இணைய இதழ்இணைய இதழ் 81சிறுகதைகள்

தொட்டில் – முத்துக்கிருஷ்ணன்

சிறுகதை | வாசகசாலை

த்திய சென்னையில் சேத்துப்பட்டில் அழகாய் இருந்த கூவ நதிக்கரை ஓரத்திலே ஓர் அடுக்குமாடி கட்டிடம். மூன்றாம் தளத்திலுள்ள மூன்று அறைகளுள்ள ஒரு வீட்டின் வரவேற்பு அறையின் தென்மேற்கு மூலையின் ஜன்னல் ஓரம்தான் என் இருப்பிடம், தற்போது.

நியூயார்க்கிலிருந்து சமீபத்தில் திரும்பிய இவ்வீட்டின் இளையமகள் என்னை இளக்காரமாகவே பார்த்தாள். முப்பது ஆண்டுகளுக்கு முன்னர், என்மீது அமர்ந்து, படுத்து, நின்று, குதித்து,தின்று,கழிந்து மகிழ்ந்தவள்தான். இளையவளின் சந்ததிக்கென்றே என்னை இங்கே அனுப்பி வைத்தாள், இவளைவிட நான்கு வயது மூத்தவளான ஒரே உடன் பிறப்பு

மூத்தவள் தான் என் மீது முதன் முதலில்தொட்டிலிடப்பட்டவள்மற்றும் முன் உரிமை கொண்டவளும் கூட. அவளும் இவளுமே என்மீதமர்ந்து கற்பனை கதைகளைப் பெற்றோர் கூற கேட்பார்கள். அப்போது, இருவருமே மணம் கொள்ளஒரு ராஜகுமாரன் வருவான்என்பதை ஆழ்மனத்தில் கொண்டனர் போலும். பெற்றோரும் ராஜகுமாரனை எதிர்பார்த்திருந்தனர். அவ்வாறான மூத்தவள், தன்பள்ளித் தோழி இரண்டாவது குழந்தையும் பெறப் போகிறாள் என்றறிந்தவுடன், தன் திருமணத்தைத் தள்ளிப் போடவைத்த கற்பனை இளவரசனைத் துறந்து, மணமுடித்து இரு குழந்தைகளைப் பெற்று என்மீதுதான் கிடத்தினாள். நான் தாங்கினேன்.என்னில் வளர்ந்தனர்,என்னைக் கடந்தனர்.

இக்கட்டில் தொட்டிலை நல்ல முதிர்ந்த பொதிகை மலைத் தேக்கு மரத்தில் ஆதிச்சநல்லூர் தச்சு ஆசாரி ஒருவரிடம், நல்ல பயனுள்ள பாரம்பரிய வடிவத்தில் நிலையாக நிலைத்து இருக்கக் கூடியதும், அதே சமயம் மேற்பகுதி ஆட்டக்கூடிய தொட்டிலாகவும் செய்துதரச் செய்து தந்தளித்தார், துபாயில் பணியாற்றிவந்த இவர்களது இளைய மாமன்.

முதலில் சென்னையில் தான் அமைந்தேன்.மூத்தவளின் ஓராண்டு நிறைவுக் கொண்டாட்டத்தில் பங்கு கொண்டவர்கள் அவளைக் கொஞ்சிப் புகழ்ந்த அளவுக்கே என் அழகான வடிவத்தையும், உறுதியையும், தோற்றப் பொலிவையும் புகழ்ந்தனர். இளையவளது மூன்றாம் ஆண்டு நிறைவு விழாவுடன், நான் இவளது சிற்றப்பாக்களின் குழந்தைகளை என்னளவில் பேண குடந்தை, தஞ்சை வரையில் சென்றேன். ஏழாண்டுகளுக்கு முன்னர் மூத்தவளின் மூத்தவள் பிறந்தவுடன் பெங்களூருக்கும் சென்றேன்.

இளையவளோ அமெரிக்காவில் பொது முடக்கம் சற்றுத் தளர்த்தப் பட்ட காலத்தில், தன்னந் தனியாகக் குறுக்கும் நெடுக்குமாக அலைந்தவள் தான். காட்சி ஊடகத்தில் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பணியாற்றியவள் கூட. “ஒரு ராஜகுமாரன்கூட இந்நாள் வரைத் தென்படவில்லை. காத்திருக்கிறாள். காலம் கழிகிறது. ஆண்டகை கிட்டுமா என்றறியாள். டெர்ரி பிராசர்ட் தான் அவளின் ஆத்மார்த்த இலக்கியத் தத்துவ வாதி. சான்டாகிளாஸ் முதல் சட்ட நீதி வரை அனைத்தும் எதிர்கொள்ள வேண்டிய ஆழ்ந்த பொய்களே என எண்ணுபவள்.மணவாளனையும் மணவாழ்க்கையும் இதில் எங்கு வைத்தாளோ?

இப்போதுதான், அக்கா தன் மணவாளனைக் கண்டடைந்த செயலிகள் மூலம், தன் இணையைத் தேட ஆரம்பித்தாள். பெண் பார்க்க வருபவர்கள், வீட்டின் அழகைக் கண்ணால் அளந்து, வீட்டிலுள்ளோரை மதிப்பிடுவார்கள் என, பழையன கழிதலெனஅதிரடி வருமானவரி சோதனபோலப் புரட்டிப் போட்டாள், வெளியேற்றினாள். அச்சமயத்தில் அவளது பெற்றோர் தப்பியதே தம்பிரானின் புண்ணியத்தால் தான். புதுவென புகுதலும் என்பதை நிறைவேற்ற குடும்பச் சேமிப்பைப் பாதியாக்கினாள்.

பல மின்சார, மின்னணு சாதனங்கள், நான்கு காலிகிளாத் பழைய கொசு வலைகள், படுக்கை விரிப்புகள்,பற்பல எவர்ஸில்வர் பெரிய சிறிய பாத்திரங்கள்,புத்தகங்கள்,சாமிப் படங்கள், ஆகியவற்றை என்மீது இளையவளே இரக்கமற்று ஏற்றி வைத்தாள், அவைகளை விரும்புவோர் வந்து எடுத்துச் செல்லும் வரை.

என்னை இளகிய தன்மையற்ற கடினமான, சுலபமாக நகர்த்த முடியாத, தூக்கிச் செல்ல வழியற்ற, தற்கால நாகரிக வாழ்விடத்தில் பொருந்தா ஜடம் என்றாள். அவள் தமக்கையோ தான் தவழ்ந்த தொட்டில் கட்டிலில் தன் சந்ததியினர் அனைவரும் தவழ வேண்டுமெனவே விரும்புகிறவள். தொப்புள் கொடி உறவு தொடர்வது போலவே தொட்டில் உறவும் தொடர விரும்புபவள். என் உள்ளம் மூத்தவளின் உள்ளமே. இளையவள் என்னை ஜடமன்றி வேறொன்றாக நோக்குகின்றாள் இல்லை. என்னை வெளியேற்றி விட வேண்டும் என்பதில் குறியாக இருந்தாள்.

அவர்களின் பெற்றோரின் எண்ணமும் மூத்தவள் கொண்டுள்ளதைப் போன்றது தான். இக் கட்டில் தொட்டிலின் வயது முப்பத்து எட்டு ஆண்டுகள். அவர்களின் தந்தை தனக்காகப் பயன்படுத்தப் பட்ட மணித்தொட்டில் , தன் பங்காளி ஒருவரிடம் உள்ளது என்பார். ஆகவே இதுவும் உபயோகத்திலிருந்து பழுது படாமல் பாதுகாக்கப்பட்டு நூறாண்டு காண வேண்டுமென விரும்பினார். தொட்டில் வீட்டின் கண் இருப்பதென்பது வழித்தோன்றல்களை விரும்புவது, வரவேற்பதே என்பார்.

மேலதிகமாகச் சொல்லுவார், இத் தொட்டிலை அழிப்பது என்பது மற்ற மரங்களையும் அழிப்பது தான்.இத் தொட்டிலில் உங்களை நாங்கள், நம் உறவினர்கள், நண்பர்கள் முதலில் கண்ட சித்திரம் தொடங்கி பற்பலப் பொழுதுகளில் பல்வகைச் சேட்டைச் செயல்களுடன் கூடிய உணர்வு பாவத்தை மகிழ்வுடன் கண்டறிந்து கொண்டாடிய அனைவரும், இதனைக் காணும் தோறும் மீண்டும் மகிழ்வு கொள்வதையும் அழிப்பதாகும். மரம், நீர் நெருப்பு ஆகியவை நம் பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு நாள் வாழ்விலும் தொடர்புடையதாகும் என்பார். கூடுதலாக, கட்டில் சத்தமும் தொட்டில் சத்தமும் கேட்க விரும்பாத பெண்கள் உண்டோ என்றும் வினாவுவார். இதனின் தற்போதைய பயனாளியைக் கண்டடைந்து, அவரிடம் அளித்து, அழிவுறாமல் காப்பது எவ்வாறு என்றும் சிந்திப்பார், மற்றவர்களிடமும் கலந்தாலோசனை செய்வார்.

இளையவள் கூறுவாள் நேரடி ஆண் கூடலின்றி பிள்ளைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பிருக்கும் அமெரிக்காவிலிருந்து வந்தது, இங்கே பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் சூழ, வாழ்த்தொலிக்க, மணமுடித்து, குழந்தைப் பெற்று, இவ்விடம் வளர்க்க வேண்டும் என்று தான்

தன் தந்தையைபூர்ஷுவாஎன்பாள். தான் கலைப்படைப்புத் துறையில்,இங்கு இப்போதுதான் மீண்டும் நுழைந்துள்ளதாலும், அவரது வாழ்க்கை போன்று நிலையான வாழ்விடம் , பொருள், ஏவல் ஒன்றுகூடி வர வாய்ப்பு இல்லையாதலால், தன் சித்தத்துக்கு ஒவ்வாத ஜடப் பொருட்களைக் கட்டிக் கொண்டு அழ முடியாது என்றாள்

தான் அடிக்கடி பயணங்களை மேற்கொள்ளும் பணி புரிவதால், எல்லா வகையான ஊர்திகளிலும் தன் கையோடு எடுத்துச் செல்லக் கூடிய குழந்தை வண்டி போன்று வடிவமைக்கப்பட்ட குழந்தை கண்காணிப்பு அமைப்புடன் கூடிய நவீன திறன் தொட்டிலைத்தான் தன் குழந்தைக்குத் தேர்ந்தெடுப்பேன் என்றாள். . 

வயது முதிர்ந்த பெற்றோரின் நிலைமை, இளையவள் வீடு திரும்பியது முதல் அவள் வீட்டிலடிக்கும் கூத்தினால் மிகவும் மோசமடைந்தது. முன்னரே இருந்த உடல் நோய்கள் முற்றியும், கூடவே மறதியும் மனச்சோர்வும் தலைதூக்கியது.

தற்போதைக்கு என்னையும் காப்பக மையம் ஒன்றுக்கு அனுப்பி வைக்க ஆயத்தமானாள்.

********

vmuthukrishnan@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button