அலைபேசி அழைக்க புரண்டு படுத்தபடி எடுத்து அழைப்பை ஏற்றேன்.
“ஹலோ உதய்,அம்மா பேசறேன்டா..”
“ம்ம்.சொல்லும்மா..ஆமா…காலங்காத்தால கால் பண்ணிருக்க?”
“தூங்கிட்ருந்தியோ!!எழும்பலையா இன்னும்?மணி ஆறாயிட்டே!”
“இல்லம்மா….சரி, நீ சொல்லு…”
“அடுத்த வாரம் ஞாயித்துகெழமை அம்பைக்கு போனும்.நீயும் வா!”
“நா வர்லம்மா!
லோகு செத்தப்புறம் எனக்கு அங்க வர கஷ்டமா இருக்குமா,ஒனக்கு புரியும்னு நெனக்கிறேன்.சித்தி மொகத்த பாக்க முடியாது ..நீ போயிட்டு வா…” என்றேன் சிறிது தயக்கத்தோடு.
“அதுக்கில்லடா.நீ ஊருக்குப் போயும் மூனு வருசத்துக்கு மேல ஆகுதே வயல்ல அறுவடை நேரம் வேற,நம்மள ஆச்சி வரச் சொல்றாடா. நாம கண்டிப்பா வரணும்னு சித்தியும் சொன்னா,ஒன்ன பாக்கனும்னு ஆசப்பட்றா போல…” என்றாள் கமறிய குரலில்.
“நீ ஆஃபீஸ்ல லீவ் சொல்லிடு இப்பவே.”
மனதினுள் மேனேஜரிடம் எப்படி லீவ் கேட்கலாம் என ஒத்திகை பார்த்தபடி,
“சரிம்மா..வச்சர்றேன்.” என அழைப்பைத் துண்டித்தபடி கண்ணை மூடினால் மனதில் லோகு சிரித்தான். தற்போதைய சென்னை வாழ்க்கை தொண்டைக்குள் கசப்பாக இறங்கியது. சிறுவயதிலிருந்தே அம்பை வயல் வரப்புகளில் லோகு மற்றும் நண்பர் குழாமுடன் துள்ளித் திரிந்த காலம் வாழ்வில் என்றுமே மறக்க இயலாதது.வருடா வருடம் முழுப்பரிட்சை விடுமுறையில் அம்மாவுடன் சேலத்தில் இருந்து கிளம்பி அம்பையில் தான் ஜாகை. அம்மாவின் சித்தி பெண்ணின் மகன் தான் லோகு. ஆச்சி வீட்டிற்கும் லோகு வீட்டிற்கும் மத்தியில் தான் கனகு மாமா வசித்து வந்தார்.ஏறக்குறைய அலசி ஆராய்ந்து பார்த்தால் அந்த தெரு முழுவதுமே மாமன் மச்சான் வகையறாக்கள் தான். பொடிசுகள் தூங்கி எழுவது ஒரு வீட்டில். காலை டிபன் ஒரு வீட்டில். மதியச் சாப்பாடு ஆச்சி வீட்டில்…. இல்லையென்றால் கடிந்து கொள்வாள்.மணக்க மணக்க மீன் குழம்போ கருவாடோ தின்று தீர்த்து சிறுவர் குழாம் நகர்வலம் கிளம்பும்.
குளத்தங்கரையில் ஆடி முடித்து பொழுது சாய காய்கறி சந்தையினூடே நுழைந்து பராக்கு பார்த்தவாறு வீடு வந்து சேரும்.
அதில் லோகுதான் பெருந்தனக்காரன்.
கையில் எப்போதும் சில்லறை உண்டு.சில்லறைக்கு தக்கன டீக்கடையில் வடைகளோ உப்பு பிஸ்கட்டுகளோ கிடைக்கும். சித்தியின் ஒற்றைப் புதல்வன் லோகு. காடு கரை என்று ஏகப்பட்ட சொத்து, சித்தப்பாரு ஆள் நன்கு வாட்டசாட்டமாக இருப்பார்,கழுத்தில் விரல் தடிமனிற்கு தங்கச் சங்கிலி புரளும்.
வெள்ளை வேஷ்டி சட்டையோடு கைவசம் தினசரி நாளிதழுடன்கிளம்பிவிடுவார் வெளியே, தினமும் ஒரு சினிமா பார்க்கவேண்டும் அவருக்கு.தீபாவளி காலங்களில் புதுப்படங்கள் ரிலீஸானால் திருநெல்வேலி வரை சென்று இரண்டு நாட்களாவது ரூம் போட்டு அத்தனை படங்களையும் பார்த்து வருவார்.”அவனுக்கென்ன குடி பொகயிலன்னு பழக்கமில்ல. இருக்கற சொத்துக்கு ரெண்டு தலமொற ஒக்காந்து சாப்பிடலாம்.” என்பார்கள் ஊர்பெருசுகள்.
டவுனில் பார்த்த படத்தை நாடார் கடையில் உட்கார்ந்தபடி அலசுவார்.”அந்த கேமரா ஆங்கிள்லாம் பாக்கனுமே எப்பிடி எடுத்தானுகன்னே புரியாதுயா. நல்லா எடுத்துருக்கானுக படத்த….. நீர் என்னய்யா, பொறந்ததுலேந்து பொட்டலம் கட்டுறீர், ஒருநா செத்தும் போவீர்,அதுக்குள்ள வாழ்க்கைய ரசிக்க கத்துக்கிடுங்க,சினிமால்லாம் பாருய்யா,இதெல்லாம் வுட்டுட்டு….” என சலித்தபடி இருப்பார்.நாடாரும் ஆச்சர்யமாக செவி கொடுத்தபடி வியாபாரத்தை கவனிப்பார்.
இப்படி சித்தப்பா சினிமா கிறுக்காக சுற்றுவதால் விவசாயத்தை தன் தம்பி செல்வம் துணையோடு பண்ணையம் பார்த்து வந்தாள் சித்தி.புருசன் பொறுப்பில்லை எனத் தெரிந்ததும் ‘மொத்தத்தையும் கட்டிக் காக்கும் கெட்டிக்காரி’ என ஆச்சி சிலாகிப்பாள் சித்தியைப் பற்றி. சித்தி, சித்தப்பா இருவரும் சேர்ந்தாற் போல சிரித்துப் பேசி எவரும் பார்த்ததில்லை.இதன் காரணமாகவே ஒற்றைப் பிள்ளையான லோகு நான் அம்பைக்கு செல்லும் போதெல்லாம் என்னிடம் ஒட்டிக் கொண்டான்.
நினைவு தெரிந்த நாள் முதல் லோகுவுக்கும் எனக்கும் பாசப் பிணைப்பு உண்டு. சம வயதுக்காரன். சொந்தம் வேறு. கேட்கவா வேண்டும்?
நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. அதாவது சில வருடங்கள் முன் வரை… பத்தாவது முடித்து பேருக்காக டிப்ளோமா படித்தான் லோகு.நான் இன்ஜீனியரிங் கரை பக்கம் கோயமுத்தூரில் ஒதுங்கினேன்.
கல்லூரியில் சேர்ந்த பிறகு நட்பு வட்டம் பெருக ஆரம்பிக்க நான் லோகுவை மறக்கத் தொடங்கி இருந்தேன்.அம்மா மட்டும் ஊருக்கு போய் வரத் தொடங்கியிருந்தாள்.அம்பை மாறத் தொடங்கியது,சித்தப்பா அதே சினிமா கிறுக்கு பிடித்து அலைந்து கொண்டிருந்தார்.ஒரே மாற்றம் தற்போது வேற்று மொழி படங்களையும் பார்க்க ஆரம்பித்ததாக கேள்வி.
எப்போதாவது லோகு அழைப்பான் அலைபேசியில்.இவ்வாறாக மூன்று ஆண்டுகள் கடந்த வேளையில் திடீரென்று உடன் படிக்கும் பெண்ணைக் காதலிப்பதாக சொன்னான்.அந்தப் பெண்ணுக்கும் இவனை பிடித்திருப்பதாகவும் மூன்று ஆண்டுகள் கழித்து திருமணம் செய்யும் எண்ணமுள்ளதாகவும் கூறினான்.
பின் நள்ளிரவு தாண்டி ஒருநாள் அழைத்தான். நான் இறுதி செமஸ்டருக்கு படித்துக் கொண்டிருந்த வேளையாதலால் அவன் அழைப்பை ஏற்கவில்லை.மறுநாள் அம்மா அழைத்தாள், “லோகு செத்துட்டான்டா…” என்று.அதிர்ச்சியில் சத்தியமாக எந்த உணர்வும் தோன்றவில்லை. “எப்படி செத்தான், என்னாச்சு?” எனக் கேட்க,
“பாவிப்பய நைட்டு தூக்குல தொங்கிட்டான்டா,சித்திதான் பாத்துருக்கா,ஆளுங்கள கூப்பிட்டு ஹாஸ்பிட்டல் தூக்கிட்டு போய்ருக்கா,உயிரில்லன்னுட்டாங்களாம்…”
என அழுதாள்.
நாங்கள் போய் சேரும் நேரம் எல்லாம் முடிந்து விட்டது.வீட்டு வாசலை பெண்கள் சிலர் கழுவி விட்டுக் கொண்டு இருக்க வழியெங்கும் உதிரி ரோஜாவும் சாமந்தியும் ரோட்டில் சிதறிக் கிடந்தன…
எனக்கு அடிவயிற்றை பிரட்டினாற் போன்ற உணர்வெழ, அவன் இல்லாமையைக் காட்டிலும் ஏன் எதற்கு என்ற கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்க மனம் ஏங்கிற்று. உள்ளே சித்தி சுருண்டு கிடந்தாள் சொந்தங்களுக்கு மத்தியில்.:ராஜி…’ என அம்மாவின் குரலைக் கேட்டதும் நிமிர்ந்து பார்த்து வெடித்து அழத் தொடங்கினாள். “எதுக்குன்னே தெரியல, எதுக்கு இப்பிடி பண்ணான்னு புரியல, அவஞ்செட்டுப் பசங்ககிட்ட விசாரிச்சிட்டோம் ஒன்னும் தட்டுப்படல…” என்றனர் கனகுவும் செல்வம் மாமாவும்.நான் சித்தப்பாரை தேடி பின் செல்வத்திடம் கேட்டேன்.
“மாமா! சித்தப்பாரு??”
“அவரு கொள்ளி போட்டாரு அதோட சரி ஒரு சொட்டு கண்ணீர் வரலையே, அந்தா உள் ரூம்புல தான் இருக்காப்ல.”
போய் கதவைத் தட்டினேன்..
“சித்தப்பா!”
“சித்தப்பா!”
திரும்பவும் தட்ட கூட்டத்தில் இருந்து சிலர் எழுந்து வந்தனர்.. செல்வமும் கனகுவும் என்னோடு சேர்ந்து கொள்ள கதவை பலங்கொண்ட மட்டும் தள்ளிப் பார்க்க திறக்க முடியவில்லை. மேலும் சிலர் சேர்ந்து கொள்ள இம்முறை கதவு அசைந்து கொடுக்க,இடையே சித்தப்பாவை கூப்பிட்டபடி கலக்கத்தில் நான்! நடப்பவற்றை தலை தூக்கிப் பார்த்தபடி சலனமின்றி இருந்தாள் சித்தி.
“சீக்கிரம்யா… மயங்கி கெடக்கப் போறாரு உள்ள…. வெரசா தொறங்க” என கூட்டத்தில் ஒரு குரல் கேட்கவும் கதவு உடைபெறும் நேரமும் சரியாக இருக்க அங்கே உத்தரத்தில் தொங்கியபடி நிலைகுத்திய பார்வையுடன் சித்தப்பா….
காரியம் அனைத்தும் முடித்து கிளம்புகையில் ஆச்சி மாத்திரம் சொல்லிக் கொண்டே இருந்தாள்…
“சும்மாவா சொன்னாங்க, சிவன் சொத்து குலநாசம்னு…”
“என்னம்மா ஆச்சி என்னம்மோ சொல்லுது” என்றேன்.
“சித்தப்பா வழில ரெண்டு மூணு தலமொறயா பாபாநாசம் சிவன் கோயிலுக்குன்னு இருக்குற நெலங்களை குத்தகைக்கு எடுத்து பண்ணையம் பாத்தாங்க.பொதுவா ஒரு சொல்லு உண்டு ஊர்நாட்ல. சிவன் கோயில் சொத்தை எந்த வழியிலும் நாம அனுபவிக்கக்கூடாது. மீறினா குலம் தழைக்காதுன்னு,ஆனா சித்தப்பாரு வழில அவுக தாத்தாவுக்கு இது பேர்ல எல்லாம் நம்பிக்கை இல்ல,ஆனாலும் அவங்க குடும்பத்துல ஒன்னு ரெண்டு சரியில்லாத சாவு நடக்கத்தான் செஞ்சுச்சு.செத்துப் போன சித்தப்பாருக்கு இதுலெல்லாம் நம்பிக்கை இல்ல,இப்ப காரணமே இல்லாம இவங்க ரெண்டு பேரு சாவ பாத்தா ஆச்சி சொல்றத நம்புறதா வேணாமான்னு தெரில” என்றாள்.
எல்லாம் முடிந்து அம்மாவை சேலத்தில் விட்டுவிட்டு கோவை கிளம்பினேன்.
ஹாஸ்டல் ரூமில் நுழைய, டேபிளில் என் பெயர் தாங்கிய கவர் ஒன்று கிடந்தது. ஷோல்டர் பேகை கட்டிலில் போட்டு கவரை கையிலெடுத்தேன்.அறை நண்பன் விசிலடித்தவாறு நுழைந்தான், ஹேய் நீ ஊருக்குப் போன ட்டூ டேஸ்ல இது வந்துச்சுடா ஒனக்கு” என்றான்.
கவரை திருப்பிப் பார்க்க,அனுப்பியவரின் பெயரில்லை.சுவாரஸ்யமாக கவரை கிழித்து உள்ளே நான்காக மடிக்கப்பட்டிருந்த தாளைப் பிரித்தேன்.
கொட்டை கையெழுத்தில் லோகு,
“அன்புள்ள உதய்…” என ஆரம்பிக்க..
வியர்த்து படபடத்த நெஞ்சோடு படிக்க ஆரம்பித்தேன்.
“அன்புள்ள உதய்
நீ இதை படிக்கும் போது நான் உயிருடன் இருப்பேனா என்று தெரியவில்லை.
நேற்று மீராவை கூட்டிக் கொண்டு மாலை நேர முதற்காட்சி சினிமாவிற்கு சென்றேன். படம் ஆரம்பித்து அரைமணியில் மீரா பின்னால் திரும்பிப் பார்த்தபடி இருந்தாள்.பின் இருக்கையில் எவனோ அவளிடம் அத்துமீறுவதாக தெரிவித்தாள். கோபம் கொண்டு நான் தலை திருப்பியவுடன் இருட்டில் அவன் அடங்கினாற் போல தெரிந்தது. இடைவேளையில் வெளியே செல்லும் போது கூட்ட நெரிசலில் அவள் உந்தித் தள்ளப்பட்டாள்.நிலைகுலைந்தவாறு மீராவும் பின்பக்கமிருந்து அவள் மாரை கசக்கியபடி நம் அப்பாவும்…!”
இதற்கு மேல் எதுவும் எழுதப்படவில்லை.
நான் வெகுநேரம் கவரை கையில் வைத்தபடி இருந்தேன்.எவ்வளவு மனஉளைச்சலில் அவன் என்னை அழைத்திருப்பான் இறுதி முயற்சியாக
என்று மனம் நொந்தேன்.
பின்னர் மிகுந்த பிரயத்தனப்பட்டு சில நாட்களுக்குப் பிறகு மெல்ல இயல்பு வாழ்க்கையில் மூழ்கத் தொடங்கினேன்.
இதோ இப்போது அம்மா அழைக்கிறாள் அம்பைக்கு…
லோகுவின் கடிதமோ,சித்தப்பாரை பற்றிய பிம்பமோ எனக்கு வேண்டாமெனத் தோன்றியது.
ஊரின் சொல்லைப் போலவே சிவன் சொத்து குலநாசம் என்று நானும் நம்பத் தொடங்கினேன். அதுவே சுலபமாக இருந்தது நடந்து முடிந்த நிகழ்வைக் காட்டிலும்.