புதூர் என்னும் சிற்றூரில்
பொன்னன் என்பவன் மனைவியோடு
பிள்ளைகள் இன்றித் தனியாக
பொறுப்பாய் வாழ்ந்து வந்தனன்…
உழைப்பில் கிடைக்கும் ஊதியத்தில்
உணவும் தேவையும் தீர்ந்தது
பிழைக்க வேறு நிலமில்லை
பெரிதாய் சொத்து ஒன்றுமில்லை..
வயது கொஞ்சம் கூடியது
வாட்டம் உடலில் சேர்ந்தது
வாரிசு இல்லா பொன்னனுக்கு
வறுமை நோயும் வந்துற்றது
பசிக்கு எதைத் தின்பது
பஞ்சம் அவனைச் சூழ்ந்தது
படுத்து உறங்கத் தொடங்கினான்
பாதியில் கடவுள் தோன்றிட்டார்..
தன்நிலை உரைத்தான் பொன்னன்
தங்க வாத்து ஒன்றினை
தந்தேன் என்றார் அவருமே
வீட்டின் முற்றம் மீதினிலே
வெள்ளை நிற வாத்தொன்று
வேடிக்கை யாக நடந்தபடி
உலவிடக் கண்டான் பொன்னன்.
நாளுக்கொரு தங்க முட்டை
நன்றாய் இட்டது வாத்து
நன்மைகள் சேர்ந்தது இல்லத்தில்
நலம் பெற்றது வாழ்வு..
வாழ்க்கை சுகமாய் நகர்கையில்
வசதிகள் வேண்டியே மனமும்
வலிய இச்சை கொண்டது
வாத்தின்மேல் கண் சென்றது..
ஒவ்வொரு நாள் ஒன்றாக
இடுவதால் பலன் போதவில்லை
ஒரே சமயத்தில் பலவாக
கிடைத்திட பணமும் சேருமே
என்றே ஆசை கொண்டனன்
அருவாள் எடுத்து வாத்தினை
இரு கூராய் பிளந்தனன்
ஒரு முட்டை மட்டுமே
உள்ளே இருக்க விழித்தனன்
பேராசை பிடித்து ஆட்டியதால்
பெருத்த ஏமாற்றம் கண்டனன்
போதும் என்ற நல்மனமே
போற்றி வாழ்ந்திட நன்மையே!