நூல் : உச்சி முகர்
ஆசிரியர் : விழியன்
ஓவியம் : ப்ரவீன் துளசி
வெளியீடு : Books for children
பக்கங்கள் : 64
விலை : ரூ. 45
“உங்களுக்கு குழந்தைகளைப் பிடிக்குமா?”
“இதென்ன மடத்தனமான கேள்வி…. குழந்தைகளைப் பிடிக்காதவர்கள் யாராவது இருப்பார்களா?”
“அதுவும் சரிதான்…”
சரி….. அப்படியாயின் கேள்வியைச் சற்றே திருத்தி இவ்வாறு கேட்போம்.
“நீங்கள் என்றைக்கேனும் குழந்தைகள் பேசுவதை ரசித்திருத்தீர்களா?”
“அவர்கள் கேட்கும் அத்தனை வினாக்களுக்கும் சலிக்காமல் விடையளித்து இருக்கிறீர்களா?”
நாமே பல நேரங்களில் பொது இடங்களில் பார்க்க நேர்வதுண்டு. குழந்தைகள் தங்கள் அப்பாவிடமோ அல்லது அம்மாவிடமோ தாங்கள் அறிந்து கொள்வதற்காக தொடர்ந்து ஏதேனும் கேள்விகள் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். ஆனால் அதற்கு பெற்றோர்களின் மறுமொழி, “இப்போ நீ வாயை மூடப் போறியா இல்லையா?” என்பதாகத்தான் பெரும்பாலும் இருக்கும்.
ஆனால், இந்நூல் இதற்கு முற்றிலும் வேறானது. ஒரு தந்தை தன் நான்கு வயது மகள் கேட்கும் வினாக்களுக்கு விடையளிப்பது, அவளின் குறும்புத்தனங்களை தானும் குழந்தையாய் மாறி ரசித்து அக்குறும்பினில் தன்னையும் கரைத்துக் கொள்வது, பொறுப்பான தகப்பனாய் மட்டும் இல்லாமல் நல்ல சமுதாயத்திற்கு உதாரணமான ஒரு மனிதனாயும் வாழ்வது, அவளின் குழந்தைமையை அப்படியே ஏற்றுக் கொள்வது என நமக்குள் இனம் தெரியா ஒரு வித மகிழ்வையும், நீங்கள் ஒரு தந்தையாயின் இதையெல்லாம் நாம் ரசிக்கத் தவறி விட்டோமோவென மன ஓரத்தில் ஒருவித வருத்தத்தையும், தந்தையாகப் போகிறவரெனில் நாமும் இதுபோல் ஓர் உதாரணமாய் வாழ வேண்டுமென்ற வைராக்கியத்தையும் ஏற்படுத்தும் நூல் தான் ‘உச்சி முகர்’.
அப்பா – விழியன்
மகள் – குழலி
நூலை வாசித்து முடிப்பதற்குள் நிச்சயம் நீங்களே விழியனாக – இந்நூலில் வரும் தந்தையாக மாறி விட்டிருப்பீர்கள். அந்தக் கற்பனையிலிருந்து நீங்கள் வெளிவர நீண்ட நேரம் பிடிக்கும். இந்நூலின் சிறப்பு இதில் எதுவுமே நூலாசிரியரின் கற்பனையல்ல. முழுக்க முழுக்க அவருக்கும் அவர் மகளுக்கும் இடையில் நடந்த உரையாடல்கள் மற்றும் கலகலப்பான தருணங்களே.
//
“அம்மா காயம் வலிக்குதம்மா…….”
“சீக்கிரம் ஆறிடும்டா கண்ணா……”
“சூடாவா இருக்கு?”
//
ஹா…. ஹா ….. ஹா…… சிரிச்சி முடியல….. இன்னும் இதுபோன்ற குழலியின் குழந்தைத்தனமான குரல் நூல் முழுவதும் பரவியிருக்கிறது.
கூடவே விழியன் அண்ணாவின் கவிதைகளும்….. (நம்புங்க….. அண்ணன் கவிதை கூட செமையா – செம்மையா எழுதுறாரு)
//
அப்ப்பா….. என்ற அழைப்பில்
ஆட்டம் காண்கின்றன
வேட்டையாடும் வேதனைகள்
//
//
மகளின் கிறுக்கல்கள் இல்லாத
நோட்டு புத்தகங்கள்
மோட்சம் பெறாதவை
//
நூலினை வாசித்து முடிக்கும் வரையில் நம் இதழ் கோடியில் ஒரு சிறு புன்னகை முகிழ்ந்து கொண்டே இருக்கிறது. வாசித்த பின்னரும் அது அங்கேயே நிரந்தரமாய் தங்கியும் விடுகிறது.
என் தங்கை மகள் மூன்றாண்டுகளாய் எங்களுடனே வளர்ந்து வருவதால் நூலின் பெரும்பாலான இடங்களில் என்னை பொருத்திப் பார்க்க முடிந்தது. அப்பா என்ற இடங்களில் மட்டும் மாமா என்று போட்டுக் கொண்டால் இவையெல்லாம் நமக்கும் வர்ஷினி பாப்பாவிற்கும் இடையில் நடந்தவையாயிற்றே என்ற சிந்தனை பல இடங்களில் உதிக்கிறது. ஆயினும் அவற்றையெல்லாம் அப்போதைக்கு மகிழ்ந்து ரசித்ததோடு நிறுத்தி இதைப்போல் ஆவணப்படுத்தாமல் விட்டு விட்டோமே என்ற ஆதங்கமும் மேலெழுகிறது. ஆனால், வருங்காலத்தில் நிச்சயம் இந்த ஏக்கம் நேரா வண்ணம் இன்றிலிருந்தே ரசிப்பவற்றை எழுத்துகளிலும் கோர்த்து சேமிக்க வேண்டுமென்ற உறுதியும் ஏற்பட்டது.
குழலிக்கு அப்பா கால்குலேட்டரில் மேஜிக்கை சொல்லித் தருவது, குழலி அப்பாவிடம் எனக்கு இன்னொரு பேரு இருக்கு “மேஜிக் குழலி” என்பதெல்லாம் அற்புதமான தருணங்கள்….
சட்டை சிறியதாகி விட்டது என விஷ்ணுபுரம் சரவணன் அண்ணன் கூறுகையில், “இல்லை அங்கிள் நான் பெருசாகிட்டேன்” என குழலி கூறுவதெல்லாம் பெரியவர்களே இதுவரை யோசிக்காத பார்வை. அருமை. வாழ்த்துகள் குழலி.
நூல் முழுக்க நூலாசிரியரின் (விழியன் அண்ணாவின்) தத்துவ வார்த்தைப் பிரயோகங்களும் பரவி நம்மை சிந்திக்க வைக்கின்றன.
–> குழந்தைகள் விளையாடுவதை ஊக்குவியுங்கள். விளையாட்டு மட்டுமே தோல்வியை வெற்றிபோல பாவிக்கக் கற்றுக்கொடுக்கும்.
–> இந்தச் சிரிப்பினையும், குழந்தைத்தனத்தையும் கல்வி கொல்லாமல் இருந்தால் சரிதான்.
–> ஊரெங்கிலும் தேவதைகள் நடமாடுகின்றார்கள். நமக்குத்தான் அவர்களைக் கவனிக்க நேரமில்லை.
–> பூச்சிக்காரன் என்ற கான்செப்ட் இல்லாமல் போயிருந்தால் குழந்தைகளுக்கு சோறு ஊட்டுவதும் உறங்க வைப்பதும் பெரும் சிரமமாய் போயிருக்கும் வளர்ப்பவர்களுக்கு.
நீயேதான் மொத்தத்தையும் சொல்லிட்டியே. இதுக்கு மேல நாங்க எதுக்கு புத்தகத்தை வாங்கி படிக்கணும்னு நெனச்சீங்கனா, 5 மணிக்கு கும்பல் கும்பலா நின்னு கைத்தட்டின மக்களை மாதிரி அறியாமையில் நீங்க இருக்கீங்கனுதான் அர்த்தம். இந்தப் புத்தகத்தில் இருந்து நான் கூறியது நூற்றில் ஒரு பாகமே.
நீங்கள் குழந்தைகளை ரசிக்கவும் – அவர்களின் குழந்தைமையைக் கொண்டாடவும் உங்களுக்கு நிறைய சொல்லித் தரும் நூல்தான்….. இல்லை இல்லை……. சொல்லித் தராது. மானசீகமாய் உங்களை உணர வைக்கும் நூல்தான் *”விழியனின் – உச்சி முகர்”*
குழந்தைகள் மீதான என் அன்பை பேரன்பாய் மலரச் செய்ய சிறந்த இந்நூலைப் பரிசளித்த தோழி – மாணவி நாகலட்சுமி அவர்களுக்கு இதயங்கனிந்த நன்றிகள்….?????
முன்னுரையில் மாடசாமி அய்யா கூறிய வார்த்தைகளுடன் எனது வாசிப்பு அனுபவத்தை முடிப்பது பொருத்தமாயிருக்கும் என கருதுகிறேன்.
“வாசிக்க…. வாசிக்க… கண்ணும் நெஞ்சும் ஊற்றெடுத்துத் தளும்புகின்றன…”
வாசிப்போம் – அறிவை விரிவு செய்வோம்.
வாசிப்பும்,பகிர்வும்….