சிறுகதைகள்
Trending

உயக்கம்…

அரசன்

முப்பது வருடங்களுக்கு மேலாக காடுகளில் ஆடு மேய்த்தே தளர்ந்து போன மனிதர் சாமி. உகந்த நாயகன் குடிக்காட்டைச் சுற்றியுள்ள வறண்ட காடுகளில் சாமியின் காலடித்தடம் படாத நிலமில்லை. கையில் தூக்குச்சட்டியும், தோளில் அலக்கையையும் வைத்துக்கொண்டு முன்னாடி இவர் நடந்தால், சொல்லுக்கு கட்டுப்பட்டது போல் இவரைப் பின்தொடரும் ஆடுகள். வெயிலிலும், மழையிலும் அலைந்த அலைச்சலை மேல்சட்டைப் போடாத உடம்பு சொல்லும். அவரின் பழுப்பேறிய கண்களில் எப்போதும் ஒரு சாந்தமிருக்கும்.

“எதுக்கு இந்த வேவாத வெயிலுல கெடந்து இப்படி அல்லல் படுற, பேசாம எல்லா ஆடுவோளையும் செந்துறை சாயுப்புகிட்ட புடிச்சிக் கொடுத்துட்டு, நிம்மதியா வூட்ல குந்தி கெடக்கலாம்ல?” என்று ஊர் சனங்கள் கரிசனப்பட்டுக் கேட்டாலும்,

“காட்டுலையே சுத்துன ஒடம்பு, வூட்ல ரெண்டு நாளு தங்குச்சுன்னாலும், கூட்டுல இருந்து உசுரு போயிரும், இன்னும் எத்தன காலமோ?… நட, ஒடையா இருக்கும் போதே கண்ண மூடிக்கிட்டா யாருக்கும் எந்த தொந்தரவுமில்லாம போயிரும்… பாப்போம் எந்தலையில என்ன எழுதியிருக்குன்னு” என்று ஒரு மழுப்பலான பதிலைச் சொல்லிவிட்டுக் கடந்து போவார் சாமி.

எப்போதும் அவரின் பட்டியில் இருபது ஆடுகளுக்கு குறைவில்லாமல் இருக்கும். பொழுது போகாமல் இருந்த நேரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் இரண்டு ஆடுகளை வாங்கி வந்து வளர்க்கத் துவங்கி பின்பு அதுவே பிழைப்பாகிவிட்டது. ஆடுகளைக் கவனித்துக் கொள்ளும் அழகே தனி. வாரம் ஒரு முறை ஏரிக்குள் இறக்கிவிட்டு குளிப்பாட்டிவிடுவார். கடலைச்செடி, முஷ்டக்கொடி, வேப்பங்குழை போட்டு திங்கடித்து எப்போதும் வனப்பாகவே இருக்கும் இவரின் ஆடுகள். வியாபாரிகள் கண் கொத்தி பாம்பாக காத்திருந்து இவரின் ஆடுகளை வாங்கிப்போவார்கள். பண்டிகை நாட்களில், ஊரில் இவரது ஆட்டைத்தான் கறி போடுகிறார்கள் என்று தெரிந்தால் போதும் ஊர்சனம் விடியகாலையில் இருந்தே காத்திருந்து கறி வாங்கிச் செல்லும் அளவுக்கு ஆட்டின் வளர்ப்பு இருக்கும். இத்தனைக்கும் ஒரு துண்டு கறியைக்கூட உண்ணாத சைவக்காரர்.

ஊரில் யாருடைய பிரச்சினையிலும் மூக்கை நுழைக்கமாட்டார். யாரிடமும் அதிர்ந்து பேசிக் கேட்டதில்லை ஊர்சனம். யாராவது பேச்சுக் கொடுத்தால்தான் பேசுவாரே தவிர, தானாக யாரிடமும் பேசிப் பழக்கமில்லை. மேய்ச்சல் இடங்களில் ஊர்சனம் யாரைப் பற்றியாவது புறம் பேசுவது தெரிந்தால் மெல்ல எழுந்து தனியாக ஆடுகளை ஓட்டிக்கொண்டு சென்றுவிடுவார்.

“இந்த தள்ளாத வயசுலயும் இந்த மனுசனுக்கு எதுக்கு இந்த ஆவலாதி… பொண்டாட்டி, புள்ள இருக்குறவனே வேலைக்கி போவாம ஒக்காந்து திங்கணும்னு நெனக்கிற ஊர்ல, இவரு மட்டும் ஏன் இப்படி கெடந்து அடிச்சிக்கிறாரு” என்று சிலர் சாமியை முன்னே விட்டு பின்னே புறம் பேசுவது காதில் விழுந்தாலும் அதைக் கண்டுகொள்ளாமல் தானுண்டு தன் பிழைப்புண்டு என்று இருப்பவர்.

வாழ்வின் மீது எந்த பிடிமானமுமின்றி வாழ்ந்து வரும் மனிதர். ஊரின் நல்லது கெட்டதுகளில் ஒரு மூலையில் அமர்ந்து நடப்பதை வேடிக்கைப்பார்த்துவிட்டு எந்த சலனமுமின்றி சென்று விடுவார்.  ஆடுகளின் மீதுள்ள அக்கறை கூட தன்னுடைய வாழ்வின் மீது செலுத்தியதாக தெரியவில்லை.

காலை ஐந்துமணிக்கு எழுந்து பட்டியைக்கூட்டி புழுக்கைகளை அள்ளி குடிசைக்குப் பின்புறம் உள்ள குப்பைக்குழியில் கொட்டிவிட்டு, ஊருக்கு வடக்கே இருக்கும் பூலான்குளத்தின் துறைப்பாட்டை பொடிமணலை அள்ளி பல் துலக்கிவிட்டு அப்படியே குளத்தில் முங்கி ஒரு குளியலைப்போட்டுவிட்டு கரையேறுகையில் இளம்வெயில் மெல்ல பரவிக்கொண்டிருக்கும். கரையோரத்தில் இருக்கும் பிள்ளையார் கோவிலை நோக்கி ஒரு கும்பிடு போட்டுவிட்டு நடந்தால் தர்மலிங்கம் கடையில் தான் நிற்கும் கால். தேநீர் குடித்துவிட்டு அங்கேயே அமர்ந்திருப்பார். யாராவது தன் வயது நண்பர்கள் வந்தால் அவர்களிடம் ஏதாவது பேசிக் கொண்டிருந்துவிட்டு ஒன்பதுமணி வாக்கில் தனது பங்காளிவழி தம்பியான பழமலை வீட்டுக்குப்போவார். கடந்த பத்து வருடங்களாக மூன்றுவேளை உணவும் பழமலை வீட்டில்தான்.

ஒருதடவை உடம்புக்கு முடியாமல் செந்துறை அரசு மருத்துவமனைக்கும், வீட்டுக்கும் அலைந்து கொண்டிருந்த சாமியைப் பார்த்த பழமலை,

“ஏண்ணே, இப்படி தனியா கெடந்து தவிக்கிற… எங்களுக்கு பொங்குறதுல ஒரு கை சேத்து பொங்கினா ஒங்களுக்கும் ஆச்சி.. கடையில திங்குறதுனால தான் ஒடம்புக்கு இப்படி கேடு வருதுன்னு” கேட்க,

“ஒனக்கு ஏன்டா வீண் செரமம்?, எம்பாட்டை நான் பாத்துக்குறேன்” என்று சாமி சொல்ல,

“ஒங்களுக்குன்னு தனியாவா ஒல வைக்க போறோம், இத்தன நாள் கெடந்து அல்லல் பட்டது போதும்” என்று பழமலை பிடிவாதமாகச் சொல்ல…

“இத்தன நாள் தனிக்கட்டையா கெடந்துட்டேன், இப்படியே இருந்துட்டு போறேனே”

“ஏண்ணே, எங்க மேல ஏதும் கோவமா?”

“என்னைக்குமில்லாம புதுசா நான், ஒன்னோட வூட்டு முன்னால வந்து நின்னா, என்னோட சொத்த சேர்த்துக்கலாம்ன்னு நெனைக்கிறான்னு  ஒன்னையத்தான் ஊருசனம் தப்பா நெனைக்கும், அதுக்காகத்தான் சொன்னேனே தவிர, ஓம் மேல எனக்கு என்னா கோவம்?”

“இந்த ஊருக்காரன் என்ன வேணும்னாலும் நெனச்சிக்கிட்டு போகட்டும், அதப்பத்தி எனக்கு கவலையில்ல, நீ தயங்காம வூட்டுக்கு வந்து சாப்புட்டு போண்ணே”

“…………………………………………………”

“என்னண்ணே யோசிக்குற, வூட்டுப்பக்கம் வரதுக்கு ஒனக்கு சங்கடமா இருந்தா சொல்லு, பசங்கள எடுத்தாந்து தர சொல்றேன்”

“எனக்கு என்னடா சங்கடம், இத்தன பேரு சொந்தமுன்னு இருந்தும், வழியில கண்டா கூட ஒரு வார்த்த என்னான்னு கேக்காம போறவனுங்களுக்கு மத்தியில நீ, இப்படி சொல்றதே மனசுக்கு நிம்மதியா இருக்குடா… நானே வாரேன்”

“சரிண்ணே” என்று சந்தோசமாக போனார் பழமலை.

பழமலையின் குடும்பமும் கொஞ்சம் பெரியகுடும்பம் தான். சொல்லிக்கொள்ளும்படி நில புலமிருந்தாலும் அடுத்தவர்கள் சொத்துக்கு ஆசைப்படும் ஆட்களில்லை. அதிலும் பழமலை தன்னுடைய சுய சம்பாத்தியத்தில் ஐந்துகாணி நிலத்தினை வாங்கி அதில் பெரிய கிணறு வெட்டி அதை வைத்து விவசாயம் செய்துவரும் மனிதர். சாமியின் நிலையைக் கண்டு பரிதாபம் கொண்டாரே தவிர, அவருடைய சொத்துக்கு ஆசைப்பட்டு அல்ல. அது சாமிக்கு தெரிந்தாலும் ஊர் வாயினை மூட முடியவில்லை. ஆளாளுக்கு ஒரு விதத்தில் பேசிக்கொண்டாலும் எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் இருந்தனர் சாமியும், பழமலையும்.

================

முனியன் – சரோஜா தம்பதியினருக்கு பிறந்த ஒரே வாரிசு தான் சாமி. அவருடைய பதினெட்டாவது வயதில் வயலில், நாற்று விட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் பெய்த மழைக்கு, கூலி ஆட்களோடு அருகில் இருந்த புளியமரத்தின் அடியில் ஒதுங்கியிருக்கும் போது, விழுந்த இடியில் எட்டுபேர் நிகழ்விடத்திலையே உடல் கருகி இறந்து போயினர், அதில் சாமியின் பெற்றோர்களும் அடக்கம். அதன்பிறகு தனிக்கட்டையாகச் சுற்றி வந்து கொண்டிருந்த சாமிக்கு, உறவினர் ஒருவர் பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தார்.

திருமண வாழ்வும் நன்றாகத்தான் சென்றுகொண்டிருந்தது. மூன்று வருடங்களாக கரு தாங்காமல் இருந்து, அந்த ஆண்டுதான் சாமியின் மனைவி உண்டாகியிருந்தாள். ரொம்ப சந்தோசமாக இருந்தவருக்கு பிந்தியும் இரண்டு வாரத்தில் கரு கலைந்து போனச் செய்தி பேரதிர்வை கொடுத்தது. வதங்கிக் கிடந்தவளுக்கு வைத்தியச்சி ஆறுதல் சொல்லி தேற்றிவிட்டு,

“திங்க கூடாதத தின்னதுனால தான் கரு கலஞ்சி போச்சி, ஒன்னும் கவலப்படாத சாமி, ஓம் மனசுக்கு அந்த ஆண்டவன் எந்தக்கொறையும் வைக்க மாட்டான். சீக்கிரமே நல்லது நடக்கும்” என்று போகிற போக்கில் சாமியிடமும் சொல்லிவிட்டுப் போனாள் மருத்துவச்சி.

அன்றிலிருந்து கணவன் மனைவிக்குள் நித்தம் சண்டை மூளத் துவங்கியது. இருவரின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் வந்து சமாதானம் செய்து வைத்துவிட்டுப் போவார்கள். இப்படியே தொடர்ந்து கொண்டிருந்த சண்டை ஒரு பெருமழைநாள் காலையில் சாமி, சோர்ந்து சுருங்கிய முகத்தோடு திண்ணையில் அமர்ந்து இருந்ததைக் கண்ட தெருசனம் வந்து என்ன?, ஏது என்று விசாரிக்கையில் இரவோடு இரவாக சாமியின் மனைவி வேம்பு வீட்டை விட்டுப்போனச் செய்தி  ஊருக்குத் தெரியவந்தது.

“எங்கயும் போயிருக்க மாட்டா, அவ பொறந்த வூட்டுக்குத்தான் போயிருப்பா… கொஞ்சநாள் ஆச்சுன்னா அவளே மனசு மாறி வருவா.. நீ எதையும் மனசுலப்போட்டு கொழப்பிக்கிட்டு இருக்க வேணாம்” என்று ஒவ்வொருவரும் ஆளுக்கொரு விதமாக சாமிக்கு ஆறுதல் சொல்லிவிட்டுப் போனார்கள்.

பத்துநாள் கழிந்து எதேச்சையாக மகளைக் காணவந்த, வேம்பின் அப்பா அம்மாவிற்கு, அவள் வீட்டை விட்டுப் போன செய்திக்கேட்டு விலுவிலுத்து நின்றார்கள். எதையெதையோ சொல்லி வேம்பின் ஆத்தாக்காரி மண்ணில் புரண்டு ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்க…

வேம்பின் அப்பா,

“நீயெல்லாம் ஒரு மனுசனா? பொண்டாட்டி வூட்ட வுட்டு போயிட்டான்னா அவ எங்க போயிருக்கா?, என்ன பண்றா? அவளுக்கு என்ன ஆச்சின்னு தேட மாட்டியா?” என்று சாமியிடம் கோபத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார்.

அவரின் வார்த்தைக்கு எந்தப்பதிலும் பேசாமல் சாமி அமைதியாக நின்று கொண்டிருக்க, அதற்குள் ஊர் சனமே சாமியின் வீட்டின் முன்பு திரண்டிருந்தது.

“என்னடா நான் கேக்குற எந்த கேள்விக்கும் பதில் சொல்லாம செல போல நிக்குற?” என்று கேட்டுக் கொண்டே சாமியின் கன்னத்தில் அறைய அடி, பல்லில் பட்டு உதடுகிழிந்து இரத்தம் சொட்டச் சொட்ட நின்று கொண்டிருந்தார் சாமி.

அடித்துக் கொண்டிருந்த வேம்புவின் அப்பாவை விலக்கிவிட்டுட்டு, “யோவ், என்னய்யா ஓம்பாட்டுக்கு பேசிக்கிட்டு இருக்கும் போதே கைய நீட்டுற.. கேக்க ஆளில்லங்குற திமிருல கைய வைக்கிறியா?” என்று கோபத்துடன் கேட்டார் சாமிக்கண்ணு நாட்டார்.

“நீங்களே இந்த ஞாயத்த கேளுங்க… எம்பொண்ணு வூட்ட வுட்டு போன மறுநாளே எங்களுக்கு தகவல் அனுப்பியிருக்கனும்ல.. ஏன் சொல்லல?… சனியன் வுட்டுதுன்னு அப்படியே கைய கழுவிடலாம்னு நெனச்சானா இவன்” என்று வேம்புவின் அப்பா கேட்க,

“என்ன ஞாயத்த சொல்ல சொல்ற?… ரெண்டுநாள் ஆச்சின்னா நானே ஓங்கிட்ட வரலாமுன்னு தான் இருந்தேன்” – நாட்டார்.

“என்னங்க நீங்களே இப்படி சொன்னா எப்படி? புள்ள வூட்ல இல்லங்குற சேதிய எங்களுக்கு சொல்லியிருந்தா, நாங்களாவது தேடி பாத்திருப்பம்ல, இப்ப பத்துநாள் ஆச்சிங்குறீங்க.. எம்புள்ள எங்க போனாளோ? அவளுக்கு என்ன ஆச்சோன்னு தெரியலையே” என்று விடாமல் ஆத்திரத்தில் பேசிக்கொண்டு இருந்த வேம்பின் அப்பாவை மறித்து,

“அவன் சொல்லாதது தப்புதான்… நீ, இப்ப இவ்வளவு பேசுறியே… ஆயிரந்தான் சண்டையா இருக்கட்டும், அதுக்காக தொட்டு தாலி கட்டுனவங்கிட்ட சொல்லிக்காம வூட்ட வுட்டு போவாளா ஒரு பொம்பள?” என்று சாமிக்கண்ணு கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அமைதியானார் வேம்புவின் அப்பா.

“ஓம்புள்ள வூட்ட வுட்டு போயி பத்து நாளாச்சி… ஒன்னோட வூட்டுக்கும் வரலங்குற… இங்கயும் திரும்பி வரல.. அப்போ அவ எவங்கூட ஓடிப்போனாளோ? யாருக்கு தெரியும்?” என்று காட்டமாக சாமிக்கண்ணு நாட்டார் சொன்னதைக் கேட்ட கூடியிருந்த மொத்த சனமும் ஒரு கணம் அதிர்ந்து போனது.

“அண்ணே, அவரே புள்ளைய காணோமுங்குற தவிப்புல இருக்குறாரு, அவருகிட்ட போயி இப்படியா பேசுறது, கொஞ்சம் பொறுமையா பேசுண்ணே” என்று அமைதிப்படுத்தினார் கூட்டத்தில் நின்றுகொண்டிருந்த வடக்குத்தெரு மேகநாதன்.

“என்னடா பொறுமையா பேச சொல்ற.. வந்த மனுசன் என்ன, ஏதுன்னு கேக்காம, இவம்பாட்டுக்கு நம்ம பயல போட்டு அடிச்சி கொல்லுவான், அத வேடிக்க பாத்துகிட்டு போவ சொல்றியா?” என்று மேகநாதனிடம் எகிறினார் நாட்டார்.

சாமியின் கண்களில் இருந்து கண்ணீர்தான் வந்ததே தவிர, எந்த ஒரு வார்த்தையும் பேசாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தார்.

“கட்டிக்கிட்டு வந்த புள்ளைய எங்கடா காணோம்னு கேட்டா, என்னென்னமோ கத கட்டி வுடுறீங்கய்யா… நல்ல ஞாயமான ஊருய்யா இது…” –என்று வேம்பின் அம்மா சொல்ல,

“என்னத்த எங்கள சொல்ல சொல்ற… ஒழுக்கமா புள்ளைய வளக்க தெரியல… இங்க வந்து பொலம்பிக்கிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்… தேடி கண்டுபிடிச்சா சேதி சொல்லி அனுப்புறோம், அப்பவந்து என்ன செய்யணுமோ அத செய்யுங்க..” என்று படபடத்தார் நாட்டார்.

“இவனுக்கு தெரியாம அவ எங்கயும் போயிருக்க மாட்டா? இவன் வாய தொறந்தா தான் எல்லா உண்மையும் வெளிய வரும்” என்று வேம்பின் அப்பா, சாமியைப் பார்த்துக் கேட்க,

“அவன என்னத்தையா சொல்ல சொல்ற… மூணு வருசம் கழிச்சி புள்ள உண்டாயிருக்கேன்னு வாய கட்ட துப்பில்லாம கண்டதையும் தின்னு புள்ளைய கலைச்சிட்டு, வூட்ட ஓடுனவள பத்தி இவங்கிட்ட கேட்டா இவன் என்னத்த சொல்லுவான்?” – நாட்டார்.

“…………………………………………..”

“ஒனக்கு என்னடா தெரியும், நீதான் ஓம்பொண்டாட்டிய அனுப்பி வச்சியா, அந்தாளு என்னமோ ஒனக்கு தெரியும், ஒனக்கு தெரியும்னு சொல்லிக்கிட்டு இருக்கான்” என்று சாமியைப் பார்த்து நாட்டார் கேட்க,

“சண்ட போட்டது உண்மதான், ஆனா அவ எப்போ போனான்னு எனக்கு தெரியாதுண்ணே” என்று சாமி உடைந்த குரலில், நாட்டாரிடம் சொன்னார்.

“இத்தன வருசத்துல, ஒரு சண்ட சச்சரவுன்னு பஞ்சாயத்து முன்னாடி நிக்காத பயல, ஒம்பொண்ணு மானத்த வாங்கிட்டு போயிருக்கா? அவள தேடிப்புடிச்சி ஒதைக்குற வழிய பாருங்க.. இங்கவந்து சலம்பிக்கிட்டு நிக்குறீங்க” என்று கூறிவிட்டு நடையைக்கட்டினார் நாட்டார்.

“நல்ல ஊருங்க இது, நல்ல சனம்… எங்களுக்கும் சனம், சாதின்னு இருக்கு… அவங்கள கூட்டிக்கிட்டு வந்து பேசிக்கிறேன்” என்று கூறிவிட்டு அழுது அரற்றிக்கொண்டிருந்த மனைவியை எழுப்பிக் கூப்பிட்டுக்கொண்டு போனார் வேம்புவின் அப்பா.

யாரையும் ஏறிட்டுப் பார்க்காமல் திண்ணையில் குந்தியிருந்த சாமியை, திரண்டிருந்த ஊர்சனம் பலவிதமாக ஆறுதல் கூறியபடி மெதுவாகக் கலைந்துபோயினர். கொதிநீரில் விழுந்த புழுவினைப்போல் உள்ளுக்குள் வெந்து கொண்டிருந்தது சாமியின் மனது.

அதன்பிறகு, இந்தக் கால இடைவெளியில் ஊரே தலைகீழாக மாறியிருந்தாலும், சாமியின் வாழ்வு மட்டும்  தனது பழமையைப் பேசிக்கொண்டிருக்கிறது.

“வேண்டாமுன்னு ஓடுனவள நெனச்சிக்கிட்டு, இப்படியே எத்தன காலந்தான் ஒண்டிக்கட்டையாவே இருக்க போற… இன்னொரு கல்யாணத்த பண்ணிக்கிட்டு பொழப்ப பாருய்யா… ஊருல அவனவன் கட்டுனவ கூட இருக்கும்போதே, இன்னொரு சோடி போட்டுக்கிட்டு ஒய்யாராமா இருக்கையில, நீ மட்டும் இன்னும் இப்படியே இருந்தா எப்புடி” என்று யார் யாரோ எப்படியெல்லாமோ சொல்லிப்பார்த்தும் உடும்புப்பிடியாக அப்படியே இருந்துவிட்டார் சாமி.

===========================================

நாற்பது ஆண்டுகளாக எல்லாவற்றையும் தனக்குள்ளே புதைத்து வைத்து வாழப்பழகிய மனிதருக்கு, கடந்த மூன்று மாதகாலமாக, மனது நிலைகொள்ளாமல் அலைபாய்ந்து கொண்டேயிருக்கிறது.. குழப்பத்திற்கான காரணத்தை அவரால் புரிந்துகொள்ள இயலவில்லை. விலகவும் முடியாமல், வீழ்ந்து போகவும் முடியாமல், நீர்ச்சுழிப்பில் சிக்கிக்கொண்ட எறும்பினைப்போன்று நினைவுகள் தள்ளாடியபடி இருக்கிறது. வழக்கமாகக் கொண்டு வரும் மதிய உணவினையும்கூட உண்ணப் பிடிக்காமல் வீட்டிற்குத் திரும்பும் சமயத்தில், ஆடுகளுக்குத் தின்னக் கொடுத்துவிட்டு, வெறும் வயிற்றோடு செல்வது வாடிக்கையாகிவிட்டது.

உடல் வலுவாக இருந்த நேரத்தில் துணை வேண்டாம் என்று புறந்தள்ளிவிட்டு, தோல் தளர்ந்து உயிர் கூடடைய எத்தனிக்கும் நேரத்தில், நான்கு வார்த்தை ஆறுதலாகப் பேச நமக்கு ஒரு துணை இல்லாமல் போய்விட்டதே என்கிற தவிப்பின் உச்சம்கூட தன்னை வீழ்த்தி விடுமோ? என்கிற மெல்லிய நடுக்கம் பாலாடைபோல் உள்ளுக்குள் பரவுவதை அவரால் உணர முடிந்தது.

ஆடுகளை வாரியில் இறக்கிவிட்டபின்பு ஓரத்திலிருக்கும் பூவரசமரத்தின் நிழலில் துண்டை விரித்துப்போட்டு கண்ணை மூடினால், முன்பெல்லாம் கண்ணை சொக்கும் தூக்கம், இப்போதெல்லாம் சேற்றுக்காலில் இறங்கிய முள் போன்று கடந்தகால நினைவுகள் இம்சித்துக்கொண்டிருக்கிறது. இரவிலும்கூட பூனைத் தூக்கம்தான்.

ஒருநாள் பழமலையிடம், “இந்த ஆடுவோள இன்னைக்கி ஒரு நா மட்டும் பாத்துக்க, செந்துற சாயப்புகிட்ட ஆடு வித்த காசு கொஞ்சம் பாக்கி நிக்குது.. வாங்கிட்டு மத்தியான பஸ்க்கு வந்துடுறேன்” என்று சாமி சொல்ல,

“சாயப்பு தான் ரெண்டுல, மூணுல இங்க வராரே.. காசு வாங்குறதுக்கா இம்புட்டுதூரம் போறேண்ணே” – பழமலை.

“காசுகுன்னு போகல, சாயப்பு அம்மா ஒடம்புக்கு முடியாம இருக்காம், அதான் அப்படியே அவுங்களையும் ஒரு எட்டு பாத்துட்டு வந்த மாதிரி இருக்கும்ல” என்று கூறிவிட்டு கிளம்பிப்போனார்.

“எனக்காகவா, இவ்வளவு தூரம் மெனக்கெட்டு வந்தீங்க.. அதுவும் இந்த தள்ளாத வயசுல… அந்த அல்லா புண்ணியத்துல இப்ப கொஞ்சம் தேவலாம்” என்று சொல்லிக்கொண்டே சாயுப்பு அம்மா கொடுத்த மோரினை குடித்துவிட்டு, சாய்ப்பு கொடுத்த பணத்தினை வாங்கிக்கொண்டு குமிழியம் செல்லும் பேருந்தில் ஏறினார் சாமி.

குமுழியத்தில் இறங்கி, பாக்கியத்தின் வீட்டினை விசாரித்தவரிடம், கூரை சிதைந்து எடுத்துக்கட்டக் கூட முடியாமல் இருக்கும் குடிசையினைக் காண்பித்தார் ஒருவர். வாசலில் போய் நின்ற சாமிக்கு, கூட்டி அள்ளாமல் சுவற்றோரத்தில் குவித்து வைத்திருக்கும் கோழிப்பீயின் நாற்றம் நாசியினை நெரித்தது. ஏதோ வேலையாக வெளியே வந்த பாக்கியம், வாசலில் சாமி நிற்பதைப் பார்த்துவிட்டு,

“வாங்க… வாங்க….” என்று கூறிக்கொண்டே உள்ளே ஓடிப்போய் வரம்பு நெளிந்திருந்த சொம்பில் நீர் கொண்டு வந்து கொடுத்தாள்.

“என்ன, என்னைக்குமில்லாம இவ்வளவு தூரம் வந்திருக்கீங்க, பாத்து எத்தன வருசம் ஆச்சி… ஒடம்பெல்லாம் எப்படி இருக்கு, இன்னும் ஆடுதான் மேச்சிக்கிட்டு இருக்கீங்களா?” என்று பாக்கியம் கேட்க,

அவளை சற்று நேரம் உற்றுப்பார்த்த சாமி, “எனக்கு என்ன கொறச்சல், நல்லாத்தான் இருக்கேன்… நீ எப்படி இருக்கே? என்ன வூட்ல யாரையும் காணும், எங்க போயிருக்கான் உன்னோட வூட்டுக்காரன்?”

“அந்த கதைய ஏன் கேக்குறீங்க… கேரளாவுக்கு வேலைக்கு போறன்னு போன மனுசந்தான், போயி ஆறு வருசம் ஆச்சி… இன்னும் இந்தபக்கம் எட்டிகூட பாக்கல… உசுரோட இருக்கானா, செத்து போயிட்டானன்னுகூட தெரியாம இருக்கேன்”

“ஊருபக்கமும் ஆள பாக்க முடியலையே?”

“நான் பொழைக்கிற பொழப்ப யாருகிட்டவந்து காட்ட சொல்றீங்க, புள்ளையா, குட்டியா…? போனவன் போனவந்தான்.. இந்த லட்சணத்துல எங்கவந்து, யார பாத்து, என்ன ஆவ போவுதுன்னு… நல்லது கெட்டதுக்கு கூட ஊருபக்கம் தல காட்டாம இங்கயே கெடக்கேன்” என்று கூறிய பாக்கியத்தின் கண்ணோரத்தில் கசிந்திருந்தது.

எதுவும் பேசாமல் அவள் சொல்வதைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த சாமி, சற்றுநேரம்  அமைதியாக இருந்துவிட்டு, “யாரு தலையில என்ன எழுதியிருக்கோ அதுப்படி தான் நடக்குது… நாம வாங்கி வந்த வரம் அப்படி” என்று கூறினார்.

“ஆமா பொல்லாத விதி… படுற கஷ்டத்த பாத்தாவது இந்த சாமிக கொஞ்சம் எறங்கி வரக்கூடாதா?. எல்லாத்தையும் வேடிக்க தானே பாத்துக்கிட்டு இருக்கு” – பாக்கியம்.

“சரி… சரி… அத விடு.. நடந்தத பத்தி பேசி என்ன ஆவ போவுது… ஒனக்கும் ஒரு காலம் வராமலா போயிட போவுது….”

“இத்தன வருசமா வராத காலமா, இப்ப புதுசா வந்துட போவுது”- பாக்கியம்.

கொஞ்சநேரம் எதுவும் பேசாமல் இருந்த சாமி, “இப்ப சோத்துக்கு என்ன பண்றே” என்று கேட்டார்.

“எங்கயாவது காட்டு வேல கெடச்சா போவேன், இல்லன்னா சித்தாளு வேலைக்கி போவேன்… இப்ப அதுக்கும் இந்த கொத்தன் பயலுவோ, எளசா இருக்குறவளா பாத்து கூப்பிட்டுக்கிட்டு போறானுவோ… எதோ எம் பொழப்பும் ஓடிக்கிட்டு தான் இருக்கு…”

“…………………………………….”

“சரி…. இருங்க… சோறு பொங்கிட்டேன், செத்த நேரத்துக்குள்ள கொழம்பு வச்சிடுவேன்… சாப்புட்டுத்தான் போகணும்”

“சோறெல்லாம் வேணாம்.. கொஞ்சம் நீராரம் இருந்தா கொடு போதும்”

“செத்த நேரந்தான், சோற வடிச்சிட்டேன்.. கொழம்பு வைக்க எம்புட்டு நேரம் ஆவப் போவுது”

“சுடு சோறெல்லாம் இந்த மத்தியான நேரத்துக்கு நமக்கு ஆவாது, நீராரம் இருந்தா கொடு போதும்” என்று சாமி சொல்ல…

சொம்பு நிறைய நீராகாரத்தைக் கரைத்துக் கொடுத்தாள்.

வாங்கிக் குடித்துவிட்டு, “சரி நான் கெளம்புறேன்” என்று சொன்னார் சாமி.

“இந்த வெயிலுல எங்க போயி அலைய போறீங்க… செத்த படுங்க… வெயில் தாந்து போலாம்”

“ஆடுகள வுட்டுட்டு வந்திருக்கேன், இப்ப போனா மத்தியான டவுன் பஸ்க்கு ஊருக்கு போயிடலாம்” என்றார் சாமி.

“இன்னும் இந்த ஆடுவோள வுட மனசு வரல ஒங்களுக்கு…”

“என்ன பண்றது, கூட்டுல உசுரு இருக்குற வரைக்கும்தானே… நாளைக்கே கண்ண மூடிக்கிட்டா, என்ன நடக்குதுன்னு எந்திரிச்சி வந்தா பாக்க போறேன்”…

“அதெல்லாம் ஒங்களுக்கு ஒன்னும் ஆவாது… பாத்து போயிட்டு வாங்க”…

“சரி.. சரி…” என்று சொல்லிவிட்டுப் பையிலிருந்த நூறு ரூபாய்க்கட்டொன்றை எடுத்துக்கொடுத்தார் சாமி.

“அய்யோ.. எனக்கு எதுக்கு பணம்… அதெல்லாம் ஒன்னும் வேணாம்”

“வச்சிக்க… நான் மட்டும் எடுத்துக்கிட்டு போயி எம் பொண்டாட்டி புள்ளைக்கா  கொடுக்க போறேன்”

“நீங்க இம்புட்டு தூரம் வந்து பாத்ததே போதும்… காசெல்லாம் ஒன்னும் வேணாம்” என்று தடுத்த பாக்கியத்தின் கையினைப் பிடித்து,

“எப்பவோ நான் ஒனக்கு செஞ்ச பாவத்துக்கு பரிகாரமா நெனச்சி, இத வாங்கிக்கோ” என்று சொல்லி, கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை தோளில் கிடந்த துண்டினால் துடைத்துக் கொண்டே பணத்தினை பாக்கியத்தின் கையில் திணித்தார்.

“இதென்னா கூலியா?” என்று பாக்கியம் கேட்க…

“இந்தப் பாவியின் மானத்த இத்தன வருசமா காத்து வரும் எஞ்சாமிக்கு, இந்த ஏழ கொடுக்குற தட்சண” என்று கூறியவர், பாக்கியத்தின் முகத்தினை ஏறெடுத்துக் கூட பார்க்கத் தெம்பில்லாமல் தலை குனிந்தபடியே வெளியேறிப் போனார்.

கண்கலங்கி தள்ளாடியபடி அவர் செல்லும் திசையை பார்த்துக்கொண்டே, நெடுநேரம் நின்று கொண்டிருந்தாள் பாக்கியம்.

ஊருக்கு வந்தும் பாக்கியத்தின் நினைவாகவே இருந்தது சாமிக்கு. பாக்கியம் கேட்ட “இதென்ன கூலியா?” என்ற அந்தச்சொல் அவரின் மனதை ரம்பமாக அறுத்துக் கொண்டிருக்க, இருபது வருடங்களுக்கு முந்திய நினைவுகள் மெல்ல கண்ணுக்குள் நிழலாடியது.

சாமி, ஆடு மேய்த்துக்கொண்டிருக்கையில், பக்கத்து ஊரின் செம்மறி ஆடுகளை சம்பளத்துக்கு மேய்க்க வரும் பெண் தான் பாக்கியம். சாமி, வழக்கமாக தனது ஆடுகளை, வறண்ட ஓடையின் வெளிப்பக்கம் இருக்கும் கரையோர கறம்பில் மேய விட்டுவிட்டு வெயிலுக்கு இதமாக ஓடைக்குள் அமர்ந்திருப்பார்.

வெளியில் என்ன வெயில் காய்ந்தாலும், ஓடையின் பால் போன்றிருக்கும் மணலின் குளிர்ச்சியும், அனல் இறங்காதவாறு, கரையின் இருபுறமும் இரண்டு ஆள் உயரத்துக்கு புதர் மண்டிக்கிடக்கும். பகல் நேரத்தில் கூட உள்ளே என்ன இருக்கிறது என்று தெரியாத அளவிற்கு இருள் பரவியிருக்கும். காடு கரையில் வேலை செய்பவர்களும், மேய்ச்சல்காரர்களும் இந்தமாதிரியான வறண்ட ஓடையினைத்தான் தங்களது பிணைச்சல் இடமாக பயன்படுத்திக்கொள்வர். வறண்ட காலங்களில் குளிர்ச்சி இங்கு அதிகம் இருப்பதினால் பாம்புகள் கூட இங்குதான் ஒதுங்கியிருக்கும். பெரும்பாலும் இந்த மாதிரி இடங்களுக்கு துணையில்லாமல் யாரும் தனியாக உள்ளே நுழையமாட்டார்கள்.

ஒருநாள் கரையின் மறுபுறமிருக்கும் வெள்ளாமைக் காட்டுக்குள் நுழையப்போன ஆடுகளை விரட்டுவதற்காக பாக்கியம், ஓடி வருகையில் வழிப்பாட்டையில் இருந்த சிறு கட்டையில் பாவாடை தடுக்கி ஓடைக்குள் விழுந்துவிட்டாள். புதரின் முட்கள் குத்தி ஆங்காங்கே இரத்தம் வழிந்து கொண்டிருந்தவளை வந்து பார்த்த சாமிக்கு, பாவாடை மேலேறி வெண் தொடைகள் தெரிய கிடந்தவளைக் கண்டவருக்கு, யாருமற்ற அந்தச் சூழலும், அவளின் அந்த நிலையும் வெறிகூட்ட வலுக்கட்டாயமாக அவளோடு உறவு கொண்டு முடித்த பின்பு தான் தன்னுடைய தவறு சாமியின் புத்தியில் உரைத்தது.

பாக்கியத்தின் கால்களைப்பற்றிக்கொண்டு, “என்ன மன்னிச்சுடு புள்ள… எதோ புத்தி கோளாறுல இப்படி பண்ணிட்டேன்” என்று என்னன்னவோ சொல்லி கதறியவரிடமிருந்து, விடுவித்துக்கொண்டு, கண்ணீர் கசிய சென்றவளை அதன்பிறகு அவர் பார்க்கவே இல்லை.

‘யாரிடமாவது சொல்லி தன்னோட மானத்த ஊர் சிரிக்க வச்சிடுவாளோ?’ என்றும், ‘ஏன் நம்ம புத்தி இப்படி பேதலிச்சி போச்சி’ என்று தன்னை நொந்துகொண்டே சில நாட்கள் பெரும்உளைச்சலில் இருந்தவருக்கு நாட்கள் செல்ல செல்ல மனதிலிருந்த பயம் விலகியிருந்தாலும், அந்த நிகழ்வின் வடு மட்டும் ஆறாமல் உள்ளுக்குள் அப்படியே தங்கிவிட்டது சாமிக்கு.

பாக்கியத்தை பார்த்துவிட்டு வந்த இரண்டு நாட்களும் தன்னிலை இல்லாமல் தான் இருந்து வந்தார். ‘யார் யாருக்கோ சாவு வருகிறது தனக்கு வந்து தொலைய மாட்டேங்குதே’ என்று நினைத்துக்கொண்டே ஆட்டின் புழுக்கைகளைக் கூட்டி அள்ளிக்கொண்டு குப்பைக்குழிக்கு போனவர் முளைக்குச்சி தடுக்கி குப்பைக் குழியினுள் விழுந்த வேகத்தில் அருகில் அடுக்கி வைத்திருந்த சரளைக்கல் நெற்றியில் குத்தி இரத்தம் பீறிட்டது.

அந்த மழைக்கால இரவில் தன் மனைவி வேம்புடன் நடந்த சண்டையில் கோபம் முற்றி கையிலிருந்த களி கிண்டும் கழியால் அவளை ஓங்கி அடித்ததும், சுருண்டு மடிந்து விழுந்தவளை ஊர்சனம் யாருக்கும் தெரியாமல் அந்த நடு இராத்திரியில் வீட்டுக்குப் பின்புறம் புதைத்தது எல்லாம் ஒவ்வொன்றாக நினைவுக்கு வர, சாமியின் மூச்சு இழுத்து அடங்கியது.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button