
வீடு விடு தூது
கட்டுப்படுத்த எண்ணும் கேள்விகளை
முளையிலேயே கிள்ளிவிட வேண்டும்
இல்லையேல் அது துளிர்த்து
ஒரேயோர் இளவஞ்செடியாய்த்தான் வளரும்
நாளடைவில் நாம் எண்ணாத அளவிற்குப் பெருகி
நம்மையே ஆக்கிரமித்துவிடும்
அன்பே என் ஆருயிரே
ஆக்கிரமிக்கப்போவது நீயாக இருப்பினும்
கிள்ளி எறிவது
அவசியத்திலும் அவசியம்தான் என் அன்பே
அதற்கும்
உன் மீதான அன்பிற்கும்
எந்தத் தொடர்புமில்லை
தந்திரமான கேள்விகளை எழுப்பாமல்
தரைமட்டமான கேள்விகளை அடுக்கு
நான் நதியாய் ஓடுவேன்!
*
உன்னுடைய இனிய நினைவுகளையெல்லாம்
மரச்சட்டகமிட்டு
வீட்டின் உள்சுவற்றில் வரிசைப்படுத்தி
அழகு பார்க்கிறாய்
அவ்வளவு ஆத்திரத்தோடு
அனைத்தையும் நெருப்பிலிட்டு
எரிக்கத் துடிக்கும் நானும்
அதே வீட்டில் வசிப்பதில்தான்
வாழ்க்கை அதன் சூட்சமத்தைக் காட்டுகிறது
ஒருவருக்கு ஆலாபனையாய் ஒலிக்கும்
அதே குக்கர் விசில்தான்
உச்ச சுருதியில் ஒலித்து
மற்றொருவரின் உயிரைக் குடிக்குமென்பது
நமக்கு மட்டும்
விதிவிலக்கா என்ன?
*
அவள்தான் எல்லோருக்கும்
காத்திருக்க வேண்டியிருக்கிறது
ஒவ்வொருவரும் வந்து உண்டவுடன்
மீதமிருக்கும் சோற்றிற்கு
தண்ணீர் ஊற்றுவதுதான் அவள் கடமையா?
ஏதோ ஓரிரு முறை
தாமதமாக வீடு நுழைந்தால்
நீ சாப்பிட்டாயாயென்று கேட்பதற்குக் கூட
யாருமில்லாமல்
அவரவர் உறங்கும்போதும்
அவர்கள் உண்ட மீத சோறு மட்டும்
காத்திருக்கிறது
அவள் ஊற்றும் தண்ணீருக்காக!
*
வாழ்வை சரிபாதியாகப்
பிரித்துக் கொள்வோம்
யாருக்கேனும் கொஞ்சம் மிகுதியாகிவிட்டால்
குழந்தைகளைப்போல் கூச்சலிடுவோம்
யாருக்கும் யாரும் சளைத்தவர் இல்லையென்று
இம்சிப்போம்.
என் கட்டுக்குள் அடக்க முயற்சிக்கும்
இம்சை அரசன் நானெனில்
என் கட்டுப்பாடுகளைத் தகர்க்கப் போராடும்
பலம்மிகு வீராங்கனை அவள்!
*



