அவளும் அருவியும்!
அவனுக்கு அந்த அருவியின் படம்
மிகவும் பிடித்திருந்தது….
அவனுக்குப் பிடித்ததால் அவளுக்கும் பிடித்தது…
அவர்கள் வீட்டின் வரவேற்பறையில்
வாகான சுவற்றில் அருவியை
வழிய விட்டார்கள்…
இரண்டொரு நாளில் படுக்கையறைக்கு
இடம் பெயர்ந்தது அருவி..
பின்னர் ஓர் நாள்
பார்த்து சலித்துப் போனதால்
உயிர்ப்பே இல்லை என்றும்,
அலுப்பூட்டுகிறதாகவும்,
அருவியைக் கழற்றி வைத்து விட்டான்..
இப்போதெல்லாம்
பிடித்த பாடலை முணுமுணுத்துக்கொண்டு
அருவிக்கரையில்தான் அவள்
சமைத்துக் கொண்டிருக்கின்றாள்….
அவனோ புத்தனின் தலையை
வரவேற்பறையில்
மாட்டிக் கொண்டிருந்தான்…
அவளும் அருவியும் சிரித்துக் கொண்டார்கள்!
*****
காலக்கோடு!
பெண்கள் படித்துறையில்
மஞ்சள் தேய்த்துக் குளிக்கும் அக்காள்கள்
நின்று குளிக்க மாரளவு நீரில்லாமையால்
படித்துறைக்கு வருகிறதில்லை போல…
அல்லி பூத்த குளமெல்லாம்
அமலை பூத்திருக்கு!
மீறி வருகின்ற பெண்கள்
செல்போன் திரைகளில் தூர தேசங்களில் கூட
உடை மாற்றப் படி தாண்டினர்…
முகம் காட்டாத நீரின்
காட்டாமணக்கு செடிகளின் மீது
விடாய் உறிஞ்சு பஞ்சு கொணர்ந்து
இரையென்ற பிறழ்வில் கொத்திக் கொண்டிருக்கின்றது
பஞ்சக்காக்கை ஒன்று!
முனி பாய்ந்ததாய் சொல்லப்பட்ட கிணற்றில்
மணல் பாய்ந்து கருவேலம் முள் நெரித்ததில்,
ரகசியமாய் ஆணவ கொலையுண்டு
புதைக்கப்பட்ட பெண்ணின் மண்டையோடு
இரண்டாம் முறையாக கீறல் விட்டது!
முப்போகம் விளைந்த மண்ணில்
செல்போன் டவர்கள்……
சீமைச்சரக்குடன் ரசிகர் மன்றம் அமைக்கும்
கலர் கயிறு கட்டிய இளவட்டங்கள்…
எல்லைக்காவல் அய்யனார் சாமியின்
அருவாள் கருக்கு இன்னும் அப்படியேதானிருக்கு!
கடல் பாய்ந்த அவர்தம் கண்களில்
பெயின்ட் உதிர்ந்த இடத்தில் தான்
கொஞ்சம் பூ விழுந்திருக்கிறது….
*****
பேறு பெற்ற காலம் !
- பிள்ளை பிறந்த வீட்டிற்கொரு மணமுண்டு!
பால்வாசம்…
பவுடர் வாசம்…
சம்பிராணி புகை…
கொடிகளில் காயும் துணிகளில் கூட
வெயிலின் வாசம்…
நம் மூக்கைத் திறந்து விட்டு
குரல்வளையை நெரித்து விடுகிறது
ஒரே ஒரு சாண் உயர குழந்தை!
- பிள்ளை பெற்ற வயிற்றுக்கு
நாலு வரி கோடு நோட்டின் சாயல்…
மெல்ல எழுதி பழகும்
வரைய மறந்த விரல்கள்!
- தாலாட்டுப் பாடுகின்றவளைக் காணோம்..
அவசரமாய் மகரந்தம் பூசிக்கொண்டு
மற்றும் ஒருமுறை வயதுக்கு வருகிறது
மகரக்கட்டு உடைந்த அப்பனின் குரல்!