“அய்யோ 8.55 ஆச்சே…” நாராயணி ஈரமுடியை அவசரமாக வரட்டி இழுத்ததில் கொத்தாக சீப்போடு வந்தது. இப்படிக் கொட்டினால், நேற்று சாயிபாபா கோவிலில் பார்த்த அந்த நடுத்தர வயதைத் தாண்டிய அம்மிணியின் கொண்டையிலிருந்து தொடங்கி அங்காங்கே பிரிந்து தெரிந்த வழுக்கை போல் ஆகிவிட்டால் என்று நினைத்தபோதே பகீரென்றது. கொஞ்சம் மெதுவாகத் தலை வாரினால் முடி இப்படிக் கொட்டாது. நேரமில்லையே. வழக்கம் போலத்தான் எழுந்திருந்தாள். வெள்ளிக்கிழமை ஆகவே தலைகுளியல். விளக்கு பூஜைக்குப் போட்ட ஹிருதய கமலம் தவறித் திருக அழித்து மீண்டும் போட வேண்டியிருந்தது. பூஜையன்று தினப்படி வேலையை விட இன்னும் கொஞ்சம் அதிகமான வேலைகள் இருக்கும். முன்பெல்லாம் வெள்ளிக்கிழமையென்றால் வீட்டிலிருந்து பணி செய்யும் வசதியை எளிதாக எடுத்துக் கொள்ள முடிந்தது. நினைவுகளை ஓடவிடும் ஒவ்வொரு வினாடியும் பதட்டத்தைக் கூட்டியது.
“பூஜை செய்துட்டு வெறும் வயிறா கிளம்பக் கூடாது காப்பியாவது குடி”
“நீங்க வேற அத்த, சுரேஷ் வண்டியில போகனும் இன்னிக்கி அவர் மட்டும் தான் ஓல்ட்மெட்ராஸ் ரோட் வழியா போறவரு, விட்டா ஆபீஸ் போகவே ஒன்றரை மணி நேரம் எடுக்கும். தினம் பத்துமணிக்கு மீட்டிங் வேற, படுத்தாதீங்க”
“இவ்வளவு பேசற நேரத்துக்குக் குடிச்சிட்டுப் போ” காப்பியைக் கையில் திணித்து மிரட்டும் தொனியில் அத்தை பார்த்த பார்வையிலேயே அதைக் குடிக்க வேண்டிய அவசியமாயிற்று. பதட்டத்தில் கொஞ்சம் புடவை மேல் ஊற்றிக் கொண்டாள். “இதுக்குத் தான் சொன்னேன் இத துடைக்கக் கூட நேரமில்ல”
“கையில் பாட்டில் வைச்சி இருக்கல, கார்ல உட்கார்ந்ததும் துடைச்சிக்க”
“மினரல் வாட்டர்ல கற துடைக்கவா?”
“அதுக்கென்ன..”
அவள் ஓடியவேகத்தில் அரை வினாடியில் மின் தூக்கிக்குள் இருந்தாள். கையிலிருந்த குடிநீர் பாட்டிலைத் திறந்து கொஞ்சம் தண்ணீரைக் கையில் எடுத்த போது ‘ஸ்டிர்க்’ மின் தூக்கி கதவு அடுத்த மாடியில் நின்றதும் அதன் கதவை யாரோ திறந்தார்கள். அவள் அவசரம் புரியாமல் நான்கைந்து பேர் கொண்ட குடும்பம் மெதுவாக ஒவ்வொரு சாமானாகக் கொண்டு வந்து நிறைத்துக் கொண்டிருந்தார்கள். மின் தூக்கி “கீக்கீக்கீக்கீக்” என்று கத்தத் தொடங்கியது வேறு தலைவலியைக் கூட்டியது. ‘ஸ்டிரக்’ மின் தூக்கி மௌனமானது. அதன் மோட்டார் இயங்கத் தொடங்கியது.
‘ஓ இந்தக் காதலென்னும் பூதம் ஏன் என்னை கொல்லுகின்றதே’
“ஹல்லோ”
“டி என் நீங்க ஆபீஸ் வரீங்களா? நான் நீங்க எப்போவும் வர ஸ்பாட்ல இருக்கேன். உங்க போன் ரிச் ஆகலையே”
“ஓ சாரி. ஒரு நிமிசத்துல கேட்ல இருப்பேன். லிப்ட்ல இருந்தேன் அப்ப கூப்பிட்டு இருப்பீங்க”
“ஓகே சீக்கிரம் வாங்க”
அந்த குடியிருப்புப் பகுதியின் நுழைவாயில் வரை செல்ல எப்படியும் மூன்று நிமிடமாவது ஆகும். சுரேஷ் உடைய முறை இன்று. ஶ்ரீதர் என்றால் கொஞ்சம் காத்திருப்பான். இவன் சரியான முசுடு. இன்னிக்குன்னு பார்த்து இவனா? எதிரில் பூவரசமரத்தில் இலைகள் இவள் அவசரம் தெரியாது மிக அழகாகக் காற்றில் ஆடிக்கொண்டிருந்தன. நேற்று பெய்த மழையில் தூசிகளெல்லாம் கழுவி விடப்பட்டு, நேசிக்கும் மணாளனுடன் முதல் கூடலுக்குப் பின் துலங்கும் பெண் முகம் போல மிக வசீகரமாக இருந்தது. அதைக் கடந்த போது பூ ஒன்றைத் தலையில் போட்டு ஆசிர்வதிப்பது போலப் புன்னகைத்தது. டரம்பெட் இசைக்கருவி போல் விரியும் அதன் இதழ்களை, கண்ணைக் கவரும் மஞ்சள் நிறத்தை, இலைகளில் தளிர் பசுமையை ரசித்து ஒருநொடி நிற்கலாம்.
‘ஓ இந்தக் காத’
“இதோ அர நிமிசத்துல வரேன். லிப்ட் ல லேட் ஆயிடுச்சி”
வேகவேகமாக ஓடினாள் இதயம் நின்றுவிடுவது போலிருந்தது. நுழைவாயில் எதிர்ப்பக்கம் சாலையைக் கடந்து செல்ல வேண்டும் பெரிய பெரிய வாகனங்கள் சாலையில் விரைந்து கொண்டிருந்தன. சுரேஷ் இவளைப் பார்த்துவிட்டான். அவன் இன்சினை ஆன் செய்தான். பெரிய வாகனம் ஒன்று வந்து கொண்டிருந்தது. ஆயினும் அது கடந்து போகும் வரை சுரேஷ்க்குப் பொறுமையிருக்காது, கொஞ்சம் வேகமாக சாலையைக் கடந்தாள். எதிர்ப்பக்கம் வந்து கொண்டிருந்த கனரக வாகனம் “கிர்ர்ர்ர்ர்” என்று சட்டென பிரேக் போட்டு நின்றது. இவளைக் கண்டபடி திட்டத் தொடங்கினான். அந்த வாகனத்தின் ஓட்டுநர். வேகமாகப் போய் காரில் அமர்ந்தாள். வாகனத்தைச் செலுத்தத் தொடங்கியவன்.
“நீங்க ஒரு ஐஞ்சி நிமிசம் முன்ன கிளம்பனும். அப்ப இப்படி எல்லாம் ஆகாது. இப்படி க்ராஸ் செய்தா சீக்கிரம் போய்ச் சேர வேண்டியது தான்”
“இல்ல ஆர்.எஸ் வெள்ளிக்கிழமை அதான் லேட். குட்மார்னிங் எம்.எஸ்”
“மார்னிங். கொஞ்சம் சீக்கிரம் கிளம்பி நிதானமா வரலாமே”
“உங்களுக்குத் தெரியாதா எம்.எஸ் நம்ம டீம் பிரசர். நேத்து ரொம்ப நேரம் வொர்க் பண்ணிட்டு இருந்தேன். அதான் காலையில் நேரமாயிடுச்சி”
“ஆமா நான் பார்த்தேன். மெயில் கூட ஒரு மணிக்குப் போட்டு இருந்தீங்க. உங்க குரூப்ல மத்த மூணு பேரும் ரிலக்ஸ்டா இருக்காங்களே”
“நம்ம மேனேஜர் பத்தி உங்களுக்குத் தெரியாது. யார் கிட்ட முடியுமோ அவங்களைத் தான் டார்சர் பண்ணுவாரு.”
“ஏன் உங்க டீம்லதான் ரொம்ப கூல்ன்னு பேசிக்குவாங்க இப்ப என்னாச்சி “
“அது ஏன் கேட்கறீங்க…”
அவர்கள் இருவரும் பேசத் தொடங்கினார்கள். வண்டி ‘ஹாட் கிராஸ்’ போக்குவரத்து விளக்கின் சமிக்ஞைக்காக நின்றது. பக்கத்திலேயே சக்தி நிறுவனத்தாரின்பண்ணை வீடு தெரிந்தது. அங்கே வெள்ளை சாமரம் போல, அலங்கார ஊற்றாய்ப் பூத்திருந்த சம்பக்கா மரம் பார்க்க அழகாக இருந்தது. சிவந்து மணி வடிவில் பழுக்கத் தொடங்கியிருந்தன அதன் பழங்கள். அதைப் பார்த்ததும் அவள் வேகமாக நடந்து வந்து வண்டி ஏறிய படபடப்புக் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிக் கொண்டிருந்தது. குடுவை வடிவிலுள்ள மிகப் பெரிய பலூன் ஒன்றை ஊதியதை வைத்துக் கொண்டு ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். இடுப்பில் குழந்தை. அனன்யாவின் நினைவு வந்தது. இப்படிக் குழந்தையைக் கூடவே பணிக்கு அழைத்துச் செல்லும் வசதியிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். காலையிலேயே பாலைப் பிதுக்கிப் பாட்டிலில் அடைத்து வைத்து விட்டு வருவதும் அது தீர்ந்ததும் மாலை அவள் திரும்பும் வரை குழந்தைக்கு வேறு ஏதாவது தருவதும் என்ன பிழைப்படா என்றிருந்தது. வேலையை விட்டுவிடலாம். இந்த வேலை அது சம்பளம் மட்டும் தானா?
பன்னிரண்டாம் வகுப்புப் படிக்கும் போது கணிணி அறிவியல் புதிய பாடமாக அறிமுமாகி இருந்தது. பெபினாக்கி சீரிஸ் ப்ரோகிராம் எழுதுங்கள் என்ற வீட்டுப்பாடம் கொடுத்திருந்தார் கணிணி படிப்பிக்கும் ஆசிரியை. தூக்கும் வரை எப்படி எழுதுவது என்றே புரியவில்லை. உறக்கம் வரும் கணம் முன்னர் கூட்டியதற்கு அடுத்த எண்ணை கூட்டினால் என்று அதற்கான தீர்வு கிடைத்தவுடன் உறக்கம் மறந்துபோனது. மறுநாள் அதைக் கணிணியில் எழுதி ஓட்டியதும் உருவான 1,2,3,5,8,13,21 என்ற வரிசையைக் கண்டதும் கிடைத்த போதை. அந்த அறிவு போதை அது தரும் மதமதப்பு. நான் தான் ராணி என்ற எண்ணம். பிரபஞ்சமே என் பிடிக்குள்ளே என்று தோன்றிய அந்த கணம். அந்தப் போதை கொழுத்தும் நெருப்புக்கு எரிந்து சாம்பல் ஆவது ஒன்றா இரண்டா அவற்றில் எத்தனை உணர்வுகள் அடக்கம்.
“ஹலோ டெல்மி பி.எஸ். ஓஹ் ஓ. ஓகே டேக் கேர். ஐ வில் டேக் அப் தி ஹீட் டுடே. ஆனா நேத்து ஒரு அசைன்மென்ட் டிஸ்கஸ் பண்ணோமே அதுக்காக டீட்டல்ஸ் மட்டும் அனுப்பிடுங்க நான் அவங்கள இழுத்துப் பிடிக்க அது சரியாக இருக்கும். அப்பறம் நேத்து நல்லாத் தானே இருந்தீங்க திடீருன்னு என்ன ஆச்சி? … ஓ அப்படியா. யூநோ த கிரிட்டிகாலிட்டி, ம்ம் நீங்க அந்த இரண்டு வேலை மட்டும் பண்ணிட்டு இன்னிக்கி லீவ் போட்டுடுங்க. அது ஒரு 2 ஹார்ஸ் எடுக்குமா? … ஓ அப்படியா. சரி ம்ம் அது மட்டும் பண்ணிடுங்க நான் பார்த்துக்கறேன். டேக் ஏ குட் கேர். நல்லா தூங்கி ரெஸ்ட் எடுங்க நாளைக்கு ஆபிஸ் வந்தாப் போதும்”
ஹும்க்கும் ரொம்பத் தான் அக்கறை என்று நினைத்துக்கொண்டாள். இந்த மேலாளர்களே இப்படித்தான். சுரேஷ் அவன் கீழ் பணிபுரியும் ஸ்வேதாவுடன் உரையாடலை முடிக்காமல் இன்னும் வேலைகளை சார்ந்து பேசியபடி வண்டியைத் தொடந்து ஓட்டிக் கொண்டிருந்தான். கடந்தமுறை எனக்கு இரண்டு நாள் காய்ச்சல் வந்த போதும் இப்படித் தான் மேலாளர் தொடர்ந்து தொலைபேசி விபரங்களைக் கேட்டு நச்சரித்துக் கொண்டே இருந்தான். ஜூரத்தை விட அதுதான் மூளையை அதிகம் களைப்படையச் செய்தது. பிறபணிகளில் ஆறுமணியானால் நடையைக் கட்டிவிடலாம். இங்கே அப்படி இருக்க விடுவதில்லை. சரி வேலைப்பளு குறைவான சமயத்திலேனும் விட்டுப் பிடிக்கிறார்களா? எண்ணெய் எடுக்கவேண்டுமோ இல்லையோ செக்கு சுற்றி சுற்றி வரவேண்டும். கழுத்தில் அடையாள அட்டையை மாட்டிய உடனேயே பிணை மாடுகளாக தொழில்நுட்ப நிறுவனங்கள் மாற்றி விடுகின்றன.
கள்வேறி பாலத்தின் மேலிருந்து பார்த்த போது போக்குவரத்து காவலாளிகள் குடியிருப்பில் புளிச்சங்காய் மரங்களும் அதன் சிவந்த மலர்களும் அழகாய்த் தெரிந்தன. குரங்கு ஒன்று அந்தமரத்தில் ஏறிப் புளிச்சங்காயை முகர்ந்து பார்த்து விட்டு அடுத்த கிளைக்குத் தவ்விக் குதித்தது. அதில் நட்சத்திரவடிவில் மலர்ந்திருந்த மலர்கள் அதன் காலில் நசுங்கிக் கீழே உதிர்ந்தன. அந்தக் குரங்கிற்கு அந்தக் கனி புளிச்சகாய் என்று தெரிந்ததும், தெரிந்தே உண்ணும் போதையில்லை. பலாத்தூர் ஜங்சனில் அளவுக்கு அதிகமான போக்குவரத்து நெரிசல் இருந்தது. “ஆஃட்டர் எய்ட் பார்ட்டி எவ்வெரி செகண்ட் கவுன்ஸ் நாம ஐந்து நிமிஷம் லேட் அதான் டிராபிக் ஆயிடுச்சி, பத்துமணிக்கு ஸ்டேன்அப் மிட்டிங்க் வேற” தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தபடி ஶ்ரீதர் சொன்னான். வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்த நாராயணி எதுவும் சொல்லவில்லை.
எதுக்கு இந்த ஸ்டேண்ட்அப் மீட்டிங்? தினம் ஸ்டேடஸ் அப்டேட். வாரம் முடிவில் ஸ்டேடஸ் அப்டேட், டைம் சீட், லாகின் லாக் அவுட் டைம் டிரேக்கர், மூன்று மாதத்திற்கொரு முறை கோல் செட்டிங்க், அப்பரைசல் எதற்காக இத்தனை விதமான கண்காணிப்புக் கருவிகள். இந்த நிறுவனத்துக்கு வந்த புதிதில் இத்தனை திட்டங்கள் இல்லை. அப்போது அமெரிக்க கலாச்சாரமாக ஆறுமணி நேரம் வேலை செய்தால் போதுமானதாயிருந்தது. ஆனால் இப்போது ஒன்றன்பின் ஒன்றாக இதெல்லாம் அறிமுகமாகிறது அதிலும் அமெரிக்காவில் பணிபுரிபவர்களுக்கு இத்தனை கட்டுப்பாடுகள் இல்லை, இது இந்திய மனநிலை. மரத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தால் எப்போது கனி தருவாய் என்று கேட்டுக்கொண்டே இருந்தால் மடியில் வந்து கனி விழுமா என்று இவர்களுக்கு தெரியாதா என்ன? சும்மா அதிகாரம் காட்ட வேண்டுமே.
ஷபெல் மார்கெட் அருகே எடுக்க வேண்டிய வளைவில் என்றுமே இல்லாத அளவு வண்டிகள் நின்று கொண்டிருந்தன. ஏதோ சாலை விபத்துக்கான எல்லா முகாந்திரங்களும் இருந்தன. ஒருசிலர் வண்டியை நிறுத்த முயற்சி செய்த போதும் சுரேஷ் வண்டியைக் கொஞ்சம் கூட நிறுத்தவோ ஓரங்கட்டவோ இல்லை. கண்ணாடியை இறக்கவுமில்லை. இங்கே மனிதாபிமானம் குறைந்துவிட்டது. உயிர் போகும் அவசரமென்றாலும் உதவிக்கு யாரும் வரமாட்டார்கள் என்று சொல்லிக் கொண்டே வண்டியை ஓட்டினான் சுரேஷ். வாகன நெரிசலில் எல்லோருமே ஒலிப்பானில் எழுப்பிய ஓசை பலங்கொண்டு ஒலித்தது. அருகிலிருந்த சாலையோரமிருந்த பலாமரத்தில் பலாப்பழம் கையேட்டும் தூரத்திலேயே பழுத்திருந்தது. சப்போட்டோ கனி மரங்களும், மாமரமும் கொத்துக் கொத்தாகக் காய்த்துத் தொங்கிக் கொண்டிருந்தன. மணி ஒன்பதே முக்கால் ஆகி இருந்தது. எவ்வளவு வேகமாகப் போனாலும் பத்து மணிக்கு அலுவலகம் போக முடியாது. கைபேசியிலிருந்து மீட்டிங்கில் கனெக்ட் ஆகலாம். ஆனால் மேலாளருக்கு அவள் இன்னும் அலுவலகம் வராதது தெரிந்து விடும். வண்டியுள்ளே ஏசி ஓடிக்கொண்டிருந்த போதும் அவளுக்கு வியர்த்தது. வெளியில் தெரிந்த விதவிதமான பழத்தோட்டங்கள் சற்றே தொலைவில் தெரிந்த ஏரி அதில் அமர்ந்தும் பறந்தும் ஆனந்தமாய்த் திரிந்த பனங்காடை இதில் ஏதேனும் ஒன்று நேரத்தைப் பின்னுக்கு தள்ளி வைத்தால் எவ்வளவு நிம்மதியாக இருக்குமென்று யோசித்தாள்.
ஓல்ட் மெட்ராஸ் சாலையில் வண்டி வேகமெடுத்தது. பங்கனபள்ளி வரும் வரை மிகவேகமாக வாகனத்தைச் செலுத்தினான் சுரேஷ். அவளுக்கு இது பாகாலூர் இல்லையோ மறந்து ஏதோ வேறு ஊரில் ரன்வேயில் பறக்கத் தயாராகும் விமானம் ஒன்றினுள் இருக்கிறோமோ என்று தோன்றியது. பங்கனபள்ளிக்குப் பிறகு மீண்டும் பாகாலூர் மெல்ல மெல்லத் தெரியத் தொடங்கியது பெரிய பெரியகுடைகள் போன்ற தூங்குமூஞ்சி மரங்களைக் கடந்து காராபுரம் பாலத்தின் பாதியை அடையும்போது பத்துமணிக்கு நான்கு நிமிடங்கள் பாக்கி இருந்தன. நல்லவேளையாக பாலத்தின் மேல் போக்குவரத்து நெரிசல் மிகக்குறைவாக இருந்தது. அலுவலக வளாகத்தில் நுழைந்ததுமே அங்கிருந்த குளுமை ஒட்டிக்கொண்டது. அலுவலகம் தரைத்தளத்தை அடையும் முன்னரே இறங்கிக்கொள்கிறேன் என்றாள் நாராயணி.
சுற்றும் முற்றும் விரிந்த பசுந்தரை. தொலைவில் தன்னந்தனியே ரசிப்பவர்கள் யாருமற்று சோகமாய் பொங்கும் நீருற்று. இடையிடையே பலவிதமான பூச்செடிகள். விதவிதமான வண்ண அலங்காரச் செடிகள். எங்கிருந்தோ இடம் மாறிவந்து கான்கிரிட் காடுகளுக்குள் வந்து தவிக்கும் தவிட்டுக் குருவிகள். இறங்கிப் பசுந்தரையில் இடையிடையே பதிக்கப்பட்ட கற்களில் கிட்டத்தட்ட ஓடினாள் நாராயணி. மின் தூக்கியில் எந்த மனநிலை பாதிக்கப்பட்டவனோ ஏறி இருக்கவேண்டும். எல்லாத் தளங்களின் எண்ணையும் அழுத்தி விட்டிருந்தான். நாராயணி கைபேசியைப் பார்த்தாள் பத்து ஒன்று. ஏழாம்தளம் செல்ல வேண்டும் இன்னும் நான்கு நிமிடங்களாவது ஆகும், டைம்பாமில் கடைசி வினாடிகள் ஓடிக் கொண்டிருந்தது போல உணர்வு ஏற்பட்டது. யாரேனும் மீட்டிங்கை கான்பிரன்ஸ் ஹாலிலிருந்து தொடங்கி இருந்தால் தப்பிக்கலாம். இல்லையென்றால் மடிகணிணியை திறந்து, கடவு சொல் போட்டு மீட்டிங்க் உள்ளே நுழைய இன்னும் மூன்று நிமிடங்களாவது தேவைப்படும். தாமதம் என்பது தெரியவரும். அலுவலகத் தளத்தை அடைந்ததும் வீரியமான மல்லிகை நறுமணம் மூக்கைத் துளைத்தது. தும்மல் வந்தது. ‘ஏன் இவ்வளவு ஸ்டாரங்கா ரூம்பிரஷ்னர் போடறாங்க’ என்ற முனகியபடி அடையாள அட்டையை எடுக்க பையைத் துழாவினாள்.
அவசரத்துக்குக் கையை விட்டால் சட்டைப் பையிலேயே கை நுழையாது என்பது போலவே அடையாள அட்டையை பையில் எடுப்பதற்குள் பத்துப் பொருள்கள் கீழே விழுந்தன. “அதை எல்லாம் எடுத்து வையுங்கள் மீட்டிங் முடித்துவிட்டு வந்து எடுத்துகறேன்” என்று வரவேற்பில் அமர்ந்திருந்த காவலாளியைப் பார்த்துச் சொன்னவள், கதவைத் திறக்கும் அந்த இடைப்பட்ட நேரத்துக்குள், “இல்ல அதெல்லாம் என்டெக்ஸ்க்குல வைச்சிடுங்க” என்று சொல்லிவிட்டு மீட்டிங் வழக்கமாக நடக்கும் இடம் நோக்கி நடந்தாள். என்னவெல்லாம் விழுந்திருக்கும். கண்டிப்பாக முக்கியமான எந்தப் பொருளும் அங்கே வைத்திருக்க மாட்டேன் என்று சமாதானம் செய்து கொண்ட போதே கான்பிரன்ஸ் ஹால் வந்துவிட்டது. அங்கே ஒன்றிரண்டு பேர் இருந்தார். “மீட்டிங் லின்க் கனெக்ட் ஆகல” என்றதும் தான் அவளுக்குக் கொஞ்சம் ஆசுவாசம் வந்தது. “நீங்கள் கனெக்ட் செய்யுங்க நா போய்த் தண்ணி குடிச்சிட்டு வந்துடுரேன். நான் இருக்கேன்னு சொல்லிடுங்க, கடைசியா என்னோட அப்டேட் தந்துக்கிறேன். ஐ வில் பி பேக் இன் டூ மின்ஸ்”
காப்பிடேரியா நோக்கி நடந்தாள். அங்காங்கே வைக்கப்படிருந்த மணிப்ளான்ட், சின்னச் சின்ன மூங்கில் தாவரங்கள். அதன் இலைகளைத் துடைத்துக் கொண்டிருந்தவன் அவள் நடைவேகத்தைப் பார்த்து ஒதுங்கி நின்றான். ரம்மியமான வெளிர் நீலநிறமும், மயக்கும் பச்சையிலுமான வெல்வெட் மெத்தைகள் கொண்ட நீண்ட ஷோஃபாக்களும் அமைந்திருந்த அந்த நடுப்பகுதியைக் கடந்தால் கணக்குவழக்கு இல்லாத அலங்கார விளக்குகளும், விதவிதமான ஓவியங்களும் ஒரு ஐந்துநட்சத்திர விடுதி போலிருந்தது அவர்களது அலுவலகத்தளம். மின்னலொன்று பறந்து செல்வது போலச் சில வினாடிகளிலுள்ளேயே காப்பிட்டேரியா உள்ளிருந்தாள். அங்கே 52 அங்குல பெரிய தொலைக்காட்சிப்பெட்டி மிதமான ஒலியில் அவளுக்கு மிகப் பிடித்த பாடலொன்றைக் காட்டிக்கொண்டிருந்தது. அதெல்லாம் பார்க்க நிதானமான நேரம் என்றாவது வாய்க்குமா என்று ஏங்கிக்கொண்டே, பதட்டத்தோடு தண்ணீரை அருந்தும் போது விக்கிக் கொண்டது. திரும்பும் போது கம்பெனி ஜிஎம் எதிர்பட்டார். அவருடைய உற்சாகமான நடை துள்ளலோடு வயதுக்கு சற்றும் பொருந்தாமல் இருந்தது.
“நாராயணி வாட்ஸ் அப்”
“ஐ அம் பைன் ஹௌவ் இஸ் யுவர் ஹெல்த், ஹெவ் எ மிட்டிங் சோ ஹெவ் டூ ரஸ்”
“ஓகே ஒக்கே யூ ஆர் லிட்ரலி ரன்னிங் டேக் கேர்”
வரவர இந்த வழக்கை மண்டையனைப் பார்க்க மிகவும் எரிச்சல்தான் வருகிறது. ஒழுங்காக இருந்த மேனேஜர்க்கு இந்த மீட்டிங் நடத்து அந்த மீட்டிங் நடத்து என்று ஆலோசனை சதித்திட்டம் தீட்டித் தருவது இந்த ஆள் தான். பேச்சு மட்டும் பார் என்னவோ தேனாய் ஒழுகி தேங்காயாய் விளைந்தது போல. திருடன். தனக்கு வேலையில்லன்னா அடுத்தவனைச் சாத்தானாக்க வேண்டியது. முகரையும் தொங்கிப்போன வாயும். கடந்தமாதம் தான் ஹார்ட்அட்டாக் வந்தது அப்படியே ரிட்டயர்டு ஆகி விடுவான் கம்பெனி உருப்படுமென்று பார்த்தால் மறுபடி வந்து சேர்ந்துட்டான் தொங்கின மூஞ்சிக்காரன், கோணவாயி கோட்டான். இரிட்டேட்ங் இடியட்.
அவள் மீண்டும் மிட்டிங் அறையில் நுழைந்த போது பாதி பேர் தங்களுடைய தினப்படி வேலையின் முன்னேற்றங்களைச் சொல்லி முடிந்திருந்தனர். மேனேஜரின் குரல் ஒலித்தது ‘நாராயணி ஹாஸ் கம் பேக்?’ “யெஸ் பி ஜே ஐ ம் தேர்” ‘ டி என் யூ ஆர் லேட் அல்மோஸ்ட் எவரி அல்டர்நேட் டேஸ் கேன் யூ அப்பேட் ஆன் ஸ்டேட்டஸ் அன் தி டிபென்டென்சி’ நீங்கள் எனக்கு அப்பறம் இரண்டு மணி நேரம் கழித்துத்தானே வரீங்க என்று நினைத்தவள், ஆனால் அப்படிக் கேட்டால் முடியாது. இன்னும் கொஞ்ச அதிகம் கெடுபிடி தான் ஆகும் வேற எதுவும் நிகழப்போவதில்லை என்று நினைத்து கொண்டே தன்னுடைய வேலைகளைப் பற்றிப் பேசினாள். ‘பாஸ்ட் டூ டேஸ் யூ ஆர் அட் தே சேம் டாஸ்க். நோ மோர் டைம் ஃபார் திஸ் ப்ராப்ளம். ஐ நீட் அ க்ளோசர் ஃபார் திஸ் பிராப்ளம் பை என்ட் ஆப் தி டே’ அதெப்படி நாள் முடிவதற்கு இந்த வேலையை முடிக்க முடியும். கடந்த இரண்டு நாட்களாக இது தான் பிரச்சனை என்று தடயங்களே கிடைக்கவில்லையே. இதென்ன கட்டடம் கட்டும் வேலையா இத்தனை செங்கல் வைக்க இவ்வளவு நேரம் ஆகும் இவ்வளவு உயரம் கட்ட இவ்வளவு நாள் ஆகுமென்று சொல்ல அறிவு கெட்ட டேமேஜர் என்று சொல்லத் தோன்றியது.
வேலை செய்யும் இடம் ஆறுக்கு எட்டுச் சதுரத்தில் நான்கு மூலைகளிலும் நான்குபேர் அமரும் வண்ணம் கண்களுக்கு இதமான நிறத்தில் மரத்தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது. எல்லாவித அலங்காரங்களும் பகலும் எரியும்விளக்குகளும், இது வேறு உலகமென்றிருந்தது. நெருக்கமாக அமைக்கப்பட்டிருந்த இந்த அமைப்பைப் பார்க்கும் போதெல்லாம் நாமக்கல் திருச்சி ரோட்டில் கடக்கும் போது காணும் கோழிப்பண்ணையே நினைவுக்கு வந்தது. கோழிகளை அடைத்து வைத்து ஒருபுறம் தீனி போட்டு மறுபக்கம் முட்டையை எதிர்பார்க்கும் முதலாளிகளுக்கும் இந்த ஐடி நிறுவனங்களும் அதிக வேறுபாடு இல்லை.
மூளையைக் கசக்கிச் சிக்கலைக் கண்டறியும் சிறுசிறு முன்னேற்றங்களைக் கட்டமைத்துக் கொண்டிருந்தாள். சிறுநீர் கழிக்கப் போகவேண்டும் போலிருந்தது. ஆனால் செயலியில் செய்த மாறுதல்கள் தீர்வை நோக்கி நகர்த்தி இருக்கிறதா என்று காணும் ஆர்வத்தில் ஒருமுறை செயலியை இயக்கி பார்த்துவிட்டுச் செல்லலாம் என்று நினைத்தாள். அதன் பின்னர் அடுத்த படி அடுத்த படி என்று ஏறிக்கொண்டிருந்ததில் சிறுநீர்கழிக்கும் உணர்வு ஏற்பட்டது மறந்து போயிருந்தது.
“ஏ என்னப்பா பக்கதுல வந்து நிக்கிறது கூட தெரியாம அப்படியே டிவைஸ் உள்ளேயே போய் பார்க்கிற?”
“என்ன பிரச்சனைன்னு தெரியல டென்சனா இருக்கு. பி.ஜே வேற தல மேல உட்கார்ந்திருக்காரு. தண்ணி குடிக்க போகக்கூட நேரமில்ல”
“வாங்க காபிட்டேரியா போயிட்டு வருவோம் டூ மின்ஸ். வந்து பாருங்க வொர்க் ஆகும்”
“இல்ல பி வி நீங்க போயிட்டு வாங்க நான் இப்போ தான் அடுத்த ஸ்டெப் யோசிச்சேன் போட்டு பார்த்துட்டு வரேன்”
“டெஸ்க்ல யாரும் வந்தா அவங்க முகம் கூட பாக்காம வேல பண்ணிட்டே பேசாதீங்க பல முற சொல்லியிருக்கேன்ல டி என்.”
“என்ன பண்றது இப்படி பார்த்தே வேல முடியல.”
“இவ பெரிய சின்சிரியர் போல காட்டிக்கிறான்னு ஒரு டாக் ஓடுது”
நாராயணி தனது குழுத்தோழன் வினயைப் பார்த்து சிரித்தாள். ஒரு நிமிடம் மூளை இலகுவானது போலிருந்தது. பதினோரு மணியளவில் தேநீர் தேடி வந்தது. தேநீர் குடிக்கப் போனால் அங்கே பத்துப் பதினைந்து நிமிடம் அரட்டை அடிக்கிறார்களாம். ஆகவே இந்த ஏற்பாடு. அரசு அலுவலகத்தில் தான் இப்படித் தேநீர் / வடை எல்லாம் மேசை தேடி வரும் இது ஐடி கம்பெனியா என்று தோன்றியது.
வேலையை முடிக்க ஏதுவான எல்லாப் புள்ளிகளையும் இணைக்கப் பார்த்தாள். எல்லாமே சரியாகத்தானே இருக்கிறது. எங்கே பிரச்சனை? “யோசித்துக்கொண்டே சாப்பிடும் போது சாப்பாடு சரியா செரிக்காது.” உடன் பணிபுரியும் தோழன் பிரபாகர் சொன்னது காதில் விழாத வண்ணம் தொலைக்காட்சி சத்தமாக ஓடிக் கொண்டிருந்தது. அதை உடைத்தால் கொஞ்சம் அமைதி வருமோ. சிரித்தாள்.
“ஏன் சிரிக்கிறீங்க?”
“கேட்கறவங்க யாருமே இல்லாம அலறிட்ருக்கே அதுக்கு பி.ஜே வாயை பொருத்திப் பாத்தேன்”
அப்படியே உடைத்து விடலாமா என்று தோன்றுகிறது என்பதை சொல்லவில்லை. பிரபாகரும், வினயும் சேர்ந்து சிரித்தார்கள்.
“யூ ஹேவ் எ குட் சென்ஸ் ஆப் ஹூமர் டூ டி என். ஆனா இப்போ எல்லாம் ரோபோ போல ஆயிட்டீங்க. உங்களுக்கு கைக்குழந்தை இருக்கே வந்ததும் வீட்டில என்ன பண்ணுதுன்னு கூட கேட்க மாட்டேன்கிறீங்க”
“சாப்பிட வரப்ப என்ன குறை சொல்லாதீங்கன்னு எத்தன வாட்டி சொல்றது வினய்?”
“சரி சாப்பிடுங்க”
சாப்பிட்டு முடித்துவிட்டு வரும் போது, அழகான ஷோபாக்கள் அணைத்து ஆறுதல் படுத்தபடாத இளம்பெண் போல் கிடப்பது பார்க்கப் பரிதாபமாக இருந்தது. ஒரே ஒருநாளேனும் அதில் ஆற அமர உட்கார வேண்டும் என்று நினைத்தாள் நாராயணி. அந்த ஷோபாக்கள் “ஆமா உனக்கு வாரி முடியவே நேரமில்ல, இதில் பூ தைக்க ஆசையா?” என்பது போலிருந்தது.
கண்களை மூடித் தலையில் கையை வைத்துக் கொண்டு யோசித்தாள், மென்பொருள் இயக்கச் சிக்கலுக்குக் காரணமாகக் கணினி கூறுகள் எல்லாம் மூளையில் ஒன்பது கோள் வளையங்களில் சுழன்று சுழன்று வந்தன. மூளை சூடாகித் தலைவலி வருவது போலிருந்தது. ஏதோ பொறி தட்டியது. முகம் பொலிவுற நிமிர்ந்து உட்கார்ந்து அதனை நிர்மானிக்கத் தடதடவெனத் தட்டச்சினாள். தண்ணீர் தாகமெடுத்தது. தன்னுடைய தண்ணீர் குடுவையைப் பார்த்தாள் அது தீர்ந்து போயிருந்தது. எழுந்து போய்த் தண்ணீர் எடுத்து வருவதிலும் தற்சயம் மூளைக்குச் சிக்கிய தீர்வு தன்னைக் காப்பாற்றுமா என்பதை ஆராய்ந்து பார்ப்பதில் ஆர்வம் அதிகமாக இருந்தது. “தாகமாவது மண்ணாவது” என்றாள். பரிசோதனைக் களத்துக்கு தீர்வை அனுப்ப வேண்டும். அது கட்டளையை ஏற்க மறுத்தது.
ஒரு நாளில் எத்தனை பரிசோதனையைத் தான் அது தாங்கும்? அதற்கும் ஓய்வு தேவைப்பட்டிருக்கும். அதனை சரி செய்து தீர்வை ஆராய எப்படியும் இன்னும் அரைமணி நேரமாவது பிடிக்கும். பரிசோதனைக் களத்தை இன்னொருவரிடம் சரி செய்யக் கொடுத்து விட்டுத் தண்ணீர் குடிக்க எழுந்து போனாள். மேலாளரின் கண் அவள் முதுகில் சவாரி செய்தது.
இரண்டு மாதத்திற்கு முன் வந்த அப்ரைசலில் கூட எந்தக் கடும் அறிவுரைகளும் இல்லையே அதன் பின் என்ன நேர்ந்தது. சம்பள உயர்வு அடுத்த மாதம் இருக்கிறது. கடந்த நிறுவனத்தில் இப்படி தான் மேலாளர் இச்சைக்கு இடம் கொடுக்காத போது இப்படிக் கெடுபிடி ஆனது. அந்த மேலாளர் போலில்லை இவன், தனது வேலை, டார்கெட் இது சார்ந்து மட்டுமே எந்தக் கட்டுப்பாட்டையும் கெடுபிடியையும் வைத்திருக்கிறான். அதுவரையில் ஒற்றைத் தலைவலியில்லை. சம்பள உயர்வு ஏன் குறைவாக இருக்கிறது என்று கேட்கும் முன்னர் சொல்ல பிழைகளை விளக்கெண்ணெய் விட்டுத் தேடிக்கொண்டிருக்கிறானோ. தண்ணீர்க்குப் போகும் போதே மீண்டும் கழிவறைக்கும் போய் விட்டு வந்து விட வேண்டும். இன்னும் கொஞ்ச நேரத்தில் அதற்கு ஒருமுறை எழுந்து சென்றால் நீங்கள் வேலை செய்யும் நேரத்தை விட வெளியில் நடக்கும் நேரம் அதிகமென்று பானுவை அவள் மேலாளர் சொன்னது போல் ஜோசப் என்னைச் சொல்லி விட்டால் என்று நினைத்தாள். அவள் கற்பமாக வேறு இருக்கிறாள்.
வந்து அவளிடத்தில் அமர்ந்தாள், நினைத்த தீர்வைப் போட்டுப் பார்க்கலாம் என்றால் சோதனைக் களம் இன்னும் சரியாகவில்லை. இன்னும் கொஞ்சம் தான் இதோ இதோ என்று கண்ணாமூச்சியாடிக் கொண்டிருக்கிறது தீர்வு. பரிசோதனைக் களத்தை சரி செய்ய குறைந்தபட்சம் ஒருமணி நேரமாகும் என்று சம்மந்தப்பட்டவர் சொன்னார். அவ்வளவு நேரத்துக்கு பின்னர் கிளம்பினால் வீட்டுக்கு போய் சேர ஏழுமணி ஆகிவிடும். பிள்ளை தவித்து போவாள். நாளைக்கு ஸ்டேண்ட் அப் மீட்டிங்கில் என்ன சொல்வது என்று யோசித்துக் கொண்டே கிளம்பத் தயாரானாள். சரி இனி திங்களன்று தானே பதில் சொல்ல வேண்டும் என்று சமாதானம் சொல்லிக் கொண்டாலும் எதையோ பறி கொடுத்து விட்டுப் போவது போல மனம் கலங்கியிருந்தது. கொஞ்சம் காத்திருந்து தீர்வைப் போட்டு விட்டு போகலாமா?
வீட்டிலிருந்து அத்தையின் குரல் அழைத்தது “அம்மா புள்ள ரொம்ப அழறாம்மா பசிக்காகத் தான் இருக்கும். பவுடர் பாலைக் கக்கிட்டா கொஞ்சம் வெரசா வர்றீயா”. வீட்டுக்குப் போகவேண்டிய அவசரம் பிடித்துத் தள்ளியது. ஊபர் ஒன்றை புக் செய்து விட்டுக் காத்திருந்தாள். காலையிலிருந்து இறங்கிப் பிள்ளை வயிறை நிறைக்காத பாலாமுதம் மார்புகளைக் கனக்கச் செய்தது.
வீட்டுக்கு வந்து பிள்ளை முகம் பார்த்தவள் கொஞ்ச நேரம் கண்ணைச் சுழற்றும் கணினியின் எழுத்துருக்களை மறந்திருந்தாள். மாலை நடை பயணம் போகும் போது பவளத்தொங்காட்டான் போலத் தொங்கும் கசகசாகனி மரத்தின் மேல் மலர்ந்திருந்த கதலிமலர்களைப் பார்த்துத் திகைத்தாள். எப்படிச் சாத்தியம் என்று ஆராய்ந்தபோது கதலிமரம் கசகசாமரத்தின் கிளையூடே வளர்ந்திருந்தது தெரிந்தது. அவள் உருவாக்கிய செயலியின் உள்ளீடு மென்பொருள் பழையதாக இருக்குமோ? அப்படியென்றால் செயலியில் புதுப் பகுதியில் பிரச்சனை வரும் உள் வாங்காது. கனவு போலத் தீர்வு விரிந்தது. உடனே வீட்டிற்குப் போக வேண்டுமென்றும் அதனைப் பரிசோதித்துப் பார்க்கவேண்டும் என்றும் தோன்றியது. வீட்டை அடைந்து தீர்வை இணையம் வழி பரிசோதனைத் தளத்துக்கு அனுப்ப, அலுவலகத்தை அழைத்து அவள் தளம் இயங்குகிறதா என்று கேட்டாள். எதிர்பார்த்தபடி இது இயங்கியது. ஆம் அதுதான் தீர்வு என்று அறிந்த போது எங்கோ மிதப்பது போல உணர்ந்தாள். மமதை தலைக்கேறியது. எல்லாம் சாதித்த ஈஸ்வரி போலத் தோன்றியது. உலகின் எந்தப் போதையும் இந்த உணர்வுக்கு ஈடாகுமோ? பிரசவித்து வயிற்றுச்சுமை இறக்கியதற்கு ஈடான நெகிழ்வை உணர்ந்தாள். மடலை அனுப்பிவிட்டு திங்களன்று அலுவலகத்தின் நீருற்றிடையே கொஞ்சநேரம் நின்று ரசிக்க வேண்டுமென்று நினைத்தாள் நாராயணி. அந்த நேரத்தில் அது மகிழ்வும் பொங்குமென்றும் நினைத்தாள். கைபேசி பளீரிட்டது.
ஹய் டி.என், தேர் இஸ் ஆன் ஹைய் பிரியாடிட்டு எஸ்கேலேசன் ஃப்ரம் கஸ்டமர் சைட், கேன் யூ டேக் இட் அப், இஃப் நீடட் வொர்க் ஆன் வீக் என்ட் ஆல்சோ.
பணிக்குச் செல்லும் பெண்களின் பொதுவான அவல நிலை. புலிவால் பிடித்த கதையாக வாழ்க்கை முழுவதுமே பலியாகும் சோகம். தாய்மை, ரசனை, ஆசை எல்லாவற்றையும் காலவரையற்று ஒத்திப்போடவேண்டிய நிர்ப்பந்தம். மனம் தொட்ட சிறுகதை. பாராட்டுகள்.