தொப்பை
என் கணவரின் தொப்பையை
காணும்போதெல்லாம்
அவரது முன்னாள் காதலியை
காண்பது போல கோபம் வருகிறது
தொப்பையால் ஒவ்வொரு முறையும்
அவருடைய சட்டை பட்டன்
விழுந்து தைக்கும்போது
ரேஷன் கடையில் கூட்டநெரிசலில்
மாட்டிக்கொண்டது போல கோபம் வருகிறது
ஒவ்வொரு முறையும் வாங்கும் சட்டை
அவரின் தொப்பைக்கு
பத்தாமல் போகும்போது
நான் ஆசையாக வாங்கிய சேலை
கட்டாமலே கிழிந்தது போல
கோபம் வருகிறது
என் தோழியின் கணவன்
கச்சிதமாக என் கணவரின் முன்
வந்து நிற்கும்போது
என் முன்னாள் காதலனைப் பார்த்தது போல
கோபம் வருகிறது
எப்போதும் என்னுடனே விளையாடும்
குழந்தை அவரது தொப்பையில்
அமர்ந்து விளையாடும்போது
எனக்கும் அதுபோல தொப்பை இல்லையே
என்ற கோபம் வருகிறது!
***
மெனக்கெடல்
எல்லாவற்றிற்கும் கொஞ்சம்
மெனக்கெடல் தேவைப்படுகிறது
நான் செய்வதை எல்லாம் சகித்துக்கொண்டு
என்னைக் காதலிக்கும் நீயும்
உன்னைக் காதலிப்பதை மறைத்து
கெஞ்ச விடுவதற்கு நானும்
கொஞ்சம் மெனக்கெடத்தான் வேண்டியுள்ளது
ஜோவாக இருக்க முயற்சிக்க நானும்
பரியனாக மாற முயற்சிக்கும் நீயும்
கொஞ்சம் மெனக்கெட்டுத்தான் ஆக வேண்டும்.
இந்த வாழ்வை
திகட்ட திகட்ட
காதலித்து செத்துபோக
கொஞ்சம் மெனக்கெடல்கள்
அவசியமாகத்தான் உள்ளது!
***
தனிமை
என் தனிமையின் இரவுகளை
கொஞ்சமும் கருணையில்லாமல் தின்றுகொண்டிருக்கின்றன
என் அறையின் நான்கு சுவர்களும்
மின்சாரம் இருக்கும்போது ஓடிக்கொண்டிருக்கும்
விசிறியாக அவ்வப்போது புத்தக வாசிப்பு
இருப்பினும் கடல் அலை போல
மனம் குமுறிக்கொண்டே இருக்கிறது
அவன் சிறு பாதங்களை கடலலையில்
நனைப்பது போல சற்று நேரம்
நனைத்துவிட்டும் இருந்துவிட்டும் போகட்டும்
என் அறையில் என்னுடன்
சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள்
உயிர்த்தெழுந்த இயேசுவைப் போல
என் அறை சுவர்கள்
என் தனிமையை விடுத்து
அவன் நினைவுகளை
இப்போது உயிர்போடு உண்ணட்டும்!
***
பேக்கிங்
விமான நிலையத்தில்
இரண்டு ஆண்டுகளுக்கு
தேவையான முத்தங்களை
கணவனின் கன்னத்தில்
பேக் செய்கிறாள் மனைவி!
*****