சிறுகதைகள்
Trending

தகர்ப்பு – மித்ரா அழகுவேல்

பெருமழை ஓய்ந்தும் பிரிய மனமின்றி வான் சோர்வாகத் தூறிக்கொண்டிருந்த இருள் விலகாத அதிகாலை நேரத்தில் தேனிக்குள் நுழைந்தோம். நேரம் விடியற்காலம் 4 மணியாக இருக்கலாம். ஒவ்வொரு வருடமும் இந்த சமயத்தில் மழை பொழிவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும் இந்தமுறை பழனிசெட்டிபட்டி தாண்டும்போதே சகதிக்காடாக காட்சியளித்தது. அந்நேரத்திற்கே சட்டிகள் விற்பனை தொடங்கியிருந்தன. அம்மாவிற்கு எப்போதும் பழனிசெட்டிபட்டியிலேயே அம்மன் கண் பதித்த சட்டியை வாங்கி விட வேண்டும். சட்டி வாங்க வண்டி நிறுத்தப்பட்டதும் நான் சரிந்து இருக்கையில் சாய்ந்து கண் மூடினேன்.

எத்தனை வருடங்களாயிற்று இந்த ஊரை நிரந்தரமாக விட்டுச் சென்று? இப்பொதெல்லாம் வருடத்திற்கு ஒரு முறை ரகசியமாக வந்து செல்வதோடு சரி. அதுவும் அம்மாவுக்காக. இத்தனை வருடங்களில் ஊர் மீதான பாசமும் பிணைப்பும் சுத்தமாக அற்றுப் போயிருந்தது. ஆனால், அம்மாவிற்கு அப்படி இல்லை. ஊர் மீதும் சரி உறவுகள் மீதும் சரி அவருக்கு இன்று வரை அதே ஒட்டுதல்தான். என்ன, எங்களிடம் வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார். அவர் எங்களிடம் அதிகபட்சமாக எதிர்பார்ப்பது வருடமொரு முறை இந்தத் திருவிழாவிற்கு அனைவரும் இங்கு வர வேண்டும் என்பதைத்தான்.

அம்மாவிற்கு இங்கிருக்கும் வீரபாண்டி கௌமாரி அம்மனிடம் ஜென்ம சட்டி வேண்டுதல். எப்போதோ என் அண்ணன் பிறந்த நேரம் சரி இல்லையென வேண்டிக் கொண்டது. இப்போது அவனே இல்லை. ஆனாலும் அவனுக்கான நேத்திக்கடனை அம்மா விடுவதாக இல்லை. இதை ஒரு வகையில் அம்மனைக் குத்திக்காட்டுவதற்காகவே அம்மா செய்து வருவதாகத் தோன்றும். இதுபோன்ற விவகாரங்களில் நான் பெரிதாகத் தலையிட்டுக் கொள்வதில்லை.

நாங்கள் வசித்த ஊரிலிருந்து கிட்டத்தட்ட 12 மணி நேரம் பயணம். மாலை 3 மணியளவில் கிளம்பினால் அதிகாலை இருள் பிரியும் முன்பே வீரபாண்டியை அடைந்து விடலாம். திருவிழா என்றால் லேசுவாசான திருவிழா இல்லை. சுத்துப்பட்டு பதினெட்டுப் பட்டியும் ஒன்றுகூடும் பெருந்திருவிழா. ஏழு நாட்கள். நேரங்காலம் எல்லாம் இல்லாமல் இருபத்தி நான்கு மணி நேரக் கொண்டாட்டம். எளந்தாரிப் பயல்களுக்குத் தலைகால் புரியாது. கறிகஞ்சிக்குப் பஞ்சமிருக்காது. நானும் ஒரு காலத்தில் வருடம் முழுவதும் இந்த ஏழு நாட்களுக்காகக் காத்திருந்ததுண்டு. இப்போது ஏதோ வேற்றுமொழி சினிமாவின் சோகக்காட்சியை சத்தம் இல்லாமல் பார்ப்பது போன்ற உணர்வைத்தான் இந்தத் திருவிழா தருகிறது. அங்கு அம்மா சட்டி எடுப்பது ஒரு மணி நேர வேலைதான். அதை முடித்துவிட்டு உடனடியாக ஊர் திரும்புவோம். கடந்த 19 வருடங்களாக இதுதான் வாடிக்கை. இப்போது எனக்கு யார் மீதும் எந்தக் கோபமும் வருத்தமும் இல்லை. யாரையேனும் நேரில் கண்டால் கூட புன்னகையோடு நலம் விசாரிக்கும் அளவு காலம் பக்குவப்படுத்தியிருக்கிறது. ஆனால், நினைவுகள் பரப்பும் கசப்பு எதைத் தின்றால் மாறும் எனத் தெரியவில்லை. இத்தனை வருட வாழ்வில் நான் அதிகம் ஓடியது நினைவுகளுக்குப் பயந்துதான். திடீரென ஈஸ்வரன் மாமா நினைவிற்கு வந்தார். சொல்லி வைத்தாற்போல்.

“ஈஸ்வருக்கு ஒடம்பு முடிலயாம்பா…” என்றார் அம்மா. நான் கேட்டதாகக் காட்டிக்  கொள்ளவில்லை.

“உன்னத்தான்டா…”

“ப்ச்.. இதெல்லாம் யார் சொல்றாங்க உனக்கு?”

“யார் சொன்னா உனக்கென்ன இப்போ? எதுக்கு இப்ப கடிக்குறவன்? திருவிழாக்குனு கெளம்பிட்டா ஒரு வார்த்தை பேசக்கூடாதுங்கறான். சிடுசிடுன்னுக்கிட்டு…. நல்லது பொல்லது பேசாமயேவும் எவ்வளவு தூரம்டா வர முடியும்?”

“ஆரம்பிக்காதமா தயவுசெஞ்சு… அமைதியா வா ப்ளீஸ்.”

அம்மா அமைதியாகத் தேம்பத் தொடங்கினாள். இதுவும் வழக்கமான ஒன்றுதான்.

ஊரிலேயே பெரிய குடும்பம் எங்களுடையது. சாமான்யமாக யாருக்கும் புரிய வைத்து விட முடியாது. அப்பா  வகையில் 8 அத்தை, பெரியப்பா, சித்தப்பாக்கள். அம்மா வகையில் 12 மாமா, சித்திகள்.  அத்தனைப் பேரும் தங்களுக்குள்ளேயே பெண் கொடுத்து பெண்ணெடுத்துக் கொண்டனர். அப்பாவும் அம்மாவும்கூட உறவுமுறைதான். இவர்களில் பெற்றோர்கள் இவர்கள் பெற்ற பிள்ளைகள் எனத் தோராயமாக ஒரு 80 பேரைக் கொண்ட குடும்பம். அனைவரும் இருந்தது ஒரே ஊரில்தான். பழைய கூத்துகளும் கொண்டாட்டங்களையும் நினைக்கையில் எல்லாம், மழை நேரங்களில் குப்பைத்தொட்டியில் படரும் பாசியைத் தின்றது போலொரு கசப்பு. விசங்கக்கும் பாம்புகளுடனான கிணற்றுத் தவளை போல என்னை நானே நினைத்துக் கொள்வேன்.உலகம் எவ்வளவு பெரியது? சொந்த ஊர், சாதி சனம், உறவுகள் நம் மீது செலுத்தும் மறைமுக ஆதிக்கங்களை விட உலகம் எவ்வளவு பெரியது? வாழ்வு எத்தனை சுதந்திரமானது என்பதை உணர ஒரு மனிதன் கண்டிப்பாக பிறந்த ஊரை விட்டும் உறவுகளை விட்டும் முதலில் வெளியேற வேண்டும். நான் இந்த ஊரை விட்டு வெளியேறிய பிறகுதான் எனக்காக நானே சுயமாக யோசித்து முடிவெடுப்பதின் ஆசுவாசத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது.

“கேடுகாலம் தொடங்கிருச்சு ஆதவா… இந்தக் கூத்தப் பாரேன்…”

அம்மா திடீரெனக் கத்தியதில் கண் விழித்துப் பார்த்தேன். திருவிழாப் பகுதிக்குள் கார் நுழைந்து கொண்டிருந்தது. வழக்கத்திற்கு மாறாக கூட்டமே இல்லை. நிற்க நடக்க இடமில்லாமல் நெரிசலாகக் காணப்படும் இடம் இப்போது வெறிச்சோடிக் கிடந்தது. மழை காரணமாக இருக்கலாம். சாலையோரங்களில் குவியல் குவியலாக சோற்றைக் கொட்டி வைத்திருந்தனர். கெடா வெட்டுபவர்கள் தங்களுடன் வந்திருப்பவர்கள் போக, திருவிழாவிற்கு வந்து போகும் மக்களுக்கும் விருந்து வைப்பதற்கேற்றாற்போலத்தான்  தயாராவார்கள். கூட்டம் இல்லாததால் சாப்பிட ஆளின்றி கீழே கொட்டியிருக்கிறார்கள். இந்த இடத்தை இந்த நேரத்தில் இப்படிப் பார்ப்பதற்கு எனக்கே ஒரு மாதிரித்தான் இருந்தது.  வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

“மழை பெய்துல்லமா அதுனால இருக்கும்…” என்றேன்.

“ஏங்க இத்தனை வருசமாத்தான் மழை பேஞ்சுச்சு இப்டியா இருக்கும்?” என்ற நந்தினியை ஒரு முறை முறைத்தேன். நாக்கை மெலிதாக வெளியே நீட்டி விட்டுத் திரும்பி சாலையைப் பார்த்து கார் ஓட்டுவதில் கவனம் செலுத்தத் தொடங்கினாள்.. .

“சரி அதான் கூட்டமில்லைல…நீங்க போய்ட்டு வாங்க. நான் இருக்கேன்.” என்றேன்.

“ஏன்டா இப்…….”

“மா, எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. புரிஞ்சுக்க. போய்ட்டு வா.”

“ஏன்தான் இப்டி பண்றீங்களோ..நல்லா என்னையவே மாட்டி விட்றீங்க…” எனப் புலம்பியபடி நந்தினி செல்ல, குழந்தையைத் தூக்கிக் கொண்டு தங்கை அர்ச்சனாவும் பின்தொடர்ந்தாள்.

மெலிதாக… மிக மெலிதாக வெளிச்சம் பரவத் தொடங்கியிருந்தது. காற்று இன்னும் ஈரத்தைச் சுமந்து கொண்டு வந்தது தழுவியது. ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தேன். ‘இப்போது யாரும் பார்த்தாலும் என்னை அடையாளம் தெரியாதுதானே?’

“ஈஸ்வருக்கு ஒடம்பு முடிலயாம்ப்பா…” மீண்டும் அம்மாவின் குரல் காதில் ஒலித்தது. எதற்கோ பயந்து ஓடிச்சென்று காரில் அமர்ந்து கதவடைத்துக் கொண்டேன்.

ஈஸ்வர் மாமா. ஒரு காலத்தில் அம்மா அப்பாவைவிடவும் எனக்கு நெருக்கமானவர். என் ஆதர்சனம். ஈஸ்வர்  மாமாவைப் போல படிக்க வேண்டும். ஈஸ்வர் மாமாவைப் போல வேலை செய்ய வேண்டும். ஈஸ்வர் மாமா போல பொறுமை, ஈஸ்வர் மாமா போல அன்பு என என் கனவுகளெல்லாம் ஈஸ்வர் மாமாவைப் பிரதியெடுத்து ஒரு வாழ்வை வாழ வேண்டும் என்பதே. இப்போதும் அவ்வப்போது ஏதேனும் சிக்கல்கள் நேரும்போது ஈஸ்வர் மாமாவின் வார்த்தைகள் ஏதேனும் நினைவுக்கு வருவதுண்டு. ஈஸ்வர் மாமா என் அம்மாவுக்கு சித்தப்பா மகன். தம்பி. அம்மாவின் மாமா  மகளைத் திருமணம் செய்திருந்தார். எங்கள் குடும்பத்தைப் போலவே அங்கும் 2 பையன்கள், ஒரு பெண். அனைவருக்கும் ஒரே வயது இடைவெளி என்பதால் மற்றவர்களை விட நாங்கள் கூடுதல் நெருக்கம். அனைவரும் ஒரே வீட்டில்தான் உண்பது உறங்குவது எல்லாமும். அது எந்த வீடு என்பது அப்போதைய மனநிலையைப் பொருத்தது. இப்போது யோசித்தால் யார் மீது தவறு என்றெல்லாம் முடிவுக்கு வர முடியவில்லை. எங்கள் பக்க நியாயம் எங்களுக்குத் தெரிந்தது போல அவர்களுக்கு ஏதேனும் தெரிந்திருக்கலாம்தான். ஆனால் என் அண்ணனைப் பற்றி எனக்கும் ஈஸ்வர் மாமாவுக்கும் நன்றாகவே தெரியும் என்றே நான் நம்பினேன். அன்று அவர் எங்களுக்கு ஆதரவாகப் பேசி இருந்தாலும் எதுவும் மாறி இருக்காதுதான். ஆனால் இத்தனை விரக்தி ஏற்பட்டிருக்காது. ஊரை விட்டும் உறவுகளை விட்டும் நாங்கள் இவ்வளவு விலகி இருந்திருக்க மாட்டோம்.

அலைபேசி அதிர்ந்தது. சலிப்பாக எடுத்துப் பார்த்தேன்.

“Pls come inside. maavilakku edukkanumaam”

நந்தினி மெஸேஜ் அனுப்பியிருந்தாள். இதற்கு போயே ஆக வேண்டும். இல்லையென்றால் அடுத்த திருவிழா வரைக்கும் அம்மா அவ்வப்போது அழுது கொண்டிருப்பாள். அதுகூடப் பரவாயில்லை. இந்த வருடம் என் வாழ்வில் நடக்கப் போகும் அத்தனை சரிவுகளுக்கும் இந்த சம்பவத்தைக் காரணம் காட்டுவாள். அதற்கு பேசாமல் போய் விடுவது நல்லது என்று தோன்ற கோவிலை நோக்கி நடக்கத் தொடங்கினேன். வழக்கமாக கால் வைக்க இடமின்றி கூட்டத்தால் நிறைந்திருக்கும் மண்டபங்கள் இன்று வெறிச்சோடிக் கிடந்தன. தூரத்தில் இருந்தே அம்மாவைப் பார்க்க முடிந்தது. சட்டி எடுத்து முடித்து முகமெல்லாம் திருநீறாக களைப்பு அப்பிய முகத்தோடு தெரிந்தாள்.

மாவிளக்கு எடுத்தல் என்பது திருவிழா சமயத்தில் கோவிலுக்கு வரும் அனைவராலும் பின்பற்றப்படும் ஒரு ஐதீகம். பொதுவாக முதல் செவ்வாய் தொடங்கி அடுத்த செவ்வாய் வரை 7 நாள் திருவிழா வீரபாண்டி கௌமாரியம்மனுக்கு. திருவிழா தொடங்கிய முதல் வாரம் வெள்ளிக்கிழமை நடை சாத்தப்படும். மீண்டும் திருவிழா முடியும் மறுபூஜைக்கு செவ்வாய்க்கிழமை நடை திறப்பார்கள். திருவிழா நேரத்தில் நேர்த்திக்கடன் முடித்தவர்கள் அன்று மறுபடி கூடி மறுபூஜையில் கலந்து கொண்டு மாவிளக்கு எடுத்து திருவிழாவை முடிப்பார்கள். ஆனால், வெளியூரில் இருந்து திருவிழாவிற்காக வருபவர்கள் மீண்டும் வர வாய்ப்பில்லாததால் அன்றே மாவிளக்கு எடுப்பது வழக்கம்.

மாவிளக்கு எடுத்தல் என்பது, அரிசி மாவும், வெல்லமும் சேர்ந்து பிடித்த மாவுருண்டையில் விளக்கு செய்து அதில் எண்ணெய் நிரப்பி திரி போட்டு விளக்கேற்றுவார்கள். பின்னர், குடும்ப உறுப்பினரை ஒவ்வொருவராக சன்னிதானத்தில் துணி விரித்துப் படுக்க வைத்து, நெற்றி முதல், கண், தோள்பட்டைகள், நெஞ்சு மற்றும் வயிற்றுப்பகுதி ஆகியவற்றில் அந்த விளக்கை வைத்து எடுப்பார்கள். இது எதற்காக என்று தெரியாது. ஆனால், திருவிழா சமயத்தில் கோவிலுக்கு வரும் அனைவரும் இதைச் செய்வார்கள். சமயங்களில் மண்டபங்களில் இடம் இல்லாதவர்கள் நடைபாதையில் அவசர அவசரமாக மாவிளக்கு எடுப்பதைப் பார்த்திருக்கிறேன். நாங்கள் ஒரே குடும்பமாக இருந்தவரை அனைவரும் ஒரு கிராமம் போல வந்து மாவிளக்கு எடுப்போம். ஒவ்வொருவரையும் ஒவ்வொரு மாதிரி ஆசிர்வதித்து பெரியவர்கள் மாவிளக்கு வைத்தெடுப்பர். மாவிளக்கிற்காக படுத்திருப்பவர்களை சுற்றி நின்று மற்றவர்கள் சிரிப்பு மூட்ட சிரிப்பும் கும்மாளமுமாக இந்த ஐதீகம் முடியும். இத்தனை நாள் கூட்ட நெரிசலில் பெரிதாகத் தெரியாத ஏதோ ஒன்று இன்று போட்டு அழுத்தியது. அம்மாவின் குரல் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருந்தது.

“ஈஸ்வருக்கு ஒடம்புக்கு முடியலயாம்ப்பா…”

அன்று ஏன் ஈஸ்வர் மாமா அப்படி நடந்து கொண்டார் என்பது மனதில் கிடந்து அரித்தது.

“இந்த தடவ ஒரு நிம்மதியாவே இல்லடா… ஏதோ அனாதையா கெடக்குற மாதிரி இருக்கு…” என்ற விசும்பலோடு அம்மா காரில் ஏறினாள்.

வண்டியைத் திருப்பாமல் நேராக சின்னமனூர் நோக்கி செலுத்தத் தொடங்கினேன்.

“ஆதவா!” நா தழுதழுக்க அம்மா அழைத்தாள்.

“ஈஸ்வர் மாமா கிட்ட ஒன்னு கேட்க வேண்டியிருக்கு.” என்றேன் முகத்தைத் திருப்பாமல். அம்மா மீண்டும் அழுகத் தொடங்கினாள்.

முகத்தை சலனமின்றி வைத்துக் கொள்ள மிகவும் சிரமப்பட வேண்டி இருந்தது. உள்ளுக்குள் கோபம், பதற்றம், அன்பு என ஏராளமான உணர்வுகள் ஒன்று சேர்ந்து ஒரு போரே நடந்து கொண்டிருந்தது. யானை புகுந்த சோலைக்கொள்ளை என்பார்களே அதுபோலத்தான்.

அன்று விடிந்தும் விடியாத அதிகாலையிலேயே அழைப்பு வந்தது பெரிய மாமாவிடம் இருந்து. அனைவரும் அங்கு சென்ற போது, ஏற்கனவே குடும்பத்துப் பெரியவர்கள் அனைவரும் அங்கு கூடியிருந்தனர். ஏதோ விவகாரம் போல என்று அப்போதே தோன்றியது. என் அண்ணனைத் தவிர வேறு இளையவர்கள் யாரையும் அங்கு இருக்க பெரியவர்கள் அனுமதிக்கவில்லை. நாங்கள் வெளியே மரத்தடியில் நின்றிருந்தோம்.

யாரும் யாருடனும் பேசிக் கொள்ளவில்லை. முக்கியமாக என்னை பரிதாபமாகப்  பார்த்தனர். சித்தப்பா மகனான பெருமாள் மட்டும் காதில் வந்து, “உங்கண்ணன் போன்ல ஏதோ எக்ஸ் படம் வச்சுருந்தானாம் டா. கூடவே நெறய பொம்பள பிள்ளைக போட்டாவும் இருந்துச்சாம். பெரிய மாமா அதைப் பாத்துட்டாரு போல. இப்டி பண்றவன நம்பி எப்டி நம்ம வீட்டுப் பிள்ளைகளோட பழக விடுறதுனு கேக்குறாரு பங்காளி.” என்றான். எனக்கு தூக்கிவாரிப் போட்டது. பெரிய மாமாவின் மகளைத்தான் அண்ணனுக்குக் கட்ட வேண்டும் என அம்மாவுக்கு விருப்பம். அவர்களும் அரசல் புரசலாகப் பழகிக் கொண்டுதான் இருந்தனர். வெளியில் இருக்கவே முடியவில்லை. உள்ளே ஓடிப் போய் பார்க்கலாம் என்று கூடத் தோன்றியது. தனியாகப் போய் நின்று கொண்டேன். அழுகை முட்டிக் கொண்டு வந்தது.

கொஞ்ச நேரத்திலேயே ஈஸ்வர் மாமா வெளியில் வந்து யாரையும் திரும்பிப் பார்க்காமல் வேகமாகச் சென்று விட்டார். பிறகு அண்ணன் வெளியே வந்து அதே போலப் போனான். நான் அவன் பின்னாலேயே ஓடத் தொடங்கினேன்.

“அண்ணே…அண்ணே….நில்லுண்ணே.”

“………”

“என்னண்ணே என்னென்னமோ சொல்றானுக…”

“கம்முனு போடா… நான் ஒன்னும்….”

“ணே… என்னணே நான் உன்ன தப்பு பண்ணயானு கேட்டனா இப்ப? நில்லுண்ணே… என்ன சொன்னாய்ங்க உள்ள? வஞ்சாய்ங்களா?”

“போடா நான் வாரேன். தனியா விடு. நான் வாரேன் போய் அம்மாவை கூட்டிட்டு வீட்டுக்கு போ.”

“உன் போன் எப்படிண்ணே அவுங்களுக்கு கெடச்சது?”

“போடங்குறான்ல…போடா…”

நான் மறுபடி பெரிய மாமா வீட்டிற்குப் போவதற்குள் அம்மா வீட்டிற்கு சென்றிருந்தாள். அம்மா பயங்கரமாக அழுததாகவும், இனிமேல் உங்க சங்காத்தமே வேணாம் என்று சொல்லிச் சென்றதாகவும் பெருமாள் சொன்னான். மீண்டும் வீட்டுக்கு ஓடினேன்.

என்ன நடந்ததென்றே தெரியாமல்,

“விடுமா.. அவிய்ங்க என்ன பெரிய ஒழுக்கமா? அவிய்ங்க எந்த நேரத்துல எந்த வீட்டுக்குள்ள போயிட்டு வராய்ங்கனு ஊருக்கே தெரியும். அவிய்ங்க யாருமா நம்ம அண்ணனை சொல்றதுக்கு.. நீ அண்ணனை மட்டும் நம்பு.” என அம்மாவைச் சமாதானம் செய்யத் தொடங்கினேன். இப்போது வரை அந்த வீட்டிற்குள் என்ன நடந்தது என எனக்குத் தெரியாது. ஆனால், அம்மா சொன்ன ஒன்று மட்டும் மனதோடு தங்கி விட்டது.

“எனக்கு அண்ணன் பேசுனது கூட தெரியல ஆதவா… ஆனா ஈஸ்வரு கூட ஒரு வார்த்த பேசாம போய்ட்டான் பாத்தியா… அதைத்தான்டா தாங்க முடியல.”

அன்று சென்ற அண்ணன் அதற்குப் பிறகு வரவேயில்லை. அவனுக்கான நேர்த்திக்கடன் மட்டும் தொடர்ந்து வருடம் தவறாமல் நிகழ்த்தப்பட்டு வருகிறது.

ஊர் எவ்வளவோ மாறியிருந்தது. புது பஸ் ஸ்டான்டைத் தாண்டியதும் கட்டுப்பாட்டை மீறி வழிந்த கண்ணீரை யாரும் அறியாமல் துடைத்துக் கொண்டேன். தேரடி தெருவில் வண்டியைத் திருப்பியதும் சிறியதும் பெரியதுமாக அத்தனை நினைவுகள் ஆக்கிரமிக்கத் தொடங்கின. மண்டையை உலுக்கி ஒரு நிலைக்கு வந்தபோது, அத்தனை கோபமும் வடிந்து போய் ஏக்கமும் இயலாமையும் மெல்லிய மகிழ்வும் ஆட்கொள்ளத் தொடங்கியிருந்தது. அம்மா நன்றாகத் திரும்பி உட்கார்ந்து என்னைப் பார்த்துக் கொண்டே வந்தாள்.

நல்ல வேளையாக, ஈஸ்வர்  மாமா வீட்டிற்கு சென்ற போது அங்கு மாமாவைத் தவிர யாருமில்லை. நன்கு  பழக்கப்பட்ட நமக்கு உரிமையான இடத்திற்கே தயங்கித்தயங்கி வரும் நிலை யாருக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது.

ஈஸ்வர் மாமாவால் பேசக் கூட முடியவில்லை. மிகவும் நொடிந்திருந்தார். நெஞ்சுக்கூடெல்லாம் தெரிந்தது. அவரைப் பார்த்ததும் அம்மா பெருங்குரலெடுத்து அழுகத் தொடங்கினாள். ஆனால், அவர் ஒரு வார்த்தை கூட பேசவும் இல்லை, முகத்தில் எந்த உணர்வையும் காட்டவும் இல்லை. எனக்குத் தொண்டை அடைத்தது. நல்லவேளையாக, கூப்பிடும் வரை காரிலேயே இருக்கும்படி நந்தினியையும் அர்ச்சனாவையும் விட்டு விட்டு வந்தேன். நாங்கள் ஊரை விட்டுச் சென்ற போது அர்ச்சனா சிறுமி என்பதால் அவளும் பெரிதாக இதில் ஆர்வமெல்லாம் காட்டவில்லை.

அம்மா அழுது ஓய்ந்து உட்கார, நான் மெதுவாக மாமா அருகில் சென்று, குரல் தழுதழுக்க,

“அன்னைக்கு அண்ணனை காப்பாத்திருக்கலாம்ல மாமா… ஏன் அப்டி செஞ்சீக..?” என்றேன்.

மாமா மெலிதாக, மிக மெலிதாக சிரித்தபடி என் தலையைத் தடவிக் கொடுத்தவாறு,

“அன்னைக்கு காப்பாத்துற எடத்துல நான் இல்லய்யா…அவெந்தேன் இருந்தான்.” என்றார்.

வெளியே “எலேய்……..ஆதவா….” எனக் கத்தியபடி ஒரு பழக்கப்பட்ட குரல்  கேட்டது.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button