நான் உங்களுடன் சிறிது பேசப் போகிறேன்.மலர் மாலைகளின் வாசம், புகையும் ஊதுவத்திகள். இதைவிட்டால்,வேறு நல்ல நேரமோ, சூழ்நிலையோ அமையப்போவதில்லை அல்லவா? உங்கள் முகங்கள் இறுகியிருக்க வேண்டாமே? நீங்கள் இத்தனை காலம் அறிந்த அதே மனிதன் தானே, இன்று என்ன மாறுதல்?
கிட்டத்தட்ட இதைப் போன்ற மழை நாள். லைலாவை நான் சந்தித்த ஆசீர்வதிக்கப்பட்ட வேளை. அது அவளுக்கு நானாக வைத்த பெயர். மரங்களின் மேலே அமைக்கப்பட்டிருந்த குடியிருப்பில் வெளிப்புறத் திறப்பில் அமர்ந்து கொண்டு என் தொலைநோக்கியில் குறிப்பிட்ட இலக்கில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். மலைச் சரிவில் யாரோ உருண்டு கொண்டிருக்கும் காட்சியில் முதலில் பயங்கர வசீகரம் இருந்தது. பிறகு தான் ஆபத்து உறைத்தது. கயிற்றுத்திரளை எடுத்துக் கொண்டு மரக் கிளைகளினூடே அமைக்கப்பட்ட படிகளில் இறங்கி ஓடினேன். பாறை இடுக்குகளிடையே வளர்ந்திருந்த புதர் போன்ற செடியைப் பற்றிக் கொண்டுஅவள் மல்லாந்திருந்த, இரத்தம் உறைய வைக்கும் காட்சி! இன்னும் என் குருதி உறைய ஆரம்பிக்கவில்லை என உணர்வோடுகிறது. கயிற்றினை பெரிய மரத்தில் பிணைத்து என் இடுப்பைச் சுற்றிக் கட்டிக்கொண்டு நான் சரிவில் இறங்கினேன். நீங்கள் எல்லோரும் சொல்வது போல் மீதியெல்லாம் வரலாறு. அவளை, லைலா, லைலு என்று என்னவெல்லாமோ கூப்பிட்டிருக்கிறேன். அவள் குடும்பம் அவள் இறந்துவிட்டதாக எண்ணியிருக்கக்கூடும். யாருமே அவளைத் தேடி வரவில்லை. அவளுக்கும் அங்கு திரும்பிச் செல்ல எண்ணமில்லை எனத் தோன்றியது. ’நினைவில்லை, நினைவில்லை’ என்றே அவள் மொழியில் சொல்லிக்கொண்டேயிருந்தாள். கன்னடமும், துளுவும் கலந்திருப்பது போல் ஒலித்தது அது. அவள் குடும்பத்தைத் தேடுவதை விட இரவு நேரத்தின் வான ஆய்வு எனக்கு மிகவும் முக்கியம். மனிதர்களின் உடல்கள் பேசும் ஆதி மொழி மட்டும் எங்கள் இருவருக்கும் மிகவும் பரிச்சயமாகிவிட்டது.
இப்படி ஓடிய ஆறு மாதங்களுக்குப் பிறகு ஒரு காட்டாளன் எங்களைக் கண்டுபிடித்தான். நான் அன்று மலையிலிருந்து இறங்கியிருந்தேன். என் ஆராய்ச்சியின் பகுதிக் கட்டுரைகளை எங்கள் குழுவிற்கு அனுப்பவும்,அவர்களிடமிருந்து வந்த தபால்களைப் பெற்றுக் கொள்ளவும், வீட்டுச் சாமான்கள் வாங்கவுமான நாள் அது. மரப்படிகளில் ஏறுகையில் கிளையில் மான் தோலால் செய்யப்பட்ட ஒரு சட்டை தென்பட்டது. நான் உள் நுழைகையில் அவர்கள் சிரித்துச் சிரித்துப் பேசியபடி மிக அருகில் உட்கார்ந்திருந்தார்கள். என்னைப் பார்த்தவுடன் வலது காலை ’ட’ வடிவில் மடித்து இடது முழங்காலை பின்பக்கம் ஊன்றி நெற்றியில் வலது கரத்தை கீழ் நோக்கி வளைத்து அவன் வணங்கினான். கட்டுமஸ்தான ஆள். பெண்களைப் போல் மயிர் வளர்த்து சுழட்டிக் கொண்டையாக்கி முடிந்திருந்தான். இடையில் கச்சிதமான தோலாடை. கிட்டத்தட்ட ஆறு அடி மூன்று அங்குலமாவது இருப்பான். பளபளவென்று பட்டுக் கறுப்பு நிறம்.சதை திரட்சிகள் கண்டு கண்டாக விண்ணென்றிருக்க, மார்பு அகன்று,வயிற்றருகே குறுகியிருந்தது. இவன் ஓடுகையில் காட்டின் அனைத்து வனப்புகளும் இணைந்து ஓடுவது போல் அழகாக இருக்கும் என எனக்குத் தோன்றியது. முதல் சந்திப்பிலேயே நான் அவன் பால் ஈர்க்கப்பட்டேன். ஒரு ஆணின் உடலில் இத்தனை கச்சிதமான வடிவமைப்பு இயலும் என்பதே வியப்பு. அதை உணர்ந்து அறியும் ஆவல் என்னை அவனை நோக்கி நாளடைவில் தள்ளியது.
லைலா முதலில் என் தடுமாற்றத்தைக் கண்டு சிரித்தாள்; பிறகு திகைத்தாள்; அழுதாள், சண்டையிட்டாள். இங்கே ஒன்று சொல்ல வேண்டும். அவள் எளிய மலைவாசி. உணவு, உடை, பழக்கவழக்கம் எல்லாவற்றையும் விரைவில் கற்றுக் கொண்டாள். ஆனால்,ஏனோ,அவள் என் தோழமையைப் பெறவில்லை. மூர்க்கத்தனமான விளையாட்டுக்கள் எனக்கும் பழக்கம் தான்; ஆனால், அதை மட்டுமே என்னால் விளையாட முடியவில்லை. எங்கள் புரிதல்கள் எங்களுக்குப் புரியாமல் ஆகிக் கொண்டிருந்தன.
அவனை நான் ‘மலையா’ என்று அழைத்தேன்.அவன் பேச்சும் அவ்வளவாகப் புரியவில்லை; ஆனால், அவன் வேகத்திற்கு ஈடு கொடுப்பது மிகக் கடினம். என் மனதை அவன் எவ்வாறோ புரிந்து கொண்டான். எனக்கே என்னை நம்பமுடியவில்லை. அவன் பாதுகாப்பு என்னைச் சார்ந்ததில்லை என்பதில் எனக்கு விடுதலை கிடைக்கும் எனத் தோன்றியிருக்கலாம்.
ஒரு சபிக்கப்பட்ட நாளில் நாங்கள் பெங்களூரு வந்தோம். நாங்கள் மூவரும் தான். எங்கள் விசித்திரக் கலவை பல பார்வைகளை ஈர்த்தது.எதையும் பொருட்படுத்தாத நான், விசில் ஒலிகளையும், அபத்தமான கமென்ட்களையும் கேட்டு விலகி விரைந்து நடந்தேன். சட்டென்று நடை மேடையிலிருந்து குதித்து இருப்புப் பாதையை நான் கடப்பதைப் பார்த்த அவர்கள் கைச்சுமையுடன் குதித்தார்கள். கண்களுக்குத் தெரியாத குருட்டு வளைவில் வந்த ரயில் லைலாவை, மலைச் சரிவில் பிழைத்த அவளை, மூர்க்கமாக இழுத்துச் சென்றது. மலையன் தப்பி விட்டான்; ஆனால் அவன் அன்று என்னைப் பார்த்த பார்வை ’கொலைகாரா’ என்றது. படித்தவனாக இருந்தால் சந்தேகக் கேஸாவது போட்டிருப்பான்; காட்டில் இருந்தால் கொன்றேயிருப்பான். நான் என்ன வேண்டுமென்றா செய்தேன்? என்னருகே இருவருமே நிற்கிறார்கள். அவர்கள் இதை உணரட்டும். இருவரும் சேர்ந்து ஆடிய காம விளையாட்டுக்கள் எனக்கும் தெரியும் என்று இன்று அவர்களுக்கு உணர்த்துகிறேன். ஐ, திங்க், ஐ கேன் மேக் தெம் ஃபீல்.
ஓ, இவன் வந்திருக்கிறானா? கையில் மாலை வேறா? ’எங்கிருந்து திருடினாய் அந்த ஐடியாவை?’ என்று நேரே கேட்டவன் இவன். ஒருக்கால் உள்ளத்திற்குள் கொண்டாடுகிறானோ? இவன் குடும்பத்துடன் வந்திருக்கிறான். அவன் மனைவிக்கு நான் ஒரு ஜீனியஸ். கற்பூரம் ஏற்றாதது ஒன்று தான் குறை! அதுவேகூட இவன் புகைச்சலுக்குக் காரணமாக இருந்திருக்கலாம். அப்படியே இருந்தாலும் இதில் என் தவறு ஒன்றுமில்லை என இவனுக்கு இப்பொழுது உணர்த்துகிறேன். அன்பான அவன் மனைவியே, திறமைகளை ஊக்குவிப்பதை இவனுக்காக நிறுத்தி விடாதே.
வாங்க, தீபக் நரசிம்மன்! ’கண்ணிலே நீர் எதற்கு?’ என்று பாடத் தோன்றுகிறது எனக்கு. மன்னிக்கவும், நீங்கள் இளையவர், உங்கள் காலத்துப் பாடல்கள் எனக்குத் தெரியவில்லை; ஓ, பாடல் வரியேயில்லாமல் இசைப்பது தான் உங்கள் ஜெனரேஷன். நீங்கள் எரிமீன்கள், விண்மீன்கள்’ சுழல் பேதம், விசை ஈர்ப்புக் குறைப்பு, கருந்துளைகள் இந்த ஆராய்ச்சியை நிறுத்திவிடாதீர்கள்.
சின்னப்பொண்ணு, கணிணிகளைத் துடைப்பதாகப் பாவனை செய்யாமல் ஒழுங்காகச் செய்துவிடு.
அஹமது, யார் உன் பெயரைக் கேட்டாலும் ‘அஹமது இந்தியன்’ என்று சேர்த்தே சொல்வாயே! இனியும் சொல், இனிக்கச் சொல்.
செபா, என் கார் உனக்குத் தான். என்னால முடியல, உன்னால குடிக்கறதை நிறுத்த முடியுமான்னு பாரு
இந்த மலர்மாலைகளை தயவு செய்து எடுத்து விடுங்கள்; மட்டமான ஊதுவத்திகளையும். என்னோட பாடி ஸ்பிரே மட்டுமே போதும்;அது என்னுடையது.
நன்றாக மசித்து, புளிக்காத கெட்டித்தயிரில் கொஞ்சம் போல் வெண்ணை சேர்த்து, மாவடுவுடன் அம்மா எனக்கு ஊட்டிவிடுவாள் இனி. மஞ்சளில் பச்சை பார்டர் போட்ட அக்காவின் பாவாடையைக் கட்டிக் கொண்டு நான் எடுத்துக் கொண்ட புகைப்படம், பதின்ம வயதில் யார் கண்களிலும் படக்கூடாதென நான் ஒளித்து வைத்த அந்தப் படம், அதை நான் அச்சமில்லாமல் இப்போது வெளிப்படையாகப் பார்க்க முடியும். ’கேதாரத்த இப்படிப் பாட இனி ஒருத்தன் பொறந்து வரணும்னு’ உருகின அப்பாவோட இசையில் இனி அழ முடியும். பாலாஜியோட சேர்ந்து நான் தூர் வாரிய குளங்களை, ஏரிகளை, தனிப்பட்ட முறையில் நான் படிப்பித்த ஏழை மாணவர்களை, அவர்கள் என்னை ஆராதிப்பதை கர்வமில்லாமல் பார்க்க முடியும்.
இத்தனை பேர்களிலும் ஒட்டாமல் தனியே நிற்கும் அவள் தான் என் வாழ்க்கையின் பொருளை என்னுடைய ஐம்பத்தி ஐந்தாவது வயதில் குறிப்பால் சொன்னவள். அவளுக்குக்காகத் தான், அவளைப் போன்றோர்களுக்காகத் தான் நான் என் ஆய்வினை மக்கள் நலம் பொருட்டுத் துவங்கி வெற்றியும் பெற்றேன்;
வானத்தையே பார்த்துக் கொண்டிருந்த நான் மண்ணைப் பார்க்க நேர்ந்ததும் இந்த மீனாவால் தான். அன்று நல்ல உச்சி வெயில் நேரம். கள ஆய்வில் பாலாஜிக்காக நான் பங்கேற்றிருந்தேன். மணலாடி கிராமத்தை நோக்கி நான் சென்று கொண்டிருந்த போது என் இரு சக்கர வாகனம் நின்று விட்டது. வெய்யில் காய்கிறது, வாகனம் இயங்கவில்லை, நா வறண்டு தண்ணீர், தண்ணீர் என்கிறது. பாலாஜியைக் கண்டபடி திட்டத் தோன்றியது. அப்பொழுதுதான் அவள் வந்தாள்; வயது இருவது இருக்கும்; வயிற்றில் சுமை, இடையிலும், தலையிலும் நீர்க்குடங்கள். என்னைப் பார்த்தவள் தயங்கி நின்றாள்; ”என்னங்க, தண்ணி வோணுமா?” என்றாள். நான் ஆவலாதியுடன் குடித்துவிட்டு ‘தேங்க்ஸ்’ என்றேன்; இலேசாகச் சிரித்தாள். ’’வண்டி நின்னுடுச்சா,மூணு கல்லு தள்ளோணும், நானு மச்சான் இருந்தா கூட்டியாரேன்” என்றாள். ‘இல்லம்மா, உன் மச்சான் பக்கத்துல இருந்தார்னா நான் இத தள்ளிக்கிட்டே வரேன், நீ திரும்ப இங்க வர வேணாம்’ என்று தள்ளத் தொடங்கினேன். சில அடிகள் கூட முடியவில்லை, சரியான மேடு, வியர்த்து வியர்த்துக் கொட்டியது, ஆனால் அவளோ, மூன்று சுமைகளோடு அனாயாசமாக நடந்தாள். ’வண்டி நிக்கட்டம், கூட வாங்க, மச்சானைக் கூட்டிக்கிட்டு வந்து அப்பால எடுத்துக்கலாம்’ என்றாள். என் பிரச்சனையை அவர்கள் தீர்த்து வைத்தார்கள். மீண்டும் ‘தேங்க்ஸ்’ என்றேன்.
அவள் சிரித்துக் கொண்டே சொன்னாள் ’என் நோவு இந்த தேங்க்ஸ்ஸால தீருமான்னு சொல்லுங்க; ஒவ்வொருத்தியும் தண்ணி தூக்கியே வாழறோம். என்னத்தச் சொல்ல?’ என்றாள். எனக்கு பொட்டில் அடித்தது போல் வலித்தது. இவர்களுக்கு என்று என் அறிவு ஏதாவது வகையில் பயன்பட்டிருக்கிறதா? நீர் எளிதில், சிறிய செலவில் கிடைக்க என்ன செய்யலாம் என சிந்தனை செய்தேன். காற்றின் ஈரப்பதத்திலிருந்து நீரைக் கொணர்ந்தேன். அதைச் செயல்படுத்தும் முன் காலம் முந்திக் கொண்டது.
இவர்கள் அவசரப்படுகிறார்கள். நீங்களும் அவசரத்தில் தான் இருப்பீர்கள். என் சொத்துக்கள் என்னவாகும் என்ற கவலைகள் மற்றும் ஆவல்கள் உங்கள் அனைவருக்கும் இருக்கிறது. எனக்கும் ஒரு கவலை இருக்கிறது; என் சொத்துக்கள் மூலம் என் எண்ணங்கள் செயலாகப் போகிறதா, அல்லது உங்கள் எண்ணங்களா?
பேசப்பேச நிறைய எஞ்சுகிறது. ஆனாலும், என் டைரியில் இருக்கும் குறிப்பினைப் பார்த்தீர்களானால் நன்றாகத் தான் இருக்கும். காலணிகள் அற்றோ, தேய்ந்த காலணிகளோடோ தண்ணீரைத் தேடி அலையும் மக்களுக்கான என் தீர்வு அதில் இருக்கிறது. காற்றின் ஈரப்பதத்திலிருந்து எளிய முறையில் நீரைப் பெறும் செயல் முறை என் கணிணியில் இருக்கிறது.
சில நேரங்களில் இரக்கமற்ற வாழ்வை வாழ்ந்த நான் நீரில் தானே என் பிழையை ஈடு செய்ய முடியும். இந்த வார்த்தைகள் உங்களுக்குக் கேட்கிறதா? இது மட்டும் கேட்டாலே போதும்.