கவிதைகள்
Trending

கவிதை- தமிழ் உதயா

தமிழ் உதயா

புன்னகையின் நுரை

000
பகட்டுக்கு அடியில் உறங்கும் நீ
உதடசைக்காமல் உரையாடுகிறாய்
நானோ மனிதர்களுக்கு அப்பால் சொற்களாகிக் கொண்டிருந்தேன்
ஆளுயரக் கண்ணாடியில்
முலாம் பூசிக்கொண்டிருக்கையில்
நீயோ முகத்தை அழித்துக் கொண்டிருந்தாய்
ஆற்றின் குறுக்கே நுரைகள் தேங்குவதில்லை
ஆதலால் கரைகள்
நீரைத் தேக்குவதுமில்லை
சேற்றில் மழை புதையப் புதைய
மெருகேறும் செம்பாட்டுமண்ணின் கறை படிந்திருக்கும்
என் உள்ளங்கால் வெடிப்பில்
துயரத்தின் ஆறுதல் என்பது
உயிருள்ள கைகளின்
மகிழ்ச்சியின் எதிரொலியே

உதிராத பூக்களை
ஒருபோதும்
முத்தமிடுவதில்லை நிலம்

000

ஒக்ஸ்போட் தெருக்கள்
வவுனிக்குள வீதி திறந்து விடுவதுபோல
ஆங்காங்கே வயதான பசுஞ்சாணிகளின் வாசம் வீசும்
ஏழாவது வருடத்தில் முளைக்கும் புற்கள்
என்ன மஞ்சள் நிறத்திலா முளைக்கும்
எப்போதும் போல பச்சையம் அடர்ந்த காடு
ராத்திரி மழையில் தளிர்த்திருந்தேன்
பேருந்திற்கு காத்திருக்கும் கால்களின் முன்
ஊஞ்சல் உற்சவம் போல
முனகலுடன்
பூக்கள் அசைகின்றன
மெழுகுவர்த்திச்சொட்டு எரியும் வெளிச்சம் துளிர்க்கிறது
தேர் வடங்களை
உருவி விட்டதுபோல
பாதைகள் உயிருள் நெளிகின்றன
காறை பெயர்த்து
தூசு படிந்த சிலுவைகள்
அது கல்லறைகளின் சதுக்கமாக இருக்கிறது
ஒளியின் ரகசியம் கசியும்
நிழல்களோடு நின்றிருந்தேன்
எப்போதாவது
எனது குரல் நிலைக்கண்ணாடியிலும் ஒலிக்கிறது
இடது வலப்புறமாகவும்
வலது இடப்புறமாகவும்.

அடுக்களைச் சட்டிக்குள்
தெரியும் நிலாவை
கோடிட்டு மறைக்கலாமா என்ன

000

முதுகில் பெயர் சுமந்தபடி இருக்கிறது சிலுவை
இதயத்தை துளைத்த ஆணியை
நச்சரிக்காத மூங்கில் பாடுகிறது
எத்தனையோ முகங்களை
காட்டிய கண்ணாடி
மறுபடியும் திரள்கிறது
தன்னைக் காட்டிக்கொள்ள
நிலக்கீழ் ரயில் பாதை
இயல்பான புன்னகையுடன் நகர்கையில்
தேம்ஸில் லண்டன் நனைந்து கொண்டிருந்தது
ஒரு கீறல் அல்லது நசுங்கல் மாதிரி
ஒரு தொங்குகிறகை
ஒரு வாடல்முகம்
அத்தனைக்கும் மேல்
வளைந்து நிமிர்ந்த ரயில்
கெட்டிக்காரத்தனத்தை எல்லாம்
கொட்டிக் கடக்கவும்
முன் பக்கத்து இருட்டு
வெட்கத்தில் தலை குனிகிறது
கையை மார்போடு ஆட்டி ஆட்டி
எச்சிலூதிக் கொண்டிருந்த
குழந்தைக்கு
முதுகுப்பக்கத்தை காட்டி நெளிகிறது
கூட்டை எழுதி எழுதி தன்னை அழிக்கிற பட்டுப்பூச்சிக்கு
ஒரு மல்லிகைக்கொடியைப்
பரிசளித்தேன் நான்

000

எனது அலைபேசி எண் என்னுடையதில்லை
ஆனால் நான் மூன்றாவது முறையாக கிடைத்து விடுகிறேன்
இன்றைய காலை என்னுடையதில்லை
எனினும் இப்போதையுடைய பயணமும் என்னுடையதில்லை
நடுங்கும் விரல்கள் என்னுடையதில்லை
எழுதுவதற்காக
என்விரல்கள் நடுங்குவதுமில்லை
உங்களை நோக்கிய துப்பாக்கி என்னுடையதில்லை
அதன் தோட்டாக்களும்
என்னுடையதில்லை
இப்போதுள்ள பதற்றமும் என்னுடையதில்லை
அத்தனை கிண்ணங்களிலும்
வழியும் தண்டனையில்
அதன் விளிம்பு அதிர்வதற்கு
காரணமும் என்னுடையதில்லை
அது ஒரு புன்னகையின் நுரைத்தல்
என்பதைத் தவிர
வேறேதும் புரிவதாயில்லை
ஓர் ஊதல் ஊதிவிட்டு அருந்திப்பாருங்கள்
ஒவ்வொரு மிடறிலும் லாவகமாக
துடைத்துக்கொள்வீர்கள் என்னை

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button