![](https://vasagasalai.com/wp-content/uploads/2022/05/writer-kamaladevi-780x405.jpg)
அதிகாலையிலேயே ‘தக்குபுக்கான் தம்பி சடையன் பூசாரி செத்து போயிட்டாங்க’ என்று சக்தி மாமா அலைபேசியில் தகவல் சொல்லியபடி சென்றார். மாடி ஏறிப் பார்த்தேன். அடுத்த சந்தில் கும்பலாக இருந்தது.
கீழே வாசலில் நின்று, “தக்குபுக்கானோட கடைசித் தம்பிதானே இவுங்க” என்று ஒரு கிழவி கேட்டுக் கொண்டிருந்தது.
“அண்ணன் தம்பி நாலு பேரு..ஒரு பிறந்தவ..இந்த மாமாவுக்கு நூறு வயசுக்கும் கூடுதலா இருக்கும்” என்றார் ஐயாண்டி பாட்டனார். பின் நடுங்கும் குச்சியைப் பிடிமானமாகக் கொண்டு வாசல்படியில் அமர்ந்தார். வீட்டுக்கிழவி, “எனக்கே தொண்ணூறுக்கும் கூடுதலா இருக்கும்… சடையன் மாமா எனக்கும் பத்து வருஷமாச்சும் கூடுதலா இருப்பாக” என்றார்.
ஒன்பது மணி போல வாசல்படியில் பத்து பேருக்கும் மேல் வயசாளிகள் கூடியிருந்தார்கள்.
“போய் சோறு தின்னு” என்று ஒரு குரல் கேட்டது.
“நேரங்கடந்து போச்சு. சோறு திங்க முடியாது ஆண்டி… திகட்ட சீனி போட்டு ஒரு தம்ளரு பாலு குடிச்சிட்டேன்” என்று வீட்டுக்கிழவி பதில் சொல்லியது.
தெருவில் இந்தமாதிரி வயசாளிகள் குறைந்து விட்டார்கள். என் சிறுவயதில் அத்தனை வீட்டிலும் இப்படி ஒருவராவது இருந்தார்கள். வாசல்படி நிழலில் அமர்ந்தபடி, திண்ணையில் படுத்தபடி, தாயம் உருட்டிக்கொண்டு, காயும் தானியங்களை காக்கா கோழியிடம் இருந்து காப்பாற்றிக்கொண்டு, தானியங்களை அதற்கு வீசியெறிந்தபடி,கைக்குழந்தையை மடியில் கிடத்தியபடி பாட்டனோ பாட்டியோ இல்லாத வீடில்லை. மூலவரை வாசலில் வரைந்து வைத்ததைப்போல. தெய்வங்கள் வாசலில் அமர்ந்த வீடு என்று இன்று சொன்னால் கேட்பவர்கள் கேலி செய்வார்கள். ஆனால், அப்படித்தான் நினைக்க முடிகிறது.
தங்களின் நீண்ட ஆயுளில் பெரும்பாலும் கசப்புகள், ஆற்றாமைகள் உதிர்ந்து சிவனே என்றோ, சிவன் என்றோ ஆனவர்கள். பற்கள் எல்லாம் உதிர்ந்து முகமே சிரிப்பாய் மாறியவர்கள். பாதையில் போவோர் வருவோர்களுக்காக ‘நல்லாயிரு, பாத்து போயிட்டு வா’ என்ற சொற்களுடன் இருப்பவர்கள்.
நோயால், அதற்கான மாத்திரைகள் தரும் உபாதைகளால் துன்பப்படும் வாழ்நாள் நீட்சி இன்றைக்கான விதி. இறக்கும் வரை கசப்புகள் எஞ்சி நிற்கும் வார்த்தைகளுடன், உடல் உபாதைகள் தரும் அவஸ்தைகளுடன் போய்ச்சேர வேண்டியிருக்கிறது.
சடையன் பூசாரி பாட்டாவின் சாவிற்காக செய்முறைகள் எதுவும் தேவையில்லை என்று சொந்தபந்தங்கள் முடிவெடுத்திருந்தார்கள். அவருக்கு ஆண்பிள்ளைகள் இல்லை. மூன்று பெண்மக்களில் இரண்டு பேர் இறந்து விட்டார்கள். யாருக்கு செய்முறை செய்வது. மகள்கள் வீட்டு பேரப்பிள்ளைகள் பத்து நிற்கிறது. செய்வது திரும்பி வரவும் வழியில்லை என்பதால் முன்கூட்டியே தேவையில்லை என்று தீர்மானித்து விட்டார்கள்.
இரண்டு நாட்களாகத்தான் பாட்டாவிற்கு நிதானம் வருவதும் மாறுவதுமான படுக்கை. கடைசிப் படுக்கை என்று புரிந்து சாவகாசமாக அவரின் வாழிடமான அண்ணன் தக்குபுக்கானின் வீட்டு திண்ணையை ஒழுங்குபடுத்தி வைத்தார்கள். எந்த ஆகாரமும் எடுக்கவில்லை. நேற்று இரவு சாராயம் மட்டும் கேட்டார். வாங்கிக் கொடுத்தார்கள்.
சாமிஆடுவது, சோழிப் போட்டு பார்ப்பது, திருநீறு பிடிப்பது போன்ற விஷயங்களைத்தான் பாட்டா தன் வாழ்நாள் முழுக்கச் செய்தார். அவர் சாமியாடுவதைப் பார்க்க அப்படி இருக்கும். எட்டடியான் கோயில் களத்தை நிறைத்து ஆடுவார். உண்மையாக சன்னதம் வந்தவர்கள் எப்படி இருப்பார்கள் என்று அவரை பார்த்துக் கொண்டால் போலிகளை கண்டுபிடித்துவிடலாம். அவர் உடுக்கை ஒலி அத்தனை கார்வையானது. கேட்பவர்களின் நெஞ்சு அதிரும். உடுக்கை அடிக்க உடலிற்கு ஒரு தெம்பு வேண்டும். உடுக்கையில் அவர் விரல்கள் லயிக்கும் போது பார்ப்பவர்களுக்கு அந்த லயிப்பு வந்து விடும். லயிப்பு நிலைக்க விடாமல் திடீரென்று ஓங்கி அடிப்பார். ஒலியின் தன்மை மாற்றும் போது கேட்பவர்கள் விழித்துக்கொள்வோம்.
உடுக்கை உள்ளத்தை, உடலை உண்டு இல்லை என்று ஆக்கும் வாத்தியம். அவர் அடிக்கும் போதுதான் அதை என்னால் உணர முடிந்தது. இன்று அடிப்படும் உடுக்கைகளை என் மனம் அசால்ட்டாகக் கடந்து செல்கிறது. அவரின் உடுக்கை ஒலி கால்களை இழுத்துப் பிடிக்கக் கூடியது. அவரைப்போல ஒருவன் எங்காவது இருக்கக்கூடும்.
அவரின் இடது கையில் தூக்கிப்பிடித்த உடுக்கை ஒரு கணமும் தாளாது நிற்கும். வலது கையின் சுட்டு விரலும், நடுவிரலும், மோதிரவிரலும் உடுக்கையைத் தடவி, வருடி, ஆத்திரப்பட்டு விரல்கள் மட்டும் ஆடும் நடனம் அது. இழுத்துக்கட்டப்பட்ட ஆட்டுத் தோலில் முதல் விரல் விழும் போது சலனமற்ற அதிகாலை ஆற்றில் பாறாங்கல் சட்டென விழுவதைப்போல நம் மனம் உதறிச் சிலும்பும். ஒருக்கட்டத்தில் நம்மிடமிருந்து நாம் தப்பி நின்றால் மட்டுமே தன்னிலையில் நிற்க முடியும். இல்லை என்றால் நாம் உடுக்கைக்கு ஆடுவது மாதிரி ஆகிவிடக்கூடும்.
உடுக்கை ஒலி மனதை உசுப்பி உன்மத்தத்தில் அமிழ்த்தி அதே வேகத்தில் மனதை வெளியே தள்ளிவிடுவது. ஒரு போதும் நிதானத்துடன் உடுக்கை ஒலியினுள் சென்று உடல் திருப்பமுடியாது என்றே தோன்றும். உடுக்கை ரசிப்பதற்கான ஒலிக்கருவி அல்ல. அது உணர்வுகளுக்குள் சென்று ஆழ்மனதை விசுக்கென்று அதிர வைப்பது. மனம் உதறிக்கொண்டு, பசி கொண்டு காட்டில் ஓடும் மிருகம் எனப் பாயும். அந்தப் பாய்ச்சலில் பசியால் சோர்ந்த விலங்கின் மனம் வீச்சு கொண்டு எழுந்து இரையைக் குறிவைப்பதைப் போல தன் ஆங்காரத்தை, பெருங்கொண்ட கோபத்தை, அச்சத்தை ஊளையிட்டு வெளியே வீசிவிட்டு தளரும். அந்தத் தருணத்தை பாட்டா தனதாக்கிக் கொள்வார். அப்போது அவர் வார்த்தைகள் ஆணை என முன் நிற்கும் மனதில் படிந்துவிடும்.
சுதாரிப்புடன் இருப்பதாலேயே என்னால் இன்னும் முழுதாக உடுக்கை ஒலியில் ஒன்று சேர முடியவில்லை. மனதின் உச்சத்தை தொட்டு நம்மையே அழித்துக்கொள்ளச் சொல்வதே உடுக்கையோடு சேர்தல் என்பதாக இருக்கலாம். அதனாலோ என்னவோ சடையன் பாட்டா அவராகவே கோயில் முன்னால் உடுக்கை எடுத்தார் என்றால் முழுவதுமாக உட்கார்ந்து கேட்க ஊர் பயப்படும். அவரே தன் கருணையால் பாதியில் நிறுத்தி சுதாரிக்கவிட்டு அடிப்பார்.
ஒருகட்டத்தில் அவர் உடலே உடுக்கைதானோ என்று தோன்றும். உடுக்கை ஒன்று அதிர்வதைப் போல உறுமும் குரலும், திமிறும் உடலும் அவருடையது. மீறிய உயரம், மீறிய குரல், மீறிய தைரியம். அவரை அவர் அண்ணன் தக்குபுக்கானைத் தவிர யாராலும் பிடியில் நிறுத்தமுடியாது.
அவரின் எதிர்ரூபம் இவர். அவருக்கு நடையே சரியாக அமையாத உடல். ‘தக்கு புக்கு’ என்று நடைபழகும் குழந்தை என நடப்பவர். பதின்வயதில் நாள்முழுதும் கோயில் முன் ஆடும் இவரை மனிதராக்கி மண்ணில் நிறுத்த அவர் வர வேண்டும் என்று கிழவிகள் கதை சொல்லுவார்கள்.
“வயல்ல கெடந்து வயித்துப் பாட்டுக்கு சீரழியறது பத்தாதுன்னு இவனத் தேடிக்கிட்டு கோயில், சுடுகாடு, காடு மேடுன்னு அலையறதே எனக்கு பெரும்பாடா இருக்கு” என்று திட்டிக்கொண்டே தேடுவாராம். பெரும்பாலும் தக்குபுக்கான் பாட்டா கீழே விழாமல், அடிவாங்காமல் தப்பித்ததில்லையாம். அதையும் மீறி அவர் இவரை தொட்டுப் பிடித்துவிட்டால் மனிதர் நிலைக்கு வந்துவிடுவாராம். இறுதிநாட்களில் அவர் இவரைக் கட்டுப்படுத்த மிகவும் சிரமப்பட்டார் என்பார்கள்.
தான் இருக்கும் போது தன் உடன்பிறந்தானை உடுக்கையும் கையுமாக சாக விட்டுவிடக்கூடாது என்ற வைராக்கியம் கொண்ட மனிதர் அவர். திமிறும் வயது கடந்து உடல் சோர்வு தெரியும் வயது வந்ததும் இவரே சுதாரித்துக் கொள்ளத் துவங்கியிருக்கலாம்.
இவருக்கு எண்பது வயதில் உடுக்கை கையில் நிற்காமலானது. அதை எதிர்பார்த்தவர் போல சாமியழைத்து கும்பிட்டு உடுக்கையை மாரியம்மனின் பாதங்களில் வைத்துவிட்டார். அவர் விரல்கள் எப்போதும் மெதுவாக வலது தொடையில் சத்தமில்லாமல் உடுக்கையைத் தட்டுவதைப்போல அசைந்து கொண்டிருக்கும்.
‘இப்படி இருக்கு. என்னங்கய்யா செய்யலாம்? என்ன பாட்டா சொல்ற?’ என்று கேட்டு வருபவர்கள் குறைவதே இல்லை. கண்மூடிக் கேட்பார். தொடையில் தட்டுவதை நிறுத்திவிட்டு, “சரியாயிடும்… எட்டடியான மனசில வை.. மாரியாத்தாக்கிட்ட விட்ரு” என்பார். இடுப்பில் இருக்கும் திருநீறை நெற்றியில் வைத்து அனுப்புவார்.
ஆங்காரமானவராக உடுக்கையுடனிருந்தால் அவர் எதையுமே யாருக்கும் சொல்வதில்லை. தனக்கேதான் எதையாவது சொல்லிக்கொள்வார். நிலைக்கு வந்ததும்தான் ஊர்ஆட்களிடம் பேசுவார். அவரிடம் மக்கள் சலிக்காமல் செல்வது அதனால்தான். சந்நதம் வந்தாலும் ஒருநாளும் எதையும் யாரையும் சாபமிட்டதில்லை. அந்த மனசை மனுஷர்கள் விரும்பினார்கள். சில நேரங்களில் எதுவுமே பேசாமல்கூட பாட்டாவின் திண்ணையில் அமர்ந்துவிட்டுச் செல்வார்கள். அவரும் எதுவும் கேட்க மாட்டார். அவருடன் இருந்துவிட்டு செல்வதற்கு எதோ இருந்தது.
நல்லாயிரு என்று முழுமனதுடன் சொல்லக்கூடியவரின் வாழ்க்கை சிரமப்பாடுகளால் நிறைந்தது. மனைவி நாற்பதில் இறந்தாள். மகள்கள் எழுபதில் இறந்தார்கள். ஒரு மகளுமே அவரை வீட்டில் வைத்துக்கொள்ள முடியவில்லை.
“உடுக்கையடிக்கறவன்னா சுடுகாட்டுல போய் ஒக்காரச் சொல்லு. இங்க எடமில்லை. அவரை வீட்ல வச்சுக்கிட்டு நிம்மதியா பொழைக்கமுடியாது” என்று பேரப்பிள்ளைகள் சொல்லிவிட்டார்கள். உண்மைதான்.
எண்பது வயது வரை சிலஇரவுகளில் சுடுகாட்டில் அவர் உடுக்கையுடன் ஆடுவதை வெட்டியான் வந்து சொல்வார். ஊரின் காதுகளுக்கும் உடுக்கை ஒலி கேட்காமல் இல்லை. ஆனால், வெட்டியான் ஒரு நாளும் பயந்ததில்லை.
“என்னா ஆட்டம்… மனுஷனால அம்புட்டு நேரம் ஆடமுடியுமா… அப்பப் பாக்கனுமே அவர. கால்ல விழுந்து எந்திருச்சாதான் அதப் பாக்கற நமக்கு சரியாகும். ஒடம்பு முழுசும் இரும்பு உலையில போட்டு உருக்கி எடுத்த மாதிரி இளகிப்போகும். பாக்கற எனக்கே ஒரு நாள் தூக்கம் வராது. காதுல உடுக்க சத்தம் கேட்டுக்கிட்டே இருக்கும்” என்பார்
வெட்டியான் எப்படிச் சொன்னாலும் யாருமே பார்க்க போக மாட்டார்கள். அப்படியே சென்ற இளைஞர்களும் கொஞ்ச நேரத்தில் திரும்பி வந்துவிடுவார்கள். வேண்டுமென்றே சுடுகாட்டிற்கு சென்று அமர்ந்து திரும்பி, “பாக்கற நமக்கு பயித்தியம் பிடிச்சுரும். இந்த மனுசர் மனசுக்குள்ள என்ன இருக்குமோ” என்று மெத்தப்படித்த சேகர் மாமா ஒருநாள் கண்கலங்கி சொன்னார்.
சாம்பலும் மண்ணும் வியர்வையுமாக சுடுகாட்டிலிருந்து வெளியேறும் பாட்டா ஐயாற்றில் முழுகி எழும் போது விடிவெள்ளி எழுந்திருக்கும்.
மிக மெதுவாக சாதாரணமாக ஈர வேட்டியைப் பிழிந்து கட்டிக்கொண்டு சில்லரையைத் தேடி எடுத்து கொண்டு தேநீர் கடை பெஞ்சில் அமர்வார். கடைக்கார மெய்யப்பன் உடனே தேநீரைக் கொண்டு வந்துவிடுவார். ஒவ்வொரு முறையும் காசு வேண்டாம் என்று சொல்ல நினைத்தாலும் அவர் நீட்டும் போது பதில் சொல்லாமல் வாங்கிக்கொள்வார். பின் பழைய செய்தித்தாளை எடுத்துப்போட்டால் எழுத்துக்கூட்டி கொஞ்சநேரம் படித்துவிட்டு மடித்து வைத்துவிட்டுச் செல்வார். அதுவரை கடையில் ஒரு சலம்பலும் இருக்காது. அந்த நேரத்தில்தான் வயலுக்குச் செல்லும் பெண்கள் தேநீர் வாங்கிக்கொள்ள தூக்குப் போனியுடன் வருவார்கள். அவர் தினமும் கடைக்கு வரும் நேரமும், பெண்கள் வரும் நேரமும் ஒன்றாக வியாபாரம் ஆவதால் மெய்யப்பன் இவரை ராசியான மனுஷர் என்று சொல்லிக் கொள்வார்.
ஒரு முறை செல்வம் மாமா தன் துடியான வயதில் கடையில் அமர்ந்து கொண்டு, “உடுக்கையடிச்சா என்ன பெரிய கொம்பா.. நாம் பாக்கறேன்” என்று வழக்கமான கேலி கிண்டல்களைத் தொடங்கினார்.
“என்னடா, சின்னப் பிள்ளைங்க கிட்ட வம்பு” என்ற குரலால் வாயடைத்துப் போனார். அவரின் கோபக்குரலுக்கு அப்படி ஒரு அழுத்தம் இருக்கும். இரும்பை இரும்பால் அடிப்பதைப்போல.
பாட்டா தனியர். பெருங்குடிகாரர். ஆனால், எப்போதும் ஒரே மாதிரிதான் இருப்பார். குழந்தைகள் சின்னப்பிள்ளைகளிடம் சிரித்து விளையாடக்கூடியவர். ‘அந்த பாட்டாக்கிட்ட பிடிச்சு குடுத்திருவேன்’ என்று புதிதாக ஊருக்கு கல்யாணமாகி வரும் பெண்கள் சொன்னால் ஊர்ப்பிள்ளைகள் சிரிப்பார்கள்.
நான் ஒருநாள் பள்ளிக்கூடத்திற்கு செல்லும் போது செக்குமுடக்கில் பாட்டா நின்றுகொண்டிருந்தார். ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். சுருட்டை கீழே போட்டு நசுக்கிக்கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் புன்னகைத்தார்.
அவர் உடுக்கைச் சத்தம் கேட்டால் ஓடிப்போய் சந்துபொந்தில் நின்று கொண்டோ,ஆட்களின் பின்னால் நின்றோ பார்ப்பேன். அப்பா உடுக்கை அடிக்கும் இடத்திற்கு போகக்கூடாது என்று அதட்டினாலும் கேட்பதில்லை.
“என்ன பிள்ள அப்படிப் பாக்கற” என்றபடி பாட்டா பக்கத்தில் வந்தார்.
அவரிடமிருந்து பின்னால் நகர்ந்தேன்.
“உங்கப்பன் என்னையப் பாக்கக்கூடாதுன்னு மிரட்டுவான்தானே..”
“எப்படி உங்களுக்குத் தெரியும்..நீங்க சாமியா?”
அவர் குனிந்து இடுப்பிலிருந்த திருநீறை நெற்றியில் வைத்துவிட்டு “நானும்தான் பயப்படுவேன்…உங்கப்பன் அதுக்கும் மேல பயப்படுவான்” என்று சிரித்தார். அன்றிலிருந்து எப்போது பார்த்தாலும் தூரத்திலிருந்தால் புன்னகைப்பார். பக்கத்தில் வந்தால் திருநீறு பூசுவதுடன் சேர்த்து ‘ஒழுங்கா சோறு தின்னு’ என்றோ ‘தனிச்சு நிக்காத’ என்றோ சொல்வார். சில ஆண்டுகளாகவே பாட்டா வாஞ்சையுடன், “என்னலே நெனச்சுக்கிட்டிருக்க” என்று கேட்டுச் சிரிப்பதை வழக்கமாகவே வைத்திருந்தார்.
உடுக்கை அடிப்பவர்கள் இறந்தால் உடுக்கை அடித்துதான் சுடுகாட்டிற்கு வழியனுப்புவது வழக்கம். தாத்தாவின் தங்கையை கல்யாணம் செய்து கொடுத்த பனையேறி வீட்டில் உடுக்கை எடுத்தவன் திருப்பூர் வேலைக்குச் சென்றுவிட்டான். கறவை மாரி உடுக்கை அடிப்பார். பூசாரி பாட்டனுக்கு அடிக்கறதுக்கு எனக்கு தெம்பில்லை. உடல் தாங்காது என்று பாட்டாவை கும்பிட்டு நகர்ந்து கொண்டார்.
மரத்திண்டு ஒன்றில் வைக்கப்பட்ட உடுக்கை மௌனமாக இருந்தது. வேறு வழியில்லாமல் மாரியம்மன் கோவில் பூசாரி உடுக்கையை எடுக்க முடிவாகி சாமியிடம் உத்தரவு வாங்கி வந்தார். இவருக்கு உடுக்கை எடுத்துக் கொடுத்தவர் பாட்டாதான். உடுக்கையைச் சுற்றியிருந்த பருத்தித்துணியை இறுக்கிப்பிடித்து கையில் எடுத்தார்.
ஆட்கள் அஞ்சியது இந்த தருணத்தைதான். மெதுவாக கலையத் தொடங்கினார்கள். நான் மாடியில் நின்று பார்த்தேன். இறுதி வாகனத்தில் பாட்டாவின் முகம் தெரிந்தது. முதல் மீட்டலில் நடுநெஞ்சு பதறியது. இரண்டாம் மீட்டலுக்கு மனம் அதிர்ந்து கண்ணீர் வரும் போல இருந்தது. மனசை இழுத்துப் பிடித்து மூச்சை இழுத்து விட்டேன். மூன்றாம் மீட்டல் ஆள்காட்டி விரலால் மட்டும் அடிக்கப்பட்டது. ‘தம் தம் தம்‘ என்ற ஒற்றை சத்தம். குழந்தைகளுக்கான ஒலி. ஊரை விளையாட்டாய் மிரட்டிவிட்டு பாட்டா காடேறக் கிளம்பிவிட்டார். மங்கிய கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் எடுத்த உடுக்கைக்கு பிறக்கும் இன்னொருவனை இந்த வாழ்வில் நான் காணப்போவதில்லை என்று தோன்றியது. தன்னிச்சையாக விடாது ஒலித்த உடுக்கை. அது யாருக்காகவும் எழாத உடுக்கை.
******