...
இணைய இதழ்இணைய இதழ் 100கவிதைகள்

இசை கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

விச்ராந்தியின் முன் நிற்றல்

பெசண்ட் நகரில்
கடலுக்குச் செல்லும் வழியில் உள்ளது
விச்ராந்தி

நண்பர்கள் நாங்கள்
ஒரு நாள் தவறினாலும்
மறுநாள் கூடிவிடுவோம் அங்கு

விச்ராந்தியின்
முன் நிற்பதற்கு
தூர தூரங்களிலிருந்தும்
ஆட்கள் வருகிறார்கள்

அங்கு
பென்னம் பெரிய ஒரு மரமுண்டு
அதுதான் அனைவரையும்
அழைத்து வருகிறது
என்று சொல்லப்படுவதுண்டு
ஆனால்
அது உண்மையின் ஒரு துண்டுதான்

மனிதருள் மரமுண்டு
நிழலுண்டு
விச்ராந்தியின் முற்றத்திற்கு
மரங்கள்
வருகின்றன , போகின்றன

விச்ராந்தியின் முன் நிற்கும் ஒருவன்
சிகரெட்டை கொளுத்தினால்
அவன் வாயிலிருந்து
ஏகாந்தம் மிதந்து செல்வதைக் காணலாம்

மனிதர்கள்
சமயங்களில்
துணிந்து முடிவெடுத்து விடுகிறார்கள்
சிரிப்பைச் சவுக்கால் அடித்து விட முடியாது

விச்ராந்திக்கு
கண்ணோ, மூக்கோ கிடையாது
அது ஒரு முழு காது

விச்ராந்தியின் முன் நின்று
புகைப்படம் எடுத்துக் கொண்டால்
படத்தில்
நாம்
ஒரு டீ கடையின் முன்
நிற்பது போலவே தோன்றும்.

ஆத்மாநாமின் புதிய கவிதை

ஒரு ரோஜா நாற்று வாங்கி வந்தேன்

வீட்டில்
அதற்கு எந்த இடம் பிடித்திருந்ததோ
அந்த இடத்தில் நட்டு வைத்தேன்.

ஒளி தந்தேன்
நீர் தந்தேன்
இவை தவிர
ரோஜாக்கள் பூக்க
எது முக்கியம் என்று
ஆத்மாநாம் சொன்னாரோ
அதை
அள்ளி அள்ளிக் கொடுத்தேன்.

கொடுத்துக் கொண்டே இருந்தேன்

வருத்தம் தோய்ந்த முகத்துடன்
ஒரு நாள் அவர் வந்திருந்தார்…

“ இன்னும் ரோஜாக்கள் பூக்கவில்லையா? “

“மணம் வர மலர் அவசியமில்லை என்று தோன்றுகிறது” என்றேன்.

புன்னகைத்தபடியே சென்று விட்டார்.

நான்கின் நானூறு

காதல் அப்படித்தான்
திடீரென
புரட்டிப் போட்டுவிடும்

இடிபாடுகளின்
மூச்சுமூட்டும் இன்பத்துள்ளிருந்து
நீ ஒரு செய்தி அனுப்பியிருந்தாய்

அதில் சொற்களே இருக்கவில்லை.

மனிதனை
எமோஜிகள் மேய்க்கத் துவங்கிவிட்ட காலத்திலும்
உன் செய்திக்குள்
அவற்றால் நுழைய முடியவில்லை

வெறுமனே நான்கு புள்ளிகள் இட்டிருந்தாய்

அது ஒரு வெண்திரை
ஆகவே
அதில் பெருகி வழிந்தன
பல நூறு வண்ணங்கள்

முதன்முதலாக
ஒரு குழந்தை
கோலிக்குண்டைப் பார்த்த கண்களால்

அவற்றை

உருட்டி

உருட்டி

உருட்டி உருட்டி
பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

உங்கள் கனவுகளில்
சிவராமன் வரத் துவங்கி விட்டாரா?

ரம்யமானதொரு மாலை வேளையில்
வானத்தை அண்ணாந்து பார்த்தால்
அங்கு
உன் பக்கத்து வீட்டுக்காரன்
அவனுடைய சொகுசு காரின் மீது
பெரிய மூங்கில் சேரைப் போட்டு
அதில் அமர்ந்து
புகை பிடித்துக் கொண்டிருக்கிறான்.

மாடிப்படிகள் ஏறுவது
கடினமாக இருப்பதால்
அப்போது
ஒரு பாடலை முணுமுணுக்கிறாய்

பாடச் சொன்னால்
படியேறத் துவங்கிவிடுகிறாய்

சாலையில் விரைந்து கொண்டிருப்பதாய் தோன்றும்
உன் வாகனம்
உண்மையில்
இன்னும் வீட்டை விட்டு கிளம்பவில்லை
அல்லது
அலுவலக கோப்புகளை
புரட்டத் துவங்கி விட்டது

நீ
நடனமாட நடனமாட
உன் இரண்டு குழந்தைகளில் ஒன்றுக்கு
கட்டாயம்
காய்ச்சல் உயரத் துவங்கிவிடுகிறது

சித்த வைத்தியம் சிறந்ததுதான்.
சிவராமனும் நல்லவர்தான்
ஆனால்
அவர் உன் கனவு வரை வருகிறாரெனில்,
நீ ஏதாவது
குளிகைகள் எடுத்துக் கொள்வது அவசியம்

நீ
கண்ணாடி பார்க்கையில்
அதில் சிந்தனைகள்
தெரியத் துவங்கி விட்டன.

“மருந்துண்னும் போது குரங்கெண்ணக் கூடாது”
என்று சொல்லி வைத்தவன்
ஒரு சாதாரண மருத்துவனில்லை
என்கிற உண்மையின் முன்
கண்கலங்கி நிற்கும்
எனதருமைத் தம்பி…!

இந்தக் கவிதையை எடுத்துக் கொள்…

சந்தேகித்துக் குழம்பாதே!

தயங்கித் தயங்கி நிற்காதே!

இந்தா,
இந்தக் கவிதைக்கு பத்தியம் ஏதுமில்லை.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.