
என் பிரியமான பாவங்கள்
நான் நடுகிறேன்..
அவரே நீர் பாய்ச்சுகிறார்!
என் பிரியமான பாவங்களின் நிமித்தம்…
நான் நடும் எல்லா சிலுவை மரங்களிலும்
தவறாமல் தன்னை ஏற்றிக்கொள்கிறார்
என் தேவன்!
சபலம் நிரம்பிய என் பிரியமான பாவங்கள்
என்னை ஆரத்தழுவிக் கெஞ்சுகின்றன,
‘மனந்திரும்பு,
பரலோக ராஜ்யம் சமீபமாய் இருக்கிறது’
நான்,
பரிமாறப்படும் காருண்யத்தின்
நுனிப்பாவம்.
நீர்ப்பறவை
உன் நினைவலைகள்
கொந்தளிக்கும் பெருங்கடலில்
முகம் பார்த்து பறக்கும்
நீர்ப்பறவை நான்!
சலித்து மாய்ந்திடாத இறக்கைகள் எனது!
கரைகள் தீண்டிடாத பேயலைகள் உனது!
திரும்பிய திசையெங்கும்..
நீர் சூழ்ந்த
நிர்மூல நிலப்பரப்பில்
தனித்து விடப்பட்ட
நீர்ப்பறவையாகிறேன்.
சுமக்கும் முன்னே
இறக்கி வைக்கப்படும் சுமையைப் போல
புலரும் முன்னே சிதைக்கப்பட்ட நினைவுகளை
நினைத்துப் பார்க்கையில் உணர்கிறேன்,
தொலைதல் எத்தனை சுகமும், சுதந்திரமுமானது!
*
நாஸ்தென்கா
என் வெண்ணிற இரவுகளில்
என்னை விட்டு
என்றும் பிரிந்திடாத
நாஸ்தென்கா அவள்!
*
ஏதேன் தோட்டத்து சர்பம்
ஆதி ஆப்பிளின் ருசி
நுனி நாவில் தேள் கொடுக்கென விருவிருத்தது,
முழுதாக விரும்பவும் வெறுக்கவும் முடியாமல்
பிசுபிசுக்கும் ஊசி மழையினைப் பார்க்கும்போதெல்லாம்
அவள் ஞாபகம்!
சுந்தரப் பொழுதுகள் நிறைந்த
ஆராதனைக் கனவின் விளிம்பில்,
குழம்பிய கண்களை கழுவிப் பார்க்கையில்
அவள் கருவிழிகளுக்குள்
ஏதேன் தோட்டத்து சர்பம் நெளிந்துகொண்டிருந்தது.
*



