இணைய இதழ் 121சிறுகதைகள்

தூக்கணாங்குருவி – கமலதேவி

சரவணப்பொய்கையின் மூன்றாவது படிக்கட்டில் சுப்பு அமர்ந்திருந்தான். பொய்கை தளும்பிக் கொண்டிருந்தது. மழைக்கால காவிரி பொங்கி எழுந்து கிணறு குளம் குட்டை ஏரி என்று அனைத்தையும் நிரப்பி வழியச் செய்திருந்தது. ஊரே தண்ணீர் ததும்பும் காலம். பொய்கையின் வடிகாலை முழுவதுமாக திறந்து விட்டிருந்தார்கள். தண்ணீர் வருவதும் தொடர்ந்து வெளியேறுவதுமாக பொய்கையின் கலங்கல் தெளிந்து கொண்டிருந்தது. நடேசனை எதிர்பார்த்து சுப்பு காத்திருந்தான். சுவாமி தரிசனம் செய்துவிட்டு வர இவ்வளவு நேரமா? முதல் முறை சந்தித்ததிலிருந்தே சுவாமிமலை தரிசனம் பண்ணனும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

அந்திக் காற்றும், வரும் தண்ணீரும், வெளியேறும் தண்ணீரும் சேர்ந்து கொள்ள பொய்கை தன்னைத்தானே சுழற்றிக்கொண்டு அலையடிக்கத் தொடங்கியது. நடேசனின் நாவலில் வரும் முசிறி காவிரியும், கரைவேலி கிராமங்களும் மனதில் வந்து போனது. ஆலங்கட்டி மழைவிழ சிறுவர்கள் ஆலங்கட்டிகளை பிடிக்க மழைக்குள் ஓடுவது அழகான தொடக்கம். வானத்திலிருந்து ஆலங்கட்டி கையில் விழுந்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே அது கைச்சூட்டில் கரைவதைப் போன்ற விவசாய வாழ்க்கையை அந்த நாவல் மூலம் வாசிப்பவருக்கு கடத்திவிட்டவர். ‘எங்கிருந்தோ வந்தான்’ என்று பாரதி எழுதிய வரி சுப்புவின் நினைவில் வந்து சென்றது. ஜானுப்பாட்டி முற்றத்து வெயிலில் அப்பளமிடும் போது படக் படக்கென்று புரட்டிப் போடுவதைப் போல இரண்டு வருஷங்களுக்கு முன்பு சுப்புவை நடேசன் தன்னுடைய வருகையினால் சட்டென்று புரட்டிப் போட்டார்.

சுப்பு பொய்கையின் எதிர்ப்பக்கப் படிகளைப் பார்த்தான். கோவிலில் இருந்து பொய்கைக்குள் நுழையும் தோரண வாயிலின் உச்சியில் பிரணவ உபதேச சிலை. சிவனார் சுப்ரமணியனை வலது தொடையில் அமர்த்திக் கொண்டு அவன் பக்கமாக தலை சாய்த்திருந்தார். சுப்ரமணியன் தன்னுடைய வலது கையையும் முகத்தையும் ஈசனின் காதிற்கு அருகில் வைத்திருந்தான். சற்று நேரம் அந்த சிலையை பார்த்துக் கொண்டிருந்த சுப்புவிற்கு மடியில் அமர்ந்திருக்கும் பாலகனும் அவன் தோரணையும் தந்தைக்கு முத்தம் கொடுப்பது போல இருக்க புன்னைகைத்தபடி பொய்கையை பார்த்து குனிந்து கொண்டான்.

காலையில் வீட்டில் ரேழி பக்கமாக சுப்பு கிளம்பி நிற்கும் போது முற்றத்தில் அப்பா ஜானுபாட்டியிடம்,”இந்த ஊருக்கே உண்டான வாசம் அப்படி. நமக்கு புத்தி சொல்றான்,” என்று மெதுவாக சொல்லிக்கொண்டிருந்தார்.

ஜானுப்பாட்டி வழக்கம்போல, “நீ எதுக்கு இப்பிடி மனச போட்டு உழட்டிக்கிற? அவன் புத்திமான்.. தேஜஸ்வீ,” என்றாள்.

“நோக்கு எப்பவும் இதே பல்லவிதான்,”

“உன் மனசிலேயும் இந்த நெனப்பு இல்லேன்னு சொல்லு பாக்கலாம்,” என்று அவள் கேட்டுக்கொண்டிருந்தாள். சுப்பு தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கினான்.

அவள் மடியில் படுத்துக்கொண்டு முற்றத்து வானத்தில் நட்சத்திரங்களை, நிலாவை பார்த்துக்கொண்டு கதைகள் கேட்பான். வரிக்கு வரி அவனுக்கு கேள்விகள் முளைக்கும். பாட்டியும் சலிக்காமல் அவன் கேள்விகளுக்கு பதில் சொல்வாள்.

“நீ சொல்ற ராஜாராணில்லாம் நம்பறதுக்கில்ல,”

“நெசமாத்தான் சொல்றேன். இங்க பக்கத்துல தஞ்சாவூர்ல கூட அரண்மனை இருக்கு. ராஜா இருக்காரு…”

“நான் அப்பாகூட தஞ்சாவூருக்கு போய் பாக்கத்தான் போறேன்,”

அவள் சிரித்துக்கொண்டு மடியில் படுத்திருக்கும் பேரனின் அகன்ற நெற்றியிலிருந்து தலைமுடியை பின்னால் ஒதுக்கி விட்டபடி மீண்டும் கதை சொல்லத் தொடங்குவாள்.

***

டேனியல் விழா காரணமாக பல்கலை ஜன்னல் கழகத்திற்கு விடுமுறை. பையன்கள் வீட்டிற்கு சென்றுவிட்டார்கள். விடுதி அறை ஒன்றின் பக்கமாக சுப்பு வாசித்துக்கொண்டிருந்த ஆங்கிலப் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு மழையை வேடிக்கை பார்க்கத் தொடங்கினான். மூன்று நாட்களாக அடைமழை. மழையின் இதமான குளிரில் புத்தகம் வாசிப்பதும், வெளியே சென்று சாப்பிட்டு விட்டு ஒரு நல்ல தித்திப்பான காஃபி குடித்துவிட்டு வருவதும் வழக்கமானது. இன்று காலை உணவிற்கு பிறகு விடுதிக்கு திரும்பி வரும் போது சிறிய வாழை இலை மடக்கு தித்திப்பை கையில் பிடித்துக்கொண்டு வந்தான். அமைதியான வளாகத்தில் குடைபிடித்தவாறு நடக்கையில் வாசித்ததை மனம் அசை போட்டது. மீண்டும் அமைதியாக வாசிக்கலாம் என்ற நினைப்பே அவன் மனதை இனிக்கச் செய்தது. மழை நின்று தூறலாக விழுந்து கொண்டிருந்தது. மரங்களை, குழைந்த மண்தரையை பார்த்துக் கொண்டிருந்தான். காவிரிப்படுகை நினைவில் வந்து போனது.

அப்போது நடுவயதுக்காரர் ஒருவர் கையில் ஒரு சுமையை தூக்கிக்கொண்டு வந்தார். மடித்துக்கட்டிய வேட்டி நனைந்திருந்தது. குடை ஒரு கையில் அந்த சுமை மறுகையிலிருந்தது. பச்சை நிறத் துண்டால் கைச்சுமையை போர்த்தியிருந்தார். போர்வையை விலக்கிப் பார்க்கும் குழந்தையாக நடக்க நடக்க துண்டு விலகி அது தூறலில் நனைந்துகொண்டு வந்தது.

சுப்பு அறைக்கதவை ஒருக்களித்து வைத்திருந்தான். அவன் எழுந்து செல்வதற்குள் அவர் வாசல் கதவை தட்டினார்.

“வாங்கோ…யாரை பாக்கனும்?”

“யார்ன்னு இல்ல…காலேஜ் பையன்களை தேடித்தான் வந்தது. நான் ஒரு எழுத்தாளன். பேரு நடேசன்,”

சுப்பு அவர் கையிலிருந்த சுமையை வாங்கி மேசையில் வைத்தான். துண்டை எடுத்து கழுத்திலும் நெற்றியிலுமிருந்த வியர்வையை துடைத்துக்கொண்டு நாற்காலியில் அமர்ந்தார்.

“எழுத்தாளரா?”

“நான் எழுதின புது நாவல்தான் இந்த புத்தகக்கட்டில இருக்கு. காலேஜ் காலேஜா எடுத்துட்டு போய் பார்க்கலான்னு,”

சுப்பு நெற்றியை தேய்த்துக்கொண்டான்.

நடேசன் மெதுவாக அந்த கனமான பொட்டத்தை பிரித்து ஒரு புத்தகத்தை எடுத்து சுப்புவிடம் கொடுத்தார். அந்த அறையிலிருந்த ஆங்கில புத்தகங்கள் அவர் கண்களில்பட்டன.

“நீங்க இப்போ பணம் தரனுன்னு இல்ல. படிச்சு பாத்துட்டு அடுத்த முறை வரும்போ கொடுத்தா போரும்,”

சுப்புவிற்கு தமிழில் நாவல்கள் என்பதே வியப்பாகவும் கேள்வியாகவும் இருந்தது. திணிக்காத குறையாக புத்தகத்தை வம்படியாக கொடுக்கும் எழுத்தாளரையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“இது ட்ரான்ஸ்லேஷன். எழுதறப்போ இங்கிலீஷ்ல எழுதினது.”

சுப்பு நிமிர்ந்து உட்கார்ந்தான்.

“அரசாங்க உத்தியோகத்துல இருந்தேன். எழுத முடியல. அதிகாரிங்க தொல்லை வேற. இப்போ சிறுகதைகள், நாவல்கள்ன்னு எழுதிட்டே இருக்கேன். அதெல்லாம் பதிப்பிச்சு வந்துட்டா போரும்,”

அவர் முகத்தில் நடந்து வந்த களைப்பை மீறி ஒரு மலர்ச்சி. சட்டென்று சோபை பெற்ற அவரின் முகத்தை பார்த்து சுப்பு புன்னகைத்தான். காவிரி படுகை வயல்களில் நாற்றுவிடும் காலத்தில் நெல்மணிகளை விதைத்து இரண்டு மூன்று நாட்களுக்கு சேறாக காட்சி தரும் வயல்வெளி. திடீரென்று ஒருநாள் காலை வெளிச்சத்தில் குப்பென்று பச்சை காட்டுவதைப்போல அறைக்குள் நுழைந்த போது இருந்த அவரின் முகக்களை முற்றிலும் மாறியிருந்தது.

சுப்பு தனக்காக வைத்திருந்த தித்திப்பு வாழைமடக்கை எடுத்து அவரிடம் நீட்டினான்.

“சாப்பிடுங்கோ…இப்போதான் வாங்கினது,”

நிதானமாக அவர் சுவைத்து சாப்பிடுவதை பார்த்துக்கொண்டிருந்தான். அவர் கிளம்பிச் சென்றதும் புத்தகத்தை பிரித்துப் பார்த்தான். வெளியே தூறல் பலமாக விழத் தொடங்கியது. அவனுடைய புத்தி ஒவ்வொரு பக்கமாக, ஒவ்வொரு வரியாக, எழுத்தாக அந்தப் புத்தகத்தை தழுவிச் சென்றது. அன்றிரவு அவனுக்கு உறக்கம் கூடவில்லை. நடேசன் அந்த வளாகத்திற்குள் நடந்து வந்ததும், தன்னிடம் பேசியதும், புத்தகத்தை கட்டிலிருந்து பிரித்து எடுக்கும் போது இருந்த முகக்களையும், அவர் எழுத்தும், அவனுக்குள் எப்போதும் சுழலும் ஓயாத சிந்தனைகளும் , ஆங்கிலப் புத்தகங்களும் சேர்ந்து அவன் மனதிற்குள் ஒவ்வொரு நாராக பிரித்துக் கொண்டது. அன்றிரவு முழுவதும் அவன் மனம் எதையோ பின்னிக் கொண்டிருந்தது.

அடுத்தநாள் நூலகத்திற்கு சென்று தமிழ் புத்தகங்களின் பிரிவில் நின்றான். அன்று முழுவதும் புத்தக அடுக்குகளை சுற்றிச்சுற்றி வந்தான். எதையோ யோசித்தவனாக  மொழிபெயர்ப்பு நூல்களின் அடுக்குகளுக்குள் சென்று நின்றான். அடுத்தடுத்த நாட்களிலும் இதுவே தொடர்ந்தது.

வேட்டியின் ஒரு நுனி அசிரத்தையாக தரையை உரசிக்கொண்டிருக்க அவன் புத்தக அடுக்குகளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பான். அங்கு புத்தகங்கள் மீது படரும் மெல்லிய வெளிச்சத்திற்கும் வெளியே பெய்யும் மழைக்கும் சம்மந்தமில்லாமல் அந்த நூலக அறையில் மெல்லிய வெப்பம் நிறைந்திருந்தது. அவன் தன் அகலமான நெற்றியை அடிக்கடி தேய்த்துக்கொண்டான். கலைந்த கேசத்தில் மஞ்சள் விளக்கின் ஔிப்பட்டு எதிரே சுவரில் பெரிய ஆகிருதியாக நகர அவன் கைகள் புத்தகஅடுக்குகளை துளாவிக் கொண்டிருந்தன.

அன்று பழந்தமிழ் இலக்கியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பை எடுத்துக்கொண்டு வாசிப்பு மேசைக்கு வந்தான். அதுவரை ஆங்கில புத்தகங்களை மட்டுமே வாசித்தவனுக்கு தமிழின் இரண்டாயிரமாண்டு பழமை என்ற விஷயமே மனதை சுழற்றியடித்தது. எத்தனை முட்டியும் அந்த பாறைக்களுக்குள் வேர் விட முடியாமல் நூலகத்திலும், அறையிலும், பல்கலைகழக வளாகத்திலும் விரல்களை பிசைந்தவாறு அவன் நாட்கள் நகர்ந்தன.

சுப்ரமணிய பாரதியின் தொகுப்புகளை தேடி எடுத்துக்கொண்டிருந்த சுப்புவிடம் நூலகர், “இன்னிக்கு பாரதி புத்தகங்களா சுப்பு?” என்று கேட்டார்.

“ஆமா சார். சங்க இலக்கியத்துக்குள்ள போகமுடியலை,”

“நீ இங்கிலீஷ்ல பி.ஏ படிக்கிறவன்…அதுக்கெல்லாம் புலவர் வச்சு சொல்லிக்கனும்பாங்க,” என்றார்.

சுப்பு பாரதியுடன் விடியலிலும் அந்தியிலும் உறக்கத்திலும் விழிப்பிலும் கிடந்தான். இதுதானே… இது தானே… என்று அவன் மனம் மறுபடி மறுபடி சொல்லியது.

இதற்கிடையில் சுப்பு ஊருக்கு வந்தான். அப்பாவுக்கு இவன் மாற்றங்கள் தெரிந்திருந்தன. அடுத்தநாள் காலையில் எழுந்தவுடன் வழக்கம் போல ஒரு தித்திப்பான காஃபி குடித்துவிட்டு ரேழித் திண்ணையில் நின்று பனியில் மறைந்து மங்கலாகத் தெரியும் சுவாமி மலையையும், அதில் ஏறி இறங்கும் மக்கள் கூட்டத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

‘நம்ம சுவாமிமலை ஒன்னும் சுயம்புவானதில்ல. இது கட்டுமலை தெரியுமா?’ என்ற ஜானுப்பாட்டி சிறுவயதில் சொல்லிய கதை அவன் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. ‘தங்கள் மனம் கொண்ட தெய்வதிற்காக ஒரு மலையை மனிதர்களால் கட்ட முடியுமென்றால்!’ என்ற எண்ணத்தால் உற்சாகமானான்.

தெருவின் நற்சந்தியில் தாளங்களும் இசை வாத்தியங்களுமாக பஜனை கோஷ்டி வந்து நின்றது.

‘ஆழிமழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்’ என்று ஒருவர் கம்பீரமான குரலில் தொடங்க, மற்றவர்கள் தொடர்ந்து சேர்ந்து பாடினார்கள். ஒருகுரலுடன் மற்ற குரல்களும் கைத்தாளங்களும் மற்ற வாத்தியங்களும் இணைந்து கொண்டன. அந்த பாசுரத்தை பாடி முடித்துவிட்டு சிரித்துக்கொண்டும் கைத்தாளம் போட்டுக்கொண்டும் கூட்டம் நகர்ந்தது. சுப்பு நின்ற இடத்தில் நின்றபடிக்கு பஜனை கோஷ்டியை பார்த்துக் கொண்டிருந்தான். சற்று நேரம் கழித்து தெருவில் இறங்கி நடந்தான்.

இறங்கிச்செல்லும் அவனை அப்பா ரேழி கம்பிகளின் வழியே பார்த்துக் கொண்டிருந்தார். தானும் இவன் வயதில் இலக்கியம் எழுத்து என்று பறக்க கனவுகண்டு குடும்பசூழல் காரணமாக அஞ்சல்அதிகாரியாக இங்கு தஞ்சம் புகுந்த நாட்களை நினைத்துக் கொண்டார். அந்த அதிகாலையில் வரிசையாக வீட்டுமாடங்களில் பிறை விளக்குகள் மின்மினிகள் போல மினுமினுத்தன. தெருவெங்கும் பசும்சாணத்தின் மணம். செம்மண் குழம்பால் பட்டைதீட்டிய கோலங்களின் மீது காலை வெளிச்சம் விழும் நேரம் சட்டென்று சுப்பு தெருமுடக்கில் திரும்பி மறைந்தான்.

****

சுவாமிமலையின் தெருக்களைக் கடந்து காவிரிப்படுகை வயல்களுக்குள் நுழைந்த சுப்பு வெற்றிலை மணம் வீசும் தோட்டங்களின் கொடிக்கால்களுக்குள் நுழைந்து பாதைக்கு வந்தான். வெற்றிலை கொடிக்கால்களை கண்டுவிட்டால் பாதையிலிருந்து இறங்கி அதில் புகுந்து வருவான். அப்படியே நெல்லம்பயிர்கள் தலைதூக்கிப் பார்க்கும் வயல்களை பார்த்துக்கொண்டு காவிரியோரம் நடந்து ரயில் தண்டவாளப் பாதைக்கு வந்து நின்றான். அங்கிருந்து நேர்பார்வைக்கு சூரியன் செம்மஞ்சளாய் உதித்து ஆற்றுநீரில் பளபளத்துக் கொண்டிருப்பது வாணவேடிக்கை போலத் தெரிந்தது.

அப்பா நேற்றிருந்து எதையோ பேச நினைக்கிறார் என்பது அவனுக்குப் புரிகிறது. அவனை படிக்க வைத்து பெரிய அரசாங்க அதிகாரியாக்கும் விருப்பம் அவருக்கு. ‘ஆங்கிலப் பற்றுக்கொண்ட அவரிடம் தமிழ் இலக்கியம் பற்றி எப்படிப் பேசுவது?’ என்று யோசித்தபடி காலை வெளிச்சத்தில் பளபளக்கும் தண்டவாளங்களை பார்த்துக் கொண்டிருந்தான். தந்தி கம்பிகளில் தவிட்டுக்குருவியும் அக்காக்குருவியும் சேர்ந்து கொண்டு கும்மாளமாய் கத்திக்கொண்டிருந்தன. மீண்டும் நடந்தான். காற்றின் தன்மை மாறியதை உடல் உணர்ந்ததும் நின்றான். அரசலாறு வந்துவிட்டது என்பது புத்திக்கு அப்போதுதான் புலப்பட்டது. மென் வெயில், சுக ஈரம். கண்களை மூடிக் கொண்டான். சட்டென்று திரும்பி விரைவாக நடந்து ஊருக்குள் நுழைந்து கிருஷ்ணய்யர் கடைமுன் நின்றான்.

அவனைப் பார்த்ததும் கிருஷ்ணய்யர், “டிக்காக்க்ஷன் தூக்கலா சர்க்கரையும் தூக்கலா,” என்றார். காஃபி குடித்துக் கொண்டிருந்த ரகுராமய்யர் புன்னகைத்தார்.

“கசப்பும் இனிப்பும் போட்டி போடனுமோ பயலுக்கு? உன் ஒருத்தனுக்குன்னு தன்னோட ஜீவிதத்தையே நேந்துக்கிட்டு ஆத்துக்காரி போன பிறகு உன் தோப்பனார் ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்கல.”

“அவருக்கு அப்போ வயசு தான்,” என்றபடி கிருஷ்ணய்யர் காஃபி டம்ளரை பெஞ்சில் வைத்தார்.

“நீதான் அவனுக்கு பிடிகொம்பு. தெரிஞ்சுதோ,” என்று ரகுராமய்யர் சொல்லிவிட்டு சுப்புவைப் பார்த்தார். சுப்பு காஃபியை ரசித்துக் குடித்தபடி தலையாட்டிவிட்டு நடந்தான்.

அப்பா உள்நடையில் அமர்ந்திருந்தார். அவன் முற்றத்தில் கால் கழுவிக்கொண்டு தூணருகே நின்றான். ஜானு பாட்டி காஃபி டம்ளரை நீட்டினாள்.

“கட்டுரை எழுதறியா?”

“ஆமாண்ணா. இங்கிலீஷ்லேயும் தமிழ்லேயும்,”

“தமிழ்ல்ல எழுதறியா? எப்போருந்து?”

“போன லீவுல ஹாஸ்ட்டல்ல இருந்தேனில்லையா…அப்போ ஒரு தமிழ் எழுத்தாளாரோட பழக்கம் கிடைச்சது,”

“பி.ஏ பாஸ் பண்ணி உத்தியோகத்துல சேரனும். உன் அறிவுக்கேத்த சம்பளம் உள்ள உத்தியோகமா அமையனுமேன்னு யோசனையா இருக்கு,”

“நான் எழுதனுண்ணா.”

காப்பியை குடித்துவிட்டு முற்றத்து சாய்ப்பில் அப்பாவுக்கு எதிர்ப்பக்கமாக அமர்ந்தான்.

“இங்கிலீஷ்ல எழுதினாதான் நல்லது,”

“தமிழ்ல்லதாண்ணா இனிமே எழுதப் போறேன். எல்லாத்துலேயும் ராமாயணம் மகாபாரதத்தை எடுத்துட்டா சமஸ்கிருதம்தான் முன்ன நிக்குது. தமிழ்ல்ல இரண்டாயிரம் வருஷ சரக்கு எவ்வளவு இருக்கு? எனக்கு ஆச்சரியமா இருக்கு…”

“உலகத்து மொழி இங்கிலீஷ்தான்…இங்க எழுதி வாழ முடியாது சுப்பு,”

“அன்னிக்கு அந்த எழுத்தாளர் புஸ்தகத்தோட வந்து நின்னப்பவே எனக்கான வேலை என்னங்கற பிடி கெடச்சிருச்சுண்ணா,”

அப்பா அமைதியாக இருந்தார்.

“தமிழ்ல எழுதறாப்ல இங்கிலீஷ்லயும் எழுறேன்.”

“நிஜமாவா?”

“சத்யம்,”

அப்பா எழுந்து கொண்டார்.

ஜானு பாட்டி, “ஜீவிதத்துக்குன்னு ஒன்னை மனசுல எடுத்துண்டா அது விரதம் சுப்பு. நாங்கெல்லாம் நோன்பிருக்காப்ல. என்ன வந்தாலும் தடம் மாறப்பிடாது,” என்றாள். சுப்பு அவள் தோள்களை கட்டிக்கொண்டான்.

சுப்பு கல்லூரியில் பி.ஏ இறுதி ஆண்டு பரீட்சை நெருங்கிக் கொண்டிருந்தது. இங்கிலீஷ் தமிழ் இலக்கிய வாசிப்பிற்கு அவன் பொழுதின் பெரும்பகுதி செலவானது.

ஆங்கில நாவலாசிரியர் ஜாக் லண்டனின் சுயசரிதை புத்தகத்தை முன்பே வாசித்திருந்தாலும் மறுபடியும் வாசிக்க வேண்டும் என்று மனம் பரபரத்தது. அன்று விடுதியின் ஜன்னலோரத்தில் அமர்ந்து வாசித்துக் கொண்டிருந்தான்.

“ஆள் வருகிறது கூட தெரியாமல் என்ன படிக்கிறீர்,”

நடேசன் குரல் கேட்டு சுப்பு நிமிர்ந்தான். புத்தகத்தை அவர் கைகளில் தந்துவிட்டு உடலை நெட்டி முறித்து அமர்ந்தான்.

“எப்பவும் இங்கிலீஷ் புஸ்தகமும் கையுமாவே இருக்கவருக்கு நம்ம நாட்டு நடப்பு தெரியுமோ.”

“ஏன் தெரியாம…? காந்தி சிறையில இருக்கார். உப்பு சத்தியாகிரகம் தீவிரமாயிட்டுருக்கு.”

“கோட்டையில் கொடியேத்தியிருக்கா,”

“மெட்ராசுக்கு போகனும்,”

“ஏன்? இலக்கியத்தோட சுதந்திர போராட்டமுமா? தோப்பனார் தாங்குவாரா?”

“எழுதறதுக்காக போகனும்,”

“ம்,”

“இங்கிலீஷ்லேயும் தமிழ்லேயும் மாறி மாறி எழுதறீங்களா?”

“ஆமாம். தோப்பனார் கல்யாண ஏற்பாடு பண்றார்.”

“உள்ளதுதானே,” என்று நடேசன் புன்னகைத்தார்

“கல்யாணம் செய்துடனுன்னு பறக்கறார்,”

“நீர் எதுவும் சொல்லலியா?”

“அவரை என்னால மீற முடியாது… அவரு சாதாரணமான தகப்பனார் இல்லைங்கறதுதான் என்னோட சிக்கலே.”

“வாஸ்தவம்” என்ற நடேசன் கையிலிருந்த புத்தகத்தை திருப்பத் தொடங்கினார்.

சுப்புவின் பல்கலைகழக பரிட்சை முடிந்து அவன் சுவாமிமலை வந்ததும் திருமணம் நடந்தது. சிலநாட்களில் சிதம்பரத்திலிருந்து ராஜேஸ்வரி வீட்டிற்கு வந்தாள். பதினோரு வயதுப் பெண்ணின் கொலுசின் ஓசையும் நடமாட்டமும் வீட்டிற்குள் நிறைந்ததும் அப்பா மலர்ச்சியானார். பரிட்சை முடிவுகள் வரும்போது ராஜேஸ்வரியின் அப்பாவும் வந்திருந்தார். சுப்பு ஒரு பாடத்தில் தோற்றிருந்தான். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை.

“மாப்பிள்ளை மகா புத்திக்காரர்… ஏதோ நேர காலம்.”

“பரிட்சையில் தோற்கிற அளவுக்கு வேற புஸ்தகங்களா படிச்சிருக்கான். எத்தனை உத்தியோகம் இவனுக்கு காத்திண்டிருக்குன்னு என் மனசில இருந்தது,”

“அது உண்மைதானே. நன்னா படிக்கிற பிள்ளைதானே.”

வேறு என்ன பேசுவது என்று இருவரும் அமைதியானார்கள்.

“அவர் எழுதின கதை விகடன்ல வந்ததுன்னு அவ ரொம்ப சந்தோசப்பட்டு காட்டினா,”

“அவ கொழந்தை. கதை பெரிசா போயிட்டது.”

மீண்டும் அமைதி.

அடுத்த பரீட்சையில் பி.ஏ முடித்ததும் சுப்பு அப்பாவிடம் நேரே வந்து, “நான் மெட்ராசுக்கு போறேண்ணா…”என்றார்.

“உன்னோட படிப்புக்கு பக்கத்துலயே நல்ல உத்தியோகம் கிடைக்குமே சுப்பு.”

“இல்லண்ணா. எழுதனும்,”

“அந்த கொழந்தை?”

“அவளோட தோப்பனாரிட்ட நான் கொண்டு விடறேன். பின்னால அவளை மெட்ராசுக்கே அழைச்சுப்பேன்.”

அப்பா அவன் மனம் நோகக்கூடாது என்று எதுவும் சொல்லவில்லை.

****

ராஜேஸ்வரி தேங்காய் எண்ணெய் தடவி படிய வரிய நீண்ட சடையை முன்புறம் பிடித்துக்கொண்டு நின்றாள். மையெழுதிய கண்கள் விரிய சுப்புவிடம், “கதை எழுதறதுக்காகவா மெட்ராஸ் போறேள்?” என்று கேட்டாள்.

“ஆமாம். நீ சமத்தா இருந்துப்பியா?”

“ம்… ஆனா, எனக்கு யார் கதை சொல்வா? எப்பவும் பேசிண்டே இருந்து பழக்கிட்டேள்,”

சுப்பு சிரித்தான்.

“புஸ்தகத்துல கதை வரும். படிச்சுட்டு எனக்கு லெட்டர் எழுது. நேக்கும் உன் கூட இருக்கனுன்னு ப்ரியம்தான். இங்கியே இருந்தா எழுத நினைச்சத செய்ய முடியாது.”

அவள் சுப்பு பேசுவதை வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் வேறுபக்கம் பார்வையை மாற்றினான்.

“நான் சொன்னேனில்லியா தினமணியிலருந்து கடிதம் போட்டிருக்கான்னு. அங்க போகனும்,”

“சரி, நீங்க போய் எழுதுங்கோ. நான் சமத்தா இருந்துக்கறேன்,” என்ற ராஜேஸ்வரி, சுப்புவின் டைப்ரைட்டரின் மீது விரல்களால் தட்டினாள்.

“அப்படியில்லை.” என்று அவள் தோளில் தட்டிவிட்டு எழுத்துக்களின் மீது விரல்வைத்து தட்டினான். அவள் தலைக்கு மேல் இருந்த அவன் முகத்தை அன்னாந்து பார்த்து சிரித்தாள்.

****

“என்ன சுப்பு பலமான யோசனை?” என்று கேட்டபடி நடேசன் பொய்கையின் படிக்கட்டுகளில் அமர்ந்தார்.

“எவ்வளவு நேரம் ஒக்காந்திருக்கறது? எல்லாம் மனசோட அங்கலாய்ப்புதான்,”

“எப்படியோ குடும்பத்தை ஒரு வழியா சமாதானப்படுத்திட்டேள்…”

“ம்… ஆனா, தோப்பனார்தான் மௌனமா இருக்கார். அவருக்கு பிடிக்குதோ இல்லையோ போய்தான் தீரனும்…”

“சுவாமிய சேவிச்சுட்டு போகலமில்லையா?”

“பரவாயில்லை. உங்களுக்காகத்தான் வந்தேன்.”

“எப்போ ரயில்?”

“சாயரட்சை.”

மலையிறங்கி நடேசனை பேருந்தில் ஏற்றி விட்டான். வீட்டிற்கு வந்து எடுத்து வைத்திருந்த டைப்ரைட்டர், காகித கத்தைகள், சில உடுப்புகளை எடுத்துக் கொண்டான். ரயில் நிலையத்திற்கு வந்த அப்பா அதற்குள் எங்கேயோ சென்றுவிட்டார். சுப்பு கையில் பையுடன் சுற்றும் முற்றும் பார்த்தான். சற்று தூரத்தில் அப்பா வேகமாக வந்து கொண்டிருந்தார்.

****

சற்று தூரத்தில் பையன் நிற்கிறான். அடர்ந்த முடி சிலுப்பிக் கொண்டிருக்கிறது. அடர்ந்த புருவங்களுக்குள் கண்கள் கோலிக் குண்டுகள் போல உருள பார்த்துக் கொண்டிருக்கிறான். சற்று உயரம் குறைச்சலான இருபது வயது பையன். ஆனால், எப்போதும் நிமிர்ந்து நடக்கும் தோரணையால் அந்த குறைச்சல் கண்களுக்குத் தெரியாது. ஒரு அதிகாரியாக வேண்டியவன் என்ற நினைப்பு அவரை என்னவோ செய்தது. கட்டம்போட்ட சட்டையும் வேட்டியும் பையுமாக துறுதுறுவென்று நிற்கிறான். அருகில் சென்று கையிலிருந்த தித்திப்பு பொட்டலத்தையும் நூறு ரூபாய் பணத்தையும் அவன் பையில் வைத்தார்.

“தைரியமா இருந்துப்பியோ?”

“ம்.”

“சட்டுன்னு காரணம் புரியறதுக்குள்ள நண்பரா இருக்கவா விலகிடலாம். ஏன்னா…”

சுப்பு அவரின் தோளில் பட்டும்படாமலும் கைவைத்து, “என்னோட மனோதர்மத்துக்காக போறேண்ணா. மனுசாள்ண்ணா அப்படியும் இப்படியுந்தானே,”என்றான்.

அப்பா தலையாட்டிக்கொண்டு அவன் கையிலிருந்து பையை வாங்கினார். சுப்பு ரயிலில் ஏறிக்கொண்டதும் அண்ணாந்து பார்த்து பையைக் கொடுத்தார்.

“எதுன்னாலும் எனக்கு எழுது. நானிருக்கேன்,” என்ற அப்பாவின் குரலை எடுத்துக்கொண்டு ரயில் அவர் கண்களிலிருந்து மறைந்தது.

காற்றில் முடி பறக்க, மலர்ந்த முகமாய் பையை வாங்கிக்கொண்டு நிமிர்ந்து சிரித்த அவனை நினைத்து அவர் மனம் மலைக்க ரயிலடியிலிருந்து நடந்தார்.

காவிரி ஈரத்தை, வெற்றிலைக் கொடிகளின் மணத்தை, நெல் வயல்களின் மினுமினுப்பை ரயில் கடந்து கொண்டிருந்தது.

-kamaladevivanitha@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button