![](https://vasagasalai.com/wp-content/uploads/2022/05/lakshmihar-780x405.png)
வேதன்யம் காட்டினைக் கொண்ட பாப்பநாட்டினில் அமைந்திருக்கும் மாயன் கோவில் அலங்காரம் செய்யப்பட்ட லைட் செட்களுடன் ஜொலித்துக்கொண்டிருந்தது. வருடா வருடம் ஜல்லிக்கட்டுக்கு முன் மாயன் காளை கோவிலில் பூஜை செய்வது வழக்கம். அந்த ஏற்பாடுகளைச் செய்யும் பொறுப்பை பாலன்தான் பார்த்து வருகிறான். ‘மாடு பிடி வீரர்களுக்கோ காளைகளுக்கோ எந்த வித உயிர் சேதமும் இல்லாமல் ஊரு மண்ணை மிதிக்க வேண்டும்’ என்று வேண்டிக்கொள்வார்கள். மாயனுக்கு புது அலங்காரப் பொருட்கள் வாங்கிப் போடுகிறோம் கோவிலுக்கு கண்ணு குட்டி வாங்கி விடுகிறோம் என்று தங்களால் முடிந்த அளவு நேர்த்திக்கடனும் செய்வார்கள்.
மாயன் கோவிலைக் கட்டி இந்த ஆண்டோடு பதினைந்து வருடங்கள் ஆகப் போகிறது. நள்ளிரவு நெருங்க நெருங்க நாளை களை கட்ட இருக்கும் மாயன் கோவிலைப் பார்க்க ஆசையாக இருந்தது பாலனுக்கு. வனம் அத்தையும் கண்டிப்பாக நாளை கோவிலுக்கு வரும் என்பதும் மகிழ்ச்சியை கொடுத்தது. நாளை நடக்க இருப்பதற்கு எதிராக இப்போது வீதி பெரும் அமைதியாக தன்னை காட்டிக் கொண்டது.
விடியும் முன்பிலிருந்தே தங்கள் காளைகளைப் பிடித்துக்கொண்டு மாயன் கோவிலுக்கு ஆட்கள் வரத் தொடங்கினர். அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறு சிறு கடைகள் போடப்பட்டிருந்தது. தைக்கு முன் நடக்கும் திருவிழா இதுதான். காளைகள் அலங்கரிக்கப்பட்டு இருக்கும் விதங்கள் திருவிழாவை மேலும் சிறப்பாக்கியது. அந்த இடமே அன்று திருவிழா சந்தையாகவும் மாறும்.
தங்கள் காளைகளையும், மாடுகளையும் கூட்டி வருவது வழிபாட்டுக்கு என்று இருந்தாலும் தங்கள் மாடுகளால் அவர்களுக்கு இருக்கும் பந்தாவை வெளிப்படுத்தவும் அந்தச் சந்தர்ப்பம் பயன்பட்டது. காளைகளின் வளர்ப்பு முறையை பகிர்ந்து கொள்ளும் ஆர்வமும் அடுத்து நடக்க இருக்கும் ஜல்லிக்கட்டு பற்றிய பேச்சுக்களும் திருவிழாவில் களத்தில் இறக்கவிடப்படும்.
“என்ன பாலா.. வனத்த பாக்கவே முடியல” என்ற பெரியப்பாவிடம் பதில் என்ன சொல்லுவது என்று யோசிப்பதற்குள் அவர் நகர்ந்து போய்க் கொண்டிருந்தார். கோவிலின் பூஜை ஆரம்பிக்க இன்னும் கொஞ்ச நேரம்தான் இருக்கிறது. வனம் அத்தையைக் காணவில்லை என்று தெரிந்தது.கோவில் கூட்டத்தில் இருந்து விலகி வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினான் பாலன்.
*
வனத்திற்கு மாயன் கோவிலுக்கு செல்ல மனம் இல்லை. எதனால் என்று யோசிக்கும் அளவிற்கு வாழ்வு அவளை அனுமதித்ததா என்ன? விடியும் முன்னே பாப்பநாட்டின் எல்லையைத் தனதாக்கிக் கொண்டிருக்கும் குறுக்கு ஒடிந்த கிழவியின் நடையை கொண்டு அந்த ஒத்தையடி பாதை முடியும் கருப்பன் கோவிலுக்கு வந்திருந்தாள். இது போன்ற தருணங்களில் தன் தனிமையை ஏய்த்து நடக்க யாரையும் அழைத்து வருவது கிடையாது.
கவனிப்பாரின்றி கருப்பன் கோவில் விடப்பட்டு எத்தனை ஆண்டுகள் ஆகிற்று என்று சரியாக அங்கு யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. எதைப் பற்றியும் கவலைகளின்றி ஓடித்திரிந்த வனத்தின் கால் தடத்தை இன்னும் இவள் தேடி வந்து கொண்டிருப்பதாகவே கருப்பனுக்கும் தோன்றியிருக்கும். எதையும் இங்கு வந்து வேண்டியது கிடையாது. கருப்பன் கவனித்திருக்கிறான். கால்கள் கனக்க அதில் மிதிபடும் வயல்வெளிகளைச் சீண்டாமல் விரிசல் நிரம்பிய குதிரையின் நிழலில் அமர்ந்திருப்பாள். எதைப் பற்றித்தான் யோசிக்கிறாள் என்று கணிக்க முடியாத முகத்துடன் உடல் சுருங்கி படுத்துக்கொள்வாள். சில நேரங்களில் எதை நினைத்து கருப்பனை உற்று பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்று தெரியாது அரிவாளுடன் கோபமான முகத்தை மாற்றிக் கொண்டு அவளுடன் பேச முயன்றிருக்கிறான் கருப்பன். ஆனால், எந்தப் பயனும் இல்லை. வெறும் பார்வைதான். அந்தப் பார்வையின் அர்த்தம் விளங்காது மீண்டும் குதிரை ஏறிவிடுவான். இன்றும் அவள் வந்திருக்கிறாள் என்பதை கருப்பன் கவனிக்காமல் இல்லை. கருப்பன் பேச முற்படுவதைத் தெரிந்து கொண்ட வனம் தன் ஆசைக் கணவரான தவசியின் மீது காதல் கொண்ட தருணத்தில் சந்தித்த இடம் இதுதான் என்பதை நினைத்துக்கொண்டு, ‘நீயும் அவர மறந்துட்டில’ என்று கூறி தனது நடவடிக்கைகளில் எந்த வித மாறுதலும் இன்றி படுத்துக்கொண்டாள். அது அவளின் மாயன் காளை எந்த வித அசைவும் இல்லாது குளத்துக்கரையில் படுத்திருந்ததைப் போன்று இருந்தது. காளையை பிடிப்பது ஒரு வித கர்வம் என்றால் வளர்ப்பு காளை பிடிபடவில்லை என்ற கர்வமும் அதை விட அதிகம். அது களத்திற்கு வெளியே வரை வரும். பகையோ வன்மமோ ஜாதியமோ ஒரு போதும் களத்தில் எடுபடாது. அங்கு வளர்ப்பும் வீரமும்தான் எடுபடும். ஒருவன் வாழ்நாளில் களத்தில் பிடிவீரனாகவோ இல்லை அவனது காளையை இறக்கி விட்டால் போதும்.. அவனை கண்கொண்டு அலையும் பகை இறுதி நாட்கள் வரை சுற்றிக் கொண்டே தான் இருக்கும். அதை எதிர்கொள்ள அவன் தயார் ஆவது எல்லாம் கிடையாது அது அவனின் வாழ்க்கை முறை.. ஆனால் ஒன்று தெரியும் “ரத்தம் சிந்தி சூடேறி நிற்கும் களம் ஒரு போதும் காளையின் குருதியை ருசித்தது கிடையாது..’
களத்தின் பகை காரணமாக காணாமல் போன தவசிக்கு பின் அவர் வளர்த்த மாயன் காளையின் பிடியை யாராலும் கைக்கொள்ள முடியவில்லை.. வனத்திற்கு அந்த செய்தி கேட்டதுதான் மிச்சம் அவள் எப்படி குளத்துக்கரைக்கு வந்து சேர்ந்தாள் என்பது தெரிந்திராது கரையின் ஈரத்தை அவளின் அழுகுரல் சூடாக்கியது.
கண்கள் பாதி மூடி இரண்டு கால்களையும் மடக்கி குளத்திலிருந்து வேதன்யம் காட்டை நோக்கிய பார்வையுடன் அமர்ந்திருந்த மாயனின் திமிலை அணைத்துக்கொண்டு வனம் அழுவதை பார்க்க ஊருக்கு ஒப்பவில்லை. அவளுக்கு எதைச் சொல்லி சமாதானப்படுத்துவது என்று தெரியாது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஜனங்களுக்கு, மாயன் களத்தில் ‘எந்தப் புடிகாரனுக்கு தையிரியம் இருக்கோ வந்து திமில பிடின்னு’ சுத்துவது நினைவில் தோன்றி மறைந்திருக்கும். மாயன் இறங்கும் களத்தில் பிடி வீரர்கள் நிற்பது அரிதுதான். மாயன் தனது திமிலைத் தொட்டவனை நின்று பாயும் என்ற பேச்சு களத்தில் எப்போதும் உண்டு. திமில்தான் மாயனின் அடையாளம். ஒரே பாய்ச்சலில் வாடியை விட்டு வந்து நடு களத்தில் நின்று ஒரு சுத்து சுத்தி மணலில் குத்தி கொம்பை தீட்டத் தொடங்கியதும், களத்தில் இறங்கிய பாதிபேர் காணாமல் போய் விடுவர். ‘எந்த காளையானாலும் பிடி கொடுக்காம இருக்காது கண்டிப்பா இந்த தடவ பிடி மாடு தான்’ என்ற ஏச்சு பேச்சுகள் ஒரு போதும் நடந்தது கிடையாது. மாயன் தனது திமிலை ஆட்டி களத்தில் நின்று சுத்துவதை பார்க்க கொடுத்து வைத்துதான் இருந்திருக்க வேண்டும். உட்களத்தில் நின்று இருப்பவர்களை வெளியில் இருந்து வேடிக்கை பார்க்கும் ஆட்கள் சீண்டுவதும் உண்டு. ‘போயா உன் கிண்டல கேட்டு பொல்லாப்புல எறங்கி சூத்துல போட்டுச்சுனா தெரியும் சும்மா கத்தாத வெளிய நின்னுகிட்டு ‘ என்று நடுங்கும் குரல்கள்தான் கேட்கும். இந்த பேச்சுக்கள் எல்லாம் மாயனின் வளர்ப்புகாரரான தவசி போனதற்கு பிறகு காற்றில் ஏறியது..
மாயன் காளை தவசியைத் தேடி பாப்பநாட்டின் எல்லையில் சுத்தாத இடமில்லை. தவசியை தேடித் தேடி அலைந்த மாயனை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ‘மனுஷனுக்கு மட்டுமாப்பா மண்ட பெசங்கி போயிரும்..புடுச்ச உசுரு போச்சுனா பாரம் தாங்காம மாடு கூட ஊர சுத்துதேப்பா ‘ என்ற பேச்சு மாயனுக்குதான்.
‘களத்துல கம்பீரம் அதோட ரத்தத்துலனு சொன்னாலும்… அதோட பிடிய வச்சுருக்கும் வளப்புகாரன் பேச்சுக்கு தலையாட்டி கேக்கும் மனசு, அவன் இல்லேன்கிறப்போ அதுகளும் ஏங்கித்தான் போகுது…’ என்று தவசி காணாமல் போனதை நினைத்து மாயனுக்காக ஊர் கிறங்கித்தான் போச்சு. குளத்துக்கரையில் உயிர்பிரிந்த மாயனிடமிருந்து வனத்தை விலக்கி வீடு கொண்டு போய்ச்சேர்ப்பதற்குள் பெரும்பாடாகிவிட்டது. பின்னர் அதே குளத்துகரையில் மாயனுக்கு கோவில் கட்டப்பட்டது.
**
“பாலா என்னை இப்படியே கட்டிக்கோடா..” காளி கேவிச் சிரித்தான்.
“என்ன சிரிக்குற” என்றவளை அணைத்து கொண்டு மேலும் முத்தங்களால் அவளை நெருக்கினான் பாலன்.
காளை களத்தில் எடுத்தவுடன் எல்லா விதமான மூர்க்கத்தையும் காட்டாது. மூர்க்கம் என்பது அதன் கடைசி ஆயுதம்தான். அதற்கு முன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய அனைத்தையும் செய்து பார்த்து விடும்.
காளையின் பிடியில் மாட்டி இருப்பவளுக்கு மேனி எங்கும் நிறைந்திருந்த ஆனந்த வருடல் அவளை வெறி பிடிக்க வைத்தது. அவள் அதற்கு ஈடாக களத்தில் தன்னை நிரூபித்துக் கொண்டிருந்தாள். களம் சூடு பிடிக்கத் தொடங்கியது. களத்தின் தன்மை அறிந்து அதில் தீர பயிற்சி எடுத்து கொண்டவர்களின் பொருதுதலாக அந்த கலவி அமைந்தது.
கொம்பின் மேல் காளையின் அழகைக் கூட்டி காட்டும் மாலையாக அவனைக் கட்டி கொண்டு இருந்தாள்.
இப்போது அவனின் அணைப்பு அவளுக்குத் தேவைப்பட்டது. அவளுக்கு அவனின் நினைப்பு உடலை இன்னும் கொதியாக்கியது. ஒவ்வொரு முறை அவனோடு கூடும் போது நிகழ்ந்தேறிய கொண்டாட்டம் அவளை கிறுக்கு பிடித்து ஆட்டியது. அதில் எப்படியும் தன்னை இழந்து அவனை நினைப்பதுதான் அவளின் நிலை.
தன்னுள் அவனை இயங்க வைத்த கணம் இனி எப்போது வாய்க்கும். ‘கிறுக்கன்’ என்று முனங்கிக் கொண்டாள். கட்டிலில் இருந்து எழுந்து கொண்டாள். அவளுக்கு பாலன் வேதன்யம் காட்டிற்குள் ஏறியிருக்கிறான் என்கிற விசயம் பயத்தை கொடுத்தது. அவன் சொல்வான் “கண்டிப்பா எங்க வனம் அத்தை கிட்ட இருந்து தான் உனக்கு தொத்திக்கிக்சோ இந்த பயம்” என்பான். ஆம்; இந்தக் காளை வளர்ப்பில் ஒருத்தி கணவனையும் , பிள்ளையாக வளர்த்த காளையையும், விபத்தில் அண்ணனையும் அவரது மனைவியையும் பறிகொடுத்தவளுக்கு எப்படி பயம் இல்லாமல் இருக்கும். காளை வளர்ப்பே வேண்டாம் என்று வனம் இருக்கிறாள். பாலன், வனத்தின் அண்ணன் பையன்.சிறு வயது முதல் வனம்தான் வளர்த்து வருகிறாள். இதையெல்லாம் நினைத்துக்கொண்டு காளி தன் பதிலுக்கு “அவங்க நல்லதுக்குதான் சொல்றாங்க நீ தான் அதத் தப்பா எடுத்துகிற” என்றாள். அவள் சொல்லாமலே அவனுக்குத் தெரியும். அவன் விளையாட்டுக்கு சொல்வதையும் வேறுவிதமாக எடுத்துக் கொள்வாள் காளி எப்பொழுதும். அதனால் சரிதான் என்பது போல தலையாட்டி அதிலிருந்து தப்பித்து விடுவான். அவன் உடலுக்குள் அப்போது அவள் அடங்கிக் கொள்வாள். அவளுக்கு எதை நினைத்தும் பயம் இருந்தது இல்லை. பாலன் வேதன்யம் காட்டில் சுற்றித்திரியும் காளைகளை இறக்குவதை நினைத்தே பயம் இருந்தது. அது மீண்டும் பகையை எங்கிருந்தோ கொண்டு வந்து சேர்த்து விடுமோ என்ற நினைப்புதான் மனதில் உலண்டுகொண்டே இருந்தது. பாலன் சொன்னது போல அத்தையிடம் இருந்து கூட தொற்றிக் கொண்டதாக இருக்கலாம் என்றும் யோசித்திருக்கிறாள் காளி.
வனம் வீட்டிற்கு காளி போகும் போதும் பாலனுக்கும் அவளுக்கும் இடையேயான நெருக்கம் தெரிந்தும் அதை பற்றியெல்லாம் வனம் கேட்டுக்கொண்டது கிடையாது.எப்படி படிக்கிற ? அடுத்து என்ன பண்ண போற? என்பதுதான் உரையாடலாய் இருக்கும். ஆனால், வனத்தின் முகத்தில் பயம் கலந்த வருத்தம் ஒப்பனையாக எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். இன்னொரு இழப்பைத் தாங்க முடியாது என்பது போன்ற வெளிப்பாடு.
பாலன் வேதன்யம் காடு ஏறுதல் பற்றி காளி கேட்ட எந்த கேள்விக்கும் அவனிடம் இருந்து பதில் வந்தது கிடையாது. அப்போதெல்லாம் அவன் வேறு எதையோ பேசி மழுப்பி விடுவது அப்பட்டமாகத் தெரியும். அதற்குப் பிறகு அதை கேட்டுக்கொள்ள காளிக்கு விருப்பமும் இல்லை.
“உங்க அத்தையப் பாக்கும் போதெல்லாம் கஷ்டமா இருக்கும்..” காளி
“மாமாவ நெனச்சுட்டே தான் இருக்காங்க…” பாலன்
“இல்ல.. கண்டிப்பா இல்ல…” காளி
“அப்பறோம்…” பாலன்
“உன்ன நெனச்சுதான்…” என்பாள் காளி. பதிலேதும் சொல்லாமல் அவளை அணைத்துக் கொள்வான்…..
*
காட்டிலிருந்து இறக்கிய காளையை பாலன் எப்போதும் போல கவனிப்பாரின்றி கிடக்கும் கருப்பன் கோவிலுக்கு அருகில் போடப்பட்டுள்ள கொட்டகைக்குள் கொண்டுவந்துவிடுவான். அங்கு இருந்துதான் அதை சந்தைக்கு கொண்டு போவது வழக்கம். பெரும்பாலும் தொடையில் A கெடை மாடு என்பதை போட்டு அனுப்பதான் அங்கு ஏற்பாடு நடந்து கொண்டிருக்கும். பெரும்பாலும் களத்தில் இறக்கவே காளைகளை வாங்கிச்செல்வார்கள். மாட்டிற்கு பேரம் பேசுவது எல்லாம் கிடையாது. விலை ஒரு பேச்சில் முடிந்தால் கொடுத்து விடுவான். இல்லையென்றால் அவ்ளோதான் இனி அடுத்த ஆள்தான். பெரும்பாலும் சந்தையில் பாலன் இறக்கிய காளைகளுக்கு தனி கிராக்கி இருக்கத் தான் செய்கிறது. அவன் காளைகள் அவ்வளவு எளிதில் பிடிபடுவதில்லை என்பதே பேச்சு. அதைத் தவறாக பயன் படுத்துபவரும் இருந்தனர். கண் பார்வைக்குப் படுவதை தடுக்கலாம் என்று விட்டுவிடுவான். அதனால் பாலன் நேரடியாக நிற்கும் சந்தையில் வாங்கிக் கொள்வார்கள். இந்த முறை இறக்கிய காளைகளில் புலிசாரையை மட்டும் வீட்டில் இருத்தி வைத்திருந்தான். மீதி இறக்கிய காளைகளுடன் சந்தையில் அமர்ந்திருந்தனர் பாலனும் அவனுடைய நண்பர்களும். விலை மடியும் காளைகள் வேகமாக போய்க்கொண்டிருந்தது. எதிர் செட்டு கொட்டகைக்குள் இருந்த ஆட்களில் ஒருவன்..
“களவாண்ட மாட்டுக்கு இவ்ளோ வீரம்..ஒரு நாளு சிக்கட்டும் வேதன்யத்துல அடுச்சு பொதச்சர்லாம்” என்றான்.. காதில் பட்டும் கேட்காதது போல இருந்தான் பாலன்.
“நம்மள மாதிரி களவாடக் கூட துப்பு இல்லாதவங்கதான் எதுக்க நின்னு பேசுறாங்க.. காட்டுக்கு போறேனுட்டு குண்டில குத்து பட்டுல வந்தானுங்க..” என பாலன் கொட்டகையிலிருந்து எதிர் பதில் தந்தனர் “அது மட்டும் இல்ல பாலா.. குத்திக் கிளிச்ச குண்டிய வச்சுக்கிட்டு வெளியவும் வேல செய்ய முடியலையாம்… என்று இழுத்தவன் எதிர் கொட்டகையிலிருந்த ஆட்களை பார்த்துக் கொண்டே வீட்டுலயும் வேல செய்ய முடியலையா, வாய் மட்டும் தான் வேல செய்யுதுன்னு நினைக்குறேன் மாப்ள “என்றான் ஒருவன்..
பேசி முடிப்பதற்குள் எதிர் கொட்டகையில் இருந்தவன் பாலன் நண்பன் ஒருவனின் சட்டையைப் பிடிக்க.. அடிதடி வராமல் இருக்க.. “ஏன்டா அவனுக தான் சல்லிப்பயலுக.. அப்படி இருப்பானுங்க” என்று தடுத்தான் பாலன்.
“ஆமா..மா அப்படியே இவங்க ஜில்லா வெத்தல… போடா களவாணி பயலுகளா” என்றான் இன்னும் அடங்காமல்
மீண்டும் சண்டை வருவதைத் தடுத்து அமைதியாக போய் உட்கார்ந்து கொண்டான் பாலன். இன்னும் ஒரு காளை மட்டுமே மிச்சம் இருந்தது அதையம் விற்று விட்டால் சரியாகி விடும். அவனுக்கு வீடு போய் புலிசாரையைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கிக் கொண்டே இருந்தது. ஏனோ காட்டிலிருந்து இறக்கிய அந்தக் காளை மாயன் சாயலில் இருந்தது. எதிர்க் கொட்டகையில் இருந்தவன் ஆட்களை சேர்த்துக்கொண்டு அடங்குவதாகத் தெரியவில்லை.
சந்தையில் கூட்டம் இன்று கொஞ்சம் அதிகமாகத்தான் இருந்தது. மாடு வாங்குபவர்களும் விற்பவர்களும் சங்கேத வார்த்தைகளில் விலை பேசிக்கொண்டிருந்தனர். அதில் சில நேரம் கைவந்து அடங்கிவிடும். ஆனால், பல நேரங்களில் சச்சரவுகளில்தான் போய் முடியும். சங்கேத வார்த்தைகளின் “பொறுத்து முறி தட்ட காலமுறி” என்று ஒவ்வொன்றுக்கும் விலை பேசிக்கொள்வார்கள். வருபவர்கள் பல்லை மட்டும் பிடித்து வாங்க மாட்டார்கள் அது வயதைச் சொல்வதற்கு மேலும் கொம்பு, வால், கழுத்து, கடகு, கால், குமில் எல்லாவற்றையும் பார்த்துதான் விலை பேசுவார்கள். சிலர் வாடிக்கு இறக்கவும் சிலர் வீட்டு வேலைக்கும், உழவுக்கும் வாங்கிப்போவார்கள்.. மழைக்காலம் ஆரம்பமாகத் தொடங்கி விட்டது. ‘ஆடு மாடு இல்லாதவன் அடை மழைக்கு ராஜா தான்’ என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டு விற்காமல் இருக்கும் ஒரே காளைக்கு பக்கத்தில் அமர்ந்தான்.. முன் கூடத்தில் கத்தி ஓய்ந்து போனவர்கள் அங்கிருந்து இடத்தைக் காலி செய்திருந்தனர். சண்டை சச்சரவுகள்.. காடு செல்வது பற்றிய நிகழ்வு… ‘காணாப்பொணமா ஆக்கிட்டாங்களே உங்க மாமன..’ என்ற வார்த்தைகள் பிடிகொடுத்து வனம் அத்தையையும் , காளியையும் ஞாபகப்படுத்தியது. காளி எதையும் வெளியில் காட்டிகொள்ளவில்லையானாலும் அவள் உடல் அதை அவனுக்கு கடத்தித்தான் விடுகிறது.
*
வீடு திறந்தே இருந்தது. மாயன் கோவிலிலிருந்து வந்த பாலன் அத்தையைத் தேட முற்பட்டான், எப்போதும் இதே வேலைதான். எதையோ நினைத்துக்கொண்டு தன்னை அறியாமல் எங்கெங்கோ செல்கிறது அத்தை என்று தன்னுள் புலம்பிக்கொண்டே வீட்டினுள் தேடிப்பார்த்துக்கொண்டே தொழுவத்திற்க்கு வந்தவனுக்கு அங்கு கட்டியிருந்த புலிசாரையையும் காணவில்லை என்பதை அறிந்தவுடன் பயம் தொற்றிக்கொண்டது. கொட்டகையில் வம்புக்கிழுத்தவர்களின் வேலையாக இருக்குமோ என்று பதறிக்கொண்டிருந்தவனை பின்பக்கமிருந்து கட்டிக்கொண்ட காளி சிணுங்கலுடன், “என்னத்தான் தேடுறியா” என்றாள்.
“நீ இங்க என்ன பண்ற” என்றான் ஒரு வித பதட்டத்தில்..
“எரும பிடி படவே இல்ல. அதப் புடிக்கத்தான்” என்று அவனை பின்னிலிருந்து மேலும் இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.. சிறிது நேர அணைப்புக்கு பிறகு அவள் பேசத் தொடங்கினாள்… கொஞ்சம் கோபமாகத்தான்
“காட்டுக்கு இனி போகணுமா” என்றவளை அவன் “இப்போ எதுக்கு அத பேசுற…” எனவும், “நா பேசுவேன்” என்று மட்டும் சொல்லிவிட்டு கூடத்தில் எதையோ ஒன்றை எடுத்துக் கொண்டு போனாள்..
அவன் அத்தை எங்க என்றதற்கு பதில் ஏதும் சொல்லவில்லை அவள். வீட்டில் ஆள் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு மாயன் கோவிலுக்கு நகர்ந்தான். பூஜை ஆரம்பிப்பதற்கு எல்லா ஏற்பாடுகளும் தயாராக இருந்தது. பாலன் மாயன் சிலைக்கு பின் நேற்று காட்டிலிருந்து இறக்கிய காளை நின்றிருப்பது தெரிந்தது. வனமாகத்தான் இருக்கும் என்று சிலையைச் சுற்றி அதைப் பார்க்கப் போனான். அந்தப் புலிசாரை ரக காளையின் பிடி காளியிடம் இருந்தது. ஏனோ அவள் சிரிப்பு அத்தை வனத்தை போல இருந்தது.
படுத்திருந்த கருப்பன் கோவிலிலிருந்து வனம் நடந்து குளத்துக்கரைக்கு வந்து சேர்ந்திருந்தாள். இதுவரை அவளை ஆட்கொண்டதிலிருந்து விடுபட வேண்டும் என்கிற முனைப்பு அங்கு அவளைச் செலுத்தியது. திருவிழா முடிந்து மாயன் வெறிச்சோடி தனிமையில் நின்றிருந்தான். அதுவரை எங்கு மறைத்து வைத்திருந்தாள் என்பது தெரியாமல் வனம் எடுத்ததைப் பார்த்த கருப்பன் முழித்தான், ஆமாம்; இவளைப் பற்றி இன்று முழுவதுமாக தெரிந்து விடுவதென வனத்துடன் நடந்து வருகிறான்..
வனம் இதுநாள் வரை முடிந்து வைத்திருந்த ஒன்றை சேலையிலிருந்து பிரித்தெடுத்து கையில் வைத்துக்கொண்டாள். அவள் நடைக்குத் தகுந்தது போல கருப்பனும் தன் நடையை ஒழுங்கு படுத்திக்கொண்டான். வனம், மாயன் கோவிலின் படி ஏறிக்கொண்டிருக்கும் போது மாயனை கருப்பன் கவனித்தான். எங்கோ திடீரென்று ஞாபகம் வந்தது போல மாயனை பார்த்த நாளில் பெய்த மழை கருப்பனின் நினைவில் உதித்தது. அன்று போல ஒரு மழையை கருப்பன் பார்த்தது இல்லை. விடாமல் பெய்த மழையும் இந்த ஞாபகத்திற்கு ஒரு காரணம். உடலெங்கும் அலங்காரம் பண்ணிக்கொண்ட தோலுடன், திமில் ஆட தன் முன் வந்துகொண்டிருப்பது மாயன்தான் என்று கருப்பனுக்கு அப்போது தெரியாது. அந்தத் திமிலின் அணைப்பில் ஒருவன் அமர்ந்திருந்ததை கருப்பன் கவனிக்க தவறியிருந்த ஆரம்ப நொடிகள் அதிர மாயன் மழைத் துளிகளுக்குள் மின்னிக் கொண்டிருந்தான்..அதே கம்பீரத்துடன் நின்று கொண்டிருக்கும் மாயனின் கழுத்தில் வனம் முடிந்து வைத்திருந்த சிகப்பு கலர் துணியின் ஒரு பாதியை மட்டும் அதன் கொம்பில் சுற்றிவிட்டாள். மீதி இருந்த துணி அவள் கைகளுக்குள் அடைப்பட்டுக்கிடந்தது.
என்ன நினைத்தாள் என்று தெரிவதற்குள் அந்த ஒத்தையடிப்பாதையில் நடக்கத் தொடங்கினாள். காணாமல் போன தவசியின் இருப்பிடத்திற்கு போய்க் கூட முடியலாம் அப்பாதை. துணைக்கு கருப்பன் வரும் தைரியமோ என்னவோ நடையில் அவ்வளவு வேகம்.அவளின் கால்கள் போய் நின்ற இடம் வேதன்யம் காடு…!
******