இணைய இதழ்இணைய இதழ் 71தொடர்கள்

கடலும் மனிதனும்; 38 – நாராயணி சுப்ரமணியன்

தொடர் | வாசகசாலை

மிதக்கும் நகரங்கள்

னித வரலாற்றில் சில வர்க்கப் போக்குகள் விநோதமானவை. விமானம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னால் தூர தேசங்களுக்குச் செல்லவேண்டுமானால் கப்பல் பயணம் மட்டும்தான் ஒரே வழி. வான்வழிப் பயணம் சாத்தியமானபின்பு அந்த நிலை மாறியது. தங்களது நேரத்தையும் வசதியையும் பொறுத்து மக்கள் பயணத்தைத் தேர்ந்தெடுக்கத் தொடங்கினர். ஒரு காலத்தில் விமானப் பயணம் என்பது பணக்காரர்களுக்கு மட்டுமே உரித்தானது என்ற சூழல் இருந்தது. இப்போது அந்த நிலை மாறிவிட்டது. கிட்டத்தட்ட அனைவருமே நெடுந்தூரம் என்றால் விமானத்தில் பயணிக்கின்றனர், கப்பல் பயணங்களை மக்கள் அவ்வளவாக விரும்புவதில்லை. விமானத்துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை இதற்கு ஒரு காரணமாக சொல்லலாம்.

உலகம் விமானத்தை நோக்கி நகர்ந்தபின்புவானில் பறப்பது பணக்காரர்களின் தனித்தன்மைஎன்ற சிறப்பு பறிபோய்விட்டது. ஆகவே பெரும்பணக்காரர்கள் மீண்டும் கப்பலுக்குத் திரும்பினார்கள். “சொகுசு கப்பல் பயணம்” -Luxury Cruise Ships என்பதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். இதுபோன்ற பயணம் எப்படி இயங்கும் என்பதை தமிழில் வெளிவந்தமன்மதன் அம்புதிரைப்படத்தில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். கிட்டத்தட்ட ஒரு ஐந்து நட்சத்திர விடுதியைப் போன்ற பிரம்மாண்டமான சொகுசுக் கப்பலில் நாம் பயணிக்கலாம். அடுத்ததடுத்து அந்தக் கப்பல் பல்வேறு நாடுகளின் துறைமுகங்களுக்குச் செல்லும், அங்கே நிற்கும். கப்பலில் இருந்து இறங்கி நாம் நாடுகளை சுற்றிப் பார்த்துக் கொள்ளலாம். கப்பலிலேயே திரையரங்கம், நீச்சல்குளம், பலவிதமான உணவு விடுதிகள், ஸ்பா வசதி, கலையரங்கம், உடற்பயிற்சிக் கூடம் என எல்லாமே இருக்கும். சொகுசுக் கப்பல்கள் ஒரே நேரத்தில் பயண வாகனங்களாகவும் சொகுசான தங்குமிடங்களாகவும் இருக்கும். இப்படிப்பட்ட பயணங்களுக்குப் பல லட்சங்கள் செலவாகும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.

தொடக்கத்தில் இதுபோன்ற சொகுசுக் கப்பல்களின் அளவு சிறியதாகவே இருந்தது என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். தொழில்நுட்பமும் பொறியியலும் மேம்படவே, இந்தக் கப்பல்களின் அளவும் பெரிதாகிக் கொண்டே போனது, இப்போது பல ஆயிரம் பேர் பயணம் செய்யக்கூடிய, எல்லா வசதிகளும் படைத்த ராட்சதக் கப்பல்கள் வந்திருக்கின்றன. “இவற்றைக் கப்பல்கள் என்றுகூட சொல்ல முடியாது, இவை மிதக்கும் நகரங்கள்என்கிறார்கள் அந்தத் துறையைச் சேர்ந்தவர்கள். சொகுசுக்காக மட்டுமே இழைத்து இழைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்தக் கப்பல்களால் ஏற்படும் சூழல் பாதிப்புகளைப் பற்றித்தான் இப்போது விவாதிக்கப் போகிறோம்.

இந்த சொகுசுக் கப்பல்களில் பயன்படுத்தப்படும் எரிபொருள் ஒரு தலையாய பிரச்சனை. இதில் “Bunker fuel” என்ற ஒரு வகை எரிபொருள்தான் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த பங்க்கர் எரிபொருள் என்பது, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பின்போது மீதமிருக்கும் சில பொருட்களை வைத்து உருவாக்கப்படும் தார் போன்ற பிசுபிசுப்பான ஒரு எரிபொருள். எரிபொருள்களிலேயே மிக அதிகமான மாசுபாட்டை ஏற்படுத்தக்கூடியது இந்த பங்க்கர் எண்ணெய்தான். இது எரியும்போது பல நச்சுப் புகைகள் வெளியாகின்றன. குறிப்பாக அதிக அளவில் சல்ஃபர் டை ஆக்சைடு வெளியாகிறது. இது மனிதர்களுக்குக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது, இந்த சல்ஃபர் டை ஆக்சைடு சூழலையும் பாதிக்கும்.ஒரு சராசரி சொகுசுக் கப்பலில் இருந்து வெளியாகும் சல்ஃபரின் அளவு, கார்களிலிருந்து உமிழப்படும் சல்ஃபரின் அளவை விடப் பத்து மடங்கு அதிகம். பங்க்கர் எரிபொருள் பயன்பாடே இதற்கு முக்கியக் காரணம். இந்த எரிபொருள் ஏற்படுத்தும் பாதிப்புகளைப் புரிந்துகொள்வதற்காக சில புள்ளிவிவரங்களை வல்லுநர்கள் முன்வைக்கிறார்கள். அவற்றைப் படித்தால் அதிர்ச்சியாக இருக்கிறது.

முதலாவது, இந்த பங்க்கர் எரிபொருளால் வரும் சல்ஃபர் மாசுபாடு பற்றியது. எரிபொருளை எரித்தபடி பயணித்துக்கொண்டிருக்கும் ஒரு சொகுசுக் கப்பலின் மேற்தளத்தில் வீசும் காற்றில், மிக அதிகமான துகள்மப் பொருள் (Particulate Matter) கலந்திருக்கிறதாம். காற்று மாசுபாட்டில் இந்தத் துகள்ம்ப பொருட்கள் முக்கியமான அங்கம் வகிக்கின்றன. ஒரு சராசரி சொகுசுக் கப்பலின் மேல் தளம், அதிக காற்று மாசு கொண்ட பெய்ஜிங் போன்ற பெரு நகரங்களுக்கு எந்த வகையிலும் குறைந்தது இல்லை என்கிறது ஒரு ஆய்வு! இந்தக் காற்றில் இருக்கும் நச்சுப் பொருட்களால் பல வகை புற்றுநோய்கள், இதயக் கோளாறுகள் ஆகியவை ஏற்படலாம்.”நகரத்தின் நெருக்கடியிலிருந்து விடுபட்டு இயற்கைக் காற்றை சுவாசிப்பதுஎன்ற நோக்கத்தில் பல லட்சம் செலவு செய்து பயணம் மேற்கொண்டு கப்பலின் மேற்தளத்துக்கு வந்து நிற்கும் பயணிகளின் நிலை என்னவாகும்?! 

இந்தக் கப்பல்கள் பயணிக்கும் துறைமுகங்கள்கூட கப்பலின் உமிழ்வால் பாதிக்கப்படுகின்றன, அந்தக் கடலோர நகரங்களில் வாழும் மக்கள் காற்று மாசால் நோய்வாய்ப்படுகிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடலோர நகரங்களில் உள்ள காற்று மாசுபாட்டில் குறைந்தது பத்து விழுக்காடு கப்பல்களில் இருந்து வருவதுதானாம். 2020ம் ஆண்டு சர்வதேச கப்பல் கூட்டமைப்பு சில விதிமுறைகளை முன்வைத்தது. ஆகவே நேரடியான சல்ஃபர் டை ஆக்சைடு உமிழ்வு கொஞ்சம் குறைந்திருக்கிறது என்றாலும் இந்தப் பிரச்சனை முழுவதுமாகத் தீரவில்லை என்கிறார்கள் வல்லுநர்கள். இன்னும் எரிபொருள் பயன்பாட்டில் பல மாற்றங்கள் வரவேண்டும் என்று அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

இத்தனை பாதிப்பு ஏன் வருகிறது?

இந்தக் கப்பல்களின் அளவுதான் பாதிப்புக்கான முக்கியக் காரணம். மிதக்கும் நகரங்களாக இருக்கும் இந்தக் கப்பல்களில் பல்வேறு வசதிகள் தரப்படுகின்றன. எல்லாவற்றுக்கும் ஆற்றல் தேவைப்படுகிறது. ஜொலிக்கும் விளக்குகளோடு இரவில் ஒரு இசைக்கச்சேரி நடக்கிறது என்றால் அந்த மின்சாரத்தை உருவாக்கவும் நாம் எரிபொருளைத் தானே பயன்படுத்த வேண்டும்?! இப்படி ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் எரிபொருள் தேவைப்படும். அந்த அதீத எரிபொருள் தேவைதான் பாதிப்புக்கான முக்கியக் காரணம். ஒரு சராசரி சொகுசுக் கப்பல், ஒரு நாளைக்கு மட்டும் 250 டன் எரிபொருளைப் பயன்படுத்துகிறதாம்! ஒரு நபர் இந்த சொகுசுக் கப்பலில் பயணித்தாலே, அவரால் ஏற்படும் கரிம உமிழ்வு மூன்று மடங்கு அதிகரிக்கிறது! ஒரு நாளைக்கு மட்டும் இந்த சொகுசுக் கப்பல்களால் ஏற்படும் கரிம உமிழ்வுகளைக் கணக்கிட்டால் தலைசுற்றுகிறது. ஜெட் எஞ்சின் உமிழ்வுகளோடு ஒப்பிட்டால்கூட ஒரு சொகுசுக் கப்பலின் உமிழ்வு மூன்று மடங்கு அதிகம்! ஒரு நாளைக்கு ஒரு கப்பல் மட்டும் வெளியிடும் உமிழ்வுகள், 12,000  கார்களுக்கு சமம்

இந்தக் கப்பல்களிலிருந்து கடலுக்குள் ரகசியமாகக் கொட்டப்படும் கழிவுகளின் அளவும் மிகவும் அதிகம். ஒரு சராசரி சொகுசுக் கப்பல், கடலுக்குள் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் கேலன் கழிவுநீரை சுத்திகரிக்காமலேயே கடலுக்குள் கொட்டுகிறது! இது பத்து நீச்சல்குளங்களின் அளவுக்கு ஒப்பானது. எந்தவிதமான சுத்திகரிப்பும் இல்லாமலேயே இந்த சாக்கடை நீர் கடலுக்குள் கலந்தால் என்ன ஆகும் என்று கற்பனை செய்து பாருங்கள். இதைத் தவிர, பயன்படுத்தப்பட்ட நீர் (இதை சாம்பல் நீர் என்பார்கள்) போன்ற பிற கழிவுகளும் கடலுக்குள்தான் கொட்டப்படுகின்றன. கப்பல்களில் வீணாகும் உணவுப் பொருட்கள் மற்றும் திடக்கழிவுகளும் கடலுக்குள்தான் கொட்டப்படுகின்றன. கடலில் இருக்கும் திடக்கழிவுகளில் குறைந்தது 24 விழுக்காடு இதுபோன்ற கப்பல்களில் இருந்து வந்தவைதான். குறைந்தபட்சம் இந்தக் கழிவுகளில் இருக்கும் ப்ளாஸ்டிக்கைப் பிரித்தெடுப்பதற்குக்கூட இந்தக் கப்பல்கள் முயற்சி செய்வதில்லை. எல்லா குப்பைகளும் அப்படியே வீசப்படுகின்றன.

இந்த சொகுசுக் கப்பல்களில், எரிபொருள் பயன்பாடு முடிந்தபிறகு எண்ணெய் கலந்த ஒரு திரவம் உருவாகும், ஒவ்வொரு நாளும் டன் கணக்கில் உருவாகும் இந்தத் திரவம் எங்கே போகிறது என்று நினைக்கிறீர்கள்? அதுவும் கடலுக்குள்தான் கொட்டப்படுகிறது! இதைத் தவிர, கப்பலில் பயன்படுத்தப்படும் பேட்டரிகள், கப்பலுக்குள் நடக்கும் சுத்திகரிப்புப் பணிகளில் மீதமாகும் வேதிப்பொருள் நிறைந்த தண்ணீர் என்று எல்லாமே கடலுக்குள் சென்று சேர்கின்றன. இந்தக் கப்பல்களில் இரவு நேரங்களில் பயன்படுத்தப்படும் ஆற்றல்மிக்க விளக்குகளால் கடற்பறவைகளின் வலசை பாதிக்கப்படுகிறது என்பதையும் ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன.இந்த சொகுசுக் கப்பல்களால் மிக அதிக அளவில் ஒலி மாசுபாடும் ஏற்படுகிறது. ஒலியை வைத்தே வழி கண்டுபிடிக்கும் திமிங்கிலம் போன்ற கடல் பாலூட்டிகளை இது கடுமையாக பாதிக்கிறது. அது மட்டுமில்லாமல், சரியாக மிதப்பதற்கு இந்தக் கப்பல்களில் பயன்படுத்தப்படும் அடிபாரத் தண்ணீர் (Ballast water) அயல் ஊடுருவி இனங்களின் பரவலுக்குக் காரணமாக அமைகிறது, இந்த அடிபாரத் தண்ணீரின் பாதிப்புகள் பற்றி முன்பே ஒரு கட்டுரையில் பார்த்திருக்கிறோம். 

இந்த சொகுசுக் கப்பல்களில் மோதுவதால் திமிங்கிலங்கள் போன்ற கடல் பாலூட்டிகள் ஊனமடையவும் இறக்கவும் வாய்ப்பு உண்டு. ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கிலும் சொகுசுக் கப்பல்களில் மோதி 20,000 திமிங்கிலங்கள் இறக்கின்றன என்கிறது ஒரு தரவு! இறப்பைத் தாண்டி, துடுப்புகளில் காயமடையும் திமிங்கிலங்கள், காயத்தால் தொற்று ஏற்பட்டு நோய்வாய்ப்படும் திமிங்கிலங்கள் போன்றவற்றையும் கணக்கெடுத்தால் பாதிப்பு இன்னும் அதிகரிக்கும்.

கடலில் நடக்கும் இந்த ரகசிய வேலைகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கலாக, இந்த சொகுசுக் கப்பல்கள் தரைதட்டும்போது நேரடியாகவே கடல்சூழல் பாதிக்கப்படுகிறது. 2015ம் ஆண்டு ஜெனித் என்ற ஒரு சொகுசுக் கப்பல் கேமன் தீவுகளின் அருகில் கரைக்கு வரும்போது பல பவளத்திட்டுகள் சேதமாயின. 2017ம் ஆண்டில் எம்.எஸ் கலிடோனியா (MS Caledonia) என்ற கப்பல் இந்தோனேசியாவில் தரைதட்டியது. இந்த விபத்தால் 17,222 சதுர அடி பரப்பிலான பவளத்திட்டுகள் முழுமையாக சேதமடைந்தன! ஒரு பவளத்திட்டு உருவாவதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகலாம் என்ற பின்னணியில் யோசித்துப் பார்த்தால் இது மிகப்பெரிய சூழல் பேரிடர் என்று தெரியவரும். இதுபோன்ற நிகழ்வுகளாவது வெளியில் தெரிகின்றன. ஆனால் ஆளில்லாத சிறு தீவுகளின் கரையில் இந்தக் கப்பல்களால் என்ன பாதிப்பு வருகிறது என்பது யாருக்கும் தெரிவதேயில்லை.

சொகுசுக் கப்பல்களால் இத்தனை பாதிப்புகள் ஏற்படுகின்றனவே, இவற்றை யாரும் கட்டுப்படுத்த மாட்டார்களா? என்ற கேள்வி எழலாம். அதற்கான ஒரே பதில், “சட்டத்தின் ஓட்டைகள்” என்பதுதான். பெரும்பாலான சொகுசுக் கப்பல்கள் நாடுகளின் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட சர்வதேசக் கடற்பகுதியில் இயங்குகின்றன. இங்கு என்னென்ன சட்டங்கள் செல்லுபடியாகும் என்பதில் புகைமூட்டமான சூழலே நிலவுகிறது, ஒருவேளை சில சட்டங்கள் இருந்தாலும் அவற்றை அமல்படுத்துவது கடினம். இதை சொகுசுக் கப்பல் நிறுவனங்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. இந்த சொகுசுக் கப்பல்களில் நடக்கும் மனித உரிமை மீறல், தொழிலாளர் சுரண்டல், குற்றங்கள் போன்றவையும் இப்படித்தான் மூடி மறைக்கப்படுகின்றன.

கொரோனா கொள்ளை நோயால் ஊடரங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டபோது இந்த சொகுசுக் கப்பல்கள் இயங்கவில்லை. அந்த சூழலில் கடலே அமைதியாக இருந்தது என்று பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. குறிப்பாக ஒலி மாசுபாடு இல்லாததால் பல திமிங்கிலங்கள் சுதந்திரமாகப் பாட்டுப் பாடிக்கொண்டு நீந்தியிருக்கின்றன. ஊரடங்கு முடிந்தபின்பு மீண்டும் சொகுசுக் கப்பல்களின் எண்ணிக்கை அதிகமாகத் தொடங்கியபோது, “ஊரடங்கில் இவை இயங்காமல் இருந்தன, அதுவே சுற்றுச்சூழலுக்கு நல்லது. அந்தப் போக்கையே தொடரலாம்” என்று சூழலியலாளர்கள் தெரிவித்தனர். அந்த அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது.

இந்தத் துறையில் மிகவும் மெதுவாக சில வரவேற்கத்தக்க மாற்றங்கள் வந்திருக்கின்றன.  2022ம் ஆண்டில் பேட்டரியால் இயங்கக்கூடிய, சூழலை மாசுபடுத்தாத ஒரு  சிறு கப்பல் நார்வே நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. 400 பேர் மட்டுமே இதில் இப்போதைக்குப் பயணிக்கலாம் என்றாலும் அடுத்த சில ஆண்டுகளில் பெரிய கப்பல்களிலும் இந்த பேட்டரி முறை வந்துவிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். கப்பலுக்குள்ளேயே கழிவுநீரை சுத்திகரிப்பது, ஆற்றலை சரியாகப் பயன்படுத்துவது, திடக்கழிவு மேலாண்மை ஆகியவற்றை சொகுசுக் கப்பல்களில் உறுதி செய்யவேண்டும். உலகம் போகிற போக்கைப் பார்த்தால் இந்த சொகுசுக் கப்பல்களின் எண்ணிக்கை அதிகமாவதற்கே சாத்தியம் அதிகம். ஆகவே அவற்றை முற்றிலும் தடுத்து நிறுத்துவது முடியாத காரியம். குறைந்தபட்சம் நெறிமுறைப்படுதத்தவேண்டும் என்று வேண்டுமானால் நாம் கோரிக்கை வைக்கலாம். விதிகளைப் பின்பற்றாவிட்டால் பல லட்சம் டாலர் அபராதம் என்று பயமுறுத்தினால் சொகுசுக் கப்பல் நிறுவனங்கள் தங்கள் வழிமுறைகளை சரிசெய்துகொள்ள வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இதை அமல்படுத்துவது யாருடைய பொறுப்பு என்பதில் கடுமையான குழப்பம் நிலவுகிறது. சர்வதேசக் கடற்பகுதியில் உள்ள வளங்களுக்காகப் போட்டி போடும் நாடுகள் அதைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்கத் தயாரில்லை. பூனைக்கு யார் மணி கட்டுவது?!

சொகுசுக்காகப் பயன்படும் கப்பல்களால் ஏற்படும் பாதிப்பு இது. சிலநேரம் அளவில் சிறிய பொழுதுபோக்குகள்கூட கண்ணுக்குத் தெரியாத பாதிப்புகளைப் பின்னணியில் ஏற்படுத்திவிடும். அப்படிப்பட்ட கடல் பாதிப்பும் நடந்திருக்கிறது. அது என்ன கதை? 

(தொடரும்…)

nans.mythila@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button