இணைய இதழ்இணைய இதழ் 75மொழிபெயர்ப்பு சிறுகதைமொழிபெயர்ப்புகள்

வாடகை மனைவி – அபிஜித் சென் – வங்காளச் சிறுகதை (தமிழில்: அகிலா ஶ்ரீதர்)

மொழிபெயர்ப்பு சிறுகதை | வாசகசாலை

து மார்ச் மாதத்தின் பிற்பகுதி.  பரந்து விரிந்த வயல்களினூடே புழுதி நிறைந்த பாதை ஒன்று பிரிந்து சென்றது.  பிற்பகல் சூரியனின் மங்கலான வெளிச்சத்தில் தொலைதூரத்திலிருந்த கிராமங்கள் இன்னும் தொலைவில் இருப்பது போலத் தோன்றின. அந்த நிலப்பரப்பின் பெரும்பகுதி பாழடைந்து தரிசாக இருந்தது என்றாலும் ஆங்காங்கே அபூர்வமாக சில குளங்களும், கால்வாய்களும் திட்டுத் திட்டாக அடிவானில் தென்பட்டன. சில இடங்களில், பருவம் தவறிய பச்சை நெல் வயல் திட்டுகள், பசுஞ்சோலை போல் காட்சியளித்து கண்களைக் குளிரச் செய்தன.

ஒரு ராணுவ ஜீப் மிதமான வேகத்தில் அந்த வயல்வெளியின் வழியாக வந்தது.  கரடுமுரடான, மேடு பள்ளங்களுடன் இருந்த அந்தப் புழுதி படிந்த சாலையில் அதனால்   வேகமாக வரவும் இயலாது. அந்த வண்டியின் பின்னால், மேகம் போல் தூசி மேலெழும்பி வானைத் தொட்டது. எல்லைப் பாதுகாப்புப் படைக்கு சொந்தமான அந்த ஜீப்,  குன்சா முகாமை நோக்கி வந்து கொண்டிருந்தது..

புழுதி மேகத்தைக் கவனித்த ஜானகி ஒரு வண்டி வந்து கொண்டிருப்பதை உணர்ந்துகொண்டாள். ஆனால் அது  கண்ணுக்குப் புலப்படவில்லை, அதன் சத்தமும் கூட கேட்கவில்லை. இருப்பினும் அந்த வண்டி வந்து சேர்வதற்கு இன்னும் அதிக நேரம் ஆகாதென்பது ஜானகிக்குத் தெரிந்தது. சாலையின் அருகிலிருந்த பெரிய வேப்ப மரத்தின் பின்னால் ஒளிந்துகொண்டாள். இன்னும் பத்துப் பதினைந்து நிமிடத்தில் அந்த வண்டி இந்த இடத்தை அடைந்துவிடக் கூடும்.  இதற்கு முன்பு இருந்ததைப் போல ஆசையோ, கவலையோ இம்முறை அவள் உள்ளத்தில்   இல்லையென்றாலும், என்ன நடக்குமோ என்கிற எதிர்பார்ப்பில் நடுக்கத்துடன் இதயம் வேகமாக அடித்துக்கொண்டது. அந்த வண்டி இந்த முகாமிற்குதான் வரப் போகிறது. அதில் அவளுக்காக யாராவது ஒருவர் வருவாரா?

அந்த எல்லைப் பாதுகாப்பு படை முகாம், ஒரு ஆளின் மார்புயரத்துக்கு மண் சுவர்களால் வேலியிடப்பட்டிருந்தது. மழை பெய்தாலும் மண்சுவர் கரைந்து விடாமலிருப்பதற்காக, அதன் மேல் வைக்கோல் வேய்ந்த கூரை போடப்பட்டிருந்தது. வேலியிடப்பட்டிருந்த பகுதிக்குள், சில மண் குடிசைகள் தகரக் கூரைகளோடு இருந்தன. மூன்று அல்லது நான்கு அழுக்கான பெட்டி மாதிரியான சிறிய வீடுகள் சுவரை ஒட்டியிருந்தன. மத்தியில் நடுத்தர அளவிலான கூடாரம் ஜன்னல்களுடன் இருந்தது. பத்துப் பன்னிரண்டு வீரர்களைக் கொண்ட குன்ஸா முகாமில், இந்த ஏற்பாடு போதுமானதாக இல்லை. எனவே சிலர் முகாமுக்கு அருகிலிருந்த கிராம வீடுகளில் அறைகளை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்தனர். சாலைகளில் இன்னும் சில மண்குடிசைகள் அரசாங்கத்துக்குச் சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டிருந்தன. அவை வீரர்களின் குடும்பங்கள் மற்றும் வீட்டு வேலைக்காரர்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்தன. அவர்களில் சிலர் தன் மனைவி மற்றும் குழந்தைகளோடு் செல்ல, இன்னும் சிலர் ஜானகி போன்ற வாடகை மனைவியுடன் வாழ்ந்தனர்.

அங்கிருந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு ஜானகி ஒரு மனைவியைப் போன்றவள் அல்லது வாடகை மனைவி.  எனினும் அவள் வாழ்வில் சந்தித்த முதல் மனிதன் அவளை அப்படி ஒருபோதும் உணர வைத்ததே இல்லை. அவனுடன் இருந்த மூன்று வருடங்களும் மிக வேகமாகக் கடந்து போயின. பத்து வருடங்கள் கடந்த பின்னும், அந்நாளைய நினைவுகள் அவளைப் போட்டு அழுத்துகின்றன. தன் வாழ்க்கை முழுவதும்  ஒரு வாடகை மனைவியாக வாழப் போகிறோமென்று அப்போது அவளுக்குத் தெரியாது. அவளுக்கு மட்டுமல்ல, ஏன் மற்றவர்கள் கூட, நிஹால் அவளை விட்டுப் பிரிந்து போவானென்று நினைக்கவேயில்லை. அவன் அவளை  அப்படிக்  காதலித்தான்.

அவன் கிளம்பியபோது, ஜானகியின் கண்ணீர்க் கறை படிந்த, நடுங்கிய தாடையை தன் இரு விரல்களால் பற்றி சத்தமாகச் சிரித்தான்…

”அடி பைத்தியக்காரி..! நான் சென்று தங்குவதற்கு இடத்தை ஏற்பாடு செய்துவிட்டு வந்து உன்னை அழைத்துக்கொண்டு போகப் போகிறேன். இதில் புலம்புவதற்கு என்ன இருக்கிறது? போகிற எல்லா இடங்களுக்கும் உன்னையும் கூட்டிக் கொண்டு போய் நிற்க முடியுமா?  இதென்ன குமாஸ்தா வேலையா?   இது ராணுவ வீரன், அதுவும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரனின் கடமை.”

“இங்கிருந்து எவ்வளவு தூரத்திலிருக்கிறது அந்த இடம்?”

“என்ன.? இங்கிருந்து இருபதிலிருந்து இருபத்தைந்து மைல் இருக்கலாம்..”

இருபதிலிருந்து இருபத்தைந்து மைல் அளவிலான குறுகிய தூரம்  இந்த நீண்ட பத்து வருட காலத்தில், எங்கோ தொலைந்துவிட்டது. அவனைப் பற்றி ஜானகி அறிந்தவை, மற்றவர்கள் யூகித்தவை  அனைத்தும் தவறாகிப்  போனது.

அவனுடைய பெயர் நிஹால். அவன் எங்கிருந்து வந்தான் என்பதில் அவளுக்கு ஆர்வமில்லை. அவன் மிகச் சிறந்த காதலனாக இருந்தான். ஆனால் பாருங்கள், காதலர்கள் சில நேரம் ஏமாற்றுக்காரர்களும் கூட. அற்புதமான காதலன், அற்புதமான ஏமாற்றுக்காரன் என்பதையும் நிரூபிப்பான்.

மூன்று, நான்கு ஆண்டுகள் ஜானகி காத்திருந்தாள்.

நிஹால் திரும்பி வரவேயில்லை.

மற்றவர்கள், அவன் இனி எப்போதும் திரும்பி வரவே மாட்டான் என்று கூறினர்.

நிஹால் திரும்பவேயில்லை. இப்படிக் கூட நடக்குமா?

நிஹால் வரவேயில்லை..  ஆனால் அவன் இடத்திற்கு வேறொருவர் வந்தார். சிரஞ்சிலால்!

அவர் எங்கிருந்து வந்தாரென்று யாருக்குத் தெரியும்? ஆனால் அவர் நல்லவர். அவர் நிஹாலைப் போல் துணிச்சலான, முரட்டுத்தனமான காதலனாக இல்லைதான். ஆனால் ஒழுங்கில்லாதவனாகவோ, ஓடிப் போகிறவனாகவோ இல்லை.

ஒரு மாதத்திற்குப் பின் ஜானகியை அந்த வீட்டை விட்டு வெளியேறுமாறு முகாம் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

“நான் எங்கே போவது?”

“உன் வீட்டிற்குப் போ..”

“எனக்கென்று சொந்த வீடு எங்கே இருக்கிறது?.. அவன் எங்கே? அவன் என்னைத் திருமணம் செய்திருக்கிறான். மூன்று வருடங்கள் என்னோடு குடித்தனம் நடத்தியிருக்கிறான். அதோடு  சட்டென்று விட்டு  விட்டு ஓடிப் போய்விட்டான்.”

“அவன் வரமாட்டான்.”

“அவன் வருவான். நிச்சயமாக  வருவான்.”

உண்மையாகவே அவளுக்கென்று வீடு என்று ஒன்று இருந்ததேயில்லை. அவள் அப்பா, மற்றவர்கள் தோட்டத்திலிருந்து வெற்றிலை இலைகள், பாக்கு மற்றும் கத்திரிக்காய்களைத் திருடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருநாள் இரவு, வெற்றிலை இலைகளுடன் பிடிபட்டு, அதே வயல்வெளியில் சத்தமின்றி கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவருடைய உடல் இந்தப் பக்கமும், துண்டிக்கப்பட்ட தலை, அந்தப் பக்கம் பங்களாதேஷ் எல்லையிலும் கிடந்தது. அவரது அண்டை அயலார் இதனை எதிர்பார்த்திருந்தனர். அவர் முடிவு இப்படித்தானிருக்கும் என்று அவரைத் தவிர மற்றவர்கள் எல்லோருக்கும் தெரிந்திருந்தது.

இந்தக் கொலை சர்வதேசப் பிரச்னையானபோது, நிஹால் ஜானகியைச் சந்தித்தான். அந்தத் திருட்டு அப்பன் தன் மகளை எப்போதுமே நல்லவிதமாக பார்த்துக் கொண்டதில்லை. இப்படியொரு  தந்தைக்கு மகளாகப் பிறந்தவளின் விதி என்னவாக இருக்குமென்று அவனைத் தவிர அனைவர்க்கும் தெரிந்திருந்தது. அம்மா இறந்து போனதும் அப்பா என்பவன் அன்னியனாகி விடுகிறான் என்பதை அந்த அப்பாவைத் தவிர மற்ற எல்லோரும் அறிவார்கள். ஆனால் அப்பா இறந்துவிட்டால் என்ன நடக்கும்?

நிஹால் சிதறிக் கிடந்த தலையையும், உடலையும் ஒன்றாகப் பொருத்தி விட்டு அவளிடம், “உனக்கு இவரைத் தெரியுமா, இவரை அடையாளம் காட்ட முடியுமா?” என்று கேட்டான்.

“ஆமாம்..”

“இவர் யார்? உனக்கு என்ன வேண்டும்?”

“என்னோட அப்பா.”.

“பெயர்?”

“மடியா மஹோட்டா”

“உன் பெயர்?”

“ஜானகி”

“அழாதே.. நான் மறுபடியும் வருகிறேன்.  நீ பயப்படத் தேவையில்லை”

இப்படி எல்லாம் நம்பிக்கையூட்டி நிஹால் அவளுக்கு ஆறுதல் அளித்தான். வேறு வேலைகளிருந்தாலும் அதையெல்லாம் முடித்துவிட்டு அவன் மறுபடியும் அவளுக்காகவே வந்து அவளை அழைத்துச் சென்று அந்த வீட்டில் குடியேற்றினான்.

இவையெல்லாம் அவ்வளவு எளிதாக நடந்துவிடவில்லை.. ஆனால், நிஹாலுக்கு இவையனைத்துமே சுலபமானவைதான். அதற்குப் பின் தடைகளற்ற, பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காத, கட்டுக்கடங்காத காதலுடன் கூடிய மூன்று நீளமான வருடங்கள்.

அவர்களுக்கு ஒரு மகளும் பிறந்தாள்.

அதன் பின் ஒருநாள், திரும்பி வருவேனென்று சொல்லிச் சென்றவன் அப்படியே மாயமாக மறைந்துவிட்டான்.

அவனுடைய இடத்திற்குப் புதிய வரவாக சிரஞ்சிலால் வந்திருக்கிறார். அவர் மத்திம வயதிலுள்ள குடும்பஸ்தர். அவளிருந்த வீடு அவர் வசம் சென்றுவிட்டது.

மூன்று மாத காத்திருப்பிற்குப் பின் ஜானகி, அந்த வீட்டிற்கு முன்பாக வந்து நின்றிருந்தாள்.

அவளுடைய வீடு.

அரசாங்க நிலத்தில் அவள், நிஹாலுடன் சேர்ந்து அந்த வீட்டைக் கட்டியிருந்தாள். அழகான குடியிருப்பாக  அது இருந்தது.

அவன் மட்டுமல்ல, அந்த அறையும் அவளுக்கு நெருக்கமானது.  உடைந்த அவள் மனதின் வேதனைகளைக் கிளறிவிட்டது.

அவள் தனக்குள்ளாகவே யோசித்து யோசித்து கடைசியாக  ஒரு முடிவுக்கு வந்திருந்தாள்.

அவள் வந்தபோது சிரஞ்சிலால், அந்த வீட்டின் தரையைத் துடைத்துக் கொண்டிருந்தார். ஜானகி அவளுடைய இரண்டு வயது குழந்தையோடு அந்த சுவரில் சாய்ந்து நின்றிருந்தாள்.

குழந்தை எச்சரிக்கையுடன் தளிர்நடையிட்டு அந்த அறைக்குள் நுழைந்தது. அந்தக் குழந்தைக்கும் அந்த அறை நன்கு பழகியிருந்தது. அந்த அறையில்தான் அவள் நடக்கக் கற்றுக் கொண்டிருந்தாள்.

அறைக்குள் சென்றதும் அவள் பின்புறமிருந்து சிரஞ்சிலாலை நெருங்கினாள். சிரஞ்சிலால் திரும்பிப் பார்த்தபோது குழந்தை பயத்தில் அலறினாள்.

இவன் அந்தக் குழந்தையின் அப்பா இல்லை அல்லவா?

“உனக்கு என்ன வேண்டும்?”

“நான் ஜானகி”

“அதற்கென்ன?”

“நான் வீடு துடைப்பேன், தண்ணீர் கொண்டு வருவேன், பாத்திரங்களைக் கழுவுவேன்.”

“எனக்கு அதெல்லாம் எதுவும் வேண்டாம், வெளியே போ,”

சற்று நேர அமைதிக்குப் பிறகு, ஜானகி ரகசியமாக அவரிடம், “ உங்கள் கால்களைப் பிடித்து விடுவேன்.”

“எனக்கு வேசி தேவையில்லை, வெளியே போ…”

காயப்பட்ட ஜானகி நம்ப முடியாமல், நான் வேசியில்லை என்று அலறினாள்.

இதைக் கேட்டு சிரஞ்சிலால் வியப்படைந்தான்..

“வேசியில்லையென்றால், வேறு யார்?”

“இது நானும், அவனுமாகச் சேர்ந்து கட்டிய வீடு. “

இந்த அறையின் சுவர்களை மென்மையாக்குவதற்கு எத்தனை நாட்கள் அவள் களிமண்ணைக் குழைத்து, மிகுந்த சிரத்தையுடன் பூசியிருக்கிறாள்

இந்தத் தரை வலுவாக இருக்கவேண்டுமென்பதற்காக கனமான திமிசுக் கட்டையைக் கொண்டு வலிக்க வலிக்க இடித்திருக்கிறாள்.

அன்போடும், அக்கறையோடும் கந்தலான துணி மற்றும் மாட்டுச்சாணத்தைக் கொண்டு   தரையை மெழுகி அழகாக்கி இருக்கிறாள்..

குழந்தை தடுமாறியபடி  அறையின் மூலையிலிருந்த அலமாரியை நோக்கி நடந்தாள். நிஹால் சில நேரங்களில்  குழந்தைக்கு இனிப்புகள் வாங்கி அந்த அலமாரியில்தான் வைத்திருப்பான். அந்த அலமாரி இப்போது எதுவுமில்லாமல் இருந்தது.

சிரஞ்சிலால் மனதில் இனம் புரியாத ஒரு பரிவு ஏற்பட்டது. அதனால் அவன் ஜானகியின் முகத்தை முழுவதுமாகப் பார்த்தான். அவள் உடலையும். நிஜ வாழ்வின் குரூரம் அறியாத அழகிய இளம்பெண்,  புரிந்துகொள்ளாத துரதிர்ஷ்டசாலி. இதற்கான அடையாளங்கள் அவள் உடலெங்கிலும் ஒட்டியிருந்தன. அவளுடைய முகத்திலும் தெளிவாக எழுதப்பட்டிருந்தது.

அவன், “சரி, சரி, தண்ணீர் கொண்டு வா…” என்றான்.

தண்ணீர் கொண்டு வருவதற்கான உரிமை.

ஜானகி உடனடியாக அவருக்கு தண்ணீர் எடுத்து வர சென்றாள்.

ந்த ராணுவ ஜீப் இப்போது எதிர்த்திசையில்  பயணிப்பது போல் தெரிந்தது. வயல்களினூடே பயணிக்கும்போது அப்படித்தான் தோன்றும். அந்த சாலை அடிக்கடி வளைந்து நெளிந்து வளைந்து முன்னேறியது.  தொலைவிலிருந்து பார்ப்பதற்கு அந்த வண்டி வெகுதூரத்தில் பின் வாங்குவது போலத் தோன்றியது. ஆனால் அது ஒரு மாயை என்பதை ஒருவரால்   உடனே புரிந்து கொள்ள முடியும்.

மார்ச் மாத பிற்பகுதியில் வீசிய தென்றல் சூரிய ஒளியும், வெப்பமும் கலந்து, கண்ணிற்குப் புலனாகாத மெல்லிய திரை போட்டது போல அசைந்தாடியது. அது இயற்கையை நுட்பமாக உணரும்போது ஏற்படும் நிகழ்வு போல இருந்தது.

நிஹாலை அருகிலிருந்த கிஷன்கஞ்ச் நகரத்தில் எங்கேயோ பார்த்த மாதிரி  இருந்ததாக எவரோ ஒருவர் சொன்னார்.

அப்படியா..! எப்படியிருந்தார்? நீங்கள் இருவரும் பேசிக் கொண்டீர்களா? இந்த வழியாக அவர் வருவதற்கு ஏதேனும் வாய்ப்புள்ளதா, வருவாரா?

இல்லை. ஒரு முறை கூட வர வாய்ப்பில்லை..

இப்போதும், இரு வருடங்களுக்குப் பிறகு சிரஞ்சிலால் பிரிந்து சென்றபோதும், அவள் அவ்வளவு தவிப்பையும், இயலாமையையும் வெளிக்காட்டவில்லை. சிரஞ்சிலால் அவளிடம், ”நான் வந்து உன்னைப் பார்ப்பேன். இந்த பகுதியிலேயேதான் தங்கியிருப்பேன்” என்று சொல்லி இருந்தார்.

அவர் மிக விழிப்புடனும், அதீத எச்சரிக்கையாகவும்  இருந்தார். அவருக்கும் ஜானகிக்கும் குழந்தை ஏதும் பிறக்கவில்லை. அவருக்கு வேறு எங்கோ மனைவி, குழந்தைகள், வீடு இருந்தன. அவர் போலவே ஜானகியும் அவரிடம் மிக கவனத்துடன்  இருக்கக் கற்றுக் கொண்டாள்.

சிரஞ்சிலால் அவளை மிக நன்றாக நடத்தினார். நிஹாலுக்கு நேர்மாறாக இருந்தார். உண்மையிலேயே நிஹால் கட்டுக்கடங்காத காதலனாக இருந்தாலும், பொய்யானவனாக, ஆத்திரக்காரனாக இருந்தான்.

றுதியாக அந்த ஜீப் நேர்ப்பாதைக்கு வந்தது. கிராமத்தை நெருங்கியதால் மிகவும்  வேகமெடுத்தது. இந்தப் பாதை வயல்வெளியிலிருந்து கிராமத்தைப் பிரித்தது. நேரான, அகலமான சாலையைக் கண்டதும் வண்டி வேகமெடுத்தது. எந்த நேரத்திலும் வந்து சேர்ந்து விடும்.

இந்த முறை எத்தகைய மனிதன் இந்த வண்டியில்  வருகிறான்? நிஹால் மற்றும் சிரஞ்சிலால் போன்ற சில தனித்துவமான குணமுடையவர்களா? இல்லை வேறு யாராவதா? அல்லது அவர்களுக்கு அடுத்து  ஐந்து வருடங்களில் வந்த நாண்டியோ, சூரஜ் மற்றும் மானுவெல் போலவா?

இறுதியாக வந்தவன், அவளுக்கு கொடுத்ததை விட அதிகமாக அவளிடமிருந்து எடுத்துச் சென்று விட்டான்..

இந்த வீரர்களுடன் தங்கியதன் மூலம், உணவுதான் முதன்மையான தேவை என்பதை ஜானகி கற்றுக் கொண்டாள். மேலும் தன் வயிற்றுப் பிழைப்புக்காக சம்பாதிக்கும் ஒருவனுக்கு, தன் நேரத்தை செலவிடவும், அவனது தேவைகளைப் பூர்த்தி செய்யவும் ஒரு துணை தேவை.

அவள் இந்த நபர்களுடன் பண ரீதியான கொடுக்கல் வாங்கல் உறவை மட்டுமே கொண்டிருந்தாள். இப்போதெல்லாம் அவள் அழுது, புலம்புவதில்லை, எதற்கும் பயப்படுவதில்லை, மிக முக்கியமாக இந்த அறையின் மீதான தனது கட்டுப்பாட்டை ஒருபோதும் விட்டுவிடவில்லை.

இப்போது இந்த அறை அவளுடையது.

இந்த அறையில் தங்குவதென்பது, அவளுடன் இருப்பது போலத்தான். இந்த அறையில் தங்க வருபவர்களுடன் பேரம் பேசுவதற்கு அவள் இப்போது கொஞ்சம் அதிகாரம்  பெற்றிருந்தாள்.

இத்தனை நாட்களுக்குப் பிறகும் அவளுடைய இந்த உரிமை  நிலைத்திருந்தது. அவளுடைய இந்த உரிமையை முகாம் அதிகாரிகளும் ஏற்றுக் கொண்டனர்.

இரண்டு மாதங்கள் கழிந்த பின்பும், புதிதாக யாரும் வரவில்லை. அதற்குள் ஜானகியின் சொற்ப சேமிப்பும் கரைந்து போனது. இன்று புதிதாக ஒருவர் வரப் போவதாகக் கேள்விப்பட்டாள். ஒருவேளை தங்க வருபவர் அவராகவும் இருக்கலாம். அவர்தான் நிச்சயமாக இந்த ஜீப்பில் பயணித்து வருகிறார்.

இறுதியாக ஒருவர் அவளுடைய முக்கிய, உடனடித் தேவைகளை நிறைவேற்ற வந்து கொண்டிருக்கிறார். அவள் ஆர்வம் இப்போது அதில் மட்டும்தான் இருந்தது.

அவள் அந்தப் பெரிய வேப்ப மரத்தின் பின் மறைந்து நின்றாள். ஒரு ராணுவ ஜீப் கிறீச்சட்டபடி அந்த முகாம் முன்பு வந்து நின்றது. என்ஜினை அணைத்துவிட்டு, டிரைவர் இறங்கி வெளியே வந்தான். இடதுபுற இருக்கையிலிருந்து ஒரு வாலிபன் வெளியே வந்தான். இருவரின் சீருடைகளின் வித்யாசத்தைப் பார்த்தவரை அவன்  சற்று உயர்ந்த பதவி வகிப்பவனாகத் தெரிந்தான்.

அதோடு இன்னொருவரும் கீழிறங்கினார். அவர் யார்? 

ஓ.. சிரஞ்சிலால்..!

என்ன ஆச்சர்யம்..!

ஜானகி தன் கனவில் கூட இது சாத்தியமென்று யோசித்ததே இல்லை..

அவருடைய மீசை அதிகமாக நரைத்திருந்தது. ஜீப்பின் உள்ளிருந்து படுக்கை சேர்த்துக் கட்டப்பட்ட ஹோல்டாலுடன்  அளவுக்கு அதிகமாக சாமான்கள் திணிக்கப்பட்டிருந்த பெட்டியை எடுத்துக்கொண்டு ஒருவர் அவரை நோக்கி நடந்து வந்தார். சிரஞ்சிலால் அவருடைய பையை தோளில் தொங்க விட்டு, பெட்டியைக் கையிலெடுத்து வண்டியைச் சுற்றிக் கொண்டு பின்புறம் வந்தார். ஜானகியின் அறையை ஏக்கத்துடன் பார்த்தார். ஜானகி வேப்பமர நிழலிலிருந்து வெளியே வந்தாள்.

சிரஞ்சிலால் புன்னகைத்தார்.  அவரது புன்னகையில் வயதான மனிதனின் அமைதி தெரிந்தது. ஜானகியும்  புன்னகைத்தாள். அவள் நிம்மதியாக உணர்ந்தாள். இவரே திரும்பி வருவாரென்று அவள் எதிர்பார்க்கவில்லை. அமைதியான, நேர்மையான, இரக்க சுபாவமுள்ள மனிதர்.

தான் மறைந்திருந்த மர நிழலிலிருந்து வெளியே வந்த ஜானகி அவரை நோக்கி முன்னேறினாள். அவளுடைய உடலுக்குள் மகிழ்ச்சி ஒரு வெள்ளம் போல் அமைதியாகப் பாய்ந்தது. உணர்ச்சிகள் மேலெழும்பி அவள் தொண்டையை அடைத்தன.

அவளுடைய மென்மையான கண்களில் தெரிந்த அளவற்ற மகிழ்ச்சியின் ஒளி சிரஞ்சிலால் கண்களிலும் தெரிந்தது. ஜானகி மிகவும் நன்றியுடையவளாக உணர்ந்தாள். ஏனென்றால் ஒவ்வொரு முறையும் ஒரு புதிய மனிதருடன் வாழ்க்கையைத் துவங்குவது  சோர்வாக இருந்தது.

“நான் மறுபடியும் வந்து விட்டேன். சிறிது நாட்களில் மீண்டும் வருவேனென்று உன்னிடம் சொன்னேனில்லையா.?”

ஜானகி அவருடைய ஹோல்டாலை எடுத்துக்கொள்ள விரும்பி அவரை நோக்கி முன்னேறினாள்.

அப்போதுதான் புற உலகின் பிற அம்சங்கள் அவள் பார்வையிலிருந்து மறைந்தன. கல்லாய் மாறி விட்டது போல் அசையாமல் அப்படியே நின்றாள். நீட்டிய கையை பின்னுக்கிழுத்து அலறத் துடித்த வாயை மூடிக் கொண்டாள்.

இது கூட சாத்தியமா!

ஜீப்பின் பின்னாலிருந்து குதித்து இறங்கியவன்… நிஹால்!

சிரஞ்சிலால் திரும்பி ஜானகியின் மாறிய முகபாவத்தை கவனித்து, “பயப்படாதே, நிஹால் இரண்டு, மூன்று நாட்கள்தான் இருப்பான். நான்தான் இங்கு தங்கப் போகிறேன்” என்று அழுத்தமாகச் சொன்னார்.

ஆனால் ஜானகி இதையெல்லாம் கேட்காமல், நிஹாலையே வெறித்தபடி இருந்தாள். இவன் எவ்வளவு அழகானவன்!

நிஹாலின் பிரகாசமான உடலமைப்பு முன்பிருந்ததைப் போலவே கம்பீரத்தை வெளிப்படுத்தியது. ராணுவத் தொப்பியின் அலை போல் மடங்கிய முன்பகுதி அவன் முன் நெற்றியை மறைத்தது. பருந்தைப் போன்று கூர்மையான பார்வையுடையவன். அவன் மூக்கின் கீழ் சரியான அளவில் பராமரிக்கப்பட்ட அழகிய மீசையிருந்தது.  அவன் தோளில் டிசைனர் ஜான்சனால் தயாரிக்கப்பட்ட பையைத் தொங்க விட்டிருந்தான். நிஜமாகவே  கர்வமடையச் செய்யும் அழகன்தான்..!

ஜானகி எல்லாவற்றையும் மறந்தவளாக அவனையே  பார்த்துக் கொண்டிருந்தாள். சற்று முன்பு வரை இருந்த அமைதி, மந்திரவாதியின் மந்திரக்கோல் ஸ்பரிசம் பட்டது போல் உடனடியாக மறைந்து விட்டது.

இவளது நரம்புகளின் வழியே பரவசம் வழிந்தோடியது. உடம்பின் ஒவ்வொரு மயிர்க்கால்களும் கட்டுப்படுத்த முடியாமல் விருப்பத்துக்குரியவனின் கட்டற்ற தீண்டலுக்காய்  தகித்தது. வெட்கம், நாகரிகம் ஆகிய அனைத்து வரையறைகளையும் மீறி கட்டுப்பாடுகளற்று, அவளது  இச்சைகளையெல்லாம் தணித்து சாந்தப் படுத்தக் கூடிய அணைப்புக்காய் தவித்தது. இவையனைத்தும் சேர்ந்து ஒரு மிருகத்தனமான இச்சை அவள் நரம்புகளையும், ஒட்டுமொத்த உடலையும் பற்றியெறியச் செய்தது போல் அவள் இந்த நிமிடத்தில் உணர்ந்தாள்.

அவள் ஒட்டுமொத்த வாழ்விலும் இது போல ஒரே ஒரு முறைதான் நிகழ்ந்திருக்கிறது. அப்போது ஒருமுறை நிஹால் இரண்டு மாத விடுமுறையில் சொந்த ஊருக்குச் சென்று திரும்பி வந்தான். அப்போது அவனைப் பார்த்த  ஜானகி  தனது அனைத்து கட்டுப்பாடுகளையும் இழந்து இதே போல் ஸ்தம்பித்து நின்றாள்.

இந்தப் பக்கம் திரும்பி அவனது தொப்பியை சரி செய்த போது, நிஹால் அவளைப் பார்த்தான். ஒரே ஒரு கணம்   அவன் கண்களில் வழக்கத்துக்கு மாறான ஒரு வித தயக்கம் மேக மூட்டம் போல் தென்பட்டது. உடனடியாக அவன் அதிலிருந்து விடுபட்டதும் நம்ப முடியாத வியப்பு அவன் முகத்தில் பரவியது.  திடீரென்று எதிர்பாராத வரவாகக் கிடைத்த கட்டுக்கடங்காத காதலின் சிலிர்ப்பில் அவனது கண்கள் ஆச்சர்யத்திலும் ஆனந்தத்திலும் ஒளிர்ந்தன.

அவனது கண்களில் பசி தெரிந்தது.

அந்தப் பார்வையில், எல்லாவற்றையும் சரி செய்து தன் பசியைத் தீர்த்துக்கொள்ள முடியுமென்கிற நம்பிக்கை இருந்தது.

ஜானகி  மந்திரத்தால் கட்டுப்பட்டவள் போன்ற மகிழ்ச்சிப் பெருக்கில் மூழ்கினாள்.  அவளது உடலின் கட்டுப்பாடற்ற ஆசைகளை வேறு எவரால்தான் பற்றியெறியச் செய்ய முடியும்?

நிஹால் அவனது பையை வலது தோளிலிருந்து, இடது புறத்திற்கு மாற்றினான்.

“உன்னிடம் முன்பே சொன்னேனில்லையா, நான் மீண்டும் வருவேனென்று?” என்று கூறியபடியே வண்டியின் ஃபுட்போர்டில் காலை வைத்து ஷூலேஸைக் கட்டினான்.

சிரஞ்சிலால், “ஏய், என்னாச்சு உனக்கு? இங்கே வந்நு படுக்கையை எடுத்துக்கோ, அவன் ஒண்ணும் இங்கு தங்க வரல. அவனுடைய சில வேலைகளை முடிப்பதற்காக வந்திருக்கான். ரெண்டு மூணு நாட்களில் போய் விடுவான்.” என்றார்.

திடுக்கிட்ட ஜானகி அந்த ஹோல்டாலைக் கையிலெடுத்துக் கொண்டாள். கைக்கு எட்டும் தூரத்தில், அந்த மகத்தான மனிதன் நின்று கொண்டு சிரிக்கிறான்.  அவர்களுக்கிடையே  தடையாக, எளிதில் தாண்டி விடக்கூடிய   ஒரு சிறிய பள்ளம் மட்டுமே   இருந்தது.

ஷூலேஸைக் கட்டியதும் நிஹால் சென்று விட்டான். அவன் ஒருபோதும் இனி திரும்பிப் பார்க்கப் போவதில்லை. ஒரு புயலை மனதில் சுமந்தபடி ஜானகி அவளுடைய அறையை நோக்கிச் சென்றாள்.

சிரஞ்சிலால் அவளைப் பின் தொடர்ந்தான். அறையினுள் நுழைந்ததும் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தான். எவ்வளவு நிம்மதி! முன்பிருந்ததைப் போலவே அனைத்தும் இருந்தன. சுத்தமான நேர்த்தியான வீடாக இருந்தது.

அவன் அங்கு தங்குவதற்காகத்தான் வந்திருந்தான். அதில் எந்த சந்தேகமுமில்லை.

இந்த முகாமில் வருமானம் நன்றாக இருந்தது. இன்னும் ஆறு வருடத்தில் ஓய்வு பெறப் போகிறார். அவருடைய மீதிக் காலத்தில் அவருடைய சொந்த ஊருக்கு திரும்பிச் சென்று நிரந்தரமாக குடியேற வேண்டும். அவர் இன்னும் சிறிது நிலத்தை வாங்கி தன் பண்ணையை விரிவுபடுத்த திட்டமிட்டிருந்தார். ஒருவேளை ஜானகி அவளுடைய மகளுடன் அங்கு வர விரும்பினால், அதற்கும் ஏற்பாடு செய்யத் தயாராக இருந்தார். அனைத்து விவசாய வேலைகளுக்கும் வலுவான, திடமான வேலையாட்களுக்கு அங்கு தேவையிருந்தது. அதோடு சிரஞ்சிலாலும் அங்கிருக்கப் போகிறார். வேறு எந்தப் பிரச்னைகளும் அங்கு உருவாக வாய்ப்பில்லை.

ஜானகி அங்குமிங்குமாக சில வார்த்தைகளை மட்டுமே கேட்டாள். முழுவதுமாக அவள் கேட்கவில்லை. அதன்பின் சிரஞ்சிலால் முகாமிற்கு அறிக்கையளிக்கச் சென்ற பிறகு, அவள் அனைத்தையும் யோசித்தாள்.  உண்மையிலேயே ஆறு முழு வருடங்களுக்கு அவளுக்கான ஆதரவு கிடைக்கப் போகிறதா? அதுவும் அமைதியான, நியாயமான மனிதரிடமிருந்து..? அவள் அவரை நம்பிக்கையாக தக்க வைத்து தன் எதிர்கால வாழ்க்கையைப் பாதுகாத்து புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும்.  ஆறு வருடங்கள் என்பது குறைந்த காலமல்ல.

இத்தனை சிந்தனைகளும் அவளுக்குள் ஒன்றாகக் கூடியிருந்த போதும்,  அவள் ஒருவிதமான அச்சத்தை உணர்ந்தாள். ஒரு ஆரோக்கியமான விலங்கின் இறுக்கமான தோலில் ஒரு சிறிய ஈ குடியேறும்போது ஏற்படும் நடுக்கம் போல் ஜானகியின் உடலிலும் ஏற்பட்டது. விளையாடிக் கொண்டிருந்த தன் பெண்ணை அழைத்து.. “என் அருகிலேயே இரு, எங்கும் போகாதே,” என்றாள்.

அடுத்த நாள் பிற்பகலில், அவளுக்குள் இருந்த அச்சத்திற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நிஹால் வந்தான்.  அவனுடைய நிழல் அந்த முற்றத்தில் விழுந்த உடனேயே, முந்தைய நாளிரவு  தான் உணர்ந்த  தனிமையின் துன்பங்களையும், சிரஞ்சிலாலுடன் தான் கழித்த இரவு எவ்வளவு அர்த்தமற்றது என்பதையும் ஜானகி புரிந்து கொண்டாள். கடுமையான இறுக்கமான குரலில், ”உனக்கு என்ன வேண்டும்?” என்று சத்தமாகக் கேட்டாள்..

நிஹால் சத்தமாக சிரித்தபடியே, எந்த தயக்கமுமின்றி, “உன்னை நீயே கேட்டுக் கொள்” என்றான். அவளிடமிருந்து எல்லாவற்றையும் திருடிக்கொண்டு அதற்கு சிறிதும் வருத்தப்படாத வெட்கம் கெட்ட மனிதன்! அவளைப் பார்த்து சிரிக்க அவனுக்கு வெட்கமாக இல்லையா!  படை வீரர்களின் வேசியாக, வாடகை மனைவியாக அவளை மாற்றியவன்,  எதையுமே உணராமல் வருத்தப்படாமல் வெட்கமுமில்லாமல் நின்று கொண்டு சிரிக்கிறானே!

உள்ளிருந்த அறையிலிருந்து அவள் மகளை இழுத்துக்கொண்டு வந்து நிஹால் முன்பு நேராக நிற்க வைத்து சொன்னாள். “பார்.. நன்றாகப் பார்த்துக் கொள்.. இந்த வேசியின் மகன்தான் உன் அப்பா.  இந்த ஏமாற்றுக்காரனை, மோசடிப் பேர்வழியை நன்றாகப் பார்த்துக் கொள். ஏனென்றால் இனி எப்போதும் உன் வாழ்க்கையில் அவனை நீ பார்க்கப் போவதில்லை.”

நிஹால் சத்தமாக சிரித்தபடியே, “நாளை நான் கிளம்புவேன். அதனால்தான் இன்று ஒருமுறை உங்களிருவரையும் பார்க்கலாமென்று வந்தேன், நீ சொன்னதும் சரிதான், இனி நாம் வாழ்க்கையில் எப்போதும் சந்தித்துக் கொள்ளப் போவதில்லை”  என்று கூறினான்.

இந்த சின்ன உரையாடலுக்கு பின் அவனது குரல் சற்று உடைந்திருந்தது போலத் தோன்றியது. “ம்… நான்தான் பார்க்கிறேனே, அந்த வயதான சிரஞ்சியுடன் நன்றாக இரு,” என்று கூறினான்.. பிறகு ஒரு பத்து ரூபாய் நோட்டை அவன் மகளை நோக்கி நீட்டி, “வா.. இதை வச்சு ஏதாவது மிட்டாய் வாங்கிக்கோ” என்று கூறினான்.

ஜானகி அவனது நீட்டிய கையைத் தடுக்கவும், தன் மகளைக் காப்பாற்றவும் முன்னோக்கிச் சென்றாள். வெறுப்பும் ஆவேசமுமாக, ”ஜாக்கிரதை, இனிப்புகள் தருவதாக என் மகளை ஆசை வார்த்தை சொல்லி இழுக்கத் துணியாதே, உன் பணம் யாருக்கு வேணும்?” என்றாள்.

”மிகவும் நல்லது” என்று சொல்லியபடி நிஹால் அவன் தோள்களின் பின்புறம் துப்பாக்கியை தன் இரு கைகளால் பிடித்தபடி சென்றவன் திரும்பி, அவனுடைய முகாம் அங்கிருந்து நாற்பது மைல் தொலைவில்தான் இருக்கிறதென்றும், அங்கு உணவு மற்றும் தங்குமிடத்திற்கான ஏற்பாடுகள் இன்னும் சிறப்பாக இருக்கிறதென்றும் சொன்னான்.

அன்றைய இரவில் சிரஞ்சிலால் அவளிடம், “அந்த பொறுக்கி நிஹால் ஏன் இன்று மதியம் வந்தான்” என்று விசாரித்தார். அதற்கு ஜானகி, “அதைக் கேட்க  விரும்பவில்லை, வந்ததும் அவனை திட்டி , துரத்தியடித்தேன்”  என்றாள்.

சிரஞ்சிலால், “அவன் எங்கு சென்றாலும் புகார்கள் ஆரம்பித்து விடுகின்றன. மிகவும் மோசமானவன்.  இப்போது அவனைப் பற்றி யோசிப்பதை விட்டு விடு. நான் இங்குதான் ஆறு வருடங்கள் இருக்கப்போகிறேன். இல்லையா! நீ என்னோடே இருக்கலாம்.  நான் என் மனைவிகளில் ஒருத்தியாகத்தான் உன்னைப் பார்க்கிறேன்.  இங்கிருந்து கிளம்பும்முன், நிச்சயமாக உனக்கு ஏதாவது செய்வேன். அதற்குப் பின்பும் நீ என்னோடு வர விரும்பினால் ரொம்ப சந்தோஷம். ஹரியானாவில் வேலையாட்களுக்கும், பணிப்பெண்களுக்கும் எப்போதும் தேவையிருக்கிறது”  என்று கூறினார்.

இந்த வயதான காலத்தில், அதுவும் கடந்த ஆறு வருடங்களில் அவருக்கு ஜானகி மிகவும் அவசியமாகத் தேவைப்பட்டாள்.  அதற்குப் பிறகு அவருடைய உடலில் என்ன தெம்பு மிச்சமிருக்கப் போகிறது?

ஜானகி எதையும் கூறவில்லை..  அவளால் முடிந்ந அளவுக்கு சிரஞ்சிலாலின் மார்போடு ஒட்டிக்கொண்டு நெருக்கமாக இருந்தாள். அந்த இருளில் கண்ணுக்கு எதுவும் தெரியவில்லையென்றாலும், அவளும், அந்த ஏமாற்றுக்காரனும் இணைந்து கட்டிய அந்த வீட்டை, அறையை முழுவதுமாகப் பார்க்க முடிந்தது.

நீண்ட நேரம் கழித்து, ”இந்த அறையை விட்டு் நான் எங்கும் போக மாட்டேன்.  உங்களோடு் இங்கேயே இருந்துவிடுவேன்” என்று ஆழ்ந்த பெருமூச்சுடன் கூறினாள்..

அதற்கடுத்த நாள் பிற்பகலில் ஒரு கார் அந்த முகாமிற்கு  வெளியே  வந்த வழியாக திரும்பிச் சென்றது.  டிரைவருக்குப் பக்கத்தில் நிஹால் அமர்ந்திருந்தான்.  முகாமிலிருந்து மூன்று மைல் தொலைவில் இருந்த குன்ஸா-பதார்குரி் பிரிவிற்கு அருகில் ,நிஹால் டிரைவரின் தோளில் கையை வைத்து காரை நிறுத்தும்படி சைகை செய்தான்.  இடதுபுறத்தில் காட்டு சப்பாத்திக் கள்ளிகள் புதராக முள் மண்டியிருந்தன.

நிஹால் கணிப்பு தவறாகவில்லை.  நீண்ட தூரத்தில் புதர்களுக்குப் பின்னால் ஒரு புடவை அசைவதை அவனுடைய கண்கள் தெரிந்து கொண்டன. அந்த கார் நின்றதும், புதர் மறைவிலிருந்து வெளியே வந்த ஜானகி, அந்த காரினுள் சட்டென்று ஏறிக் கொண்டாள்.

நிஹாலுக்கு எந்த ஆச்சர்யமுமில்லை.. அவனுக்குள், ஜானகி அவளுடைய குழந்தையை, அவர்களின் மகளை என்ன செய்திருப்பாள் என்கிற கேள்வி மட்டும் இருந்தது. அவள் நிச்சயம் அவளுக்கான ஏற்பாடுகளைச் சரியாகச் செய்திருப்பாள்.

***

அபிஜித் சென்:

அபிஜித் சென்

பங்களாதேஷில் பாரிஷால் மாவட்டத்தில் உள்ள கியோரா என்கிற கிராமத்தில் ஜனவரி 28, 1945ல் பிறந்த அபிஜித்சென், 1950ல் கொல்கத்தாவிற்கு குடிபெயர்ந்தார். வரலாற்றில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களைப் பெற்ற இவர் 1969ல் புரட்சிகர நக்சல் இயக்கத்தில் சேர்ந்தார். அவரது கதைகளின் பெரும்பாலான கதாபாத்திரங்கள் அவரது நேரடி மற்றும் மாறுபட்ட வாழ்க்கை அனுபவங்களிலிருந்து உருவாக்கப்பட்டவை.

1985 இல் வெளியான இவரது முதல் நாவல்  Rohu-Chandaler HaaR, ஆங்கிலத்தில் Magic Bones என்ற பெயரில் 1992 இல் மொழிபெயர்க்கப்பட்டது. இந்த நாவலுக்காக 1992 இல் பங்கிம்சந்திரா நினைவு விருதைப் பெற்றார். 2005 இல் கல்கத்தா பல்கலைக்கழகத்தின் சரத்சந்திர நினைவு விருதையும் பெற்றார்.

*******

ahilasridhar9906@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. ஜானகி அந்த குழந்தையை என்ன செய்திருப்பார் என்ற கேள்விக்கு தேவையானதை செய்திருப்பார் என்ற பதிலுடன் நிறைவடையும் கதை, அந்த வாழ்வியல் சூழலை உணர்வுப்பூர்வமாக பேசுகிறது. வாடகை மனைவி என்ற வாழ்வியல் வேறுபட்ட ஒன்று என்ற உணர்வை இந்த கதை உணர்த்த வில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button