அந்துவின் குரல் உற்சாகிக்கிறது. அவள் முகமே மாறி சிரிப்பு மட்டுமே தெரியுது. சூசியும் சிரிச்சிட்டே “ரொம்ப நல்லா இருக்குடீ”ன்னு அவ கைமேல சாய்ஞ்சிக்கிறா.
ரெண்டு பக்கமும் பெரிய பெரிய மரங்களும் புதர்களும் விரைந்து ஓடுகின்றன. மலைப்பாதை வளைவுகளும் மெல்லிய பனி போர்த்திய பள்ளத்தாக்குகளும் குளிர் காற்றும் அவளுக்கு ஆச்சரியமாய் இருக்கு.
ரெண்டு பேரும் ஒரு ஏரிக்கரையில் இறங்குறாங்க. “பஸ் ஸ்டான்ட் போனா ரொம்ப தூரம் சுத்திப் போகணும் இங்கயே எறங்கலாம்”னு அந்து சொல்றா.
செகப்பு கலர் சின்ன அல்லிப்பூக்களும், நெறய பாசிகளும் செடிகளும் படர்ந்த அந்த சின்ன ஏரியில பச்சை நெறத்துல தண்ணி நிக்குது. ச்ரீட்டுன்னு நீலக் கலர் ரெக்கை விரிச்சிக்கிட்டு மீன்கொத்தி ஒண்ணு பறக்குது.
பையிங்களத் தூக்கி தோளுல மாட்டிக்கிட்டு ஏரிக்கரையை ஒட்டின பாதையில் நடக்கறாங்க.தூரத்துல ஆடுங்க கத்தற சத்தமும் பறவைங்க சத்தங்களும் கேக்குது. நெறய பொன்வண்டுகளும், கருப்பு செவப்பு பீ வண்டுகளும் பறக்குது. அந்த அமைதியும் தூசு தும்பு இல்லாத காத்தும் சுத்தியிருக்க பச்சையும் சுசிக்கு ஆச்சரியமாய் இருக்கு. அந்தோணி வேகமா போறா. கொஞ்ச தூரம் போனதும் கொல்லைங்க தெரியுது.
ரெண்டு பெரிய நீர்மத்தி மரங்களைத் தாண்டி குடிசை வீடுங்க தெரியுது. அகல அகலமான எலைங்களோட பூசணிக்கொடிங்க கூரை மேல படர்ந்த ஒரு வீட்டுக்கு முன்னாடி பைய வைக்கிறா அந்து.
“அய் அக்கா”ன்னு ஒரு சின்ன பொண்ணு ஓடி வரா.
ஒடிசலா ஒரு பொம்பள உள்ள இருந்து
“வா மனா பஸ்ஸி ரேட் ஆவிடுச்சா” கேட்டுக்கிட்டே வரா.. கூட வந்திருக்க இவளைப் பாத்துட்டு பேச்சை நிறுத்தறா.
“யம்மா இது எங்க ஹாஸ்பிடலுல பார்மஸியில வேலை செய்யற சூசை மேரி அவங்க ஊர் நாகர்கோயிலு. லீவுக்கு ஊருக்கு போக முடியல. கிறிஸ்மசுக்கு நம்ம வீட்டுக்கு வான்னு கூட்டிட்டு வந்திருக்கன்”
“வா யம்மா”ன்னு சிரிக்கறா.
சாணம் போட்டு மொழுகுன அந்த வீட்டு சின்ன திண்ணையில உக்காந்துக்கறா சூசி. மேல சட்டை போடாம நல்ல கன்னங்கரேல்னு வழுக்கத்தலையோட இவளப் பாத்து சிரிக்கிறாரு அந்துவோட அப்பா.
அந்த சின்ன வீட்டுக்குள்ள அவங்க எல்லாரும் உக்காந்துக்கிட்டு துணிங்க பண்டங்க எல்லாத்தையும் ஆசை ஆசையா பாக்குறாங்க. சூசி வாங்கிட்டு வந்த கேக்கை பிள்ளைங்க பிச்சி தின்னுறாங்க. அத்தோணி ஒரு மஞ்சள் கலர் ஸ்டாரை எடுத்து வீட்டுக் கூரையிலத் தொங்கவிடறா.
எங்கயோ மணி அடிக்கற சத்தம் கேக்குது. “சாமியாரு நேத்தே சொன்னாரு. இன்னிக்கு கேரல் ரவுண்ட் வராங்களாம்”னு அம்மா சொல்லுது.
ஆயா ரெண்டு பேருக்கும் சூடா டீ குடுக்குது. கிராமத்து ருசியா இனிப்பா தொண்டைக்கு நல்லா இருக்கு.
“சூசியோட அப்பா போன மாசந்தான் தவறிட்டாரு. அவ ஊருக்கு போல”ன்னு சொல்றா அந்தோணி.
“நம்ம கிட்ட என்னா இருக்கு மவோ. எல்லாம் அந்த மாதா பாத்துப்பா. வெசனப்படாத”ன்னு அம்மா சொல்லுது.
ஆயா சவரியம்மா ஒரு பாத்தரத்துல அச்சு முறுக்கு, பணியாரம் எல்லாம் கொணாந்து வைக்குது. “எங்க தாத்தா காலத்துல இந்த ஊருக்கு வந்தாங்களாம். அப்பல்லாம் நாங்க ரெம்ப வசதியான குடும்பம்”னு சொல்லவும்
“எப்ப இங்க வந்தீங்க ஆயா?” ன்னு கேக்கறா சூசி.
“அது இருக்கும் யம்மா நாலஞ்சு தலமுறைக்கு மின்ன. எங்க தாத்தா சூசையப்பர் இங்க ரோடு போடற வேலைக்கு மேப்பார்வ பார்க்க வந்தாரு. ஆளு பாக்க வாட்டசாட்டமா பெரிய மீசை வச்சி இருப்பாரு. வெள்ளக்காரன்கிட்ட இங்கிலீஷ் படிச்சவராம். எங்க ஆச்சி மெட்டில்டா மேரி கேரளத்து கத்தோலிக்கச்சி. நல்லா நெகுநெகுன்னு வளத்தியா மஞ்சக் கலர்ல இருக்குமாம். தாத்தா இந்த ஊருல இருந்து தேனு, புளி எல்லாம் மொத்தமாக கொண்டு போயி மெட்ராசுல வித்துட்டு வருவாராம். பணம் கொஞ்சங் கொஞ்சமா சேர ஆரம்பிக்குது. அப்பத்தான் இந்த ஊருல அந்தோணிமுத்துன்னு ஒரு சாமியாரு மாதாக்கோயில் கட்டனும்னு ஆரம்பிச்சிருக்காரு. அப்ப இங்க கோயில் கட்ட எடம் வாங்கித்தந்தது எங்க தாத்தா சூசையப்பர்தான். மலையில கீழ்நாட்டாருக்கு எடம் தரமாட்டாங்க. எங்க தாத்தா சொன்னா எல்லாரும் கேப்பாங்க. அவருதான் முன்னாடி நின்னு எடம் வாங்கி மாதாக்கோயில் கட்டியிருக்காரு.
சாதாரணமா காண்ட்ராக்ட் வேலைக்கு வந்தவரு இங்க பெரிய வியாபாரியா ஆயிட்டாரு. புளி மூட்டைக்கு நடுவுல சந்தனக் கட்டைங்க வச்சி ஏத்திட்டு போனாங்க. அப்புறம் பணம் கொட்டுச்சி.” ஆயா சொல்லிட்டு சிரிச்சா.
“சந்தன மரக்கட்டையா?” சூசி வியந்து போய் கேக்கறா.
“இத சாப்பிட்டுக்கிட்டே கத கேளு மவோ”அம்மா முறுக்கை எடுத்து தரா.
சூசிக்கு அந்த டேஸ்ட் ரொம்ப பிடிக்குது.
ஆயா சொல்றா “ஆமா சந்தனக் கட்டை அப்பல்லாம் இந்த மலையில காடு நெறய காஞ்சு விழுந்து கெடக்கும்.புளி பெறக்கும் போதே சேத்து மூட்டையில கட்டிடுவாங்க. எங்க தாத்தா பணத்தை மூட்டை காட்டித்தான் கொணாருவாருன்னு சொல்வாங்க.ஊர்ல நெலம் வீடு மாடு கன்னு எல்லாம் பெருசாச்சு.பட்டும் மஸ்லீனும் முத்து மாலையும் ஆரமும் சேந்துச்சி.பர்மா தேக்குல எழைச்ச தூணுங்க, செகப்பு தளம், கிரானைட் கல் பதிச்ச காம்பௌண்ட் சுவருல மாதா செல வச்ச அரண்மணை போல வீடுன்னு ஒசந்துச்சு. எங்க அப்பா பள்ளியோடம் போகவே ரெண்டு வேலைக்காரங்க பையத் தூக்கிட்டு பின்னால போவாங்களாம்.தாத்தாவுக்கு தெரியாத பாரஸ்ட் ஆபிசருங்க போலீஸ் அதிகாரிங்க யாரும் இல்ல.எல்லாருக்கும் பங்கு போச்சு.
ஊருக்கு எந்த பெரிய அதிகாரி வந்தாலும் எங்க வீட்டுல இருந்துதான் ரொட்டியும் நெய்ச்சோறும் கறியும் தூக்கு வாளி, தூக்கு வாளியா பங்களாவுக்கு போகுமாம்.வெளிநாட்டு விஸ்கியும் வைனும் போத்தல் போத்தலா தாத்தா வாரிக் குடுப்பாராம்.
கிறிஸ்மசுக்கு அத்தனை சனமும் வந்து கறிச்சோறு சாப்புட்டு துணி வாங்கிட்டு போவாங்களாம்”
“போலும் போலும் உங்க குடும்ப பெரும.இப்ப ஓட்ட சட்டி தான் இருக்கு” அம்மா ஆயாளப் பாத்து முகத்தை வெட்டறா.
ஆயா அமைதியாயிட்டா.அந்தோணியும் சூசியும் அந்த தெருவ பாக்குறாங்க.எல்லா குடிசையிலயும் கிறிஸ்மஸ் ஸ்டார், கலர் பேப்பர் ஒட்டியிருக்கு.பிள்ளைகள் ஆடிக்கிட்டிருக்காங்க.
ரெண்டு பேரும் அப்பிடியே நடக்கறாங்க.கொஞ்சதூரம் மேட்டுல நடந்து சரிவான பாதையில போறாங்க.சூசி அப்பிடியே தெகச்சி போயி பாக்கறா.கண்ணு தெரியற தூரம் வரையில் சின்ன சின்ன மஞ்சப்பூவுங்க அரையடி ஒயர செடிங்களில் பூத்திருக்கு.மாலை சூரிய வெளிச்சத்துல அந்த மஞ்ச நெறம் அப்பிடியே பரவி காத்துல இருந்த குளிரும், தூரத்துல தெரியற மலைமுகடுகளும் அவளுக்கு என்னமோ பண்ணுது.அப்பா நினைவு வருது.அப்பிடியே அந்த வரப்புல உக்காந்துட்டா.
“இதெல்லாம் பேய் எள்ளுச்செடிங்க.மார்கழி, தையில எங்க மலை முழுக்க இப்படித்தான் பூத்துக் கெடக்கும்”
“ரொம்ப அழகா இருக்கு. எங்க அப்பாவுக்கு இப்படிப்பட்ட இடமெல்லாம் ரொம்ப புடிக்கும்.”
“சூசி உங்க அப்பாதான் உனக்கு புடிக்குமா?”
“ம்ம்…
ரெண்டு பேரும் எழுந்து நடக்கறாங்க.ஒயர ஒயரமா எட்டி மரங்க, செவத்த எலைங்களோட நுணா மரங்க, கரும்பச்சை எலைங்களும், செகப்பு குட்டி பழங்களோட சவட்டை புதருங்க, அதுக்கு மேல படர்ந்து மஞ்சளும் செகப்புமா தீப்பிழும்பு போல பூத்திருக்கற கார்த்திகைப் பூவுங்கன்னு அந்த எடமே சில்லுன்னு இருக்கு.
“இது செங்காந்தள் பூதான. நெசமாவே இயேசப்பா இப்படி பனிக்குளிர் வீசற சின்ன எடத்துலதான் பொறந்திருப்பாரு.நம்ம வேல செய்யற ஹாஸ்பிடலுல அன்னிக்கு சப்போஸ் கிறிஸ்மஸ் கொண்டாடுனாங்களே அதெல்லாம் நல்லாவா இருந்துச்சி?ஒரே ஜிகு ஜிகுன்னு ஸ்டாரும், லைட்டும், ட்ரம்ஸ் சவுண்டும்,ராவுல கூட வேர்வை வழிஞ்சிகிட்டு சே….”
“அதெல்லாம் எங்க ஊரு நல்லாத்தான் இருக்கும் சூசி.என்னா இங்க வேலை இல்லாம தான வேலூருக்கு வந்து ஹாஸ்பிடல்ல ஸ்வீப்பர் வேல செய்யறேன்.இந்த தொண்ணூத்தஞ்சாம் வருஷத்துல கூட எங்க ஊருக்கே ஒரேயொரு போன் கனக்ஷன் ஃபாதர் கிட்ட மட்டுந்தான் இருக்கு.கேபிள் டிவி கூட சரியா எடுக்காது.பஸ் கூட ஒழுங்கா வராது”அந்தோணி சொல்லவும் சூசி பெருமூச்சு விடறா.
“அது அப்பிடித்தான் ஒண்ணு இருந்தா ஒண்ணு கெடைக்காதுன்னு எங்க அப்பா சொல்லுவாங்க.அவரு நாகர்கோவில்ல இங்கிலீஷ் வாத்தியாரா இருந்தாரு.பத்தாங்கிளாஸ் பிள்ளைங்க வருஷா வருஷம் ஸ்கூல் முடிஞ்சு போகையில ஆட்டோகிராப் நோட்டுல சைன் வாங்குவாங்க.எங்க அப்பா “நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை”ன்னு கண்ணதாசன் பாட்டை எழுதித் தருவார்.எங்க அப்பா இருந்திருந்தா எனக்கு என்னிக்குமே கிறிஸ்மஸ் தான்.அவ்ளோ சந்தோஷமா சிரிச்சு பேசிக்கிட்டு மக்களேன்னு ஆசையா கூப்பிடுவாங்க.டிசம்பர் தொடங்கனாலே
‘ராக்காலம் பெத்லேம்
மேய்ப்பர்கள் தம் மந்தை காத்தனர்..
கர்த்தாவின் தூதன் இறங்க விண்ஜோதி கண்டனர்….’அப்பிடி எங்கப்பா தங்க குரலில் பாடுனாத்தான் எங்களுக்கெல்லாம் கிறிஸ்துமஸே வரும்”
சூசி குரல் உடையுது.அந்தோணி அவ பக்கத்துல வந்து தோளோட சேத்து அணைச்சுக்கறா.
வெளிச்சம் கொஞ்சங் கொஞ்சமா குறையவும் வீட்டுக்கு போறாங்க.
எல்லா வீட்டுலயும் பலகாரம் சுடற எண்ணெய் வாசம், முட்டையும் மாவும் கலந்து கேக் வேகற மணம், கறிக்கொழம்பு வாசனை எல்லாம் கலந்து வருது.
“அந்து எப்ப வந்த? பிரண்டா” ன்னு தெருவுல நெறய பேர் கேக்குறாங்க.அவ எல்லாருக்கும் அத்த, அக்கா,ஆயா, மாமான்னு மொற சொல்லி பதில்சொல்லுறா.புதுப் பொடவைங்க, நகை, பூன்னு நெறய பொண்ணுங்க இருந்தாங்க.
“எங்க தெருவுக்கு கிறிஸ்மஸ்தான் பெரிய பண்டியல்.திருவிழா மாறி எல்லாரும் அச்சு முறுக்கும் அதிரசமும் சுட்டு, தோசை கறிக்கொழம்பு ஆக்குவாங்க.கட்டி குடுத்த பொண்ணுங்க எல்லாம் அம்மா வூட்டுக்கு வருவாங்க.கிறிஸ்மஸ் பூசை, ஸ்பெஷல் மாஸ், கொயர் பாட்டுன்னு ஒரு வாரம் களை கட்டும் “
“அவரு எங்கயோ வனாந்தரத்துல மாட்டுத் தொளியில வைக்கோல் புல்லுல பொறந்தாரு.வாடிகனும், நியூயார்க்கும் வைர செங்கோலும், ஆங்கலிக்கன் கொயர் இசையும் விருந்தும் சலவைக்கல் சர்ச்சுமா கிறிஸ்துமஸ் கொண்டாடறாங்க.நீங்க என்னான்னா எங்க அத்தை ஊரு மதுரை சித்திரைத் திருவிழா மாறி தேரும் தெப்பமுமா கொண்டாடுரீங்க”சூசி சொல்லவும் ரெண்டு பேரும் சிரிக்கறாங்க.
சாயந்திரமா எல்லாரும் சர்ச்சுக்கு கெளம்பி போறாங்க.அழகான பழைய கல் கட்டிடம் குளிர்ச்சியா இருக்கு.சாமியார் மரிய பென்சிகர் ஜெபம் சொல்றார்.வயசான ஜான் எபனேசர் ஒரு செகப்பு கோட் போட்டு கிறிஸ்துமஸ் தாத்தாவா மாறிட்டாரு.டிரம்ஸ், ஜால்ரா, சின்ன வார்ப்பெட்டி எல்லாம் எடுத்துட்டு எல்லாரும் கேரல் பஜனைக்கு கெளம்பராங்க.
பனிக்கொட்டுற அந்த ராத்திரியில இப்படி ஒரு சின்ன மலையில இயேசு பாலன் பிறந்தத இவங்க கொண்டாடறது சூசிக்கு பிடிச்சிருக்கு.
“பிறந்தார் பிறந்தார்
மாட்டுத்தொழுவத்தில்
. கந்தை துணியோ கர்த்தருக்கு
கடும் ஏழைக் கோலமதாய்
விலையேறப்பெற்ற உடை அலங்கரிப்பும், வீண் ஆசையும் நமக்கேன்?”
அழகழகான பாடல்களும் டிரம்சுமா எல்லாரும் சர்ச்சுல இருந்து புறப்பட்டு போறாங்க.மேட்டுல ஒரு வீட்டுக்கு உள்ள போயி பாடறாங்க.
ஜெபம் சொன்னதும் “வீ விஷ் யூ எ மெர்ரி கிறிஸ்துமஸ், அண்ட் அ ஹாப்பி நியூ இயர்” பாடினாங்க.அப்பத்தான் அந்துவோட தம்பி ஜோ வந்து “யக்கா அந்த ரோசரிக் கெழவன், பிரமாணிக்கம் எல்லாம் இங்கிலீஷ் பாட்டு தெரியாம வாய் மட்டும் அசைக்கறாங்க பாரு”ன்னு சொல்றான்.சூசியும் அந்தோணியும் பாக்கறாங்க.அவங்க சும்மாவே குருவிக்குஞ்சுங்க வாய் தெறக்கறாப்புல வாயத் தொறந்து தொறந்து மூடறாங்க. இவங்களுக்கு சிரிப்பு தாங்கல.பாட்டு முடியவும் எல்லாரும் கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்றாங்க.அப்ப நல்ல மிட்டாய் கலர்ல சேலை கட்டி, பெரிய வடச்சங்கிலி போட்ட ஒரு அம்மா இவங்க கிட்ட வருது. “இது எங்க வயலட் மேரி அத்தை” ன்னு அந்து சொல்றா.அந்தம்மா இவ கையப் புடிச்சி
“காப்பி கிறிஸ்மஸ் மவோ”ன்னு சொல்லுது.சூசியும் ஜோவும் குலுங்கி சிரிச்சிக்கிட்டே “அத்த திரும்பவும் சொல்லுங்க”ன்னு கிண்டல் பண்றாங்க.அதுக்கும சந்தோஷப்பட்டுக்கிட்டே அந்த அத்தையம்மா “காப்பி கிறிஸ்மஸ்” னு சொல்லுது.
ராத்திரி வீட்டு திண்ணையில படுக்கற வரைக்கும் சூசியும் அந்துவும் சொல்லிச்சொல்லி சிரிக்கறாங்க.
இவங்க பக்கத்துல வந்து ஆயா படுக்குது.
“ஆயா அப்போ சொன்னீயே உங்க தாத்தா கதை அப்பறம் என்ன ஆச்சு?”
“அது இன்னா மவோ ,அப்பறம் எங்க தாத்தாவும் பாட்டியும் பணத்தை வாரி எறச்சாங்க.ஆளு அம்பாரம் எல்லாம் சேரவும் தற்பெரும தானா வரும்.கிறிஸ்மஸ் பெருநாளுக்கு பத்து நாள் சீரியல் லைட் போட்டு கறிச்சோறு போட்டாங்க.ஊருல மாரியம்மன் கொடை, முருகன் கோயில் தேர் எல்லாத்துக்கும் முன்னாடி நின்னு செஞ்சாங்க. எங்க ஆச்சி களுத்து நெறய நகையோட எல்லா விஷேஷ வீட்டுக்கும் ஆரவாரமா போவா.
பாவப்பட்ட பணம் இல்லையா? சந்தனக்கட்ட கடத்தறப்ப நெறய அடிதடி ஆள் அடிச்சு போடறது எல்லாமே நடந்துச்சு.அப்பறம் காட்டுல கட்டைகொறயுது.கெவுர்மெண்ட் பாரஸ்ட் சட்டமெல்லாம் ரொம்ப மாறிச்சு.பணத்தை வாரி எறச்ச கையி சும்மா இருக்கல.சேந்த மாறியே எல்லாம் அழிஞ்சுச்சு.அது அப்புடித்தான் முப்பது வருசம் வாழ்ந்தவனும் இல்லை, தாழ்ந்தவனும் இல்லை.மரியா மவன் இருக்கானே அவனையே சிலுவையில் அறைஞ்சாங்க.நம்மள விடுவாங்களா.எங்க அப்பா காலத்துல எல்லாம் போயி நாங்கல்லாம் இங்க பயிர் வச்சி பொழக்கிறோம்.தூங்கு மவோ விடிஞ்சா கிறிஸ்மஸ்.சர்ச்சுக்கு போவனும்”
அந்த குளிர்ந்த ராத்திரியில சூசி போர்வையை இழுத்து போத்திக்கறா.கூரை ஓட்டையில் நட்சத்திரம் ஒண்ணு தெரியுது. “காப்பி கிறிஸ்மஸ்”னு சொல்லிக்கறா.