இதுவரை…
தங்களின் கருப்பு வெள்ளைத் தீவுக்கு நிறைய வண்ணங்கள் தேடி தீவைத் தாண்டிப் போக அந்த ஊர்ச் சிறுவர்கள் முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளுடன் கடலில் பயணம் செய்தனர். கடலுக்குள் இருந்த கோட்டைக்குள் நுழைந்து, அங்கே தேவைதையின் தோழி இன்கி பின்கியை சந்தித்தார்கள்.
இனி…
இன்கி பின்கி: நிறுத்துங்க. எப்பவும் நான் தான் பாடுவேன். நான் மட்டும் தான் பாடுவேன். ஏன்னா நான் பாடினாதான் சூப்பரா இருக்கும். நீங்க வேணும்னா எனக்கு கோரஸ் பாடுங்களேன்.
ராம்: சரி இன்கி. நீ பாடு நாங்க கோரஸ் பாடுறோம்.
இன்கி பின்கி: ஏய்ய்ய்…. நீ என் பேர் சொல்லியா கூப்பிடுற? மரியாதையா பேசிப் பழகு சரியா? எனக்கு மரியாதை முக்கியம்.
ராம்: மன்னிச்சுடுங்க. தெரியாம சொல்லிட்டேன்.
இன்கி பின்கி: ம்ம் ம்ம்… இருக்கட்டும். பாட ஆரம்பிக்கிறேன். நீங்களும் தயாரா இருங்க.
ராம்: ம்ம், சரிங்க.
இன்கி பின்கி: சரிங்க இளவரசினு சொல்லு.
ராம்: சரிங்க இளவரசி.
எல்லோரும் மிரண்டு போய் விழித்துக் கொண்டிருந்தனர்.
~
இன்கி: அழகான கடல் – இது
மிக அழகான கடல்
ம்ம்ம், கோரஸ ஆரம்பிங்க
ராம், பாலா, மகேஷ் மூவரும் சேர்ந்து கோரஸ் பாடினர்.
கோரஸ்: அழகான கடல் – இது
மிக அழகான கடல்
ம்ஹ்ம்ம்ம்… ம்ஹ்ம்ம்ம்…
அம்மு மீனுக்கு இதையெல்லாம் பார்க்க பயங்கரச் சிரிப்பாக இருந்தது. சிரிப்பை அடக்கிக் கொண்டு வேடிக்கை பார்த்தது.
இன்கி: மிக அழகான கடல்,
அங்கே அழகான இடம்
அதிலோர் மிக அழகான ஆள்
கோரஸ்: ஆம்… மிக மிக அழகான ஆள்
இன்கி: யார் அந்த அழகான ஆள்?
கோரஸ்: நீங்கதான் அந்த அழகான ஆள்.
இன்கி: ஆமா நான்தான் அந்த அழகான ஆள்
அங்கும் இங்கும் சுற்றுவேன்
சிரித்துப் பறந்து பாடுவேன்
மிக அழகாக ஆடுவேன்
கோரஸ்: ஆம், மிக மிக அழகாக ஆடுவாள்.
~
அம்மு மீன்: ஆடுவாள்னு பாடறாங்களே, இப்ப இவங்களுக்கு தண்டனை கிடைக்குமா, இரும்பு மண்டையாரே?
நக்கலாக கேட்டது அம்மு மீன்.
இரும்பு மண்டை: அட சும்மா இரு அம்மு. இதப் பாத்தா ஒரு மாதிரியான ஆள் மாதிரி இருக்கு. நானே பயத்துல இருக்கேன்.
அம்மு மீன்: அடேங்கப்பா, உனக்கு பயமெல்லாம் வருமா?
இரும்பு மண்டையன்: ம்க்கும்…
~
இன்கி: இந்த அழகிய இளவரசியின் பிடித்தமான தோழி…
கோரஸ்: பிடித்தமான தோழி.. ஆஹா.. பிடித்தமான தோழி..
இன்கி: அவள் வண்ண தேவதையே
அவள் வந்தால் வரும் மழையே
கோரஸ்: அவள் வந்தால் வரும் மழையே… வரும் மழையே…
அம்மு மீன்: என்னது வண்ண தேவதை வரும்போது மழை வந்தா எல்லாம் அழிஞ்சிடுமே.
இன்கி: அவள் எனக்கு உயிரானவளே.
எல்லாருக்கும் புதிரானவளே..
கோரஸ்: ஆமா… உயிரானவளே, ரொம்பப் புதிரானவளே
~
வண்ண தேவதை என்ற வார்த்தையை கேட்டதும் அத்தனை பேரும் அதிர்ந்தனர்.
அம்மு மீனுக்கு கண் வெளியே விழுந்து விடும் அளவு கண்ணை விரித்துப் பார்த்தது.
இன்கி: என்ன கோரஸ் பாடறத நிறுத்தீட்டிங்க?
இன்கி பின்கி கோபமாகக் கத்தியதில் பாறைகள் எல்லாம் இடிந்து விடும் போல் இருந்தன. அத்தனை பேரும் பயத்தில் நடுங்கினர்.
ராம்: மன்னிச்சுடுங்க இளவரசி. நீங்க அழகா பாடுனதுல நாங்க கொஞ்சம் அசந்துட்டோம். எவ்வளவு இனிமையான இசை, பாடல்? அருமையாக இருந்தது.
இன்கி பின்கியின் முகத்தில் பிரகாசமான புன்னகை. ம்ம்ஹ்ம்.. சரி சரி.
அம்மு மீன் ரகசியமாக பாலாவிடம் பாடுவதை தொடரச் சொன்னது.
பாலா: நாம திரும்பவும் பாடத் தொடங்கலாமா இளவரசியாரே?
இன்கி: ம்ம் ம்ம்..
~
இன்கி: அவள் வண்ண தேவதையே.. எனக்கு உயிரானவளே..
கோரஸ்: உயிரானவர்கள்.. இருவரும் ரொம்ப உயிரானவர்கள்.. ஆஆஆஆ..
இன்கி: நாங்கள் சந்தோஷமாக விளையாடுவோமே..
கடலில் அலையாடுவோமே..
கோரஸ்: விளையாடுவாங்களே. கடலில் ஜாலியா அலையாடுவாங்களே..
~
இன்கி: சரி சரி போதும். அதோ அந்த பாறை இடுக்குல ஒரு அணில் தங்கியிருக்கு. நீங்க எல்லாரும் போய் அங்க இருந்துக்கோங்க. வேலை என்னனு அப்புறமா வரும்போது சொல்றேன்.
பேசிவிட்டு காற்றிலேயே சுழன்று சுழன்று ஆடி பாடிக்கொண்டே பறந்து போனது இன்கி.
எல்லோருக்கும் என்ன பேசுவதென்றே தெரியவில்லை. ஆளாளுக்கு ஒவ்வொரு விதமான சிந்தனைகளில் மூழ்கி இருந்தனர்.
தொடரும்….