உடும்புப் பிடி – பிருத்விராஜூ மருதமுத்து
![](https://vasagasalai.com/wp-content/uploads/2024/12/WhatsApp-Image-2024-12-19-at-16.17.22-780x470.jpeg)
“கலக்கப்போவது யாரு? நீதான்! நிலைக்கப்போவது யாரு? நீதான்..!” அலாரம் அடித்ததும் மனிதனாய் எழுந்த நான் இயந்திரமாய் அன்றாட வேலைகளைச் செய்ய ஆயுத்தமானேன். எனினும், வெறும் நான்கு மணிநேரத் தூக்கம் என்பதால் தலை சற்றே பாரமாக இருந்தது. இடையிடையில் இரண்டு மூன்று முறை விழித்ததெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. மனமோ ‘மணியாகின்றது தயவுசெய்து எழுந்துகொள்,’ என்றுரைக்க, உடலோ ‘பரவாயில்லை இன்னும் கொஞ்ச நேரம் படுத்துக்கொள்,’ என்று கெஞ்சத் தொடங்கியது.
கைப்பேசியைப் பார்த்ததும், இருதயம் தெறித்து எழுந்தேன்!!! காலை மணி 7.00 ஆகிவிட்டது! “7.20க்குள் எப்படியாவது நான் பள்ளியில் இருந்தாக வேண்டும்! இல்லையென்றால் முதன்முறை செய்த தவறாகவே இருந்தாலும் நேரத்தின் அவசியம் குறித்த ஓர் பேருரையைக் கேட்க நேரிடும்!” என்ற அச்சத்திலும் அவசரத்தின் உச்சத்திலும் குளிக்கலானேன். சத்தியமாகச் சொல்கிறேன், மாணவனாக நான் பள்ளிக்குச் சென்றபோதெல்லாம் மகிழ்ச்சியாகத்தான் சென்றேன்.
என்னதான் ஓர் அதிவேக மின்னல் வீரனாக நான் கிளம்பியிருந்தாலும், செல்லும் வழியெங்கும் நிறைந்திருக்கும் சமிக்ஞை விளக்குகள் அனைத்தும் சேர்ந்து செய்த கூட்டுச்சதியினால், பள்ளி வந்து சேர்ந்த நேரம் ஏழரையானது; எனக்கும்தான். எட்டு வருடங்கள் ஆசிரியராய் பணியாற்றியதில் நான் செய்த மொத்தத் தவறுகளின் தொகுப்புதான் இன்றைய உரை. எப்போது பள்ளி முடிந்து வீடு திரும்பும் நேரம் வருமென்று அப்போதே காத்திருக்கத் தொடங்கிவிட்டேன்.
என் வாழ்வை வளப்படுத்த உதவி புரிந்த அத்தலைமையகத்தின் உரையைக் கேட்டு அகமகிழ்ந்த நான் 8.30 மணிக்குத்தான் என் இடத்திற்கு வந்து சேர்ந்தேன். உட்காரவும் நேரமின்றி உடனே மூன்றாம் ஆண்டுக்குக் கணிதம் போதிக்கத் தேவையான பாடத்துணைப் பொருள்களைத் தயார்படுத்திக் கொண்டிருந்தேன். ஏற்கனவே வகுப்பிற்கு அரைமணி நேரத் தாமதம்.
“எத்தன வாட்டி சாயங்காலம் 5.30 மணி, 6.30 மணி வரைக்கும் ஸ்கூல்ல இருந்து மொத்த வேலையையும் முடிச்சிக் கொடுத்திருக்கேன்? அதெல்லாம் ஏன் இவங்க கண்ணுக்குத் தெரியல? பத்து நிமிஷம் லேட் ஆனதுக்கு இவ்ளோ பேச்சுகளையும் வாங்கிட்டு நிக்கனுமா நான்? இப்படிப்பட்ட வேலையெல்லாம் எனக்குத் தேவையா?” என்று மனம் ஒரு பக்கம் என்னுடைய பொருளாதார நிலையறியாது தன் ஆதங்கத்தைக் கொட்டிக் கொண்டிருந்தது.
மனம் அதீத ரணமுற்றிருக்கிறது என்று தெரிந்தும், அதற்கு ஆறுதலெல்லாம் கூறிக்கொண்டிருக்க நேரமில்லாதவனாய், எனக்காகக் காத்துக் கொண்டிருக்கும் என் மாணவர்களுக்காக ஒரு போலிச் சிரிப்புடன் வகுப்பிற்குள் நுழைந்தேன்.
“வணக்கம்… ஐயா♫♪..”
“அனைவருக்கும் வணக்கம்.. உட்காருங்க,”
“நன்றீ.. ஐயா♫♪..”
உங்களுக்கும் இது ஒரு பாடலாக ஒலித்திருந்தால், நீங்களும் தமிழ்ப்பள்ளியில் பயின்ற ஒருவர்தான் என்பதை நானறிவேன்.
“போன வாரம் வீட்டுப்பாடமாக் கொடுத்த பின்னக் கணக்குகளை வெளியே எடுங்க பார்ப்போம்,” என்று சற்றுமுன் நடந்த அனைத்தையும் மறந்துவிட்டுப் பாடம் போதிக்கத் தொடங்கிவிட்டேன். சர்மிளா எனும் ஒரே ஒரு மாணவி மட்டுமே புத்தகப்பைக்குள் கைவிட்டுத் துழாவத் தொடங்கினாள். மற்றவர்கள் அனைவரும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
“இந்தாங்க சார்..” சர்மிளா நீட்டிய பயிற்சித்தாளை வாங்கிக்கொண்டு, மற்ற 29 மாணவர்களது இடத்திற்கும் சென்று பார்க்கத் தொடங்கினேன். அனைவரது தாள்களிலும் என் கேள்விகள் அனைத்தும் விடைகளுக்காகக் காத்துக் கொண்டிருந்தன. கோபத்தில் சற்றே சஞ்சலம் கலந்திருந்தது. பின்மண்டை இலேசாக வலிக்கத் தொடங்கியது. எல்லாப் பாடங்களையுமே செய்யாமல் வரும் மாமன்னர்களைப் பற்றிக் கவலை கொள்வதில்லை. ஏனென்றால், அவர்களைத் திட்டினால் வழக்கறிஞர்களைச் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும்.
ஆனால், எப்போதும் அனைத்து பயிற்சிகளையும் செய்யும் மாணவர்களும் இம்முறை இப்படிச் செய்தது அதிர்ச்சிக்குரிய விஷயமாகவே பட்டது.
“ஹேய்.. பிள்ளைங்களா.. சர்மிளாவைத் தவிர வேற ஒருத்தர் கூடவா பாடம் செய்யல?”
“சார் பின்னக் கணக்கு ஒன்னுமே புரியல சார்..!”
பள்ளி வளாகத்தைச் சுற்றி நடந்து வந்த துணைத் தலைமையாசிரியர் அவ்வழியே வரும்போது சரியாக அவர் காதுகளில் விழும் அளவிற்கு இக்கூற்றைக் கூறினான் அபிலாஷ். அவரும் இதைக்கேட்டு வகுப்பினுள் நுழைய, என் மனமோ பதைபதைக்கத் தொடங்கியது. அனைத்து மாணவர்களின் தாளையும் பார்த்துவிட்டு என்னருகே வந்து, “நீங்க என்ன பாடம் நடத்தினீங்கன்னு தெரியல.. இது பெற்றோர் வரைக்கும் ஒரு கம்ப்ளெய்ண்ட்-ஆ போயிடக் கூடாது.. அடுத்த முறை இன்னும் கொஞ்சம் நல்லா சொல்லிக் கொடுங்க.. வகுப்பு முடிஞ்சதும் புரிஞ்சதா இல்லையான்னு ஒரு வார்த்தை கேட்டுக்கோங்க.. இதெல்லாம் உங்க நல்லதுக்குத்தான் சொல்றேன். தப்பா எடுத்துக்காதீங்க..,” என்றபடி வகுப்பை விட்டு வெளியேறினார்.
“அடப்பாவிகளா.. போன வாரம் என் சொந்த செலவுல 5 விதமான பீட்சா வாங்கி வகுப்புக்கு எடுத்து வந்து, அதை வெட்டிக் காமிச்சு பின்னம் சொல்லிக் கொடுத்து, கடைசியா ஒரு வாய் கூட நான் சாப்பிடாம மொத்தத்தையும் உங்களுக்கே கொடுத்தேனே.. இப்படிப் பின்னத்துல அடிக்குறதுக்குப் பதிலா நீங்க எல்லாரும் என் கன்னத்துல அடிச்சிருக்கலாம்,” என்று மனம் நொந்தவாறே பாடத்தை நடத்தலானேன். தலைவலி நின்றபாடில்லை; வீட்டிற்குச் சென்று ஓய்வெடுக்க வேண்டும் என்ற மனத்தின் ஏக்கமும் குறைந்தபாடில்லை. இத்தனைக்கும் இப்போதுதான் முதல் பாடவேளை.
“சார்.. அந்த மலேசியக் கொடியைக் கொஞ்சம் தூக்கிக் கட்டீருங்க..”
“சார்.. இந்தத் தேன்மொழி பிள்ளையோட வகுப்பாசிரியர் நீங்கதானே.. அவங்க வீடு மாறிட்டாங்க.. சிஸ்டம்ல அட்ரஸ் மாத்திருங்க..”
“சார்.. அந்த ஒன்றாம் ஆண்டு அட்டெண்டன்ஸ் புக்ல உங்க பெயர் இருக்குற இடத்துலல்லாம் கையெழுத்து போட்டுருங்க..”
“சார்.. இதுவரைக்கும் இங்கிலீஷ்ல நடந்த எல்லா நிகழ்ச்சிகளுக்கும் ஃபோட்டோவோட ரிப்போர்ட் ரெடி பண்ணி இன்னிக்குள்ள அனுப்பிடுங்க..”
“சார்.. அடுத்த வருஷத்துக்கான புது புத்தகமெல்லாம் வந்து சேந்துடுச்சு.. வாசல்ல லாரி நிக்குது.. நீங்க கொஞ்சம் புத்தகம் தூக்க உதவி செய்றீங்களா..? ப்ளீஸ்.. இருக்குற ஒரே ஆம்பள வாத்தியார் நீங்கதான்..”
அனைத்து ஆசிரியர்களும் கூறிய அத்தனை வேலைகளையும் ஒன்றன்பின் ஒன்றாக முடித்தேன். அத்துடன் எனது அன்றைய ஓய்வு நேரமும் முடிந்தது. இந்நாள் இதைவிடச் சிறப்பாகச் செல்லப்போகிறது என்பதை அறியாதவனாய் நானும் பக்கத்துப் பள்ளியின் சிற்றுண்டிச் சாலைக்குச் சென்று எனக்கும் பணமில்லாத மாணவர்கள் சிலருக்கும் உணவுப் பொட்டலங்களை வாங்கி வந்தேன். சற்று நிம்மதியாக உணவருந்திக் கொண்டிருந்த வேளையில், ஆசிரியர் சுதர்சன் என்னருகே வந்தார்.
“சார்.. விஷயம் கேள்விப்பட்டீங்களா.. நம்ம கிருஷ்ணன் சார் மதம் மாறிட்டாராம்!! உங்க வீட்டுல உங்க கூடத்தானே அவர் தங்குறாரு.. உங்களுக்குத் தெரிஞ்சு நடந்துச்சா.. தெரியாம நடந்துச்சா? அவங்க அம்மால்லாம் உங்க கூட ரொம்ப குளோஸ் ஆச்சே.. ஏதும் கால் பண்ணாங்களா? என்னதான் சார் ஆச்சு அவருக்கு?” என்று முதல் பிடிச் சோறு வாய்க்குள் புகுவதற்கு முன்பாகவே அந்தப் பூகம்பச் செய்தியைச் சொல்லிவிட்டுச் சென்றார் சுதர்சன்.
“என்ன சார் சொல்றீங்க?!? கிருஷ்ணன் மதம் மாறிட்டானா?” மூளை ஒருகணம் நின்றுபோனது. அதன் செயல்பாடுகள் மீண்டும் தொடங்குவதற்குள் அவன் அம்மாவிடம் இருந்து அழைப்பு வந்தது. பல நிமிடங்கள் நீண்ட அந்த அழைப்பில் “உங்களை நம்பித்தானே தம்பி ஒரே பிள்ளைய விட்டுட்டு வந்தேன்?” என்று அந்தத் தாய் கேட்ட கேள்வி மட்டுமே நினைவில் இருந்தது. அதற்கு முந்தைய அவரது அழுகையும் நினைவில் இல்லை; பிந்தைய திட்டல்களும் நினைவில் இல்லை. கசங்கிய காகிதமாய் மனம் இருந்த நிலையில் சாப்பிட எண்ணமின்றி உணவை மூடி வைத்துவிட்டு, அடுத்த வகுப்பை நோக்கி நடந்தேன். பிற்பகல் 2 மணிக்கு வீட்டிற்குச் சென்றதும் சாப்பிட்டுக் கொள்ளலாம் அல்லவா?
உடலில் இருந்த மொத்த சக்தியையும் பயன்படுத்திப் பாடம் நடத்திக் கொண்டிருந்தாலும், மனம் மதியம் வீடு திரும்பப் போவதை நோக்கியே நடைபோட ஆரம்பித்தது. பாடத்தை முடித்து ஆசிரியர் அறைக்குள் நுழைந்தால், அங்கு இன்னும் மதம் மாறிய கிருஷ்ணன் கதை ஓடிக்கொண்டிருந்தது.
“சார்.. உங்களுக்கு ஒரு லெட்டர் வந்திருக்கு..” என்று துணைத் தலைமையாசிரியர் ஒரு கடிதத்தை நீட்டினார். அதை நான் பிரித்துப் படிக்கும் முன்னே அதன் உள்ளடக்கத்தைக் கூறினார். “மதியம் 2.30 மணிக்கு உங்களுக்கு டிஜிட்டல் எஜூகேஷன் பத்தி பி.பி.டில ஒரு மீட்டிங் இருக்கு சார்.. மறக்காம போயிட்டு அந்த மீட்டிங்’ல என்ன சொன்னாங்களோ அதையெல்லாம் ஒரு ரிப்போர்ட்டா டைப் பண்ணி ஜி.பி கிட்ட சைன் வாங்கீருங்க,” என்று கூறியவாறு என் முகத்தைக் கூட பார்க்காமல் நடந்து சென்றுகொண்டே இருந்தார். அவ்வளவு பரபரப்பு.
‘எனக்கே என்னைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது’ என்று சொல்வார்களே, அந்த நிலைக்கு வந்துவிட்டேன். மாணவர்கள் அனைவரது பயிற்சிகளையும் திருத்திய பிறகு மை தீர்ந்த சிவப்புப் பேனாவைக் குப்பையில் வீசிவிட்டு, காலியான வயிற்றுடன் பி.பி.டி அலுவலகத்தை நோக்கிச் சென்றேன்.
பசி மயக்கத்தையெல்லாம் தாங்கிக்கொண்டு டிஜிட்டல் எஜூகேஷன் சந்திப்புக் கூட்டத்தில் என் பள்ளியைப் பிரதிநிதித்துக் கலந்துகொண்டேன். 2 மணி நேரமாக அவர்கள் பேசிய மலாய் மொழியை ஒன்றும் புரியாத வலிப்போக்கனாய்க் கேட்டுக் கொண்டிருந்தேன். ஒருவழியாகச் சந்திப்பும் முடிந்தது; வீட்டிற்குச் செல்லும் நேரமும் நெருங்கியது. திடீரென பி.பி.டி கட்டிடத்தின் தகரக் கூரைகள் இசைக்கச்சேரி நடத்தத் தொடங்கின. “ஆஹா.. அடமழை பெய்யுதே.. இதான் சரியான நேரம்.. உடனே வீட்டுக்குப் போய் ஒரு குட்டித் தூக்கம் போட்டா துக்கமெல்லாம் பஞ்சுபஞ்சாப் பறந்து போயிடுமே,” என்றது என் எண்ண ஓட்டம்; கால்களோ என் காரை நோக்கி எடுத்தது ஓட்டம்.
எனது காரில் ஏறி அமர்ந்ததும் குறுஞ்செய்திகளைப் பார்ப்பதற்காகக் கைப்பேசியைத் திறந்தேன். தவறவிட்ட அழைப்புகளின் எண்ணிக்கை 10க்கு மேல் இருந்தது. சரியாக அந்நேரம் பார்த்து அழைத்தான் என் நண்பன். “டேய்.. நான் எத்தன தடவ உனக்குக் கால் பண்றது? இன்ஸ்டாகிராம்பாத்தியா இல்லையா?”
“சபா… இப்போ என்னடா ஆச்சு?” எதற்கும் தயாரான மனநிலையில் தளர்ந்த குரலில் கேட்டேன்.
“டேய்.. தமிழ்நாட்டுல நடந்த நடிகர் வடிவேலு மிமிக்கிரி போட்டிக்கு வீடியோ அனுப்புனியே ஞாபகம் இருக்கா? அதுல நீதாண்டா ஜெயிச்சிருக்கே!! மாமன்னன் படத்தோட ஆடியோ லாஞ்சுக்கு உனக்கு கோல்டன் டிக்கெட் கிடைச்சிருக்குதுடா! இந்தியாவுக்குப் போற வர்ற செலவையும் அவங்களே பாத்துக்குறாங்களாம்! இன்ஸ்டாகிராம் போஸ்டர்’ல உன் பெயரைப் பாத்ததுல இருந்தே உனக்குத் தான் கால் பண்ணிட்டு இருந்தேன். வரப்போற ஒரு வார லீவு’லயே போயிட்டு வந்திடலாம்.. எஞ்சாய்! என்னடா நான் இவ்ளோ பேசறேன்? நீ ஒன்னுமே பேசமாட்றே?”
“அதுக்கு நீ ஒன்னு செய்யனும்டா”
“என்னடா? என்ன செய்யனும் சொல்லு..”
“என்னைப் பேச விடனும்,”
என்றபடி ஒருவழியாக அவன் மூலமாகத் தெரியவந்த அந்த இனிய செய்தியை ஜீரணித்தவாறே அவனுடன் உரையாடிக் கொண்டிருந்தேன். கைப்பேசியை எடுத்து எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தைத் திறந்து பார்த்தேன். எனது அகப்பக்கம் முழுக்க நான் வெற்றி பெற்றதாக வெளிவந்த அறிவிப்புப் பதாகைகள் மட்டுமே இருந்தன. எனது புகைப்படத்தைப் பெரிதாகப் போட்டிருந்ததைப் பார்த்து காருக்குள்ளேயே கண்கலங்கிவிட்டேன். சுமார் 200 பேருக்கு மேல் என்னை டேக் செய்து வாழ்த்து கூறியிருந்தார்கள்! அனைவருக்கும் தனித்தனியாக நன்றி கூற வேண்டும். ஆனால், இப்போது வேண்டாம்; பொறுமையாக வீட்டிற்குச் சென்று கூறிக்கொள்ளலாம் என்றெண்ணியபடி, கண்களைத் துடைத்துக் கொண்டேன்.
வார்த்தைகளால் கூற இயலாத அளவிற்கான ஆனந்தத்தைக் கோலாலம்பூரில் இருக்கும் என் அம்மாவைத் தொடர்பு கொண்டு அவரிடம் பகிர்ந்துகொண்டேன். அவர் மகிழ்வதையும் காதாரக் கேட்டுவிட்டு, இனி ஓய்வெடுக்க வேண்டுமென்ற ஒரே நோக்கத்துடன் காரை வீட்டிற்கு ஓட்டிச் செல்லலானேன். வயிற்று வலியெல்லாம் எந்தப் பக்கம் தெறித்தோடியதோ தெரியவில்லை.
வீட்டை நெருங்கிய நான் வாசலைக் கண்டதும் பேரதிர்ச்சிக்குள்ளானேன். கடும் மழைக்கு ஒதுங்கியதோ என்னவோ தெரியவில்லை. பெரிய முதலையைப் போன்றதொரு தோற்றத்தில் பூதாகரமான உடும்பு ஒன்று என் வீட்டு வாசலில் படுத்துக் கிடந்தது! கொழுத்த அதன் உடலில் வால் மட்டும் அங்குமிங்கும் நெளிந்து கொண்டிருந்தது. இந்த இராட்சத உருவைக் கடந்தால்தான் வீட்டுக்குள் செல்ல முடிந்த நிலையாயிற்று.