கவிதைகள்

கவிதைகள் – சௌவி

கவிதை | வாசகசாலை

அடையாளமற்ற நிழல்

இன்று என் நிழலை
நான் வீட்டிலேயே விட்டுவிட்டு
வந்து விட்டேன்
நிழல் தலை வலிக்கிறதென்று
சொன்னதால்

இரண்டு பேருந்து நிலையங்களில்
காத்திருந்து
மூன்று பேருந்துகள் மாறிப் பயணித்து
அலுவலகம் வந்தாயிற்று

பயணிக்கையிலோ
பேருந்து நிலையத்தில் காத்திருக்கையிலோ
யாரும் என்னிடம்
என்னோடு வராத
என் நிழலைப் பற்றி
விசாரிக்கவேயில்லை

அலுவலகத்தில்
மதிய உணவகத்தில்
சாயங்காலம் விளையாட்டு மைதானத்தில் என எங்குமே
யாரும்
வராத என் நிழலைப் பற்றிக்
கேட்கவேயில்லை

எல்லோரோடும்
அவரவர்களின் நிழல்கள்
சென்று கொண்டிருந்தன
நான் மட்டும் நிழலற்று
இருப்பதைப்பற்றி
யாருக்கும் எந்தக் கேள்வியுமில்லை

அவரவர்களின் நிழல்களைப் பற்றியே
கவலைப்படாதவர்கள்
என்னுடைய நிழலைப் பற்றியா
கேட்கப் போகிறார்கள்?

வழக்கத்திற்கு மாறாக
ஒரு மணிநேரம் தாமதமாகவே
இரவு வீட்டுக்குப் போனேன்
வீட்டில் என் நிழலைக் காணவில்லை

நான் திரும்புவது தாமதமானதும்
ஏன் இன்னும் வரவில்லையென
என்னைப் பார்த்து வருவதாக
ஒரு மணிநேரத்திற்கு முன்பே
வீட்டிலிருந்து
வெளியேறிப் போய் விட்டது நிழல்

*****

முளைக்காத தானியங்கள்

மாலையில்
ஒரு நட்சத்திரத்தைப் பார்த்ததும்
மலையின் மேல் விரித்து வைத்திருந்த
வெயிலைச் சுருட்டிக்கொண்டு ஓடும்
சூரியனை
தைரியசாலி என்று
ஒப்புக் கொள்ள முடியவில்லை

சூரியனைத் தொடவே முடியாது
சூரியனைப் பிடிக்க முடியாது
என்றெல்லாம் சொன்னீர்கள்
எங்கள் ஊர்க்குளம்
காலையிலிருந்து மாலை வரை
தைரியமாகச் சூரியனைப் பிடித்து
தண்ணீருக்குள்
தினமும் சிறை வைக்கிறது

ஆறாத காயங்களென்று
கைவிடப்பட்ட காயங்களை
ஆகாய மேகங்கள்
தன்னோடு அழைத்துப்போய்
வைத்தியம் செய்து
ஆற்றிவிடுகின்றன

ஆலமரத்திலிருந்து
புறப்பட்டுப்போன பறவையொன்று
கடலுக்குள்ளிருந்து
சூரியனை இழுத்து வந்து
ஆகாயத்தில் பொருத்திவிட்டு
விடிந்துவிட்டது எனக் கத்துகிறது

பூவரச மரத்தில்
சாயங்காலம் அமர்ந்திருந்த பறவையொன்று
சூரியனைக் கொத்திக் கொத்தி
விரட்டிவிட்டு
இருளை அறிவிக்கிறது

கருவேல மரத்திலிருக்கும்
தூக்கம் வராத பறவையொன்று
கருத்த வானத்தில்
தானியங்களைச்
சேமித்து வைக்கிறது

*****

பொய்கள் நகர்த்தும் நாள்

காலையில் எழுந்து
கழிவறைக்குள் சென்று வந்த அம்மா
‘சிகரெட் குடித்தாயா?’ எனக் கேட்டாள்
இல்லையெனப் பொய் சொன்னேன்

அப்பாவைப் பார்க்க வந்துவிட்டு
அதோடு போகாமல்
என்னிடம் வந்து
‘என்ன படித்திருக்கிறாய்?’ எனக்கேட்ட
அப்பாவின் நண்பரிடம்
எம்.எஸ்சி எனப் பொய் சொன்னேன்

காலையிலிருந்து மதியம் வரை
காசு வைத்துச் சீட்டாடிவிட்டு
மத்தியானம் சாப்பிட வீட்டுக்கு வந்த பொழுது
‘எங்கே போனாய்?’ எனக் கேட்ட அப்பாவிடம்
கிரிக்கெட் விளையாடப் போனதாகப்
பொய் சொன்னேன்

சாயங்காலம்
மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து
நான்கு தெரு தள்ளியிருக்கும்
பிங்க் நிற வண்ணமடித்த வீட்டில்
வாடகைப் பெண்ணை
இரண்டு முறை புணர்ந்துவிட்டுத்
திருப்தியாய் திரும்பிக் கொண்டிருக்கையில்
அலைபேசியில் அழைத்து
‘எங்கிருக்கிறாய்?’ எனக் கேட்ட காதலியிடம்
அம்மாவுடன் கோயிலுக்கு வந்திருப்பதாய்
பொய் சொன்னேன்

எப்போதும் இருமிக் கொண்டேயிருக்கும் தாத்தா
‘ரொம்ப நெஞ்சு வலிக்கிறது
நாளை ஆஸ்பத்திரிக்கு
அழைத்துப் போக முடியுமா?’
எனக் கேட்டார்
நாளை இண்டர்வியூ இருக்கிறதெனப்
பொய் சொன்னேன்

இண்டர்வியூ இருக்கிறதென்ற
பொய்யை
அம்மாவிடம் சொல்லி
இருநூறு ரூபாய் வாங்கிக்கொண்டு
சாப்பிட்டுவிட்டுப் படுத்துவிட்டேன்
காலையில் நேரத்திலேயே
எழுப்பிவிடச் சொல்லி

நாளெல்லாம் பொய்களென்றாலும்
உறக்கமென்பது
உண்மையாக வந்து விடுகிறது

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button