இணைய இதழ்இணைய இதழ் 100சிறுகதைகள்

டால்ஸ்டாய் பண்ணை – சி.சரவணகார்த்திகேயன்

சிறுகதை | வாசகசாலை

லலிதா ஈர்க்குச்சியால் தைக்கப்பட்ட‌ மந்தாரை இலையில் வைக்கப்பட்டிருந்த அந்தச் சிறிய, பொன் மஞ்சள் நிறம் கொண்ட‌ உருண்டையை ஆர்வமாகவும் ஆசையாகவும் நாவில் எச்சிலூறப் பார்த்துக் கொண்டிருந்தாள். ‘அதைச் சாப்பிடலாமா வேண்டாமா? காந்திக்குத் தெரிந்தால் திட்டுவாரா?’ என்று மனதில் குழப்பம் ஓடிக் கொண்டிருந்தது.

அது திருப்பதி கோயிலின் பிரசாதம். பெயர் லட்டு என அப்பா சொன்னார். பிரதி சனிக் கிழமைகளில் பெருமாளுக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு அருள்கிறார்கள்.

உச்ச ருசி காரணமாக‌ அதை வாங்கக் கடும் போட்டி நிலவுகிறது – நீள்வரிசைகளில் நெடுநேரம் நின்று, சில சமயம் அடிதடியும் உண்டாம். அதை ஒரு சாகசக் கதை போல் அப்பா விவரித்த போது லலிதாவுக்குப் பாவமாக இருந்தது. அப்படி வாங்கின‌ லட்டை சுமார் எழுநூறு மைல் தொலைவு பயணம் செய்து த‌ன் ஒரே பிரிய‌ மகளுக்காக‌ வார்தா வரை எடுத்து வந்திருக்கிறார் என்பதல்ல காரணம். அவரது விருப்பப்படி அவர் காட்டும் ஓர் அய்யங்கார் ஆத்துப் பையனை விவாஹம் முடிக்கத் தனக்குப் பிராப்தம் இல்லையே என்ற குற்றவுணர்வுதான் காரணம். லலிதா மறுபடியும் அந்த‌ லட்டைப் பார்வையிட்டாள்.

முன்பெல்லாம் அரச குடியினரும், ஜமீந்தார்களும், வெள்ளை அதிகாரிகளும் மட்டுமே பெற முடிந்த அந்த இனிப்பை இன்று சாதாரணர்களும் சுவைக்க‌ முடிகிறது என்பதே ஒரு ஜனநாயகம்தான் என லலிதாவுக்குப் பட்டது. இம்மாதிரி சில ஸ்தலங்களில் சாத்தியப் பட்டிருக்கும் ஜனநாயகம் சீக்கிரத்தில் மொத்த பாரத‌ தேசத்துக்கும் கிட்டப் போகிறது.

சுவராஜ்யம்! இன்னும் நான்கைந்து மாதங்களில் நாட்டிற்குச் சுதந்திரம் என்று தகவல்கள் வருகின்றன. காந்தி மறுத்து விட்டதால் நேருவோ படேலோ பிரதம மந்திரி ஆகக்கூடும் எனத் தெரிகிறது. அப்படி காந்தி மறுத்தது அவளுக்கு உள்ளூர வருத்தம்தான். ஆனால், அவரை நன்கு அறிந்தோருக்கு ஆச்சரியமோ அதிர்ச்சியோ இராது. அவளுக்கு இல்லை.

சுதந்திரம் வரும் போது பாகிஸ்தான் தனியே பிரியும் என்றும் ஆரூடம் சொல்கிறார்கள். அதன் நிமித்தம் நாடெங்கும் இப்போதே ஹிந்துக்களும் முசல்மான்களும் அடித்துக் கொள்கிறார்கள். திரும்பிய திசையெல்லாம் குருதியும் கதறலும்தான். ஒரு பிரம்மாண்ட‌ மரத்தின் பெரிய‌ கிளை முறிந்து சரிகையில் அதில் சிக்கிப் ப‌ற்பல உயிர்கள் மரிப்பது போல் அந்நிகழ்வுகள் தென்படுகின்றன. நவகாளியில் காந்தி இரு தரப்புக்கும் இடையே சமாதானம் பேசப் போய் அது ஏற்கப்படவில்லை. இப்போது பாட்னாவில் கலவரம் ஆரம்பித்திருக்கிறது. மறுபடியும் மாளாத‌ நம்பிக்கையுடன் அங்கே போயிருக்கிறார்.

லலிதாவுக்கு காந்தி நிகரற்ற நாயகன். அந்த ஈர்ப்பே அவளை சேவாக்ராம் அழைத்து வந்தது. முன்பு அவரைத் தூரத்திலிருந்து அண்ணாந்து பார்த்திருந்தாள். இப்போது அருகிருந்து அறிந்த பின்பும் அவர் மீதான அவள‌து வியப்பு சற்றும் மங்கவே இல்லை!

லலிதாவின் அப்பா கொஞ்சம் செல்வந்தர். மதராஸில் மோட்டார் தொழில் செய்கிறார். காங்கிரஸில் சேராத‌ தேச பக்தர். காந்தி காரியங்களுக்குத் தொடர்ந்து கொடைக‌ள் அளிப்பவர். ஆனாலும் கல்லூரிப் படிப்பு முடித்த மகள் வந்து சேவாக்ராம் ஆசிரமத்தில் காந்தியுடன் தங்கி சேவையாற்ற விரும்புவதாகச் சொன்ன போது ஜீரணிக்க இயலாமல் சிரமப்பட்டார். அவள் அவரைச் சமாதானம் செய்து விட்டு ஆசிரமம் வந்து ஏறத்தாழ‌ ஐந்து ஆண்டுகள் ஆகி விட்டன. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தவறாமல் அங்கே வந்து அவளைப் பார்த்து விடுவார். இம்முறை திருப்பதி பாலாஜியைப் பார்த்து வந்திருந்தார்.

சில மாதங்கள் முன் காந்தி நவகாளிக் கலவரங்களை எதிர்கொள்ளும் உத்தேசத்தில் வங்காளம் கிளம்பிய போது அப்பயணத்தில் இணைந்து கொள்ள‌ காந்தியிடம் விருப்பம் தெரிவித்தாள் லலிதா. த‌ன் நெருங்கிய தோழியான‌ மநுவிடம் சிபாரிசுக்குச் சொல்லி வைத்திருந்தாள். மிகுந்த நம்பிக்கையுடன் பிரயாணத்துக்கான உடை, உபகரணங்களை சிறுபெட்டியில் அடைத்துத் தயாராகி இருந்தாள். ஆனால், காந்தி அழைத்துச் செல்ல மறுத்து விட்டார். உதடு துடிக்க தன் முன் நின்று கொண்டிருந்தவளிடம் சொன்னார் –

“லலிதா, எதுவுமே எடை குறைந்ததாக இருக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம். எப்போதும் என் பயணங்களை அப்படித்தான் அமைத்துக் கொள்கிறேன். இந்த விதி பொருட்களுக்கு மட்டுமல்ல; ஆட்களுக்கும்தான். எனவே, தவிர்க்க இயலாதவர்கள் மட்டுமே உடன் வர வேண்டும். அதுதான் சிக்கனமானது. நாம் இயங்குவது மக்கள் பணத்தில். எனவே, செலவு செய்யும் ஒவ்வொரு அணாவுக்கும் கணக்கும் பொறுப்பும் இருக்க வேண்டும். தவிர, ஆசிரமத்தை நான் இல்லாத போது பார்த்துக் கொள்ளவும் பொறுப்பான‌ ஆள் வேண்டாமா? மநு, ஆபா, சுஷீலா, ப்யாரேலால் என எல்லோரும் என்னுடன் வருகிறார்கள். நீயும் வந்து விட்டால் எப்படி? எனக்கு உன் மனம் புரிகிறது. ஆனால், என்னுடன் இருப்பதைக் காட்டிலும் எனக்காக இருப்பதுதான் உயர்வானது.”

இடைவெளி விடாது சிறிய பிரசங்கம் போல் காந்தி சொல்லி முடிந்த போது கண்களில் முகிழ்த்த‌ நீரை லாகவமாக‌ மறைத்துக் கொண்டு தலையாட்டினாள் லலிதா. காந்தியின் பற்களற்ற வாயில் ஒரு மந்தகாசம் அவிழ்ந்தது. அதிலிருந்த பரிசுத்த வெள்ளந்தித்தனம் அவளை வருத்தியது. நிஜத்தில் காந்திக்காக மட்டுமா நவகாளி செல்லத் தவிக்கிறேன்!

முகுந்தனின் முகம் நினைவிலாடியது. ஆறு மாதங்க‌ளுக்கு மேலாகிறது அவன் வதனம் கண்டு. அதனால் சில துல்லியங்கள் மறந்து விட்டதோ என்று பிரமை தட்டியது. அவன் மோவாய் எப்படி இருக்கும்? கிருதா எது வரை நீளும்? சின்ன மச்சம் முகத்தில் எங்கோ உண்டு. சேவாக்ராம் ஆசிரமச் சூழலில் அவ்வளவுதான் ஆணும் பெண்ணும் பார்த்துக் கொள்ள முடியும் – காதலர்களாகவே இருந்தாலும். இதில் அரையாண்டு இடைவெளி வேறு. துணுக்குற்ற மனதை லலிதாவே ஆறுதல்படுத்தினாள் – அறுநூறு ஆண்டுகள் தீர்ந்தாலும் என் ஞாபகத்திலிருந்து தப்புமா அவனது உயிர்ப்பான‌ மலபார் கண்கள்!

முகுந்தனுக்குத் திருட்டுப் பூனையின் சாயல் கொண்ட, எதையோ உள்ளே ஒளித்து வைத்துக் கொண்டு, சொல்ல மாட்டேன் என்று அடம் பிடிக்கும் குறும்புப் புன்னகை மின்னும் விழிகள். முப்பது வயதைக் கடந்து விட்டதன் அடையாளமாக‌ முன் தலையில் விழ ஆரம்பித்து விட்ட வழுக்கையைச் சமரசம் செய்ய முடிந்த கூர்பார்வை அதில்.

முகுந்தன் காந்தியுடன் நவகாளி போயிருக்கிறான். அவனைப் பிரியாமல் இருக்கலாம் என்பதும் அவள் காந்தியுடன் போக விரும்பியதற்குக் காரணம். ஆனால், நடக்கவில்லை.

முகுந்தன் தன்னை நீங்காதிருப்பதன் பொருட்டு பயணத்தைத் தவிர்த்து விடுவானோ என அஞ்சினாள் லலிதா. இருவருக்குமே காந்தி சேவையை விடவும் காதல் பெரிதாகப் படக்கூடாது என்பதுதான் அவள் எண்ணம். காரணம் அவளுக்கு அவன் மீதான காதல் உருவாகவே காந்தி பற்றிய அவன் புரிதலும் பற்றும் முக்கியக் காரணமாக இருந்தது.

“லலி, நீயும் வந்து விடுவாய் என மிக எதிர்பார்த்திருந்தேன். ஏமாற்றம்தான். ஆனால், காந்தியின் முடிவை விமர்சிக்கும் உரிமையும் உயரமும் நமக்கில்லை. எனவே இதை முழு மனதாக‌ ஏற்போம். ஒருவேளை, உன்னைப் பாராதிருப்பது முடியவில்லை எனில் ஏதாவது காரணம் அமைத்துக் கொண்டு கிளம்பி வந்து விடுகிறேன். விடை கொடு.”

அப்படி அவன் வந்து விடக்கூடாது எனத் தோன்றியது லலிதாவுக்கு. அதுவுமே காந்தியை அவமதிப்பதாகி விடும். அவரும் துணுக்குற்று மனம் வருந்தக்கூடும். எப்போதும் அவர் ஆசிரமவாசிகளிடம் சொல்வது: “எனக்கு அருகிலிருந்து, என்னை அறிந்த நீங்களே என் சொல்லைக் கேட்கவில்லை எனில் இந்தப் பரந்த நாட்டில் உள்ள கோடிக்கணக்கான எளிய மக்கள் எப்படி என் கருத்துக்களை புரிந்து கொள்வார்கள், செவி சாய்ப்பார்கள்?”

முகுந்தன் அப்படி ஆவதை அவள் விரும்பவில்லை. லலிதா அமைதியாகச் சொன்னாள் –

“நானில்லாமல் நீங்கள் அங்கே போவதும் ஒரு வகையில் நல்லதுதான். சரியான‌ நேரம் பார்த்து காந்தியிடம் நாம் திருமணம் செய்து கொள்ள விரும்பும் விஷயத்தைச் சொல்லி விடுங்கள். அவர் அருகிலேயே நான் இருக்கையில் விஷயம் அவருக்குத் தெரிய வந்தால் உடனே என்னை அழைத்துப் பேசுவார். என் மனதை மாற்ற முயற்சிக்கவும் கூடும். அவர் முன் என்னால் உடையாமல் நிற்க முடியாது. அவர் தூரத்தில் இருக்கையில் சொன்னால் மறுபடி என்னை அவர் பார்க்கும் சந்தர்ப்பம் அமையும் வரை இது குறித்துச் சிந்திக்கும் வாய்ப்பு அவருக்கு அமையும். அவரது எதிர்ப்பின் வீரியம் குறைந்திட‌ வாய்ப்பு அதிகம்.”

“அவர் நமது காதலை எதிர்ப்பார் என்று உண்மையில் உனக்குத் தோன்றுகிறதா, லலி?”

“பல முறை நாம் பேசியதுதான். பொதுவாக அவர் ஆசிரமவாசிகள் காதல் செய்வதை விரும்புவதில்லை. எத்தனையோ உதாரணங்கள் கடந்த காலத்தில் கண்டு விட்டோம். முன்னாலால் ஷா – கஞ்ச்சன் ஷா, ஜெயப்ரகாஷ் நாராயண் – ப்ரபாவதி. மஹாதேவ் தேசாய் – சுஷீலா, கநு – ஆபா, ப்யாரேலால் – யோகா. எல்லோருமே பிரிந்து விட்டனர்.”

“ஆனால், நமது விஷயத்தில் ஒரு முக்கிய வித்தியாசம் இருக்கிறது. சமீப ஆண்டுகளாக காந்தி கலப்புத் திருமணங்கள் குறித்து தொடர்ந்து பேசி வருகிறார். ஓர் ஐயங்காரும் ஒரு நாயரும் திருமண முடிப்பில் ஈடுபடுவது அவருக்கு உவப்பூட்டும் விஷயமாக இருக்கும்.”

“அந்த நம்பிக்கை எனக்குமுண்டு. பிராமணரும் சூத்திரரும் கலப்பது ஒரு புரட்சிதான்!”

“சரி, நல்ல வாய்ப்பு அமைகையில் காந்தியிடம் நான் சொல்லி விடுகிறேன். நீயும் உன் தந்தை அடுத்து உன்னை இங்கே சந்திக்க வருகையில் சொல்லி விடு. காந்தி மறுபடி சேவாக்ராம் திரும்புகையில் இருவரும் சேர்ந்து அவரிடம் ஆசி பெறுவோம். உன் அப்பா ஏதும் முரண்டு பிடித்தால் கூட காந்தி சொன்னால் நிச்சயம் அதைத் தட்ட மாட்டார். என் தரப்பில் எந்தச் சிக்கலும் இல்லை. கிட்டத்தட்ட அனாதையாக இருப்பதன் அனுகூலம் இது. சுதந்திர இந்தியாவில் காந்தி தலைமையில் நம் திருமணம் நடந்தேற வேண்டும்.”

“ஒன்று உறுதி. காந்தியின் முழு ஆசீர்வாதத்தோடே நம் கல்யாணம் நிகழ வேண்டும்.” – லலிதா திடமான குரலில் சொன்னாள். முகுந்தன் தலையசைத்து ஆமோதித்தான்.

ஆனால், முகுந்தன் சேவாக்ராமை நீங்குகையில் காந்தி எல்லாம் மறந்து போய் அவன் செல்லாமல் அங்கேயே இருந்து விட மாட்டானா என்ற நப்பாசையே எழுந்தது. அவள் அழுதால் நிச்சயம் நின்று விடுவான். லலிதா வந்த கண்ணீரை அடக்கிக் கொண்டாள்.

சராசரியாக மாதம் இரு கடிதங்கள் என்ற ரீதியில் முகுந்தனிடமிருந்து அவளுக்கு வந்து கொண்டிருந்தன. அவளது கை சேரும் முன் ஆசிரமத்தில் எவரும் பிரித்துப் படிக்கச் சாத்தியம் உண்டு என்பதால் எந்தக் கொஞ்சல்களும் இராது. பெரும்பாலும் நவகாளி கலவரங்கள் பற்றிய கொதித்த பதிவுகள், காந்தியின் நடவடிக்கைகள், பேச்சுக்கள் குறித்த பகிர்வுகள். ‘நம் பற்றி பேச நேரம் கூடவில்லை’ என்று இறுதியாக ஒற்றை வரி.

அவளுக்கு அது ஒரு கட்டத்தில் பழகிப் போய் எதிர்பார்ப்பைக் குறைத்துக் கொண்டாள்.

காந்தி ஓரிடத்தில் இல்லாமல் மாறிக் கொண்டே இருந்தார். முகுந்தனின் கடிதங்களின் முகவரி சிக்கலற்றதா என்பது பொறுத்து பதில் கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தாள். கடைசியாக அனுப்பிய‌ கடிதம் பத்து நாட்களுக்கு முன் பாட்னாவிலிருந்து வந்திருந்தது – மநுவுக்குத் தொடர் வயிற்று வலி; அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடாகி இருக்கிறதாம்.

லலிதா திருப்பதி லட்டைப் பார்த்தாள். காண்பதற்கே அத்தனை இழுப்பதாக இருந்தது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் வைத்து, மிராசிகள் என்கிற குடும்பத்தின் ரகசியச் சூத்திரத்தில்தான் அந்த அதியினிப்பு செய்யப்படுகிறது என அப்பா சொல்லியிருந்தார்.

லட்டிலிருந்து கமழும் நெய்க் கொழுப்பின் உறுத்தாத‌ மணமும், தோற்றத்திலேயே அதன் மென்மையை உணர்த்தும் தோரணையும் முற்றும் துறந்த‌ முனிவர்களையும் தடுமாறச் செய்யும் எனத் தோன்றியது. அதை அப்போதே தின்று விட முப்புலன்களும் பரபரத்தன.

காந்தி அம்மாதிரி பரவசமூட்டும் பண்டங்களை உண்ணக்கூடாது என்பார். நாவடக்கம் காமத்தைக் கட்டுப்படுத்தும் எனச் சொல்வார். விதவிதமான சுவைகளில் உணவுகளைக் கண்டால் நாம் முதலில் கண்களையும் பின் வாயையும் இறுக மூடிக் கொள்ள வேண்டும், அப்படிச் செய்யாமல் அவற்றை அனுபவித்து உண்டால் மிருக உணர்வுதான் வரும் என நம்புபவர். அதன் காரணமாக சேவாக்ராமில் மிக எளிய உணவுகளே சமைக்கப்படும். கவனமாக உப்பும் உறைப்பும் மட்டுப்படுத்தித்தான் எப்போதும் சமையல் அமையும்.

உணவே மருந்து என்பார்கள். அங்கே மருந்தைப் போலத்தான் உணவை எடுத்தார்கள். அளவாக உண்ண வேண்டும். மெதுவாக மென்று தின்ன‌ வேண்டும். சாப்பிடும் போது பேசக்கூடாது. எல்லாம் விட‌ உண்கையில் நாக்கைச் சுழற்றி உதட்டை நக்கக்கூடாது.

லலிதா முதலில் சேவாக்ராம் வந்த போது மற்றவற்றை விடவும் உணவுக் கட்டுப்பாட்டில் பொருந்திப் போவதுதான் மிகச் சிரமமாக இருந்தது. பழகப் பல மாதங்கள் ஆகின‌. அது பரவாயில்லை – அங்கு சமையல் செய்யும் மஞ்சு ஒரு முறை வியப்பாகச் சொன்னாள்.

“என் வீடு ஏழ்மையானது. ஆனால், நான் இங்கே வந்த போது நல்ல சமையல்காரியான எனக்கு இங்கே உணவு தயாரிப்பில் தேவைப்பட்ட அதீத‌மான‌ எளிமைக்குப் பழகவே கஷ்டமாக இருந்தது. அதை வைத்துப் பார்க்கும் போது உங்களுக்கெல்லாம் நாக்கு இதற்குப் பழகுவதில் கனத்த‌ சிரமம் இருந்திருக்கும் எனப் புரிந்து கொள்ள முடிகிறது.”

காந்தி ஆசிரமவாசிகளுக்கு வலியுறுத்தியது எல்லாம் இவைதாம்: சத்தியம், அஹிம்சை, பிரம்மச்சரியம், உணவுப் பத்தியம், பொருட்கள் மீது பற்றறுத்தல், சுதேசி, அச்சமின்மை, தீண்டாமை ஒழிப்பு, தாய்மொழிக் கல்வி, ராட்டையில் நூற்றல் மற்றும் அரசியல் பழகல். தூங்கும் நேரம் போக மற்ற காலம் யாவும் இவற்றுக்கான அர்ப்பணிப்பாகவே அமையும்.

ஆசிரமத்தில் அனைவருமே விடுதலைப் போராட்டம் நோக்கிய சத்தியாகிரஹிகளே! சமையலுக்கு உதவி செய்தல், ஆசிரமத்தைக் கூட்டிப் பெருக்குதல், கால்நடைகளைப் பராமரித்தல், சிறிய அளவிலான விவசாயம், கழிவறையைச் சுத்தம் செய்தல், வீணான காய்கறிகளை உரமாக்குதல் என எல்லாவற்றிலும் எல்லோரும் பங்கேற்க வேண்டும்.

எல்லா விஷயங்களுக்கும் துல்லியமான நேரங்கள், இடங்கள் இருந்தன. சகலத்துக்கும் தெளிவான விதிகள் எழுதப்பட்டிருந்தன. உறக்கம் உட்பட எல்லாமே மிக‌ அளந்துதான்.

காந்திக்குச் சத்தியாகிரகம் என்பது மாசுற்ற மனித இனத்தைச் சுத்திகரிக்கச் செய்யும் வழி. மனிதன் தன் இயற்கையான நற்குணத்துக்குத் திரும்புபதற்கான மார்க்கமே அது.

வந்த புதிதில் லலிதாவுக்கு சேவாக்ராம் விலங்குப் பண்ணை போல் தோன்றி இருக்கிறது.

தென்னாப்ரிக்காவில் இந்தியர்கள் புலம் பெயர்வதைத் தடுக்கும் சட்டத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்த‌ காந்தி ஆரம்பித்த‌ ஆசிரமத்துக்கு டால்ஸ்டாய் ஃபார்ம் என்றுதான் பெயர். அப்பெயரை வைத்தது ஒரு யூதர் என்றாலும் காந்தியும் அப்போது டால்டாயின் கிறிஸ்துவ‌ ஆன்மீகமான எளிமை, உழைப்பு, தியாகத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். அஹிம்சையே சிறந்த போராட்ட வடிவம் என உணர ஆரம்பித்திருந்தார். வேலையாள் எவருமின்றிl சமையல் முதல் சுகாதாரம் வரை ஆசிரமவாசிகளே பார்த்துக் கொண்ட‌ இடம். பிற்பாடு காந்தி பாரதம் திரும்பி இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின் நிமித்தம் ஆரம்பித்த கோச்ராப் ஆசிரமமும், சபர்மதி ஆசிரமமும் சேவாக்ராமும் டால்ஸ்டாய் ஃபார்மின் பரிணாம வளர்ச்சிதான் என்று முகுந்தன் சொல்வான். டால்ஸ்டாய் ஃபார்ம் அதற்கு முன் காந்தி தென்னாப்ரிக்காவில் நடத்திய ஃபீனிக்ஸ் செட்டில்மெண்ட்டின் செறிவூட்டப்பட்ட வடிவம்தான். யாவற்றின் இயல்பும் ஒன்றே. ஆன்மீகப் பண்ணைக‌ள்!

டால்ஸ்டாய் பண்ணை குறித்து முகுந்தன் மேலும் ஒன்று சொன்னான். ஆண்களுக்கும் பெண்களுக்கும் அங்கே தனித்தனியான‌ கட்டிடங்கள் இருந்தன‌. ஆனால், பள்ளிக்கூடம் ஒன்றுதான். மாணவர்களும் மாணவிகளும் அங்கு ஒன்றாகவே படித்தார்கள். காந்திக்குச் சிறுவயதினர் பரிசுத்தமானவர்கள் என்ற நம்பிக்கை இருந்தது. எனவே, எதிர்பாலினமாக இருந்தாலும் அவர்கள் ஒன்றாக இருப்பதை அவர் தடை சொல்லவில்லை. அதையும் மீறி ஏதாவது பிழை நடந்தால் தானே அதற்குப் பொறுப்பு என்று கூறி, உண்ணாவிரதத்தைச் சுயதண்டனையாக அளித்துக் கொள்வார். அது தவறிழைத்தோருக்குக் குற்றவுணர்வை அளிக்கும். அது போக கட்டுப்பாடுகளையும் சற்றே அதிகரிப்பார். இரண்டும் அடுத்துத் தவறுகள் நடப்பதைத் தடுக்கும் என நம்பினார். அது ஓரளவு உண்மையே. அதைக் கேட்ட போது காந்தி ஒரு சிறந்த பண்ணையாரும் கூட என்பதாகத் தோன்றியது லலிதாவுக்கு.

இன்னொரு கோணத்தில் ஐந்தறிவு கொண்ட விலங்குகளை ஆறறிவு கொன்ட மனிதன் ஒருவன் பண்ணையில் வைத்து வளர்த்தும் வார்த்தும் எடுப்பது போலவும் தோன்றும். நிச்சயம் காந்தி அவளை விட, முகுந்தனை விட சேவாக்ராமில் இருக்கும் எவரையும் விட, ஏன் இந்தியாவில் இருக்கும் எவரையும் விட அறிவு மிகுந்தவர்தான். அதனால்தான் அவர் தந்தை – டால்ஸ்டாய் பண்ணை முதல் ஒட்டுமொத்த பாரத தேசம் வரை யாவற்றுக்கும்.

இத்தனை ஆண்டுகளில் பண்ணை வாழ்க்கை பழகி விட்டது, அது பற்றிய உறுத்தல் விலகி விட்டது என்பதால் புகார் சொல்லுமளவு அதில் லலிதாவுக்கு ஒன்றும் இல்லை.

எப்போதாவது முரண் தோன்றும். முகுந்தனைப் பார்க்கும் போது பிரம்மச்சரியம் என்ற கோடு தடுக்கும். இப்போது திருப்பதி லட்டினைப் பார்க்கும் போது உணவுப் பத்தியம் என்ற கோடு தடுக்கிறது. அவற்றைத் தவிர்க்க ஏதேனும் தர்க்கம் உண்டாக்கிக் கொள்ள புத்திக்குத் தெரியும். திராட்சைக் கனிகளைப் புளிப்பென நம்புகிற‌ நரிகளே இங்கே சேவை செய்ய முடியும். விலக்கப்பட்ட கனியை உண்ட போது ஏவாள் மீறியது இதில் எந்தக் கோட்டினை என அசந்தர்ப்பமாக ஒரு கேள்வி மனதில் எழுந்தது லலிதாவுக்கு.

முகுந்தனை நான் விலக்க அவசியமில்லை, அது காந்தி விரும்பும் சாதி ஏற்றத்தாழ்வை உடைக்கும் திருமண ஏற்பாடு என்பதால். அது சுதந்திர இந்தியாவில் நடக்கும் கலப்பு மணங்களுக்கு முன்னுதாரணமாக அமையும். அது காந்திக்குப் பிடித்தமானதாகவே இருக்க முடியும். அதே போல் திருப்பதி லட்டையும் தவிர்க்க வேண்டிய கட்டாயமில்லை. ஏனெனில் இது இறைவனின் பிரசாதம். அதுவும் காந்தியின் பிரியமான ராமனின் மூல‌ வடிவான வெங்கடேஸ்வர சுவாமியின் கோயிலில் வழங்கப்பட்டது. அன்னமாச்சாரியார் திருப்பதி விஜயம் செய்த போது அவருக்கு வயிறு பசிக்க, பத்மாவதித் தாயார் அவருக்கு லட்டைத்தான் கொடுத்ததாக அப்பா அப்பிரசாதச் சிறப்பைச் சொன்னார். லலிதாவின் கண்களில் ஒளி தோன்றியது. அவளுக்கு திருமணம் – திருப்பதி லட்டு என்ற‌ அந்த ஒப்பீடு பிடித்திருந்தது. காந்தியே வந்து இரண்டையும் தீர்மானிக்கட்டும் – அவர் சொன்னால் லட்டைத் தின்னலாம், அவர் ஏற்றால் திருமணம் செய்யலாம். அவரது சொல்லே இறுதி!

லலிதா திருப்பதி லட்டை மந்தாரை இலையோடு சுருட்டித் தன்னிடமிருந்த சிறிய மரப் பேழை ஒன்றில் வைத்தாள். அது எப்படியும் சில வாரங்களாவது கெடாமல் தாக்குப் பிடிக்கும் எனத் தோன்றியது. காந்தி வருவதற்குள் லட்டு கெட்டுப் போய் விட்டால்?

அதுவும் கூட அவரது தீர்ப்புதான் அல்லவா! கல்யாணத்துக்கும் கூட இது பொருந்தும். காத்திருப்போம். பரிதி கண்டு பனி கரைந்தது போல் லலிதாவுக்குத் திருப்தி வந்தது.

நிம்மதி படர்ந்த முகத்துடன் சன்னல் வழி வெளியே பார்த்தாள் லலிதா. மஞ்சு தோளில் காய்கறிப் பையுடன் அவளைப் பார்த்துப் புன்னகைத்து நடந்தாள். இருபுறமும் அவளது விரல் பற்றியபடி அவளது மகன்கள் லவா மற்றும் குசா. இரட்டையர்கள்; ஐந்தாறு வயது இருக்கும். அவர்கள் இருவரும் முலை திகட்டாக் குழந்தையாக இருக்கும் போது அவள் சேவாக்ராம் வந்து சேர்ந்தாள் என்பார்கள். அப்போது குழந்தைகள் இருவருக்கும் அவள் பெயர் கூட வைத்திருக்கவில்லை. காந்திதான் ராம நேசத்தில் அந்நாமங்கள் சூட்டினார்.

மஞ்சு மைசூர் மாகாணத்தைச் சேர்ந்தவள். நிறைசூலியாக இருக்கையில் கண்டறியா நோய் கண்டு அவளது புருஷன் இறந்தான். குழந்தைகளைப் பெற்ற கையோடு அங்கே வந்திருந்தாள். காந்திக்குச் சேவை செய்ய வந்தாளா, சேவாக்ராம் போனால் பிழைத்துக் கொள்ளலாம் என வந்தாளா தெரியவில்லை. காந்தி அது பற்றிக் கவலைப்படவில்லை.

இடையின் இருபுறம் குழந்தை இடுக்கி நின்ற அவளைப் பார்த்து, ‘சமைக்கத் தெரியுமா?’ எனக் கேட்டார். அவள் ஆமோதிப்பாகத் தலை ஆட்டியதும் அனுமதித்து விட்டார். அங்கு எல்லோரும் சமையலில் கை கொடுப்பார்கள் என்றாலும் அவர்களை இழுத்துச் செல்லும் ஒற்றை விசையாக ஓர் ஆள் வேண்டியிருந்தது. அங்கே மஞ்சு பொருந்திப் போனாள்.

ஆனால், சில தினங்களிலேயே சேவாக்ராம் ஆசிரமத்தில் முணுமுணுப்புகள் கிளம்பின‌.

மஞ்சு தீண்டத்தகாத‌ சமூகத்தைச் சேர்ந்தவள் என்பதை யாரோ ஷெர்லாக் ஹோம்ஸ் துப்பறிந்து விட்டார். அவள் தந்தை மாட்டுத் தோல் உரித்து செருப்புகள் தைக்கும் பணி செய்பவர். அவளுக்கும் அதில் அனுபவம் இருந்தது. மாட்டுக் கறி தறித்த, கால் அழுக்கு தொட்ட‌ கைகளில் சமைக்கும் உணவைச் சாப்பிடுவதா என்று பேசிக் கொண்டார்கள்.

ஆனால், காந்தியிடம் இதைச் சொல்ல எவருக்கும் தைரியம் இருக்கவில்லை. தீண்டாமை அவருக்குப் பிடிக்காது. பிறகு சிலர் பேசி வைத்து, மஞ்சு சமைத்தவற்றை உண்ணாமல் தவிர்த்தனர். உணவு மீதமானது. அது காந்தியின் கவனத்துக்குச் சென்றது. வீணாவது அவருக்குப் பிடிக்காது. அது கிட்டத்தட்ட காந்தி உத்தியை அவரிடமே பிரயோகிப்பது.

ஒத்துழையாமை! எதிராளியை நம்மிடம் பேச வர வைப்பது. அப்போது கோரிக்கையை வைப்பது. எதிராளியின் பலவீனத்தைப் பயன்படுத்தி பேரம் பேசி சாதித்துக் கொள்வது.

காந்தி அச்சதுரங்கக் காய் நகர்த்தல்களை ஊகித்திருந்தாரோ என்னவோ அவர்களிடம் விசாரிக்கவில்லை. மாறாக‌, மறுநாள் அதிகாலை வழிபாட்டுக் கூட்டத்தில் அறிவித்தார்.

“இன்று ஒடுக்கப்பட்டோராக இருக்கும் எல்லோரும் கடவுளின் பிள்ளைகள். அரிஜன்கள். எப்படிக் கடவுளிடம் தீண்டாமை செய்ய‌ முடியாதோ அப்படி அவரது குழந்தைகளிடமும் தீண்டாமையைக் கை கொள்ள இயலாது. அப்படியான தீண்டாமையைக் கடைபிடிப்பது பாவம். இதை நீங்கள் அனைவரும் உணர்ந்தும் ஏற்றும் பின்பற்றியும் வருவது எனக்கு பெருமகிழ்வை அளிக்கிறது. நான்தான் என் கண்காணிப்பில் ஏதேனும் பிழை நடந்தால் உணவு கொள்ளாமல் பட்டினி கிடந்து எனக்கு நானே தண்டனை அளிப்பேன். இப்போது சேவாக்ராம்வாசிகளில் சிலரும் அதைச் செய்யத் தொடங்கி இருப்பதாக அறிகிறேன். இதுவரையிலான உங்களின், உங்கள் சுற்றத்தின், மேலும் உங்கள் பரம்பரையின் சாதித் தீண்டாமைப் பாவங்களுக்குப் பிராயச்சித்தமாக உண்ணாவிரதம் மேற்கொள்கிறீர்கள்.”

“…”

“உங்களுக்கு என் மனமார்ந்த‌ வாழ்த்தும் ஆசியும். ஆனால், அது உங்கள் உடல் நலனைப் பாதிக்கும். உங்கள் சேவைகளைப் பின்னிழுக்கும். எனவே, உண்ணாவிரதத்தைக் கை விட்டு கடவுளின் பிரதிநிதியான மஞ்சுவிடம் மன்னிப்பு கேட்டு உணவு கொள்ளுங்கள். மஞ்சுவும் அவளது சகோதரர்களும் அவளது தகப்பனான ராம பிரானும் யாவற்றையும் மன்னிப்பார்கள். என்னோடு சேர்ந்து இதைப் பாடுங்கள். ரகுபதி ராகவ ராஜா ராம்…”

ஆசிரமவாசிகள் வாயடைத்து மிரண்டு போனார்கள் எனச் சொல்வான் முகுந்தன். அவன் அவளுக்கு முன்பிருந்தே, மஞ்சு வருவதற்கு முன்பிருந்தே அங்கே இருக்கிறான். அதற்குப் பிறகு எவரும் அது பற்றி வாய் திறக்கவில்லையாம். மஞ்சு சமைத்த‌ உணவைச் சாப்பிட மட்டுமே அந்த வாய்கள் திறந்தன. அதில் காந்தியின் அஹிம்சையை வியந்திருக்கிறாள்.

இம்மாதிரி பல விஷயங்களைப் பேசியும் பகிர்ந்தும் விவாதித்தும்தான் முகுந்தன் மீது அவளுக்கு ஆர்வம் வந்தது. அவன் அறிவு விரிவு மீதான வியப்பு ஒருபுறம், தன் அறிவை அவனுக்குக் காட்ட வேண்டும் என்ற தவிப்பு மறுபக்கம் எனப் பிள்ளை விளையாட்டு போல்தான் ஆரம்பித்தாள். காலப் போக்கில் நெடுந்தொலைவு அவர்கள் இருவரையும் அது இழுத்து வந்து விட்டது. காந்தியும் கஸ்தூர்பாவும் போல் என்று தம்மைக் கருத மாட்டாள் லலிதா. மாறாக காந்தியும் சரளா தேவி சௌதுராணியும் போல் என்பாள்.

“அவர்கள் சேரவில்லையே!” என முகுந்தன் கேட்பான். “ஆம், ஆனால் அவர்களே சிறந்த ஜோடி!” என்பாள் லலிதா. அப்போது முகுந்தனுக்கு அவளை அணைக்கத் தோன்றும். சேவாக்ராம் வளாகத்துள் அதைச் செய்யலாகாது எனக் கட்டுப்படுத்திக் கொள்வான்.

லலிதாவுக்கும் அது தெரியும். அவளுக்கு அவனை விட ஆசைகள் உண்டு. ஆனால், நாடு சுதந்திரம் பெறுகிற‌ வரை அதற்கு இடம் தரலாகாது என்பதே சத்தியாகிரஹியாக‌ அவள் எண்ணம். இப்போது அந்நெடிய காத்திருப்பு முடியப் போகிறது. விடுதலை கைக்கருகே வந்து கொண்டிருக்கிறது. திருப்பதி லட்டு பக்கம் வந்து பெட்டிக்குள் உறங்குவது போல்!

திருப்பதி லட்டு பற்றிய எண்ணம் வந்ததும் அப்பா பற்றிய நினைவு தானாக எழுந்தது. அவர் தன்னைச் சந்திக்க ஆசையாக வந்து மனம் ஒடிந்து போய் திரும்பியிருக்கிறார்.

அவளுக்கு லட்டை ஊட்டி விட வந்தார் அப்பா. அவள் அதை வாயில் வாங்காமல் கையில் வாங்கிக் கொண்டு அருகிலிருந்த மேசையில் வைத்தாள். பின் அவரது கையைப் பற்றி அருகே இருந்த நாற்காலியில் அமரச் செய்தாள். அவர் அவளைப் புரியாமல் பார்த்தார்.

“அப்பா உங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும். எனது வாழ்வு பற்றி. அதில் நம்மிடையே இணக்கமான முடிவு ஏற்பட்டால் இந்த இனிப்பை உண்கிறேன்.”

“சொல்லம்மா.”

“நேராகவும் சுருக்கமாகவும் சொல்லி விட நினைக்கிறேன் அப்பா. இங்கே சேவாக்ராம் வர விரும்பிய ‍போது எப்படி நேரடியாகக் கேட்டேனோ அது போல் ஓர் அடுத்த கட்டம்.”

“ம்.”

“என் திருமணம் பற்றித்தான். எனக்கான துணையாக‌ ஒருவரை யோசித்திருக்கிறேன்.”

“…”

“அவர் முகுந்தன். ஓரிரு முறை அவரை இங்கே வைத்துச் சந்தித்திருக்கிறீர்கள். நிச்சயம் நினைவு இருக்கும். அறிவன், அறவான், கொஞ்சமாக‌ அழகன். அவரை எனக்கு மிகப் பிடித்திருக்கிறது. இது வயதுக் கோளாறினாலோ, உடனடிப் பாலினக் கவர்ச்சியாலோ வந்ததல்ல. மாறாக, சில ஆண்டுகள் பழகிப் பார்த்த பின் நிதானமாகவே சொல்கிறேன்.”

“…”

முக்கியமாக‌, என் மீது பிரியம் மட்டுமின்றி மரியாதையும் கொண்டவர். நண்பன் போல், ஆசான் போல், அன்னை போல் ஒரு வாழ்க்கைத் துணை. அவரோடு என் வாழ்நாளைப் பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சியாக, நிம்மதியாக‌ இருப்பேன் எனத் தோன்றுகிறது!”

“லலிதா, அவரது பின்புலம் என்ன?”

“மதத்தைக் கேட்டால் இந்து. மொழி கேட்டால் மலையாளம். சாதி கேட்டால் நாயர்.”

“நாம் அய்யங்கார்கள் லலிதா. நமது ஆசாரமும் நமக்கிருக்கும் அந்தஸ்தும் நீ அறியாதது அல்ல. நாம் வர்ணத்தின் உச்சத்தில் உள்ள அந்தணர்கள்; அவர்களோ நால்வர்ணத்தின் அடிப்பகுதியில் இருக்கும் சூத்திரர்கள். எந்த வகையிலும் பொருந்தாச் சம்பந்தம் இது.”

“…”

“கேரளத்துப் பார்ப்பனர்களான‌ நம்பூதிரிகளை விசாரித்துப் பார். அவர்களிடமிருந்து நாயர்கள் எவ்வளவு அடி தொலைவில் நிற்க வேண்டும் எனக் கணக்குச் சொல்வார்கள். மீறினால் தீட்டு. நம்மவாள் நான்கு பேரை அழைத்து வைத்து இக்கல்யாணத்தை நடத்த முடியுமா? அக்ரஹாரமே சேர்ந்து நம் மீது காறி உமிழும். நம்மை ஒதுக்கி வைப்பார்கள்.”

“காலம் மாறி வருகிறது அப்பா. சாதி பார்ப்பதல்ல, கேட்பதே பாவம் என்ற நிலை இன்று. சமபந்தி போஜனங்கள் நடக்கின்றன. கோயில் நுழைவுகள் நிகழ்கின்றன. நம் ப்ரிய கவி பாரதி பல ஆண்டுகளுக்கு முன்பே ஆதி திராவிடருக்குப் பூணூல் அணிவித்திருக்கிறார்.”

“சேவாக்ராம் அனுப்பியது இப்படி சனாதன தர்மத்தையும், மனு சாஸ்திரத்தையும் நீ நெருப்பில் போட்டுப் பொசுக்கத்தானா? காந்தி இதையா உனக்குக் கற்றுத் தந்தார்? அல்லது அப்பையன் ஆசை வார்த்தை பேசி உன்னை மயக்கி வைத்திருக்கிறானா?”

“இல்லை அப்பா. காந்தியும் சொல்லித் தரவில்லை. முகுந்தரும் மோசம் செய்யவில்லை. நானே சுதந்திரமாகச் சிந்திக்கும் பெண். அப்படி இருக்க வேண்டும் என்பதே உங்கள் விருப்பமும். இப்போது நீங்களே அதற்கு எதிராகப் பேசுகிறீர்கள். எனக்கு உங்கள் நிலை புரிகிறது. இது ஓர் அதிர்ச்சி. உங்கள் ஆசாரங்களில் இருந்து ஒற்றை இரவில் வழுவக் கேட்பது நியாயமில்லைதான். எனவே, இப்போது முடிவெடுக்க‌ அவசரப்பட வேண்டாம். நீங்கள் பொறுமையாக யோசியுங்கள். நிதானமாகப் பேசுவோம். கடிதம் எழுதுங்கள்.”

“ம்.”

“தவிர…”

“தவிர?”

“நாயர்கள் ஒன்றும் தீண்டத்தகாதவர்கள் கிடையாது. அவர்கள் நால்வர்ணத்துள் வரும் சவர்ணர்களே; வர்ணத்துக்கு வெளியே இருக்கும் அவர்ணர்கள் அல்லர். பஞ்சமர்களான புலையர்களோ பறையர்களோ இல்லை. அச்சாதிப் பெண்கள் முலைகளை மூட‌த் தோள் சீலைப் போராட்டம் செய்தோர் அல்லர். அவர்கள் ஒரு காலத்தில் உயர்சாதியினராக‌ வாழ்ந்த வரலாறு கூட‌ உண்டு. ஆக‌, நீங்கள் இவ்வளவு பதற அவசியமில்லை, அப்பா!”

அப்படிச் சொல்லி முடித்த போதே நாக்கைக் கடித்துக் கொண்டாள் லலிதா. என்னவொரு கீழ்த்தரமான பேச்சு. காந்தி இதை அறிய நேர்ந்தால் என்ன நினைப்பார்! முகுந்தனுக்குத் தெரிய வந்தால்? எண்ணும் போதே மனம் நடுக்கம் கண்டது. ஆனால், உண்மையாகவே நான் அப்படி எண்ணவில்லை. அப்பாவிடம் இப்போது நிகழ்த்திக் கொண்டிருப்பது ஒரு மாதிரி தந்திரோபாயம்தான். முன்பின் பேசித்தான் ஆக வேண்டும். அவர் சம்மதம் பெற எல்லா வித யுக்திகளையும் பயன்படுத்தித்தான் ஆக‌ வேண்டும். அதன் பகுதிதான் இது.

அவள் செய்த சுயசமாதானம் அவளுக்கே ஆபாசமாகவும் அருவருப்பாகவும் இருந்தது.

அப்பா அதற்குப் பிற்கு ஒன்றும் சொல்லவில்லை. அவரது மௌனம் மேலும் கவலை ஊட்டியது. சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தார். பிறகு எழுந்து கிளம்பி விட்டார்.

கோடை வெய்யிலின் அனல் வெக்கை ஆசிரமச் சூழலை உருக்கிக் கொண்டிருந்தது.

தன்னுள் சாதியத்தின் கூறுகள் மிச்சமிருக்கிறதோ என்று திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டாள் லலிதா. தன்னைத் தானே வெறுத்தாள். செத்தால் தேவலாம் என்றிருந்தது.

அன்று இரவு லலிதா உணவு ஏதும் கொள்ளவில்லை. காந்தி போலவே தனது தவறான சொல்லுக்குப் பொறுப்பேற்று அதைச் செய்தாள். சுயவதை. காந்தியிடம் மானசீகமாக மன்னிப்பு கோரினாள். நெடுநேரம் அவள் கண்களில் நீர் வழிந்து கொண்டே இருந்தது.

தூக்கத்தில் கனவு வந்தது. அவளது தந்தை “உன்னை நம்பி தேச சேவை செய்ய‌ மகளை அனுப்பினால் நீ அவளை ஒரு கீழ் வர்ணத்தானுக்குக் கூட்டிக் கொடுக்கிறாயா? இந்த டால்ஸ்டாய் பண்ணை என்ன சண்டாளர்களின் உற்பத்தித் தொழிற்சாலையா?” என்று சொல்லிக் கொண்டே காந்தியின் கழுத்தைப் பிடித்து நெரித்தார். லலிதா திடுக்கிட்டு விழித்தாள். தாகமாக இருந்தது. விரதம் நினைவு வந்து எச்சில் விழுங்கிக் கொண்டாள்.

சரியாக நான்காம் நாள் அப்பாவிடமிருந்து கடிதம் வந்தது. அனேகமாகச் சென்னை போய்ச் சேர்ந்ததுமே எழுதியிருக்க வேண்டும். எனில் புகை வண்டியில் திரும்பும் வழியெல்லாம் யோசித்திருப்பார். நடுக்கத்துடன் வாசித்தாள். சுருக்கமான செய்தி.

‘எனக்கு இப்போதும் முகுந்தனை நீ மணம் செய்வதில் உவப்பில்லை. ஆனால், நான் உன் விருப்பிற்கு என்றுமே குறுக்கே நிற்க மாட்டேன். அது சாவுப் படுக்கையில் இருந்த‌ உன் அம்மாவுக்கு நான் அளித்த வாக்கு. ஆனால், பரம்பரைப் பெருமிதத்தை விட்டுத் தரவும் எனக்கு விருப்பமில்லை. உனக்கும் வேண்டாம், எனக்கும் வேண்டாம், நம்மிடையே ஒரு மத்யஸ்தர் அவசியம். காந்தியார் சேவாக்ராம் திரும்பட்டும். வந்து பேசுகிறேன். அவர் சொல் எதுவெனினும் ஏற்கிறேன். நீயும் ஒப்ப வேண்டும். மேல்முறையீடு கிடையாது.’

லலிதாவின் முடிவுக்கே அவரும் வந்திருந்தது நிம்மதி அளித்தது. இரு சிக்கல்கள் ஒரு சிக்கலாக இணைந்தது நல்லதுதான். இனி, காந்தியின் சம்மதம் மட்டும் போதுமானது.

‘காந்தி எங்கள் கல்யாணத்தை ஒப்புக் கொள்வாரா?’ லலிதா முகுந்தனுடனான பழைய உரையாடல் ஒன்றை அசை போட்டாள். காந்தியின் சாதி பற்றிய பார்வை குறித்தது.

“கால் நூற்றாண்டு முன் காந்தியே வருணாசிரம தருமம் அவசியம் என்ற எண்ணம்தான் கொண்டிருந்தார். இந்து மதம் நிலைத்து நிற்பதற்கு அதன் சாதி அமைப்பே காரணம், எனவே அது நல்லது என நினைத்தார். ஆனால், அப்போதே அவர் தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்றும் சொன்னார். சாதி வேறுபாடுகள் வேண்டும், சாதி ஏற்றத்தாழ்வுகள் கூடாது என்பதே அவரது நிலைப்பாடாக‌ இருந்தது. அது கொஞ்சம் குழப்பவாதம்தான்.”

முகுந்தன் சொன்ன போது அவனை வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள் லலிதா.

“1921ல் காந்தி ப்ரிட்டிஷ் ராஜாங்கத்துக்கு எதிராகச் செயல்பட்டதற்காகக் கைது செய்து விசாரிக்கப்பட்ட‌ போது மாஜிஸ்ட்ரேட் அவரது சாதி என்னவெனக் கேட்டார். காந்தி பனியா என்று சொல்லவில்லை; விவசாயி, நெசவாளர் என்றே சொன்னார். அதாவது அவர் நம்பிய வர்ணம் என்பது பிறப்பால் வருவதல்ல மாறாக செய்யும் தொழிலால் வருவது. அதனால்தான் இந்து மதத்தில் வர்ணம் இருக்க வேண்டும் என நம்பினார்.”

“ஓ!”

“ஆனால் அடுத்த பத்து ஆண்டுகளில் அவரது கருத்துக்கள் முற்றிலும் மாறின. சாதியை ஒழிக்க வேண்டும் என்ற இடத்துக்கு வந்து சேர்ந்தார். ஒரு சீர்திருத்தவாதியாக இருந்த காந்தி மெல்லப் புரட்சிக்காரராக மாறியிருந்தார். அம்பேத்கரும் அதற்குக் காரணம்.”

“புரிகிறது!”

“ஆனால், காந்தி ஒரு விஷயத்தை கைவிடவில்லை. அரிஜன்களின் விடுதலை மற்றும் முன்னேற்றத்துக்கு உயர்சாதிக்காரர்களின் இணக்கம் அவசியம் என நினைக்கிறார். உயர் சாதியினரிடம் தினமும் நீங்கள் ஓர் அரிஜனுடன் இணைந்தே போஜனம் செய்ய வேண்டும், அது சாத்தியமில்லை எனில் உங்கள் குடிநீரையும் உணவையும் அவர்கள் தொட்ட பிறகே சாப்பிட‌ வேண்டும், அதுவே நீங்கள் சாதியைக் கடந்து விட்டதற்கான அடையாளம் என்றார். சாதி வெறியர்கள் மட்டுமின்றி போலி முற்போக்குவாதிகளும் இதில் அடிபட்டனர். உண்மையில் அவரை உயர் சாதியினர் ரகசியமாக வெறுத்தனர், இன்னும் வெறுக்கின்றனர். காந்தியின் இருப்பு பலருக்கும் தொந்தரவாக இருக்கிறது.”

“…”

“காந்தி அரிஜன்கள் முன்னேற்றத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கிறார். அதற்கென அரிஜன் சேவா சங்கம் என்ற அமைப்பை நாடெங்கும் நடத்தி வருகிறார். தான் நடத்தி வந்த யங் இந்தியா பத்திரிக்கையின் பெயரையே அரிஜன் என மாற்றினார். சபர்மதி ஆசிரமத்தின் மற்றொரு பெயர் காந்தி ஆசிரமம். இந்தியா சுதந்திரம் பெற்றால் பூனா ஒப்பந்தத்தின் ஷரத்துகளை நாட்டின் புதிய அரசியல் சாசனத்தில் சேர்க்க வேண்டும் என அழுத்தம் தருவார் காந்தி என்பது என் ஊகம். என் ஊரான வைக்கத்தில் கோயில் தெருக்களில் ஈழவர்கள் நுழையக் கூடாது என்ற சாதிக் கட்டுப்பாட்டை எதிர்த்து நடந்த போராட்டத்துக்கு இருபதாண்டு முன்பே நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தி ஆதரவு தெரிவித்தவர். எனது தந்தையார் பார்த்துப் பேசியிருக்கிறார். அப்பழுக்கற்ற நோக்கு!”

“செம்மை.”

“அவர் புத்தரின், இயேசுவின் தொடர்ச்சி என்றே எனக்குத் தோன்றும். காந்தியம் என்பது சித்தாந்தம் மட்டுமல்ல, அது ஒரு பெருமதமாகப் பரிணமிக்கும் ஆற்றல் கொண்டது.”

“காந்தி ஓர் இறைவன் என்கிறீர்களா?”

“இல்லை, இறைத் தூதர் என்கிறேன்.”

“ம்ம்ம்.”

“காந்தி தன் வாழ்நாள் இலக்காகக் கொண்டிருப்பது மூன்று விஷயங்கள் – சுய‌ராஜ்யம், மத‌ நல்லிணக்கம் மற்றும் தீண்டாமை ஒழிப்பு. மூன்றுமே பிடிக்காதோர் இருக்கிறார்கள். சுயராஜ்யம் அருகே இருக்கிறது. விரைவில் வெள்ளைக்காரர்கள் இந்த‌ மண்ணிலிருந்து விலகி விடுவார்கள். வங்காளத்திலும் பீஹாரிலும் மத ஒற்றுமைக்காகத்தான் இப்போது காந்தி போராடிக் கொண்டிருக்கிறார். அதற்கு எதிர்ப்பு இருந்தாலும் சமமாகப் பெரிய ஆதரவும் இருக்கிறது. தீண்டாமை ஒழிப்புதான் அவரது ஆசிரமத்திலேயே அவருக்குச் சிரமம் தருகிறது. எங்கும் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ பலத்த எதிர்ப்பு மட்டுமே அதற்கு இருக்கிறது. யாரும் சமத்துவத்தை விரும்பவில்லை. அவர் உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் அது சாதியவாதிகளால்தான் நிகழும் என ஊகிக்கிறேன்.”

“ஆனால், அம்பேத்கரை விடவா சாதியை மிகக் கடுமையாக எதிர்த்து விட்டார் காந்தி?”

“இல்லை. ஆனால், அம்பேத்கர் எதிரே நின்று எதிர்க்கிறார். அவரை உதாசீனம் செய்ய முடியும். காந்தி உடன் நின்று கொண்டு எதிர்க்கிறார். பெரிய வித்தியாசம் இருக்கிறது.”

“ம்.”

சாதியை ஒழிக்க நினைக்கும் காந்தி சாதி மீறிய அவர்களின் மணத்தை ஆதரிக்கவே வாய்ப்பு அதிகம் என உறுதியாகத் தோன்றியது. தன் தந்தையின் கணிப்பு இரண்டாம் முறையாகப் பொய்க்கிறது. ஐந்தாண்டுகள் முன் அவள் சேவாக்ராமில் சேர வேண்டும் என்று சொன்ன போதும், முதலில் எதிர்த்து விட்டு, காந்தி ஏற்றுக் கொண்டால் சேர்ந்து கொள் என்று சொன்னார். காந்தி லலிதாவை முதற்சந்திப்பிலேயே ஒப்புக் கொண்டார்.

அப்பா வந்து போனது, அவர் பேசியது, அவரது கடிதம் போன்றவற்றை முகுந்தனுக்குத் தெரியப்படுத்த வேண்டும் எனத் தோன்றியது. கடிதம் எழுத ஆரம்பித்தாள் லலிதா.

முகுந்தன் சேவாக்ராமை விட்டு வந்த‌ இந்த‌ ஆறு மாதங்களாகவே கடும் அலைச்சலிலும் உளைச்சலிலும்தான் இருந்தான். காந்தியின் நவகாளிச் சமரச முயற்சிகளின் தோல்வி மற்றும் அவர் சந்தித்த அவமதிப்புகள் அவனுக்கு மிகுந்த மனவருத்தத்தை உண்டாக்கி இருந்தன. இன்னொரு பக்கம் காந்தியைத் தனியாகச் சந்தித்து தம் காதல் விவகாரம் பற்றி சொல்லச் சந்தர்ப்பமே அவனுக்கு அமையவில்லை. அவ்வப்போது லலிதாவுக்கு அது பற்றிக் கடிதம் போட்டான். அவளிடமிருந்தும் கடிதங்கள் வந்து கொண்டு இருந்தன.

முகுந்தன் லலிதாவின் லிகிதத்தை உறை பிரித்துப் படித்தபோது காந்தி பாட்னாவிலுள்ள‌ சதகத் ஆசிரமத்தில் அரிஜன் சேவா சங்க உறுப்பினர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

“ஓர் அரிஜன் புதிய‌ இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக வேண்டும் என விரும்புகிறேன்.”

காந்தி அப்படிச் சொன்னதும் உறுப்பினர்கள் மத்தியில் மெல்லிய சலசலப்பு எழுந்தது.

“அது போக, அம்பேத்கர் நிச்சயம் முதல் அமைச்சரவையில் இடம் பெறுதல் வேண்டும். அரிஜன்களுக்கு அதிகாரத்தில் பங்கு கிடைப்பது முக்கியம். உரியோரிடம் பேசுவேன்.”

“சரியான யோசனை, பாபு!”

“இந்திய விடுதலைதான் எல்லாவற்றுக்கும் ஆரம்பப் புள்ளியாக இருக்கப் போகிறது. நம் கையில் அதிகாரம் வந்த பின் நாம் நினைக்கின்ற மாற்றங்களைச் செயல்படுத்தலாம்.”

“நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள். தெற்கே ஈ.வெ. இராமசாமி நாயக்கர் என்ற முன்னாள் காங்கிரஸ்காரர் சமூக விடுதலை கிடைக்கும் வரை அரசியல் விடுதலை கிடைப்பதில் பயனில்லை என்று பேசியும் எழுதியும் வருகிறார். இந்தியாவிற்குச் சுதந்திரம் என்பது ப்ரிட்டிஷ்காரர்களிடமிருந்து பிடுங்கி பிராமணர், பனியாக்களிடம் கொடுப்பதே எனக் காட்டமாகச் சொல்கிறார். எங்களால் அவரை முழுக்க மறுக்கவும் முடியவில்லையே!”

“அது அவரது நம்பிக்கை. இது எனது நம்பிக்கை. காலம்தான் உண்மையை அறியும். நம் பிரச்சனைகளை நம்முள் நாம் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே என் துணிபு.”

“ம்ம்ம்.”

“இந்தியாவில் விரைவில் இராமராஜ்யம் மலரும். அங்கே அரிஜன்களுக்குத் தொந்தரவு இராது. வேடுவன் குகனைச் சகோதரனாக ஏற்றவன் ராமன், பழங்குடி சபரி மீது பேரன்பு கொண்டவன் அவன். அப்படித்தான் சாதி இந்துக்கள் இனி உம்மை எதிர்கொள்வார்கள். தீண்டாமை ஒழிந்து சமத்துவம் நிலவும். சகல உரிமைகளும் அரிஜன்களுக்குக் கிட்டும்.”

அப்போது அவர்களின் பிரதிநிதியாகப் பட்ட மூத்தவர் எழுந்து மெல்லச் சொன்னார்.

“காந்தியாரே, அதிகப்பிரசங்கித்தனமாகத் தோன்றினால் மன்னிக்கவும். ஆனால், அதே இராமராஜ்யத்தில்தான் சம்புகன் கல்வி கற்றதற்கு இதே ராமனாலேயே தலை சீவிக் கொல்லப்பட்டான். நீங்கள் சொல்லும் இராமராஜ்யத்திலும் அதுதானே நிகழும்? வேத பாடம் கேட்ட ஒடுக்கப்பட்ட‌ சாதிக்காரன் காதுகளில் ஈயம் காய்ச்சி ஊற்றிய மண் இது.”

“…”

“முதலில் நாங்கள் அரிஜன்கள் அல்ல; ஹ‌ரி என்பவரின் அவதாரம்தானே ராமன்! அவர் மனதில் ஏற்றத்தாழ்வு இருக்கிறது. யாம் எப்படி அவரது பிள்ளைகளாக இருக்க முடியும்? தவிர, நாங்கள் அவரது பிள்ளைகள் என்றால் சாதி இந்துக்கள் யாருடைய‌ பிள்ளைகள்? பிராமணனும் அசுரனுமான இராவணனின் பிள்ளைகளா? அவர்களே ஏற்க மாட்டார்கள்.”

“…”

“எனவே, அரிஜன் என்ற சொல் எம்மை உயர்த்துவது போல் பாசாங்கு செய்து நிஜத்தில் தாழ்த்துகிறது. தவிர, அச்சொல் மற்றவரிடமிருந்து எம்மைப் பிரித்து வைக்கிறது. மைய நீரோட்டத்தில் நாங்கள் அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் கலப்பதைத் தடுக்கிறது. உங்கள் உத்தேசம் அதுவல்ல என்றாலும் நடப்பது அதுதான்.”

“…”

“நீங்கள் ஒட்டுமொத்தத் தேசத்துக்கும் தந்தை என்கிறார்கள். நீங்கள் எமக்கும் தந்தை இல்லையா? ஒடுக்கப்பட்டோரான‌ நாங்களும் எங்களை ஒடுக்கும் சாதி இந்துக்களும் உங்கள் பிள்ளைகள் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். ஆம். யாம் காந்திஜன். எமக்கும் அவர்களுக்கும் இடையே நடப்பது உண்மையில் பங்காளிச் சண்டைதான்.”

“சரிதான். நான் இது குறித்து சிந்திக்கிறேன். நீங்கள் சொல்வதே சரி என நான் முழுக்க மனம் திருப்தியுற்றால் நிச்சயம் தவிர்ப்பேன். அது வரை அரிஜன் என்றே சொல்கிறேன்.”

“உயர்சாதியினர் சமத்துவத்தில் உண்மையிலேயே ஆர்வம் கொண்டிருப்பதாக நீங்கள் நம்புகிறீர்களா? ஆவேசமாக சாதி ஒழிப்பைப் பேசுகிறார்கள். அப்புறம் வயிறு வெடிக்க‌ சமபந்தி போஜனம் கொள்கிறார்கள். அவர்கள் எங்களையும் மனதார‌த் தம்மைப் போல் பாவிக்கிறார்கள் எனில் ஏன் கலப்புத் திருமணங்கள் எங்கும் ஆதரிக்கப்படுவதில்லை?”

திரளின் குரல் அது. காந்தி கண்கள் மூடி யோசித்தார். பின் நிதானமாகச் சொன்னார்.

“அரிஜன்களுக்கு இந்தக் கேள்வியை எழுப்பும் முழு உரிமை உள்ளது. முதலில் ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். திருமணம் என்பது இருவர் தொடர்புடைய தனிப்பட்ட விஷயம். அதில் அவர்களின் விருப்பிற்கு எதிராக வற்புறுத்தி எதுவும் நடக்கக்கூடாது. குறிப்பாக சாதி நிச்சயம் தடையாக இருக்கவே கூடாது. நான் இந்தக் கணம் முதல் ஒரு விதியைப் பின்பற்றப் போகிறேன். மணமாகும் இருவரில் ஒருவர் அரிஜனாக‌ அல்லாத திருமணங்களில் நான் பங்கேற்கப் போவதில்லை. அதற்கு எனது ஆசியும் கிடையாது. தொடுவதால் மாசு அடைகிறார்கள் என்ற அடிப்படையிலான தீண்டாமை என்பது ஒரு பழைய எண்ணம். அதற்கு நம் சமூகத்தில் இடமில்லை. சீக்கிரத்திலேயே ஒழிப்போம்.”

காந்தியின் பேச்சைக் குறிப்பெடுத்துக் கொண்டிருந்த காரியதரிசியான‌ ப்யாரேலாலும், அருகே உதவிக்கு நின்றிருந்த‌ முகுந்தனும் அதைக் கேட்டு வாயடைத்துப் போனார்கள். முகுந்தன் அதன் அர்த்தம் என்னவெனக் கிரஹிக்கச் சிரமப்பட்டுக் கொண்டிருந்தான்.

அது மாபெரும் முடிவு. சாதியின் வலுவான கயிறால் கட்டுண்டு இருக்கும் ஒட்டுமொத்த இந்தியாவின் ஆன்மாவை நோக்கிய அறைகூவல். சாதி ஒழிப்பிற்கான அசல் முதல் படி. இதைச் செய்வதற்காகவாவது அவர் இன்னும் நெடுங்காலம் வாழ்ந்திருக்க‌ வேண்டும்.

அதன் பக்க விளைவாக இனி அவர்கள் திருமணத்துக்குக் காந்தியின் ஆசி கிட்டாது. முகுந்தனோ லலிதாவோ அரிஜன் இல்லை என்பதை மாற்றி எழுத முடியுமா என்ன!

முகுந்தனை வெறுமை சூழந்தது. சட்டைப் பையில் இருந்த கடிதம் அவனது நெஞ்சை அழுத்தியது. லலிதாவின் முகம் நினைவுக்கு வந்தது. அவள் இதைத் தாங்குவாளா?

இல்லை, என்னை விடப் பெரிய காந்தியவாதி அவள். நான் அவளைப் பிரிந்து நெடிய பயணம் மேற்கொள்ள‌ வேண்டும் என்ற நிலை வந்த போது அது பற்றிய வருத்தத்தைச் சிறுமுகக் குறிப்பில் கூட வெளிப்படுத்தாதவள். இந்தப் புதிய‌ சூழலையும் தன் வழியில் கடப்பாள். முதல் முறை லலிதாவின் மடி சாய்ந்து சற்று அழ வேண்டும் போலிருந்தது.

அரிஜன் சேவா சங்க உறுப்பினர்கள் கை தட்டினர். “காந்தி வாழ்க!” கோஷமிட்டார்கள். காந்தி இரு கரங்களையும் உயர்த்தி அவர்களை அமைதிப்படுத்தி விட்டுச் சொன்னார் –

“என் பெயர் மறக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன். பணிகளே நிலைக்க வேண்டும். அப்படி எனது பணிகள் நிலைக்க என் பெயர் மறக்கப்பட வேண்டும் என்பது கட்டாயம்.”

அதைப் பொருட்படுத்தாது மேலும் உரக்கக் கோஷமெழுந்தது. முகுந்தனும் இணைந்து கொண்டான். ஒரு புதிய தொடக்கத்துக்கான நம்பிக்கை புனலாய்ப் புரண்டோடியது.

காந்தியின் செயல்பாடு பற்றிய குறிப்புக‌ள் The Hindu நாளேட்டில் தினம் வெளியாகிறது. லலிதா அவற்றைத் தவற விடுவதே இல்லை. காந்தி அருகே இல்லாவிட்டாலும் அவரைப் பற்றிய செய்திகளை அவள் விரல் நுனியில் வைத்திருப்பது அவ்வழியில்தான். மடியில் கிடந்த‌ செய்தித் தாளில் சதகத் ஆசிரமத்தில் அரிஜன்களுக்கும் காந்திக்கும் இடையில் நடந்த அந்த‌ உரையாடலை நூறாவது முறையாக வாசித்தாள் லலிதா. அவளது உதடுகள் உலர்ந்து கண்கள் ஈரம் கண்டிருந்தன. அவ்வளவுதானா! இதற்குத்தானா அத்தனையும்?

ஆனால், முகுந்தன் இதை எப்படி எதிர்கொள்வான்? சேவாக்ராமை விட்டு விலகிய போது அவளைப் பாராதிருக்க‌ முடியவில்லை என்றால் திரும்பி விடுவதாகச் சொல்லியவன் – அவனுக்கு பிரிவு பழகி விட்டதோ! என்னிலும் தூய்மையானது அவனது சத்தியாகிரகம். எல்லாவற்றையும் விட காந்தியும் தேசமும் பிரஜைகளுமே பெரிது என உணர்ந்தவன். முகுந்தனைக் கடைசியாக ஒரு முறை நெஞ்சோடு தழுவிக் கொள்ளத் தோன்றியது.

லலிதா தீர்மானித்தவளாக எழுந்தாள். மஞ்சுவின் பிள்ளைகளை அழைத்தாள். பேழை திறந்து கெட்டிப்பட்டுப் போயிருந்த‌ திருப்பதி லட்டை விண்டு ஆளுக்குப் பாதியாகக் கொடுத்தாள். லவாவும் குசாவும் உற்சாகப் பீறிடலுடன் வாயில் போட்டுக் கொண்டனர்.

மகன்கள் உண்பதைக் கண்டு மகிழும் மஞ்சுவைப் பார்த்து மகிழப் பழக ஆரம்பித்தாள் லலிதா. அம்முடிவு முன்னோர்களின் நீண்ட நெடிய பாவங்களுக்கான‌ பிராயச்சித்தம்.

தான் மஹாத்மாவைத் துளியளவும் வெறுக்கவில்லை என்று உறுதி செய்து கொண்டாள். டால்ஸ்டாய் பண்ணையின் இதமான தென்றல் அவளைப் பேரன்புடன் தழுவிப் போனது.

c.saravanakarthikeyan@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button