வலியுடன் துயருறும் ஆன்மாவென்று சொல்லலாம்
சற்றே மனம் பிசகிய குழந்தையென்றும்.
குற்றத்தின் நோய்மைகளை மருந்தென அருந்தியவள்
மலையின் ஒருபுறம் கடந்து மறுபக்கத்தில் நிற்கிறாள்
அடுத்த மலை தெரிகிறது எதிரில்
இப்படி எத்தனை மலைகள்
கடந்தாளெனக் கணக்கில்லை அவளிடம்
விடாது பெய்த மழையும் பனியும் வெயிலும் கடந்து
பூமியில் கால் புதைந்திருக்கிறாள்
மண்ணில் பதியாது அலைந்த கால்கள்
பூமிக்குள் புதைந்து நிலைத்திருக்கிறது ஓரிடத்தில்
விட்டு விடுதலையாகி
வானம் பார்த்திருந்த கண்கள்
நட்சத்திரங்களையும் ஆகாய அசைவுகளையும் தியானித்திருந்தவை
மெல்ல மூடுகின்றன
யுகங்களின் அழுத்தத்தில் மண்மூடிய சிற்பமெனக் கிடப்பவள்
காத்திருக்கிறாள் மீண்டு மேலெழ.