சிறுகதைகள்

தாயம் ஒன்னு – சீராளன் ஜெயந்தன்

சிறுகதைகள் | வாசகசாலை

கொரோனாவுக்கு முந்தைய காலம். அதிகாலை மூன்றரை மணிக்கு ஒரு வேலையாய் கிளம்பி வெளியே செல்லும்போது, உணவுத் தூதுவன் ஒருவன் தனது கம்பெனி தந்த கலர் பனியனில், ஒரு வீட்டின் கதவைத் தட்டிக்கொண்டிருந்தான். அங்கு நின்று அவனை, “இந்நேரத்துக்கு என்னடா ஆர்டர்?” என்று விசாரிக்கத் தோன்றியது. ஆனால், அது அடுத்தவன் விஷயத்தில் மூக்கை நுழைப்பது என்று நகரம் எனக்கு கற்பித்திருந்தது.

சரி, அதிகாலை மூன்றரை மணிக்கு எனக்கு என்ன வெளியே வேலை? நான் புதிதாய் ஆரம்பித்திருக்கும் தொழிலுக்கு விளம்பரம் தவிர்க்க முடியாததாகிவிட்டது. ஒரு பத்தாயிரம் `பிட் நோட்டீஸ்’ அடித்து வைத்திருக்கிறேன். அதை மறுநாள், ஞாயிறு காலை செய்தித்தாள் விநியோகிப்பவனிடம் கொடுத்துவிட்டால், அவன் செய்தித்தாளோடு சேர்த்து பரிமாறிவிடுவான். அதற்கு ‘பேப்பர் இன்ஸர்ட்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஓர் இடத்தில் சரியாக சென்று பொருந்திக்கொள்வதில் ஆங்கிலத்துக்குத்தான் எத்தனை வசதியிருக்கிறது!

“காலை நாலரை மணிக்கு தண்டீஸ்வரம் நிறுத்தத்தில் சென்று பார்த்தால், எல்லா பேப்பரும் வந்து இறங்கி, பிரித்துக்கொண்டிருப்பார்கள். அந்தந்த ஏஜென்டிடம் பேசி நேரடியாகக் கொடுத்துவிட்டால், சரியாகச் சென்று சேர்ந்துவிடும். இல்லையென்றால் நடுவே ஒரு புரோக்கர் வந்து, `மொத்தமா நான் பார்த்துக்குறேன்’ என்பான். கொடுத்துவிட்டால், எவ்வளவு போட்டான், எவ்வளவு தூக்கி குப்பையில் போட்டான் என்று தெரியாது” என்றெல்லாம் எனக்கு அறிவுரைகள் கொடுத்திருந்தார்கள்.

ரொம்ப ஜாக்கிரதையாகத்தான் சென்றேன். ஆனால், முதலில் மாட்டிக்கொண்டது புரோக்கரிடம்தான். அவனுடைய நிமிர்ந்த தோற்றமும், தோரணையும், ஒரு தாசில்தார், அவருடைய அலுவலக வாசலில் நிற்கிற ஒரு கர்வத்தோடு இருந்தது. என்னை சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள் என்று சொல்வதற்காக கழுத்தில் ஒரு தங்க செயின்.

“என்னா சார்?”

“பிட் நோட்டீஸ் போடணும்,”

“என்னைக்கி?”

“நாளைக்கு சன்டே…”

“எத்தனை காப்பி சார்?”

“…… ம், …… ம் எத்தன காப்பி வேளச்சேரியில சர்க்குலேஷன்?” என்றேன்.

‘‘இங்கிலீஸ் பேப்பர் மட்டும் பத்தாயிரம் நோட்டீஸ் ஆயிடும்.’’

‘‘எனக்கு வேளச்சேரி முழுக்க கவராகணும். பத்தாயிரம் காப்பி அடிச்சிருக்கேன் போட்டிரலாமா?’’

‘‘போட்ரலாம் சார். நாளைக்கு காலைல ஒரு மூன்றரை, மூணே முக்காலுக்கு கொண்டுவந்துருங்க போட்டிரலாம்.’’

‘‘உங்க சார்ஜ் எவ்வளவு?’’

‘‘ஆயிரம் காப்பிக்கு முந்நூறு ரூபா சார்.’’

‘‘இருநூறுதானே சொன்னாங்க.’’

‘‘எந்தக் காலத்துல இருக்க சார்?’’

அதற்குள் ஏதோ ஒரு செய்தித்தாள் நிறுவனத்தின் வண்டி வரவே, அதை நோக்கி ஓடினான் அவன். தனியே நின்றிருந்தேன். கணக்குப் போட்டேன், பத்தாயிரம் காப்பிக்கு மூவாயிரம் ஆகும். ஏற்கனவே, பிரின்டிங் சார்ஜ் ஏழாயிரத்து ஐநூறு ஆகிவிட்டது. என்ன செய்வது, விளம்பரம் செய்துதானே ஆகவேண்டியிருக்கிறது.

சுற்றிலும் பார்த்தேன். சாலையின் இரண்டு பக்கமும் வாசலில் இடம் கிடைத்த கடைகளின் முன், வெவ்வேறு ஆட்கள் தரையில் அமர்ந்து செய்தித்தாள்களைப் பிரிப்பதும், அடுக்குவதும் கட்டுவதுமாய், சுறுசுறுப்பாய் வேறொரு உலகம் இயங்கிக்கொண்டிருந்தது. வேறு யாரிடமாவது கேட்கலாம் என்று சற்று தள்ளிப்போய், வேறு ஒரு குழுவிடம் கேட்டேன்.

அங்கே முன்னால் இருந்த ஒரு பையன், “தோ அங்க சுகி அண்ணா இருப்பாரு பார்ண்ணா. அவர்ட்ட கேளு” என்று நான் பேசிய அதே ஆளையே காட்டினான்.

இந்த அதிகாலை இருளையும், அதன் காலை மலருவதையும் பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டிருந்ததால் நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். இருள் தரும் தனிமையும், குளிரும், தெருவிளக்குகள் ஊற்றும் ஒளிக்கீற்றும், வாசல்களில் பரக் பரக்கிற விளக்குமாறும், சலக் சலக்கிற சாணித் தெளிப்பும், தூரத்தில் கேட்கிற சேவல் கூவலும்…

எதுவுமே இல்லை. நகரத்துக் காலை, வேகமாக விரைகிற இரவுப் பேருந்தும், முழு அலங்காரத்தோடு வேலையிலிருந்து திரும்புகிற மென்பொருள் மாதுவும், செய்தித்தாள் வாகனங்களும், அவற்றை சேகரிப்போரும், நேற்றிரவின் தொடர்ச்சியகவே இருந்தது இன்றைய காலையும். கடைகள் மட்டுமே மூடிக்கிடந்தன. ஒரு தேநீர் பருகலாம் என்று பார்த்தால் இன்னும் கடை திறக்கவில்லை.

வண்டியருகே வந்து தனியாக நின்றபோது, ஒரு சீனியர் சிட்டிசன் வந்தார். வயதானவர் என்றால், எண்பது வயது கிழவனாக நீங்கள் நினைத்துவிடக்கூடும். சீனியர் சிட்டிசன் என்றால், அறுவதுக்கு பக்கம் உள்ளவர். டக் செய்த சட்டையும், அயர்ன் செய்த பேண்டுமாக இருந்தார். ஓய்வுபெற்ற அரசு ஊழியராக இருக்கலாம்.

“சார், இங்க பேப்பர்ல நோட்டீஸ் போடறவங்க…” என்று இழுத்தார்.

“அதோ பாருங்க, வேன்லருந்து பேப்பர் இறக்கிட்டு இருக்காரு.”

“ஓ….” வெயிட் பண்ணணுமா என்பது போல் பார்த்தார்.

நீங்க சார்” என்றார்.

“நானும் நோட்டீஸ் போடத்தான் வந்தேன்.”

பிறகு, என்ன, எதற்கு, எவ்வளவு நோட்டீஸ், சார்ஜ் எவ்வளவு என்பதையும் பரிமாறிக்கொண்டோம். அவர் மடிப்பாக்கத்தில் சிறுவர்களுக்கான Day Care School ஆரம்பித்திருக்கிறாராம். “பார்க்கலாம்” என்று சொல்லிவிட்டுப் பிரிந்தேன்.

ஒரு தொழில் ஆரம்பித்துவிட்டு மக்களைச் சென்றடைவது இமாலய முயற்சியாக இருந்தது. சுமார் 42,000 காப்பிகள் இலவசமாக விநியோகிக்கப்படுவதாகச் சொல்லப்படும் ஓர் உள்ளூர் வாராந்திர செய்திப் பத்திரிகையில் விளம்பரம் கடந்த வாரம் கொடுத்திருந்தோம். ஒரே ஒரு தொலைபேசி அழைப்புகூட இல்லை. அந்த நிறுவனத்தின் மார்க்கெட்டிங் நபரிடம் விசாரித்தபோது, “சார், ஒரே ஒரு வாரம் கொடுத்தா போதாது சார். ஒரு நாலஞ்சு வாரம் தொடர்ந்து கொடுத்தாதான் மக்கள் மனசுல பதியும்” என்றார்.

அவர் சொன்னது சரி என்றுதான் பட்டது. அதற்காக அவர் ஒரு ‘inaugural offer’ இருப்பதாகவும், ஐந்து வாரங்கள் தொடர்ந்து கொடுத்தால், இவ்வளவு விலை என்றும் ஒரு கணக்கு சொன்னார். அவர் சொன்னது, இட்லின்னா ரெண்டு தோசைன்னா ஒண்ணு என்கிற கணக்கில் இருந்தது. மேலும் விசாரித்ததில், அந்த இலவச செய்தித்தாள் சரியாக வீடுகளை சென்று சேர்வதில்லை என்று தெரிந்தது. விநியோகிக்கும் பையன்கள், பாதியைச் சோம்பேறித்தனத்தால் மொத்தமாக எங்கோ போட்டுவிடுவதாகவும் சொன்னார்கள். பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் சீந்துவாரற்று வாசலில் கிடந்து சீரழியுமாம். அதைவிட மெகா பெரிய அபார்ட்மெண்ட்டுகளில் நூற்றுக்கணக்கில் கட்டு கட்டாக அங்குள்ள செக்யூரிட்டியின் அறைக்குள் கிடக்குமாம். விரும்பியவர்கள் மட்டும் எடுத்து படிப்பார்களாம். இரண்டாவது முறை அவர்களுக்கு விளம்பரம் கொடுக்கும் எண்ணத்தைக் கைவிட்டேன்.

இரண்டாயிரம் பிட் நோட்டீஸுகள் அடித்து, பிரின்டரிடம் அதற்கென வேலை பார்க்கும் ஒரு சிறுவனிடம் கொடுத்தேன். வீடு வீடாகச் சென்று சேர்த்துவிடுவானாம். அன்று எங்கள் தெருவிலேயே அவை இறைந்து கிடந்தது வருத்தமாய் இருந்தது. அன்று இரவு எட்டு மணிக்கு ஒருவர் போன் செய்து, “கோடு டிராயிங் ஸ்கூலா?” என்றார். சரி, ஏதோ என்கொயரி என்று சந்தோஷமாக “ஆமாம்” என்றேன். “சார், உங்க நோட்டீஸ் அப்படியே மொத்தமா ஒரு நூறு இருக்கும் சார். எங்க காம்பவுண்ட்டுக்குள்ள கிடக்கு” என்றார். “பாவம் சார், நீங்க காசப் போட்டு நோட்டீஸ் அடிக்கிறீங்க, இவனுக இப்படித்தான் மொத்தாக தூக்கியெறிஞ்சுட்டு போயிடறானுக” என்று ஆறுதல் சொன்னார். அவனுக்கு அதற்கான கூலி ஐநூறு ரூபாய் வாங்கியிருந்தான். எல்லாம் வீணாய் போனது. எந்தப் பலனும் இல்லை.

அடுத்த முயற்சி சுவரொட்டிகள். எனது பிரின்டரின் ஆலோசனைப்படி, ஆயிரம் சுவரொட்டிகள் அடித்தேன். அவற்றை ஒட்டும் வேலையையும் அவர் எடுத்துக்கொண்டார், தனிக் கூலியுடன். அந்த வேலையை அவர் இன்னும் முழுதாக முடிக்கவில்லை. என்றாவது தீடீரென்று ஏதாவது ஒரு பகுதியில் ஒரு ஐம்பது ஒட்டுவார். மறுநாள் வேறொரு ரியல் எஸ்டேட் விளம்பரம் அதை மூடிவிடும். “என்னங்க, ஒருநாள்கூட நிக்கலை” என்றால், “சார் இதாவது பரவாயில்லை, சில நேரம் நாங்க ஒட்டிக்கிட்டே வருவோம், பின்னால ஒருவன் மேல வேற போஸ்டர் ஒட்டிக்கிட்டே வருவான் என்ன பண்றது? கேட்கவே முடியாது” என்றார்.

ஆனால் சும்மா சொல்லக் கூடாது அந்த ஆயிரம் போஸ்டருக்கு ரெண்டு பேர் போன் செய்து ஸ்கூல் பற்றி விசாரித்தார்கள். வெவ்வேறு ரியல் எஸ்டேட்காரர்கள் தினமும் பெரிய பெரிய போஸ்டர்களாக மாற்றி மாற்றி ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் முன் நாம் எலிக்குஞ்சுதான்.

ஆனால் இந்த விளம்பரங்களால் யார் யார் தொடர்புகொண்டார்கள் என்பதுதான் வாழ்வின் அங்கதம்.

“சார், நாங்க ஒரு செக்யூரிட்டி சர்வீஸ் நடத்துறோம். உங்க ஆபீஸுக்கு செக்யூரிட்டி தேவையா?”

“சார், நான் ஒரு பத்திரிகை நடத்துறேன். எங்களுக்கு விளம்பரம் தரமுடியுமா?”

“சார், இன்டீரியர் டெகொரேட்டர் சார்!”

“சார், நான் ஒரு டிராயிங் டீச்சர், ஏதாவது ஓபனிங்க இருக்கா சார்?”

“சார், அந்த ஏரியாவில மழை பேஞ்சா வெள்ளம் வரும் சார். ஒரு இன்சூரன்ஸ் போட்டு வைச்சுடுங்க”
இப்படி அவரவர் தேவைக்கு என்னுடைய விளம்பரம் பயன்பட்டது.

எல்லாவற்றிக்கும் மேலாக மிகப் பிரபல ஆங்கில செய்தித்தாளின் மார்க்கெட்டிங் பெண்மணியும் கால் செய்தார். “சார், இப்போ 50% ஆஃபர் தர்றோம் சார். இன்னைக்கே கொடுத்திங்கன்னா அவெய்ல் பண்ணிக்கலாம் சார்’ என்றார். சரி விலை குறைவாகத் தெரிகிறதே என்று, “சென்னை முழுக்க கவர் ஆகிடுமா?” என்றேன்.

“இல்லை சார், இது அடையார் ஸோனுக்கு மட்டும்தான் சார்.”

“எந்த ஏரியா கவராகும்?”

“அடையார், திருவான்மியூர், தரமணி, பேபி நகர், வேளச்சேரி, கொட்டிவாக்கம், துரைபாக்கம்…”

“ஏம்மா, இதுல விஜய நகர், ஆலந்தூர், ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், மேடவாக்கம் எல்லாம் வராதா?”

“இல்ல சார், அது தாம்பரம் ஸோன்ல வரும். கிண்டி வரைக்கும் கவராகும் சார்.”

“வேளச்சேரியை இரண்டு ஸோனா பிரிச்சு வைச்சிருக்கீங்க. இப்ப நான் ரெண்டு ஸோனுக்கும் பணம் கட்டணுமா? என்னம்மா நியாயம் இது?”

“அது கம்பெனி பாலிசி சார்.”

“சரிம்மா, தேவைபட்டா கூப்பிடறேன்.”

இதற்கு நடுவே FB Page promotions குறைந்த விலையில் ஓடிக்கொண்டிருக்கின்றன.

கடைசியாக “சார், paper inserts கொடுக்கலாம் சார்” என்றார் என் பிரின்டர்.

“எல்லா பேப்பரிலும் கொடுக்கணும்னா, எத்தனை நோட்டீஸ் அடிக்கணும்?”

“நம்ம ஏரியாவுல 22 ஆயிரம் பேப்பர் போகுது சார். ஆயிரம் காப்பிக்கு 200 ரூபா கொடுத்தா போதும் சார். பக்காவா ஒவ்வொரு வீட்டுக்கும் போய் சேர்ந்துடும் சார்.”
கணக்குபோட்டு பார்த்தேன்… மலைப்பாய் இருந்தது.

“நீங்க எல்லா பேப்பர்லயும் கொடுக்க வேணாம் சார், அதிகமா போற பேப்பர், ரெண்டு. அதுக்கு மட்டும் கொடுங்க போதும்.”

ஒரு கணக்கு போட்டு, பத்தாயிரம் நோட்டீஸ் அடிப்பது என முடிவுசெய்தோம்.
சுகி சொன்னது போல ஞாயிறு காலை கிளம்பி பத்தாயிரம் நோட்டீஸ்களையும் தூக்கிக்கொண்டு, மூன்றரை மணிக்கு அவனை தேடிச் சென்றேன். ஏதோ ஒரு தமிழ் செய்தித்தாள் வந்து அடுக்கிக் கொண்டிருந்தார்கள்.

“முதல்ல ஒரு ரெண்டாயிரம் காப்பி கொடுங்க” என்றார். வாங்கிக்கொண்டு தூரத்தே அமர்ந்திருந்த ஒரு குழுவிடம் சென்று கொடுத்தார். அவர்களிடம் ஏற்கனவே மூன்று வகை நோட்டீஸ்கள் இருந்தன. ஒவ்வொருவரும் ஒன்றை எடுத்து சொருகி அடுத்தவனிடம் தள்ள, அவன் அடுத்ததை சொருகினான். நான்காவதாக ஒருவனை அமரவைத்து என்னுடைய நோட்டீஸை கொடுத்தார்கள் வேலை ஆரம்பித்தது.

“மீதிய யார்ட்ட கொடுக்கறது?” என்றேன்.

“சார், ஏஜென்ட் ரெண்டாயிரம்தான் கொடுத்தார். பொறுங்க, வேற யார்ட்டயாதும் பார்ப்போம் என்றார்.”

“ஆறாயிரம் ஒரே பேப்பர்ல போகும்னீங்களே…”

“ஆமா சார், அதுல ரெண்டாயிரம் ஆபீஸ் காப்பி, நாம தொடமுடியாது. நாலாயிரத்துல ரெண்டாயிரம்தான் கொடுத்தாரு. நாம என்னா செய்றது?” – அவன் சொன்ன கணக்கு எனக்கு விளங்கவில்லை.
பேசிக்கொண்டிருக்கும்போதே வேறு வேறு நோட்டீஸ்கள் வந்துகொண்டிருந்தன.

பெரும்பாலும் இளைஞர்களாகவே இருந்தார்கள். புதிய தொழில் முனைவர்கள். அவர்கள் கையிலெல்லாம் ஆயிரம், ரெண்டாயிரம்தான் இருந்தது. ஒன்று புரிந்தது, ‘அச்சகம் நடத்துபவர்களுக்கு நல்ல வேலை நடக்கிறது’ என்று.

பார்த்துக்கொண்டிருக்கும்போதே, வேறு வேறு வாகனங்களில் வேறு வேறு செய்தித்தாள்கள் வந்து இறங்கிக்கொண்டிருந்தன. ஆங்கங்கே குழு குழுவாய் அமர்ந்து வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். சுகி அங்கும் இங்குமாய் போய் வந்துகொண்டிருந்தான். ‘சார், ஓரமா நில்லுங்க. அவன் வந்தா கத்துவான்” என்று அங்கிருந்தவர்களைப் பார்த்து ஒருவர் சொன்னார். யார் என்று தெரியவில்லை. ‘போலீஸ்ஸா இருக்குமோ?’ இந்நேரத்துக்கு இங்கு வந்து ஒழுங்கு செய்ய போலீஸுக்கு அவசியமில்லை.

இருசக்கர வாகனத்தில் வந்திறங்கிய இருவர், கொஞ்சம் தடாலடி பேர்வழிகள் மாதிரி இருந்தார்கள். தங்களது நோட்டீஸ்களை வலுக்கட்டாயமாக அந்த ஏஜென்ட்டிடம் திணித்தார்கள். அதில் ஒருவன் என்னிடம் வந்தான். நான் எதற்காக நிற்கிறேன் என்பதையும், நான் பேசியிருக்கிற விலையையும் கேட்டுத் தெரிந்துகொண்டான்.

“அடுத்த தபா என்னாண்ட குடு சார், நான் இருநூத்து அம்பதுக்கு போட்டுத் தாரேன்.”

“சரி.”

“சுகியாண்ட சொல்லிராத, என் நம்பர் நோட் பண்ணிக்கோ.”

“நீங்க எந்த ஏரியாவுல போடுவீங்க.”

“சிட்டில எல்லா ஏரியாவும் நம்மதுதான். நீ குடு எங்க வேண்ணாலும் போடலாம்.”

“சரி!”

இந்த ஏரியாவில் வாங்கி, அடுத்த ஏரியாவில் சென்று போடுபவர் போலும் இவர். சுகி லோக்கல் மட்டும். பத்தாயிரத்துக்கு இரண்டாயிரம்தான் ஓடிக்கொண்டிருக்கிறது.

எங்கிருந்தோ வந்த சுகியிடம், “டைம்ஸ் வந்திருச்சா?” என்றேன். “வந்துருச்சு சார், அது வேற ஏஜென்ட்டாண்ட கொடுக்கணும் சார்!”

எனக்கு அவர்களின் தொழில் ஏற்பாடுகள் புரியவில்லை.

“சார் சன்டேயில வராதிங்க சார். புதன் கிழமையில வந்தா கிளீனா முடிச்சுரலாம். அங்க பாருங்க எவ்வளவு பேர் கொடுத்திருக்காங்க.”

சுமார் பத்து நோட்டீஸ்கள் ஓடிக்கொண்டிருந்தன. ஒவ்வொரு கடை விரிப்பிலும் நாலைந்து இளைஞர்கள் வேக வேகமாக நோட்டீஸ்களை சொருகிக்கொண்டிருந்தார்கள். அங்கேயே இருந்து நமது நோட்டீஸ்கள் சொருகப்படுவதை கவனமாக பார்த்துவிட்டு வருமாறு எனது பிரின்டர் சொல்லியிருந்தார். ஐந்து மணிந்த் தாண்டிவிட்டதால், ஒரு டீக்கடை திறந்துவிட்டிருந்தது. டீ என் உடம்புக்கு சேராது என்றாலும், அப்போது அது தேவைப்பட்டது.

சட்டென தெருவிளக்குகள் அணைந்து இருள் கூடியது. ஒவ்வொரு குழுவும் பேட்டரி பொருத்தப்பட்ட எல்ஈடி விளக்குகளை வைத்திருந்தார்கள். டீ குடித்துவிட்டு வரும்போது, சுகி என் பையிலிருந்து கொஞ்சம் நோட்டீஸ்களை எடுத்துக்கொண்டு செல்வதைப் பார்த்தேன். பின்னாலேயே ஓடினேன். “வா சார், வா சார்” என்று விரைந்தான்.

அடுத்த தெருவின் மூலையில் ஒரு கடை சுறுசுறுப்பாக இதே தொழிலில் இயங்கிக்கொண்டிருந்தது. “இது என்ன பேப்பர்” என்றேன். “டைம்ஸ்” என்றான்.

உள்ளே ஒரு ஐயர், மேஜை முன் மேனேஜர் மாதிரி அமர்ந்திருந்தார். நேற்று போட்ட நாமம் இன்னும் களையவில்லை. என்னுடையதை வாங்கி பங்கு பிரித்தார். ஓர் இளைஞன் ஒரு எந்திரத்தைவிட வேகமாக செய்தித்தாள்களில் நோட்டீஸ்களை சொருகிக்கொண்டிருந்தான். அந்த வேகம் ஆச்சரியமாய் இருந்தது.

“எவ்வளவு கொடுத்தீங்க?” என்றேன்.

“ஆயிரம் இருக்கும் சார்.”

“எப்பிடி கணக்கு பாக்காம…?”

“சார், டைம்ஸ் இவர்கிட்ட ஆயிரம் போகுது. போதலைன்னா கேப்பாங்க, மேலருந்தா கொடுத்துருவாங்க.”

வாழ்க்கையில் புதிய தளங்கள், புதிய கணக்குகளை கற்றுத்தருகிறது. `சரி, நோட்டீஸ் போய் சேர்ந்தா சரி’ என்று சமாதானம் செய்துகொண்டேன். சுகி வெக்கு வெக்கென்று நடந்து வேறு எங்கோ சென்றான். அங்கும் நாலைந்து இளைஞர்கள் தங்களது தொழிலுக்கான நோட்டீஸ்களுடன் நின்றுகொண்டிருந்தார்கள். பேண்டும் டீ சர்ட்டும் அணிந்த ஒரு பெண்ணும் நின்றுகொண்டிருந்தாள். காந்தி சொன்னதாகச் சொல்வார்கள், ‘நள்ளிரவில் எப்போது ஒரு பெண் தனியாக பயமில்லாமல் செல்கிறாளோ, அப்போதுதான் நாடு வளர்ந்துவிட்டதாக அர்த்தம்’ என்று. நகரின் மக்கள் பெருக்கமும், வாழ்க்கை முறையும் அப்படியொரு நிலையை கொண்டுவந்துவிட்டதாகத் தோன்றுகிறது.

டியூசன் சென்ட்டர்கள், ரியல் எஸ்டேட், மருத்துவம், மருந்து, இயற்கை விவசாயம், சிக்கன், பிரியாணி, உணவகங்கள், மென்பொருள், கணினி, தவணை விற்பனை, சர்வீஸ் அபார்ட்மெண்ட்ஸ், கார் சர்வீஸ், இத்யாதி, இத்யாதி என நோட்டீஸ்கள். செய்தித்தாள்கள் நடுவே உப்பி பிள்ளைதாச்சியைப் போல பெருத்திருந்தது. நூற்றுக்கணக்கான செய்தித்தாள்களை இருசக்கர வாகனத்தின் முன்னும் பின்னும் வைத்து எடுத்துச்செல்பவர்கள் தடுமாறுவது தெரிந்தது. அவர்களுடைய சுமையை நாம் அதிகாக்கிவிட்டதாக உணர்ந்தேன்.

மூவாயிரத்து ஐநூறு நோட்டீஸ்கள் போடுவதற்கான காசை கொடுத்துவிட்டு, மீதம் ஆறாயிரத்து சொச்சம் நோட்டீஸ்களை தூக்கிக்கொண்டு வீடு வந்துசேர்ந்தேன். செலவளித்த காசுக்கு சந்தோஷப்படும்படி காலை ஒன்பது மணிக்கெல்லாம் ஓர் அழைப்பு வந்தது. ஓவியப் பள்ளி பற்றி விசாரித்தார்கள். மகிழ்ச்சியாக இருந்தது. அவர் ஒரு ஓட்டுநராம். “நேரம் கிடைக்கும்போது வருகிறேன்” என்றார். பிறகு, மாலை வரை வேறு யாரும் விசாரிக்கவில்லை. மாலை இன்னோர் அழைப்பு வந்தது.

“சார், நான் வெங்கிடு பேசறேன். நேத்து காலைல நோட்டீஸ் போடும்போது பார்த்தோமே, மடிப்பாக்கம் day care school…”

“ஆமா, ஆமா, சொல்லுங்க சார்.”

“எப்படி சார் இருக்கு ரெஸ்பான்ஸ்?”

“காலைல ஒரே ஒரு கால் வந்துச்சு சார், அவ்வளவுதான்”

“எனக்கு அந்த ஒரு கால்கூட இல்லை.”

“எவ்வளவு காப்பி போட்டீங்க?”

“நான் ஆயிரம் போட்டேன். நீங்க.?”

“நான் மூவாயிரத்து ஐநூறு.”

“என்னாச்சுன்னு தெரிய, ஒருத்தர்கூட என்கொயரி பண்ணல.”

“எனக்காவது பரவாயில்லை, ஓவியம் கத்துக்க யாரும் வரமாட்டாங்க. உங்களுக்கு day care schoolனும்போது, நிறைய வருவாங்களே சார்.”

ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் தூங்கிவிட்டு, மறுநாள் வருவார்களோ என்று தோன்றியது. பொதுவாகவே, சென்னை மக்கள் ஞாயிறுகளில் வீட்டைவிட்டு வருவதில்லை. இலக்கியமோ, ஓவியமோ, எந்த நிகழ்ச்சியையும் ஞாயிறில் வைத்துவிட்டால் அவ்வளவுதான், கூட்டமே சேர்வதில்லை. சமைக்க, சாப்பிடக்கூட வெளியே வருவதில்லை. ஞாயிறு மதியங்களில் வண்ண வண்ண பனியன்களில் இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் உணவு வாங்கி விநியோகிக்க பறக்கிறார்கள். நமக்கு பதில் அவர்கள் வரிசையில் நிற்கிறார்கள். ஒவ்வொரு கடையிலும் நூற்றுக்கணக்கில். அவர்களைப் பார்க்கும்போதெல்லாம், வறுமையின் நிறம் சிகப்பு படத்தில், எச்சில் இலைக்கு அடித்துக்கொள்ளும் பட்டதாரிகள் காட்சி நினைவுக்கு வரும். பேசாமல் ஓட்டல் ஆரம்பித்திருக்கலாமோ!

திங்கள் காலை வீட்டுக்கு பேப்பர் போடும் நபர், மாத பில்லுடன் நின்றார். மாதத் தொகையைக் கொடுத்துவிட்டு சும்மா பேச்சு கொடுத்தேன்.

“நீங்கள் எந்த ஏஜென்சியில பேப்பர் எடுக்குறீங்க?”

“நான் தனியா, ஏஜென்சி வச்சிருக்கேன் சார்…”

“இல்லை, நேத்து பிட் நோட்டீஸ் போட போயிருந்தேன், அதான் கேட்டேன், நீங்க யார்கிட்ட எடுக்கிறீங்கன்னு.”

“பேப்பர் இன்ஸர்ட் ஆ? என்ட்ட கொடுத்திருக்கலாமே சார், நாங்க போட்டிருப்போமே.”

“பேப்பர்ல நோட்டீஸ் வச்ச பிறகுதானே உங்ககிட்டே கொடுப்பாங்க?’

“சார் கொடுப்பாங்க, நாங்க வீட்டுக்கு வந்து அப்படியே தூக்கி உதறுவோம், எல்லாம் கொட்டிடும். அப்புறம்தான் பேப்பர் போடப்போவாம்.”

“என்னங்க சொல்றீங்க?” அதிர்ந்தேன்.

“ஆமா சார், நாங்க ஏன் சார் வெயிட் சுமக்கணும்? எங்களுக்கு அந்த ஏஜென்ட் ரெண்டு ரூபா தர்றானா? ஒவ்வொரு பேப்பர்லயும் எவ்வளவு வெயிட் ஏறுது பாத்தீங்கல்ல. அதான் வீட்லயே உதறிட்டு வந்துருவோம்.”
நேற்றைய நடவடிக்கைகள் அனைத்தும் நினைவில் ஓடியது. எல்லாம் வீண். பணம், உழைப்பு, பொருள், எதிர்பார்ப்பு, நம்பிக்கை எல்லாமும் இவர்களிடம் சறுக்கி விழுகின்றன. சோர்ந்து வந்தது. மீண்டும் கிளம்பிய இடத்துக்கு வந்து நிற்பதாக உணர்ந்தேன். ஏணியில் ஏறி பரமபத பாம்பினால் விழவில்லை, ஏறுவதே வழுக்குப் பாறையாக இருக்கிறது.

மீண்டும் உருட்டினேன், ‘தாயம் ஒன்னு’.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

2 Comments

  1. வியாபார உலகில் ரத்தம் உறிஞ்சும் அட்டைகள். வழியெல்லாம் நெருஞ்சி முட்கள். சோர்வைத் தருகிற வாழ்க்கை முறை. சுவைபடச் சொல்லும் கதை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button