இணைய இதழ்இணைய இதழ் 85சிறுகதைகள்

தென்னம் பஞ்சு – அமுதா ஆர்த்தி

சிறுகதை | வாசகசாலை

திருமணம் முடிந்து ஐந்து மாதங்கள் ஆன பிறகும் கல்யாண ஆல்பம் கிடைக்கவில்லை. தருவதாகச் சொல்லி ஒவ்வொரு மாதமும் கடத்திக்கொண்டே போன ஸ்டுடியோகாரரை திட்டியபடியே சமைத்துக் கொண்டிருந்தாள். 

“இன்னைக்காவது ஸ்டூடியோ போய் என்ன ஏதுன்னு கேளுங்க. பணமும் குடுத்தாச்சி.”

சரி என தலையசைத்தவாறே குளிப்பதற்காக சென்றான் கணவன். வேகவேகமாக தெரிந்தைப்போல் சமையலை முடித்து, இரண்டு பைகளில் மதியத்திற்கான சாப்பாட்டை எடுத்து வைத்து காலை டிபனை மேசையில் மூடிவைத்தாள். 

குளியலறையிலிருந்து வெளியில் வந்த கணவனைப் பார்த்து, “என் தோழி ஒருத்தியின் திருமண ஆல்பம் இப்படித்தான் கம்ப்யூட்டரில் சேமித்து வைத்த ஃபைல் டெலிட் ஆகிவிட்டதாக ஸ்டூடியோக்காரன் சொல்லியிருக்கான். நல்லவேளை இந்த ஸ்டூடியோக்காரன் இல்ல. புகைப்படம் எவ்வளவு அழகான விஷயம்?”

சாப்பிட்டு முடித்த கணவன், “எதுக்குத் தேவையில்லாம கற்பனை பண்ணிக்கிற. தருவான்.”

வேலைக்கு கிளம்பும்போதே செல்போனில் அழைப்பு. எதிர்முனையில் ஸ்டூடியோக்காரர். “ரெடியாடிச்சி சார். சாயங்காலம் வாங்க. சாரி சார், நானே உங்ககிட்ட சொல்ல நினைத்தேன். வந்திருங்க” என அழைப்பைத் துண்டித்தான். உற்சாகம் கொள்ள கணவனைப்பார்த்து சிரித்துக்கொண்டாள். அவளும் கிளம்பி தான் வேலை பார்க்கும் பைனான்ஸில் விட்டுவிடச் சொன்னாள். பைனான்ஸில் அவசரமாக வந்து நிற்கும் வாடிக்கையாளர்களின் நகைகளை மீட்டுக் கொடுப்பதும் அடகுவைப்பதுமாக வேலைகள் துரிதமாக நடந்தது. மதிய உனவு இடைவேளையில் ஆல்பம் மறக்காமல் வாங்கி வருமாறு கணவனுக்கு குறுஞ்செய்தி ஒன்று அனுப்பி வைத்தாள். 

வேலை முடித்து கணவனுக்கு முன்னே வீடு வந்து சேர்ந்து, வீட்டைத் திறந்ததும் காலையில் தான் பூசிய பவுடரும் வாசனை திரவியமும் வாசல்வழியே வெளியேறியது. அலங்கோலமாகக் கிடந்த சமையலறையில் சமைத்த உணவின் வாசனை. ஜன்னலைத் திறந்துவிட்டு சோபாவில் வந்தமர்ந்த வாக்கில் நினைத்தாள்.. ‘இன்னும் அரைமணி நேரத்தில் ஆல்பத்தை கொண்டு வந்திடுவாரு.’ காபி கலந்து குடித்து மெதுவாக வீட்டை சுத்தப்படுத்த, நேரம் போனதே தெரியவில்லை. வெளியில் நேரம் இருட்டியிருந்தது. கடிகாரத்தைப் பார்த்தபோது இரண்டு மணிநேரம் கடந்திருந்தது. இவ்வளவு நேரம் ஆகியும் காணாததால் செல்போனில் அழைத்தாள். மறுமுனையில் வந்து கொண்டிருப்பதாகச் சொன்னான். 

வண்டிச்சத்தம் கேட்டு வெளியே வந்து, ‘ஆல்பம் எங்கே?’ என பரபரப்பாகக் கேட்பதற்குள் இதோ என எடுத்துக் காட்டினான். இரண்டு பேரும் பாக்கலாம் என படுக்கையறையில் வைத்துவிட்டு இருவரும் சேர்ந்தே சமையல் செய்தார்கள். 

புது சினிமா பார்க்கப் போவதைப் போல் பரவசமாக இருந்தது அவளுக்கு. படுக்கையறையில் மறைந்திருந்த இரவுப்பூச்சியொன்று சத்தம்போட்டவாறே இருந்தது. எங்கு தேடியும் கிடைக்காத கோபத்தில் கையை கதவில் தட்டி ஓசையெழுப்பும் போது பூச்சி அமைதியாகியது மீண்டும் சத்தம் வரவே, “தோப்புக்குள்ள தனியா வீடு கட்டினா இப்படித்தான் வித்தியாசமான சத்தம் வரும்” என்றாள்.

“வீடு கட்டினாத்தானே உங்க அம்மா ஒன்ன கட்டி தாறதா சொன்னாங்க.”

“பின்ன இல்லியாக்கும். அதனாலதான் ரெண்டுபேரும் வேலைக்கிபோய் வீட்டுக்கடனை அடைக்கவேண்டிய இடத்துல இருக்கோம்”

இருவரும் கட்டிலில் உட்கார்ந்து ஆல்பத்தைப் பிரித்து ஒவ்வொரு பக்கமாக புரட்டியபோது தோளில் சாயந்திருக்கும் புகைப்படத்தைப் பார்த்து,“இப்படி சாய்ந்திருக்க பதினைந்து வருஷம் காதலிக்க வேண்டியுள்ளது.”

ஆல்பத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் நினைவுகளைத் தடவி, ஒவ்வொரு புகைப்படமும் அழகாக இருப்பதை சுட்டிக்காட்டினாள். பேச்சின்றி கணவனின் முகம் சோர்வடைவதை கவனித்து, “ஏன், என்ன ஆச்சி?”

சிறிது நேர மெளனத்திற்குப் பிறகு, “இவ்வளவு பெரிய ஆல்பம்!.. எத்தனை விதவிதமான போட்டோக்கள் கண்ணுமுன்னால இருக்கு. அன்னைக்கு சின்ன வயசு பள்ளிக்கூட போட்டோவ அஞ்சி ரூபா கொடுத்து வாங்க முடியாத நிலை இருந்தது. ஒண்ணாவதுல இருந்து அஞ்சாவது வரை கன்னியாஸ்திரிகள் நடத்தும் மடத்து பள்ளிக்கூடத்துல படிச்சேன். ஒவ்வொரு வருஷமும் எடுக்கும் போட்டோவுக்கு முதல் ஆளா போய் நிப்பேன். உயரமா இருக்குறதால பின்னால நிக்கவச்சிருவாங்க. ஒன்னாவதுல எடுத்த போட்டோவ வாங்க எவ்வளவு அழ முடியுமோ அவ்வளவு தூரம் அழுதேன். வீட்டுல அடிதான் கிடச்சது. அப்பா இல்லாத எங்க ஆறுபேரை வளக்க அம்மா வீட்டுவேலைகளுக்குப் போவாங்க. சாப்பாடு கிடைப்பதே கஷ்டம். இதுல எங்கேர்ந்து எனக்கு போட்டோ வாங்க காசு தருவாங்க என்ற புரிதல் இல்லாத வயசு. ஆனாலும் அம்மா என்ன சமாதானப்படுத்தினாங்க. ஏன்னா, நான் கடைக்குட்டி ஆனதால அம்மாக்கு என்மேல பாசம் அதிகம். ரெண்டாம் வகுப்புல எடுக்கும் போட்டோவ வாங்கலாம்னு சமாதானப்படுத்தினாங்க .”

“ஓ.. இவ்வளவு கத இருக்கா? லவ் பண்ணும் போது இதெல்லாம் எங்கிட்ட சொல்லல?”

“தோணல”

நெருங்கி வந்து ஆறுதலாக கைகளைப் பற்றிக் கொண்டாள்.

“சரி..சொல்லுங்க”

“இரண்டாம் வகுப்பில் எடுத்த போட்டோ வாங்குவதற்காக பெரியப்பா வீட்டிற்குப் போனேன். வசதியாக இருந்த பெரியப்பா. எப்போதாவது ஒரு சில உதவிகள் செய்து தருவார். இரண்டு நாளக்கு பொறவு தாறேன்னு சொல்லி அனுப்பிவிட்டார். நானும் ரெண்டு நாள் கழிச்சி போனேன். அப்போ சொன்னாரு..’இந்த அஞ்சி ரூபா உண்டுண்ண கொம்ம ஒரு நாளத்த பாடு கழிப்பால’. என்ன மூடுல இருந்தாரோ தெரியாது. ‘கெடக்கியது கீழண்ணாலும் கனவு காணுவது மேல’ ன்னு திட்டிவிட்டார். நாளைக்கு போட்டோ வாங்க ரூபா கொண்டு வருவேன்னு கூட்டுக்காரனுக்கிட்ட சொன்னத நினைச்சேன். வீடு வரும் வழியெல்லாம் கீழே பாத்துக்கிட்டே வந்தேன். எங்கையாவது அஞ்சு ரூபா யாராவது தொலைத்திருந்தா கிடைக்காதான்னு. மூணாவதுல எடுத்த போட்டோவ வாங்க அம்மாகிட்ட ரூபா கேட்டேன். அப்போ ஒரு போட்டோ எட்டு ரூபாயா இருந்தது. அம்மா திட்டி விட்டாங்க. இரண்டு நாளுக்கு முன்னாடிதான் முகம் பாக்கும் கண்ணாடிய ஒடச்சிருந்தேன். சன்னல் பக்கமா வச்சி பாத்தேன். காத்து வந்து தட்டிவிட்டுச்சு. அம்மா கண்ணாடிய காரணம் காட்டி பணம் தரல. அதுல சரியா முகமே தெரியாது. அதுக்கப்புறம் எங்க வீட்டுல ரெண்டு வருஷம் கண்ணாடியே வாங்கல. மறுவருஷம் எப்படியாவது நாமே காசு சேத்து நாலாம் வகுப்பு போட்டாவையாவது வாங்கிடணும்னு முடிவு பண்ணி ஆரம்பத்திலேயே காசு சேமிக்க ஆரம்பிச்சேன். வீட்டுக்கு வரும் சொந்தக்காரங்க எனக்கு மிட்டாய் வாங்கத் தரும் பைசா, வீட்டில் நின்ன சீம நெல்லிக்கா பறிச்சு அதில உப்பு சேர்த்து ஊறவச்சு பள்ளிக்கூடத்துல கொண்டுபோய் வித்து, அதுல கிடைக்கும் காசு இருபத்தைந்து பைசா, ஐம்பது பைசா என சேமிக்க ஆரம்பித்தேன். இப்படியே பத்து ரூபா சேத்தேன். குரூப் போட்டோ எடுக்க எல்லாரும் முழுக்கால் சட்டை போட்டுக்கிட்டு வரணும்னு சிஸ்டர் சொன்னாங்க. என்கிட்டே ரெண்டு அரைக்கால் சட்டைதான் இருந்தது. அதனால அண்ணனுக்க முழுக்கால் சட்டையை அவனுக்குத் தெரியாமல் எடுத்து போட்டுப் பாத்தேன். பெரிசா இருந்ததால இடுப்புக்கு ஊக்கு வச்சேன். கால்களை மடக்கி விட்டுப்பாத்தேன். சரியாகல. ஒடனே அக்கா பீடி இலை வெட்ட வச்சிருந்த கத்திரிக்கோலால் எனக்க அளவுக்கு சரியா வெட்டிப் போட்டுக்கிட்டேன். பக்கத்து மாமி வீட்டுல போய் கண்ணாடி பாத்துக்கிட்டேன். அவங்க வீட்டு கண்ணாடி என்ன பெரியவனா காட்டிச்சு. கால்சட்டையைப் பார்த்து அண்ணன் கோபத்தில் அழுது புரண்டான். அம்மா வந்ததும் சொல்லிக்கொடுப்பேன்னு சொன்னான். அவனை சரிபண்ண வழிதெரியாம முழிச்சேன். சேர்த்து வச்சிருந்த பத்து ரூபாய எடுத்துக்கிட்டு, அம்மா வந்ததும் சொல்லியும் கொடுத்தான். அடி கிடைச்சதுதான் மிச்சம். பன்னிரெண்டாவது படிக்கும்போதும் சரி, டிப்ளமோ படிக்கும்போதும் சரி, குரூப் போட்டோக்களுக்கு நிக்க மாட்டேன்.”

நீண்ட நேரம் அறை அமைதியாக இருந்தது. அந்த அமைதி மேலும் துக்கத்தைக் கொண்டு வருவதாக இருந்தது. அதைக் கலைக்க கணவனை மேலும் நெருங்கி வந்து சிரித்தபடியே உலுக்கி விட்டாள். “சரி விடுங்க” என அணைத்தபடி கட்டிலில் சாய்க்க, அந்த அணைப்பிற்குள் அடங்கிப் போயிருந்தது பல வருட நினைவுகள்.

அதிகாலையின் பரபரப்புகள். இருவரும் சேர்ந்தே வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொண்டார்கள். அணிலின் சத்தம் கேட்டு சன்னல் வழியாக எட்டிப்பார்த்தாள். வாயில் தென்னம் பஞ்சுகளை பிய்த்து எடுத்துக் கொண்டு போனது குலைதள்ளிய வாழை மரத்தை நோக்கி. வாழைத்தார்களுக்கு இடையில் அணில் கூடு அமைப்பதை கணவனிடம் சொன்னாள்.. கடனில்லாத வீடு.

மறுநாள் இரவும் ஆல்பத்தைப் பார்த்தபோது புகைப்படத்தில் தங்களோடு இருக்கும் சொந்தபந்தங்கள், தோழிகள் பலரை கணவனிடம் சொல்லிக்கொண்டே வந்தாள். “பரவாயில்லங்க..பத்திரிக்கை வச்ச முக்கால்வாசி பேரும் வந்துட்டாங்க.” கணவனும் அவளின் பேச்சை ஆர்வமாக கேட்டுக்கொண்டிருந்தான். 

“ஆமா, இனி ரெண்டு நாள் பாப்ப. அதுக்கு அப்புறம் எத்தனை வருஷம் கழிச்சி எடுப்பியோ?” – புகைப்படத்தைப் பார்த்துக்கொண்டே வந்தவள் தனது பெரியம்மாவின் மூத்த மகளைச் சுட்டிக்காட்டி, “இவங்களுக்கு நாற்பது வயசுக்கு மேலே ஆகுது. ஆனா, இன்னைக்கும் அவங்க தோழிகளோடு எடுத்த போட்டோ கதய சிலாகிச்சி சொல்லுவாங்க. இங்க பாருங்க உங்களுக்கு ஒரு புகைப்பட நினைவு இருக்குறதுபோல இவங்களுக்கும் உண்டு.” – ஆல்பத்தை மூடி ஓரமாக வைத்துவிட்டு சொல்லத் தொடங்கினாள். 

“இடையில் தூங்கினா எழுப்பிராத” என சொல்லி ஆர்வமாக கேட்பதைப் போல் மடியில் சாய்ந்து கொண்டான்.

“அக்காவோட தோழி ஒருத்தி வசதியானவ அவங்ககிட்ட இருந்து கேமரா ஒண்ணு இரவலுக்கு வாங்கி, அக்கா அவளோட கூட்டுக்காரிகளை எல்லாம் கூப்பிட்டுச் சொன்னா. மக்கா, நம்ம எல்லாரும் சேர்ந்து நிறைய போட்டோ எடுக்கணும். கல்யாணம் பண்ணினா எப்ப பாக்கப் போறோம்? இது ஒரு அழகான நினைவா இருக்கும்”னு ஆச காட்டினா. 

கலர் போட்டோக்களைப் பார்ப்பதே அபூர்வம் அப்படியிருக்க அவங்களுக்கும் ஆர்வம் தொற்றிக்கொள்ள, “பிலிம்ரோல் நான் வாங்குறேன். வாற ஞாயித்துக்கிழம நம்ம தூவலாற்றுக்கு குளிக்கப்போறோம். சுத்தி சுத்தி போட்டோ எடுக்குறோம்.” என்று இன்னொரு தோழி சொன்னாள். 

“ஆமா, அங்க நிறையபேரு குளிச்சிக்கிட்டு இருப்பாங்களே.. நம்மள பாத்து சிரிக்கமாட்டாங்களா? அதுவேற பயலுவ நிறைய குளிக்க வருவானுவோ. போட்டோ எடுக்க வெக்கமா இல்லா இருக்கும்.”ன்னு அக்கா சொன்னா. 

“அதுக்குதாம்டி நான் ஒரு ஐடியா வச்சிருக்கேன். உச்சைக்கிப் போனா ஒரு குஞ்சி இருக்காது. ஆத்துல நம்ம ராஜியம் தான்.”

மொத்தம் ஏழுபேர் கிளம்பினாங்க. ஒவ்வொருவரும் மூன்று உடைகளாவது எடுத்துக்கொண்டார்களாம். துவைப்பதற்கு துணி எதுவும் எடுக்கவில்லை. பவுடர், சீப்பு, பொட்டு, கவரிங் கம்மல்கள், சின்ன முகம் பார்க்கும் கண்ணாடி என ஆளுக்கு ஒவ்வொன்றாக வீட்டை மறைத்து எடுத்துக்கிட்டாங்க. அக்காவுக்கு முழுக்கால் சட்ட பனியன் போட்டு போட்டோ எடுக்க ரொம்ப ஆச. அதுனால அவளுக்க அண்ணனுக்க துணிய மறைச்சி எடுத்துக்கிட்டு வந்தா. கூடவே திருவிழா கடையில வாங்குன ஓல தொப்பியும் நீலக்கலர் கண்ணாடியையும் எடுத்துக்கிட்டா. சுற்றுலா போவதுபோல ஆத்துக்கு கிளம்பினாங்க. வழியில் நின்ன தெற்றிப்பூ, சாமந்திப்பூ என கொஞ்சம் பூக்களையும் பறிச்சிக்கிட்டா ஒருத்தி.

வழியெங்கும் தென்னந்தோப்புகளும் வாழைமரங்களுமாக எழிலோடு நின்றிருந்த ஊரை வித்தியாசமாக பார்த்தா அக்கா. கேமரா கண்களோடு. பூக்களில் அழகுறத் திரிந்த வண்ணத்துப்பூச்சிகளை புகைப்படம் எடுப்பதுபோல் சரிந்து ஒற்றைக்கண்னை மூடி பார்த்தாள். அக்காவின் செய்கையில் மயங்கிப்போன தோழிகள், “இவ நம்மள சினிமாப் பட கதாநாயகி மாதிரி எடுப்பா” என மாறி மாறிச் சொல்லி சிரிச்சிக்கிட்டாங்க.

ஊரைவிட்டு அரைமைல் தொலைவில் இருந்தது மலையை ஒட்டிய தூவலாறு. புதுமையான ஒன்றைச் செய்யப்போவதாகவும், எப்படியெல்லாம் புகைப்படத்திற்கு காட்சி கொடுக்கவேண்டும் என்று மனத்திற்குள்ளும் வெளியேயும் சிரித்துப் பேசியபடியே போனாங்க. ஆற்றங்கரை மேட்டிலிருந்து பாத்தா குளிக்கிறவங்க தெரியமாட்டாங்க. துணி துவைக்கும் சத்தம் கேட்டது. எல்லாருக்கும் ஒருவித பயம்..’யாரா இருக்கும்?’ . 

கீழ இறங்கி வந்து பார்க்கும்போது தெரிந்தது ரெண்டு பாட்டிங்க. அக்கா சொன்னா கிழவிங்க இப்ப கெளம்பிரும். நம்மள கவனிக்க மாட்டாங்க. சரி, எல்லாரும் துணிகளை மாத்துங்க. மேக்கப் போட்டுக்கோங்க. முதல்ல தனித்தனியா எடுக்கணும்.. அப்புறம் சேர்ந்து எடுக்கலாம். உடைஞ்சி கிடந்த சொறியாங்கல் பாறை இதுகளுக்கு மேலே விதவிதமாக நின்னு போட்டோ எடுத்தாங்க. கொக்குகளைப்போல நின்றும், நீர்காகங்களைப்போல சிறகுகளாக தாவணிகளை விரித்து பிடித்தும் புகைப்படம் எடுத்தாங்க. பாசிபடர்ந்து வழுக்கும் பாறையில் உட்கார்ந்து துள்ளிக்குதித்து ஓடும் நீரை இறைத்து விளையாடி புகைப்படம் எடுத்தாங்க. குளித்துக்கொண்டிருந்த கிளவி கண்ணை இடுக்கி ஒருமாதிரியாகப் பார்ப்பதை கவனித்த அக்கா கிளவிகளை பொருட்படுத்தாமல் சொன்னாள், “இனி என்ன யாராவது போட்டோ எடுங்க.”. கூட்டத்தில் ஒருத்திக்கு எப்படி எடுப்பது என சொல்லிக்கொடுத்தாள். ஒளிஅடிச்சி சத்தம் கேட்டதும் நிறுத்திவிடுமாறு சொன்னாள். 

அக்கா முழுக்கால்சட்டை பனியன் அணிந்து, ஓலைத்தொப்பி மாட்டி, கண்ணாடி போட்டு தலைமுடியை விரித்த வாக்கில் போட்டு தண்ணீர் விழும் எதிர்திசையில் போய் நின்றுகொண்டு எடுக்கச் சொன்னாள். இடையிடையே கேமராவை, ‘எச்சரிக்கையா எடுங்க. தண்ணியில விட்டுடாதீங்க’ என எச்சரித்தாளாம். உச்சிவெயிலுக்கு வேர்த்து ஊற்றிய முகத்தைக் கழுவி பவுடரும் பூசிக்கொண்டார்கள். சில புகைப்படங்கள் எடுக்கும் போது பாறையில் வழுக்கி விழுந்து நீரில் நனைத்துக்கொண்டதோடே புகைப்படம் எடுத்தாங்க. தோழி ஒருத்தியின் வீட்டில் திடீரென பெண்பார்க்க வந்திருப்பதாக ஆற்றங்கரைக்கு தகவல் வந்தது. தகவல் கொண்டு வந்த சிறுவனை மிரட்டி, ‘மாப்பிள பாக்க விருப்பம் இல்ல. குளிச்சிக்கிட்டு இருக்கான்னு சொல்லு’ன்னு போட்டோ எடுக்கும் ஆர்வத்தில் சொல்லி அனுப்பினாளாம். இப்டி நான்கு மணிநேரம் ஆயிற்று பிறகு குளித்து முடித்து வேகவேகமாக வீட்டுக்கு வந்தார்களாம்.

போட்டோ பிரிண்டுக்கு மட்டும் எல்லாரும் காசு போடணும் என கண்டிப்புடன் சொன்னாள். ஒருவாரம் எதிர்பார்த்த போட்டோ வராததால இரண்டாவது வாரம் காத்திருந்த தோழிகளுக்கிட்ட அக்கா சொல்லியிருக்கா. “நாம எடுத்த போட்டோ ஒண்ணுக்கூட பதியல்ல எல்லா பிலிம்லயும் ஒளி மட்டுமே இருக்கு”.

போட்டோக்காரர் கேட்டிருக்கார், ‘பிலிம்ம வெளியில எடுத்து பிரிச்சு பாத்திங்களா?’ன்னு. அவளும் சொல்லியிருக்கா, “ஆமா, பதிஞ்சிருக்கான்னு நான்தானான்னு பாத்தேன்னு. கதையைக் கேட்டுக்கொண்டிருந்த கணவன் அவள் மடியில் முகம் புதைத்து சிரித்தான். 

மறுநாள் பைனான்ஸில் நகைகளை மீட்டெடுக்க முடியாத வாடிக்கையாளர்களுக்கு, ‘நகைக்கடனுக்கு வட்டி கட்டவும். இல்லையென்றால் ஏலம்விடப்படும்’ என்று தகவல் அனுப்பினாள். ஒரு வாரம் கழித்து வயதான ஒரு அம்மா பைனாஸ் கம்பெனிக்கு வந்தார்கள். “நகைய ஏலம் விட்டுராதீங்க. அது எனக்க மகளுக்குள்ளது. அவ இப்போ ஊட்டியில இருக்கா. உங்ககிட்ட பேசணும்னு சொன்னா.”

போன் நம்பர் எழுதிய காகிதத்தை அவளிடம் நீட்டினாள். டைரியில் குறித்து வைத்துக்கொண்டு அந்த நம்பருக்கு அவளது போனில் இருந்து அழைத்தாள்.

“ஹலோ, பைனான்ஸில் இருந்து பேசுறேன். உங்க நகை அடகு வைத்த விஷயமா…”

“ம்..சரிங்க. அம்மா சொன்னாங்க. உங்களோட ஜிபே நம்பர் குடுங்க வட்டிய கட்டிக்கிறேன். பிறகு, ஒரு நாலுமாசம் கழிச்சி ஊருக்கு வரும்போது நகையத் திருப்பிக்கிறேன்.”

அவளது நம்பருக்கு பணம் வந்தது. வயதான அம்மா பைனான்ஸை விட்டுச் சென்றுவிட்டார்கள்.

அன்று மாலை ரம்மியமான சூழலில் மீண்டும் அவளின் கல்யாண நினைவுகளை அசை போட்டபடியே ஆல்பத்தை எடுத்துப் புரட்டினாள். அதிலிருந்து நிறைய புகைப்படங்களை செல்போனில் சேமித்துக்கொண்டு ஒவ்வொரு நாளும் வாட்சப்பில் ஸ்டேடஸ் வைத்தாள். அதை எத்தனை பேர் பார்க்கிறார்கள் என அவ்வப்போது பார்ப்பதையும் வேலையாக வைத்திருந்தாள். ஸ்டேட்டஸ் பார்த்த சில உறவுகள் கிண்டலடிக்கவும் செய்தார்கள் இன்னும் கல்யாண கோமாவிலிருந்து மீளவில்லையா என. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவர்களுக்கு பொறாமை என கடந்து சென்றாள். 

ஐந்து மாதங்கள் கழித்து அலுவலகத்திற்கு ஊட்டிக்காரப் பெண் நகையை மீட்பதற்காக வந்தாள். இவளைப் பார்த்ததும் “நீ, ஷாவோட மனைவியா?”

“ஆமா, அவர உங்களுக்கு எப்படித்தெரியும்?”

“நீங்க போடும் வாட்சப் ஸ்டேடஸ் எல்லாம் பாப்பேன்”

“ஆமா, நானும் கவனிச்சேன்.”

“அதுல தான் தெரிஞ்சிக்கிட்டேன்.”

“ஓ, எப்டி இவர தெரியும்?”

“மடத்து பள்ளிக்கூடத்துல ஒரே வகுப்புல படிச்சோம். அப்போ எடுத்த குரூப் போட்டோ கூட எனக்கிட்ட இருக்கு.” – கண்கள் விரிய மனம் சந்தோஷத்தில் திளைத்தது அவளுக்கு.

“எனக்கு அத வாட்சப்பில் அனுப்பி விடுங்களேன்.”

“கண்டிப்பா அனுப்புறேன்”

கணவன் பார்க்கும் முன்னே தனக்கு பார்க்க கிடைத்ததை நினைத்து சந்தோஷப்பட்டாள். இருபத்தைந்து வருஷம் கழித்து கிடைக்கும் புகைப்படம் என தன்னைத்தானே சொல்லி பெருமைப்பட்டாள். இதைப் பார்க்கும் கணவனின் நிலையை நினைத்துக் கற்பனை விரிய வியந்திருந்தாள். வெகுநேரமாகியும் புகைப்படம் செல்போனுக்கு வராததை நினைத்து அவள் மறந்திருப்பாளோ என சந்தேகப்பட்டாள். ‘அவளுக்கு அது சாதாரணம். எனக்கு அப்படியா?’ என சொல்லிக்கொண்டே செல்போனில் அழைத்தாள். ‘ஸ்விட்ச் ஆப்’ என வந்தது. ஒரு நிமிடம் கலங்கித்தான் போனாள். வீட்டுக்கு வந்ததும் கணவனுக்குத் தெரியாமல் மீண்டும் செல்போனில் அவளை அழைத்தாள். அப்போதும் ‘ஸ்விட்ச் ஆப்’ என வந்தது. நாளைக்கு அவள் வீட்டுக்குப் போய்விட வேண்டியதுதான். அட்ரஸ்தான் நம்மகிட்ட இருக்கே என சமாதானம் செய்து கொண்டு, ‘பைனான்ஸில் வேலை அதிகமாக இருந்தாலும் அரை நாள் லீவுபோட்டுக்கிட்டாவது போய்விடவேண்டும் புகைப்படம் கையில் கிடைப்பது வரையிலும் நிம்மதியில்லை’ என உணர்ந்தாள்.

காலை வேளையில் அலுவலகம் கிளம்பும் அவசரத்திற்கு இடையிலும் மீண்டும் ஒரு முறை போன் பண்ணினாள். அதே போல் ‘ஸ்விட்ச் ஆப்’ என வந்தது. பைனான்ஸில் வந்து முகவரியைத் தாளில் குறித்துக்கொண்டு அரை நாள் லீவு கேட்டு ஸ்கூட்டியில் கிளம்பினாள். பைனான்ஸ் இருக்கும் இடத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது கிராமம். தெருவின் ஓரத்தில் அந்தப் பெண்ணின் அம்மா தென்னை ஓலையில் ஈக்கில் எடுத்துக்கொண்டிருந்தாள். அவள் குழந்தைக்கு வேடிக்கை காட்டியபடி சோறு ஊட்டிக்கொண்டிருந்தாள். அவளைக் கண்டதும் அந்தம்மா எழும்பி, “நகையை மீட்டாச்சில்ல பிள்ளே… என்ன விஷயமா வந்திருக்கா…வா” என அழைத்தாள். அதைக்கேட்டு திரும்பிப் பார்த்த பெண் உடனே, “போட்டோ அனுப்பியிருப்பேன். செல்போன குழந்தை தண்ணியில தூக்கிப்போட்டுட்டா. அதான் ரெண்டுநாள் கழிச்சி ஆன் பண்ணலாம் என ஆப் பண்ணி வச்சிருக்கேன். ஒடனே எடுத்துட்டேன். ஆனாலும் சரி ஆகல. கடையிலதான் குடுக்கணும்” என்றாள். 

“அவருக்கு அடுத்தவாரம் பிறந்தநாள். இந்த போட்டாவைத்தான் பரிசாக கொடுக்க நினைக்கிறேன். அதான் உங்களத் தேடிவந்தேன்”

அலமாரியில் இருந்த போட்டோக்கள் நான்கை எடுத்துக்காட்டியதும் சந்தோஷம். “நான் ஒண்ணுதான் இருக்கும்னு நினைச்சேன். ஆஹா..நான்கு வருட போட்டா” என ஆவலாக போட்டோவில் ஷாவைத் தேடினாள். எல்லா போட்டோக்களையும் செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொண்டாள். போட்டோ மங்கலாகத்தான் இருந்தது. செல்போனில் உள்ளது தெளிவாக இருக்காது. அதனால் இந்த போட்டோக்களை ஸ்டூடியோவில் கொடுத்து பிரிண்ட் போட்டுட்டு கொண்டு தருகிறேன் என வாங்கிக் கொண்டாள். வரும் வழியிலேயே போட்டோக்களை பிரிண்ட் போடக் கொடுத்தாள். 

மறுநாள் அந்தப் பெண்ணிடம் போட்டோக்களை கொடுத்துவிட்டு பிரிண்ட் போட்ட போட்டோக்களை வீட்டில் மறைத்து வைத்திருந்தாள். போட்டோக்களைப் பார்த்தால் கணவனின் முகம் எப்படி இருக்கும் என தனக்குத்தானே சிரித்தாள்.

பிறந்தநாளின் காலை வேளையில் செல்போனில் உள்ள போட்டோக்களை கணவனின் வாட்சப்பிற்கு அனுப்பி வைத்தாள். வெகு நேரம் அவன் அதைக் கவனிக்கவில்லை. அவளாகவே சொன்னாள், “உங்க வாட்சப்பிற்கு ஒண்ணு அனுப்பி வச்சிருக்கேன். பாருங்களேன்.”

“ஆமா.. என்னத்த வாழ்த்து அனுப்பியிருப்ப”

வாட்சப் திறந்து பார்த்தவன் புரியாமல் விழித்தான். நெற்றியை கூர்மையாக்கி ‘இது என்ன?’ என்று பார்த்தான்.

தனக்கு பாடம் எடுத்த ஆசிரியர்களை அடையாளம் கண்டு, “இவங்க எனக்கு முணாவதுல பாடம் எடுத்த கணக்கு டீச்சர். இது எப்படி உனக்கு கிடச்சுது?” என ஆச்சரியமாகக் கேட்டான்.

பதில் பேசாமல் மீண்டும் பாருங்கள் என கண் சாடை காட்டினாள். தான் எங்கே என்று புகைப்படத்தை விரித்து தேடினான். தன்னை கண்டு கொண்டவன் கண்களில் கண்ணீர் வழிந்தது. நாலாவது வகுப்பு போட்டாவை வெகுநேரம் பார்த்துக்கொண்டிருந்தான். 

மறைத்து வைத்திருந்த புகைப்படங்களைக் காட்டினாள். அழகான சட்டங்கள் போடப்பட்டு புதிதாக இருந்த புகைப்படங்களைப் பார்த்தவன் கண்களைத் துடைத்துக்கொண்டே சன்னலின் அருகில் போய் நின்று சன்னலைத் திறந்துவிட்டான். இரவெல்லாம் டியூப்லைட்டில் தட்டி தட்டி தடுமாறிக் கிடந்த தட்டான் வெளியே பறந்து போனது. 

******

amuthaarthi7870@gmail.com – 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button