இணைய இதழ்இணைய இதழ் 102சிறுகதைகள்

திரும்புதல் – ஷாராஜ்

சிறுகதை | வாசகசாலை

வாசல்புறம் ஆட்டோ வந்து நிற்கும் சத்தம் கேட்டது. கூடத்தில் அமர்ந்து தொலைக்காட்சித் தொடர் பார்த்துக்கொண்டிருந்த அமுதா, நம்ம வீட்டுக்கா, எதிர் வீட்டுக்கா என எட்டிப் பார்த்தாள். கப்பிக் கற்கள் பெயர்ந்த மண் தெருவில் நின்றிருந்த ஆட்டோவின் ஓட்டுநரிடம் பணம் கொடுத்து, மீதி வாங்கி, பர்ஸில் வைத்து, அதை ரவிக்கைக்குள் செருகிக்கொண்டிருக்கும் பெண்ணின் பக்கவாட்டுத் தோற்றத்தில் யாரென்று தெரியவில்லை. ஆட்டோ நகர்ந்து விலகியது. சுற்றுப்புறத்தையும் இந்த வீட்டையும் ஒரு வேகப் பார்வையால் பரிசீலித்துவிட்டு, பெரிய பயணப் பையைத் தூக்கிக்கொண்டு அவள் இங்கேதான் வந்தாள். முப்பது வயதுக்கு சமீபமாக இருக்கக்கூடிய இளம் பெ…ண்… அல்ல – திருநங்கை…!

          உற்றுப் பார்த்ததில் ஜாடை யாரென்று காட்டிவிட்டது. 15 வருடங்களுக்கு முன்பு வீட்டைவிட்டு ஓடிச் சென்ற அவளது மூத்த மகன் வாஞ்சிநாதன்.

          பரபரப்புடன் எழுந்து, எதிர்பாராத மகிழ்ச்சி பொங்க வாசலுக்கு விரைந்தாள். கடைசியாக, ஒல்லி உடல் கொண்ட 17 வயது விடலைப் பையனாகப் பார்த்தது. இப்போது இன்னும் உயரமாக, சற்றே பூசினாற்போன்ற உடல் வாகுடன் இருந்தான். பயணப் பையை சிரமப்பட்டுத் தூக்கிக்கொண்டு வரும் அவன் இவளைக் கண்டதும் முகம் பூத்து, “அம்மா…!” என்றான், திருநங்கைக் குரலில்.

          அமுதாவின் நடை தளந்து, பாதங்கள் வாசல் மண்ணில் வேர்கொண்டன.

          வாஞ்சிநாதன் என்றைக்காவது ஒரு நாள் கண்டிப்பாகத் திரும்பி வருவான் என்பது அவளுக்குத் தெரியும். இத்தனை காலமும் அவள் அதை எதிர்பார்த்துக்கொண்டுதான் இருந்தாள். திரும்பி வருகிற அவன் இப்படித்தான், சேலையோ சுடிதாரோ அணிந்து, பெண்ணலங்காரத்தோடு இருப்பான் என்பதும் தெரிந்ததே. ஆனால், அந்தக் கோலத்தைக் கண்டதும் மனம் தாளவில்லை.

          மேலும் கீழும் ஏறிட்டு, “என்னடா இது கோலம்…!” எனக் கையை ஆட்டியபடி ஆவலாதிப்படும்போதே கண்கள் நீர்த்துவிட்டன. குரலும் உடைந்து கசிந்தது.

*******

வாஞ்சிநாதன் மூன்று வயதுக் குழந்தையாக இருந்தபோதே அம்மாவுக்கு ஒத்தாசை செய்கிறேன் என்று வீடு – வாசல் பெருக்குவது, பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது, சமையல் ஆகியவற்றில் குழந்தைகளுக்கே உரியபடி விளையாட்டுத்தனமாக ஈடுபடுவான். காண்பவர்களுக்கு மகிழ்ச்சியூட்டுகிற வேடிக்கையாக இருக்கும். ஏழெட்டு வயதானதிலிருந்து அச் செயல்களைக் காரியார்த்தமாகவே செய்யலானான். அதைக் காண்பவர்கள். பொட்டப் புள்ளையாப் பொறந்திருக்க வேண்டியவன் என்பார்கள்.

          அவனுக்கு ஆறு வயதானபோது ப்ரசன்னாவும், ஒன்பது வயதானபோது ஆனந்தியும் பிறந்தனர். உடன்பிறப்புகள் மீது அவனுக்கு மிகுந்த பாசம். வீட்டில் உள்ள நேரமெல்லாம் அவர்களுக்கு விளையாட்டுக் காட்டியும், உப்பு மூட்டை, யானை சவாரி சுமந்தும் மகிழ்வித்துக் கொண்டிருப்பான். அதனால் அவர்களுக்கும் அவனிடம் ஒட்டுதல் அதிகம்.

செல்வமணி, உள்ளூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சுமட்டுத் தொழிலாளி. அமுதா, பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் துப்புரவுப் பணியாளர். அதனால் குழந்தைகளை செல்வமணியின் தாயார்தான் பார்த்துக் கொள்வாள். பள்ளி நேரம், படிக்கிற நேரம் தவிர உடன்பிறப்புகள் வாஞ்சியின் பொறுப்பில்தான். அதனால் விடுமுறை நாட்களில் அப்பத்தாவுக்கு பேரக் குழந்தைகள் பராமரிப்பிலிருந்து விடுமுறை.

அப்போதே வாஞ்சி சிறுவர்களைத் தவிர்த்து சிறுமிகளுடன்தான் பழகுவான். தங்கையை இடுப்பில் சுமந்தபடி, தம்பியைக் கூட்டிக்கொண்டு தோழிகளுடன் விளையாடச் செல்வான். மணல் வீடு கட்டுவது, சிரட்டையில் சோறாக்குவது, நொண்டி, மணலில் வளையல் துண்டுகளை ஒளித்துக் கண்டுபிடிப்பது முதலான சிறுமிகள் விளையாட்டுகளையே விளையாடுவான்.

எட்டாம் வகுப்பின்போது தோழிகள் போல பாவாடை – ஸ்லாக், பாவாடை – தாவணி, சுடிதார் ஆகியவற்றை அணியவும், கூந்தல் வளர்த்து சடை பின்னிக்கொள்ளவும், கம்மல் – பாசி அணிந்துகொள்ளவும், பெண்ணலங்காரங்கள் செய்துகொள்ளவும் விருப்பம் ஏற்பட்டது. அதைக் குடும்பத்தாரோ, மற்றவர்களோ ஏற்க மாட்டார்கள் என்பதால் தவிர்த்துக்கொண்டிருந்தான். எனினும் தன்னை ஒரு சிறுமியாக பாவித்தவாறு அடிக்கடி கண்ணாடியில் தன் முகத்தையே பார்த்துக்கொண்டிருப்பான்.

செல்வமணி அதைக் கண்டால் கோபத்தில் திட்டுவார். “எதுக்குடா எப்பப் பாத்தாலும் பொம்பளைக, புள்ளைகளாட்ட கண்ணாடில பாத்து ரசிச்சுட்டிருக்கற? வீட்டுல பொம்பளைக செய்யற வேலைகளச் செய்யறது, வெளையாடறதும் பொட்டைப் புள்ளைக கூடவேன்னு இருந்து இருந்து, பொம்பளைச்சட்டியாட்டவே ஆயிட்ட! வெளிய போயி மத்த ஆம்பளைப் பசங்க கூட வெளையாடு” என்பார்.

“இனிமே அவனை வீட்டுல பொம்பளைக வேலையச் செய்யறக்கு உடாத. பொட்டைப் புள்ளைக கூட வெளையாடறதுக்கும் உடாத” என அமுதாவிடமும் சொல்லி வைத்தார்.

அவ்வாறே அவ்விரு செயல்களும் தடுக்கப்பட்டன. அதில் அவனுக்கு மிகுந்த வருத்தம் எனினும், மீறி எதையும் செய்ய இயலவில்லை. ஆயினும் அவன் பையன்களோடு விளையாடச் செல்லவில்லை. அது அவனுக்குப் பிடிக்கவில்லை.

தனது உணர்வுகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு வாழ்ந்தாலும் அவனது பேச்சு, நடை, பாவனைகள் ஆகியவை அவனுக்குள் இருக்கும் அர்த்தநாரியத் தன்மையை வெளிப்படுத்தவே செய்தன. இதனால் ஊருக்குள்ளும், பள்ளியிலும் ஆடவர்களின் கேலி, அவமதிப்பு, சீண்டல் ஆகியவற்றை எதிர்கொள்ள நேர்ந்தது. இது குறித்து பெற்றோர் கேள்விப்படுகையில் அவனைக் கண்டித்துத் திருத்த முயல்வதும், அவன் முயன்று தோற்பதுமாகக் காலம் ஓடியது.

மேல்நிலை இரண்டாமாண்டு படிக்கையில் பாலின மாற்ற நாட்டம் மிகுந்து, “நான் பொண்ணுகளை மாதிரி ட்ரஸ் பண்ணிட்டு, பொண்ணா வாள ஆசைப்படறன்” எனப் பெற்றோரிடம் தெரிவித்துவிட்டான்.

அமுதா அழுது புலம்ப, செல்வமணி அவனை அடி பின்னியெடுத்துவிட்டார். மூட்டை தூக்கும் கரங்களின் அடி சாதாரணமாகவா இருக்கும்?

அதையும் தாங்கிக்கொள்ள முடிந்தது. ஆனால், இனியும் இங்கே இருந்தால் தனது விருப்பம் ஒருபோதும் நிறைவேறாது என்பதால் படிப்பையும் பாதியில் கைவிட்டு, வீட்டைவிட்டு ஓடிப்போய்விட்டான்.

*******

அது 2007. அவனுக்குப் பதினேழு வயது. பொள்ளாச்சி தாண்டி வேறெங்கும் – ஒரு மணி நேரத்துக்குள் செல்லக் கூடிய அண்டை நகரங்களான கோயமுத்தூருக்கோ உடுமலைக்கோ கூட – தனியாகப் போனதில்லை. வெளியுலக அனுபவம் அறவே கிடையாது.

          “எங்க போனானோ, எப்புடி இருக்கறானோ…? ஊருலகம் தெரியாத பையன். சேராத எடம் சேந்து கெட்டுப்போயிட்டா என்ன பண்றது? ரவுடிக, சமூக விரோதிககிட்ட சிக்குனா என்னென்ன கொடுமையெல்லாம் அனுபவிக்க வேண்டியிருக்குமோ! இல்ல, எங்காச்சு தூரந்தொலையாப் போயி தண்டவாளத்துல தலை குடுத்திருப்பானோ…!” அமுதா பலவாறு எண்ணியும் ஆவலாதித்தும் அழுது புலம்புவாள்.

          “அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. பரிச்சைல ஃபெயிலு, லவ் ஃபெய்லியரு, வீட்டுல வேற எதுக்காச்சுத் திட்டுனாங்க, செரியாப் படிக்கறதில்லீன்னு வாத்தியாரு அடிச்சாங்கங்கற காரணத்துக்குத் தற்கொலை பண்ற பசங்க, புள்ளைக இருக்கறாங்க. வீட்டை விட்டு ஓடற பொம்பளைச்சட்டிப் பசங்க அப்புடியில்ல. எங்கியாச்சு அலிகளைப் பாத்து அவுங்ககூட சேந்துக்குவானுக. அவுங்ககிட்ட நாட்டு முறைலயோ, பம்பாய்க்குப் போயி ஆஸ்பத்திரிலயோ ஆப்பரேசன் பண்ணி, அவனுகளும் அலியாயிருவானுக. இவனும் அப்படித்தான் எங்கயாச்சும் போயிருப்பான்” என்றார் செல்வமணி, நம்பிக்கையோடு.

          அவன் தற்கொலை செய்திருக்க மாட்டான் என்பதில் அவளுக்கு ஆறுதல். ஆனால், திருநங்கையாக ஆவதை ஏற்க இயலவில்லை.

“அப்புடி ஆகறக்கு முன்னாடி அவனைத் தேடிக் கண்டுபுடிச்சுக் கூட்டிட்டு வந்தர்லாம்” என்றாள்.

          “எங்கீன்னு போயித் தேடறது? எப்புடியோ தேடிக் கண்டுபுடிச்சுக் கூட்டிட்டு வந்தாலும், பொம்பளைச்சட்டிகளைத் தடுத்து நிறுத்தறது சிரமம். என்னைக்கிருந்தாலும் மறுக்காவும் ஓடிப் போகத்தான் செய்வாங்க. அவுங்குளுக்கு ஊரு – உலகம், மானம் – மருகேதி, சொந்த – பந்தம், குடும்பம் எல்லாத்தையும்விட, பொம்பளைகளாட்ட வாளணும்கறதுதான் ஒரே குறியா இருக்கும். போனவன் போனவனாவே இருக்குட்டும். இந்த அளவுல நம்ம மானம் கெட்டதோட விட்டுட்டா நல்லது. கூட்டீட்டு வந்து மிச்ச மீதியும் கெட வேண்டாம்” என்றுவிட்டார் கறாராக.

          அவனைப் பற்றி விசாரிப்பவர்களிடம், “அவனுக்கு அம்பறாம்பாளையம் போயிப் பிண்டம் வெச்சாச்சு” என்று சொல்லிவிடுவார்.

          புதிதாகப் பழக்கமாகிறவர்களிடம் தனக்கு ஒரு மகன், ஒரு மகள் என்றே தெரிவிப்பார்.

வாஞ்சிநாதன் வீட்டை விட்டுப் போனபோது ப்ரசன்னாவுக்கு 12, ஆனந்திக்கு 9 வயது. சிறார்களானதால் அவர்களுக்கு அப்போது ஆண் – பெண் – திருநங்கை மதிப்பீடுகள் பற்றியோ, திருநங்கையர் விவகாரங்கள் பற்றியோ குறிப்பிடத் தக்க அளவில் எதுவும் தெரியாது. வாஞ்சியுடனான பாசப் பிணைப்பு மட்டுமே அவர்களுக்குள் இருந்தது. அவன் இல்லாத இழப்பை அவர்கள் வெகுவாக உணர்ந்து வருந்தினர். அமுதாவும் அப்படித்தான்.

அதுவும் அவன் தலைமகன். முதல் குழந்தை எனும் சிறப்பும், முதல் குழந்தை ஆணாகப் பிறந்ததில் ஏற்படுகிற பேருவப்பும், தனக்குக் கொள்ளி வைக்க வேண்டியவன் என்னும் சம்பிரதாயப் பிணைப்பும், இவற்றாலான அதிக பாசமும் அவனது பிறப்பிலிருந்தே தொடர்ந்து வந்தன. அதோடு குழந்தைக் காலத்திலிருந்தே அவன் தன் மீதும், சகோதர சகோதரிகளிடமும் காட்டுகிற பாசம், தனக்கு ஒத்தாசையாக பெண் பிள்ளைகள் போல வீட்டு வேலைகள் செய்வது, அவனது சாதுக் குணம் ஆகியவற்றால் அவன் மீது அவளுக்குத் தனிக் கரிசனமும் இருந்தது. ஆனால், அவளுக்கும் அவன் திருநங்கையாக ஆவது பிடிக்கவில்லை. எந்தத் தாய்க்குத்தான் அது பிடிக்கும்?

ஆனால், அவன் ஓடிப்போன பின், “ஆணோ, பொண்ணோ, அலியோ – என் வயித்துல பொறந்த கொளந்தைதான! அவன் இப்புடி வீட்டை விட்டுப் போவான்னு தெரிஞ்சிருந்தா, நீ எப்புடி வேண்ணாலும் இருந்துக்கோன்னு சொல்லியிருப்பனே…” எனப் புலம்பிக்கொண்டிருந்தாள்.

“வாய மூடு! அவன் பாவாடை – தாவணி, சுடிதாரு போட்டு, கம்மலு – மூக்குத்தி மாட்டிட்டு இருந்தா, அப்பறம் நான் வேட்டியக் கட்டீட்டு, மீசை வெச்சுட்டு, ஆம்பளைன்னு வெளிய தலை காட்ட முடியுமா?” கொந்தளிப்பார் செல்வமணி.

பின் அவளும் அந்த எண்ணத்தை விட்டுவிட்டாள். ஆனால், வாஞ்சியைப் பற்றிய வருத்தமும், நினைப்பும் எப்போதும் வாட்டிக் கொண்டிருக்கும்.

*******

அந்தக் காலகட்டத்தில் திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கவில்லை. ஒடுக்கப்பட்டவர்களிலும் ஒடுக்கப்பட்டவர்களாக இருந்த அவர்கள் குடும்பம், சமூகம், அரசு ஆகிய அனைத்துக் கட்டமைப்புகளிலும் விலக்கப்பட்டவர்களாக இருந்தனர். செல்வமணிக்கும் அப்போது திருநங்கைகள் குறித்து சமூகப் பொதுப் பார்வையே இருந்தது. வாஞ்சியினால் குடும்ப கௌரவத்துக்கு ஏற்பட்ட இழுக்கின் காரணமாக அவன் மீதான வெறுப்பு வெகு காலமாகத் தீரவில்லை. அவனைப் பற்றிய பேச்சை எடுத்தாலே காச்சு மூச்செனக் கத்துவார்.

பிந்தைய வருடங்களில் பொது சமூகத்தில் திருநங்கைகள் பற்றிய விழிப்புணர்வும், திருநங்கைகள் சமூகத்தில் படிப்படியான முன்னேற்றமும் ஓரளவு ஏற்பட்டுள்ளன. அடையாள அட்டை, குடும்ப அட்டை, வாக்களிக்கும் உரிமை, நல வாரியம் முதலானவற்றால் அரசு அங்கீகாரம் கிடைத்துள்ளது. கண்ணியமான சுய தொழில்கள், சமூக ஊடகங்கள், அரசுப் பணி, மருத்துவம், மாடலிங், சமூக சேவைகள், சாதனைகள் ஆகியவற்றின் மூலமாக சிறிதளவு சமூக அங்கீகாரமும் கிடைக்கத் தொடங்கியிருக்கிறது.

எனினும் குடும்பத்தாரும், உறவினர்களும் திருநங்கைகளை விலக்கி வைக்கும் நிலையே தொடர்கிறது. இதனாலேயே திருநங்கைகள் வீடுகளை விட்டு வெளியேறி குழுவாக ஒன்றிணைந்து வாழும் நிலையும் நீடிக்கிறது.

இருந்தாலும் குடும்பத்தாரின் புரிதல், சமூக ஒதுக்குதலில் ஏற்பட்டுள்ள தளர்வு ஆகியவற்றின் காரணமாக சமீப காலமாக ஒரு சில இடங்களில், திருநங்கைகளை அவர்களது குடும்பத்தினர் மறைமுகமாகவோ, அரசல்புரசலாகவோ ஏற்று அரவணைப்பதும் நடந்துதான் வருகிறது.

          இதையெல்லாம் பற்றிக் கேள்விப்பட்டாலும் செல்வமணி அவற்றைப் பொருட்படுத்த மாட்டார். யாராவது பேச்சுக்கொடுத்தாலும் அது வாஞ்சியைப் பற்றிப் பேசுவதற்குத்தான் என்பதால் பேச்சைத் துண்டித்துக்கொள்வார். ஆனால், முன்பு போல கோபிப்பதில்லை.

பட்டப் படிப்பினனான ப்ரசன்னா, திருநங்கைகள் குறித்த அனைத்து விஷயங்களையும் திரட்டிக் கணினியில் வைத்திருப்பான். அவற்றைப் பற்றி செல்வமணியிடமும், அமுதாவிடமும் தெரிவிக்கவும் செய்வான்.

“ஆணாப் பொறந்து திருநங்கைகளா ஆகறதுக்குக் காரணம் அவங்களோட தப்பில்ல. உங்களை மாதிரி நம்பிக்கையாளர்களோட கண்ணோட்டத்துல சொல்லணும்னா, அது கடவுளோட தப்பு. அறிவியல் பார்வைல சொல்லணும்னா, குரோமோசோம் குறைபாடு” என்பதில் துவங்கி, “குடும்பம், சொந்த பந்தம், சமூகம் எல்லாரும் ஒதுக்கறதுனாலதான் அவங்க வாழறக்கு வேற வழியில்லாம பிச்சை, ப்ராத்தல்னு இழிதொழில் செஞ்சு பொழைக்க வேண்டி இருக்குது” என்பது வரை விளக்குவான். “அண்ணன் திரும்பி வந்தா நாம ஏத்துக்கணும்” எனவும் சொல்வான்.

அமுதாவுக்கும் அதே எண்ணம்தான். வாஞ்சி என்றைக்காவது திரும்பி வருவான் என்கிற நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் அவளுக்கு இருந்தது. அவ்வாறே இதோ இப்போது திரும்பி வந்திருக்கிறான்.

வேரூன்றிய பாதங்களோடு நிற்கும் இவளை நெருங்கியவன், தனது பயணப் பையை இறக்கி வைத்துவிட்டு, “அம்மா…! அம்மா…!” என்றான் மறுபடியும். அவனுக்கு வேறு வார்த்தைகள் எழவில்லை.

அமுதா துக்கத்தோடு, “உன்னை இந்த ஜென்மத்துல மறுக்காப் பாக்க முடியுமா, நீ திரும்பி வருவியா – மாட்டயான்னு எத்தனை வருசம் தவியாத் தவிச்சுட்டிருந்தேன்! போகாத கோவிலில்ல; வேண்டாத தெய்வமில்ல. எந்த சாமி குடுத்த வரமோ, போன ஜென்மப் புண்ணியமோ – வந்து சேந்துட்டே…” என்று திருநங்கை மகனின் முகத்தை வாரி வருடி மகிழ்ந்தாள்.

*******

வாஞ்சியின் மீள்வருகையை செல்வமணி எதிர்க்கவும் இல்லை; வரவேற்கவும் இல்லை. அவனை ஏற்பதா, விலக்குவதா என்பதில் முடிவெடுக்க இயலாதவராக இருந்த அவர், “நாட்டுல முன்னைக்கு இப்ப நெலைமை கொஞ்சம் மாறித்தான் இருக்குது. இருந்தாலும் குடும்பம், சொந்த பந்தம் இந்த விசியத்துல அப்புடியொண்ணும் பெருசா மாறுல. டவுனுகள்லயே அப்புடி. கிராமத்துல சொல்லணுமா? அதுதான் யோசனையா இருக்குது…” என்றார்.

பல்லாண்டுகளாகத் தொடர்ந்து ப்ரசன்னா கொடுத்துவந்த விழிப்புணர்வு காரணமாகவும், வாலிபனான அவன் தனக்கு உறுதுணையாக இருக்கிறான் என்பதாலும்தான் அவர் இந்த அளவுக்கு மாறியிருந்தார். இல்லாவிடில் இன்னமும் பழைய நிலைபாட்டிலேயே இருந்திருப்பார்.

“ஊராரும், சொந்த பந்தமுமா நம்முளுக்கு சோத்துக்கு, சாத்துக்குக் குடுக்கறாங்க?” என்றாள் அமுதா, தீர்மானமாக.

அதை ஆமோதித்த ப்ரசன்னா, “புதுசா பேரு வெச்சிருப்பயே,… அது என்ன?” என்று வாஞ்சியிடம் கேட்டுக்கொண்டு, “அம்மா,… அக்காவை இனிமே ரேகான்னு கூப்புடுங்க” என்றான் அமுதாவிடம்.

*******

வீட்டை விட்டுச் சென்றதிலிருந்து ரேகாவுக்கு அம்மா, சகோதர சகோதரிகள் ஆகியோரின் நினைவு வராத நாளில்லை. ஊருக்குச் சென்று அவர்களைப் பார்த்துவரவேண்டும் என்ற ஆசை அவ்வப்போது மேலிடும். அப்பாவை நினைத்துக் கட்டுப்படுத்திக்கொள்வாள். காலப்போக்கில் நிலவரங்கள் மாற மாற, நம் ஊராரும் சற்றாவது மாறியிருப்பார்கள் என்கிற எண்ணம் எழுந்தாலும், அப்பா மாறியிருக்க மாட்டார்; மாறவும் மாட்டார் என்ற எண்ணம் வலுத்திருந்தது. அதனாலேயே இதுவரை ஊருக்கு வர முற்படவில்லை. போய்த்தான் பார்ப்போமே என்கிற தைரியம் இப்போதுதான் ஏற்பட்டது. கிளம்பிவிட்டாள்.

அம்மா தன்னை ஏற்கக் கூடும். தம்பியும், தங்கையும் ஏற்பார்களா, மாட்டார்களா என்பதற்கு உத்தரவாதம் இல்லை. அப்பா கண்டிப்பாக ஏற்க மாட்டார் என்றே கருதியிருந்தாள். எது எப்படியாயினும், அவர்கள் தன்னை அடித்து விரட்டினாலுமே கூட, பெற்றோரையும், உடன்பிறப்புகளையும் ஒரு முறை பார்த்தாலே போதும் என்றுதான் வந்திருந்தாள். மும்பை திரும்பிப் போகும் எண்ணமில்லை. குடும்பத்தாரைப் பார்த்துவிட்டு, கண் காணாத தூரத்தில், தமிழகத்திலோ பாண்டிச்சேரியிலோ ஏதாவது ஒரு நகரத்திற்குச் சென்று பிழைத்துக்கொள்ளலாம் என்றுதான் திட்டம். ஆனால், இங்கே முற்றிலும் நேர்மாறாக நடந்துவிட்டது. அவளுக்கு அது நம்பவியலாத வியப்பு. நடப்பது நிஜமா, கனவா என்கிற மாதிரி கிடைகொள்ளாத சந்தோஷம்.

வீட்டை விட்டு ஓடிச்செல்கிற, அல்லது வெளியேற்றப்படுகிற திருநங்கைகள் அனைவருக்கும் வெளி உலகில் ஏற்படுகிற துன்ப துயரங்கள், திருநங்கைகள் சமூகத்தில் கிடைக்கிற அரவணைப்பு, ஆண்களுடனான காதல், திருமணம் ஆகியவற்றால் உண்டாகிற ஏமாற்றம், பண இழப்பு, மனக் கசப்பு ஆகியவை ரேகாவின் வாழ்விலும் ஏற்பட்டிருந்தது. அவை யாவும் இப்போது மறந்துவிட்டிருந்தன.

அவளது குடும்பம் அவளை ஏற்றுக்கொண்டிருக்கிறது. இனி அவள் தனது வீட்டில், தனது விருப்பப்படி பெண்ணுடை, பெண்ணலங்காரம் சகிதம், ஒரு பெண்ணாக வாழலாம். வாழ்வில் இதைவிட மகிழ்ச்சிக்கும், திளைப்புக்கும், பரவசத்துக்கும் உள்ள காரியம் இருக்க முடியுமா?

சுவரில் மாட்டப்பட்டிருந்த தங்கையின் திருமணப் போட்டோவையும், அடுக்கறையில் இருந்த அவர்களது குழந்தையின் போட்டோவையும் பார்வையிட்டுவிட்டு, “ஆனந்தியை எங்க கட்டிக் குடுத்திருக்குது?” என விசாரித்தாள்.

          “குடிமங்கலம். நீ வந்திருக்கறது தெரிஞ்சா ரொம்ப சந்தோசப்படுவா” என்ற ப்ரசன்னா, அலைபேசியில் அவளை அழைத்து விபரம் தெரிவித்துவிட்டு, வாட்ஸப் வீடியோ கால் செய்து இவளிடம் பேசக் கொடுத்தான். குழந்தையையும் காட்டி உற்சாகமாகப் பேசிய அவளிடம், “நான் உங்க வீட்டுக்கு வர்லாமா?” என்று கேட்க, அவள் தயக்கத்தோடு, “இல்ல,… அடுத்த வாரம் நாங்களே அங்க வர்றோம்” என்றாள்.

*******

வாஞ்சி திருநங்கையாகித் திரும்பி வந்திருக்கிறான், இனி அவனை வீட்டோடு வைத்துக்கொள்ளப்போகிறார்களாம் என்ற சேதி, ஊர் முழுக்கப் பரவியது. சலூன்கள், டீக் கடைகள், டெய்லர் கடைகள், பழைய திண்ணைகள் எங்கும் விவாதமாயிற்று. உள்ளூர் சொந்தங்களுக்குத் தெரிந்து, சுற்று வட்டார சொந்தங்களுக்கும், அசலூர் சொந்தங்களுக்கும் சேதி பரப்பினர்.

வேண்டப்பட்டவர்கள் செல்வமணியிடம், “பொண்டாட்டியும் பையனும் சொல்றாங்கன்னா உங்குளுக்கு புத்தியில்லியா? அது இருக்கற எடத்துக்கு நீங்க போயிப் பாத்துட்டு வந்தாலும் தேவுல. அது என்னைக்காச்சு ஒருக்கா வந்து, ஒரு நாளு – ரெண்டு நாளு இருந்துட்டுப் போறதுன்னாலும் போச்சாது. வீட்டோடவே இருக்கறதுன்னா நல்லாவா இருக்கும்?” என ஓதினர்.  

          அவர் அதை வீட்டில் தெரிவித்தபோது, “எங்க புள்ளைய நாங்க எங்க வீட்டுல வெச்சிருக்கறக்கு உங்குளுக்கு என்ன கொடையுதுன்னு கேக்க வேண்டீதுதான?” என அமுதா வெகுண்டாள்.

“ஏற்கனவே என்னால உங்களுக்கு அவமானம். இப்பவும் ஊர்க்காரங்க ஏசறது, சொந்தங்காரங்க பளிக்கறது எல்லாத்தையும் கேக்க வேண்டியதாப் போச்சே…!” ரேகா வருந்தினாள்.

*******

இவர்களின் ஊரிலிருந்து குடிமங்கலம் ஒரு மணி நேரப் பயணத் தூரம்தான். அடுத்த ஞாயிறில் ஆனந்தி மட்டும் குழந்தையோடு பேருந்தில் வந்தாள்.

“ஏம்மா,… மாப்ளை வர்லயா?” ரேகா கேட்டாள்.

அவள் தயங்கியபடியே சொன்னாள். “அவரும் வர்றக்கு இருந்தாரு. கடைசில, எங்க மாமியாரு தடுத்துட்டாங்க. நீ வீட்டுக்கு வர்றதா ஃபோன்ல சொன்னபோதும், பக்கத்துல இருந்து கேட்டுட்டிருந்த அவங்கதான் வேண்டாம்னு ஜாடை காட்டித் தடுக்க வெச்சாங்க. இன்னைக்கு என்னை மட்டும் இங்க வர்றதுக்கு அனுமதிச்சிருக்கறாங்க. மத்தியானத்துக்குள்ள நான் அங்க போயாகணும்னு கண்டிஷன்.”

ரேகாவுக்கு வேதனையும் கழிவிரக்கமும் மேலிட்டது. ஆனந்தி ஓரிரு மணி நேரங்கள் பேசிக்கொண்டிருந்துவிட்டுக் கிளம்பினாள். ரேகா தனது கழுத்தில் இருந்த நான்கு பவுன் தங்கச் சங்கிலியைக் கழற்றி குழந்தையின் கழுத்தில் அணிவித்து, தலையைத் தொட்டு ஆசீர்வதித்தாள்.

ஆனந்தி சென்ற பின், “நீ ஊரை விட்டுப் போனாலும் குடும்பத்துல பிரச்சனை தீருல. அரவானிக் குடும்பம்னு, போன கௌரவம் போனதுதான். ஆனந்தி ப்ளஸ் டூ முடிச்சு வீட்டுல இருக்கும்போதுலருந்தே வரன் தேடுனோம். ஆனா, அஞ்சு வருசமா மாப்பளை கெடைக்கல. காரணம் இதுதான். கடைசீல, நம்மளுக்கு ரொம்பக் கீள இருக்கற குடும்பத்துல, எட்டாவது படிச்ச கூலி வேலை மாப்பளைக்கு, வரதட்சணை அதிகமாக் குடுத்து அவளைத் தாட்டிவிட வேண்டீதாப் போச்சு!” என்றார் செல்வமணி, உணர்ச்சியற்ற முகத்தோடும் குரலோடும்.

ரேகாவுக்கு அதைக் கேட்க அதிர்ச்சியாக இருந்தது.

“ப்ரசன்னாவுக்கு மூணு வருசமாப் பொண்ணுத் தேடும்போதும் கெடைக்காததுக்குக் காரணம் இதுதான். வெளியாளுகளை விடு. அத்தை புள்ளையவே அவனுக்குக் குடுக்க மாட்டீன்னுட்டாங்க. உன்னையப் பத்துன பளைய கதை தெரிஞ்சதுக்கே இப்புடி. இப்ப நீ சீலையக் கட்டீட்டு இங்கியே வந்து தங்கீட்டேன்னு தெரிஞ்சா எவன் பொண்ணு குடுப்பான்?”

ரேகாவுக்கு அதையும் அறிந்ததில் பேரதிர்ச்சி. “என்னப்பா சொல்றீங்க? இதையெல்லாம் ஏன் இவ்வளவு நாளா நீங்க யாருமே எங்கிட்ட சொல்லல?”

அவரோ அமுதாவோ பதில் சொல்லும் முன் ப்ரசன்னா முந்திக்கொண்டான். “அதை விடுக்கா. புரியாத, மனிதாபிமானமில்லாத மக்கள் அப்படித்தான் இருப்பாங்க. பெத்த தாய் – தகப்பனே திருநங்கைகளை அடிக்கவும், வீட்டை விட்டு வெரட்டவும் செய்யும்போது மத்தவங்களை என்ன சொல்றது? எப்படியோ ஆனந்தி காரியம் முடிஞ்சிருச்சு. விஷயம் தெரிஞ்சு பொண்ணு குடுக்கற குடும்பத்துலருந்து எனக்குப் பொண்ணு கெடைச்சாப் போதும். அதுவும், நீ பொண்ணைப் பாத்துப் பேசி, உனக்கு முழு திருப்தியா இருந்தாத்தான் கல்யாணம்” என்றான்.

செல்வமணியின் முகத்தில் அதிருப்தியும் நிராசையும் வெளிப்பட்டன. “அப்ப உனக்கு இந்த ஜென்மத்துல கல்யாணம் நடக்காது!”

“சும்மா இருங்க. அவனுக்குன்னு ஒரு பொண்ணை ஆண்டவன் எளுதி வெக்காமயா இருப்பான்? அதெல்லாம் நடக்க வேண்டிய நேரத்துல தானா நடக்கும்” என்றாள் அமுதா.

*******

அன்று இரவு அவளும் ரேகாவும் அருகருகே பாயிட்டுத் தூங்கப் படுத்திருக்கையில் இருவரும் வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.

“என்னால உங்க எல்லார்த்துக்கும் எவ்வளவு கஷ்டம்…!” ரேகா வெதும்பினாள்.

“உன்னைப் பெத்ததே நான்தானே! அப்படிப் பாத்தா, உன்னோட கஷ்டத்துக்கும், உன்னால குடும்பத்துக்கு வந்த கஷ்டங்களுக்கும் நான்தான் மூல காரணம்” என்றாள் அமுதா, ஆற்றாமையோடு.

வைகறைப் பொழுதில் அவள் விழித்தெழுந்தபோது அருகே ரேகாவின் மிச்ச நகைகளும், சுமார் 25 ஆயிரம் ரூபாய் பணமும் இருந்தன. ரேகாவும் அவளது பயணப் பையும் வீட்டில் எங்கும் இல்லை.

-shahrajscape@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button