கட்டுரைகள்
Trending

புவி காக்க இளைஞர்களின் எழுச்சி

ஹரீஷ்

கிரெட்டா துன்பெர்க் – கடந்த ஒரு வாரமாக நாம் அதிகம் கேள்விப்படும் பெயர். செப்டம்பர் 24, 2019 அன்று ஐக்கிய நாடுகள் பருவநிலை மாநாட்டில் அதிகார வர்க்கத்தை எதிர்த்த கிரெட்டாவின் பேச்சு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

“மக்கள் துன்புறுகிறார்கள். மக்கள் உயிரிழக்கிறார்கள். சுற்றுச்சூழல் கட்டமைப்புகள் முழுவதுமாக சீர்குலைகின்றன. நாம் பேரழிவின் தொடக்கத்தில் இருக்கிறோம். நீங்களோ பணத்தைப் பற்றியும் நிலையான பொருளாதார வளர்ச்சி குறித்த கற்பனைக் கதைகளையும் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். என்ன துணிச்சல் உங்களுக்கு?” என்று உலகத் தலைவர்களைப் பார்த்து கிரெட்டா பேசியது ஒரு அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இன்று உலகைப் பெருமளவில் அச்சுறுத்திக் கொண்டிருக்கக்கூடிய பருவநிலை மாற்றம் உருவாக்கிவரும் அபாயங்கள் குறித்து கிரெட்டா உள்ளிட்ட ஏராளமானோர் பலவிதமான போராட்டங்களை முன்னெடுத்து, அதை ஒரு பேரியக்கமாக மாற்றியுள்ளார்கள். செப்டம்பர் 20 முதல் 27 வரை உலகெங்கிலும் பருவநிலை மாற்றத்தின் பாதக விளைவுகளிலிருந்து இந்த பூமியைப் பாதுகாக்கக் கோரி, ‘Climate Strike’  என்ற பெரும் போராட்டம் நிகழ்ந்துள்ளது. உலகெங்கும் லட்சக்கணக்கான மக்கள், குறிப்பாக இளைஞர்கள் பருவநிலை மாற்றத்தால் நேர்ந்துகொண்டிருக்கும் அபாயங்கள் குறித்த பதாகைகளை ஏந்தி வீதிகளில் பேரணி சென்றுள்ளனர்.

பணிப் பாதுகாப்பு, வேலையின்மை, பொருளாதார பின்னடைவு, போர் எதிர்ப்பு போன்ற காரணங்களுக்காக உலகெங்கிலும் நடக்கும் போராட்டங்களை நாம் நிறைய பார்த்திருக்கிறோம். நமது புவியைக் காக்க தொடர்ச்சியாக ஒருவார காலம் உலகெங்கிலும் பேரணிகள் நடத்தப்பட்டிருப்பதே பருவநிலை மாற்றம் உருவாக்கிவரும் பிரச்சினையின் தீவிரத்தை நமக்கு உணர்த்துகிறது.

 

முதலில், பருவநிலை மாற்றம் என்றால் என்ன, அது உருவாக்கிவரும் சிக்கல்கள், பிரச்சினைகள் இவை குறித்து அறிந்தால்தான், இப்போராட்டங்களின் அவசியம் நமக்கு புலப்படும். இது குறித்த கிரெட்டா துன்பெர்கின் தொடர்ச்சியான பிரச்சாரங்களும் நமக்கு விளங்கும்.

பருவநிலை மாற்றம்   

பத்தொன்பதாம் நூற்றாண்டு தொடங்கி, இருபதாம் நூற்றாண்டில் அசுரவேகம் கண்ட தொழிற்புரட்சிக்கு முக்கியத் தேவையாக இருந்துவருவது பெட்ரோல், நிலக்கரி போன்ற புதைப்படிவ பொருட்கள். இவை அதிகமாக எரிக்கப்படும்போது வெளியேறும் கரியமில வாயு புவி வெப்பமடைவதற்கான முதன்மைக் காரணி. இத்துடன் பெருமளவு காடுகளை அழிப்பதால் வெளியேறும் மீத்தேன் வாயுக்கள்,  உரங்களை பயிர் சாகுபடிக்கு பயன்படுத்தும்போது வெளியேறும் நைட்ரஸ் ஆக்சைடு, தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் வாயுக்கள் ஆகியவையெல்லாம் சேர்ந்து சிறுதுளி பெருவெள்ளமாக மாறி, காற்று மண்டலத்தில் புவியை வெப்பப்படுத்தும் வாயுக்களின் அளவை பன்மடங்கு அதிகரிக்கின்றன.

தொழிற்புரட்சி காலத்துக்கு முன்பு இருந்ததைவிட, புவியின் சராசரி வெப்பநிலை தற்போது 1 டிகிரி கூடுதலாக உள்ளது என்று உலக வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவிக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால், வரும் 2100-ஆம் ஆண்டுக்குள் உலகின் வெப்பநிலை சுமார் 3-லிருந்து 5 செல்சியஸ் அளவுக்கு அதிகரிக்கும்.

என்ன பாதிப்பு?

பூமியின் வெப்பநிலை அதிகரிப்பதால், பனிப்பிரதேசங்களில் பனிப்பாறைகள் உருகி, கடலின் நீர்மட்டம் உயரும். இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்படும். அதிக வெப்பம் காரணமாக, வானிலையில் மாற்றங்கள் நிகழ்ந்து வேளாண்மை உற்பத்தியிலும் பாதிப்புகள் ஏற்படும். வெப்பநிலை அதிகரிப்பால் தண்ணீர் பற்றாக்குறை, பயிர்கள் மீது பூச்சி தாக்குதல் உள்ளிட்ட விஷயங்கள் நேர்ந்து ஒட்டுமொத்த வேளாண்மைத் துறையும் பாதிக்கப்படும். ஆர்க்டிக், அண்டார்டிகாவில் ஏற்படுகிற வெப்பநிலை உயர்வால் பனிப்பாறைகள் உருகி வன உயிரினங்களுக்கும், அவற்றின் வாழிடங்களுக்கும் பெருத்த சேதம் விளைவிக்கும் அபாயம் உள்ளது.

இவையனைத்தும் உலகெங்கிலும் நிகழ்ந்துகொண்டிருப்பதை சமீப காலப் பேரிடர்களால் நாம் நேரடியாக உணர்ந்து வருகிறோம். இப்படி வேளாண்மை, சுற்றுச்சூழல், வன உயிரினங்கள் என அனைத்தும் பருவநிலை மாற்றத்தால் பாதிப்புக்கு உள்ளாவதற்குக் காரணம் மனிதர்களான நம்முடைய செயல்பாடுகள்தான். அதிலும் குறிப்பாக எரிசக்தியை அதிக அளவு பயன்படுத்தும் வளர்ந்த நாடுகள் ஒரு முக்கிய காரணம்.

என்னென்ன நடவடிக்கைகள்?

உலக நாடுகள் கூடி பல்வேறு காலகட்டங்களில் பருவநிலை மாற்றம் குறித்த பல ஒப்பந்தங்கள் இடப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தங்களில் பரிந்துரைக்கப்படும் வழிமுறைகள், நடவடிக்கைகள் தொடர்ச்சியாக பரிசீலிக்கப்பட்டும்  வருகின்றன. 2016இல் பாரிஸ் நகரில் நடந்த ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்றத்துக்கான மாநாட்டில்  புவி வெப்பமடைதலின் சராசரி அளவை 1.5  டிகிரி செல்சியஸுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. உலகிலேயே அதிகமாக புவி வெப்பமடைதலுக்கு காரணமாக இருக்கும் அமெரிக்கா இந்த தீர்மானத்தை எதிர்த்து மாநாட்டிலிருந்து வெளிநடப்பு செய்தது.

பருவநிலை மாற்றத்தால் ஏற்படுகிற மோசமான விளைவுகளுக்கு பிற உலக நாடுகள் ஒருமித்த உணர்வுடன் சில நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது, அமெரிக்கா எப்போதும் ஒரு தடங்கலாகவே இருந்துவந்திருக்கிறது. மேலும், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகளுக்கு எரிசக்தி பயன்பாடு உள்ளிட்ட விஷயங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கும் போக்கும் நிலவுகிறது. இதனால் புவி வெப்பமடைவதை தடுக்கும் நடவடிக்கைகளில் சுணக்கம் ஏற்படுகிறது.

கிரெட்டாவும் பருவநிலை மாற்றமும்

மேற்கூறிய விஷயங்களிலிருந்து நமக்கு புலப்படுவது என்னவென்றால், பருவநிலை மாற்றத்தால் அதிகமாக பாதிக்கப்படுவது, பாதிக்கப்படப்போவது தற்காலக் குழந்தைகளும் இளைஞர்களும்தான். நடவடிக்கைகளை துரிதமாகவும் வேகமாகவும் எடுக்க வேண்டியது ஆட்சி அதிகாரத்தில் உள்ள ‘பெரியவர்கள்’. இந்த ‘பெரியவர்களை’ முடுக்கிவிடும் வேலையைத்தான் கிரெட்டா துன்பெர்கும், உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான குழந்தைகளும், இளைஞர்களும் செய்துவருகின்றனர்.

முதன்முதலில் கிரெட்டா பருவநிலை மாற்றத்துக்காகப் போராடியது தனது நாடான ஸ்வீடன் நாடாளுமன்றம் முன்பு. மைனஸ் 20 டிகிரி கடும் குளிரில் கையில் பதாகையுடன், கிரெட்டா தனி ஒருத்தியாக செய்த சத்யாகிரகத்தைப் பார்த்து மக்கள் ஆச்சரியப்பட்டனர். பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக போராடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. “வருங்காலத்துக்கான வெள்ளிக்கிழமைகள்” (Fridays for  Future) என்ற கோஷத்துடன் பிரதி வெள்ளிக்கிழமைதோறும் உலகெங்கும் மாணவர்கள் போராடாதத் தொடங்கினர். மார்ச் 2018-இல் 90 நாடுகளில் 1,700 நகரங்களில் சுமார் 2 லட்சம் மாணவர்கள் பெரும்போராட்டங்களில் ஈடுபட்டனர். கிரெட்டா தூவிய விதை பல விருட்சங்களாக உருவெடுத்தது. இப்போராட்டங்களுக்கு விஞ்ஞானிகளும் ஆதரவளித்தனர்.

கிரெட்டாவை பொறுத்தவரை சொல் ஒன்று செயல் வேறு என்பது அறவே கிடையாது. தனது குடும்பத்தினரையும் இணைத்தே பருவநிலை மாற்றத்துக்கான பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளார். கிரெட்டாவின் தாய் ஒரு உலகளாவிய ஒபெரா பாடகி. உலக நாடுகளுக்கு விமானத்தில் பறந்து கொண்டிருந்தவர். கிரெட்டாவின் தூண்டுதலால், விமானப் பயணங்களை முற்றிலுமாக தவிர்த்து மற்ற போக்குவரத்து முறைகளையே பயன்படுத்துகிறார்.

செப்டம்பர் மாதம் நியூயார்க் நகரில் நடைபெற்ற மாநாட்டுக்கு கிரெட்டா எப்படிச் சென்றார் தெரியுமா? ஸ்டாக்ஹோம் நகரத்திலிருந்து நியூயார்க்குக்கு விமானத்தில் செல்வதென்றால் பயணி ஒருவருக்கு 1.77 டன் அளவுக்கு கரியமில வாயு வெளியேற்ற வேண்டிவரும். இத்தகைய பயணத்தை கிரெட்டா ஏற்காததால், சூரியஒளி கொண்டு சக்கரங்களைச் சுழற்றும் தொழில்நுட்பம் கொண்ட படகு ஒன்றில் கிரெட்டா சென்றிருக்கிறார்.

பருவநிலை மாற்றத்துக்காக தனது தொடர்ச்சியான பிரச்சாரங்களால், பல இடங்களுக்கு சென்று பேச கிரெட்டாவிற்கு வாய்ப்புகள் வந்தது. ஒவ்வொரு கூட்டத்திலும் கிரெட்டா பேசிய பேச்சு, கேட்கும் அனைவரையும் உத்வேகப்படுத்தியதுடன் யோசிக்கவும் வைத்திருக்கிறது. “உங்களுக்கு எவ்வளவு தைரியம்?” என்று ஐ.நா. மாநாட்டில் கிரெட்டா ஆற்றிய உணர்ச்சிமயமான உரை, உலகத் தலைவர்களுக்கு ஒரு சம்மட்டி அடி என்றே கூறவேண்டும்.

கிரெட்டா போன்றோர் மேற்கொண்டுவரும் பிரச்சாரங்களுக்கு நாமும் துணைநிற்க வேண்டும். இந்தியாவிலும் ஆங்காங்கே பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த வேண்டுமெனப் பேரணிகள் நடந்திருந்தாலும், உடனடியாக நமது எரிசக்தி பயன்பாட்டை குறைக்க அரசை நிர்பந்திக்கும் பிரச்சாரங்களை நாம் இன்னும் தீவிரமாக மேற்கொள்ளவேண்டியுள்ளது. இத்தகைய பிரச்சாரங்களில் பெரியவர்களோடு, இளைஞர்களும் ஈடுபடவேண்டிய தேவை உள்ளது. அடுத்த தலைமுறைக்கு நமது பூமியை பாதுகாத்துக் கொடுப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button