வலியின் வண்ணங்கள்
ஒளிரும் கோடி விழிகளால்
நீர்மை பொங்கும்
செந்திரவத்தைப் பொழிகிறது உடல்
செம்மறிகள் ஒதுங்கும் மரத்தடி நிழல் போல நான்
நனைந்துகொண்டிருக்க
தோல் நனையா செம்மறியாக அது மட்டும்
சந்தேகத்தின் கண்களைச் சுழல விடுகிறது
எத்துனை சிறிய பொருளையும் விடுவதாயில்லை
ஊதிப் பெருக்க ஒரு துளி போதுமே
காயத்தின் அளவே
கடும் வலியின் அளவுமென்கின்றன
மருந்தின் தாதுக்கள்
வலியின் குணமறியாத விரிசல்களில்
வழிந்தோடுகிறது நாள் பட்ட காயத்தின் குருதி
உணர்வை ஓர் ஓவியமாய்ப் பார்க்கும்
ஐயத்தின் கண்களைத்தான் எவ்வளவு நேரம் பொறுப்பது
அச்சத்தின் விழிகளுக்கு ஒரு துண்டு புலால் போதும்
புலன்கள் மரிக்க தூர மலையின்
வீழருவியில் நனைகிறேன்
கசடைக் கழுவிச் செல்லும்
நீர்த்தாரையில்தான் எத்தனை எத்தனை
வலியின் காயத்தின் மருந்தின் நிறங்கள்.
****
சென்னை இரவு
கவர்ச்சியற்ற இந்த மஞ்சள் இரவு
யாருடைய துணைக்காகவோ
காத்திருக்கும் நாய்க்குட்டியாக
அங்குமிங்கும் இங்குமங்கும் அலைகிறது
இரவில் மட்டுமே இரையுன்னும்
’நாக்டர்னல்’ நவ யுவர்கள்
இருசக்கர வாகனங்களில் விரைவதை
இந்த இரவு
தினந்தோறும் சகித்துக்கொள்ளும் வாடிக்கையை
மின்கம்பியில் தொங்கிக்கொண்டிருக்கும் பனித்துளி
தினந்தோறும் பார்த்துக்கொண்டிருக்கிறது.
ஐஸ்கிரீம் வண்டியின் ஒலிக்காத மணி
அமைதியாகத் தொங்கிக்கொண்டிருக்கிறது
மெட்ரோ இரயில் நிலையங்களில் இருந்து
பயணிகள் யாரும் ஏறிவரவில்லை
தூங்குமூஞ்சி மரங்களின்
பிங்க் நிற மலர்கள் உதிர்வதை
இரவு தாங்கிக் கொள்கிறது
பெருச்சாளிகள் தங்கள் வேட்டையை
எந்தவித அச்சுறுத்தலுமின்றி தொடங்கிவிட்டன
சுவாரஸ்யமே அற்ற இந்த தனித்த இரவுதான்
எல்லாவித சுவாரஸ்யங்களுக்குமான
ஒரு பகலைக் கடத்தப்போகிறது என்பதறியாது
கொஞ்ச நேரம் உறங்குகிறது.
****
பீத்தல் பீதாம்பரம்
குறும்புச்சொல் பீதாம்பரத்தார்
கைலான்கடையில் தேர்ந்தெடுத்த
உருப்படிகள் ஒவ்வொன்றும்
ஒரு விதம்
யாரும் கொடுக்காத உருப்படியை
எல்லோருக்கும் தெரியும் வகையில்
படிப்படியாய் அடுக்கடுக்காய்
எடுத்துக் கெடுத்துக் காட்டுவது
பீதாம்பபரத்தின்
சுய பிராதப தம்பட்டங்களில் ஒன்று.
நண்பர்களே…!
என ஆரம்பிக்கும்போதே
மூதேவிக்கு வரவேற்பு சொல்லும்
கதாகாலட்சேபங்களுக்குக்
கட்டணம் வேறு
பீடத்தின் அடிவருடிகளின்
கரவொலிகளுக்கடையில்
ஞானகுரு தான் வாந்தியெடுத்ததை
பிரசாதமெனக் கரமேந்தி நிற்குமொரு கூட்டம்
காணொலி ஞானப்பெருவெளியின்
ஊடக சாமான்களில்
பேஷ்!பேஷ்!
அபாரம் ! அபாரம் !
கரகோஷமுண்டு
அபச்சாரம் அபச்சாரம் என
எதிரணிப் பிரச்சாரமுண்டு
அதற்கு அரைகுறை
காது கேளா மூடர் கூட்டமென்ற
பெயருமுண்டு
எதற்கும் எதிர்வினை புரியா
பட்டுக் குஞ்சரச் சர்ப்பர மஞ்சத்தில்
ஊடக உலா வருபவர்தான்
இலக்கிய புளுகளந்தான் பீதாம்பரம்
எந்தப் புறம் திரும்பினாலும்
அந்தப் புரம் போலே கவிகளே தாவித்திரியுமொரு
சோலையிலே
பிரசாதம் வாங்கியுண்ண
ஞானகுரு அடிகள் பாதம் பற்றி
காலியான்குட்டிகள் மேய்கின்றன
மரபுக் குஞ்சு குசுமான்களை நயமாய்
நசுக்கும் வல்லமையும்
பிடித்துவிட்டால் தட்டிக் கொடுத்து
இலக்கிய ஏணியில் ஏற்றிவிடுவதும் பீதாம்பரபுரத்துக்கே ஏற்ற லயபாணி
புகழடைய பின்னொட்டு முன்னொட்டு
வைத்துப் பேசுவார்
கவனமடைய நகுமோ நகாதோ
தகுமோ தகாதோ
காணூடகக் கானலில்
காலை வருடுவார்
சமயங்களில் காலை
வாருவார்.
வாழ்க பீத்தல் பீதாம்பரம்
வளர்க அவர்தம் அடி தடி
வருடிகள்.
*********