“டுடே பிரேக்கிங் நியூஸ்” என கூகுளில் டைப்பியது சீனிவாசனின் விரல்கள். தினமும் மதிய உணவு உண்டது போக, மிச்சமிருக்கும் பதினைந்து நிமிடங்களுக்கு உலக நடப்புகளை நுனிப்புல் மேயப் பழகியிருந்தான்.
வெயிலுக்கு மின்னும் கண்ணாடிச் சுவர்கள், குட்டிப் பூங்கா. ஊசியிலை மரங்களென வடிவமைக்கப்பட்டிருந்த அந்தக் கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருக்கிறது ‘டெக்டினோ’ அலுவலகம்.
வொர்க் ஃபிரம் ஹோம் லிருந்து சற்று விடுதலையாகி பதினைந்து நாட்களாகத்தான் அலுவலகத்தில் வேலை தொடங்கியிருந்தது.
சின்சியர் சிகாமணிகளுக்கெல்லாம் சிடுசிடுப்பான முகம் என்பதை உறுதிசெய்யும் முக அமைப்பு சீனிவாசனுக்கானது. கூடுதல் பதவி வேறு.
கேபினுக்கு உள்ளிருந்தே, ஏனையோரைப் பம்பரமாகச் சுழலவிடுபவன்.
ஸ்கீரினை ஸ்கிரால் செய்து, ஒவ்வொரு செய்தியாகப் வாசித்து வந்தான்.
திடீரென ஓரிடத்தில் அவனது பார்வை நிலைத்தது. கூர்ந்து அவன் அந்தப் புகைப்படத்தை ஷும் இன், ஷூம் அவுட் செய்வதுமாக இருந்தான். ஆறுதலா? அல்லது ஆச்சர்யமா? என்று சொல்ல முடியாதபடி உணர்வு எழ, மொபைலை ஒரு ஓரமாக எடுத்து வைத்தான். மேசையில் நெற்றி படிய கண்களை மூடி
தன் சிறுவயது நினைவொன்றைக் கிளறி, அதனுள் மூழ்கிப் போனான்..
*******
“என்னப்பா இவ்வளவு கூட்டமா இருக்கு, எனக்கு பயமாயிருக்கு, என்னைத் தொலைச்சிடாதீங்கப்பா..” அப்பாவின் வலது கை விரலை இறுக்கமாக பிடித்துக் கொண்டேன்.
இரண்டு கட்டைப் பைகளோடு முன் சென்றாள் அம்மா. அதில் எங்களுக்கான கட்டுச்சோறு, தண்ணீர் கேன், மொட்டை அடித்து உடுத்திக் கொள்ள புதுத் துணிகள் இருந்தன.
அப்பாவின் கழுத்தில் சப்பரம் ஏறியபடி, கால்களை அவர் மார்புகளின் மீது ஊஞ்சலாடும் விதமாக தொங்க விட்டிருந்தாள் பாப்பா.
பாதையின் இரண்டு பக்கத்திலும் வரிசையாகக் கடைகள் இருந்தன. பல வண்ணங்களில் ஊதிப் புடைத்தப் பலூன்கள், குட்டை ஆடையும், செம்பட்டைத் தலை மயிர்களை விரித்து போட்ட விதமாகப் பார்ஃபி பொம்மைகள், பொய்த் துப்பாக்கிகள், சாமிப் படங்களென நிறைய விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
அப்பாவின் தலைமயிரை பிடித்திழுத்து, மத்தளம் கொட்டும் விதமாக அடித்து அடமாக பலூன் வாங்கித் தரச்சொல்லி, மழலையில் நச்சரித்தாள் பாப்பா.
“எனக்கும் ஒரு துப்பாக்கி வாங்கித் தாயேன்…” என்று கேட்க வேண்டும் போல் இருந்தது எனக்கு.
ஆனால் அந்தச் சத்தத்தில் நான் பேசினால் அவருக்குக் கேட்காது. எனக்காக குனிந்து கேட்கவேண்டும் அப்பா.
“கோயிலுக்கு உள்ள, நிறைய கடைங்க இருக்கும், அங்க வாங்கித் தாரேன் ராசாத்தி..” பாப்பாவைச் சமாதானப்படுத்தியபடி நிற்காமல் நடந்து போனார்.
யாரோ நெரிசலில் அம்மாவின் காலை மிதித்து விட்டார்கள் போல வெடுக்கென்று காலை உயர்த்தித் துடித்தாள். இதைக் கவனித்து விட்டார் அப்பா.
“நீ ஆளா நடந்து போனு அப்பவே சொன்னேன் கேட்டியா? கொண்டா பையை” அம்மாவிடமிருந்து ஒரு பையை வெடுக்கென்று வாங்கிக் கொண்டார்.
நடப்பது போலவே இல்லை, ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டு நகர்த்தினார்கள். இத்தனை நெரிசலில் மாட்டிக் கொண்டது இதுதான் முதல் தடவை.
நேர்கொண்டு பார்த்தால் என் உயரத்திற்கு யாருடைய முகத்தையும் பார்க்க முடியாது. எனக்கு முன்னே செல்பவர்களின் கால்களை மட்டும்தான் பார்க்க முடியும்.. அவர்களின் ஆடையில் வரையப்பட்டிருக்கும் பூக்களையும், பட்டாம்பூச்சியையும், இன்னும் பிற அடையாளம் தெரியாத வடிவங்களையும், எத்தனை நேரம்தான் பார்த்துக் கொண்டு வருவது. சலிப்பாக இருந்தது.
அடிக்கொருதரம் நாம் பிடித்துக் கொண்டிருப்பது அப்பாவின் விரல்தானா என்று உறுதி செய்ய மட்டும் மறக்க வில்லை நான்.
கால் வலித்தது. பாப்பாவைப் போலவே என்னையும் அப்பா தூக்கிக் கொண்டால் தேவலாம் போல இருந்தது. ஆனால் அதெப்படி முடியும்?
அதுவும் போக எட்டு வயதுதான் ஆனாலும், கொஞ்சம் கொழுக் மொழுக்கென்று குண்டாகவே இருப்பேன்.
என்னைப் போலவே அப்பாவுக்கும் எங்கேயாவது உட்கார வேண்டும் போல் இருந்ததோ என்னவோ? நல்லவேளையாக அவரே “ஒரு டீ குடிச்சிட்டு, செத்த உக்காந்து போவோம்..” என்றவர், எங்கள் பதிலுக்கு காத்திராமல், சுடச்சுட உழுந்தவடை தயாராகிக் கொண்டிருந்த ஒரு கடைக்குள் நுழைந்தார்.
அங்கு நான்கைந்து நாற்காலிகள் காலியாகக் கிடந்தன. இனிப்பு வாசனைக்கு மேசையில் கொய்கொய்யென்று ஈக்கள் மொய்த்திருந்தன.
உட்காரவே அசூயையாக இருந்தாலும், வேறு வழியில்லை. அந்த ஒய்வு எங்களுக்கு வேண்டுவதாக இருந்தது.
கடையில் “ஆயிரம் நிலவே வா.. ஓராயியரம் நிலவே வா..” என்ற பாடலைச் சத்தமாக ஒலிக்கவிட்டிருந்தார்கள். எம்.ஜி.ஆர் ரசிகரான அப்பா குஷியாகிப் போனார்.
ஆளுக்கொரு வடையை ஆர்டர் செய்து விட்டு, பாப்பாவுக்கு வாங்கும் பாலினை நன்றாக ஆற்றச் சொல்லிவிட்டு, எனக்கு காஃபி, அம்மாவுக்கும் அப்பாவிற்கும் டீயென அப்பாவே எடுத்து வந்தார். கூடுதலாக நான்கு தேன் மிட்டாய்களையும், இரண்டு பொரி உருண்டைகளையும் எனக்காக பொட்டலம் போட்டு வாங்கித் தந்தார்.
பசிக்கு லபக் லபக்கென்று முதல் ஆளாகத் தின்று முடித்தேன்.
“இன்னும் ஏதாச்சும் வேணுமாய்யா” என்று கேட்டாள் அம்மா..
“நம்ம புளியோதரை சாப்ட வயித்துல இடம் வேணும்ல..” சீரியசாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டதில் அம்மாவுக்கு சிரிப்பு வந்துவிட்டது.
“சரி, சரி, அந்தக் குடத்துல தண்ணி இருக்கு பாரு, வாயைக் கழுவிட்டு வா..” என்று ஒரு ஓரத்தை நோக்கி கைநீட்டினாள்.
நீலமும் பச்சையுமாக இரண்டு பிளாஸ்டிக் குடங்கள், ஒரே மாதிரியான சில்வர் தட்டுகளால் மூடப்பட்டிருந்தன.
பச்சைக் கலர் குடத்தின் மீது கவிழ்த்து வைக்கப்பட்ட நிலையில் இருந்த பெரிய டம்ளரை எடுக்கப் போனேன்.
அப்போது அதட்டும் தொணியில் “ஏலே அதைத் தொடாதே, நீ பக்கத்து கடையிலதானே வடை தின்ன, அந்தக் குடத்துல மோந்துக்கோ..?” அதட்டலாக யாரோ சொல்வது காதில் விழுந்தது.
ஏறெடுத்து எதிரில் நின்ற மனிதரின் முகத்தைப் பார்ப்பதற்குள்ளாக, அவருக்குப் பின்னால் தெரிந்த, செம்பழுப்பு நிற விரிப்பாக எதுவோ தெரிய பகீரென்று திடுக்கிட்டேன்..
நொடிக்கு மேல் தாளாமல் பார்வையைத் தாழ்த்தி ஓடிச் சென்று, அமர்ந்திருந்த அப்பாவின் வலது புஜத்தில் தலையைச் சாய்த்து தேம்பித் தேம்பி அழுதேன்.
“எதுக்குலே அழுகுத, போன பய, வாயக் கழுவாம அப்படியே வந்திருக்க..?” அவரிலிருந்து பிச்சி எடுக்காத குறையாக என்னை நிமிர்த்தினார்.
“அப்பா, நீங்க வாங்க, அங்க என்னவோ இருக்கு.. பயமாயிருக்கு..” அமர்ந்திருந்த அப்பாவை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றேன்.
மெதுவாக மிக மெதுவாக ஒரு பூனையைப் போல் என் பாதங்களை எடுத்து வைத்து, சினிமாக் கதாநாயகிகள் போல் ஒரு கண்ணை இறுக்கலாக மூடிக்கொண்டு மற்றொரு கண்ணை மட்டும் மெல்லத் திறந்து அந்தத் திசையை அப்பாவிடம் காட்டினேன்.
“ஏய், என்னலே இருக்கு அங்க, எனக்கு ஒன்னும் காங்கலையே..” எனது முகத்தை மூடியிருந்த கைகளை விலக்கினார் அப்பா..
“அப்பா..தண்..ண்..ண்.ணீ., தண்ணீ, அங்க பாருங்க எம்புட்டுன்னு..” சொற்களை விட்டு விட்டு சேர்ப்பதற்குள் மூச்சு வாங்கியது..
“ஹா ஹா.. அதாம்லே கடல்..”
“ஐய்யோ, இம்புட்டுப் பெருசாவா… நம்மல முக்கிராதா..?” நேர்கொண்டு பார்க்க இயலாமல் தலையைக் குனிந்து கொண்டே அப்பாவிடம் கேட்டேன்.
“வா.. உன்னை அது பக்கத்துல கூட்டிட்டுப் போறேன்..”
“ஐய்யோ, வேணாம்ப்பா.. நான் வரலை.. நான் இங்கேயே இருக்கேன், நீங்க போயிட்டு வாங்க..”
“நிறைய மணலா இருக்கும் வெளையாடலாம், ஜாலியா இருக்கும். அப்பா ஒனக்கு பலூன் வாங்கித் தர்ரேன் இன்ன” குதூகலமாக ஆசை காட்டினார் அப்பா.
“சூரசம்ஹாரம்! சாமிங்க சண்டை போடும், பார்க்க போகலாம்னு தானே கூட்டிட்டு வந்தீக, ஆனா கடல் னு புதுசா ஒன்னைக் காட்டுதீக, நிறைய்ய தண்ணியா இருக்கு, ரொம்ப உசராம இருக்கு, எனக்குப் பார்க்க பயம்மா இருக்கு..” இப்படியெல்லாம் புலம்பலாகி அழத் தொடங்கினாலும், மீண்டும் மீண்டும் அந்த ஆச்சர்யத்தைப் பார்க்க வேண்டும் போலவும் இருந்தது, தவிர்க்கவும் தோன்றியது எனக்கு.
என் கையைப் பிடித்து தரதரவென்று இழுத்து அம்மாவிடம் கூட்டி வந்து “இந்தா, உம் மகேன் என்ன சொல்லுதான்னு கேளு ..” சொல்லிவிட்டு கடைக்காரரிடம் “எம்புட்டு ஆகுதுண்ணே..” என்று கேட்டு, கையில் பணத்தை எண்ணிக் கொண்டிருந்தார் அப்பா.
“ம்ம், நீ ஏன் கடல் இம்புட்டு பெருசா இருக்கும்னு எனக்கு சொல்லிக் கூட்டியாரல, அது பக்கத்துலதான் நாம இப்போ போறோமா..? இதுக்கா என்னைக் கூட்டிட்டு வந்த..?” சிணுங்கி அழுதேன்.
எப்படியோ சமாதானம் சொல்லி மறுபடியும் கூட்டத்தோடு கூட்டமாக அழைத்துப் போனார்கள்.
இடுக்குகளிலெல்லாம், கண்களில் தென்பட்டது அந்தக் கடல். இரண்டு மூன்று கடைகள் சேர்ந்திருக்கும் இடங்களில் காணாமல் போயிருக்கும். அப்போதெல்லாம் தேட வைத்தது. கொஞ்சம் கொஞ்சமாக அச்சம் குறைந்து ஆவல் அதிகமானது.
“எப்பப்பா கடல் பக்கத்துல போவோம்..” நானே ஆசையாகக் கேட்டேன்.
“இந்தா வந்துருச்சி பாரு…”
“எனக்குத் தெரியலை, ஆளுகயெல்லாம் மறைக்காகளே.. என்னைத் தோள்ல தூக்கிக் காட்டுங்கப்பா..”
“இரு இரு, அம்மாவையும் பாப்பாவையும் ஒரு இடத்துல உட்கார வச்சிட்டு நாம போய் குளிச்சிட்டு வருவோம் இன்ன..”
செருப்புக் காலோடு நடப்பது சிரமமாக இருந்தது. கழட்டி கையில் வைத்துக் கொண்டேன்.
குறுகுறு மணல்கள் பாதத்தில் கிச்சுக் கிச்சு மூட்டுவது போல் சுகமாக இருந்தது.
பத்தடி தூரத்தில் விசாலமாகத் தெரிந்தது கடல். இதோட இவ்வளவுதானா உலகம்னு பிரம்மிச்சிப் போயிட்டேன்.
வானத்து அளவு தொட்டுக்கிடந்தது நீர். அதிலிருந்து பார்வையை எடுக்கவே முடியலை.
எதையோ எடுத்துவரும் அலைக்காகக் கரை காத்திருப்பது போலவும், ஒப்படைத்த அலைகள் அமைதியாக கரை மடியில், படுத்துக் கொள்வதுபோலவும், நானாகவே கற்பனை செய்து கொண்டேன்.
ஈரமணல் தொடங்கியதும் இறக்கிவிட்டார். அப்பாவின் கால் தடத்தின் மீதே எனது பாதத்தையும் வைத்தேன். அது ஒரு பெரிய கிண்ணத்துக்குள் சின்னக் கிண்ணத்தை உட்செருகி வைத்தது போல் தெரிந்தது.
அந்த நேரத்து மனது, பெரு மழைக்கு நிரம்பும் எங்கள் ஊர்க்குளத்தை இந்தக் கடலோடு ஒப்பிட்டுப் பார்க்கச் செய்தது “அப்பா.. நம்ம குளத்தை விட ஆயிரம் மடங்கு பெருசா இருக்கும் போலயே..”
“அதுக்கு மேல இருக்கும்டா, போடாப் போடா பொடிப் பயலே, இது எம்புட்டு பெருசு” கைகளை விரித்துக் காட்டினார் அப்பா.
குத்துமதிப்பாக எந்த அளவும் என்னால் சொல்லமுடியாத மாதிரிதான் தோன்றியது எனக்கு.
அனாலும் கடல் என்பதற்குப் பதிலாக குளம், குளமென்றுதான் சொல்லிக் கொண்டிருந்தேன்.
“இத்தாத்தண்டிக் கொளத்துக்கு மடை எங்க கட்டி வச்சிருக்காங்க? எந்தப் பக்கமா மறுகால் போகும்..” புத்திசாலியாகக் அப்பாவிடம் கேட்டேன்.
“குளம் வேற கடல் வேறடா தம்பி, இங்க பாரு நம்ம ஊருல மாதிரி இதுக்குப் பக்கத்துல எங்கேயாவது வயல் தெரியுதா…?”
“இல்லைப்பா.. அப்போ இந்தத் தண்ணியெல்லாம் எங்க பாயும்..”
“சுத்தியிலும் பாரு, மடை, மறுகால்ன்னு கண்ணுக்குத் தட்டுப்படுதா?
“இல்லைப்பா..”
“இதக் குளம்னு சொல்லக் கூடாது கடல்னுதான் சொல்லனும் சரியா..?”
“சரிப்பா” மனப்பாடம் பண்ணுவது போல் கடல், கடல் என்று முணுமுணுத்துக் கொண்டேன்.
“அந்தா வருது பாரு ஒரு குட்டி அலை, அதுதான் முதல்முதலா உன்னைத் தொட்டுப் பார்க்கப் போகுது. அசந்தா, தள்ளி விட்ரும். அப்பா கையை இறுக்கமா பிடிச்சிட்டு நில்லு சரியா..?” ரெடி, ஸ்டார்ட் சொல்லி உற்சாகப் படுத்தினார் அப்பா..
“ம்ம்.. நான் ரெடி… அப்பா கண்ணை மூடிக்கிடட்டா..”
“கிறுக்குப் பயலே, தைரியமா இருக்கனும், அப்பா இருக்கேன்ல..”
அலை தொட்டதும் தடுமாறிவிட்டேன். டிரவுசர் வரை என்னை நனைத்துவிட, உள்ளுக்குள்கூச்சமாக இருந்தது. கால் மணல் கொஞ்சம் கொஞ்சமாக உருவிக் கொண்டது. எங்களை எதிர்த்து முரட்டுத் தனமாக வந்த அலை, பின்னிருக்கும் கரையில் போய் குழந்தையாகப் படுத்துக் கொண்டது.
“ஐ.. ஜாலி ஜாலி..” குதித்தேன், கையால் நீரை அள்ளி என் முகத்தில் தெளித்துவிட்டார் அப்பா, முதன் முதலாக அந்த சுவை அறிகிறேன் “ச்சே.. உப்பா இருக்குப் பா..”
“கடல் தண்ணி அப்படித்தான் இருக்கும், தலையை முங்கிக் கொடு” என்று கொஞ்சம் உட்தள்ளி அழைத்துச் சென்றார்.
பார்வை படும் தூரத்திலிருந்த அம்மா “பார்த்துங்க, பார்த்துங்க ..” என்று சொல்வது அலைகளின் சத்தத்தில் கேட்கவில்லை, ஆனாலும் அவள் வாயசைப்பும், பரிதவிப்பும் அழகாகப் புரிந்தது எனக்கு.
“உங்கம்மா பயந்தாங்கொள்ளி, வாடா தம்பி, அப்பாவைப் பிடிச்சிக்கோ.. இன்னும் தள்ளிப் போவோம்…” வேண்டுமென்றே அம்மாவை வெறுப்பேற்றினார் அப்பா..
எனக்கும் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கவே, முறைக்கும் அம்மாவைத் திரும்பிப் பார்க்காமல் அப்பாவும் நானும் அலைகளோடு துள்ளிக் குதித்தோம்..
உயரத்திலும் நீளத்திலும் பெரிதாக இருந்த அலை ஒன்று எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. “உஊஊஊஊ… ஓ..” என்று உற்சாகக் குரலெழுப்பி எதிர்கொள்ளத் தயாரானோம்.
எங்களோடு இன்னும் நிறைய பேர் இருந்தார்கள். அலை நெருங்குவதையே பார்த்துக்கொண்டிருந்த நான், முங்குவதா அல்லது அலையோடு இணைந்து தலையை உயர்த்திக் கொடுப்பதா? என்பதை அப்பாவிடம் கேட்க மறந்தேன்.
நின்று கொண்டிருந்த நிலையிலேயே இருந்த என்னை, ஆக்ரோஷமாக நெருங்கி வந்த, அந்த அலை அப்பாவிடமிருந்து என்னைப் பிரித்து, எங்கேயோ இழுத்துப் போட்டது. சுதாரித்து விழித்துப் பார்த்தால் யாரோ ஒருவர் என்னைப் பிடித்திருந்தார்.
பட்டென்று உதறித் தள்ளி “அப்பா! அப்பா!” என்று நான் அழ.. கரையிலிருந்து என்னைப் பார்த்துவிட்ட அம்மா, பாப்பாவோடு எழுந்து ஓடி வந்தாள்.
என் மீது ஒட்டியிருந்த மணலை சேலையால் துடைத்துவிட்டாள். மூவரும் அப்பாவைத் தேடி ஓடினோம்.
கொஞ்சம் தள்ளி அலைகளின் பேரிரைச்சலையும் மீறி மனிதர்கள் போடும் கூப்பாடு கேட்டது. யாருக்கோ ஆபத்து என்று உணரமுடிந்தது.
நெருங்கினோம், நாலைந்து பேர் சேர்ந்து ஒருவரை கடலுக்குள் இருந்து அள்ளி வருவதுபோல் தெரிந்தது. உடுத்தியிருந்த ஆடை பச்சைக்கலரில் கட்டம்போட்ட கைலி.அது அப்பாதான் என்று உறுதியானது.
“தம்பி! தம்பி.!” என்று உதடுகள் மெல்லிய சத்தத்தில் உச்சரிக்க பாதி மயக்க நிலையில் இருந்தார்.
சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்தவர் “பிடிச்சிருந்த கையை எதுக்குலே விட்டுட்ட? பதறிப் போயிட்டேனே..” சொல்லும்போது கண்ணீர் கன்னத்தில் வழிந்து ஒழுகியது.
எழுந்திருக்க முயன்றார். முடியவில்லை. இன்னும் முயன்றார். அம்மாவோ அப்பா பிடித்துக்கொள்ள ஏதுவாக கையை நீட்டினாள். கெட்டியாகப் பிடித்துக் கொண்டாரேத் தவிர இடது காலை அசைக்க முடியவில்லை.
******
“அப்பா, எந்திரிங்கப்பா..! அப்பா எந்திரிங்க..” நினைவுகளில் ஊறிக் கிடந்தவன் நிஜத்தை மறந்து தானாகவே பேசினான்.
“எக்ஸ்யூஸ்மி சார்..” டொக் டொக்கென்று நாசுக்காக கதவு தட்டப்படும் சத்தம் கேட்டதும் “நான் எங்க இருக்கேன்..” உதடு பிரிய வார்த்தைகளை உச்சரித்த சீனிவாசன்.
“எஸ்.. கம் இன்..” என்றான் சத்தமாக.
“நம்ம பிராஜக்ட் டெண்டர் விசயமா மணி ன்னு ஒருத்தர் உங்களைப் பார்க்க வந்துருக்காரு..”
“ம்ம்.. வரச்சொல்லுங்க.. அதுக்கு முன்னாடி ஹாஃப் கப் ஆப் டீ .. ப்ளீஸ்..”
“எஸ் சார்..” என்று ஸ்டாஃப் வெளியேறியதும் வாஷ் ரூமுக்கு நுழைந்தான் சீனிவாசன்..
எத்தனை தடவை கழுவினாலும் அப்பாவின் முகம்தான் கண்ணுக்குள் நிறைந்திருந்தது.
ஆனால் புதையலைக் கண்டுபிடித்ததுபோல் உள்மனம் “உற்சாகமாக இருக்கிறாய் நீ” என்று அவனிடம் சொல்வதாக உணர்ந்தான்..
நாளை அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஐம்பதாவது திருமணநாள். ஒவ்வொரு வருடமும், அந்த நாளில் அவன் விடுமுறையில்தான் இருப்பான். அப்பாவுக்கு பிடித்த எம்.ஜி.ஆர் படம் ஒன்றினை மொத்தக் குடும்பமும் உட்கார்ந்து ரசிப்பதும், விதவிதமான உணவு வகைகளோடு பெருவிருந்துத் தயாராகும்.
தாம்பரத்திலிருந்து தங்கை சுஜாதாவும் குடும்பத்தோடு வந்துவிடுவாள்.
வெண் நிறத்து டர்க்கி டவலால் முகத்தைத் துடைத்துவிட்டு, தலை சீவிக் கொண்டான். உள்ளிருந்து இனம் புரியாது பெருகிய மகிழ்ச்சி, கொஞ்சம் கொஞ்சமாக இதழைத் தொட, தனக்குள்ளே சிரித்துக் கொண்டான்.
சீக்கிரமாகவே வேலை முடித்துக்கொண்டு வீட்டுக்குக் கிளம்பினான்.
போகிற வழியில் காரை ஓரங்கட்டி தங்கைக்கு போன் பண்ணி விசயத்தைச் சொன்னான். “மார்னிங் டென் க்கே வந்துரு நீ, அப்போதான் சரியாயிருக்கும் ஒகே.வா..” என்று சொல்லிவிட்டு “ஆயிரம் நிலவே வா..ஓராயிரம் நிலவே..” பாடிக்கொண்டே மொபைலை பக்கத்து இருக்கையில் போட்டு ஸ்டிரிங்கைச் சுழற்றினான். கார் விரைந்தது.
****
மறுநாள்.
மகன் எடுத்துத் தந்த புதுப்புடவையைக் கட்டிக் கொண்டு வீல் சேரில் அமர்ந்திருந்த கணவனின் காலில் விழுந்து வணங்கினாள் சீனிவாசனின் அம்மா.
குங்குமச் சிமிழை மருமகள் நீட்ட, மனைவியின் நெற்றியில் வைத்துவிட்டார் சீனிவாசனின் அப்பா..
அப்பாவிடம் எதுவும் சொல்லாமல் ஆளாளுக்கு கிளம்பி ரெடியாக ஹாலுக்கு வந்தார்கள்.
“நல்ல நாளு அதுவுமா, எங்கலே போறீக எல்லாரும், என்னை விட்டுட்டு..?” அப்பா ஒவ்வொருவரிடமும் கேட்டுப் பார்த்தார். சிரித்து மழுப்பினார்களேத் தவிர. பதில் வரவேயில்லை எவரிடமிருந்தும்.
வாசலில் கார் வந்து நின்றதும் முன்சீட்டில் பொடிசுகள் ஏறிக்கொள்ள, “வாங்கப்பா போலாம்..” அப்பாவை அழைத்தான் சீனிவாசன்.
வீல் சேரில் இருந்தபடி “எங்க…?நான் எப்படி.. எதுக்கு நான்? அம்மாவை விட்டுட்டு நீங்க போயிட்டு வாங்க தாராளமா..?” என்றிருந்தது அப்பாவின் பதில்.
“உங்களுக்குப் பிடிச்ச ஒரு இடத்துக்கு போயிட்டு வரலாம் பா..”
“என்னலே இது புதுசா இருக்கு, விளையாடுறியா..? இந்த நாலு சுவத்துக்குள்ள இருக்குறதுதான் எனக்கு நல்லது.உங்களுக்கு எதுக்கு சிரமம்..”
“அப்பா..மறுப்பு சொல்லாதீங்கப்பா..” சொல்லிக்கொண்டே பின்னிருந்து, அப்பா அமர்ந்திருந்த வீல் சேரினை காரை நோக்கி உருட்டினான் சீனிவாசன்.
மனமின்றியே ஒத்துழைப்பு தந்தார். தங்கை வீடு, கோயில் என்று எப்போதாவது வெளியில் சென்றிருந்த அப்பாவுக்கு. வழக்கமாகச் செல்லும் பாதையில்லாமல் புதிய வழியில் விரைந்தது கார்.
திறந்திருந்த கண்ணாடிக் கதவின் வழியாக உப்புக் காற்று வேகமாக உள் நுழைய, தூரத்தில் தெரிந்தது கடல்.
“என்னடா தம்பி கடலுக்கா கூட்டிட்டுப் போற..” முதன் முதலாக சீனிவாசனுக்கு திருச்செந்தூர் கடலைக் காட்டிய அனுபவம் நிழலாடியது.
“அட. கண்டுபிடிச்சிட்டீங்களே அப்பா..”
“வேணாம்லே, வண்டியைத் திருப்பு, சூரசம்ஹாரத்துக்கு உன்னைக் கூட்டிட்டுப் போன அந்த நாளு தான் ஞாபகம் வருது.. வேணாம்லே.. என்னை வீட்டுல கொண்டு போய் விடு..” சின்னக்குழந்தையாக அடம்பிடித்தார் அப்பா..
“இல்லைப்பா போலாம்.. இதுவொரு நல்ல வாய்ப்பு..”
எதுவுமே பேசாத அப்பாவின் பார்வை அசைவின்றி ஒரே பக்கமாக இருந்தது.
விரிந்து கிடந்த நீலக் கடலை, தாகம் தீரத் தீர கண்களாலே பருகினார். இன்னும் நெருக்கமாகச் சென்றதில் கடல் நீரின் உப்பு, காற்றோடு கலந்து முகத்தில் அப்பிக் கொண்டது.
திடீரென்று வேடிக்கை பார்த்து வந்த அப்பா, விம்மி விம்மி அழத்தொடங்கினார். அருகிலிருந்த அம்மாவும் சேர்ந்து வருத்தப்பட, சிறிது நேரத்திற்கு அத்தனை பேர் முகத்திலும் சோகம்.
நல்லநாள் அதுவுமா பிள்ளைகளை கஷ்டப்படுத்துகிறோமோ என்ற நினைத்தவராய் “சரிப்பா.. நீங்க எல்லாரும் சந்தோஷமா கடலுக்கு போயிட்டு வாங்க. நான் இங்கேயே இருக்கேன்..” என்றார் அப்பா.
“நீங்களும் வர்ரீங்க அப்பா..” என்ற மகனை “என்னடா தூக்கிட்டுப் போகப்போறியா.. அன்னைக்கி உன்ன தோள்ல தூக்கி கடலைக் காமிச்ச மாதிரி..” சிரித்தார் அப்பா.. அதனுள் துயரம் தெரிந்தது..
“ம்ஹூம்.. நீங்களாத்தான் வர்ரீங்க..” மொத்தக் குடும்பமும் அப்பாவை முன்னிறுத்தி பின் நின்று கொண்டது. அப்பா அமர்ந்திருந்த வீல் சேர் கடல் நோக்கிச் செல்லத் தயாரானது.
“மணல்ல ஆள் நடந்து போறதே சிரமம். சக்கர நாற்காலி எப்படிப் போகும்..” சந்தேகத்தோடு சீனிவாசனைப் பார்க்க.. “அதுக்கெல்லாம் வழியிருக்கு..” தாத்தாவைக் குஷிப்படுத்தும் விதமாக குழந்தைகள் கோரஷாகக் ”தாத்தா! தாத்தா..!” என்றுக் கைதட்டியபடி குரல் எழுப்பினர்.
கடல்வரை சமதளமாக்கப்பட்ட அந்தச் சாலையில், நிறைய கூட்டங்களுக்கு மத்தியில் ஆவலோடு விரைந்தது அந்த வீல்சேர்.
ஒரு கடலில் கால் செயலிழந்து போனவனை, நெடுநாட்களுக்குப் பிறகு, இன்னொரு கடல், தன் நீண்ட அலையின் கரம் அப்பாவின் பாதம் தொட்டு மன்னிப்பு கேட்பதாக, இப்போது கற்பனை செய்து கொண்டிருந்தான் சீனிவாசன்.
அலுவலகத்தில் நேற்று கண்ணில் தட்டுப்பட்ட அந்தப் புகைப்படத்தில் இருந்தவரின் மகிழ்வைக்கூட சீனிவாசனால் உணரமுடிந்தது இப்போது.
*******