இணைய இதழ்இணைய இதழ் 100சிறுகதைகள்

வடிவமற்ற தாரைகள் – சுபி

சிறுகதை | வாசகசாலை

சென்னையில் இருந்து மதுரைக்குச் செல்லும் தனியார் பேருந்து அது. செங்கல்பட்டு நிறுத்தத்தில் நான் ஏறிக் கொண்டேன். போனில் சொன்னபடியே சரியாக காலை ஒன்பது மணிக்கு வந்து நிறுத்தினார் டிரைவர். வேறு யாரும் செங்கல்பட்டு நிறுத்தத்தில் ஏறவில்லை போலும். நான் ஏறியவுடன் வண்டியைக் கிளப்ப ஊர்ஜிதம் செய்யும் விதமாக, “ம்ம் போலாம் ” என்றார் கண்டக்டர்.

வார இறுதியாகையால் எந்தப் பேருந்திலும் பயணச்சீட்டு கிடைக்கவில்லை. எனக்கு இது கிடைத்ததே ஜென்மாந்தரப் புண்ணியம். கடைசி இருக்கைக்கு முதல் இருக்கையில்தான் எனக்கு பயணச்சீட்டு கிடைத்திருந்தது.

எனது இருக்கையை நெருங்கிய போது அங்கே 22 முதல் 25 வயது வரை மதிக்கத்தக்க ஓர் இளம் பெண் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தாள். அவளது லேப்டாப், கர்சீஃப், ஐடி கார்டு, ஸ்நாக்ஸ் பாக்கெட் எல்லாவற்றையும் எனது இருக்கையில் கிடத்தியிருந்தாள். இந்த இருக்கைக்கு யாரும் வரமாட்டார்கள் என்று நினைத்துக் கொண்டாளோ என்னவோ. நான் சென்று அருகே நின்றதும் காதில் மாட்டியிருந்த ஹெட் போனைக் கழட்டாமல் ஒவ்வொரு பொருட்களாக தனது ஷோல்டர் பேக்கில் போட்டுக்கொண்டு காலுக்குக் கீழ் அந்தப் பையை எடுத்து வைத்துக் கொண்டாள்.

அவள் தோற்றமும், அவள் பொருட்களும் ஏதாவது ஒரு ஐடி கம்பெனியில் வேலை செய்யும் பெண்ணைப் போன்று இருந்தது. நான் வந்ததை கவனித்தது போலவே அவள் காட்டிக் கொள்ளவில்லை. என்னைத் தவிர அனைவரும் சென்னையிலேயே பேருந்து ஏறி இருக்க வேண்டும். இரண்டு பேர் மட்டும் அமரும் இருக்கையில் அவள் தனியாக அமர்ந்து இருக்கிறாளே, வேறு இடம் மாற்றிக் கொள்ளலாம் என்று பேருந்து முழுவதும் நோட்டமிட்டேன். பாதிப் பேருக்கு மேல் இரவு ஷிஃப்ட் வேலை பார்த்தவர்கள் போல் காலை ஒன்பது மணிக்கு எல்லாம் அவரவர் இருக்கையில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டு இருந்தார்கள். முன்பின் தெரியாத ஒரு வாலிபனோடு பயணம் செய்யப் போகிறோம் என்கிற தயக்கம் அவளிடமும் இல்லை. வேறு இடம் மாற்றிக் கொள்ளலாமா என்று கேட்டால் கூட அவள் காதில் இருக்கும் ஹெட்போனை விட்டு வெளியே வர மாட்டாள் போல. நான் அருகில் அமர்ந்துக் கொள்வதிலும் அவளுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை என்பதாக அவள் வேலையிலேயே கருத்தாக இருந்தாள். இனி கேட்டுக் கொண்டிருப்பது வீண் என்று எனது கர்சீஃப்பை எடுத்து இருக்கையைத் துடைத்து விட்டேன். எனது ஷோல்டர் பேக்கை எனக்கு நேர் மேலிருக்கும் பேருந்தின் மேல்பகுதியில் தூக்கி வைத்துவிட்டு அமர்ந்து கொண்டேன்.

வேக வேகமாக ஓடி வந்து ஏறியதால் கிளம்பிய வியர்வையைக் கர்சீஃபால் முகம், கழுத்தின் முன் பகுதி, பின்பகுதி எல்லா இடங்களிலும் துடைத்துக் கொண்டேன். தொண்டை இலேசாக வறண்டது போல் தோன்ற மீண்டும் எழுந்து பையின் பக்கவாட்டுப் பகுதியில் இருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து நின்றபடியே குடித்துவிட்டு அமர்ந்துக் கொண்டேன். ம்ஹூம். என்னை ஒரு இளைஞனாகவோ, மனிதனாகவோ அவள் கருதியது போலவே தெரியவில்லை. ஒரு பொருளாகக் கருதி இருப்பாளா என்பது கூட சந்தேகம்தான்.

வழக்கமாக நான் இரவுப் பயணங்களையே விரும்புகிறவன். பகல் பிரயாணங்கள் ஒரு பொழுதையே வீணடித்து விடும் என்பது என் எண்ணம். ஆனால், இதுவும் வித்தியாசமான அனுபவமாக எனக்குப் பட்டது. அலுவலகத்தில் இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டிய கட்டாயம். அதனால் உடல் ஆரோக்கியத்திலும், சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பேன். பகல் பிரயாணங்களில் நல்ல தரமான உணவு கிடைக்குமா என யோசிப்பதால் இதைத் தவிர்ப்பதுண்டு. உணவு, உடல் பற்றிய விழிப்புணர்வு அம்மாவிடம் இருந்து எனக்கு வந்தது. அம்மா என்றவுடன் நினைவுக்கு வருகிறது. நேற்று எனக்கு ஒரு பெண்ணின் புகைப்படத்தை அனுப்பி இருந்தாள் பெண் பார்த்திருப்பதாக. அதை முன்னிட்டுத்தான் இந்தப் பயணம்.

அம்மா, உயர்நிலைப்பள்ளி ஒன்றில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவள். உணவு, தினசரி ஒழுங்கு முறையில் ஆசிரியை என்பதால் இயல்பிலேயே ஒரு வரையறையை வகுத்துக் கொண்டவள். இருப்பினும் எண்ணங்களில் விசாலமானவள். நுண்ணுணர்வுகளைச் சரியாகப் புரிந்து கொள்பவள். தன்னுடைய ஓய்வுக் கால வாழ்வையும் மிகச் சரியாக நேர மேலாண்மை செய்து கொண்டாள். தன்னை எந்த நேரமும் வேலைகளோடும், மனிதர்களோடும் தொடர்பிலேயே வைத்திருப்பாள்.

ஒரு போதும் அப்பா இல்லை என அழுது வடிந்ததில்லை என்னிடம். அப்பா தான் செல்லும் டூவீலர் வண்டியைப் பறக்க விடும் இயல்பு கொண்டவர். ஒரு நாள் அப்படி ஆக்சிலேட்டரை முறுக்கிய போது எதிராக வந்த வண்டியில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அம்மாவுக்கு அப்பாவின் இயல்பு தெரியும். என்ன சொன்னாலும் கேட்க மாட்டார் என்பது தெரிந்ததால் வேகமாகப் போகும் போது அவளும் தடுத்ததில்லை. வீட்டிற்கு அப்பா பொட்டலமாக வந்த போது நான் பனிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். நாங்கள் அனைவரும் அழுதது மாதிரி மிகுதியாகப் புரண்டு அழுது ஆர்ப்பாட்டம் செய்யவில்லை அம்மா.

ஓர் உறவை இழந்துவிட்ட தன்மை மட்டும் அவள் முகத்தில் நெடுநேரம் கண்ணீராக வெளிப்பட்டது. அப்பாவின் சடங்குகள் முடிந்தபின் என்ன யோசித்தாளோ தெரியவில்லை. வருத்தத்தைக் கிளப்பும் சுவடுகளைத் துடைக்க எண்ணிச் சில தினங்களிலேயே பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்து விட்டாள். அவள் அப்படிச் சொல்லாவிட்டாலும் அவ்வாறே புரிந்து கொள்ள வேண்டியிருந்தது.

அப்பாவின் அதிவேகமும், அதனால் நேர்ந்த விபத்தும், இறப்பும் இயல்பான என் பதின்மத் துறுதுறுப்பை குறைக்க ஆரம்பித்தன. துறுதுறுவென்று ஓடுகிற என் இயல்பு மாறத் தொடங்கியது. வேகம் என்பது ஆபத்தானது என்று என் மூளையின் உள்ளடக்குகளில் எப்படியோ பதிந்து கொண்டது. அதன் தொடர்ச்சியாக வெளி உலகத் தொடர்புகளில் வெகுவாக என்னைத் துண்டித்துக் கொண்ட நான் கொஞ்சம் கொஞ்சமாக படிப்பு, எனக்குள் பயணித்தல் , நிதானமாக இருத்தல் இப்படி என்னைத் தகவமைத்துக் கொண்டேன். பதின்மக் கோளாறுகளான காதல், கல்லூரி கேளிக்கைகள் இவற்றிலும் என் எண்ணங்களை அவ்வளவாகச் செலுத்தவில்லை. பின் வேலை, கேரியர் என்று யோசிக்க ஆரம்பித்து அதனுள் மூழ்கி முழு வொர்க்கஹாலிக்காக நான் மாறியிருந்தேன்.

“டிடிங் டிடிங்“ என்று வாட்சப் மெசேஜ் ஒலித்தது. அம்மாதான்.

“டேய் விக்கி, பஸ் ஏறிட்டியாடா?“ விக்னேஸ்வரன் என்ற என் பெயரை அம்மா செல்லமாக இப்படித்தான் அழைப்பாள்.

அடுத்த மெசேஜ் நான் பதிலளிப்பதற்குள் வந்து விழுந்தது.

“டேய், சரியான கிரின்ஜாடா நீ? இத்தனை வருஷத்துல ஒரு பொண்ணு கூடவா உன்ன அட்ராக்ட் பண்ணல? நீதான் பாத்துக்கல, நாமளாவது பார்ப்போம்னு ஆரம்பிச்சிட்டேன். என்னுடைய பழைய ஸ்டூடன்ட் ஒரு பொண்ணு எம்எஸ்சி., பிஎட்., பண்ணியிருக்கா. ரொம்ப அழகா இருப்பா. பெரம்பலூர் காலேஜ்ல ப்ரொஃபசரா இருக்கா. உனக்கு பிடிக்குதா அப்படின்னு பார்க்கட்டும்ன்னுதான் நேத்து வாட்சப்பில் போட்டோ அனுப்பினேன். பார்த்துட்டு எந்தப் பதிலுமே சொல்லாம இருக்க. “

மெசேஜ் படித்தவுடன் குபுக்கென்று சிரிப்பு வந்துவிட்டது. அம்மா இப்படித்தான். ஒரு நண்பனிடம் பேசுவது போலவே என்னிடம் பேசுவாள். உண்மையும் அதுதான். அப்பா சென்ற பிறகு நானும், அம்மாவும் நண்பர்கள் போலத்தான் இருப்போம், இருக்கிறோம். பள்ளியில் நடக்கிற விஷயங்களை, சக ஆசிரியர்களைப் பற்றி என எல்லாமும் என்னிடம் பகிர்ந்து கொள்வாள். நிறைய முறை யாரையாவது மறுமணம் செஞ்சிக்கம்மா என்று சொல்லத் தோன்றும். ஏதோ ஒன்று என்னைத் தடுத்துச் சொல்லவிடாமல் செய்யும். எனக்கு இருக்கும் ஒரே உறவான அம்மாவும் போய்விடுவாள் என்ற எண்ணமாகக் கூட இருந்திருக்கலாம்.

யோசித்துப் பார்த்தால் எனக்குள் இருந்த சுயநலவாதி வெளிப்பட்டதால் அதைக் கவனிக்காதுத் தவிர்த்து வந்திருக்கிறேன்.

ஒரு ரிடையர்டான டீச்சர் என்றால் யாருமே நம்பமாட்டார்கள். இந்த நிமிடம் வரை அப்படி ஒரு துள்ளல் அவளுக்கு. அதுவும் ஸ்மார்ட் போன் வாங்கியவுடன் நச்சரித்து எல்லாவற்றையும் கற்றுக் கொண்டு அவள் செய்கிற அலப்பறை கணக்கில் இல்லை. இந்த மெசேஜ் கூட அப்படி ஒரு துறுதுறுப்பாகத்தான் என்று தோன்றியது. உனக்கு ஒரு கல்யாணம் பண்ணிப் பார்த்துட்டு கண்ணமூடணும் என்கிற மாதிரியான டயலாக்குகள் அவளிடம் இருந்து வந்ததே இல்லை. ஆனாலும் என் வயது கருதிப் பார்க்க ஆரம்பித்து விட்டாள். இனி அவளை அடக்க முடியாது. நானும் அந்தக் கட்டத்திற்கு நகர்ந்தாக வேண்டும் என்பது எனக்குப் புரிந்தது.

மீண்டும் டிடிங் டிடிங்.

“டேய், விக்கி டாகி, எதுனா ரிப்ளை பண்ணு”

இதற்கு மேல் பதிலளிக்காமல் இருக்க முடியாது.

“சரிம்மா வரேன். வந்த பிறகு போய்ப் பார்க்கலாம்” என்று டைப் செய்து அனுப்பினேன்.

ப்ளூ டிக் காண்பித்தது. என் மெசேஜ் பார்த்தவுடன் “ஓகேகே” என்று மகிழ்ச்சியில் இரண்டு கே போட்டுவிட்டுச் சென்றுவிட்டாள்.

இலேசாக, சிறுநீர் கழிக்க வேண்டும் போலத் தோன்றியது. இடைநிறுத்தமான விக்கிரவாண்டியில் இறங்கும் வரை சிறுநீர் அசூசையை சகித்துக் கொள்ள வேண்டும். திருச்சி செல்வதற்கு மணி மூன்றை நெருங்கி விடலாம்.

அதுவரை இப்படியே இந்த இருக்கையில் சாய்ந்து கிடக்க வேண்டியதுதான். முந்தைய நாளின் அதீத வேலை அசதியைக் கிளப்ப உடலைத் தளர்வாக்கி இருக்கையில் கிடத்திக் கொண்டேன்.

அதுவரை பேசாமல் ஹெட்செட்டில் இருந்தவள், “எக்ஸ்கியூஸ் மீ” என்றாள் என்னிடம் திரும்பி.

அவ்வளவு அருகில் சிறிது பிசகினாலும் முகம் மோதி விடும் நெருக்கத்தில் அப்போதுதான் முதன்முதலாக ஒரு பெண்ணைப் பார்க்கிறேன். கல்லூரியில், அலுவலகங்களில் ஏன் காபி ஷாப்புகளும் கூட வேலை நிமித்தம் சென்றதுண்டு. கல்லூரியில் படிக்கும் போது இருந்த ஒன்றிரண்டு பெண் தோழிகளும் கல்யாணம், குடும்பம், குழந்தை என்று என் வாழ்வை விட்டு நீங்கி இருந்தார்கள். அலுவலகம் வந்த பிறகு பெண் ஊழியர்களைக் கவனிக்கும் ஆவல் குறைந்து கூட போயிருந்தது.

சிந்தனையைக் கலைக்கும் விதமாக, “கொஞ்சம் நகர்ந்துக்கறீங்களா” என்று அவளே பேசினாள். சிறு குழந்தையின் கொஞ்சல் மொழியுடன் கேட்டு விட்டு என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள். அவளின் புருவங்கள் மிக அழகாக திருத்தப்பட்டிருந்தன. ஒரு ஊசியை வைத்து ஒரு புள்ளி வைத்தால் எப்படி இருக்குமோ அப்படி மிகச் சிறியதாக ஒரு பொட்டு வைத்திருந்தாள். அவள் புன்னகைத்தபோது அவள் கண்களும் சுருங்கி சிரித்தன. மெலிதாக இட்டிருந்த ஐலைனர் அந்தக் கண்களுக்கு மேலும் வசீகரத்தைக் கூட்டியது.

“எழுந்துக்கவா?” என்று கேட்டவாறு நான் உடலை எழுப்பிக்கொள்ளத் தயாரானேன் என்னையறியாது.

“நோ, நோ ப்ளீஸ் சிட்” என்று கூறிவிட்டு எழுந்தவள் நான் இன்னும் உடலை உள்ளே இழுத்துக் கொள்ள, இலாவகமாக தன்னை வெளியேற்றி டிரைவரின் இருக்கை நோக்கிச் சென்றாள். அவள் என்னைக் கிராஸ் செய்து நகர்ந்த போது அவளின் சுடிதார் எனது ஜீன்ஸ் பேன்ட்டின் மேல் மோதி ஒரு கடல் அலை கிளம்பி வந்து தழுவிச் சென்று விடுபடுவது போல தன்னை விடுவித்துக் கொண்டது.

லேசாக நகர்ந்த போதுதான் அதைக் கவனிக்க நேர்ந்தது. எனது முன்னிருக்கையின் பக்கவாட்டு இருக்கையில் ஓர் இளைஞனும், இளம் பெண்ணும் கிசுகிசுப்பான குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள். ஒரே ஊரோ அல்லது ஒரே பஸ்ஸிலோ செல்லும் காதலர்களாகக் கூட இருக்கலாம். கண்டிப்பாக காதலர்களாகத்தான் இருக்க முடியும். அந்த இளைஞனின் கை அவளின் கைகளைக் கோர்த்தபடி இருந்தது. அவள் குழைந்து மெலிதான குரலில் அவன் காதருகே ஏதோ சொன்னாள். அவன் அதைக் கேட்டு சிரித்தபடியே அந்தப் பெண்ணின் காதோரம் தொங்கும் ஒற்றை முடியை எடுத்துக் காதில் சொருகி விட்டு இவனும் ஏதோ அவள் காதில் சொன்னான். இருவரும் சத்தம் நிறைய வெளியே வராதபடி சிணுங்கலாகச் சிரித்துக் கொண்டார்கள். கைகள் கோர்த்தபடி இருக்க இருவரின் தோள்களையும் காற்றுப் புகாதபடிக்கு அடைத்து வைத்துக் கொண்டார்கள். இன்னொரு உலகம் இயங்குவது பற்றிய பிரக்ஞை அவர்களுக்கு இல்லவே இல்லை. எனக்குத்தான் அதைப் பார்ப்பதற்கு கூச்சமாக இருந்தது. அவர்கள் என்ன செய்கிறார்கள், பேசுகிறார்கள் என்று கேட்கவும் ஆசையாகவும் இருந்தது. இது போன்ற சராசரி ஆசைகள் கூட எனக்கு ஏன் இவ்வளவு நாட்கள் தோன்றவில்லை என ஒரு கேள்வியும் எழும்பியது.

“ஹலோ, ப்ளீஸ்” என்று மீண்டும் சிந்தனையைக் கலைத்தது குரல்.

டிரைவரை நோக்கிச் சென்றவள் அவரிடம் ஏதோ கேட்டுவிட்டு மீண்டும் இருக்கை நோக்கி வந்துவிட்டாள்.

இந்த முறை எழுந்துக் கொள்ளவா என்று நானும் கேட்கவில்லை. உட்கார்ந்தவாறே கால்களை மட்டும் வலது புறமாக வெளியே இழுத்துக் கொள்ள, மீண்டும் சுடிதாரின் அலை என் பேண்ட்டை, என் மணிக்கட்டுகளை மோதியபடி சென்றது. தன்னை இருக்கையில் பொருத்திக் கொண்டவளுக்கு நாக்கு வறண்டிருக்கும் போல. தனது பையில் இருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டவள் “க்ளக் க்ளக்” என்கிற தொண்டை சத்தத்துடன் நீர் அருந்துவதை ஓரக் கண்களால் கவனித்துக் கொண்டேன்.

நான் கவனித்தது அவளுக்கு தடுமாற்றத்தை உண்டு பண்ணியிருக்க வேண்டும். சிறிது தண்ணீர் அவளின் நெஞ்சுப் பகுதியை நனைத்து விட்டது.

லிப்ஸ்டிக் போட்டதே தெரியாதது போலிருந்த அவள் உதடுகள் லேசாக “உச்” கொட்டிக் கொண்டே தனது கைக்குட்டையால் தண்ணீர் சிந்திய இடத்தைத் துடைத்தன. எனது கவனிப்பு மேலும் அவளைத் தொந்தரவுக்கு உள்ளாக்க கூடாது என எனது தொலைபேசியை கைகளில் வைத்துச் சுழற்றிக் கொள்ள ஆரம்பித்தேன்.

பஸ் இன்ஜினின் உறுமல் சத்தம் மெல்ல மெல்ல இழுத்தபடி முற்றிலுமாக தனது இயக்கத்தை நிறுத்திக் கொண்டது. ‘இன்னும் பத்து நிமிஷம் பஸ் நிக்கும் எறங்குறவங்க எறங்கிக்கலாம்’ கண்டக்டரின் குரல் கடைசி இருக்கை தாண்டியும் காற்றைக் கிழித்துச் செல்வது போல சத்தமாக ஒலித்தது.

பஸ்ஸில் இருந்தவர்கள் தங்கள் இருக்கைகளை விட்டு பரபரவென எழுந்து கொள்ள ஆரம்பித்தார்கள். இந்தப் பேருந்திற்குள்தான் இத்தனை பேரும் இருந்தார்களா என்று நினைக்கும் அளவிற்கு இவ்வளவு நேரம் நிசப்தமான அறை போல கிடந்த பேருந்தில் தள்ளுமுள்ளு நடக்கத் துவங்கியது. இயற்கை உபாதைகளை அடக்குவது போல சிரமமான காரியம் ஏதுமில்லை.

எப்படி இருந்தாலும் எனது இருக்கை கடைசியில் என்பதால் முன்னே இருந்தவர்கள் செல்லட்டும் என்று அவர்களை வழிமொழிந்து நானும் கீழே இறங்கிக் கொண்டேன்.

இலவசக் கழிப்பறைகள், கட்டணக் கழிப்பறைகள், பசிக்குப் பன், கடலை மிட்டாய் விற்கும் கடைகள், வாட்டர் கேன் மட்டும் விற்கும் கடை, மினி டிபன் ஸ்டால், பரோட்டா ஸ்டால், காப்பி டீ கடைகள் என்று அந்த இடம் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது. இன்னும் நிறைய தனியார் வண்டிகளும் அங்கே நிறுத்தப்பட்டு இருந்தன. புகை பிடிப்பவர்கள், புகையிலை போடுபவர்கள், காபி குடிப்பவர்கள், கல்லில் புரோட்டா அடிக்கிற சத்தங்கள், காப்பி டீ காப்பி டீ என்று தனது கடைக்கு அழைக்கும் விடலைப் பையன்கள், கிடைத்த டிபனை சாப்பிடுபவர்கள், குழந்தைகள் அழுகைகளை நிறுத்த முடியாது தவிப்பவர்கள், அவசர அவசரமாக கழிப்பறைக்குச் செல்லும் மனிதர்கள் என பலவிதமான மனிதர்கள் சங்கமிக்கும் இடமாக மிகுந்த இரைச்சலுடன் அவ்விடம் இருந்தது.

எனக்குச் சாப்பிட எதை  வாங்கமுடியும் என்று புரியவில்லை. பசி வர ஆரம்பித்ததால் இரண்டு பிஸ்கட் பாக்கெட்டுகளையும், ஒரு சிப்ஸ் பாக்கெட்டும், தண்ணீர் ஒரு பாட்டில் மட்டும் வாங்கிக்கொண்டு எனது பேருந்தருகே வந்து விட்டேன். திருச்சி சென்று இறங்கும் வரை இதை வைத்தே ஒப்பேற்றிக் கொள்ளலாம். பேருந்தின் வெளியில் இருந்தே எனது இருக்கையைப் பார்த்தவன் கண்களில் அவள் தென்பட்டாள்.

அடடா, அவள் கழிப்பறைக்குச் செல்லவில்லையா. ஏன் அங்கேயே அமர்ந்து இருக்கிறாள்? அவளுக்கு ஏதாவது வாங்கிச் சென்று தரலாமா? அவளோ குனிந்தவாறு ஏதோ செய்து கொண்டு இருந்தாள். வேண்டுமென்றால் சிப்ஸ் ஷேர் செய்து கொள்ளலாம் என்று பேருந்தில் ஏறிக் கொண்டேன்.

அவள் ஏதோ உணவு கொண்டு வந்திருப்பது போலத் தோன்றியது. இருக்கை அருகே சென்ற போது பார்வைக்குப் புலப்பட்டது அவள் எடுத்து வந்திருந்த சப்பாத்திகள். இப்போது அவள் அருகே அமர்வதற்கு தர்ம சங்கடமாக இருந்தது. பேருந்தில் ஒவ்வொருவராக நேரம் முடிந்து ஏற ஆரம்பித்தார்கள். வேறு வழியின்றி நான் சட்டென என் இருக்கையில் அமர்ந்து கொண்டேன். அவளுக்கும் ஒருவித சங்கடம் தோன்றியிருக்கக் கூடும்.

என்னைப் பார்த்து, “சப்பாத்திதான்.. சாப்பிடுறீங்களா?”என்றாள். அதே திருத்தப்பட்ட புருவங்கள் தன் பங்குக்குத் தானும் கண்களுடன் இணைந்து பேசின.

“இல்லல்ல நீங்க சாப்பிடுங்க” என்று சொன்ன வாயைக் மனம் கடிந்து கொண்டது.

‘அட, ஒரு பெண்ணே முன்வந்து உணவை ஷேர் செய்து கொள்ளலாம் என்கிறாள். நான் ஏன் இப்படி மறுத்து விட்டேன்? அம்மா சொல்வது போல நான் க்ரிஞ்ச் பாய்தானா?’ – இப்படி உண்மையைப் புட்டுவைக்கிற அம்மாவைக் கடிந்து கொள்ள வேண்டும் போலிருந்தது.

அவளும் ஒரு கர்ட்டசிக்காகத்தான் கேட்டிருக்க வேண்டும் என்று மனதை சமாதானம் செய்து கொண்டேன். எனக்குத் தரவும் முடியாமல், தான் மட்டும் உண்ணவும் முடியாமல் ஒரு அவஸ்தையை அனுபவித்தது போல தனது டிபன் பாக்ஸை மூடிப் பையில் வைத்து விட்டாள்.

நான் வாங்கி வந்திருந்த சிப்ஸ் பாக்கெட் வேண்டுமா எனக் கேட்க நினைத்தேன். நான் வேண்டாம் என்று சொன்ன பிறகு அவள் மட்டும் எப்படி வாங்கிக் கொள்வாள் என்று நானே முடிவெடுத்து கேட்காமலே இருந்து விட்டேன்.

வண்டி கிளம்பிய சற்று நேரத்திற்கெல்லாம் ஆங்காங்கே குறட்டை ஒலிகள் துவங்கி விட்டன. மறுபடியும் எனது மொபைலில் இருந்து டிடிங். அம்மாதான்.

இந்த முறை வாய்ஸ் மெசேஜ் போட்டிருந்தாள். என்ன கேட்பாள் என்பதை யூகித்து பாதியளவு ஒலியில் வைத்துக் கேட்டேன். அம்மாவின் குரல் கணீரென்று இருக்கும். வகுப்பறைகளில் பாடம் எடுத்து தொண்டை பெரிதாகி விட்டது என்று செல்லமாக சலித்துக் கொள்வாள்.

“ஏண்டா, விக்கி சாப்பாடு எதுவும் கொண்டு வரலனு சொன்னியே! என்னடா சாப்பிட்ட? “

என்னையறியாது படபடவென்று வாய்ஸ் மெசேஜை க்ளோஸ் செய்தேன். அருகில் இருந்தவள் காதுகளில் விழுந்து விட்டது. இந்த அம்மா ஏன் இப்படிச் செய்கிறாள்? வாட்ஸ்அப் உபயோகிக்கச் சொல்லித் தந்தது தவறென்று மனதினுள் கடிந்து கொண்டேன். அவளோ என் கண்களை நேருக்கு நேராக சந்தித்து நான் பல்பு வாங்கிய சந்தோஷத்துடன், “அம்மாவா? ” என்று கேட்டுப் புன்னகைத்தாள்.

“ம்ம்” என்றேன். அந்த புருவங்களும் அந்தக் கண்களின் வசீகரமும் மனதில் விரவி இன்னுமொரு முறை அதே போல் ஏதாவது கேள்வியைக் கேட்கமாட்டாளா என்று ஏங்கியது.

இனி திருச்சி இறங்கும் வரை அம்மாவின் எந்த மெசேஜையும் ஓபன் செய்யக்கூடாது என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டேன். அம்மா அனுப்பிய புகைப்படமும் மெசேஜில் இருந்தது. அதை இவள் பார்த்து விட்டால்? பார்க்கப் போவதில்லைதான். இருந்தும் அந்த புகைப்படத்தை இவளிடம் ஏன் மறைக்கத் தோன்றுகிறது?

அவள் என்னிடம் சப்பாத்தி கேட்டதிலிருந்து ஒரு சிறு கிளர்ச்சி அவள் மேல் தோன்றியது. இத்தனை நேரம் அருகில் இருந்த போதும் தோன்றாத ஒரு வித்தியாசமான உணர்வு எனது நரம்புகளின் உள்ளடுக்குகளுக்குப் பரவியது. என்ன செய்வதென்று புரியாது இரண்டு கைகளையும் கட்டிக் கொண்டபடி தளர்வாகச் சாய்ந்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டேன்.

மூடிய கண்களுக்குள் திருத்திய புருவங்களும், வசீகரிக்கும் கண்களும், சாப்பிடக் கேட்ட உதடுகளும் கொஞ்சும் மொழியுடன் மீண்டும் மீண்டும் வந்து போயின. அவளிடம் ஏதாவது பேச்சுக் கொடுப்போமா என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

‘எங்கு இறங்க வேண்டும் என்று கேட்கலாமா? அவள் பெயரை இன்னும் கேட்கவே இல்லையே? சிப்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள் என்று தந்து விடலாமா?’ கேள்விகள் அலை அடிக்க தோளில் ஏதோ மோதுவது போல உணர்வு தோன்ற இருக்கையை விட்டு நகராது கண்களை மட்டும் திறந்தேன்.

அவள் என் தோள்களில் சாய்ந்த படி உறங்கி இருந்தாள். எனக்கு திக்கென்று இருந்தது. முன்பின் தெரியாத ஆணுடன் இப்படித் தோளில் சாய்ந்து உறங்குகிறாளே? ஒருவேளை எப்பொழுதும் போல் கண்ணயர்ந்து தூக்கக் கலக்கத்திலேயே என் மேல் சாய்ந்து இருக்கவும் கூடும்.

எதுவாக இருந்தாலும் அவளை எழுப்ப மனம் வரவில்லை. சொல்லப்போனால் ஏதாவது பேச்சு கொடுப்போம் என்று நினைத்த எனக்கு அவள் அப்படித் தூங்குவது மிகவும் பிடித்தது. நான் கொஞ்சம் கொஞ்சமாக அவளை ரசிக்க ஆரம்பித்து இருந்தேன் .

மனம் அனிச்சையாக வாட்சப் புகைப்படத்தில் இருக்கும் பெண்ணுடன் அவளை ஒப்பிட்டுப் பார்த்தது.

வலது கைகளால் அம்மாவின் மெசேஜ் ஓபன் செய்து அந்தப் புகைப்படத்தை ஒரு முறை பார்த்துக் கொண்டேன்.

அவளும் அழகாகத்தான் இருந்தாள். இருந்தும் இவளிடம் தோன்றுகிற இணக்கம் அவளிடம் இல்லை. ஒருவேளை நேரில் பார்க்காததாகக் கூட இருக்கலாம். அவள் இன்னும் நன்றாக தூங்கிக் கொண்டு இருந்தாள். துளி அசைத்தாலும் எழுந்து விடுவாள்.

அவள் மேல் தோன்றிய கிளர்ச்சி சிறிது சிறிதாக விஸ்வரூபம் எடுத்து பெருவெடிப்பாக மாறி என் மனம், உடலெங்கும் ஒரு நறுமண சுகந்தமாகப் பரவியது. நான் தலையை மட்டும் மெல்ல நகர்த்திய போது அவளின் திரண்ட கேசம் என் மீது படர்ந்து எனது நாசியில், வாயில் அவளது முடிகள் ஒன்றிரண்டு மாட்டிக் கொண்டன. முடிக்குக் கூட வலிக்காத படி அதை ஒதுக்கி விட்டேன். அவள் தலைக்கு என்ன ஷாம்பு தேய்த்துக் குளித்தாள் என்று தெரியவில்லை.

மீண்டும் மனதைக் கிறக்கும்படியான ஒரு வாசம் கிளம்பி மேலும் என்னை அந்தரத்தில் நிறுத்தியது. ஆனால், இது ஷாம்பூ வாசம் இல்லை. அவள் வாயில் இருந்து கிளம்பும் எச்சிலின் சொட்டுகள் எனது சட்டையயை நனைத்துத் துளைத்துத் தோளில் புகுந்தன. அப்படியே அவளை எழுப்பாது மேவாயை இழுத்து அவள் தோளோடு கட்டிக் கொள்ள வேண்டும் போலத் தோன்றியது. பாதகத்தி எழுந்து விடுவாளே? என்னாயிற்று , நான் இப்படி ஒரு பெண்ணை முதன்முதலாக எனக்குள் புகுந்தது போல உணர்கிறேன். பருவக்கிளர்ச்சிகளை எல்லாம் தாண்டி வந்தவனுக்கு இப்படி எப்படிக் கிறக்கம் கிளம்பியது. இவ்வளவு தன்வயமற்ற உணர்வில் திளைக்கிறேன்.

இது ஜஸ்ட் அட்ராக்ஷனாகக் கூட இருக்கலாம் என்று ஒரு மனம் சமாதானம் செய்து கொண்டாலும் எனது இன்னொரு மனமும், உடலும் அதை ஏற்க மறுத்தன. காலையில் வந்ததில் இருந்தே லேசாகத் தொடங்கிய கிளர்ச்சியும், சொல்லத் தெரியாத உவகையும், குறுகுறுப்பும் நேரம் கடக்கக் கடக்க அதிகமாகி இப்போது விட்டால் அவளை மடியில் கிடத்திக்கொண்டு தூங்க வைத்துக் கொள்வேன் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தேன். அவளின் அங்கங்கள் என் மீது மோதியதில் இருந்து உடலின் அத்தனை உரோமங்களும் சிலிர்த்துக் கொண்டன. உடல் அனிச்சையாக குறுகுறுப்பையும் நடுக்கத்தையும் அடைந்து தவித்தது. இத்தனை நாளும் மரத்துக் கிடந்த உடலில் மழைத்துளிகள் மெல்ல மெல்ல ஊசியாகக் குத்தியபடியே இறங்குவது போல சில்லிட்டது.

சட்டென்று உணர்வு வந்தவளாக விழித்துக் கொண்டவள் என் மீது தலை சாய்த்து இவ்வளவு நேரம் உறங்கி இருக்கிறோம் என்பதை யூகித்துக் கொண்டாள்.

“ஓ, சாரி சாரி. வெரி சாரி வெரி சாரி. எப்படி உங்கள் மேல் சாய்ந்தேன் என்று தெரியவில்லை. நீங்களாவது எழுப்பி இருக்கலாமே? “

நான் அசடு வழிவதைப் புரிந்து கொண்டவள் மேலும் இரண்டு முறை, ‘சாரி சாரி’ என்று செல்லமாக தலையில் தட்டிக் கொண்டாள். அது கூட அழகாகத்தான் இருந்தது. நான் இப்போது அவள் மீது முற்றிய பித்துநிலைக்குச் சென்று கொண்டிருந்தேன்.

அவள் சாரி கேட்ட பிறகும் சங்கடம் தொடர ஜன்னலின் பக்கம் பார்வையைத் திருப்பிக் கொண்டாள். எதுவுமே பேச முடியாதபடி திரையிட்ட மௌனம் ஒன்று எங்கள் நடுவே சற்று நேரம் சம்மணமிட்டு அமர்ந்திருந்தது.

அந்த மௌனத்தைக் கலைக்க எங்கள் இருவருக்குமே விருப்பமில்லை.

‘திருச்சி திருச்சி வந்துருச்சு, திருச்சி எல்லாம் முன்னால வாங்க’ என்ற கண்டக்டர் குரல் ஒலித்தது கர்ணகொடூரமாக. நான் எனது பையை மேலே எழுந்து அவசர அவசரமாக எடுத்துக் கொண்டேன். இலேசாக தலையைக் குனிந்து அவள் ஏதும் பார்க்கிறாளா என்று கவனித்தேன். ஜன்னலை விட்டு அவள் தனது பார்வையை நகர்த்தவே இல்லை.

எனது போனைப் பேண்ட் பாக்கெட்டில் திணித்தபடி சாப்பிடாமல் அப்படியே இருந்த பிஸ்கட் பாக்கெட்டையும் சிப்ஸ் பாக்கெட்டையும் பார்க்காதது போல பையை மட்டும் எடுத்துக் கொண்டு முன் பக்கம் விரைந்தேன்.

‘திருச்சி திருச்சி திருச்சி எல்லாம் வாங்க’ என்ற கண்டக்டரின் குரல் எனக்கு மேலும் மேலும் எரிச்சலைத் தர வேகமாக வெளியே இறங்கி வந்து நான் அமர்ந்திருந்த இருக்கையை நோக்கி விரைந்து நடந்தேன்.

கண்ணாடி வழியாக என்னைக் கண்டு கொண்டவள் வேகமாக ஜன்னல் கண்ணாடிகளைத் திறந்தாள். கைகளை ஆட்டியவாறு ‘Bye’ என்று செய்கை காண்பித்தபடியே கண்களைச் சுருக்கி காதோர முடிக்கற்றையை ஒதுக்கிக் கொண்டு சிரித்தாள். பேருந்து நிற்காமல் அவளைப் போலவே கிளம்பியது.

சில நொடிகள் கனத்த மௌனத்தைப் பயணச்சுமையாக மனதில் சுமப்பது போலிருக்க அம்மாவிடம் இருந்து போன் வந்துவிட்டது சரியாக.

“டேய், விக்கி இறங்கிட்டியாடா? “

“அம்மா இன்னைக்கு ரொம்பப் படுத்தி வச்சிட்டிங்க மா. எத்தனை மெசேஜ். நான் இப்போதான் இறங்கினேன். ஆட்டோ ஏறப்போறேன். வீட்டுக்கு வந்தவுடன் நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.” அவள் பதிலுக்கு காத்திராமல் போனைத் துண்டித்தேன்.

இடது புறத்தில் அவள் உறங்கிய சட்டைப் பகுதியை இழுத்து நாசியருகே கொண்டு சென்று அவளின் வாசத்தை ஆழமாக உள்ளிழுத்துக்கொண்டேன். அவளின் எச்சில் தாரைகள் சட்டையின் மேல்புறம் வடிவமற்றுப் பதிந்துக் கிடந்தது கண்டு சிறகுகளை விரித்தது மனம்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button