
அம்மாதான்…..
பார்த்து ஓரமாப்
போய்ட்டு வா என்பார் பாட்டி
யார்கிட்டயும் சண்டை போட்டுக்கிட்டு
அடி வாங்கி வராதே என்பார் அப்பா
எல்லாத்தையும் பத்திரமா
எடுத்து வா என்பார் அண்னன்
விளையாடிட்டு வரேன்னு
சட்டை டிராயரை
அழுக்காக்கக் கூடாது என்பர் அக்கா
அம்மாதான்
மத்யான நேரத்துல
தூக்குல வச்சிருக்கற
சாதத்தைப் பூரா
சாப்பிட்டு வா என்பார்.
***
ஏதோ ஒன்று
வலையிலிருந்து
கீழே விழுந்த பின்
துள்ளித் துள்ளித்
தண்ணீருக்குப் போகலாம்
என்றெண்ணிப் போக முடியாமல்
நினைவுகளோடு
கிடக்கிறது மீனொன்று
விர்விர்ரென்று
கூட்டத்தோடு சேர்ந்து
விரைவாக நீந்திய காலம்
பெருத்த அலை வந்தால்
உடனே ஓடிப்போய்
அடி ஆழத்தில் ஒளிந்த
அனுபவம்
சூரிய வெப்பம் வேண்டியும்
காற்றைச் சுவாசிக்கவும்
தலையை மட்டும்
தண்ணீருக்கு மேலே நீட்டிய
தாளாத சுகம்
உடலெல்லாம் மண் அப்பிக்கொண்டு
தரையில் உருண்டு புரண்டு
தத்தளித்து வேதனையில்
தவிப்பதை விட
பருந்தோ காக்கையோ வந்தாலும்
பரவாயில்லை என்று
பதைபதைக்கிறது அது.